மணமகன் ஜாக்கிரதை - 3

✍️ எழுதியவர் Gowri

3





நமக்குத் தெரியாதவரை ஒரு விஷயத்தின் இருப்பு நம்மை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. அதன் இருப்பு தெரியும்போது ஏனோ இத்தனை நாட்கள் நாம் எவ்வளவு அறியாமையில் இருந்திருக்கிறோமென்று புரியும்போது மனம் வலிக்கிறது. நம் மனசாட்சியே நம்மைக் கிண்டல் செய்வது போலத் தோன்றுகிறது. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருட்டாக உள்ளதாக எண்ணுமாம். அது போலத்தான் நானும் இருந்திருக்கிறேன். இத்தனை நாள் இவர்கள் யாரும் என்னை நெருங்காதவரை என்னவோ நான் இவர்களிடம் இருந்து தப்பித்து விட்டதாக நினைத்தேனே எவ்வளவு முட்டாள் நான்.


கவரில் ராஜசிங்கம் ஃபைனான்ஸஸ் என்ற சீலை பார்த்தவுடனே புரிந்து போனது, இவர்களை மீறி என்னால் எங்குமே செல்ல இயலாதென்று. கால்கள் தோய்ந்து போக அருகிலிருந்த சேரில் அமர்ந்தவாறு கவரைப் பிரிக்கத் துவங்கினேன். ஒரு பெரிய தாள் மடித்து வைக்கப்பட்டு இருந்தது. பிரித்தால், நானும் நிவேதாவும் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றும் ஒரு கடிதமும் இருந்தன. நிவேதாவின் லெட்டர் பேடில் இருந்ததால் ஒரு சிறு ஆசுவாசம். நல்லவேளை திருவாளர் அல்லது திருமதி  ராஜசிங்கத்திடம் இருந்து இல்லை என்று.


"ஷிவானி! மற்றவர்கள் மேல் தான் உன்னுடைய கோவம் இருக்கும். என்மேல் இல்லை என்றெண்ணுகிறேன். ஐ மிஸ் யூ சோ மச். ஐ டோண்ட் நோ ஹௌ டு எக்ஸ்பிரஸ். இத்தனை நாள் இல்லாமல் இப்போது மட்டுமென்ன திடீர் பாசமென நீ கேட்பது எனக்கு புரிகிறது. என்னவென்று உனக்கு பேசுவது? எப்படி சமாதானப்படுத்துவது உன்னை? ஆனாலும் உனக்கு கோவம் அப்பா, அம்மாவின் மேல் தானே? என்னை தண்டிக்காமல் இருக்கலாம் தானே? மற்ற நேரங்கள் உன்னுடைய ஆப்சென்ஸ் இல்லாதது வருத்தம் தந்தாலும் இப்போது வாழ்வில் நான் முக்கியமான அடி எடுத்து வைக்கப்போகிறேன். இப்போது நீ என்னுடன் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை, ரெக்வெஸ்ட் எப்படி வேண்டுமென்றாலும் நினைத்துக்கொள். அடுத்து வரும் மே மாதம் எனக்கு கல்யாணம்  நிச்சயம் செய்திருக்கிறார் அப்பா. நீ இல்லாமல் எனக்கு எதுவுமே  நடப்பதில் இஷ்டமில்லை. ப்ளீஸ் ஷிவானி! எனக்காக நீ வரவேண்டும். ப்ளீஸ் ஐ பெக் யூ."


படித்து முடிக்கும்போது உணர்ச்சிக்குவியல் ஆகிவிட்டேன் நான். நானும் நிவேதாவும் எங்களது பதின்ம வயது வரைக்கும் இணைந்தே தான் இருந்தோம். அதன்பின் அவளது நட்பு வட்டம் என்னை அவளிடம் இருந்து சற்று விலகி இருக்க வைக்கத் தூண்டியது என்னுடைய பனிரெண்டாம் வயதில் தான். ஏனோ எங்களின் விருப்பு வெறுப்புக்கள் வேறுபட்டு போக, அவளுக்கு அவளது நட்பு வட்டாரம் முக்கியமாகிப் போனது. ஆனால் எனக்கு மட்டும் என்னுடைய டு கோ பெர்சன் எப்போதுமே நிவேதவாக தான் இருந்தாள். அதனால் தான் எனக்கு அவ்வளவு பெரிய விஷயம் நடந்த போதும் அவளிடம் போய் தான் நின்றேன்.


நிவேதாவிற்கு எப்போதுமே நான் துணை நின்றிருக்கிறேன். அவளுக்கு என்ன பிரச்சனை என்றாலும் அவளுடைய டு கோ பெர்சன் நானாக இருந்திருக்கிறேன். ஆனால் எனக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது நானும் அவளிடம் அதையே தான் எதிர்பார்ப்பேன். மற்ற எவர் மீதும் நம்பிக்கை இல்லாத போதும் நிவேதாவை ரொம்பவே நம்பினேன் அன்று. அவளிடம் தான் முதன்முதலில் சொல்லிக் கதறினேன். செய்வதறியாது திகைத்தவளாய் என்னைக் கட்டிக்கொண்டு அழுதாள் முதலில். பின்பு என்னை சிறிது தேற்றி தான் பார்த்துக்கொள்வதாய் சொல்லி அப்பாவிடம் பேச சென்றாள். ஆனால் பலன் தான் ஒன்றும் இல்லை.


கையில் இருந்த புகைப்படத்தில் நானும் நிவேதாவும் சிரித்துக்கொண்டு நின்றோம். oஒரேபோன்று உடை அணிந்திருந்தோம். ஆனாலும் நிவேதா ஒரு இளவரசியை போன்றிருந்தாள். அவளருகில் முன்பல் விழுந்து ஓட்டைப்பல்லை காட்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்தேன். இந்த புகைப்படம் எடுக்கும்போது எனக்கு எப்படியும் ஒரு ஏழு வயதாவது இருக்கும். இதை பார்க்கும்போதே "எஞ்சினுக்கு கரி அள்ளிப்போடறவ மாதிரி இருக்க பாரு" என்று திருமதி சுலோச்சனா அம்மையாரின் குரல் காதில் விழுந்தது. ஆம் அம்மா என்று நான் அழைத்து எனக்கு நினைவில்லை. எனக்கு அவர் ஏனோ திருமதி சுலோச்சனா அம்மையாராகவே ஆகி போனார். ஏனென்றால் அவருக்கு என்னை ஏனோ பிடித்ததே இல்லை. வேண்டாத பிள்ளை நான். சோ தி பீலிங்ஸ் வேர் ம்யூச்சுவல் .


புகைப்படத்தின் பின்புறம் நிவேதாவின் கையெழுத்தில் "உனக்கு நான் எனக்கு நீ. இது தானே எப்பவுமே. வராம இருந்திராத. உன்னை கட்டாயம் எதிர்பார்ப்பேன். மே கடைசியில் தான் கல்யாணம். ப்ளீஸ் பி வித் மீ த்ருஅவுட். ப்ளீஸ்." என்றிருந்தது. மற்ற எவருக்காக இல்லை என்றாலும் நிவேதாவிற்காக போகலாமா என்றொரு எண்ணம் தோன்றியது. ஆனால் எனக்கு இவர்கள் எல்லாம் செய்ததற்கு பின்னும் இவர்களை எல்லாம் பார்த்து விட்டு எதுவும் நடவாதது போல வர என்னால் முடியுமா என்று தான் தெரியவில்லை. 'இப்போ யோசிக்க வேண்டாம். அப்புறமா பாத்துக்கலாம்.' என்று தோன்ற கடிதத்தையும் புகைப்படத்தையும் ட்ராயரில் திணித்தேன்.


ஒன்று தெளிவானது. ராஜசிங்கம் ஒன்றும் ஒழிந்தது என்று என்னை விட்டுவிடவில்லை. என்னை இன்னும் கண்காணித்துக்கொண்டு தான் இருக்கிறார் போல. இல்லை என்றால் எப்படி என் விலாசம் தெரிந்திருக்கும். ஆனால் தெரிந்தும் எப்படி என்னை நிம்மதியாக விட்டு வைத்திருக்கிறார் என்பது தான் புரியவில்லை. நான் தான் ஃபூல்ஸ் பேரடைஸில் இருக்கிறேன் போல. இந்த வீட்டையும் காலி செய்ய வேண்டுமா எங்கு செல்வது? எவ்வளவு ஓடுவது? இனி அவரைக் கண்டால் அதே நடுக்கம் இருக்குமா? இல்லை தைரியமாக நேர்கொள்வேனா? தலை வெடித்து விடும் போலிருந்தது. மீண்டும் எம் எஸ் அம்மாவிடம் சரண்புகுந்தேன். சீக்கிரமே தூக்கம் என்னை தழுவிக் கொண்டது.


ஃப்ளோரா டிசைனேர்சுடன் ஒப்பந்தம் ஏற்பட்டு அதன்பின்னான வேலைகள் மளமளவென நடக்கத்தொடங்கின. முழுக்க முழுக்க பெண்களுக்கான ஆடை வடிவமைப்பிற்ககான ஒப்பந்தம் இது. எனது பேராசிரியர் மிஸ்டர் சேனா முகுந்திற்கு எனது டிசைனிங் மீது அளவு கடந்த நம்பிக்கை. எனக்கு என்மீது உள்ள நம்பிக்கையை விட அவருக்கு என்மீது நம்பிக்கை அதிகம். டிசைனிங் கோர்ஸ் சேர்ந்த போது ரொம்பவுமே பயந்தேன். "நேரா நேரத்துக்கு வக்கணையா வகைவகையா சாப்பாடு போட்டு வித விதமா உடுத்தக் குடுத்து கஷ்டம் தெரியாம வளர்த்து விட்டாச்சுல்ல. அதான் திமிர்ல பேசற. இதெல்லாம் எங்க உறுப்படப்போகுது. விடு சுலோ. நாலு நாள் வெளில சோத்துக்கு கஷ்டப்பட்டா தானா வீடு தேடி வரப்போகுது." என்ற மிஸ்டர் ராஜசிங்கத்தின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். அதுவே என்னை உண்ண விடாமல், உறங்க விடாமல் என்னுடைய இலக்கை நோக்கி ஓட பேருதவியாய் இருந்தது.


பொதுவாகவே பேராசிரியர் சேனாவை எல்லாரும் ஹிட்லர் என்று தான் அழைப்பார்கள். ரொம்பவுமே ஸ்ட்ரிக்ட். அவருக்கு   நமது டிசைன் ஓகே என்றால் அது கட்டாயம் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்கியது போல் தான். முதலில் எல்லாம் அவரிடம் நிறைய திட்டு வாங்கி இருக்கிறேன். ஆனால் அவர் ஒரு டிசைன் பிடிக்கவில்லை என்று சொன்னால் அதை கூர்ந்து நோக்கினால் ஏன் சொன்னார் என்று பிடிபடும். சில சமயங்களில் டிசைனில் சில திருத்தங்கள் சொல்லுவார். பலமுறை டிசைன் ட்ராப்ட்டின் ஒரு பகுதியை கூர்ந்து பார்த்துவிட்டு திருப்பிக் கொடுத்துவிடுவார். நான் இரவெல்லாம் ட்ராப்ட்டுடன் உட்கார்ந்து யோசித்து பார்ப்பேன். சற்று ஊன்றி கவனித்தால் பின்பு நமக்கே புரிபட்டு விடும். தவறை திருத்திக் கொண்டுபோய்க் காண்பித்தால் அது சரியாக இருக்கும் பட்சத்தில் "குட்" என்ற ஒரு வார்த்தையும் தலை ஆட்டலும் மட்டுமே கிடைக்கும். ஆனால் அதுவே பெரிய அவார்டு கிடைத்த சந்தோசம் கிடைக்கும்.


முதலில் ஒருமுறை ஒரு டிசைனில் தவறு வந்தபோது, சற்று கோவமாக முறைப்பார்த்துவிட்டு தலையை இருபுறமும் அசைத்துவிட்டு சென்றுவிட்டார் பேராசிரியர் சேனா. அன்று இரவு முழுதும் அந்த டிசைனையே பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அழுகையாக வந்தது. எனக்கு டிசைனிங் வராது போல, நான் தான் தேவை இல்லாமல் கற்பனைகளுடன் எனது நேரத்தை வீணடிக்கின்றேன் போல என்றெல்லாம் தோன்றத்தொடங்கியது. ஆனாலும் அவருக்கு அவ்வளவு கோவம் வரும் அளவுக்கு என்ன தவறு செய்தோம் என்று என்னுடைய ட்ராப்ட்டை ஊன்றிப் பார்க்கையில் அடிப்படையிலேயே தவறு இருப்பது புரிபட இரவெல்லாம் கண்விழித்து அதை திருத்தியது மட்டுமின்றி மேலும் சில மாற்றங்களை செய்து மறுநாள் அவரிடம் கொண்டு காட்டியபோது, ஆழ்ந்து நோக்கிப் பார்த்துவிட்டு, என்னைப் பார்த்து ஒரு புன்சிரிப்புடன் தலையசைத்து சென்றார். எனக்கு அதுவே போதுமான பூஸ்டாக இருந்தது.


அப்படிப்பட்ட சேனா சார் என்னுடைய திறமை அறிந்து என்னை ஃப்ளோரா டிசைனஸுக்கு  பரிந்துரை செய்திருக்கிறார் என்றால் அது எனக்கு வாழ்க்கையில் கட்டாயம் ஜெய்ப்பேன் என்பதற்கான அறிகுறியாகத் தான் நான் எடுத்துக் கொள்கிறேன்.  ஃப்ளோராவும்  எனது திறமைக்கும் ஆர்வத்திற்கும் சரியாக தீனி போடவே சந்தோஷமாகவே என்னுடைய வேலையை செய்தேன். என்னைக் காட்டிலும் ரொம்பவே உற்சாகமாக பங்கெடுத்தது வினி தான்.  பொதுவாகவே வினி ஹைபெராக்ட்டிவ் வகையை சேர்ந்தவள் தான். டிசைனிங்கில் அவளுக்கு இருந்த விருப்பமும் சேர்ந்துகொள்ள அவளை கைகளில் பிடிக்க முடியவில்லை.


எல்லாமே இனித்தாலும், பாகைத் துரும்பாய் அவ்வப்போது பழைய நினைவுகளும் வரத்தான் செய்தன. குறிப்பாக தீபனின் நினைவுகள். சிறிது காலமே ஆனாலும் வாழ்க்கையில் என்னை எனக்காக ஏற்றுக்கொண்டு என்னை விரும்பியவன். அவனுடன் கழித்த அந்த சிலநாட்கள் மட்டுமே நான் என்னுடைய நினைவுப் பெட்டகத்தில் எப்போதுமே பொதிந்து வைத்து பாதுகாக்க விரும்பும் நினைவுகள். இன்னும் சொல்லப்போனால் அவனுக்கு நான் இன்னார் வீட்டுப் பெண் என்பதெல்லாம் தெரியவே செய்யாது. ஆரம்ப காலத்தில் வேண்டுமென்றே சொல்லாமல் விட்டுவிட்டேன் (சொல்வதற்கான சந்தர்ப்பமும் ஏற்படவில்லை)  ஆனால் அதன்பின் எத்தனையோ முறை சொல்லவேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் ஏனோ முடியாமல் போய்விடும். என்னுடைய மனசாட்சி என்னை பலமுறை கேள்வி கேட்கும் போது  கூனி குறுகிப் போவேன்.  ஆனால் என்ன முயன்றும் என்னால் என்னை திருவாளர் ராஜசிங்கத்தின் மகளென சொல்லிக் கொள்ள இயலவில்லை.


சிறுவயது முதலே என்னிடமும் நிவேதவிடமும் எங்களுக்காக பழகுபவர்கள் மிகவும் குறைவு. திருமதி ராஜசிங்கம் நாங்கள் குறிப்பிட்ட சம அந்தஸ்து கொண்ட குடும்பத்து குழந்தைகளிடம் மட்டுமே நட்பு பாராட்ட வேண்டும் என்று கட்டளை இட்டிருந்தார். ஒருமுறை என்னுடன் படித்த துர்கா என்னை கோவிலில் கண்டவுடன் "ஷிவானி" என்று ஓடிவந்து கட்டிக்கொண்டு பேசியதற்கு ஒரு வாரத்திற்கு என்காது ஜவ்வு பிய்ந்து போகுமளவு அட்வைஸ் மற்றும் திட்டு மழை. தராதரம் தெரியாமல் பழகுகிறேனாம். அவ்வளவு பணவசதி இல்லாதவர்களிடம் பழகி ஒன்றும் உபயோகம் இல்லையாம். இந்த நிகழ்விற்கு பின் என்னுடைய நட்பு வட்டத்தை வீட்டிற்கு தெரியாதவாறு பார்த்துக் கொண்டேன். இருந்தும் தீபன் வெறும் நட்பு என்ற கோட்டை என்றோ உடைத்தெறிந்து விட்டானே. அவனுடனான பழக்கத்தை என்றானாலும் வீட்டில் சொல்லித்தானே ஆகவேண்டும்.


வீட்டினரின் குணமறிந்தே பொதுவாக யாரிடமும் நெருங்க மாட்டேன். ஆனால் இவனிடம் ஏதோ ஒன்று இருந்தது. அவன் சிரிக்கும் போது அவனது கண்களும் சேர்ந்து சிரிக்கும். முகம் பார்த்தே பசி அறிந்து என்னை உண்ண செய்வான். எனக்கு பிடிக்கும் என்று எப்போதும் என்னை சந்திக்க வரும் போது ப்ரூஸ் அண்ட் பேக்ஸின் அன்றைய ஸ்பெசாலிட்டி கொண்டு வருவான். என்னுடைய விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் தந்த முதல் மனிதன். என்னிடம் மட்டுமின்றி அவனைச் சுற்றியுள்ள அனைவரிடமும் உண்மையாக பழகுவான். எனக்கு பிசினஸ் மனேஜ்மென்ட்டில் இஷடமில்லை என்றபோதும் திரு ராஜசிங்கத்தின் மிரட்டலுக்கு பயந்து படிக்க நேரிடும் போது, "உனக்கு பேஷன் டிசைனிங் தானே இன்டெரெஸ்ட். நீ அத தானே சூஸ் பண்ணனும். ஏன் பிடிக்காத விஷயத்த எடுத்து கஷ்டப்படணும்?" என்று என்னிடம் சண்டைக்கு வந்தவன். 


எனக்காக என்னிடம் வாதாடும் ஜீவன் தீபன். ஆனால் அவனா அல்லது அந்த குடும்பத்தில்  இருந்து விடுதலையா என்று வரும்போது நான் அவனை விடவேண்டி இருந்தது. என்னுடன் இருந்தால் அவனுடைய வாழ்க்கை சிக்கலாகிப் போயிருக்கும். அவனது கனவு லட்சியம் எல்லாவற்றையும் ராஜசிங்கம் என்ற மாமனித மிருகம் தனது சுயநலத்திற்காக அழித்து விடும் என்று புரிய அவனை பிரிய வேண்டி வந்தது. இப்போது யோசித்தால் அது தான் சரியோ?

— “மணமகன் ஜாக்கிரதை” கதையிலிருந்து ஒரு பகுதி  

✍️ எழுத்தாளர்: Gowri  

இந்தக் கதை முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது

Comments