4
சீராகச் சென்றுகொண்டிருக்கும் பயணத்தில் திடீரென குறுக்கே ஏதாவது புகுந்தால் எப்படி ஓர் தடுமாற்றம் வருமோ அப்படி ஒன்று தான் நிவேதாவின் கடிதம். ஐந்து வருடங்கள் இல்லாத அக்கறை இப்போது மட்டும் என்ன திடீரென? நிவேதாவிற்கு நான் இருக்குமிடம் தெரியுமென்றால் பின் திருவாளர் ராஜசிங்கத்திற்கும் தெரிந்திருக்கும் தானே. அப்படி என்றால் இன்றுவரை எப்படி என்னை விட்டு வைத்திருக்கிறார்?
திருவாளர் ராஜசிங்கம் எந்த ஒரு விஷயத்திலயும் தான் நினைத்தது மட்டுமே நடக்க வேண்டும் என நினைப்பவர். அன்றைய இரவு நான் அப்படி ஒரு நிலையில் வந்து அவ்வளவு அழும்போதும் எனக்கு ஒரு தந்தையாய் ஆறுதல் சொல்லாதது கூட பெரிதில்லை. ஆனால் அவரது பலகோடி ரூபாய் பிசினஸ்ஸில் என்னால் நஷ்டம் ஏற்பட்டது தான் பெரிதாகப்பட்டது. அவரது எண்ணமும் பேச்சும் அடுத்து அதை எப்படி சரி செய்வது அதுவும் நான் என்ன செய்தால் அது சரி ஆகும் என்பதாகத் தான் இருந்தது. ஒரு தந்தையாக கடைசி முறையாக அவர் தோற்றுப் போனார் என்னளவில். அத்தோடு முடிவு செய்தது தான் இந்தக் குடும்பமே எனக்குத் தேவை இல்லை என.
திருவாளர் ராஜசிங்கம் அடிக்கடி சொல்லுவது அவரது நிழலில் வாழ்வதாலே தான் எங்களுக்கு இந்த சமூகத்தில் மரியாதையாம். இல்லை என்றால் எங்களை யாரும் மதிக்க மாட்டார்களாம். அவர் அப்படி சொல்லும் போதெல்லாம் எனக்குள் ஒரு வேகம் எழும். இவர் சொல்வதை தவறென்று அவருக்கு நிரூபித்து காட்டவேண்டுமென. நிதானித்து யோசித்தால் 'அப்படியே நாம் நிரூபித்தால் கூட இவர் ஒத்துக் கொள்ளமாட்டார்.' என.
இப்போது என் யோசனை எல்லாம் எப்படி நிவேதாவின் திருமணத்திற்கு செல்வது. ஏதோ அன்று ஒரு உணர்ச்சிப் பிரவாகத்தில் போகலாம் என்று முடிவு செய்தாயிற்று. ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால் அந்த முடிவு தவறோ என்று தான் தோன்றுகிறது. வேண்டாம் இருக்கும் மனநிம்மதியை கெடுத்துக் கொள்ளவேண்டாம். இவர்கள் யாரும் வேண்டாம் என்று தானே ஐந்து வருடங்கள் முன்பு விட்டு வந்தோம். இப்போது நிவேதாவிற்காக பார்த்து போனால் கூட திருவாளர் மற்றும் திருமதி ராஜசிங்கத்தை பார்க்கவேண்டி வரும். இவர்களை கை ஆளும் தைரியம் இருந்தாலும் எதற்கு வீணாய் மனநிம்மதியை கெடுத்துக் கொள்ள வேண்டும்?
ஒருவேளை நூற்றில் ஒரு சதவீதமாய் நிவேதாவிற்கு மட்டும் தான் நம் இருப்பிடம் தெரிந்திருந்தால், நாம் இந்தக் கல்யாணத்திற்கு போய் அவர்கள் அனைவருக்கும் நம்மை நாமே காட்டிகொடுப்பது போலாகாதா? வேண்டாம். வேண்டவே வேண்டாம். இப்போது தான் சிலகாலமாய் நிம்மதியான வாழ்க்கை, படுத்தவுடன் உறக்கம், நிம்மதியான உணர்வுடன் இருக்கிறோம். அதை கெடுத்துக் கொள்ள வேண்டவே வேண்டாம். நிவேதாவிடம் மானசீகமாய் மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம். முடிவு செய்ததும் தான் ஏனோ நிம்மதியாய் இருந்தது.
சிறிது மாற்றம் தேவைப் படும்போல் இருக்கவும், வழக்கம் போல் ட்ராக் சூட்டை மாட்டிக்கொண்டு ஹெட் போன்ஸை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டேன். இது ஒரு கேட்டட் கம்யூனிட்டி என்பதால் எல்லா வசதியும் உள்ளேயே உண்டு தான். ஆனாலும் ஏனோ எனக்கு அருகில் இருக்கும் பார்க்கில் சென்று ஓடுவதைப் போன்றதொரு ஃபீல் வேறெதிலும் கிடைப்பதில்லை. துணைக்கு எம் எஸ் அம்மாவையும் துணைக்கு அழைத்துக் கொள்ளலாம். ஏனோ அவர்கள் குரல் செய்யும் மாயமே தனி தான். அப்படி ஒரு நிம்மதி கிட்டும். ஊரெல்லாம் சுத்திவிட்டு அம்மம்மாவின் மடியில் படுத்துக் கொள்ளும் போது கிடைக்கும் ஒரு நிம்மதி பரவசம் இவர்கள் குரலில் கிட்டும்.
இதுவுமே எனக்கு தீபனிடம் இருந்து வந்த பழக்கம் தான். முன்னெல்லாம் அவனைப் பார்க்கவென செல்லும்போது அவன் எம் எஸ் அம்மாவின் பாட்டுக் கேட்டபடி தான் உலகம் மறந்து அமர்ந்திருப்பான். ஒரு முறை வழக்கம் போல் வீட்டில் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டு கிளம்பி இவனை பார்க்கச் சென்றால் சிவந்திருந்த என்னுடைய முகத்தைப் பார்த்தவனாய் என்னை அவனருகில் அமரவைத்து அவனுடைய மொபைலில் எம் எஸ் அம்மாவின் பாடலை ஓடவிட்டான்.சற்று நேரத்தில் எல்லாம் எனக்கு மற்ற எதுவுமே நினைவில் இல்லை. மனதில் அப்படி ஒரு அமைதி. எதுவென்றாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற உறுதி தோன்றி விட்டது. அப்படி ஆரம்பித்தது தான் எனக்கும் எம் எஸ் அம்மாவிற்குமான இணைப்பு.
இது மட்டுமின்றி பலவிஷயங்களை எனக்கு அறிமுகப் படுத்தியது தீபன் தான். செல்ஃப் லவ் என்ற ஒரு விஷயம் எனக்கு இருந்ததே இல்லை. எனக்கு மிகவும் தாழ்வு மனப்பான்மை உண்டு. சிறு வயது முதலே அம்மம்மா என்னை க்ளாக்ஸோ பொம்மை என்று தான் அழைப்பார். நல்ல கொழுக் மொழுக் பேபி தான். அது சிறுவயதில் பார்க்க நன்றாக இருந்தாலும் இப்போது வளர்ந்து பதின்ம வயதில் மற்றவர்களின் கேலிப் பார்வைக்கு ஆளாகும்போது ரொம்பவே நொந்து போவேன். பதின்ம வயதில், உடன்படிக்கும் நண்பர்களே 'எந்தக் கடையிலே நீ அரிசி வாங்கற?' என்று பாடும்போது கூனிகுறுகிப் போவேன்.
மற்றவர்கள் பேசுவதை அலட்சியம் செய்தாலும் வீட்டில் திருமதி சுலோச்சனா அம்மையார் அடிக்கடி என்னிடம் "காணாததைக் கண்டாப் போல தின்னா இப்படி தான். உன்னை பார்த்தா யாராவது இந்த வீட்டுப் பொண்ணுன்னு சொல்லுவாங்களா? அளந்து சாப்பிடணும். இப்படி அள்ளி முழுங்கினா வீங்கிப் போய் தான் இருப்ப?" என்று சொல்லும்போது ரொம்பவே காயப்படும். வீட்டிற்கு அவர்களது பிசினஸ் சம்பத்தப்பட்ட மனிதர்கள் யாராவது வருகிறார்கள் என்றால் என்னிடம் "நீ தயவு செஞ்சு இன்னிக்கு ரூமை விட்டு வராத. இல்லைன்னா அம்மம்மா வீட்டுக்கு போயிரு. உன்னை எல்லாம் என்னால என்னோட பொண்ணுன்னு காட்ட முடியாது." என்று சொல்லும்போது ஒரு பக்கம் நிம்மதியாகவும் இருந்தாலும் சிறு மனக்கஷ்டம் இருக்கத்தான் செய்யும்.
எப்போதுமே சுலோச்சனா அம்மையாருக்கு நிவேதா தான் செல்லம். தன்னைப் போலவே இருக்கிறாள் என்பது ஒரு பிளஸ். இதெல்லாம் எனக்கும் புரிகிறது தான். ஆனால் எனது தோற்றம் ஒன்றும் என்னுடைய தவறல்லவே. சிறுவயது முதலே நான் சற்று நிறம் கம்மி என்று என்னைத் தூக்கவே மாட்டாராம். நான் எப்போதும் அம்மம்மாவிடம் தான் இருப்பேனாம். அம்மம்மா சொல்லுவார் "எனக்கு கிடைச்ச பொக்கிஷம் கண்ணா நீ. உன்ன பாத்தாலே போதும். என்னுடைய மனசும் வயிறும் நிறைஞ்சிரும். யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு கொழந்த?" என்று. சிறுவயதில் அது ஆறுதல் அளித்தாலும் ஏனோ வளர்ந்ததும் அது என்னை சமாதானப் படுத்துவதற்காக அம்மம்மா சொல்லியதோ என்று தோன்றி விடும்.
ஆனால் இதே போன்றதொரு உணர்வை தீபனும் கொடுத்தது தான் அவன்பால் என்னை இழுத்தது போலும். என்னை எனக்காக ஏற்றுக்கொண்டது தீபன் தான். என்னுடைய பெயரையும் விருப்பு வெறுப்புகளையும் தவிர என்னைப்பற்றி என்னுடைய குடும்பத்தைப் பற்றி எதுவுமே தெரியாத போதும் என்னை மிகவும் நேசித்தவன். அவனுக்கு நான் எவ்வளவு முக்கியம் என்பதை அவனது பார்வையிலேயே புரிந்து கொள்ளமுடியும். அவன் என்னைபார்க்கும் பார்வையிலேயே 'யூ ஆர் மை ப்ரையாரிட்டி, மை வேர்ல்டு.' என்ற உணர்வு எனக்கு புரிபடும். வீட்டில் கிடைக்காத முக்கியத்துவம் அவனிடம் எனக்கு அளவில்லாமல் கிடைத்தது. அப்படிப்பட்டவனின் பாதுகாப்பும் சந்தோஷமும், முக்கியமாக அவனது எதிர்காலமும் எனக்கு முக்கியமாகப் பட்டது தப்பில்லையே.
நீண்டதொரு பெருமூச்சுடன் மீண்டும் வீடு வந்து சேரும்போது மணி இரவு எட்டு. அபார்ட்மெண்ட் வாயிலிலேயே நின்றிருந்தாள் வினு. அவ்வளவு நேரம் மொபைலில் ஆழ்ந்திருந்தவள் என்னைக் கண்டதும் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்டாள். மேலெல்லாம் வியர்வை வழிய வந்த நான் "ஷிவு டர்ட்டி. மேல ஒட்டாத." என்றேன். அவளோ என்னை விடாமல் "என்ன பெரிய டர்ட்டி. எப்படி இருந்தாலும் மை ஷிவு ஐஸ் பியூட்டி தான். வா வா பசிக்குது. சாப்பிடலாம்." என்றாள். "உனக்கு பசி வந்தா தான் ஞாபகமே வருவேனா?" வேண்டுமென்றே சீண்டினேன் அவளை. "நான் இங்கயே தங்கிருவேன். உன்னோட சோ கால்டு பிரைவசி போயிருமேனு தான் யோசிச்சேன். எனக்கு எல்லா நேரமும் உன்கூட இருந்தாலும் ஓகே தான் ஷிவு. யூ நோ யூ ஆர் மை சேவியர், மை ஏஞ்சல்." என்று உணர்ச்சிவசப்பட ஆரம்பித்தாள்.
இது எப்போதும் நடப்பது தான். எப்போதோ ஒருமுறை நடந்ததை வைத்து இன்றளவிலும் நான் அவளுக்கு ஏதோ பெரிதாக செய்ததாக பேசுவாள் வினு. அவளிடத்தில் நானிருந்து எனக்கு அப்படி நேர்ந்திருந்தால் அவளும் அதையே தானே செய்திருப்பாள். "வா, வா உனக்கு பிடிச்ச இடியாப்பமும் சொதியும் இருக்கு. சாப்பிடலாம்" அவளை வீட்டினுள் தள்ள முயன்றபடி நான் சொல்ல, "மேடம் உங்களுக்கு இப்போ இந்த லெட்டர் வந்துச்சு" என்றபடி வந்தார் இந்த ப்ளாக்கின் செக்யூரிட்டி ஜனா. யாரிடம் இருந்து என்று யோசித்தபடியே வாங்கிக்கொண்டு "ஜனா சார். இருங்க இடியாப்பம் தரேன் டப்பால." என்றபடி உள்ளே சென்று ஒரு டப்பாவில் அவருக்காக உணவை பேக் செய்து வந்து கொடுத்தேன். "தேங்க்ஸ் மேடம்." என்று வாங்கிக் கொண்டு கீழே சென்று விட்டார்.
நானும் வினுவும் உணவுண்டு முடிக்கும் வரைக்கும் ஓவெனின் மேல் நான் வைத்துவிட்டு வந்த கவரை மறந்தே போனேன். இடியாப்பமும் சொதியும் வினுவிற்கு மிகவும் பிடித்தமான உணவென்பதால் அங்கு கைக்கும் வாய்க்கும் யுத்தமே நடந்து கொண்டிருந்தது. தட்டை வழித்து காலி செய்த பின்பு வினு என்னிடம் "யாருகிட்ட இருந்திட்டு லெட்டர் ஷிவு?" என்றாள். வாயருகில் கொண்டு சென்ற கை அப்படியே நின்று போனது. ஐயோ! ஆமால, திரும்பவுமா? சுதாரித்துக் கொண்டு எதாவது பேங்க்ல இருந்து ப்ரோமோஷனல் போஸ்டா இருக்கும்பா." என்றேன். அதன்பின் வழக்கம் போல வானத்தின் கீழிருக்கும் அத்தனையும் பற்றி இருவரும் கதை அளந்துவிட்டு முடிக்க நேரமாகவே வினு வீட்டிற்கு கிளம்பினாள். "நாளைக்கு. இந்த ஸ்ப்ரிங் சீசனுக்கான டிசைன்களை ராதிகா மேடம்கு காட்டணும். அவங்க எக்ஸ்போர்ட்டுக்கு அத தான் யூஸ் பண்ணப்போறாங்க போல ஷிவு. டிராப்ட் எல்லாம் ரெடியாக தான் இருக்கு. அதனால இப்போ ஆர்மோனியப் பெட்டிய (லேப்டாப்ப தான் அப்படி சொல்றா ) தொடாம தூங்கற வேலைய பாரு." என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டு கிளம்பினாள் வினு.
வினு சென்றவுடன் ஏனோ ஒருவித வெறுமை என்னை சூழ்ந்து கொள்ள என்னை அறியாமல் "காக்க காக்க கனகவேல் காக்க" சொல்லியபடியே கிளீனிங் வேலைகளை செய்ய ஆரம்பித்தேன். மறுநாளுக்கான சமையலுக்கானவற்றை தயாராய் எடுத்து வைத்துவிட்டு திரும்பும்போது என் கைதட்டி கீழே விழுந்தது அந்த கவர். அதனை எடுத்துக்கொண்டு ஹாலில் இருந்த சேரில் அமர்ந்தபடி அனுப்பியவர் யார் என்ற கேள்விக்கான விடையை பெற முயன்றேன். கவரின் மீது மீண்டும் ராஜசிங்கம் பைனான்ஸ் முத்திரையை பார்த்ததும் இதயம் மீண்டும் ஒரு முறை நின்று துடித்தது. கவருக்குள் இன்னுமொரு கவர் இருந்தது. என்ன என்று பார்க்கும் முன்னே அதனுடனிருந்த கடிதம் கீழே விழுந்து என் கவனத்தை திருப்பியது.
மீண்டும் நிவேதாவின் லெட்டர் பேடில் எழுதப்பட்டிருந்தது. ரேஸ் குதிரையாய் ஓடிய மனது சற்றே ஆசுவாசப்பட, வாசிக்கத் தொடங்கினேன். "ஷிவானி! நான் உனக்கு கடிதம் எழுதிவிட்டு பதிலுக்கு வெகு நாளாக காத்திருக்கும்போது தான் தோன்றியது நீ என்ன ஆனாலும் இந்த அட்ரஸுக்கு பதில் போட மாட்டாயென. இது தான் என்னுடைய வாழ்வின் கடைசி என்றாலுமே எனக்கு அதில் நீங்கள் யாருமே வேண்டாம் என்று தைரியமாக அப்பா அம்மாவிடம் சொன்னவளாச்சே நீ! எனக்குமே உன்னுடைய இருப்பிடம் இங்கே யாருக்கும் தெரிவதில் இஷ்டமில்லை. அதனால என்னோட நம்பர் இங்க கொடுத்திருக்கேன். நீ உன்னோட நம்பர் யாருக்கும் தெரியறத விருப்பப்படமாட்ட. எனக்கு அதுவும் புரியுது. என்னோட மெயில் ஐடி இதோ. எனக்கு கட்டாயமா மெயில் பண்ணு. எனக்கு உன்னைக் கட்டாயம் பார்க்கனும். ப்ளீஸ் கேக்க எனக்கே தப்புனு தெரிஞ்சாலும் உன்கிட்ட கெஞ்சி கேக்கறேன். என்னோட கல்யாணத்துக்கு நீ கட்டாயம் வரணும். உனக்கு ரத்னாக்கரை ரொம்பவே பிடிக்கும். அவரைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு உன்னை தான் ஞாபகம் வரும். அவருடைய பிடித்தங்கள் நிறைய உன்னுடன் ஒத்துப் போகும். நீ கட்டாயம் வா ஷிவானி. நான் உன்னை ரொம்பவே எதிர்பார்ப்பேன். ப்ளீஸ்." என்று முடித்திருந்தாள். நான் என்ன மாதிரி உணருகிறேன் என்றே எனக்குப் புரியவில்லை.
நிவேதாவுடனான எனது சிறுவயது நினைவுகள் அலைஅலையாய் மோதியது. முதலில் எல்லாம் என்னை எவரிடமும் விட்டுக் கொடுக்கவே மாட்டாள். என்னை விளையாடும்போது தள்ளிவிட்டாள் என அவளது பெஸ்ட் பிரென்ட் ஸ்னேஹாவிடம் பேச்சை நிறுத்தியவள். எல்லாம் எங்கு மாறியது, எப்போது நின்றது என்று யோசித்து பார்த்தால், எல்லாம் பதின்ம வயதில் தான். திருமதி சுலோச்சனா அம்மையார் நிவேதாவை தன்னுடைய நட்பு வட்டாரத்துக்கு பழக்குவதற்காக அழைத்து செல்ல ஆரம்பித்த சிறிது நாட்களில் எல்லாம் எனக்கும் நிவேதாவிற்குமான இடைவெளி அதிகமாக தொடங்கியது. அவளது உடையில் பேச்சில் ஆடம்பரமும், படாடோபமும் மரியாதையின்மையும் தெரிய நான் மெல்ல விலக தொடங்கினேன். அவளுக்கும் அதுவே தேவைப்பட்டது போல ஒதுங்கிக்கொண்டாள்.
கவரில் இருந்த மற்றொன்று அவளது நிச்சயதார்த்த பத்திரிகை போல. மணமகனின் பெயர் ரத்னாகரன். எம் பி ஏ படித்திருக்கிறார். தந்தை முகுந்தன், தாய் பத்மா . நானும் திருவாளர் ராஜசிங்கத்தின் பிசினஸ் வட்டத்தில் இந்த பெயரில் யாரும் இருக்கிறார்களா என்று என்னுடைய நினைவிடுக்குகளில் தேடிப் பார்க்கிறேன். எதுவும் பிடிபடவில்லை. ராஜசிங்கம் அப்படி ஒன்றும், சாதாரண குடும்பத்தில் எல்லாம் சம்பந்தம் வைத்துக்கொள்ள மாட்டார். இவர்கள் யார் என்று யோசித்துக் கொண்டே உறங்கிப் போனேன், பின் நடப்பவற்றை பற்றி கவலையே இல்லாமல். ஒரு வேளை இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாமோ?
— “ மணமகன் ஜாக்கிரதை” கதையிலிருந்து ஒரு பகுதி
✍️ எழுத்தாளர்: Gowri
இந்தக் கதை முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது

Comments
Post a Comment