13
அதிகாலை மணி ஐந்து, ஐந்தரை இருக்கக்கூடும். இன்னும் இருள் முழுதாய் பிரிந்திருக்கவில்லை. மையிருள் இன்னும் கசியத் தொடங்கிய பெண்ணவளின் மைவிழியாய் கருமை படர்ந்திருந்ததென்றால், குளிரோ கொஞ்சமும் குறையாமல் முதல் முறை வருபவர்களை உறையச் செய்து.. அந்நிலைக்கு பழகியோரை டிஸ்க்கௌண்டில் குறைத்ததுபோல நடுங்க மட்டும் வைத்துக்கொண்டிருந்தது.
வருடக்கணக்கில் அங்கேயே இருந்து பழகிவிட்டாலும் ஸ்வெட்டர் மஃப்லரென "ஃபுல்லி ஆர்ம்ட்" எனும் விதமாய் நின்றிருந்தார் அகிலன்.
அவர் நின்றிருப்பது பெங்களூரின் சில்க்போர்ட் ஜங்க்ஷனில்! பயணிகளை சுமந்து வந்து இறக்கிவிட்டு முன்னேறிய சில பஸ்ஸுகளையே வேடிக்கைப் பார்த்தபடி அதிரூபன் வரும் அந்த ஒரு பஸ்ஸுக்காக காத்திருந்தார் அவர்.
காத்திருந்தாரே தவிர அவர் மனம் முழுதும் எண்ண அலைகள் ஓயாமல் ஓடியாடிக் கொண்டிருந்தன. எல்லாம் மகனைச் சுற்றியே! எப்பொழுதும் கிளம்புவதற்கு முன்பு.. கிட்டத்தட்ட கிளம்பும் நாள் காலையிலேயே ‘நான் இன்று கிளம்பிடுவேன்’ என்றுவிடும் மகனா நேற்றிரவு பத்து பத்தரைக்கு மேல்... அதுவும் எப்பொழுது!? வண்டியேறிவிட்டப் பிறகு.. இவருக்கு அழைத்து “கிளம்பிட்டேன்பா! நாளைக்கு காலைல அங்க இருப்பேன்” என்றுவிட்டு வைத்தது? எப்பொழுதும் அரை மணி நேரத்திற்கு குறையாமல் வீட்டிலுள்ள அனைவருடனும் இரவு பேசிவிட்டே தூங்கச் செல்லும் அதிரூபனா, அவசர அவசரமாய் தகவல் பகர்ந்துவிட்டு அழைப்பை துண்டித்தது?
வழக்கம் போல் வந்து நின்றுவிட்டார்தான், இருந்தும் உள்ளுக்குள் ஏதோ கிடந்து உறுத்திக்கொண்டே இருந்தது. அது அதிக்கு என்னவாயிற்றென.. எதோ சரியில்லை என்றவர் மனம் அடித்துரைக்க மகனுக்கு எதுவோ பிரச்சனை என்றளவு அவரால் உணர முடிந்தது. நிச்சயம் அது உணர்வு ரீதியாகத்தான் இருக்க வேண்டும் இல்லையெனில்.. எதையோ பேசத் தயங்கி அவன் அழைப்பை துண்டித்திருக்கமாட்டான். அது என்னவாய் இருக்கும்? அதுவும் அதிரூபனை இந்தளவு பாதித்திருக்கதென்றால்... திடுதிப்பென இப்படி கிளம்பி வருமளவு அங்கு என்ன நடந்தது? என்று ஒரு தந்தையாய் அவர் மனம் குழம்பி தவித்தது.
அதற்கு விடையளிக்க வேண்டியவனின் வண்டி சரியாய் ஐந்தரைக்கு வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய அதியின் முகத்தில் எதுவுமில்லை! சந்தோஷம், துக்கம், சிரிப்பென.. எதுவுமே! மாறாய் அவனிடம் சோர்வை மட்டுமே அவரால் உணர முடிந்தது. பிரச்சனை பெரிதென புரிந்துவிட இறங்கியவனிடமிருந்து பையை வாங்கிக்கொள்ள அவர் கை நீட்டியபடி,
“ட்ராவல்லாம் எப்படி அதி?” என்க அவனிடமோ பதிலுமில்லை நீண்டிருந்த கைக்கு பிரதிபலிப்பும் இல்லை.
“அதி?” என்றவர் அவனின் தோளைத் தொடவே,
“ஆஹ்! என்னப்பா கேட்டீங்க?” என்றான் ஏதோ தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டவனைப் போல. அவனது அசைவுகள் ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டிருந்த அகிலன்,
“ஒன்னுமில்ல அதி.. ரொம்ப அசதியானு கேட்டேன்.. கிளம்பலாமா அதி?” என்றார் அதியை ஆராய்ந்தபடியே
“ம்ம்.. கிளம்பலாம்பா” என்று வண்டியில் அவர் பின்னால் ஏறிக் கொண்டான் அதிரூபன். அகிலனின் மனதில் பாரத்தை ஏற்றியபடி!
பொதுவாகவே அதிகம் பேசாவிடினும் காலை நேரப் பயணங்களில் எதைப்பற்றியாவது சிற்சிறிதாய் பேசிக்கொண்டோ இல்லை விவரம் கேட்டுக்கொண்டோ வரும் அதிரூபன் இன்று நீண்ட நேரமாகியும் மௌனமாய் வந்துக்கொண்டிருக்க ரியர் வ்யூ மிரர் வழியாய் பார்த்தவருக்கு ஏதோ தீவிர சிந்தனையில் நெற்றியைச் சுருக்கியபடி சாலையையே பார்த்திருந்த அதிரூபனே பட.. அதை கவனித்தவர் ஆள் நடமாட்டமற்ற இடமாய் பார்த்து வண்டியை நிறுத்தினார்.
அகிலன் நிறுத்திவிட்டு அப்படியே அமைதியாய் அமர்ந்திருக்க ஐந்தாறு நிமிடங்கள் கழிந்தே வண்டி நகராமல் ஒரு இடத்தில் நின்றிருப்பதை உணர்ந்தான் அதிரூபன்.
வண்டி நகரவில்லை என்று கண்டுக்கொண்டவனின் கண்கள் சுருங்க,
“என்னாச்சுபா? எதாவது பிரச்சனையா?” முன்னால் ஆளற்ற சாலையையே கைகளை கட்டியபடி வெறித்திருந்த தந்தையிடம் வினவ, அகிலனோ அத்தனை நேரம் எதிர்ப்பார்த்திருந்தது நடந்துவிட்டதைப்போல பெருமூச்சொன்றை இழுத்துவிட்டவராய்,
“ம்ம்.. ஆமாம் அதி, கொஞ்சம் பேசலாமா?” என்க என்னவென்று புரியாவிடினும் வண்டியைவிட்டு இறங்கினான் அதி. வண்டியிலிருந்து இறங்கியவர் அதை ஓரமாய் தள்ளி நிறுத்திவிட்டு அந்த லேக்கை தடுத்து நின்ற சுவரருகே செல்ல அதிரூபனும் அவரை பின்தொடர்ந்தான்.
குளத்தையே வெறித்திருந்தவரையே சில கணங்கள் பார்த்திருந்தவனோ அதற்குமேல் முடியாதவனாய்..
“என்னாச்சுபா?” என்று ஆரம்பிக்க அகிலன் தன் மௌனம் கலைந்தார்.
“உனக்கு என்னாச்சு அதி?” என்ற கேள்வியில் நுண்ணிய அதிர்வொன்று அதியிடம். கணப்பொழுதில் முகத்தை சீராக்கியவன்,
“எனக்கு என்னப்பா? ஒன்னுமில்லையே..” என்றான் சாதாரணமாய் காட்டிக்கொண்டு.
மறுப்பாய் தலையை இடவலமாய் அசைத்த அகிலனோ, “நீ பொய்கூட சொல்லுவியா அதி?” என்று கேட்டுவிட அவனுக்கோ அன்றொரு நாள் மேக்ஸிடம் அவன் இதே வார்த்தைகளை சொன்னது வேறு நினைவிலாடி அவனை இன்னும் அலைக்கழித்தது.
“அப்படியெல்லாம் இல்லப்பா.. ஐம் ஓகே..”
“யு ஆர் நாட்! அவ்வளவு கூடவா எனக்கு வித்தியாசம் தெரியாது? உன் முகத்த வெச்சே உன் மனச படிக்கறவன் நான் அதி. யு ஆர் நாட் ஓகே… என்னமோ ஆகிருக்கு அங்க.. இல்லன்னா என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இப்படி கிளம்பி வந்துருக்க மாட்ட! உன் முகத்துல எப்பவும் இருக்கற ஒன்னு இல்ல அதி… மொத்தத்துல நீ.. நீயாவே இல்ல. இங்கருந்து போன அதி முழுசா திரும்பி வரல..” அகிலன் அடுக்கிக் கொண்டே சென்றதில் இங்கு இவனுள்ளோ பெயரிட முடியாத பிரளயங்கள் பல..!! அத்தனையும் அடக்கி அகத்தினுள்ளே பூட்டியவனாய் நிமிர்ந்தான் அதி.
“நீங்க ஏன் இதெல்லாம் பண்றீங்க?” உணர்வுகளற்று ஒலித்தது அதிரூபனின் குரல்
“நான் உன் அப்பா அதி..”
“இல்லேயேப்பா.." என்றவனின் குரலில் இருந்தது என்னவோ? ஆனால் கண்களில் எதுவோ உடையும் நிலையில்..
“ஆனா நான் உன்ன அப்படிதான் அதி பாக்கறேன்..” அதிரூபன் அகிலனுக்கு முதுகை காட்டியபடி மறுபுறம் திரும்பிக்கொள்ள
“என்னாச்சு அதி?”
சில நொடி மௌனம் அவனிடம், அவன் திரும்பாமலே நிற்க
“அதி?” என்றபடி அகிலன் அவன் தோளை ஆதரவாய் தொட, சட்டென அவர் புறம் திரும்பியவனோ,
“நான் உங்கள மாதிரி இருப்பேனாப்பா?” என்றான் விழிகள் இரண்டிலும் கலக்கத்தை சுமந்தபடி.
அந்நொடி அகிலனுக்கு என்ன புரிந்ததோ.. எதை உணர்ந்தாரோ.. அவன் தோளை தட்டியவாரே,
“நீ என்ன விட நல்ல அப்பாவா இருப்படா!” என்றுவிட அவனது நம்பமாட்டாத பார்வையை பார்த்தவரோ,
“அனு எப்பவும் அதி அதினு உன்ன பத்தியேதான் பேசுவா.. அது எல்லா அம்மாக்களும் பண்றதுதான். ஆனா கல்யாணம் பண்ணிக்கலாம்னு வரும்போது… அப்பயும் அனு முதல்ல அதிட்டதான் கேட்கனும்னு நினைச்சா. அப்போ அவளுக்குனு இருந்த ஒரே உறவு நீதான் அதி. நீ கொஞ்சம் முகத்த மாத்தியிருந்தாக்கூட இந்த கல்யாணம் நடந்துருக்காது.. எனக்கும் தெரியும்! ஆனா நீ அப்படி பண்ணல, பதினைஞ்சு வயசுல.. நிச்சயம் நான் இன்னொருத்தர எனக்கு அப்பாவாவோ அம்மாவாவோ ஏத்துட்டிருப்பேனானு தெரியல.. ஆனா நீ அத சந்தோஷமா செஞ்ச! அன்னைக்கு உன் முகத்துல இருந்த உணர்வு.. நீ அந்த இடத்துல அனுவுக்கு அப்பாவாகிட்ட அதி! அதுக்கடுத்து நீ கொஞ்சம் ஒதுங்கிட்டியோனு ரொம்பவே வருத்தப்பட்றுக்கோம். ஆனா மறுபடியும் ஒரு நாள்.. நீ எங்கட்டயே வந்துட்ட. அன்னைக்கு அனு எவ்ளோ சந்தோஷப்பட்டானு.. நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியதில்ல. நீ உன் அம்மாவுக்கே அப்பாவா இருந்தவன் அதி! நிச்சயம் என்னவிட நல்ல அப்பாவா இருப்ப!” என்றவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உணர்ந்துரைப்பதாய் உள்ளத்திலிருந்து வர, அதை கேட்டிருந்தவன்தான் பேச்சற்றுப்போனான்.
இத்தனை வருடங்கள் அவர் மனதில் இருந்தவையெல்லாம் வெளியேறிவிட்டது. அவனால் நம்ப முடியாத ஒன்று அவன் விலகியதைக்கூட இந்த மனிதரால் இப்படி புரிந்துக்கொண்டு செயல்பட முடியுமா என்பதே! அந்த இடத்தில் அவனுள் உதித்தது இதுவே… காரணம் யாதெனில்.. அகிலன் அவனது அப்பா! மகனை புரிந்துக்கொண்ட அப்பா!
ஏனோ சம்பந்தமின்றி என்றோ வாசித்த வாசகம் ஒன்று நினைவிலாடியது.. அது 'யார் வேண்டுமென்றாலும் தந்தையாகிவிடலாம் ஆனால் அப்பாவாவது சிரமம்' என்று. ரத்த சம்பந்தமற்ற அகிலனிடம்தானே அவன் "அப்பா" எனும் உணர்வை முழுதாய் உணர்ந்தது.
“என்னாச்சுபா?” மௌனமாய் நின்றிருந்த மகனின் தோளை ஆதரவாய் தொட்டபடி மென்குரலில் அகிலன் வினவ அந்த குரலும், அவர் அவ்வார்த்தையை சொல்லிய விதமும் அதியை ஆட்டிப்பார்த்தது. அத்தனை நேரமும் இறுக்கமாய் பிடித்துவைத்திருந்த உணர்வுகள் யாவும் கட்டவிழ்ந்தன
“அப்பா..” என்றவாரே அருகிலிருந்தவரை அதி அணைத்துக்கொள்ள காரணம் ஓரளவு புரிந்துப்போனாலும் அவன் முதுகை ஆதரவாய் தட்டிக்கொடுத்தவாரே
“என்னாச்சுபா? அப்பாட்ட சொன்னாதானே தெரியும்? எதாயிருந்தாலும் பார்த்துக்கலாம்டா…” என்றவரின் ஆறுதல் வார்த்தைகள் குற்ற உணர்வால் குத்தி கிழிக்கப்பட்ட அவனிதையத்தில் மெல்லிதழ் முத்தங்களாய் வருடின.
ஆம்! மேகா வீட்டிலிருந்து கிளம்பும்போதே அவனுள் ஆயிரம் குழப்பங்கள். அதையெல்லாம் தாண்டி அவனை அதிகம் தாக்கியது அவள் சொன்ன அந்த ப்ரையாரிட்டிதான்!
நான் ஏன் உன் ப்ரையாரிட்டியாய் இல்லை? என்பது அவன் வருத்தமல்ல ஆனால்..
ஒரு முறைக்கூட நான் உனது ப்ரையாரிட்டியாய் இருந்ததில்லையா? என்பதே அவனது வருத்தமாய் இருந்தது. ஏனோ இவ்வாரத்தைகள் அவனை ஆழமாய் தாக்கின. அப்படி அவன் நடந்த பொழுதுதான் அதி அந்த பூங்காவினுள் நுழைந்ததும் உதயை பார்த்ததும். அதுவரைக்கூட, நானில்லையா? என்று வருந்திக்கொண்டிருந்தவனின் வருத்தம் உதயிடம் பேசப் பேச வேறு விதமாய் உருபெற்றது.
தான் மேகாவை 'என்னை நீ காதலி' என்று ஒரு முறைக்கூட கட்டாயப்படுத்தியதில்லை! அவனுடைய காதலைத்தான் வெளிப்படுத்தினான். அவளை காயப்படுத்தவோ.. கட்டாயப்படுத்தவோ இல்லை.. என்று எண்ணிக்கொண்டிருந்தவனின் எண்ணம் முழுதும் தகர்ந்தது.
திடீரென ஓர் எண்ணம்.. தான் அவளை எதற்கேனும் கட்டாயப்படுத்தி விட்டோமோ? மேகா காயப்பட்டுப்போனாளோ? தான் அவளை நச்சரிக்கிறோமோ? என்று தோண தொடங்கிவிட அவனாலயே அவனை மன்னிக்க இயலவில்லை. அதுவும் உதயிடம் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ஏனோ அவனிடம் அவனே பேசிக்கொண்டதுபோலாகியது. குற்ற உணர்வில் குறுகியவன் அவசர அவசரமாய் அன்றே அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
அதிரூபனுக்கு சத்தியமாய் அவன் என்ன தவறு செய்தான் என்று புரியவில்லை. ஆனால் மேகாவை தான் பாதிக்கிறோமோ என்று தோன்றவுமே கிளம்பிவிட்டான். அவனால் இச்சமயத்தில் தெளிவாய் முடிவெடுக்க முடியுமென தோன்றவில்லை. அதனாலையே முடிந்தளவு தள்ளி வந்துவிட்டான்.
இப்பொழுது அகிலன் கேட்கவும் அங்கு சென்றதிலிருந்து மேகாவை சந்தித்தது முதல் நேற்று நடந்தது வரை ஒன்றுவிடாமல் இவன் சொல்லி முடிக்க அவரோ குழப்பமாய் ஏறிட்டார்.
— “மென்சாரலில் நின்வண்ணமோ!” கதையிலிருந்து ஒரு பகுதி
✍️ எழுத்தாளர்: Yagnya
இந்தக் கதை முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது

Comments
Post a Comment