1
வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நாள். என் வாழ்க்கை என் இஷ்டப்படி வாழ்வேன் என்று முதன்முதலில் நான் கொடி பிடித்த நாள்.
ஆடிக் காத்து ஆளைத்தூக்கும் என்பாள் அம்மம்மா. அதுபோலத் தான் ஆகும் போலிருந்தது இந்த ஜனவரி மாதத்திலும் பேய்க்காற்று அடித்தது. அணித்திருந்த ஷ்ரக்கை இறுக்கிய படி ஃபுட்பாத்தில் நின்றேன். எனக்கெதிரில் அந்தக் கண்ணாடிக் கதவிற்கு அந்தப் பக்கம் இருந்த கௌன்டரில் அடுக்கி வைக்கப் பட்டிருந்த ப்ரௌனிகளும் பேஸ்ட்ரிகளும் பசியைக் கிளப்ப மதிய உணவை மறந்து போனது எவ்வளவு பெரிய தவறு என்று சுட்டியது. மேலே "ப்ரூஸ் அண்ட் பேக்ஸ்" (Brews and Bakes) வண்ண விளக்குகளில் வா வா என்றது.
"உள்ள வரப்போறீங்களா? இல்லைன்னா அப்படியே வெளில நின்னு வேடிக்கைப் பார்த்துட்டு போயிறுவீங்களா?" எனது கவனத்தைக் கலைத்த அந்தக் குரலுக்குச் சொந்தக்காரியை தலைதிருப்பி பார்த்ததில் சற்றே குள்ளமாக பிக்சி கட் செய்யப்பட்ட தலையலங்காரத்துடன் கைகள் முழுவதும் டாட்டூ ஸ்லீவுடன் பார்க்கவே சற்று ரக்கடான தோற்றத்தில் இருந்தாள் அவள். அப்போது தான் நான் வெகுநேரமாக ஃபுட்பாத்தில் நின்று கடையை வெறித்து நோக்கியது புரிபட ஒரு அசட்டு சிரிப்புடன் உள்ளே சென்றேன்.
ஏதோ உந்துதலில் உள்ளே வந்துவிட்டாலும் என்ன ஆர்டர் செய்ய என்று புரிபடாமல் சற்றே திகைத்து நின்ற நேரம் அதே பெண் ஒரு ட்ரேயுடன் என்னை நெருங்கினாள். "இதெல்லாம் இன்றைய ஸ்பெஷலோட ஸாம்பிள்ஸ். டேஸ்ட் பண்றீங்களா?" என்று ட்ரேயை எனது புறம் நீட்டவும் என்னையும் அறியாமல் எச்சில் ஊறியது. நானிருக்கிறேன் என்னையும் கவனி என்பது போல வயிறு சுத்தமாக ஒலி எழுப்ப 'ஒரே அசிங்கமாப் போச்சு குமாரு' மொமண்ட் எனக்கு.
இந்நேரம் அம்மா இங்கு இருந்திருந்தால் "வாட் அன்லேடி லைக் பிஹேவியர் ஷிவானி? இதுதானா நீ கத்துகிட்ட எடிக்கேட்ஸ்? பப்ளிக்ல இப்படியா பிஹேவ் பண்றது?" என்று இவள் பெரிய கொலைக் குற்றம் செய்தது போல விளாசித் தள்ளியிருப்பார். அம்மாவிற்கு எப்போதுமே நிவேதா தான் பெரிது. நிவேதா என் அக்கா. சரியாக ஒருவருடம் பெரியவள் என்னைவிட. ராஜசிங்கம் பரம்பரையின் பேரைக் காப்பாற்றவென்றே பிறந்த பொன் மகள் அவள். எனக்கும் நிவேதாவிற்கும் சிறுவயதிலிருந்தே இப்படித்தான் நிற்க வேண்டும், இப்படித்தான் நடக்க வேண்டும் என்று ஏகப்பட்ட விதிமுறைகள் கற்றுக் கொடுக்கப் பட்டது. சும்மாவா ராஜசிங்கம் பரம்பரை அல்லவா!
நிவேதா அம்மாவின் சாயல். அம்மாவைப் போலவே சந்தன நிறம். ஒடிசலான தேகம். தேன் நிறக் கண்கள். அதனாலோ என்னவோ அவள் நிறைய விஷயங்களில் அம்மாவைப் போலவே நடந்தும் கொள்வாள். நான் உருவத்தில் மட்டும் அப்பாவைப் போல. சற்றே மாநிறம். வெகு சீக்கிரத்தில் குண்டு என்று பேறெடுத்து விடுவேன் போல. அப்பாவைப் போலவே எனக்கும் பூனைக் கண்கள். அவரை போலவே சுருட்டையான முடி. அம்மா அடிக்கடி திட்டுவாள்., "இதென்ன நூடுல்ஸ் மாதிரி முடி. எங்கேயாவது நளினம் என்பது பேருக்காவது இருக்கா உன்னிடம்?" என்பாள். ஆனால் குணம் மட்டும் அப்பாவைப் போல இல்லை என்பதில் எனக்கு மிகவும் பெருமை.
நிவேதா அப்படியே அம்மாவின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற மகளாக இருந்தாள். நின்றால் நளினம், நடந்தால் நளினத்துடனான கம்பீரம், உடுத்துவதில் கூட ஒரு இளவரசியைப் போன்ற தோரணை மற்றும் நேர்த்தி. ஆனால் ஏனோ நான் மட்டும் இதிலெல்லாம் இருந்து முரண்பட்டு நின்றேன். எனக்கு இவை எல்லாமே தேவையற்றதாகப் பட்டது. எதுவுமே நமது கம்ஃபர்டுக்கானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். என்னிஷ்டம் போல இரு என்று விட்டால் தொள தொள அரை நிஜாரும் அதே போன்ற ட்ஷர்ட்டுமாகத் திரிவேன். ஆனால் அதெல்லாம் ராஜசிங்கம் பரம்பரைக்கு ஒத்து வராதாம்.
எதிரில் இருப்பவள் தொண்டையை கனைக்கவுமே நடப்புக்கு வந்தவளாய் பல்பு வாங்கியதை ஒரு அசட்டு சிரிப்புடன் சமாளித்து அவள் நீட்டிய ட்ரேயை நோக்க என் கண்கள் விரிந்தன. சாக்லேட் கேக், மூஸ், சீஸ் கேக், பிரௌனி ஸ்ட்ராபெர்ரி கேக் என என் பசியை மீண்டும் நினைவூட்டியது. மனதிற்குள் அம்மாவின் "சுகர் கவுண்ட் கலோரி கவுண்ட் " திட்டு வந்து போனாலும் ருசி பார்த்திவிடும் ஆசை மட்டும் அதிகமாகியது. காலையிலிருந்து ஒன்றுமே உண்னாதது கூட காரணமாக இருக்கலாம். டெம்ப்டேஷன் அதிகமாக கையைநீட்டி அந்த சீஸ் கேக்கை எடுத்து விட்டேன்.
நாவில் சீஸ் பட்டுக் கரைந்ததும் தொண்டையில் இறங்கிச் செல்வதும் புலன்களுக்கு புரிபட்டாலும் ஏனோ அம்மாவின் "ஹௌ ரெக்லஸ் கேன் யூ பீ? சேச்சே அப்படியே உங்க பாட்டி மாதிரி கொஞ்சம் கூட ஹெல்த் கான்ஷியஸ்னஸே கிடையாது" என்ற புலம்பலும் குத்தலும் நாராசமாய்க் காதில் ஒலித்தவாறே இருந்தது அத்தோடு பசியை மறக்கச் செய்தது. அதுவரை சுரந்த டொபோமின் டப்பென தனது வேலையை நிறுத்திக் கொண்டது போல. சீஸ் கேக்கினை ருசித்தபடி இருந்த நாக்கிற்கு ஏனோ சக்கையை சுவைத்த உணர்வு தோன்ற நிதர்சனம் பளார் என முகத்தில் அறைந்தது போலிருந்தது.
என்முகத்தையே உற்றுப் பார்த்திருந்த அந்தப் பெண் "டேஸ்ட் நல்லா இல்லையா? வாட் ஹேப்பெண்ட்?" எனவும் மறுப்பார் தலையசைத்தபடி "நல்லாருக்குங்க. பட் நான் இதெல்லாம் சாப்பிடக் கூடாது. மறந்து டேஸ்ட் பண்ணிட்டேன். அதான். இட்ஸ் ஒன்டர்ஃபுல்" என்றேன் என் ஏமாற்றத்தை விழுங்கிய படி. "ஓ என்னாச்சு? உங்களுக்கு ஹெல்த் ப்ராப்ளம் ஏதாவது இருக்கா? ஆர் யூ டயாபடிக்? உங்களைப் பார்த்தா அப்படித் தெரியலையே?" என்று வரிசையாக கேள்விகளை அடுக்கியவளைப் பார்த்து என்னை மறந்து புன்னகைத்தவளாய் "இல்லப்பா! இது வேற." என்று நிறுத்திக் கொண்டேன்.
ஏதோ புரிந்தும் புரியாத போதும் ஆதரவாய் என் தோளில் தட்டிவிட்டு அந்தப் பெண் நகர்ந்தாள். கண்களில் துளிர்த்த கண்ணீரை அடக்கிய படி நிமிர்ந்து போது கௌண்டருக்கு அந்தப்புறம் நின்று என்னையே குறுகுறு பார்வை பார்த்து நின்றவனைக் கண்டதும் சட்டென ஒரு தடுமாற்றம். பார்வையில் ஒரு குறும்பு. தவறாகத் தோன்றாத ஆனால் எடை போடும் பார்வை. கூடையைக் கவிழ்த்தியது போன்ற அடர்ந்த கேசம். இடது கண்ணின் ஓரம் சற்றே கூர்ந்து பார்த்தால் மட்டும் தென்படும் சிறு மச்சம். 'அட ராமா! அப்போ நம்ம இவனக் கூர்ந்து பார்த்துட்டு இருக்கிறோமா?' கேள்வி எழ பார்வையைத் திருப்பிக் கொண்டு அருகிருந்த சேரில் அமர்ந்து கொண்டேன்.
'அடுத்த என்ன செய்ய? என்ன நினைத்து உள்ளே வந்தேன்? வந்ததுக்கு ஏதாவது ஆர்டர் பண்ணனுமா? இல்லை இப்படியே எழுந்து போய் விடலாமா?' அலை அலையாய் எழுந்த கேள்விகளுக்கு பதில் தேடிய படி இருந்த என் முன் நிழலாட நிமிர்ந்தேன். என் முன் அவன். எனக்கு முன் நீட்டப்பட்ட செராமிக் கப்பலிலிருந்து வந்த ஆவி பறக்கும் இஞ்சி டீயின் மணமும் அதனருகில் வைக்கப்பட்டிருந்த சிறு ப்ளேட்டில் ஸ்பிரிங் ரோலும் மீண்டும் எனது காலி வயிற்றைத் தட்டியெழுப்பின.
ரோலின் அருகே கெட்ச்சப்பில் வரையப்பட்ட ஸ்மைலி என் முகத்தில் முறுவலை வரவழைக்க நிமிர்ந்து அவன் முகம் பார்த்தேன். "வயிறு காலியா இருந்தா மனசு பாரமா இருக்கும்னு எங்கம்மா சொல்வாங்க. ஃபர்ஸ்ட் சாப்பிடலாம். அப்புறமா எதுனாலும் பார்த்துக்கலாமே" கண்களைச் சிமிட்டியபடி சொன்னவனின் இதழோடு சேர்த்து கண்களும் சிரித்தன. அவனது பேச்சில் மற்றதனைத்தும் மறந்து அந்த ஸ்பிரிங் ரோலை எடுத்துச் சுவைக்கத் துவங்கினேன். அதன்பின் பசி மேலோங்க ப்ளேட்டில் இருந்தவற்றைக் கபளீகரம் செய்யத் தொடங்கினேன். அவன் கௌண்டருக்குப் பின் செல்வதை என் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டேன்.
சிலரைப் பார்த்தவுடன் நமக்குப் பிடித்துப் போகும். சிலரைப் பார்த்தாலே பற்றிக் கொண்டு வரும். நாலு அறை அறையலாமா என்று கூடத் தோன்றும். இவன் முதல் ரகம் போல. ஏனென்று சொல்லத் தெரியவில்லை. ஏனோ அவன் சிரிக்கும் போது இணைந்து கொள்ளும் கண்கள் ஒருவித இதத்தைத் தந்தது. முதன்முறை பார்க்கும் ஒருவரைப் பற்றி இப்படியான சிந்தனைகள் சரிதானா என்று தோன்ற தலையைச் சிலுப்பிக் கொண்டேன். காலையிலிருந்து இருந்த பசி சற்றே அடங்கியதும் என்னத்தைச் சுற்றி பார்வையை ஓட்டினேன்.
பின் மத்தியான வேளை என்பதால் அவ்வளவு கூட்டமில்லை. இன்னும் சற்று நேரத்தில் பரபரப்பு தொடங்கி விடும். இப்போது ஓரிருவரைத் தவிர ஆளில்லை. கஃபேயின் கண்ணாடிக் கதவின் வழி வெளித்தெரிந்த சாலையும் அவ்வளவு ஆர்ப்பாட்டம் இல்லாது இருந்தது. நடைபாதையில் ஒரு அப்பாவும் மகளும் பேசிக்கொண்டே நடந்தனர். சிறுமிக்கு நான்கு அல்லது ஐந்து வயதிருக்கும் போலத் தோன்றியது. அந்த ஆறடி மனிதன் அவரது மகளின் தளிர் நடைக்கு ஈடு கொடுத்து அவள் பேசுவதைக் கேட்க ஏதுவாக அவ்வப் போது குனிந்து கேட்டு பொறுமையாக பதிலளித்தவாறே நடந்தது பார்க்கவே ரம்மியமாக இருந்தது. இப்படியான அனுபவங்கள் என் வாழ்வில் இருக்கிறதா என்று நினைவடுக்குகளில் தேடிப் பார்த்தால் ஒன்றும் தென்படவில்லை. திருவாளர் ரத்தினம் ராஜசிங்கத்திற்கு இப்படி அப்பாவும் மகளும் பேசிக் கொண்டே நடக்கலாம் என்பதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது அகராதியில் அந்தப் நேரத்தில் பிஸினஸில் பல லட்சங்களைப் பார்க்கலாம். எனக்கு நினைவு தெரிந்து அப்பா என்னையோ நிவேதாவையோ கொஞ்சியதில்லை.
எப்போதுமே கடுவன் பூனை போன்ற முகத் தோற்றத்திலேயே இருப்பார். எப்போதும் ஒருவித எரிச்சலிலேயே இருப்பதாலேயோ என்னவோ நெற்றியில் நிரந்தரக் கோடுகள். அப்பா மட்டும் சற்றே இலகுவாக பேசிப் பழகினால் எவ்வளவு நன்றாக இருக்கும். நினைக்கையிலேயே பெருமூச்சொன்று எழுந்தது. "பேசாம உங்களைக் கொண்டு கிச்சன்ல உட்கார வச்சிரலாம் போலயே. எவ்வளவு அனல்" குரலில் நக்கல் சொட்ட கைகளால் விசிரிக் கொண்டே வந்தமர்ந்தான் அந்த அவன்.
"எந்தக் கிச்சன்லயோ?" என்று நானும் கேட்க சிரித்தபடியே என்னிடம் "பசியடங்கினதும் கொஞ்சம் பரவாயில்லை போல. குரலெல்லாம் வெளிய வருதே." என்றான் குறும்பு மின்ன. "யாருக்கு பசியாம்?" என்றேன் வீம்பாக. "அது யாருக்கோவாம். கொஞ்ச நேரம் முன்ன கண்ல உயிரே இல்லாம இங்க ஒருத்தங்க வந்தாங்க. ரெண்டே ரெண்டு ஸ்பிரிங் ரோல்ல ஜான்சி ராணியாகிட்டாங்க." என்று மீண்டும் என்னைச் சீண்ட, "ஹலோ மிஸ்டர் கூடை! யாரப் பார்த்து ஜான்சி ராணினு சொல்றீங்க?" என்று நான் எகிறவும், கடகடவென சிரித்தவன் "ரைட்டு. நா வேற யாரச் சொல்லப் போறேன்? உங்களைத்தான் மிஸ் நூடூல்ஸ்." என்கவும் எனக்கு இன்னும் ஏறியது.
"யாரப் பார்த்து சார் நூடுல்ஸ் சொல்றீங்க?" என்று லேசாக நான் எகிறும் சிரித்துக் கொண்டே "என்னப் பாத்து கூடைனு சொன்னவங்கத் தான்". என்றான் கூலாக. எனக்கு என்னையே நன்கு அறைந்து கொள்ளலாம் போலிருந்தது. 'மனதிற்குள் தோன்றியதை இப்படியா உளறி வைப்பேன்?' "சாரி! பட் ஸ்டில் தட் டசின் கில் யூ த ரைட் டு கால் மீ நேம்ஸ்" என்றேன். மனதிற்குள் 'உனக்கொரு நியாயம் அவனுக்கொன்றா' என்று தோன்றாமல் இல்லை.
"சாரி! ஐ ஷுடின்ட் ஹேவ். அப்செட்டா தெரிஞ்சீங்க. சியரப் பண்ணலாமேனு தான். தப்புதான். சாரி டு ஹேவ் க்ராஸ்ட் மை லைன்" என்கவும் எனக்குத் தான் சங்கடமாகப் போயிற்று. "தட்ஸ் ஓகே" என்று நான் சொல்லும் போதே, "நான் தீபன். நீங்க?" என்றான். "நான் ஷிவானி" என்றேன் ஒரு கைகுலுக்கலோடு. அந்தக் கை குலுக்கல் என் வாழ்க்கையையே குலுக்கப் போவதை அன்று நான் அறிந்திருக்கவில்லை.
பொதுவாக யாரிடமும் இப்படி சகஜமாகப் பேசும் ஆள் நானில்லை. சிறுவயதில் எங்களுக்கு கொடுக்கப்பட்ட முதல் பாடமே அறியாத எவரிடமும் பேசக்கூடாது. உன்னைப் பற்றிய எந்த விவரமும் யாரிடமும் நீ கொடுக்கத்தேவை இல்லை என்பது தான். அறிந்தவர்களிடமுமே சற்று எட்ட நின்றே பழகும் நான் எப்படி முதன் முறை பார்த்த ஒருவனிடம் இவ்வளவு சகஜமாகப் பேசுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. எனக்கே இது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.
"நைஸ் நேம். பட் நூடுல்ஸ் சூட்ஸ் யூ." என்றான் கண்களில் நட்சத்திரங்கள் மின்ன. ஏனோ இப்போது அவ்வளவு கோவம் வரவில்லை. இருந்தும் போலியாக முறைத்தபடி "ஓகே மிஸ்டர் கூடை." என்றேன். "அதென்ன கூடை?" என்றவரிடம் "உங்க முடி கூடையை கவுத்துனாப்புல இருக்கு. அதான்." என்றேன் சிரித்தபடி. என்னவொரு கம்பீரமான சிரிப்பு. இப்படி சிரிப்பில் கூட கம்பீரம் காட்ட முடியுமா என்றுவியப்பாக இருந்தது. அப்பாவின் சிரிப்பு போலியாகத் தான் பலமுறை எனக்குத் தோன்றி இருக்கிறது. அப்பாமனம் விட்டுச் சிரித்து எனக்கு நினைவே இல்லை. தாத்தாவின் சிரிப்பும் ரசிக்கும்படி இருந்தாலும் இப்படி கம்பீரமாக இருக்குமா என்றால் சந்தேகம்தான்.
எவ்வளவு நேரம் இப்படி சிரி{ற )ப்பு ஆராய்ச்சி செய்தபடி நின்றேனோ என் கண்முன் விரல் சொடுக்கப்பட்ட சத்தத்தில் உணர்வுபெற்றேன். மீண்டும் பல்பு மொமெண்ட் தான். 'ஷிவானி!!! பீ சீரியஸ்.' எனக்கு நானே தலையில் மானசீகமாக கொட்டிக்கொண்டபடி கேள்வியாய் அவனை நோக்க "யு ஆர் வெரி பன்னி" என்றான்மீண்டும் சிரித்தபடி. "அவ்ளோ பெரிய காமெடி எல்லாம் ஒன்னும் நடக்கலியே. ஏன் இவ்ளோ ஓவர் ரியாக்ஷன் கூடை?" என்றேன் வீம்புடன். பின்னே எங்களுக்கும் மீசையில்மண்ணு ஒட்டலையாக்கும்.
"ஜோக்ஸ் அபார்ட். இப்படி தெம்பா சிரிச்சிட்டு இருந்தா எவ்ளோ நல்லா இருக்கு. இத விட்டுட்டு என்னவோ பெரிய டைட்டானிக் கவுந்தாப்புல ஒரு லுக்கு. அது உனக்கு செட்டே ஆகல நூடுல்ஸ்." என்றான் ஸ்நேகமுடன். சற்றே அதிகப்ரசங்கித்தனமான பேச்சு தான் என்றாலும் ஏனோ மனதிற்கு இதமாகவே இருந்தது. அவன் பேசப் பேச ஏதோ வெகுநாள் பழகிய நட்பு போன்ற ஒரு உணர்வு தோன்றுவதை தடுக்க இயலவில்லை. சற்று நேரம் பொதுவான விஷயங்களைப் பேசிவிட்டு கிளம்பிவிட்டேன் அதன்பின் வரப்போகும் புயலைப் பற்றி அறியாமல்.
— “மணமகன் ஜாக்கிரதை” கதையிலிருந்து ஒரு பகுதி
✍️ எழுத்தாளர்: Gowri
இந்தக் கதை முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது

Comments
Post a Comment