12
அந்த மதிய வெயிலில் இருந்து தப்பும் முயற்சியில் சிலரும் சாப்பிட அடம்பித்த பிள்ளைகளுக்கு வேடிக்கை காட்டியபடி உணவூட்டும் அக்கம்பக்கத்தினரும், உணவு இடைவேளையில் காலாற நடைபயிலும் பக்கத்து கம்பனிகளில் வேளை பார்ப்பவர்களுமென அந்த பூங்காவினுள் மனிதர்கள் பலவிதம்..!! ஒவ்வொருவரும் ஒருவிதம். அவர்களுக்கென்று ஒரு கவலை, ஆசை, தொண்டையை அடைக்கும் துக்கம், தூரே நின்று பழிப்பு காட்டும் தூக்கம், மனம் நிறைந்த தருணங்கள், மனதை அழுத்தும் கணங்களென அவரவர் அவரவரின் அக உணர்வுகளை புற உலகிற்கு காட்டாமல் அச்சூழலுக்குப் பொருந்திப்போயினர்.
அவர்களுள் ஒருவனாய்.. அந்த சூழலுக்கு சற்றும் பொருந்தாதவனாய்.. இறுகிய முகத்துடன், கல் பெஞ்சொன்றை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்ததுபோல் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தான் உதய்.
சாதாரணமாய் அவனை அப்பொழுது பார்ப்பவர்களுக்கு அவ்வளவு அமைதியாய் அவன் அமர்ந்திருப்பதுபோல தெரிந்தாலும் அவனுள் புயல் வீசாதக் குறையாக உள்ளத்தின் கடைசித் துண்டுவரை சுக்கல் சுக்கலாய் நொறுங்கிக் கொண்டிருந்தது.
அவனுக்கு யாரையும் பார்க்க தோன்றவில்லை. எவரிடமும் பேச பிடிக்கவில்லை. எங்கேனும்.. ஆள் அரவமற்ற இடத்திற்கு ஓடிவிட வேண்டும்போல இருந்தது. அவனது உலகமே ஒரே நொடியில் மாறிப்போனதே! அவன் எந்த நிலைக்கு வந்துவிட்டான்!
மனம் நிறைந்தவளை இழந்துவிட்டான்! ஏனோ அவனை எல்லோரும் கேவலமாய் பார்ப்பதுபோலொரு உணர்வு! எவ்வளவு பெரிய தவறை செய்து வைத்திருக்கிறான்! உதய் என்ற தனிமனிதனுக்கிருந்த உலகம் நிலைகுலைந்தது. காதலை இழந்தான்.. இப்பொழுது நட்பையும் அவனே தூக்கி வீசியிருக்கிறான். ஆம்! அன்று ஹெலனின் கேபினில் இருந்து வெளியேறியவனுக்கு அவனை நினைத்தே அப்படியொரு வெறுப்பு உணர்வு எழுந்தது.
அவன் வாய் திறந்து எதையும் பேசியிருக்கவில்லைதான். ஏன், அவன் அப்படியெல்லாம் நினைத்துக்கூட பார்த்ததில்லை. இருந்தும் அவன் நண்பன் பேசியபொழுது அவன் காத்த மௌனம்... அதுவே அவனை கொன்றது! அவனது அந்த மௌனம் அவனை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. தப்பு முழுதும் தேஜஸின் மேல்தான் என்று மற்றவனின் மேல் பழியை தூக்கிப்போட அவன் தயாராயில்லை! அவன் மனசாட்சியைக் கேட்டு நடப்பவன். அவனால் அதை செய்ய முடியாது. தேஜஸ் பேசியதற்கு தானும் ஒரு காரணம் என்பதை அறிந்தேதான் இருந்தான்.
கடைசி சில நாட்களாக, அதாவது தென்னல் இவனை நேரிடையாக மறுத்த நாளிலிருந்தே இவன் தனி உலகொன்றினுள் தொலைந்துப் போனான். சுற்றம் மறந்தான். முன்பெல்லாம் தேஜஸ் இப்படி பேச யோசிப்பான் ஏனெனில் அவன் உதயை அறிவான். பல முறை அவர்களிடையே இதை வைத்து சண்டை வந்திருந்தது. தேஜஸ் தென்னலைப் பற்றி பேச ஆரம்பித்தாலே இவன் அவளைப் பற்றி நானறிவேன் ரேஞ்சில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்திடுவான். ஆனால் கடைசி சில நாட்களாக இவனுக்கு தேஜஸின் பேச்சிற்கு கூட மறுபேச்சு பேசத் தோன்றவில்லை ஏனெனில் அவன்தான் மற்றவனின் பேச்சுக்களை உள்வாங்கவேயில்லையே! அவனது கவனக் குறைவிலும் மெத்தனமானப் போக்கிலும் உதய் ஆழமாய் காயப்பட்டுவிட்டான் என்று எண்ணினானோ என்னவோ அதுவரை ஒரளவு பேசியவனின நாவு அன்று எல்லையை கடந்துவிட்டிருந்தது.
முதலில் எல்லாம் தனக்காக பார்த்துதான் தேஜஸ் இப்படி பேசுகிறான் என்று நினைத்திருந்த உதய்க்கு வெகு தாமதமாகவே புரிந்தது. தேஜஸின் பேச்சுக்கும் தன் காதலுக்கும் சம்பந்தமில்லையென.. அவனுக்கு மனோவை பிடிக்கவில்லை! மேகாவின் வீடு வரை செல்லும் மனோவையும் பிடிக்கவில்லை, அவன் தோளில் கைப்போடும் தென்னலையும் பிடிக்கவில்லை. சிலருக்கு சிலரின் மேல் ஏன் எதற்கென்று தெரியாமலே ஒருவித வெறுப்பும் காரண காரியமற்ற போட்டியும் உண்டாகுமல்லவா? அப்படியொன்றுதான் தேஜஸினதும்.
அவனுக்கு ஏன் மனோவை பிடிக்கவில்லை என்று கேட்டால் அவனிடமிருந்து பதில் வருவது.. சந்தேகம் தான்! இருந்தும் அவனுக்கு மனோவை பிடிக்கவில்லை! அவனை பார்க்கும்பொழுதே வெறுப்பாகும் அதே தேஜஸ்தான் மனோவின் ஒவ்வொரு நகர்வையும் நோட்டமிடுவதும்!
அது என்னவோ.. பிடிக்காதவனிடம் இருந்து விலகிப்போகாமல் இவனது எண்ணஙகளும் நகர்வுகளும்கூட அவனை நோக்கியே இருந்தது. நடக்காத ஒரு யுத்தத்தை அவனே வெறுப்பால் உண்டாக்கி அதில் எப்படியேனும் மனோவை வென்றுவிட எண்ணுகிறான். அவனை ஏதோ ஒரு விதத்தில் இந்த மனோ தோற்க்கடிப்பதாய் நினைக்கிறான். அதை அவமானமாய் கருதி அவனை பழிக்கு பழியாய் வெல்லவும் நினைக்கிறான்.. ஆனால் தான் எதில் மனோவிடம் தோற்கிறோம் என்றே அவனுக்கு புரியவில்லையே! இல்லாத ஒன்றை இருப்பதாய் எண்ணியல்லவா இத்தனை நாள் தேஜஸ் வன்மத்தை சேமித்திருக்கிறான்!
எண்ணிப்பார்க்கவே ஏதோபோல் இருந்தது உதய்க்கு. இவன் மட்டும் எந்த விதத்தில் உசத்தியாம்? தன் சுய பச்சாதாபத்தால் தனதிலேயே உழன்று பிரச்சனையை பெரிதாக்கியாயிற்று.
கோடுகளற்ற வெள்ளை காகிதத்தினுள் சிக்கிக் கொண்டதுபோல் உணர்ந்தான் உதய். மனம் முழுதும் வெறுமையை தவிர்த்து வேறன்றும் இல்லை! கூடவே சிறு குற்ற உணர்வும்.
அன்று கேபினிலிருந்து வெளியேறியவனுக்கு மற்றொரு நண்பன் முதலில் அங்கிருந்த ஃபர்ஸ்ட் எய்ட் கிட்டால் காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டிருக்க.. அது முடிந்து வெளியேறியவனால் அவனை கடந்து சென்ற யாரையும் நிமிர்ந்து பார்க்க இயலவில்லை.. ஏனோ அவனமானமாய் உணர்ந்தான். அதுவும் மேகா அவனுக்காக பேசியதில்… தான் தரம் தாழ்ந்துவிட்டதாய் ஓர் உணர்வு உந்தித்தள்ள க்ரௌண்டின் மூலையில் சென்று அமர்ந்துக் கொண்டான்.
உதய் பின்னாலையே அவனது நட்பு வட்டமும் ஓடி வந்திருந்தது. அவர்கள் அனைவரும் அவர்களுக்கு தெரிந்தளவு அறுதலும் விசாரிப்புகளுமாய் இருக்க உதயிடம்தான் எதற்கும் பதிலில்லாமல் போனது. அவன் குனிந்த தலையை நிமிராமல் தரையையே வெறித்திருக்க அருகில் அமர்ந்திருந்த ஒருவன் தான்,
“மச்சான்! அந்த பக்கம் பேண்டெய்ட் சரியா ஒட்டல..” என்று அவன் தலையை நிமிர்த்த முயன்று அதை சரி செய்ய..
“நான்தான் அப்போவே சொன்னேனே உதய்! அவ சரியில்லனு.. இப்போ பாரு! உண்மையை சொன்னதும் அவ மூஞ்சி எப்படி போச்சு பார்த்தல்ல...” என்றவாரே வந்த தேஜஸை கண்ட உதயிடம் அத்தனை நேரமிருந்த அமைதி காணாமல் போயிருந்தது.
பேண்டெய்டை சரி செய்துக்கொண்டிருந்தவனின் கையை விலக்கிவிட்டவன் விருட்டென எழுந்து வந்து மற்றவனின் சட்டையை கொத்தாய் பிடித்துக்கொண்டான்.
“என்னடா சொன்ன? இல்ல என்ன சொன்னேனு கேக்கறேன்? நீ பேசின பேச்சுக்கு தென்னல் இடத்துல நான் இருந்திருந்தா செருப்ப கழட்டி சாத்திருப்பேன்! அவளும் அதை செய்யக்கூடியவதான்... அப்படிப்பட்ட அவளையே கலங்க வச்சிட்ட! படிச்சு படிச்சு சொன்னேனேடா அவங்க ஃப்ரெண்ட்ஸு தப்பா பேசாதனு! எனக்கு தென்னலப்பத்தி தெரியும்னு..." என்று நெருக்க அவனோ உதயை பிடித்து தள்ளியவனாக,
“உனக்கு தெரிஞ்ச லட்சணம்தான் தெரியுதே! எது? கட்டிப்பிடிச்சிக்கிறதெல்லாம் உனக்கு ஃப்ரெண்ட்ஷிப்லயா வருது? நானும் ஃபர்ஸ்ட் இயர்ல இருந்து பார்த்துட்டுதானே இருக்கேன்.. ஒன்னு அவ இவன் பெஞ்ச்ல இருப்பா இல்ல இவன் அங்க போயிர வேண்டியது. ஒன்னா கேண்டின் போறதென்ன! லைப்பரரிலேயே தவங்கெடக்கறது என்ன! இது போதாதுனு கட்டிப்புடி வைத்தியம் வேற! ம்ஹ்ம் அவ நல்லவ.. உனக்காக பேசின நான் கெட்டவன்ல?”
“மண்ணாங்கட்டி! ஏன் நான் உன்ன கட்டிபுடிச்சதில்ல? நாம கேண்டின் போனதில்ல? நாம ரெண்டுபேரும் சேர்ந்தே தானே உக்காந்துருக்கோம்? பேசனும்ங்கறதுக்காக பேசாத தேஜஸ்! தென்னல் அப்படிப்பட்டவ இல்ல! ஒருவேளை அவ அப்படியே இருந்தாலும் அது உனக்கு தேவையில்லாதது! என்ன சொன்ன? என்ன சொன்ன? நீ எனக்காக பேசினியா? மனசாட்சிய தொட்டு சொல்லு!” என்றவன் தன்னை தாங்கலாய் பிடித்திருந்தவனிடம், “டேய் விட்றா!” என்று விடுவித்துக்கொண்டு
“மனசாட்சிய தொட்டு சொல்லு பார்ப்போம்! நீ எனக்காகத்தான் பேசினேனு... “ என்று தேஜஸின் கண்களையே உற்று நோக்கியவாறு கேட்டவன்..
“உனக்கு மனோவ பிடிக்காது! அதுவும் காரணமேயில்லாம! உன்னோட கண்றாவி காம்ப்ளக்ஸ என் காதலோட கலந்துட்ட... சரி நான் உன் ஃப்ரெண்ட்.. ஆனா மேகா மேம் என்னடா பண்ணாங்க உன்ன? உன் அக்காவ விட ரெண்டு இல்ல மூணு வயசு பெரியவங்களா இருப்பாங்களா? அவங்களப்போய்.. எப்பட்றா உன்னால இப்படி பேச முடிஞ்சது? தென்னல் உன்ன என்னடா பண்ணா? ஃப்ரெண்டு ஃப்ரெண்டுனு கூடவே சுத்திட்டு எப்பட்றா உன்னால என் ஃபீலிங்க்ஸோட விளையாட முடிஞ்சது? இதெல்லாம் தெரிஞ்சப்பறமும் ஏண்டா இவன் நமக்காக சண்டைப்போட்டானு பாக்கறீயா? அது நான் என்னோட ஃப்ரண்ட்ஷிப்க்கு செஞ்சது.. நான் முட்டாளில்ல தேஜஸ்! ச்ச!” என்று அவனை விட்டு விலகியவனோ,
“இனி என் மூஞ்சிலையே முழிக்காத!” என்றுவிட்டு நேற்று வந்ததுதான், இன்று.. இப்பொழுதுவரை அத்தனை அழைப்புகள்! எல்லாம் மற்ற நண்பர்களிடமிருந்து. எதையும் எடுத்து பேசும் மன நிலையில் அவனில்லை.
தென்னல் என்ன நினைப்பாள்? என்ற கேள்வி எழுந்த நொடி இருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியும் பறிபோனது. அவன் அவளை முதல் முறை கவனித்த சூழலே அப்படிப்பட்டதாயிற்றே!
— “மென்சாரலில் நின்வண்ணமோ!” கதையிலிருந்து ஒரு பகுதி
✍️ எழுத்தாளர்: Yagnya
இந்தக் கதை முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது

Comments
Post a Comment