🌿 Featured Story

அன்பில் அவன் அலாதி

கோடைக்கால நினைவுகளின் கதை.

📖 Read Story

🎧 Audiobooks

Listen to our stories while travelling, resting or dreaming.

Enter Our Audio Story World

Romance, thrillers, healing stories & emotional journeys, now in audio form.

📚 Our Bookshelves

Stories that travelled beyond these pages.

🌿 Fresh Updates

New chapters, articles, announcements & story updates.

மென்சாரலில் நின்வண்ணமோ! - 18

✍️ எழுதியவர் Yagnya

 18



இரவு 12:30


 வைபவியின் அறையில்தான் அனைவரும் அடைக்கலம். ஆம்! சுகா, மனோ, டேவ், வைபாவென நால்வரும் நாளைய தினத்திற்கான ஏற்பாடுகளை ஓரளவு முடித்து அதி தூங்கச் செல்லும்வரை காத்திருந்து அவன் தூங்கியதை உறுதி செய்த பின் மொட்டை மாடியில் பாதி வேலையை முடித்துவிட்டனர். அதற்கே மணி பனிரெண்டை தாண்டிவிட்டது. மீதமெல்லாம் கடைசி நிமிட வேலைதான் என்பதால் கீழே இறங்கியவர்கள் நேராக வைபாவின் அறைக்கு வந்து ஆளுக்கொரு புறமென சரிந்துவிட்டனர். மேகாவும் இவர்களுடன் கூட்டுக்களவாணித்தனம் செய்திருந்தாள். 


வைபவி படுக்கையில் குறுக்காக மல்லாந்துவிட மனோ அந்த ரோலிங் சேரில் அமர்ந்து மேசை மீது கால்களை தூக்கி வைத்து அமர்ந்திருந்தானென்றால் சுகா பீம் பேகை இழுத்துப்போட்டு சரிந்துவிட டேவ் படுக்கைக்கும் மேசைக்கும் நடுவில் தாராளமாய் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் கையை தலைக்கு கொடுத்தவாறு படுத்துவிட்டான். 


அவர்கள் அனைவரும் படுத்திருந்தனரே தவிர உறங்கவில்லை. 


 “மனோ தேன்ஸ எப்போ கூப்பிட போனும்?” -டேவ் 


மனோ “அதுக்கு இன்னும் நேரம் இருக்கு.. ஆனா தூங்கினா சரிவராது” என்றவாரே இன்னும் வாகாய் சாய்ந்தமர்ந்துக்கொண்டான். 


“அது சரி!” என்றவாறே டேவ்வும் தலையை ஒரு கையால் தாங்கியபடி படுத்திருந்தவன்


“வைப்ஸ்! மனோ இதுல மட்டும் அப்படியே உன்ன மாதிரி! சரியான தூங்குமூஞ்சி!” என்று வம்பிழுக்க மல்லாக்க படுத்து முகத்தின் மேல் வலக்கரத்தை வைத்து வெளிச்சத்தை மறைத்திருந்தவளோ ஆடாது அசையாது அப்படியே, “உன்ன கொல்லப் போறேன் டேவ்..” என்றாள் குரலில் சுரத்தேயில்லாமல். 


 “இவ ஏன் இப்போ இப்படியிருக்கா?” – சுகா


“அதொன்னுமில்லை சுகா.. மேடம் இவ்ளோ நேரம் வேலையா இருந்தாங்கல்ல.. அதான் தள்ளிப்போட்றுந்தாங்க. இப்ப மறுபடியும் அவ க்ரஷ்ஷு க்ராஷானதுக்கு pathos வாசிக்கறா” சுகாவிடம் பேசிக்கொண்டிருந்த டேவ்வின் மீது அருகிலிருந்த தலையணையை எடுத்து வைபா வீச அது சரியாய் அவன் தலையை தாக்கும் முன் கேட்ச் பிடித்தவன், “தேங்க்ஸ்!” என்று அதை தலைக்கு வைத்துக்கொண்டான். 


டேவ் “ஏன் சுகா உனக்கு இந்த க்ரஷ்ஷு பப்பி லவ் கிட்டன் லவ்னுலாம் எதுவுமில்லையா?” என்று முடிப்பதற்குள் அவன் தலையில் பட்டென்று ஒரு தட்டு தட்டினான் மனோ, “சின்ன பையன ஏண்டா கெடுக்கற!” 


“ஆமா.. இவன் எல் கே ஜி பிள்ளை இவன நாங்க கெடுத்துட்டோம்! என் க்ளாஸ்ல படிக்க அஞ்சாங்க்ளாஸ் பையன் ப்ரேக்கப்னு அழுது.. அவன புடிச்சு அடேய் ராசா இதெல்லாம் சல்பி மேட்டரு! இன்னும் எவ்வளவோ இருக்குனு சொல்லி அனுப்பின எனக்குத்தானே தெரியும்” 


“இப்போ இப்படிலாமா பண்றாங்க?” என்று நம்பாமல் கேட்ட மனோவை முறைத்த டேவ், “ஏன் மனோ.. நீ படிக்கும்போது இதெல்லாம்  நடக்கலையாக்கும்? அப்போ அதுக்கு பேர் பப்பி லவ் அது இதுனு சொல்லி ஒப்பேத்திட்டு இப்ப மட்டும் பிள்ளைங்களா இதுங்கன்னா என்ன நியாயம்? அவங்களுக்குப் பிடிச்சா மாதிரி சொன்னா புரிஞ்சிறப்போது. அதைவிட்டுட்டு..” 


“அப்போ நானும் இசைட்ட கேக்கனுமோ?”


“ஹா ஹா மனோ.. இசை குட்டி பாப்பா. அது மட்டுமில்லாம அவனுக்கு அவன் டீச்சர தவிர வேற யாரையும் பிடிக்காது!”


“அது உனக்கெப்படி தெரியும்?”


“இந்த இடத்துல நான் ஒரு ட்யூஷன் டீச்சர்ன்றத பதிவு செய்யறேன்” என்று முடித்துவிட்டான். உண்மையும் அதுதான் டேவ் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவதாலோ இல்லை குழந்தைகள் அவனிடம் ஒட்டிக்கொள்வதாலோ அவன் சுலபமாய் அவர்கள் உலகிற்கு சென்றிடுவான். அவர்களை புரிந்துக்கொள்ள முயற்சி செய்வான். எந்தவொரு மனதிற்கும் தன்னை தராசில் நிறுத்தாமல் கைகளை பற்றிக்கொள்ளும் உயிரைத்தான் அது நாடும். டேவ் இயல்பிலேயே அப்படிப்பட்டவன். விளையாட்டுத்தனமாய் தெரிந்தாலும் மிகவும் ஆழமானவன்! 


“சரி.. நீ இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லவேயில்லையே?”  என்றான் விடாது விடையறிந்தும்.


சுகா “எனக்கு அப்படியெல்லாம் இதுவரை எதுவும் தோணினதில்லை டேவ். சிலர் மேல அபிமானம் உண்டு மரியாதையுண்டு.. ஆனா க்ரஷ்னுலாம் எதுவுமில்ல!” அதை தொடர்ந்து “உனக்கு அப்படி எதுவும் இல்லையா?” என்றதுதான் தாமதம் 


டேவ் “உன் அக்கா மாதிரி ஒருத்திய உயிர்நட்பா வச்சுக்கிட்டு அதுக்கெல்லாம் நான் ஆசைப்பட முடியுமாடா சுகா?” என்றான் அங்கலாய்ப்பாய். இப்பொழுது மனோவும் ஆர்வமாகிவிட்டான் போலும் இவன் புறம் திரும்பி அமர்ந்துக்கொண்டான். 


“அப்போ பெருசா என்னவோ ஆகிருக்கு” – சுகா


“இதை நீ என்கிட்ட சொன்னதேயில்ல..” – மனோ


“ஆமா! இப்போ அதான் முக்கியம்.. மனுசனே கடுப்புல இருக்கான்..” 


“அப்படியென்ன நடந்ததுனு சொல்லுங்களேன்” – சுகா


“ம்ம் சரி” என்றவன் சொல்லத் தொடங்கினான். 


“அப்போ நாங்க அஞ்சாவதுல இருந்தோம்..”


“அப்போவே வா?” – சுகா


“நடுவுல பேசக்கூடாது!” 


“சரி சரி” -சுகா


“எங்க க்ளாஸ்க்கு புதுசா ஒரு பொண்ணு ட்ராஸ்ஃபராகி வந்தா.. அவ பேரு ஷோபி! பேர மாதிரியே அவளும் பூனைக்குட்டி மாதிரி இருப்பா அந்த இரண்டு குட்டிப்பின்னல்ல.. கொஞ்ச நாள் போக போக நாங்களும் நல்ல ஃப்ரெண்ட்ஸா எவால்வ் ஆகிட்டிருந்தப்போதான் அது நடந்துச்சு! ஒரு நாள் ஷார்ட் ப்ரேக்ல் நான் வாஷ்ரூம் போயிட்டு வந்தா க்ளாஸ்ல வைபாவும் ஷோபியும் சண்டை போட்டுட்டு இருந்தாங்க. நான் எவ்வளவோ தடுக்க ட்ரை பண்ணேன்.. ஒருகட்டத்துல ஷோபி இவ தலை முடிய பிடிச்சு வேகமா இழுத்துட்டா..”


“அய்யோ! அக்கா ஷோபிய அடிச்சிட்டாளா?” என்று தீவிரமாய் கேள்வியெழுப்பிய சுகாவை ஒருகணம் எட்டிப்பார்த்துவிட்டு தலையில் அடித்துக்கொண்டு திரும்பியும் படுத்துவிட்டாள் வைபவி.


“அப்படியாகிருந்தாக்கூட பரவால்லையே..”


“அப்பறம்?”


“இவ முடிய பிடிச்சு அவ இழுத்த கோவத்துல அவ ஜடைய பிடிச்சு நான் பதிலுக்கு இழுத்துட்டேன்”


“என்ன!”


“வாட்?” என்று இருவரும் இருவேறு விதமாய் அதிர்ந்தனர். 


“இதெல்லாம் விட கொடுமை என்ன தெரியுமா? இந்த எருமைக்காக என் லவ்வ தியாகம் பண்ணதக்கூட கன்சிடர் பண்ணாம உன்ட்ட நான் ஹெல்ப் கேட்டேனானு என் காதை பிடிச்சு திருகினா பாரு! வெறுத்துட்டு!” என்ற டேவ்வின் தோளை ஆதரவாய் தட்டிக்கொடுத்த மனோ, “உன் வாழ்க்கைல இப்படியொரு சோகமிருக்கும்னு நான் எதிர்ப்பார்க்கவேயில்ல..” 


“என்ன நக்கலா?”


“அடேய் சீரியஸாதான் சொல்றேன்” 


“அவ்ளோ சோகமெல்லாம் ஒன்னுமில்ல.. எனக்கும் அவள அடுத்து பிடிக்காம போயிடுச்சு” 

“அதுக்கடுத்து?” – சுகா


“அடுத்தா? நான் என்ன கதையா சொல்றேன்? என்னைக்கு ஸ்கூல்ல முதல் தடவ உங்க அக்கா பக்கத்துல உக்காந்தேனோ.. அன்னைல இருந்தே நான் முரட்டு சிங்கிள்டா! அதெப்படி எனக்கு பிடிச்சவங்களா தேடிப்பாத்து சண்டை போடுவாளோ..” என்று முடித்திருக்கவில்லை அவன் காதை திருகியவளோ, 


“நான் அந்த மோனாக்கிட்ட எப்போ சண்டைப்போட்டேன்?” 


“ஆ.. அவளதான் எனக்கு பிடிக்கவேயில்லையே..” 


“அப்போ சண்டை போடலாம்ற..”


“இல்ல இல்ல..” என்று பதறியதில் அனைவரும் அவனை ஒரு மாதிரி பார்க்க வைபவியோ 


“என்னை பாத்தா சண்டைக்கோழி மாதிரியா தெரியுது?” 


“இல்லையாபின்ன? ஆ.. காதை விடு பக்கி!” 


அவர்களது அரட்டையும் நீண்டுக்கொண்டே சென்றது. ஒருகட்டத்தில் சுகா பீம்பாகில் படுத்தவாரே உறங்கிவிட மற்றவர்களும் அப்படியப்படியே உறங்கியிருந்தனர். நடுவில் விழித்த மனோதான் சுகாவின் கால்களை தூக்கி கட்டிலில் வைத்துவிட்டு வைபவிக்கு போர்த்திவிட அவனது அசைவில் விழித்த டேவ் “என்ன ஒரு ஓரவஞ்சனை!” என்றுவிட்டு திரும்பி படுக்க 


“டேய்! இருடா.. ஒவ்வொருத்தருக்காதானே போர்த்த முடியும்” என்றுவிட்டு உள்ளிருந்து இன்னும் இரண்டு போர்வை எடுத்து வந்து சுகாக்கும் டேவ்க்கும் போர்த்திவிட ஏற்கனவே விழித்துவிட்டவன் இவன் போர்த்தியதில் மெல்ல முறுவலித்தான் கண்கள் திறவாமல். இவன் தூங்கிவிட்டான் என்றெண்ணிய மனோவோ லேசாய் இளையவனின் கேசம் கலைந்துவிட்டு வெளியேறினான். 


‘இப்படியிருக்க மனோதான் அன்னைக்கு எல்லா விரல்லையும் உடைச்சுட்டு வரலாம் வா! என்று ஒற்றைக் காலில் நின்றான்’ என்று நினையவே டேவ்க்கு ஆச்சர்யமாய் இருந்தது. 


அது நடந்து சில பல மாதங்கள் இருக்கும். இவர்கள் இண்ட்டர்ன்ஷிப் சேர்ந்த புதிது அது. இவர்களை கவனித்துக்கொள்ள வேண்டிய மனிதரின் பார்வை செயல் என எதுவும் இவனுக்கு சரியாய் படவில்லை! முதலிலேயே வைபாவிடம் சொல்லிவிட்டான் “அந்தாள் பாக்கறதே சரியில்ல வைபா..” என்று அவளோ அதற்கு அப்பொழுதொன்றும் பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை எப்பொழுதும்போல் “ஓ அப்படியா சரி” என்றதோடு சரி.. அவனும் அதையே நோண்டாமல் விட்டுவிட்டான். அவளுக்குத்தெரியுமென. 


பிறகொரு நாள் இவன் விடுப்பெடுத்துவிட அன்று பார்த்து அந்த மனிதர் சொல்லித் தருகிறேன் பேர்வழியென வைபாவிடம் கண்ட இடத்தில் கை வைக்க, சற்றும் யோசியாமல் அவளது தோள்மேல் இருந்த அவரது கையை பற்றி அவரைப் பார்த்து புன்னகைத்தவாரே அவரது ஆட்காட்டி விரலை ஒடித்துவிட்டாள். அவர் வலியில் துடிப்பதை கண்டவள் அதற்குமேல் அங்கு ஒரு நொடிக்கூட தாமதியாமல் பையை தூக்கிக்கொண்டு அப்படியே நடந்துவிட்டாள். 


இங்கு டேவ்வின் அறையில்..

ஆழ் உறக்கத்தின் பிடியில் இருந்தவனை மீட்டெடுக்குமாறு ஒலித்த அழைபேசியை கடனேவென்று எடுத்துப் பார்த்தவன் அது வைபா என்று காட்டவும் அழைப்பை ஏற்று காதில் வைத்தான் ஒரு தூங்கிவழிந்த ஹலோவுடன். 


“தூங்கறியா?” என்றவளின் குரலில் அவனது மொத்த தூக்கமும் பறந்துவிட எழுந்து அமர்ந்தவன், “எங்க இருக்க நீ?” என்று கேட்டானே தவிர வேறெதுவும் கேட்கவில்லை.


“தர்ட் க்ராஸ்” அவ்வளவுதான், அவனுக்கு தேவையானது.


“இதோ வரேன்” என்று வைத்தவன் அப்படியே எழுந்து வாசலில் கிடந்த செருப்பை மாட்டிக்கொண்டு சைக்கிளில் பறந்தான் தர்ட் க்ராஸிற்கு.


பத்தடி தூரத்திலேயே அவளை அடையாளம் கண்டுவிட சைக்கிளை அப்படியே விட்டுவிட்டு அவளிடம் ஓடினான். 


“லூசு! இவ்வளவு தூரம் நடந்தேவா வர?” என்றவாரே


அவளோ இதழில் லேசாய் மலர்ந்தும் மலராத கலக்கப் புன்னகையை தேக்கியபடி, “விரல ஒடைச்சிட்டேன்” என்றாள். 


அவளையே ஒரு கணம் பார்த்தவன் பிறகு இறுக்கி அணைத்துக்கொண்டு “என்னாச்சு? அந்த ராஸ்கல் எதாவது பண்ணானா?” என்க அவள் தலையசைப்பது புரிந்தது. 


“எத்தனை விரல ஒடச்ச?” 


“ஒன்னு”


“இரண்டா ஒடச்சிருக்கனும்!”


“கேஸாகுமா?” 


“தி க்ரேட் பிரஸ்டன் எதுக்கு இருக்காரு? அந்த ராஸ்கல் கம்ப்ளைண்ட் குடுப்பான்னா நினைக்கற?” 


“குடுத்தா நாமதான் குடுக்கனும்..”


“எத்தனை தடவ சொல்றது என்னை விட்டுட்டு தனியா எதையும் செய்யாதேன்னு!” 


அவளிடம் பதிலே இல்லை.. 


“ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா?”


“எது?”


“பட்டர்ஸ்காட்ச்?” என்றதும் பட்டென விலகி அவன் கைபிடித்தவள் “எந்த பக்கம்? இங்கையா? இல்லை இங்கையா?” என்க அவளை தடுத்தவனோ, “இரு என் சைக்கிள எடுத்துட்டு வரேன்.. ஐஸ்கிரீம்ன ஒடனே ஐம்புலன்களும் அலர்ட்டாயிடுமே” என்று போக அப்பொழுதே அவன் வந்திருந்த கோலத்தை கண்டவள்


“இப்படியேவா வந்த?” என்று அதிர அப்பொழுதுதான் அவனும் கவனித்தான். கருப்பு நிற ஷார்ட்ஸும் சிவப்பு நிற டீஷர்ட்டும் தூங்கியெழுந்த முகமும் கலைந்த கேசமுமாய் வந்திருந்தான். அவ்வளவு நேரம் ஒன்று உணராது நின்றவன் தனது கோலத்தை கண்ட பிறகு ஏனோ எல்லோரும் அவனையே பார்ப்பது போலிருக்க அதிலும் அவர்கள் வயதையொத்த பெண்கள் இருவர் அப்பக்கமாய் வரவே வேகமாய் வைபாவுக்கு இந்தப் பக்கம் வந்து நின்றுக்கொண்டான். 


“அவ நம்ம ஜூனியர் வைபா..” என்க அவளோ சிரிப்பை அடக்கிய குரலில் 


“அதனாலென்ன?” என்றாள் 


“கொஞ்சம் கோவாப்ரேட் பண்ணு பக்கி! என்ர சீனியர் கெத்தெல்லாம் சொத்துனு போயிரும்..” என்க சிரிப்பை அடக்கியபடி அவளிடம் கையசைத்து சென்றவர்களுக்கு புன்னகைத்து “ஹாய்” என்று கையசைத்தாள். அவள் பின்னால் நின்றிருந்தவனோ, “அவங்களே சும்மா போனாலும் நீ விடமாட்ட போல!” என்று அலுத்துக்கொள்ள அவளோ, “சும்மா இரு எரும.. பதிலுக்கு கையாட்டின அத்தோட முடிஞ்சது” 


“இவங்க ஏன் இப்போ அனிமல் ப்ளானெட்ட பாக்கறாப்ள பாத்துட்டு போறாங்க..”


“யாருகண்டா.. அவங்க கண்ணுக்கு நீ சூப்பர் மாடலா தெரியறீயோ என்னவோ..” 


“ஓ... ஓய்!” 


“அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம் சீக்கிரம் வா டேவ். பார்லர மூடிரப்போறாங்க!” 


இன்றும் நினைவிலிருக்கிறது.. அன்று வீடு சென்று விஷயமறிந்த பின் மனோவும் அதியும் எப்படி குதித்தார்களென. மனோதான் “வா இப்போவே போய் அவன் எல்லா விரலையும் ஒடச்சிட்டு வரலாம்” என்று நின்றதெல்லாம் இப்பொழுது நினைத்தாலும் அவனுக்கு சிரிப்பு வந்தது. இவர்கள் ஒரு புறமென்றால் பிரஸ்டனும் மெர்ஸியும் இன்னொருபுறம்!


நினைவில் மூழ்கியவன் சற்று நேரத்திலெல்லாம் நித்திரையிலும் மூழ்கினான். 

— “மென்சாரலில் நின்வண்ணமோ!” கதையிலிருந்து ஒரு பகுதி  

✍️ எழுத்தாளர்: Yagnya 

இந்தக் கதை முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது



← முந்தைய அத்தியாயம்  |  அடுத்த அத்தியாயம் →

📖 இந்த தொடரின் அத்தியாயங்கள்

Comments