🌿 Featured Story

அன்பில் அவன் அலாதி

கோடைக்கால நினைவுகளின் கதை.

📖 Read Story

🎧 Audiobooks

Listen to our stories while travelling, resting or dreaming.

Enter Our Audio Story World

Romance, thrillers, healing stories & emotional journeys, now in audio form.

🌿 Fresh Updates

New chapters, articles, announcements & story updates.

அன்பில் அவன் அலாதி - 2

✍️ எழுதியவர் Yagnya

2



சம்பவம் - 2, அப்போ எனக்கு பன்னெண்டு வயசு.. அதாவது ஏழாங்கிளாஸ். 
 
அந்த ட்யூஷனே அல்லோல கல்லோலப்பட்டு கொண்டிருந்தது. ட்யூஷன் டீச்சரான ரோஜா அக்கா, பக்கத்து தெரு வரை ஒரு அவசர வேலையாகச் சென்றிருந்தார். 
 
புரிகிறது.. ஆனால் ரோஜா அக்கா ஒன்றும் பொறுப்பற்றவளில்லை! அவள் மிகவும் பொறுப்பான ஒருத்தரைத்தான் பொறுப்பில் வைத்துவிட்டுக் கிளம்பியிருந்தாள். 
 
என்ன, அப்படி அவள் "பொறுப்பென" நினைத்து மொத்த ட்யூஷனையும் பொறுப்பில் வைத்துவிட்டுப் போன ஆள்தான் இருப்பதிலேயே வால் இல்லா மந்தியென அவள் அறிந்திருக்கவில்லை. 
 
"ஷ்ஷ்! கத்தாதப்ள சோமி! அக்காவுக்கே அலாரமடிச்சிருவ!" என்று வாயில் ஒற்றை விரல் பதித்தபடி தன் முழு உயரத்திற்கும் எழுந்து நின்று மீரா அதட்டிய விதத்தில் ஒரு நொடி அவ்வறையில் ஒரு அமைதி அலை எழுந்து அது அடுத்த கணமே 
 
முத்துவின்,"அத என் பாட்டு புஸ்தகத்த கொடுத்துட்டு சொல்லுப்ள" என்ற குற்றச்சாட்டில் வெடி சிரிப்பு கிளம்பியது. 
 
மீண்டும் அங்கொரு சலசலப்பு எழ 
 
"உஷ் உஷ் உஷ்!" என ரோஜாக்கா சன்னலில் வைத்துவிட்டுச் சென்றிருந்த கம்பை எடுத்து மிரட்டி சத்தத்தை அடக்கியவள்
 
"முத்து அடுத்த தரம் நீயே பாடு!" என்று போனால் போகிறது என்பதுபோல வாக்களித்தவள் வரிசையாக அமர்ந்திருந்த எலிமெண்டரி ஸ்கூல் எலிக்குட்டிகளிடம் திரும்பினாள். 
 
"ம்ம்.. சோமி பாடுனத பாத்தீங்கள? அதே மாறி பண்ணனும்.. சுதி தப்புச்சு.. படிக்காம அழிச்சாட்டியம் பண்ணீங்கனு அக்காட்ட சொல்லிருவேன்! ம்.. ஸ்டார்ட்!" என்றவள் எழுந்து நின்று ஒரு கையில் குச்சியும் மறு கையை அசைத்தும் ஏதோ பெரிய சிம்பனி இயக்குவது போலப் பாவனை செய்ய, 
 
ஒரு பக்கம் எலிக்குட்டிகள் "டண்ட ணக்குன டணக்கு ணக்குன.. டண்டடா டணக்கு ணக்குன.. டண் டண் டண்" என கோரஸாசாக குரலெழுப்பிட 
 
மறுபுறம் சோமி என்ற சௌமியா தனது சுந்தர குரலால் அவளது பாடப் புத்தகத்தில் இருந்த ஒரு பத்தியை அந்த 'டண்ட ணக்குன' க்கு ஏற்ப பாடிட, 
 
முத்து அவளுக்கு நடந்த மோசடியை மறந்து தொடையில் தாளம் தட்ட தொடங்கவென அங்கொரு கச்சேரியே களைக்கட்டிக்கொண்டிருந்தது. 

இது எதற்குமே சம்பந்தமில்லாதவன் போலத் தூணுக்கு அருகில் முதுகைச் சாய்த்தபடி குத்துக்காலிட்டு அமர்ந்து, தன் புத்தகத்தை முகத்துக்கு நேராகத் தூக்கிப்பிடித்தபடி இந்த கூத்தைத் தவிர்க்க முயன்றுகொண்டிருந்த கதிருக்கு தனக்கு முன்னால் காகிதத்தில் தெரிந்த சந்திரகுப்த மௌரியரையும் தாண்டி 
 
சரிகம பதநிஸா.. ஏ கமான் கமான் ஹே ஜல்சா- என நின்ற வாக்கிலேயே கைகளில் இருந்த குச்சியை வைத்து ஆடிக்கொண்டிருந்த மீராவின் உருவமே தெளிவாய் தெரிந்தது.
 
என்னா ஆட்டம் ஆடுதா பாரு! ஒரு நாளில்ல ஒரு நாள் உனக்கு தீவாளிதாம்டீ!  
 
கீழுதட்டை மடித்துக் கடித்தபடி, வலது கை விரல்களை மடக்கி கட்டை விரலையும், சுண்டு விரலையும் மட்டும் நீட்டியபடி ஏதோ விசித்திர ஸ்டெப்கள் போட்டுக்கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு இறுக்கம் தளர்ந்து தன்னை மீறிச் சிரிப்பு வர, அதை அப்படியே புத்தகத்தில் மறைக்க முயன்றபடி மௌரியரை தன் முகத்துக்கு நேராக தூக்கிக்கொண்டான். 
 
திடீரென நிசப்தம்! அப்படியொரு அசாத்திய மௌனம்.. புயலடித்து ஓய்ந்த அமைதி. 
 
புருவம் சுருங்க கதிர்  புத்தகத்தைக் கொஞ்சமே கொஞ்சம் கீழிறக்க, இப்பொழுது அவனுக்கு முன்னால் எழுந்து நின்று ஆடிக்கொண்டிருந்தவளைக் காணவில்லை! 
 
நெற்றி நெரியப் புத்தகத்தை முழுதாக கீழிறக்கியவனுக்குச் சிரிப்பு பீறிக்கொண்டு வந்தது. 
 
அவ்வளவு நேரமும் ஆர்கெஸ்ட்ராவோடு ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தவள், பயங்கர பயபக்தியுடன் பழையபடி அவனுக்கு முன்னால் அமர்ந்து தீவிரமாகப் படித்துக்கொண்டிருந்தாள். அவள் மட்டுமில்லை! அவ்வறையில் இருந்த அனைவரிடமும் அதே பக்தி! அதே பவ்யம்! அதே படிப்பு! 
 
அது சரி.. பார்வை மெல்ல நிமிர்த்தினான். அவன் நினைத்தது போலவே ரோஜாக்கா வாசலில் செருப்பைக் கழட்டிவிட்டு வீட்டிற்குள் நுழைந்துகொண்டிருந்தார். 
 
அதானே பார்த்தேன்! 
 
விழியிடுங்க திரும்பியவனின் பார்வை தனக்கு முன்னால் இருந்தவளிடம் தாவ, அவன் பார்வையில் புத்தகத்தில் இருந்து பார்வையை நிமிர்த்தியவளோ 
"என்ன?" என்று தெனாவெட்டாக ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்ப 
 
அதில் கடுப்பானவனோ 
 
"அக்காட்ட சொல்லவா?" என்றான் அவளைப் போலவே பார்வையாலேயே கேட்டான். 
 
அதற்கு கொஞ்சமும் சளைக்காமல் நிமிர்ந்து நோக்கியவள் "முடிஞ்சா செய்" எனத் தாடையைத் தோள்பட்டையில் ஒரு வெட்டு வெட்டிவிட்டுத் திரும்பிவிட 
 
என்ன திமிரு இருக்கனும்.. 

அவளையே ஒரு நொடி உற்று நோக்கியவன் பிறகு இதழ்களில் மெல்லிய விஷம புன்னகையுடன் எழுந்து ரோஜா அக்காவிடம் செல்ல 
 
என்னதான் 'ஆமா இவன் சொல்லிட்டாலும்..' என எகத்தாளமாக வெளியில் பார்த்து வைத்தாலும் மீராவிற்கு உள்ளுக்குள் அள்ளுவிட துவங்கிவிட்டது. 
 
ஆத்தீ! நெஜமாவே ஆப்பு வச்சிருவானோ.. என்றவள் திக் திக் திக் திக்கெனப் பார்வையைப் புத்தகத்திற்கு மேலே உயர்த்தி பார்த்தும் பாராதது போலப் பாவலா செய்துகொண்டிருக்க 
 
அங்கு கதிர் ரோஜா அக்காவிடம் வெகு தீவிரமாக எதையோ பேசிக்கொண்டிருந்தான். 
 
ரோஜா அக்கா வேறு காதை அவனிடம் கொடுத்துவிட்டு பார்வையை அவ்வப்பொழுது இவள் புறம் திருப்பிக்கொண்டிருந்தார். 
 
இதில் சத்தமில்லாமல் இவள் புறம் சரிந்த சோமி வேறு "க்ம்.." என கனைத்து இவள் கவனம் திருப்ப முயல, ரோஜாக்காவின் பார்வை தன் மீதே நிலைத்துவிட்டதை திகிலாக உணர்ந்தவள், பார்வையைப் பக்கத்தில் திருப்பாது பாவாடையைக் கேடயமாக்கி சோமியின் தொடையில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள். 
 
"ஆ.." அலறப் போனவளின் தொடையை அழுந்த பற்றி விருட்டென ஒரு கீழ் பார்வையை வீச, அதற்கு மேல் சோமி ஏன் பேசப் போகிறாள்? 
 
ஆத்தீ! நம்ம ரோசா மலரு.. 
 
கமுக்கமாக தன் புத்தகத்தில் பார்வையைப் பதித்தபடி, அமர்ந்த வாக்கிலேயே இரண்டடி நகர்ந்து அமர்ந்தாள். 
 
இந்த மீரா பிள்ளைக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமில்லைங்கேன்! 
 
திடீரென காத்து வாங்கிய இடத்தை கவனித்த மீராவின் ஓரப்பார்வை சோமியைத் தேட, அவள் எப்பொழுதோ பத்தூரு தள்ளிப் பறந்திருந்தாள். 
 
விட்டா பொற வாசலுக்கே போயிருவா போல..
 
"மீரா" என்ற ரோஜா அக்காவின் அழைப்பில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். 
 
நெஜமாவே வத்தி வச்சுட்டானா? 
 
"க்கா?" முகத்தில் பதட்டத்தைத் துளியும் பிரதிபலிக்காமல் அவ்வளவு நேரமும் தீவிரமாகப் படித்துக்கொண்டிருந்தவளை அவர் அழைத்துக் கலைத்துவிட்ட பாவனை! 
 
நடிகையா! - கதிர் முகத்தில் சிறு எள்ளலுடன் மௌனமாய் நின்றிருந்தான்.
 
"இங்க வாப்ள" - ரோஜாக்கா 
 
அவனை முறைத்துப் பார்த்தவள் நொடியில் முகத்தை ஈஈஈ என மாற்றி
 
"இங்கேயே இருக்கேனே க்கா" என்று அசடு வழிய 
 
"ப்ச்! இங்க வாங்கம்ல" - ரோஜாக்கா விடுவதாகயில்லை! 
 
பரங்கிமண்டையன் பெருசா வச்சிட்டான் போலயே... 

கையிலிருந்த ஒற்றை புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு எழுவதையே ஏதோ பெரும் வேலை போலப் பொறுமையிலும் பொறுமையாக வைத்தவள் எவ்வளவு நேரம்தான் கடத்த முடியும்? 
 
வேண்டா வெறுப்பாக எழுந்தாள். ரோஜாக்கா வேறு சன்னலில் கிடந்த கம்பை எடுத்து என்னவோ பார்க்கத் தொடங்கினார். 
 
மீரா அரண்டுவிட்டாள். மெல்லப் பார்வையைச் சுற்றி அமர்ந்திருந்தவரிடம் வீச, ஒருவர்கூட தலையை நிமிர்த்தவில்லையே!
 
ஃப்ரூட் ப்ரெடுகளா! துரோகீஸ்.. 
 
மெல்ல எச்சில் விழுங்கியபடி அருகில் வந்தவளை விசித்திரமாகப் பார்த்தவர் காதோரம் ஏதோ கடித்ததென்று எதேச்சையாக கம்பிருந்த கையை தூக்க, அதில் மீரா துள்ளிக் குதித்து இரண்டடி பின்னால் நகர்ந்து 
 
"அப்பே!" என்று அலறிவிட, அந்த அலறலில் பதறி ரோஜாக்காவும் 
 
"ஆ!" என்று கத்தியபடி அமர்ந்திருந்த இரும்பு கட்டிலில் ஓரடி உள்நோக்கி நகர்ந்தார். 
 
இவர்கள் இருவரும் அலறிய அலறலில் அருகில் அமர்ந்திருந்த எலிமெண்டரி பொடிசுகள் ஒரே தாவாகத் தூணுக்கு பின்னால் தாவிவிட, நொடியில் அந்த இடமே களேபரமானது. 
 
முதலில் அதிர்ந்து விழித்த கதிருக்கு அடுத்த கணமே பெருஞ்சிரிப்பொன்று பொத்துக்கொண்டு வர, முயன்று அதை விழுங்கியவன் அதே அட்டென்ஷனில் அசையாமல் நின்றான் அத்தனை களேபரத்திலும்.
 
முதலில் சுதாரித்த ரோஜா அக்கா 
 
"என்னப்ள? என்னாச்சு?" என்று பொறுமையை மீட்க முயன்றபடி மீராவிடம் கேட்க. அதற்குள் நொடியில் தன் கிறுக்குத்தனத்தை உணர்ந்தவளோ 
 
"அ.. ப.. பல்லிக்கா! பல்லி! கட்டிலுக்கு பின்னாடி" என்று ஒருவாறு சமாளிக்க 
 
"ச்சே.. இவ்வளவுதானா?" ரோஜா அதற்குள் நிதானித்துவிட்டாள். 
 
"நம்ம விட்டா அதுபாட்டுக்கு போயிரும்.." என்று அவளுக்குச் சமாதானமாகச் சொல்லியவளின் கவனம் அப்பொழுதுதான்
 
தூணுக்கு பின்னால் நின்ற பொடிசுகளிடம் வந்தது. 
 
"அங்க என்ன பண்றீங்க? ஒழுங்கா வந்து உக்காந்து வீட்டுப்பாடத்த முடிங்க! இல்லைன்னா முடிக்க வரை விடமாட்டேன்" என்றொரு அதட்டல் போட, சரசரவென மீண்டும் அதே இடத்தில் வந்து அமர்ந்துவிட்டனர். 
 
"ராதா, உன் டைரிய கொண்டா" என்றவர் மீண்டும் மீராவிடம் திரும்பினார். 

"கதிர் சொன்னான். நீ ஏதோ புது விதமா படிக்கறியாமே.. பாட்டு பாடி. இந்த பொடிசுங்களுக்கு வாய்ப்பாடு ஏறவே மாட்டேங்குல இப்படி படிக்க வச்சா என்னனு ஐடியா சொன்னான்" என்று கேட்க 
 
மீராவின் பார்வை அஷ்ட கோணலானது! 
 
வாய்ப்பாடா? அது அவளுக்கே தெரியாதே.. வெளியில் சொன்னால் வெட்கக் கேடு. 
 
அதற்குள் ராதா கையில் தன் டைரியுடன் திரும்பி வர, ரோஜா கவனம் அங்கு திரும்ப 
 
இங்கு மீரா கதிரை பார்வையாலேயே பொசுக்கிக் கொண்டிருந்தாள். 
 
பழிவாங்கிட்டல்ல நீ! 
 
கதிர் அவள் பார்வை கணைகளைக் கவனிக்காதவன் போலத் தோளைக் குலுக்கிவிட்டு பார்வையை ஓட்டுக்கூரைக்குத் திருப்பிவிட்டான். 
 
புஸ் புஸ்ஸென அவள் காதுகளில் இருந்து புகை வராதா குறைதான்! 
 
இந்த ட்யூஷன் தொடங்கியே சில மாதங்கள் தான் இருக்கும். மீராதான் முதல் மாணவி. ஏனோ அவளுக்கும் ட்யூஷன்களுக்கும் என்றுமே ஏழாம் பொருத்தம்தான்! எங்குச் சேர்ந்தாலும் ஒரு மாதம்கூட தாக்கு பிடிக்கமாட்டாள். 
 
இம்முறை ரோஜா அக்காதான் உனக்கு ஏற்கெனவே தெரியுமே. நல்ல பழக்கம்தானே? அங்கு போய் படி என வீட்டில் சொல்லி அனுப்பிவிட, வேறு வழியின்றி வந்தவள் இரண்டாவது நாளே சோமியையும் அழைத்து வந்துவிட, அதற்குப் பிறகு ரோஜா ட்யூஷன் எடுக்கிறாள் என்ற வார்த்தை பரவியதில் இரண்டே மாதங்களில் வகை வகையாய் மாணவர்கள் அங்கே! 
 
எல்லாருமே சுற்றியிருக்கும் அதே பக்கத்துத் தெருக்களில் வசிப்பவர்கள்.  
 
அப்படிதான் கதிரும் அங்கு வந்து சேர்ந்தது. 
 
என்ன ஒரே வித்தியாசம். இவளை போலல்லாமல் அவன் மெய்யாகவே படிக்க வேண்டும் என்று வந்து சேர்ந்தவன். இவர்கள் கொட்டமடித்தாலும் அவனது வழமையான இடமான தூணுக்கு அருகில் அமர்ந்து அவன்பாட்டு படித்துக்கொண்டிருப்பான். 
 
இருவருக்கும் ஏற்கனவே அன்பு விஷயத்தில் முட்டியிருக்க, இருவருமே ஒருவரிடம் மற்றவர் பேச முயலவில்லை. முழுக்க முழுக்க முறைப்பு மட்டுமே! 
 
அதை தாண்டி இதைப் போலப் பார்வையிலேயே பாய்ந்து பாய்ந்து சண்டை போட்டுக்கொள்வர். 
 
"ம்ம்?" - ரோஜா அக்காவின் குரலில் தனது முறைப்பை மறைத்துக்கொண்டு கவனத்தைத் திருப்பினாள் மீரா. 

"அதொன்னுமில்லக்கா.. ஏதாவது ஒரு பாட்டு ட்யூன மட்டும் எடுத்துட்டு அதே ட்யூன்ல பாடத்தை மனப்பாடம் பண்ணா மனசுல நிக்கும்னு நானும் சோமியும்.." 
 
"ஓ.. எந்த மாதிரி பாட்டு?" 
 
சட்டென்று எதைச் சொல்ல? 
 
"அ.. இப்ப பூமி என்ன சுத்துதேவ வச்சு வேஸ்ட் வாட்டர் ப்ளாண்ட் க்வஸ்டின் ஆன்சர மனப்பாடம் பண்ற மாதிரி" என்று ஒருவாறு சமாளித்துவிட்டாள். 
 
"ஓ.. இது நல்லாருக்கே!" என்று ரோஜா அக்கா அமைதியாக எதையோ யோசிக்கத் தொடங்கிவிட, 
 
அப்பாடா! நம்மட்ட இருந்து கவனம் போயிட்டு.. 
 
மானசீகமாக ஒரு நிம்மதி பெருமூச்சுடன் மீரா கதிரை பார்த்து வெவ்வே என வக்கணம் கழித்துவிட்டு  தன் இடத்திற்குத் திரும்ப எத்தனிக்க 
 
உன்ன! என்றவனும் இவளை என்ன செய்ய என்று பரபரத்துக்கொண்டிருந்த சமயம் மீண்டும் ரோஜா அக்கா
 
"மீரா நில்லு" என்றாள் 
 
"என்னக்கா?" என்றவளின் முகத்தைப் பார்க்க வேண்டுமே! ரோஜாக்காவிடம் ஒரு குழைவு, பின்னால் நின்ற கதிரிடம் ஒரு முறைப்பு என, நொடிக்கு நொடி மாற்றிக் கொண்டிருந்தாள். 
 
"நேத்தே உங்க ரேங்க் கார்ட் பார்த்துட்டு சொல்லனும்னு நினைச்சேன். மீரா, சோமி.. இனி நீங்க ரெண்டு பேரும் மேத்ஸ் கதிர்கூட சேர்ந்து படிங்க" என்று அவள் தலையில் மின்னாமல் முழங்காமல் பெரிய குண்டை தூக்கிப் போட்டவள் கதிரிடம் 
 
"கதிரு, உனக்கு தான் கணக்கு நல்லா வருதே.. நீங்களாம் ஒரே செட்டுதானே. நீயே அவங்களுக்கு சொல்லிக்குடு" என்றுவிட 
 
அவ்வளவு நேரமும் அதிர்ச்சியில் இருந்த மீராவுக்கு அப்பொழுதுதான் கதிரின் முகம் கண்ணில் விழுந்தது. அவன் அவளைவிடப் பயங்கரமாக முழித்துக்கொண்டிருந்தான். 
 
ஓஹோ.. அவ்வளவு கசக்குதா? அப்போ சரி.. 
 
"சரி க்கா" என்று மீரா படு பவ்யமாக சொல்ல 
 
கதிரின் விழிகளில் கூர்மை கூடியது. 
 
ரைட்டு! ஏதோ ப்ளான் போட்டுட்டா... 
 
*** 
 
"ஓ மை கடவுளே! அவ்வளவு பெரிய வாலுப்பொண்ணா நீ!?" என்று வயிற்றைப் பிடித்துச் சிரிக்காத குறையாக வாய் நிறையப் புன்னகையும், விழி நிரம்ப ஆர்வமுமாகக் கேட்ட நிலவனை மௌனமாய் வருடியது அவள் பார்வை. 

பதிலேதுமின்றி தன்னையே பார்த்தவளைத்தான் அவனும் அசையாமல் பார்க்க, இருவருக்குமிடையில் இருந்த மௌனம் மெல்ல மெல்ல நிறையத் தொடங்கியிருந்த சமயம் 
 
"அப்ப உனக்கு நிஜமாவே டேபிள்ஸ் தெரியாதா?" என்று நிலவன் கேட்க 
 
அவன் அருகில் நெருங்கி தோளில் சாய வந்திருந்தவள், அப்படியே பட்டென அவன் முதுகில் ஒன்று வைத்துவிட்டுத் தள்ளி அமர்ந்தாள். 
 
"இனி சொல்லமாட்டேன் போ!" 
 
என்றவள் வீம்பு பிடிக்க 
 
"அச்சச்சோ! ப்ளீஸ் மீமீ! ப்ளீஸ் மீமீ! குழந்தை பையன ஆர்வமாக்கிவிட்டு அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.. மீதி கதைய சொல்லு ப்ளீஸ்ஸ்ஸ்..."  என்று மீண்டும் தனது பிரம்மாஸ்திரமான பப்பி ஐஸை காட்டி அவளை பக்காவாக மிரட்டிட 
 
கீழ் பார்வையில் அவனைக் கவனித்தவள் 
 
"ப்ச்! அப்படி வைக்காதனு சொன்னேன்! சொல்றேன்.. சொல்றேன்.." என சந்தோஷமாய் சலித்தாலும் திரும்பி அமர்ந்தாள். 


— “அன்பில் அவன் அலாதி” கதையிலிருந்து ஒரு பகுதி  

✍️ எழுத்தாளர்: Yagnya 

இந்த படைப்பு எழுத்தாளரின் அறிவுசார் சொத்து.




முந்தைய அத்தியாயம்  |  அடுத்த அத்தியாயம்

📖 இந்த தொடரின் அத்தியாயங்கள்