Operation: கல்யாணம் - 1
"மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா, கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்..
கெட்டிமேளம்! கெட்டிமேளம்!" என்ற குரலைத் தொடர்ந்து என் முன்னால் திடுதிப்பென்று முளைத்த மஞ்சள் கயிற்றை, நீண்ட கரங்கள் இரண்டு பெரும் தயக்கமும், துளி நடுக்கமுமாய் கையில் எடுப்பது என் கீழ் பார்வைக்கு தப்பவில்லை!
இது ஒரு தொல்லை! எவனய்யா சொன்னது? கல்யாணப் பொண்ணுனா குனிந்த தலை நிமிராமல் இருக்கனும்னு!
"ம்கூம், மேடம் நீங்க நிமிராம இருக்கதுதான் நமக்கு நல்லது" என் மனதைப் படித்தது போலப் பிடரிக்குப் பின்னாலிருந்து வந்த குரலில் என் கீழ் பார்வை ஓரப் பார்வையானது.
துரோகி! கயன்! இது எல்லாவற்றுக்கும் மூலக்காரணி! மூளையைக் கழட்டி வைத்து என்னைச் சிக்க வைத்த காரணி! செய்வதையெல்லாம் செய்துவிட்டு... ஹ்ம்! வேண்டாம்! இப்பொழுது வேண்டாம்! இவளை அப்புறமாகப் பார்த்துக்கொள்ளலாம்!
அதற்கு முன்...
இன்னமும் அருகில் இருப்பவன் 0.75× அளவில் படு பயங்கர ஸ்லோ மோஷனில் செயல்பட்டுக்கொண்டிருந்தான்!
மெய்யாகவே தாலி அவ்வளவு கனமோ! என்று சந்தேகம் வருமளவு!
ஏதோ பக்கத்துக் கண்டத்தில் இருந்து ஊர்ந்து ஊர்ந்து கட்டக் கடைசியாக என்னை வந்தடைந்தது அந்த கைகள்!
ஹப்பாடியோவ்! வந்துட்டான்டா வந்துட்டான்டா!
ச்சே! கடைசில என்னயவே கல்யாணத்தை முடிச்சு விடுங்கடானு நினைக்க வைச்சிட்டீங்களேடா!
நான் எப்பேர்ப்பட்ட சிங்கிள்னு தெரியுமாடா? ஃபூல்ஸ்!
பொம்பள மௌனம் பேசியதே கௌதமாக சுத்திக்கிட்டு இருந்த ஆம்பள ஹேட்டர்டா நானு!
"ஷ்ஷ்.. ரோ!" மீண்டும் பிடரி பக்கத்திலிருந்து ஓர் எச்சரிக்கை மணி!
இவ வேற! இப்ப என்ன எமோஷனலாகனும், அவ்வளவுதான?
"ரோ..."
இருடி யம்மா! அழுகை என்ன ஓடிடியா ஸ்விட்ச தட்டினதும் ஓட?
மெல்ல மெல்ல அந்த நெடிய கரங்களில் தொங்கிய தாலி என்னை நெருங்கிக் கொண்டிருந்தது.
இது.. இதைவிடவா பெரிய காரணம் தேவை?
அவ்வளவு நேரமும் ஒரு கல்யாணம் தானேனு இருந்த அத்தனை திடமும் இருந்த இடம் தெரியாமல் திடீரென மாயமாய் மறைந்துவிட, எங்கிருந்தோ பாய்ந்தோடி வந்த அழுத்தமான நிதர்சனக் குளிரொன்று என் முகத்தில் அறைந்தது.
மெல்ல நிமிர்ந்தேன்.
என் கழுத்து வரை கொண்டு வந்துவிட்டு ஒரு கணம் தயங்கி நின்றவனின் பார்வை என் விழிகளை ஏறிட்டது.
ஒரு நொடி தான்! ஒரே ஒரு நொடி தான்! அந்தப் பார்வையே பொய்யோ என்று நான் குழம்பும்படி மறுகணமே என் கழுத்தைச் சுற்றியது அந்த கரங்கள்.
ஒரு புறம் அட்சதை மழை பொழிய, மறுபுறம் பின்னால் யாரோ ஜடையைச் சரி செய்கிறேன் பேர்வழியென என் முடியைப் பிடித்து இழுக்கவென கண நேரத்தில் நடந்தேறிவிட்ட களேபரத்தைப் புரிந்தும் புரியாத நிலையில் நான் விக்கித்து நிற்க, கூட்டத்தில், கடைக்கோடி மூலை இருக்கையிலிருந்து என்னையே பார்த்திருந்தது.. அவ்வுருவம்! பாதிப் பார்வையை மறைத்தபடி வந்து விழுந்தது சாமந்தி இதழ்.
என்னையும் அறியாமல் ஒரு துளி கண்ணீர் என் ஒரு பக்கக் கன்னத்தில் உருண்டோடியது
கடைசியில்... எனக்குக் கல்யாணமாகிவிட்டது!
"செம ரோ!" ரகஸிய குரலில் கிசுகிசுத்தபடி பின்னாலிருந்து கைக்குட்டையால் என் முகத்தைத் திருத்தினாள் கயன்.
என் பார்வை மெல்ல அவள் புறம் திரும்பிட
"கலக்கிட்ட பங்கு!" என்று கட்டை விரலை உயர்த்தினாள் அவள்
கடங்காரி! கடங்காரி கயன்! ஒரே ஒரு ஃபோன் கால்! அந்த ஒரு அழைப்ப எடுத்திருந்தா இன்னைக்கு இந்த நிலைமைக்கு நான் வந்திருக்கமாட்டேன்!
புரியலை இல்ல? எனக்கும்.
ஆனா இதை புரிஞ்சிக்கனும்னா முதல்ல நான் யாருனு உங்களுக்கு தெரியனும்.
அதுக்கு சுமார் ஒரு இருபத்தி ஐந்து.. இல்லை இல்லை அவ்வளவு பெரிய கொசுவத்தி வேண்டாம்.
ஓர் ஆறு மாதங்களுக்கு முன்பு... இதுதான் சரி!
நான் அவி, அவிரோள். கயனுக்கு ரோ. மற்றவர்களுக்கு.. எதுவுமில்லை. ஏன்னா ஆகச்சிறந்த தனிமை விரும்பி நான்! நானாகவும் போய் பேச மாட்டேன். அவங்களாவும் வந்து பேசமாட்டாங்க. கயன பொருத்தவரை நான் அடுத்தவர்களுக்கு அந்த இடமே கொடுக்கிறதில்லையாம். ஏன் கொடுக்கனும்?
இதை கேட்டா மூக்கு சிவக்க முறைச்சு பார்த்துட்டு போயிடுவா.
லேசா சிவந்த பச்சை மிளகா மாதிரி.. ஹா ஹா..
கயன், கயன்னங்கை. என்னுடைய ஒரே நட்பு! என் ஒன் வுமன் ஆர்மி! என்ன ஒரு வித்தியாசம், எல்லாரையும் அவங்க ஆர்மி காப்பாத்தும்.. என்னை என் ஆர்மிட்ட இருந்துதான் யாராவது காப்பாத்தனும்! அவ்வளவு பாசம்!
இது எங்களோட கதையா? என்னோட கதையா? இதோ இறுக்கமா மூன்று முடிச்சு போட்டுட்டு எதுவுமே தெரியாதவன் போல தலைய தலைய ஆட்டி பேசிட்டு இருக்கானே.. இவனோட கதையா?
இது அநியாயமா வீடு கடத்தப்படும் ஒரு அப்பாவி வில்லியோட கதை. ஒரு கல்யாணத்தின் கதை.
ஆறு மாதங்களுக்கு முன்பு...
'நான் பொல்லாதவன்~' என்ற சத்தத்தில் அடித்துப் பிடித்துக்கொண்டு எழுந்தாள் அவிரோள்.
காட் கயன்! கட் கட் கட்
முகத்தை அழுந்த துடைத்துத் தூக்கத்தைக் கலைத்துக்கொண்டவள் அவள் பதறி எழுந்ததில் ஆங்காங்கே சிதறி, நோட்பேட், பேனா எனக் கீழே விழுந்து கிடந்த பொருட்களைக் கவனித்தாள்.
அவளது பார்வை அவசர அவசரமாக மடிக்கணினியின் திரைக்குத் தாவியது.
அச்சோ! போயிடாத தெய்வமே! படபடவென பட்டன்களை தட்டி, மௌஸை தேய்த்து என சில நொடிகளில் அவளுக்கு ரத்த அழுத்தத்தை ஏற்றிவிட்டே கண்சிமிட்டி உயிர்பெற்றது அந்தத் திரை.
தெய்வமே!
திரையையே வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தவள், தன்னையறியாமலேயே கீபோர்டில் தலை வைத்து உறங்கியிருக்க வேண்டும்!
உனக்கு தூங்குவதற்கா வேற இடம் கிடைக்கல! எனத் தன்னை தானே கடிந்து கொண்டவளுக்கு அத்தனையும் வேலை செய்கிறது என்பதை உறுதி செய்த பிறகே உயிர் வந்தது எனலாம்.
பெருமூச்சொன்றை இழுத்துவிட்டவள் அப்படியே தொப்பென இருக்கையில் சாய்ந்தாள்.
'நான் பொல்லாதவன்
பொய் சொல்லாதவன்~'
மீண்டும் கைப்பேசி அலறியது
'என் நெஞ்சத்தில் வீண் வஞ்சங்கள் இல்லாதவன்'
எக்கிப் பார்த்தாள். திரையில் 'கயன்' என்ற பெயருடன் அவளது ஆருயிர் தோழி கயன்னங்கை கண்சிமிட்டி சிரித்துக்கொண்டிருந்தாள்.
"இவளுக்கு வேற வேலை இல்லை!" என வாய்விட்டே புலம்பியவள்
மீண்டும் கட் கட் கட் கட்!
தட் தட் தட் தட்.. என்ன இது? அழைப்பை நிராகரித்தால் சத்தமெல்லாம் வருமா என்ன?
மெல்ல மேசை மீது கிடந்த கைப்பேசி திரையை எட்டிப் பார்த்தாள். அப்படி எதுவுமில்லையே..
மீண்டும் தட் தட் தட் தட் என்ற சத்தம் அவள் செவிப்பறையைத் தட்ட, பார்வையை அறை வாயிலுக்குத் திருப்பினாள்.
கயன்!
கைகள் இரண்டையும் கட்டிக்கொண்டு இவளையே கொலைவெறி பார்வை பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.
இன்னமும் தலையில் இருந்து இறங்கி கழுத்தில் கிடந்த 'ஸ்டோலும்' மறு கையில் இருந்த தலைக் கவசமும் அவள் அப்படியே நேராக அங்கு வந்திருப்பதை உரைத்தது.
"அடடடே! இப்போதான் உன் கால் கட் பண்ணேன்" என்று அவிரோள் தொடங்குவதற்குள் விடுவிடுவென அவளிடம் பாய்ந்து வந்தவள் கையில் இருந்த ஹெல்மெட்டால் நாலு போடு போடத் துவங்கினாள்
"எரும! எரும! ஃபோன எடுக்கறதுக்கு என்ன குறைச்சல் உனக்கு?" என்று கயன் இடிக்க
அந்த மஞ்சள் நிற தலைக்கவசத்தில் இருந்து வளைந்து நெளிந்து தப்பியவள் அதை லாவகமாகக் கைப்பற்றி அவள் அமர்ந்திருந்த மேசைக்கு மறுபுறம் வைத்துவிட்டாள்.
கயன் சின்ன முறைப்புடன் சென்று இவள் மெத்தையில் அமர, அவிரோள் அமர்ந்திருந்த இருக்கையை நேர் பின்னால் திருப்பி போட்டுக்கொண்டு அமர்ந்தாள்.
"இப்ப சொல்லு என்ன?"
கயனிடம் போலி முறைப்பு
"அப்ப விடு" என அவி தன் இருக்கையைத் திருப்பப் போக
"இரு இரு இரு!" என்று அவள் இருக்கையின் கைப்பிடியை பிடித்து தன் புறமாகத் திருப்பிக்கொண்டாள் கயன்.
"சொல்லு எதுக்கு கூப்பிட்ட?" என அவி சாதாரணமாக கேட்க
"ஆனாலும் உனக்கு கொழுப்புடி! கூப்பிட்டா எடுக்க மாட்ட, ரீல்ஸ் அனுப்பினா பார்க்க மாட்ட.." என்று அடுக்க
"டி சொல்லாத" என ரத்தினச் சுருக்கமாக வந்தது அவியின் குரல்.
"நான் சொல்லுவேன்"
"எனக்கு பிடிக்காதுனு சொல்றேன்ல"
"அதனாலதான் சொல்லுவேன்" என்ற கயனை உற்று நோக்கியவள் இரண்டு கைகளையும் தூக்கிவிட்டாள் நான் விட்டுக் கொடுக்கிறேன் என
"அது.. அந்தப் பயமிருக்கட்டும்!" என்று சுட்டு விரல் நீட்டி எச்சரித்த கயனின் முகம் நொடியில் மாறிவிட்டது.
அத்தனை நேரம் முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொள்ளப் பாடுபட்டவள் போல, நொடியில் முகம் மலர
"என்ன பண்ற நீ? நான் காலைல மெஸேஜ் பண்ணேன் பார்க்கல.. சரினு கால் பண்ணா அதுவும் எடுக்கல, அதான் நேர்லயே பார்த்து பேசிட்டு போலாம்னு வந்துட்டேன்" என்றவளைப் பார்த்த அவி
"தூங்கிட்டேன் கயன், வேலை பார்த்துட்டே இருந்தேன்.. எப்படியோ தூங்கிட்டேன் போல.." என்றவள் பார்வையாலே சமிக்ஞை செய்ய கயனுக்கு நொடியில் புரிந்துவிட்டது.
"ப்ச்! இவ்வளவுலாம் ஸ்ட்ரெஸ் எடுத்து உழைக்காத ரோ! எத்தனை தடவை சொல்றது?" என்றவளின் பார்வை அவிரோளிடம்
'என்ன?' எனக் கேட்க
அவியின் பார்வை அறை வாயிலைத் தொட்டு மீண்டது.
"இரு" என்று ரகசியக் குரலில் பேசியவள் எழுந்து சென்றாள்.
வாசற் கதவு வரை சென்றவளுக்கு மறுபக்க சுவரையொட்டி மெல்லிய மூச்சுக்காற்றும், கதவிடுக்கில் லேசாக ஆரஞ்சு நிற டீஷர்டும் தெரிய, அதைக் கவனிக்காதவளாக
"புரியுது.. ஆனா வேலை அப்படி கயன். இந்த ஒரு மாசம் கொஞ்சம் அப்படிதான் இருக்கும்.." என்று பேசியவாறே கதவை இழுத்துத் தாழ் போட்டுவிட்டுத் திரும்பி வந்தாள்.
"யாரு? அவன்தானே?" என்ற கயனின் மெல்லிய குரலுக்கு அலுப்பாகத் தலையசைத்தவளும்
"அவனேதான்" என்றபடி வந்தமர்ந்தாள்.
"இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி சமாளிக்க போற ரோ?" கயனின் குரலில் மெய்யான பரிவு.
"ப்ச்.. போற வரை பாப்போம்! அதுக்குள்ள ஏதாவது வழி கிடைச்சிடும்" என அவி அதற்குத் தோளைக் குலுக்கிவிட்டுத் திரும்ப
"வேணா ஒருவாட்டி சித்தப்பாட்ட சொல்லி பாக்கறியா?" கயன் பெரும் தயக்கத்துடன்தான் அதைக் கேட்டது
மறுப்பாக தலையசைத்த அவிரோளின் அடிப்பட்ட பார்வையில் அந்த எண்ணத்தை அப்படியே கைவிட்டாள்.
"இப்போ சொல்லு நீ எதுக்கு கூப்பிட்டனு?" அவிரோள் பேச்சைத் திசை திருப்ப அதை புரிந்துகொண்டவளும்
"எங்க ஆஃபிஸ்ல இருந்து வர வழில புது கரியோக்கி திறந்திருக்காங்க! அதான் இந்த ஞாயிறு போயிட்டு வரலாமானு கேட்க கூப்பிட்டேன்" என்றவள் கண்களில் ஆயிரம் ஆயிரம் சாமந்தி!
அதை ஒரு நொடி மௌனமாய் பார்த்தவள்,"சரி வராது கயன், நீயே பாக்கறல.. இந்த நேரத்துல எப்படி?" என்றவள் தயங்க
துள்ளியெழுந்து அவளை இருக்கையோடு சேர்த்து அணைத்துக்கொண்ட கயனோ
"இந்த நேரத்துல தான் கட்டாயம் போயிட்டு வரனும்! யூ ஜஸ்ட் லிஸன் டூ மி ஐ ஸே!" என்றவள் விடாப்பிடியாக நிற்க
"ம்ம்.. யாரெல்லாம்.. " என்று அவி எதையோ கேட்க வருவதற்குள் கயன் அதே வேகத்தில் துள்ளிக் குதித்தபடி மெத்தைக்குத் தாவுவதற்கும் சரியாய் இருந்தது.
அவி புரியாமல் விழிக்க கயனோ
"எ.. எலி! எலி ரோ!" என்று பதற
விருட்டென தன் கால்களை மேலே தூக்கிக்கொண்ட அவிரோளின் பார்வை அறை மூலையில் இருந்த பொந்திற்குச் சென்றது.
நினைச்சேன்!
"பயப்படாத! அப்படியே இரு!" என்றவள் மெல்ல இருக்கையில் இருந்து மெத்தைக்குத் தாவி, அங்கிருந்தபடியே கதவைத் திறக்க, திக்கு தெரியாமல் அங்குமிங்குமாய் பாய்ந்தோடிக்கொண்டிருந்த எலி, கதவு திறந்த மறுநொடி வெளியில் சீறி ஓட, தொலைவில்
"அய்யோ! அம்மா எலி!" என்ற மெல்லிய அலறல் மட்டும் எதிரொலிக்க, ஒருவரை ஒருவர் பார்த்திருந்த இரு சிநேகிதிகளும் வாயை பொத்திக்கொண்டு சிரித்தனர்.
அவிரோள் மீண்டும் கதவைத் தாழிட்டு வந்தவள்
"வசந்தி அக்கா, க்ளீன் பண்ணப்போ தண்ணி போக துணிய எடுத்துவிட்டாங்க போல.." என எலி வந்த விதத்தை ஆராய்ந்தபடி வந்து அமர
அதுவரையிலும் ஏதோ தீவிரச் சிந்தனையில் இருந்த கயன்
"ஹே! எலியையும் கூப்பிடுவோமா? கரியோக்கிக்கு?" என்று கண்கள் பளிச்சிடக் கேட்க
"கூப்பிடலாம்.. ஆனா அதுக்கு பாட வருமானு தெரியாதே.." என்று கேலி செய்தவாறே அவி திரும்ப
கயன்,"ரோ! நான் அந்த எலிய சொல்லல, எழில சொன்னேன்" என்றாள் தீவிரமாக
"எந்த எழில்?" எனத் தொடங்கிய அவி
"ஓ.. உன் ஃப்ரெண்ட் எழில்?" எனக் கேட்க
கயனும் "யெஸ் யெஸ்! அவன் இங்க வந்திருக்கான்! நீயும் அவன பார்த்ததே இல்லைல.."
அவிரோளின் மறுப்பு நொடி தாமதியாமல் வந்தது
"எனக்கு யாருனே தெரியாது கயன்"
"சோ வாட்? வந்தா தானே தெரியும்! நீ வா" என்றாள் முடிவாக
"எதுக்கு தெரியனும் எனக்கு?" என்று அவிரோள் அதற்கும் கேள்வி கேட்க
இந்த கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வது?
"அதெல்லாம் தெரியாது! நீ வர டாட்!" என்று முடித்துவிட்டாள்.
தான் முதலில் வருகிறேன் என்றே சொல்லவில்லை அதற்குள் இவள் நட்பு பட்டாளத்தை சந்திக்க வைப்பது வரை சென்றுவிட்டாள்!
தன்னை மீறி எழுந்த புன்னகையுடன் அவிரோள் எழுந்து சென்று எலி வந்த பொந்தை அடைக்க
"எழிலும் உன்ன மாதிரியேதான் ரோ! செம இன்ட்ரோவர்ட்" என்றவள் ஒரு நொடி மௌனிக்க,
"அப்ப போற இடமெல்லாம் இன்ட்ரோவர்ட்ஸ மந்திரக்கல் மாதிரி கலெக்ட் பண்றனு சொல்லு" என்றுவிட்டு அவி அவளைத் திரும்பிப் பார்க்க
அவளும் அதைத்தான் நினைத்தாள் போல, மெல்லிய சிரிப்பலை ஒன்று அங்கு எழுந்தடங்கியது.
"நீ வேணா பாரு! உனக்கும் அவன பிடிக்கும்" என்ற கயன் பேச்சில் அவிரோள் அசட்டையாகத் தோளைக் குலுக்கினாள்.
"நிஜமா ரோ! அவனுக்கு ஏற்கனவே உன் பேர் ரொம்ப பிடிக்கும்" என கயன் அவளை நம்ப வைத்துவிடும் வேகத்தில் சொல்லிவிட
"என்ன?" என அதிர்ந்தாள் அவிரோள்.
— “ Operation: கல்யாணம்” கதையிலிருந்து ஒரு பகுதி
✍️ எழுத்தாளர்: Yagnya
இந்தக் கதை முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது

Comments
Post a Comment