🌿 Featured Story

அன்பில் அவன் அலாதி

கோடைக்கால நினைவுகளின் கதை.

📖 Read Story

🎧 Audiobooks

Listen to our stories while travelling, resting or dreaming.

Enter Our Audio Story World

Romance, thrillers, healing stories & emotional journeys, now in audio form.

🌿 Fresh Updates

New chapters, articles, announcements & story updates.

Operation: கல்யாணம் - 2

✍️ எழுதியவர் Yagnya

 Operation: கல்யாணம் - 2

 


"முடியவே முடியாது!" என்று தோளை உதறிக்கொண்ட அவிரோள் பழையபடி அவளது இருக்கையில் வந்து அமர்ந்துவிட 

 

"ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ரோ!" என்று ராகமாய் இழுத்தாள் கயன். 

 

"முடியாதுன்னா முடியாது! என்ன விளையாட்றீயா? நான்கூட ஏதோ விளையாட்டுக்கு சொல்லிட்டிருக்கேனு பார்த்தா.. நோ வே! எனக்கு எவ்வளவு வேளை கிடக்கு தெரியுமா? என்னாலலாம்.. சான்ஸே இல்ல!" என்று திட்டவட்டமாக மறுத்தவள் அத்தோடு அவ்வளவுதான் என்பதுபோல மடிக்கணினியில் கவனம் பதிப்பது போலத் திரும்பி அமர்ந்தும்விட 

 

அவளையே ஒரு விநாடி மௌனமாய் பார்த்த கயன், வெடுக்கென அவிரோளின் இருக்கையை தன் புறம் திருப்பினாள். 

 

"என்கிட்டயே உன் ஆஸ்கர் நடிப்ப அவிழ்த்துவிடாத ரோ!" என அவளது லாப்டாப் திரையை விழிகளால் சுட்டிக்காட்டியவள் 

 

"நீ வர" என்று பார்வையாலே உத்தரவிட 

 

அவளா அசங்குபவள்? 

 

இரு கைகளையும் கட்டிக்கொண்டு தன்னை பெரிதாக மிரட்ட முயலும் கயனையே 'ஓஹோ.. அடுத்து?' என அவிரோள் பார்க்க தொடங்க 

 

அவ்வளவுதான்! கயனால் அதற்கு மேலும் தனது போலி மிடுக்கை பிடித்து வைக்க இயலவில்லை. நொடியில் பெருமூச்சொன்றுடன் அதைக் கைவிட்டவள் பட்டென தரையில் முழந்தாழிட்டு விழுந்து அவிரோளின் மடியில் முகத்தை புதைத்துக்கொண்டாள். 

 

"தெய்வமே! இதுக்கு மேல என்ன கெஞ்ச விடாத!" என்று கயன் தலையை அவள் மடியில் வைத்து அங்கும் இங்குமாக அசைக்க, அதில் எழுந்த கூச்சத்தில் 

 

"ஹ.. ஹ.. விடு கயன்! கூசுது.." என்று அவளைப் பிடித்துத் தள்ள முயன்றவள் அது முடியாமல் போக தோல்வியைத் தழுவிக்கொண்டு இருந்தாள்.

 

"முடியாது! நீ வருவேனு சொல்லு அப்போதான் எழுவேன்" 

 

இவள! 

 

சின்ன குழந்தை போல அடம்பிடிப்பவளைக் கண்டவளுக்கு தன்னை மீறி சிரிப்புதான் வந்தது. கயன் இப்படிக் கத்தி கதறிக் கெஞ்சும் அளவுக்கு ஒன்றும் அவிரோள் இல்லாமல் ஒன்றுமே நடக்காது என்றெல்லாம் இல்லை. கயனுக்கு இருக்கும் நட்பு பட்டாளத்திற்கு அவளது 'சோஷியல்' காலண்டரில் அத்தனை நாளும் நிறைந்து கிடக்கும் என்றால் நம்பிவிடலாம்! அப்படியொரு சமூக பட்டாம்பூச்சி கயன்னங்கை! 


அந்த பட்டாம்பூச்சிதான் இங்கு வெட்டுக்கிளி போல இங்கு மிரட்டிக்கொண்டிருந்தது. 

 

அவளுக்கு அந்த கரியோக்கிக்கு எப்பொழுது வேண்டுமானாலும் போய்க் கொள்ளலாம். ஆனால் அவளுக்கு அங்கு அவிரோளுடன் சென்று வர வேண்டும்! அதுவும் மனதில் ஏற்கனவே உதிக்கத் தொடங்கிவிட்ட அவளது 'முதல் அவிரோளுடனும் எலியுடனும்' சென்று வரும் திட்டமும், அந்த கற்பனையுமே அவளுக்கு மிகவும் பிடிக்கத் தொடங்கிவிட்டது! 

 

அவளது இரு உயிர் நட்புகளுடன் ஒரே நேரத்தில் வெளியில் சென்று வருவது! அவர்கள் இருவரையும் ஒரே நட்பு வட்டத்திற்குள் கொண்டு வருவது.. 

 

சிறு பிள்ளையாய் இன்னும் தரையில் விழுந்து கை கால்களை மட்டும்தான் அடித்துக்கொள்ளவில்லை. மற்றபடி அதே பிடிவாதத்துடன் நிற்பவளை கண்டவளுக்குச் சிரிப்புதான் வந்தது. 

 

"சின்ன பசங்க இந்த மாதிரி அடம்பிடிச்சாலே பேரண்ட்ஸ் தலைல ரெண்டு தட்டி கூட்டிட்டு போக மாட்டாங்களானு தோணும்.." என்றவள் கேலியாய் இழுக்க 

 

"நீ நாலு கூட தட்டிக்கோ ஆனா வர!" என்றாள் கயன் விடாமல். 

 

"ஷ்ப்பா! சரி.." என்று அவி தொடங்குவதற்குள்

 

"ஹே!" எனத் துள்ளத் தொடங்கியவளின் உற்சாகம் 

 

"ஆனா நீயும் நானும் மட்டும்தான்" என்றதில் புஸ்ஸென உடைந்துவிட 

 

"ரோ.." என்று பாவமாய் இழுத்தாள் கயன்

 

"எனக்குலாம் யாரையும் புதுசா மீட் பண்ண வேண்டாம்!" என்றவள் திட்டவட்டமாகச் சொல்லிவிட 

 

அழுதுவிடுபவள் போல விழித்தவள் 

 

"நான் ஏற்கனவே அவன்ட்ட வர சொல்லிட்டேனே.." என்றாள் பயங்கர பாவமாய் முகத்தை வைத்து.

 

"வாட்?" என்று மீண்டும் ஒரு குட்டி அதிர்ச்சிக்குள்ளான அவி கயனை நம்ப முடியாமல் வெறித்தாள் 

 

"இந்த ஐடியாவே அஞ்சு நிமிஷம் முன்னதானே வந்தது?"  அவிரோள் ஒற்றை புருவம் உயர்த்தி சந்தேகமாகப் பார்க்க 

 

"இப்போதான் ரெண்டு நிமிஷம் முன்ன கேட்டேன்" என்றாள் மெல்ல 

 

இரண்டு நிமிடம் முன்னரா? எப்படி? எப்பொழுது? 

 

அவியின் கேள்விகள் அவள் முகத்திலேயே தெரிய மெல்லத் தொண்டையைச் சரி செய்துகொண்ட கயன்

 

"ம்க்ம்.. நீ எலி வராம இருக்க ஓட்டைய மூடினப்போதான்.." என்றிழுக்க 

 

"நீ உன் எலிய கூட்டிட்டு வர ப்ளான் போட்ட" என்று அவி அனல் பறக்க முடித்து வைக்க 


"டெக்ஸ்ட் பண்ணேன், வரேனு சொல்லிட்டான்.." என்றாள் அப்பாவியாய். 

 

அவிரோள் மௌனமாய் அமர்ந்திருக்க அதையே சாதகமாக எடுத்துக்கொண்டு அவளருகில் நகர்ந்து அமர்ந்தவள் அவள் மடிமீது கிடந்த கையை பற்றினாள் 

 

"ப்ளீஸ் ரோ.. உனக்கே தெரியும்ல, சதுர் விஷயத்துல நான் ரொம்ப டௌனா இருந்த டைம்லலாம் அவன்தான் ரொம்ப சப்போட். இப்போ அவனுக்கு நான் கூட இருக்க வேண்டிய சூழல். நீயும் வந்தா, புது இடம் புது மனுஷங்கனு அவனுக்கும் சேஞ்சா இருக்கும், இப்போ நீ இருக்க சூழ்நிலையில உனக்கும் சேஞ்சா இருக்கும்.."

 

அவியின் பார்வை மெல்ல கயனை தொட்டது 

 

"யூ போத் நீட் திஸ், வீ நீட் திஸ்" என்றவள் கண்களைச் சுருக்கி கேட்க 

 

வெடுக்கென பார்வையை மேசைக்குத் திருப்பிய அவி

 

"என்னால ரொம்ப நேரம் இருக்க முடியாது, சீக்கிரம் கிளம்பிடுவேன்" என்றபடி மேசை மீது கிடந்த நோட்பேடையும், ஸ்டிக்கிக்களையும் ஒழுங்கு செய்ய 

 

"ஹய்யோ என் ரோ னா ரோதான்!" என்று தாவி அவளை பின்னிருந்து ஒரு முறை அணைத்து இட வலமாய் சேர்ந்து ஆடியவளைக் கலைத்தது அவளது அலைபேசி 

 

'அங்யாடே அங்யாடே அங்யாடே

எஹி எஹி அங்யாடே

அங்யாடே அங்யாடே அங்யாடே

எஹி எஹி அங்யாடே

அசந்தாப்புல அள்ளிப்புட்டானே

அடி மனதில் அண்டிப்புட்டானே

மிளகாப்பூ போல என்னுள்ள

அழகா பூ பூக்க விட்டானே~'

 

"உன் ஃபோன்தான்" 

 

"ப்ச்! விடமாட்டாங்களே!" என்று போலியாய் சலித்துக்கொண்டவள் மெத்தை மீது கிடந்த அவளது கைப்பையை அலசி எடுத்தாள். 

 

"ஹா ஹா.. அவன்தான்" திரையை ஒரே ஒரு நொடி  திருப்பினாள். 

 

எலி காலிங்.. என்ற பெயர் பார்வையில் படும்பொழுதே கயன் அழைப்பை ஏற்று பேசத் தொடங்கிவிட்டாள்

 

"ஆயுசு நூறு! எங்க இருக்க?" என்று தொடங்கியவள் பேச்சுவாக்கிலேயே தன் பையையும், தலைக்கவசத்தையும் ஒரு கையில் எடுத்துக்கொண்டு, அவசர அவசரமாக இருக்கையில் அமர்ந்திருந்த அவியை அப்படியே அணைத்து அவள் உச்சந்தலையில் ஒரு முத்தத்தை வைத்துவிட்டு 


"அப்பறமா வரேன்! பை பை!" என்று போகிற போக்கில் ஒரு பறக்கும் முத்தத்தையும் கொடுத்துவிட்டு வெளியேறிவிட்டாள். 

 

அவ்வறையே புயலடித்து ஓய்ந்ததுபோல அதீத அமைதியுடன் இருந்தது. 

 

"இன்னொரு நாள் வரேன் ஆன்ட்டி" என்று கீழே கயனின் குரல் தேய்ந்து மறைந்தது. 

 

அவ்வறையையே ஒரு முறை மௌனமாய் பார்த்தவள் பிறகு பெருமூச்சொன்றுடன் திரும்பி மீண்டும் திரையில் கவனமானாள். 

 

மனதோர மூலையில் மட்டும் 'அவனுக்கு உன் பேரே ரொம்ப பிடிக்கும்' முணுமுணுத்தது. 

 

யாரிந்த எலி? இவனுக்கு எதுக்கு என் பேர் பிடிக்கும்? பிடிக்கிற அளவு அதுல என்ன இருக்கு? 

 

என்று எண்ணங்கள் அதன்பாட்டில் அலைமோதுவதைச் சுதாரித்தவள் 

 

ஷ்! அவி! எவனாவது ஏதாச்சும் சொன்னா அதுக்கு இவ்வளவு யோசிக்கனுமா? அதுவும் நம்ம கைலயே இவ்வளவு பிரச்சனைய வச்சுக்கிட்டு? 

 

உடலை ஒரு முறை உதறிக்கொண்டவள் மீண்டும் திரையில் கவனம் பதித்தாள். இம்முறை அவளது முழு கவனமும் அங்கே திரும்பி விட்டிருந்தது. 

 

இங்கு.. 

 

"இங்க! கையாட்டறேனே தெரியுதா?" என்று கயன் நடு சாலையில் வந்து நின்று கையாட்டிகொண்டிருக்க 

 

"ம்ம்.. எங்கனு தெரியலையே கயனா, எதிர்ல ஒரு குட்டிச்சாத்தான் தான் டான்ஸ் ஆடிட்டு இருக்கு" என்று தீவிரமாகப் பேசியவனின் கை லாவகமாக ஒடித்து திருப்பி நிறுத்திவிட்டு பக்க புற கதவை திறந்துவிட 

 

"தெரியும்டா உனக்கு தெரியும்!" என்று கறுவியபடி உள்ளே ஏறியமர்ந்தாள் கயன்

 

அவளது உஷ்ணப் பார்வையில் இதழ் வளைவில் மலர்ந்த சிறு புன்னகையுடன் வண்டியை எடுத்தான் 

 

"அது சரி, நீ எங்க நின்ன? நான் இதே வழியாதான் உள்ளவரை போயிட்டு வரேன். உன்ன பார்க்கலையே?" 

 

"ஓ.. நான்தான் சொன்னேன்ல? நீ மெயின்லயே நில்லு நானே வரேனு. ரோ வீடு நீ போனல்ல அந்தப்பக்கம்தான் இருக்கு, நான் பக்கத்து தெரு வழியா வரதுக்குள்ள நீ உள்ள போயிட்ட, அதான் மிஸ் பண்ணிட்டோம்" 

 

"ஓ..." என்று கேட்டுக்கொண்டவனின் முகத்தில் பெருங்குழப்பம். 

 

வண்டியை மெல்ல வாகன நெரிசலில் கலந்தவன் 

 

"நீ அங்கேயே இருந்திருக்கலாமே! நானே வந்து பிக்கப் பண்ணிருப்பேன்" என்று கேட்க 


எதையோ சொல்ல வந்தவள் பிறகு மனதை மாற்றிக்கொண்டவள் போல் அதை கைவிடுத்து "ம்ஹூம். சரி வராதுடா, உனக்கு அவ வீட்ட பத்தி தெரியாது" என்றாள். 

 

அதிசயமாய் கயன்னங்கையின் முகத்தில் படர்ந்த வருத்தத்தைப்  பக்கவாட்டு பார்வையில் கவனித்தவனும் அப்பேச்சை விடுத்து 

 

"அது சரி! அதென்ன கைல ஹெல்மெட்? நான் லைசென்ஸ் வச்சிருக்கற நல்ல ட்ரைவர் தான்மா" என்று சீண்ட 

 

யோசனையில் இருந்தவளுக்கு ஒரு நொடி புரியாமல் போக, திடுக்கிட்டு விழித்தவள் அடுத்த கணமே 

 

"லைசென்ஸ் வச்சிருக்கவங்கலாம் நல்ல ட்ரைவர்னு யார் சொன்னது?" என்றுவிட்டு தலைக்கவசத்தை தன் வயிற்றோடு இறுக்கிக்கொள்வது போலப் பாவனை செய்ய 

 

"ஓஹோ.. இப்போதான் நீ எப்படி லைசென்ஸ் வாங்கினனு புரியுது" என்றவன் அதற்கும் வார, அவன் புஜத்தில் பட்டென ஒன்று வைத்துவிட்டு  அவள் சிரிக்க ஒரு மெல்லிய சிரிப்பொலி அங்குப் பரவியது.

 

"கயனா"

 

"ம்ம்?"

 

"நீ பைக் புக் பண்ணாத நாளைக்கு, நானே வந்து பிக்கப் பண்றேன். அப்படியே நீ சொன்ன கரியோக்கி போய்ட்டு வந்துடலாம்" என்றவன் பேசவுமே கயன்னங்கைக்கும் நினைவு வந்தது. 

 

"ஓ.. உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்! அது ஞாயிறு போயிட்டு வரலாம் எலி, ரோவும் வரேனு சொல்லிருக்கா தெரியுமா!" என்றவள் உற்சாகத்தில் குதூகலிக்க 

 

எழில் கையிலிருந்த வண்டி 'க்ரீச்ச்' என்ற சத்தத்துடன் சடன் ப்ரேக்கிட்டு அதிர்ந்து நின்றது. 

 

"என்னது?" என்றவன் அதைவிட பயங்கரமாய் அதிர்ந்தான். 

 — “ Operation: கல்யாணம்” கதையிலிருந்து ஒரு பகுதி  

✍️ எழுத்தாளர்: Yagnya 

இந்தக் கதை முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது




முந்தைய அத்தியாயம்  |  அடுத்த அத்தியாயம்

📖 இந்த தொடரின் அத்தியாயங்கள்