🌿 Featured Story

அன்பில் அவன் அலாதி

கோடைக்கால நினைவுகளின் கதை.

📖 Read Story

🎧 Audiobooks

Listen to our stories while travelling, resting or dreaming.

Enter Our Audio Story World

Romance, thrillers, healing stories & emotional journeys, now in audio form.

🌿 Fresh Updates

New chapters, articles, announcements & story updates.

மென்சாரலில் நின்வண்ணமோ! - 13.1

✍️ எழுதியவர் Yagnya

13.1 


“இந்த பொண்ணுக்கும்.. நமக்கும்..” என்று தொடங்க அவர் எதை கேட்க வருகிறார் என்பதை உணர்ந்தவனாக


 “நிறையவே சம்பந்தமிருக்கு!” என்றான்.

அகிலனுக்கு இன்னுமே குழப்பம்தான். ஏன் எதனால் என்று. இவன் எதையோ சொல்லாமல் விட்டுவிட்டதைப்போல தோன்ற, சற்று சிந்தித்தவர் பின்பு,


“அப்படி என்னதான் அதி ஆச்சு அன்னைக்கு? நீ என்னனு ப்ரபோஸ் செய்த?”


முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டவனாய் அன்றைய தினத்தை தூசு தட்டினான் அதிரூபன்.


 அன்று…


அது ஒரு இள மாலைப் பொழுது. கதிரவனின் கரிசனக் கரங்களால் அந்த பூங்காவில் பூத்துக் குலுங்கிய ஒவ்வொரு பூக்களின் மொழியிலும்,  அது அசைந்தாடும் அழகிலும், ஒவ்வொரு ஸ்பரிசங்களிலுமென சுகமானதொரு சாரல்..!!


அப்பூக்களின் மொழி புரியாதவனாய்.. ஏன், தன் சுய மனமொழியையே அறியும் முயற்சியில் மௌனமாய், மண்வாசத்தை மட்டும் மனதில் நிரப்பிக்கொண்டிருந்தான் அதிரூபன்.


அதே பார்க்! அது அவர்களது ரோமியோ ஜுலியெட் பார்க். ஆனால் இம்முறையும் அவன் மட்டுமே.. அங்கே..


முடிவென்று ஒன்றை தீர்மானித்தாயிற்று! இனி சொல்லாமல் இருப்பது, அவனால் முடியாது! ஏதோ ஒன்று அவன் அகத்தில் கிடந்து அழுத்தியது. இப்பொழுது இவன் செய்யவிருப்பது.. சரியா? தவறா? என்று கேட்டால்.. அவனுக்கும் தெரியவில்லை. புரியவுமில்லை. எந்த நம்பிக்கையில் இதை சொல்லத் துடிக்கிறான்? தெரியவில்லை.. ஆனால் சொல்லாமல் இருப்பதும் தவறு என்று உணர்ந்திருந்தான். ஆனால் இதை எப்படி சொல்வது? எத்தனையோ நாட்களாய் சொல்ல நினைத்ததுதான்.. எப்பொழுதும் தொண்டைக்குழியிலேயே திக்கி நின்றுப் போனவை, இன்று மட்டும் என்னவோ நா நுனிவரை வந்து தித்திக்கின்றது. உள்ளுக்குள் ஊஞ்சலாடும் பரபரப்பு, இனம்புரியா ஒரு தித்திப்பு.. மனமெங்கிலும் கண்ணாடி ஊஞ்சல்களின் சலசலப்பு.. ஆற்று நீராய் அடித்துச் செல்லும் ஆசை மழை.. அதில் நனையும் ஆசை ஒரு புறமென்றால், தயக்கம் ஒரு புறம்.. இடையிலோ அவன் மனம்!


எண்ணச் சாரலில் திளைத்திருந்தவனை திசைத் திருப்பியது அக்குரல். அது அவளது குரல்!


“தர்ட் வர்ல்ட் போறளவுக்கு, சாருக்கு அப்படி என்ன யோசனை?”  என்று அவன் பின்னால் ஒலித்த குரலை உணர்ந்ததின் அடையாளமாய் அவன் இதழ்களில் சிறு மலர்ச்சி. அதை மறைக்க மனமற்று அவன் திரும்பிட அவன் முகம் கண்டவளாய் அருகில் வந்தமர்ந்தாள் அவள்.


 “பேசாம இதுக்கு ரோமியோ ஜுலியெட்ல இருந்து ரூப்ஸ் ரூஃப்ஸ்னு(Roob's roofs) பேர் மாத்திடுவோமா?” என்றபடி,


அதற்கு அவன் சின்னதாய் சிரித்து தலை அசைத்திட, “ என்னாச்சு அதி? ஏதாவது ப்ரச்சனையா?” என்று கேட்டவளின் குரலில் மென்மையின் வாசம்.


 அதை உணர்ந்தவனாய், “ப்ச்! ப்ச்!” என்று மறுப்பாய் தலை அசைத்திட அவளோ நம்பவில்லை என்பதாய் தலை அசைத்தாள். அவனைப்போலவே.


“என்னவோ இருக்கு… சரி விடு! வர வழில தீப்ஸ பார்த்தேன். உன்ன தான் தேடிட்டு இருந்தா…” என்றவள் ஒரு நொடி பொருத்து,   “ ஒரு வேளை அவளையும் கூப்ட்டு வந்துருக்கனுமோ…” என்று விழிகள் இரண்டிலும் குறும்புப் பார்வை மின்ன அவளுரைக்க அவனோ, “உன்ன!” என்றவள் தோளில் ஒன்று வைத்திருந்தான்.


 தீப்ஸ் எனும் தீப்தி அவர்களது ஜுனியர். வெறும் ஜுனியர் மட்டுமின்றி அதிரூபனின் மேல் தனி ஆர்வம் ஒன்றை வளர்த்து வைத்திருப்பவள். அவளது ஆர்வம் மட்டுமே! அதைத் தாண்டி வேறொன்றுமில்லை. அதை அவளும் அறிந்தேதான் இருந்தாள். தன்னைப் போலவே சிந்திக்கும் ஒருவரை காணும்பொழுது எழும் ஆர்வம்.


அவளது ஆர்வம் சில சமயம் ஆர்வக்கோளாராகிப் போனதுண்டு! அதை மனதில் வைத்தே இவள் கிண்டலடித்ததும்.


“சரி.. சரீ… விடு! சொல்லல!” என்றவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவனோ திடீரென சில நொடிகளை அவள் முகம் பார்த்தவாரே மௌனத்தில் கழித்திட சட்டென இதழ்களில் உறைந்த புன்னகையுடன் தன்னையே பார்த்திருந்தவனிடம் மேகாவின் பார்வை சிரிப்பினூடே கேள்வியாய் வளைந்தது, என்னவென..


அவள் விழிகளின் மொழி உணர்ந்தவன் சற்றும் சிந்தியாமல் தன் மனக்கூட்டை திறந்திருந்தான்.


“எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் மேக்ஸ்… இப்போனு இல்ல.. ரொம்ப நாளாவே! ஆனா இதுக்கு இதுதான் அர்த்தம்னு இப்போதான் புரிஞ்சிக்கிட்டேன். இப்போ.. இந்த ஸெக்கண்ட்.. முழுசா உணர்றேன்! இதுக்காக நான் என்னைக்குமே ரிக்ரெட் பண்ணப் போறதில்லை. அடுத்த ஸெக்கண்ட் எப்படி வேணாலும் மாறலாம்… ஆனா, அது எப்படி மாறினாலும்… இந்த நொடி எனக்கு ஸ்பெஷல்! உன்கிட்ட சொல்லிருக்க கூடாதோனு ஒரு நொடிக்கூட ஃபீல் செய்ய மாட்டேன்!” என்றவன் சிறு மௌனத்திற்குப் பிறகு, 


"இந்த பிடிக்கும்க்கான அர்த்தம்.. உனக்கு புரியுதுதானே?" என்று சந்தேகமாய் இழுத்தவன் அவள் முகத்தில் எதை கண்டானோ,


‘வாஹூ!’ என்று நிம்மதிப் பெருமூச்சை உற்சாகத் த்வனியில் வெளியிட்டவனாய், கைகள் இரண்டையும் பரபரவென தேய்த்துவிட்டு உட்கார்ந்திருந்த பெஞ்சில் இருபக்கமும் ஊன்றியபடி பின்னால் சாய்ந்தமர்ந்தவாரே  அருகிலிருந்தவளிடம்,


“வாவ்வ்வ்! இப்படி ஒன்ன இதுவரை ஃபீல் செஞ்சதேயில்லை நான்! என்ன ஃபீல் இது? வாஹ்! இவ்ளோ நேரமிருந்த பரபரப்பவிட இது.. சீரீயஸ்லி மேக்ஸ்!” என்றுவிட்டு ஆழ மூச்சிழுத்து இயற்கையின் வாசத்தை உள்ளுக்குள் நிரப்பியவாரே,


“ நீ இப்போ எதுவும் சொல்ல வேண்டாம் மேக்ஸ்.. பிடிச்சிருக்கு, பிடிக்கலனு  எதுவுமே வேணாம்! எனக்கு உன்ன பிடிச்சிது.. பிடிச்சிருக்கு.. எப்பவுமே பிடிக்கும்! அத சொல்லனும்னு பட்டுச்சு, சொல்லிட்டேன்! உனக்கும் அப்டி தோணும்போது… தோணூச்சுனா… சொல்லு மேக்ஸ். அதுவரை, நானா உன்ட்ட கேட்கமாட்டேன்! இதப்பத்தி மறுபடி பேசவும் மாட்டேன்!” என்றவன் அவன் கழுத்தில் கைவைத்து, “ப்ராமிஸ்!” என்க


சிறு பிள்ளைத்தனமாய் அவன் கழுத்தில் கைவைத்து ‘ப்ராமிஸ்’ என்றதிலேயே லயித்திருந்தவளோ சற்றும் தடுமாறாதவளாய்,


 "இந்த பிடிக்கும்க்கான அர்த்தத்த புரிஞ்சிக்கவே கூடாதுனு நினைச்சேன், ஆனா நீ இவ்வளவு தெளிவா இத சொன்னதுக்கு அப்பறமும்.. புரிஞ்சிக்காத மாதிரி என்னால நடிக்க முடியாதே! அதான்.. உனக்கு புரியவைக்க முயற்சி பண்றேன்..


எனக்கும் உன்ன ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதி… ரொம்பவே! ஆனா இந்த ரிலெஷன்ஷிப், காதல், கமிட்மெண்ட், இது வேணாம் அதி.  எனக்கு இது பிடிக்கல. இதுல விருப்பமுமில்ல. எனக்கு நீ எப்பவுமே ஸ்பெஷல்! ஆனா இத காதல்ல அடக்க எனக்கு இஷ்டமில்ல அதி. மிஞ்சி மிஞ்சிப் போனா நமக்கு என்ன.. இருபது இருக்குமா? வாழ்க்கை ரொம்ப நீளமானது அதி.. அது எப்போ, எப்படி, யார, யாரோட சேர்த்துவைக்கும்னு தெரியாது!  அவசரப்பட வேண்டாமே.. எனக்கு நீயும், இப்ப நமக்குள்ள இருக்கற இந்த அன்பும் எப்போவும் வேணும்! இப்படியே.. இதே மாதிரியே.. இத மாத்தறதுல, ஏன் மாத்தனும் யோசிக்கக்கூட முடியல. இது, இப்ப முடிவெடுக்க வேண்டாமே"  என்றவளுக்கு இன்னமும் முறுவலொன்றை முகத்தில் பதியவைத்தவனாய்,


 “ நீ எப்பவுமே தெளிவு மேக்ஸ்!” என்று  அவள் தலைமுடியை கலைத்துவிட்டவாரே எழுந்து இரண்டடி எடுத்து வைத்துவிட்டு திரும்பியவன்,

“நீ எந்த முடிவும் எடுக்க வேணாம் மேக்ஸ். ஆனா இந்த முறை நானும் என் முடிவுல தெளிவாதானிருக்கேன் மேக்ஸ்! நான் எப்பவுமே மேக்ஸோட அதிதான்!” என்று  குறும்பாய் கண்ணடித்துவிட்டு தனது துள்ளல் நடையுடன் அதி சென்றது இன்றும் பசுமை நிறம் மாறாமல் செலித்திருந்தது அவள் நினைவினுள்.


 எப்படி மறப்பாளவள்? அதிரூபனின் இந்த  அதீத அன்பின் அர்த்தத்தை முதலில் உணர்ந்ததும் அவள்தான்! உணர்ந்ததை உணராததுப்போல கடந்துவிடத் துடித்ததும் அவள்தான்!  


இது இப்படிதான் என்பதை அறிந்தப் பின்பும் அவன் தன்னிடம் இதை சொல்லிவிடவேக் கூடாதென்றல்லவா அவள் நினைத்தாள். எத்தனை முறை அவள் மனம் மௌனமாய் அலறியது அவனிடம், சொல்லிவிடாதே! என்னை மறுக்க வைக்காதே! என்றிவளுள்ளம் கதறியதெதுவும் கேளாததைப்போலல்லவா அதிரூபன் தன் அகக் கதவை முழுதாய் திறந்துவிட்டான். அவனைப்போல அவளால் முழுதாய் திறக்க இயலவில்லையே!

விலகிச் செல்லவும் மனம் விழையவில்லை.. தூரம் குறைக்கவும் துணியவில்லை! 


விரும்பியோ விரும்பாமலோ.. நிற்குமிடத்திலேயே நின்றுவிட்டாள். அந்த இடம்கூட அவளுக்கொரு விதத்தில் இதமாகிப் போனது. எத்தனைக்காலம் இதென்று தோன்றினாலும், எத்தனைக்காலமோ அத்தனைக்காலம்.. என்றவளின் எண்ணமிருந்தது. மாற மறுத்த மனதின் முனகலாய் சிறு விலகலும் அவளை விட்டு போயிருக்கவில்லை..!!

— “மென்சாரலில் நின்வண்ணமோ!” கதையிலிருந்து ஒரு பகுதி  

✍️ எழுத்தாளர்: Yagnya 

இந்தக் கதை முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது



முந்தைய அத்தியாயம்  |  அடுத்த அத்தியாயம்

📖 இந்த தொடரின் அத்தியாயங்கள்