அன்பில் அவன் அலாதி - 1

✍️ எழுதியவர் Yagnya

 1 



கோவா
 
 
அந்த மரத்தாலான ட்ரெஸ்ஸிங் டேபிளிற்கு முன் நின்றிருந்தவள், நீண்ட நேர பிரயத்தினத்திற்கு பிறகுத் தனது கழுத்தடி வரையே நின்ற கூந்தலை ஒன்றாய் இழுத்துப் பிடித்து கொண்டையாக்கியிருந்தாள். பல நாட்களுக்கு முன் ஷார்ட் பாப் ஸ்டைலில் வெட்டப்பட்டிருந்த கூந்தல் தோளைத் தாண்டவா? வேண்டாமா? என்றளவு வளர்ந்துவிட்டிருந்தது. மறுபடியும் வெட்ட தோணவில்லை மீராவுக்கு!
 
கூந்தலை கொண்டையாக்கிவிட்டு நிமிர்ந்து கண்ணாடியைப் பார்த்தவளின் முகம் ஆசுவாசத்தில் தளர்ந்தது. முகத்தை அழுந்த துடைத்தவள் மேசையில் சிதறிக்கிடந்த ஹேர் பேண்டுகளை அதற்குரிய சிறிய பெட்டியில் போட்டு வைக்க  எண்ணிக்கொண்டிருக்கையிலேயே அவளைக் கலைத்தது அந்த ஹாரன் சத்தம்.
 
 
அந்த ஹாரன் சத்தத்திலேயே வந்தது யாரெனப் புரிந்துபோக விடுவிடுவென வாசலுக்கு வந்தவளைச் சற்றும் ஏமாற்றாதவனாய் பைக்கில் அமர்ந்திருந்தான் அவன், நிலவன்! அவள் ஆகாயத்தின் அமிர்தமான ஒற்றை நிலவு அவன். 
 
"போ போ சீக்கிரம் கிளம்பு!" என்றான் அதே துள்ளலுடன்.
 
வாசற்படியில் நின்றவளின் பார்வையிலும் இம்முறை சுவாரஸ்யம் கூடியது.
 
"எங்க?" என்றாள் ஒற்றை புருவ உயர்த்தலுடன்.
 
"ரோட் ட்ரிப்! கோவா டூ நெல்லை...ஸௌங்ங்ங்!!!" என்று வண்டி ஓட்டுவது போல் வேறு செய்து காட்ட மீராவிடமோ மிதமிஞ்சிய ஆச்சரியம்.
 
"சீரியஸ்லி!!?" 
 
"இல்ல சும்மாக்காச்சும்... பார்த்தா தெரியலையா? நான் ரெடி! அல்மோஸ்ட் 1180 கிலோமீட்டர்!! அஞ்சு நாள்.. நிலாவும் மீராவும் மட்டும்..." என்க மீராவோ 'நீ எப்பவும் இப்படிதான்!' என்றொரு பார்வையை வீசினாள். 
 
இது அவர்கள் முன்பே யோசித்து வைத்ததுதான். ஆனால் அது எப்பொழுதாவது போகலாம் என்ற லிஸ்ட்டில் மட்டுமே இருக்க இங்கு இவனோ திடுதிப்பென இப்பொழுதே போகலாம் என்று வந்து நிற்கிறான். 
 
 
இவளுக்கு அது வெகேஷன் நேரம்தான். ஆனால் அவனுக்கு அப்படியில்லையே. அவளது எண்ணவோட்டத்தை உணர்ந்தவன்போல
 
 
"ரொம்பலாம் யோசிக்காத மீமீ!! லீவ்லாம் நேத்தே அப்ரூவ் ஆகிட்டு! மொத போய் கிளம்பற வேலைய பாரு!" என்றான்
 
"அடேங்கப்பா! சார் எப்போதுல இருந்து திருநெல்வேலி பாஷைலாம் பேச ஆரம்பிச்சீங்க?"
 
 
"ஹா..ஹா.. எல்லாம் பழக்க தோஷந்தான்!" என்று நகைக்க 
 
"உள்ள வா பக்கீ!!" என்று சிரிப்பை அடக்க முயன்றவளாய் வீட்டினுள் நுழைந்தாள். 

"க்விக் க்விக்!" என்று அவளை அவசரப்படுத்தியபடி அடுக்களை பக்கம் சென்றவன் இருவருக்குமாய் டீ ஒன்றை கலக்கி கொண்டு அவள் கிளம்புவதற்கு வாக்காய் அடுக்களையை ஒதுங்க வைத்து ஹாலில் ஆங்காங்கே கிடந்தவற்றை அடுக்கி வைத்தென அவன் முடித்து நிமிருவதற்குள் தோள் பை ஒன்றுடன் தயாராகி வந்து நின்றாள் மீரா. 
 
 
"நெல்லை எக்ஸ்ப்ரெஸ்!!" நிலவனின் கண்களில் குறும்பு குறையாமல் வழிந்தது.
 
 
"கோவா ஃப்ளைட்தான் லேட் போல.." என்றபடி அவன் கையிலிருந்த டீ கப்பை வாங்கி கொள்ள அவனோ,
 
"ஏன் சொல்லமாட்ட! பாவம் உனக்கு வேலை வைக்கக்கூடாதேனு நீ பரத்தி போட்டதெல்லாத்தையும் ஒதுங்க வைச்சேன்ல.. தேவைதான்!" என்றபடி  தேத்தண்ணியை  பருகலானான்.
 
 
நிலவன் அடுக்கும் ரகமென்றால் மீரா கலைக்கும் ரகம். அவளும் அடுக்க நினைப்பாள்தான்... ஆனால் அது நினைப்பில் மட்டுமே இருந்துவிடுவதுதான் அவளது பிரச்சினை. 
 
ஐந்தாறு  வருடங்கள் இருக்கும் அவர்களது முதல் சந்திப்பு நடந்து. அந்த சந்திப்பு  எந்த புள்ளியில் நட்பாய் உருவெடுத்து காதலில் கரைந்ததென்று அவர்களுக்கும் தெரியவில்லை.  அடுத்த வருடத் தொடக்கத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர். நிலவன் வீட்டிலும் முன்பே தெரிந்திருந்தமையால் நாட்களும் இதமாகவே நகர்ந்தன...
 
 
எல்லாவற்றையும் ஒரு முறை சரிபார்த்துவிட்டு கதவைப் பூட்டிவிட்டு கிளம்பியவர்களின் பயணம் கோவாவில் இருந்து மெல்ல மெல்ல நகர்ந்தது. 
 
கோவாவை விட்டு அவர்கள் நகர நகர மீராவின் எண்ணங்களும் பின்னோக்கி நகரத் தொடங்கியது.
 
அவள் அங்கு அவள் தந்தையுடன் வந்தாள். இப்பொழுது அவர் அவள் நினைவில் மட்டுமே வாசம் செய்கிறார். 
 
 
சொந்தம் என்று சொல்லிக்கொள்ளப் பெரிதாக யாருமில்லைதான் ஆனால் அவளை பொருத்தமட்டில் சொந்தமென்பது ரத்தத்தால் மட்டுமே வருவதல்லவே! அது உண்மையான அன்பினால் மட்டுமே உருவாகக்கூடியது. அது அவளுக்கு நிறையவே இருந்தது. இந்த நிலவனில் இருந்து இவன் வீட்டுப் பொடிசு வரை மீமீ மீமீ என்று அவளை தங்களுள் ஒருத்தியாய் உணர்கின்றனர். அவள் வேலை செய்யும் இடத்திலிருந்து தினம் க்ரோஸரி வாங்கும் கடைவரை அவளுக்கு அனைவருமே நண்பர்கள்.  
 
 
எதிர்காற்று முகத்தைத் தழுவி அவள் கேசத்தினூடே ஊடுருவி பறந்ததில் மீரா மனதினுள் சாரல்மழை! 
 ரியர்வ்யூ மிரர் வழியாய் அவளை ஒரு முறை பார்த்துவிட்டு வழியில் கவனம் பதித்தவனின் இதழ்களிலும் அதே சாரல்மழையின் தாக்கம்..!!
 
உள்ளுக்குள் உற்சாக நதிவேறு!
 
இரண்டு தினங்களுக்குப் பிறகு....
 
மதுரையில்
 
மீராவின் அகமெங்கிழும் பனிப்பொழிவு! அதிர்வில் ஸ்தம்பித்து நின்றுவிட்டவளின்  முகம் இன்னதென்று எடுத்துரைக்க இயலாத உணர்வொன்றைத் தாங்கியிருந்தன என்றால்... உள்ளமோ சரசரவென சரியத் தொடங்கியது. பரவசத்தில் தன் வசமிழந்து நின்றவளின் தோளில் படிந்தது நிலவனின் கரம். 
 
இன்னும் அவளால் தன் கண் முன்னால் நடப்பது எதையும் நம்ப முடியவில்லை. சட்டென நாவெழவில்லை அவளுக்கு... தொண்டையில் ஏதோ சிக்கியது போலானது.  உடல் முழுதும் பரபரவென ஓர் உணர்வு! விட்டால் கசியத் தயாராய் நிற்கும் அவ்விழிகள்..!! படபடவென தன்னிடம் கொட்டித் தீர்க்கும் அவ்விதழ்களின் மௌனம்.. வார்த்தைக்கேற்ப அசைந்தாடும் சிரமும் கரமும் அசையாது நின்ற விதமென மீராவின் மாற்றங்களை முழுதாய் உள்வாங்கியபடி நின்றிருந்த நிலவனின் அகம்தனில் பஞ்சுப்பொதி பயணம்..!!
 
சில நாட்களுக்கு முன்பு....
 
கோவாவில்
 
பௌர்ணமி நிலா பொழிந்ததில் அந்த மொட்டைமாடி முழுதும் அப்படியொரு வெளிச்சப் பரப்பு..!! 
 
வழமைபோல அன்றும் நிலவடியில் அமர்ந்திருந்தனர் நிலவனும் மீராவும். 
 
பௌர்ணமி இரவுகளில் இப்படி மொட்டை மாடியில் அமர்ந்து நிலவும் இசையும் ரசனையுமாய் கழிப்பது அவர்களது வழக்கம். 
 
அன்றும் அப்படிதான்! 
 
"நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி..." அவ்விடத்தில் தவழ்ந்து கொண்டிருந்தது. 
 
அவர்களது அபிமான பாடல் அது! ஏனோ இருவரும் ஒன்றில் ஒத்துப்போயினர். 
 
"அந்த உயிரே... வானு வர இடமிருக்கே... அப்படியே நம்மள அதுக்குள்ள கட்டியிழுக்கும்!" என்று முதல் முறை இருவரும் ஒருசேர சொல்லிவிட்டு முகம் மலர்ந்தது இன்றும் நினைவிலாடியது மீராவிற்கு.
 
 
"இந்த பாட்டு தொடக்கத்துல ராணி முகர்ஜி வாய்ஸ்ல வர்ற அந்த பெங்காலி கவிதை... அடுத்து கட்டியிழுக்கிற இசைனு எல்லாமே ஏதோ சொல்லுதுல...?" என்று நிலவை வெறித்தபடி அருகில் அமர்ந்திருந்தவனிடம் வினவினாள் மீரா.
 
 
சிறு மௌனத்திற்குப் பிறகு, " இந்த ஸ்கூல் டேஸ்லாம் ரொம்ப ஸ்பெஷல் இல்லையா மீமீ?" என்றவன் சம்பந்தமின்றி கேட்க அவளோ
 
"ம்ம்" என்று ஆமோதித்தாள்.

"நான் ஃபிஃப்த் படிக்கும்போதுதான்னு நினைக்கறேன்... எனக்கொரு டீச்சர் இருந்தாங்க.. அவங்க பேர் மெர்ஸி, அழகான பேர்ல?" பழைய நினைவுகளில் அமிழ்ந்திருந்தவனை கலைக்க மனமற்றவளாய் "ம்ம்" என்றாள் மெல்லிய குரலில்.
 
 
"ஏனோ, எனக்கு மெர்ஸின்ற பேர் மேல ஒரு தனி அபிமானம்! அதுவும் அதே பேர்ல அவங்கள பார்த்தப்போ... அவங்களும் அந்த பேரப் போலவே எனக்கு ஃபேவ்ரெட் ஆகிட்டாங்க... அவங்க செம அழகு மீமீ! அந்த காட்டன் சேரி,  காதோரத்துல மட்டும் லேசா சுருண்டு நிக்கற முடினு... அவங்க எல்லாரையும் எவ்ளோ அன்பா  பாத்துப்பாங்க தெரியுமா... ஏனோ அந்த மெர்ஸி டீச்சர் எனக்கு ஸ்பெஷல்!" என்றான் மலர்வாய்
 
 
"நீ அவங்கள அதுக்கடுத்து எப்பவாவது மீட் பண்ணியா?" 
 
"ஆமா மீமீ! லாஸ்ட் வீக்... அவங்க இன்னும் அப்படியேதான் இருக்காங்க அதே அன்பான வார்த்தைகள்! அதே காட்டன் சேரி! நான் அவங்க ஸ்டூடண்ட்னு சொன்னதும் எவ்ளோ சந்தோஷம் தெரியுமா? எனக்கு முதல்ல அவங்கள பார்த்துட்டு ஷாக்ல பேச்சே வரல.. அவங்க என் பேர நல்லா ஞாபகம் வச்சிருந்தாங்க மீமீ! நான் உங்க ஸ்டூடண்ட்னு சொன்னதும் ஒரு நிமிஷம் பார்த்தவங்க நீ நிலவன்தானேனு கேட்டப்போ... அப்படியோ காத்துல பறக்கிற ஃபீல்!" அனுபவித்து உரைத்தவனை வம்பிழுக்கவென்றே
 
"அப்போ நீ வேலை விஷயமா வெளியூர் போகல... ஃபிஃப்த் ஸ்டாண்டர்ட்லையே டீச்சர ஸைட்டடிச்சிருக்க நீ" என்க 
 
 
"உன்ன!" என்று அவள் தலையில் கை வைத்துத் தள்ளிச் சிரித்தவன், "ஏன் மீமீ.. உனக்கும் இப்படி யாராவது இருப்பாங்கல்ல?" என்க மீராவின் விழிகளோ நிலவனிடமிருந்து விலகி நிலவிடம் பதிந்தது.
 
 
கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவளின் மனதில் அவனது உதயமே..!!
 
"ம்ம்.. எதுல இருந்து ஆரம்பிக்கலாம்.. ஆஹ்! இதுலருந்து! அப்போ நான் ஆறாவதுல இருந்தேன். அன்னைக்கொரு நாள்.."
 
"ஹான் சொல்லுப்பா?" என்று வீட்டு வெளி முற்றத்தில் ஓரத்திலிருந்த சிமெண்ட் தண்ணீர் தொட்டியில் வசதியாய் சாய்ந்தவாறே அந்த இருவிரல் அகல குட்டி பட்டன் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தாள் மீரா. 
 அந்த பக்கம் அவர் என்ன சொன்னாரோ இங்கு இவள், "ஓஹ்.. சரி,  அப்போ கிளம்பிட்டு சொல்லு" என்று சிந்தனையாய் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டிக்கவும் தபதபவென அன்பு வெளியில் இருந்து அடித்துப் பிரண்டு ஓடிவரவும் சரியாய் இருந்தது. 
 
"ஹே! வெய்ட்.. வெய்ட்! அன்பு யாரு?" என்று தனது திடீர் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பணியில் இறங்கினான் நிலவன். 
 
பேச்சு தடைப்பட்டதில் அவனை உர்ரென சிறு பொய் கோபத்துடன் மூக்கு விரியப் பார்த்தவளோ, "அன்பு.. பக்கத்துவீட்டு குட்டிப்பையன்!" என்றவள் "இன்னொருவாட்டி interrupt பண்ணா சொல்லமாட்டேன்" என்க அவனோ,
 
"ஸாரி ஸாரி.. ஆனா எனக்கு எல்லாரையும் தெரியாதில்லையா.. இனி நடுவுல கேட்கல!" என்று பப்பி ஐஸோடு வேண்டுமென்றே பாவமாய் விழித்தான். 
 
"சர்ரீ.. சர்ரீ.. உடனே பப்பி ஐஸ காட்டிடாத! முடியல!" என்று முகத்தைத் திருப்பியவள் அந்தப்புறம் சிந்திய மென்புன்னகையை பாராமலே இவனால் உணர முடிந்தது. உணர்ந்தவனின் மனதில் காதலின் ஊர்வலம்..!! 
 
"ம்ம்.." என்று குரலை செறுமிக்கொண்டவள் மீண்டும் தொடங்கினாள். 
 
புயல் வேகத்தில் உள்ளே ஓடிவந்த அன்பு இவள் பின்னால் மறைந்துகொள்வதைப்போல இவள் தோளை இறுகப் பற்றியபடி நின்றுகொண்டு மூச்சுவாங்கப் படபடத்தான். திடீரென அவன் ஓடி வந்ததும், தன் பின்னால் ஒளிந்துகொள்வதையும் சிந்தனையாய் பார்த்திருந்த மீரா,
 
"ஏலே? என்னாச்சு? ஏன் இப்படி ஓடியார?" என்று விசாரிக்கவும் அவன் மூச்சுவாங்க ஒரு கையை ஓடி வந்ததால் நெஞ்சிலும் மறு கையை வெளியிலும் சுட்டிக்காட்டியபடி, 
 
"அவன்... அவன் என்ன அடிக்கவாரான்!" என கூறவும் இவளுக்கோ அகமெங்கிலும் திடீர் அக்காபாசம்! 
 "எவம்ல அது?" என்று இவனைப் பிடித்திழுத்தபடி அவள் வாசலுக்கு வரவும் 'அவன்' அவள் வீட்டு வாசலுக்கு வரவும் சரியாய் இருக்க, விடுவிடுவென அன்பை அடிக்க வந்தவனுகேகும் அன்புக்கும் நடுவில் நின்றவள் 'அவன்' நெஞ்சில் கை வைத்துத் தடுத்தபடி "ஹே! என்ன? என்னங்கேன்?" என்று முழு குரலில் 'என்ன தாண்டி அவன அடிச்சிருவியா நீ?' என்று நிற்க, முதலில் "என்ன? என்ன?" என்று அவளுடன் ஹை பிட்சில் அந்தாக்ஷரி விளையாடியவனோ அவள் மூன்றாவது முறையாய் "என்னங்கறேன்?" என்று சண்டைக்குத் தயாராவதுபோல் அழுத்திக் கேட்கவும் ஒரு கணம் நிதானித்தான். ஒரு நொடி அவளைப் பார்த்தான். பிறகு அவள் பின்னால் நின்ற அன்பைப் பார்த்து 
 
"வெளில வராமயா போயிருவ?" என்றுவிட்டுத் திரும்பி வந்த வேகத்தில் செல்ல இவளோ, 
 
"எங்க நீ கைய வச்சுதான் பாரேன்!" என்று வெளிப்படையாகவே உரத்த குரலில் சொல்லிவிட்டுத்  திரும்பியவள் அன்பிடம், 
 
"அவன் உங்கிட்ட வம்பிழுத்தா என்ட்ட சொல்லு!" என்றாள்
 
"சரிக்கா" மூச்சு இப்பொழுது சாதாரண நிலைக்குத் திரும்பியிருந்தது அன்பிடம்.  
 
"அதுதான் அவனுக்கும் எனக்குமான முதல் நினைவு. எனக்கு ஞாபகத்துல இருக்கறவரையில.  ஏன்னா ஒரே ஊர்ல... அவன சின்ன வயசுல பார்த்த ஞாபகமிருக்கு விளையாடின ஞாபகமிருக்கு,  ஆனா பேசின ஞாபகமில்லை... இந்த மொத்த சம்பவமும் ரெண்டு நிமிஷத்துக்கும் குறைவான நேரத்துல நடந்ததுனா நம்ப முடியிதா?" என்று மெல்லச் சிரித்தாள் மீரா. 
 
அவளையே சிறு முறுவலுடன் பார்த்திருந்த நிலவனின் முகத்திலும் அவள் சிரிப்பின் பிரதிபலிப்பு! 
 
சிறு முறுவலுடன் "ம்ம்.." என்றவன் அதே முறுவல் மாறா முகத்துடன் "நீ இன்னும் அவன் பேர சொல்லவேயில்லையே... என்ன ட்விஸ்ட் வச்சிருக்கற?" என்று கேட்டான் 
 
"ஹா..ஹா.. ட்விஸ்ட்லாம் இல்ல! அவன் பேரு கதிர்" 
 
"ஆஹான்... மிஸ்டர். சன்! அதான் கோவத்துல கொழுந்துவிட்டு எரிஞ்சிருக்காரு. அதுக்கடுத்து?" 
 
"ஹா.. ஹா... நீ வேற! கோவமா? அவனா? நோ வே! நான் சொல்லி முடிக்கும்போது நீயே முடிவு பண்ணிக்கோ" என்றவள் மீண்டும் நினைவுகளை மீட்டினாள்.


— “அன்பில் அவன் அலாதி” கதையிலிருந்து ஒரு பகுதி  

✍️ எழுத்தாளர்: Yagnya 

இந்த படைப்பு எழுத்தாளரின் அறிவுசார் சொத்து.



அடுத்த அத்தியாயம்

📖 இந்த தொடரின் அத்தியாயங்கள்

Comments