🌿 Featured Story

அன்பில் அவன் அலாதி

கோடைக்கால நினைவுகளின் கதை.

📖 Read Story

🎧 Audiobooks

Listen to our stories while travelling, resting or dreaming.

Enter Our Audio Story World

Romance, thrillers, healing stories & emotional journeys, now in audio form.

🌿 Fresh Updates

New chapters, articles, announcements & story updates.

அன்பில் அவன் அலாதி - 6 [Final]

✍️ எழுதியவர் Yagnya

 6



கொசுவத்தி சுருள் - 6, பௌர்ணமி நேரம், கோவா. 
 
"ஒன்னு தெரியுமா நிலா.. நான் யார என் எதிரியா, போட்டியா நினைச்சேன்னோ.. யார படாதபாடு படுத்தினேனோ.. கடைசில அவன்தான் எனக்காக நின்னான். 
 
என்னால இப்பவும் நம்ப முடியல.. நான் அடிக்கடி நினைச்சு பார்ப்பேன் தெரியுமா? நாம அவன்கிட்ட அப்படி என்ன பழகினோம்னு.. அவன் சொன்னா மாதிரி சின்ன வயசுல எப்பவோ சேர்ந்து வட்டு ஓட்டினத தவிர மத்த எதுவுமே சுமுகமான ஞாபகம் இல்ல.. இப்ப நினைச்சு பார்த்தா. இத்தனைக்கும் நான்தான் அவன அவ்வளவு வம்பிழுத்திருக்கேன்.. படிக்க விடாம படுத்தியெடுத்திருக்கேன். 
 
இப்ப நினைச்சா எனக்கே அசிங்கமா இருக்கும் தெரியுமா.. கதிர் வேற ஸ்கூல்ல படிச்சான். அவன் ஸ்கூல் அவ்வளவு பெரிய ஸ்கூல் கிடையாது. அவனே சொந்த முயற்சில கஷ்டப்பட்டு தேடி தேடி படிச்சு மார்க் வாங்குவான். உண்மையாவே அந்த வயசுல படிக்கனும்னு ஆசை பட்ட பையன். அவனை போய் தொல்லை பண்ணிருக்கோமேனு இப்ப தோணுது.. அந்த வயசுல அவ்வளவு யோசிக்க தோணலை.. 
 
நல்ல பையன் அவன். உன் மெர்ஸி டீச்சர் மாதிரி, எனக்கு என் மனசுல ஆழமா பதிஞ்ச ஒருத்தன். நான், நல்லாருக்கனும்னு வேண்டிக்கற ஒருத்தன். ப்ச்.. அவனுக்கு ஒரு நன்றிகூட சரியா சொல்லலைனு அடிக்கடி கில்டியா ஃபீல் ஆகும்.." 
 
அவ்வளவு நேரமும் வானைப் பார்த்தபடி கதை கதையாகச்  சொல்லிக்கொண்டிருந்தவள், தன்னை யாரும் நம்பவில்லை என்றபொழுது லேசாகக் கண்கள் கலங்கி பிறகு கதிர் வந்து கலாய்த்ததில் இதழில் முறுவல் இளகியென பல பாவம் காட்டி, காட்சிகளை அவன் கண்முன்னால் கொண்டு வந்திருக்க, அவளையே பார்த்திருந்தவன் எப்பொழுது அருகில் வந்து, அவள் முதுகை தன் மார்பில் சாய்த்தபடி கோழிக் குஞ்சாக அவளை தன் அணைப்புக்குள் இருத்தி ஆறுதலாக அரவணைத்திருந்தானோ! 
 
ஏதோ, அதெல்லாம் இப்பொழுது நடந்தவை போல அவன் அவளை சமாதானம் செய்ய முயன்றது சிரிப்பும் தித்திப்புமாய் உள்ளெழ, வசதியாக அவன் மீது சாய்ந்துகொண்டாள் அவள். 
 
"ஏன் மீமீ? அதுக்கடுத்து நீ கதிர பார்க்கலையா?" 
"ம்ம்.. அதுக்கடுத்து நான் ட்யூஷன் போல, சொல்லி வச்சது போல அப்பாவும் இங்க வரனும்னு சொல்ல, அப்படியே கொஞ்ச நாள்ல ஊருல இருந்து இங்க கிளம்பி வந்துட்டோமே.. இதெல்லாம் பெரிய காரணமே இல்லைதான்.. ஆனா அந்த வயசுல எனக்கு இதெல்லாம் ரியலைஸே ஆகல, அப்படி வளர்ந்து அதுக்கடுத்து எனக்கு ஆமால்லனு இது ரியலைஸ் ஆனப்போ எனக்கு திரும்பி போற சூழ்நிலையே இல்ல.. ம்ஹ்ம்" 
 
"அப்போ உன் மத்த ஃப்ரெண்ட்ஸ்?" 
 
"சோமி நான் ஊருக்கு கிளம்பற முன்னாடி ஒரு வாட்டி வந்தா.. 
 
அவ உன் ஸ்டிக்கர களவாண்டதுக்கு பழி வாங்க நீ எடுத்திட்டியோனு நினைச்சுதான் நான் அன்னைக்கு பேசலை.. அவளே அவ பேனாவ எடுத்து வச்சு இப்படி செய்வானு நான் எதிர்ப்பார்க்கலனு ஃபீல் பண்ணா.." என்று ஒரு நொடி மௌனித்தவள் 
 
"ஹரிணியும் பாவம்தான்ல.. அந்த வயசுல ஏதோ ஒரு ஆசைல சின்ன ஸ்டிக்கர எடுத்ததுக்கு எல்லாருமா அவளுக்கு பட்டப்பேரு வச்சு.. அவளுக்கும் கஷ்டமாதானே இருத்திருக்கும் அப்போ" என்று கேட்க 
 
அவள் தலை மீது தன் தாடையை வைத்து, இரு கைகளாலும் அவள் முழங்காலைப் பிடித்துக் கட்டிக்கொண்டவனோ 
 
"ப்ச்.. இது குழந்தைங்க சண்டை மீமீ, அந்த வயசுல என்ன புரிதல் இருந்திருக்கும் சொல்லு? நொடிக்கு நொடி ஏவோல்வ் ஆகறதுதானே மனுஷ இயல்பு" என்க 
 
"என்னவோபா.. எல்லாரும் இப்ப நல்லாருந்தா சரி" என்று பேச்சை டீலில் விட்டவள் அப்படியே பக்கவாட்டில் திரும்பி சாய்ந்துகொள்ள 
 
"ஹலோ மேடம்! நீங்க என்ன சோஃபா பெட்டா யூஸ் பண்றீங்கனு தெரியுதா?" என்றவள் காதுக்குள் நிலவன் ரகசியம் பேசிட 
 
அவள் அதை கண்டுகொண்டால்தானே? 
 
*** 
 
இன்று, மதுரையில். 
 
தன் முன்னால் அமர்ந்திருந்த டிப்டாப் இளைஞனையும், அவன் அருகில் அமர்ந்திருந்த அவன் மனைவியையும் கண்களில் நீர் பொங்கப் பார்த்துக்கொண்டிருந்தாள் மீரா. 
 
"கதிர்?" 
 
"அட! பரவால்லையே கண்டுபிடிச்சிட்டா!" என்றவளை ஆச்சரியமாகப் பார்த்தவன் 
 
"என்ன பாஸ்? சஸ்பென்ஸ்னு சொல்லிட்டு, சொல்லிட்டீங்க போலயே" என்று நிலவனைப் பார்த்து விழிகளை உருட்ட 
 
அதற்கு நிலவனோ,"அய்யயோ! சத்தியமா நான் சொல்லல ப்ரோ! அவளேதான் கண்டுபிடிச்சிருக்கா" என்றான் அவசர அவசரமாக. 
அதற்குள்,"ப்ச், விளையாண்டது போதும்! அவங்க அதுக்குள்ள எமோஷனல் ஆகிட்டாங்க பாருங்க!" என்று இருவரின் கவனத்தையும் மீரா பக்கமாகத் திருப்பிவிட்ட நித்யா, கதிரின் மனைவி
 
"பேசிட்டிருங்க நான் குடிக்க கொண்டாரேன்" என்று எழுந்து உள்ளே செல்ல, நடப்பது அத்தனையும் ஆவென்றுதான் பார்த்திருந்தாள் மீரா. 
 
அவளது பரங்கித்தலையன் கதிர் இப்பொழுது பெரிய கல்லூரியில் கணக்கு சொல்லிக் கொடுக்கும் பேராசிரியராம்! அவனுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை வேறு இருக்கிறதாம்! 
 
என்றாவது அவனை சந்திக்க நேர்ந்தால் அப்படி பேச வேண்டும், இப்படி பேச வேண்டும், இதையெல்லாம் சொல்ல வேண்டும், எதையெல்லாம் கேட்க வேண்டுமெனப் பல முறை கற்பனை செய்து பார்த்திருந்தவளுக்கு அப்படி ஒரு நாள் மெய்யாகவே வந்தபொழுது எதுவுமே செய்யத் தோன்றவில்லை! அவனை தன் பார்வை முழுதும் நிறைத்துக்கொள்வதை தவிர்த்து. 
 
ஆம்! நிலவன் இரு சொல்கிறேன் இரு சொல்கிறேன் என்று சொல்லிச் சொல்லியே அவளை இங்கு அழைத்து வந்திருந்தான். அழகானதொரு தோப்பு வீடு அது. சுற்றிலும் பச்சை பசேலென்றிருக்க, வரும் வழியில் தெரிந்த வீட்டிற்குப் பின்புறமிருந்த காய்கறி தோட்டமும், வீட்டிற்கு முன்னாலிருந்த முல்லை பந்தலிலுமாக லயித்தபடி 
 
"இது யார் வீடு நிலா?" என்று வந்தவளுக்குக் கதிரையும் நித்யாவையும் பார்த்ததும், சர்வமெங்கிலும் சடசடவென ஒரு மகிழ்நதி பாய அசைவற்று நின்றுவிட்டவளின் கை பரபரக்க, ஒரு கணம் செய்வதறியாது திகைத்தவள் அடுத்த நொடி நித்யாவை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள் 
 
அதில் முதலில் அதிர்ந்த நித்யா கதிரை ஒரு முறை கண்டுவிட்டு, மென் புன்னகையொன்றுடன் அவளைப் பதிலுக்குக் கட்டிக்கொண்டு அணைப்பை ஏற்க, அதற்குள் ஓரளவு உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டவளும் சின்ன வெட்க சிரிப்போடு விலகினாள். 
 
இம்முறை நித்யாவுக்கே சிரிப்பு வந்துவிட, மீராவைப் பிடித்துப்போனது. 
ஒரு வாரத்திற்கு முன்பு கதிர் மீராவைப் பற்றிச் சொல்லிவிட்டு அவளும் நிலவனும் வருவதாகச் சொன்னான்தான். ஆனால் அப்பொழுதுகூட நித்யாவிற்கு பெரிதாக எதுவும் தோன்றிவிடவில்லை. அவள்தான் அவனது மற்ற நட்புகளைப் பார்த்திருக்கிறாளே.. வீட்டிற்கு விருந்தாளி வருகிறார்கள் என்றளவிலே அவள் மனதளவில் தயாராயிருக்க, இந்த மீரா அவளையும் ஈர்த்துத்தான் விட்டாள். 
தான் நேசிக்கும் ஒருவர் மீது தன்னை போலவே அளவுகடந்த அன்பையும் மரியாதையும் இன்னொருவர் பொழிவதைக் காண்கையில்.. உள்ளுக்குள் எழும் உவகை அது! 
 
சட்டென மீரா அவளுக்கு நெருக்கமாகிப்போனாள். 
 
நித்யா பழச்சாறுடன் திரும்பி வர இங்கு, 
 
"நிஜமாவே நீ மேத்ஸ் ப்ரஃபஸரா கதிரு?" என்று ஆச்சரியம் பொங்கக் கேட்டவளைப் பார்த்தவன் 
 
"ம்ம்.. உனக்கு பாடமெடுத்த பொறவு இந்த உலகத்துல எவனுக்கு வேணாலும் பாடமெடுத்துரலாம்னு ஒரு மன தைரியம் வந்துட்டு.." என்றவன் மெய் போலவே தீவிரமாக பேசிட, அங்கு மீண்டுமொரு சிரிப்பலை எழுந்தடங்கியது. 
 
முறைக்க முயன்று தோற்றவளும் உடன் இணைந்து சிரித்துவிட்டு 
 
"நீங்களும் டீச்சர்னு நிலா சொன்னான்.."  என்று நித்யாவிடம் திரும்ப 
 
அவள்,"நீன்னே கூப்பிடு மீரா. நான் செகண்ட்ரிக்கு சயின்ஸ் எடுக்கறேன்" என்று சொல்லவும் தன் இரு கைகளாலும் மீரா வாயைப் பொத்திக்கொண்டு 
 
"அம்மாடியோவ்! ஒரே வீட்டுல சயின்ஸ் டீச்சரும் மேத்ஸ் ப்ரோஃபஸருமா? எங்க குட்டிப்பையன்?" என்றாள் தீவிரமாக தேடும் பாவனையில். 
 
"அவன் நீங்க வர முன்னாடிதான் தூங்க ஆரம்பிச்சான். எழற நேரந்தான்.. ஏன்?" என்று நித்யா புரியாமல் கேட்க 
 
மீரா,"ஆஹ்.. நாளைக்கு வாத்தீஸ் ரெண்டு பேரும் ஏதாச்சும் வம்பு பண்ணா இந்த அத்தைக்கு ஒரு குரல் குடுடானு சொல்லதான்" என்று கண் சிமிட்டி சிரிக்க 
 
அதற்கு உடனே கதிர்,"கிழிஞ்சது போ! அவன் ஏற்கெனவே ரெட்டை சுழி! இதுல நீ வேறயா.. டேன்ஜரஸ் காம்பினேஷன்! நித்தி நீ குகன இவ கண்ணுலயே காட்டாத சொல்லிட்டேன்!" என்று சத்தமாய் ரகசியம் பேசிட 
 
நிலவன்,"நீ விடு மீமீ! நாம மிதுவ வச்சு இதை டீல் பண்ணிப்போம்" என்று பதிலுக்குப் பேச 
 
"யாரது மிது?" என்றுதான் மூவருமே பார்த்திருந்தனர். 
 
அதற்கு அவன் மிராவிடம்,"நம்ம பொண்ணுதான்" என்றுவிட 
 
அதில் 'டேய் என்னடா சொல்ற?' என்றவள் முழிக்க அவனோ அவர்களிடம் திரும்பி 
 
"நீங்க பார்த்துட்டே இருங்க ப்ரோ!" என்று சவாலாகச் சொன்னவன் இவளிடம் 
 
"முதல்ல கல்யாணம் பண்றோம், அடுத்து மிதுவ வச்சு இவங்கள டீல் பண்றோம்" என்று தீவிரமாகப் பேசுவது போலப் பேச 
அவனை முறைக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தவளோ ரகசியக்குரலில் "நீ முதல்ல வெளில வா, உன்ன நான் டீல் பண்றேன்" என்றாள் பற்களைக் கடித்தபடி 
 
"இவ்வளவு ஓப்பனா ரகசியம் பேசறத இப்போதான் பாக்கறேன்" என்று கதிர் கௌண்ட்டர் போட 
 
நிலவன் அதற்கும்,"தேங்க்ஸ் ப்ரோ! எல்லாம் ப்ரஃபஸர்ட்ட இருந்து கத்துக்கிட்டதுதான்" எனத் திருப்பிவிட, அந்த சூழலே சந்தனத்தில் தோய்த்தெடுத்தது போலொரு சுகந்தம். 
 
இவர்களுக்கென விருந்தே தயாராகியிருந்தது.  சாப்பிட்டு முடித்துக்கொண்டு மெல்ல பொடி நடையாக வெளியில் முல்லை பந்தலை ஆராய்ந்தபடி வந்து நின்றாள் மீரா. 
 
"மீரா" என்ற குரலில் பின்னால் திரும்பிட, கதிர்தான் வாசலில் கைகளைக் கட்டிக்கொண்டு சாய்ந்து நின்றுகொண்டிருந்தான். 
 
"வீடு செம அழகா இருக்கு கதிர்" என்றவளின் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்! 
 
அதை உணர்ந்தவனின் இதழிலும் அதன் பிரதிபலிப்பு. 
 
"உன் வீடும் ரொம்பவே அழகா இருக்கு மீரா" என்றவனின் பார்வை ஜாடையாக உள்ளே நித்யாவிடம் தீவிரமாக எதையோ பேசி அவளுக்குச் சிரிப்பு மூட்டிக்கொண்டிருந்த நிலவனைத் தொட்டு மீண்டது.
 
அதற்கு தெரியும் எனும் விதமாய் மெல்லிய புன்னகையில் ஆமோதித்தவள் 
 
"தேங்க்ஸ் கதிரு" என்றாள் அத்தனைக்கும் சேர்த்து. 
 
இந்த 'தேங்க்ஸ்'தான் எவ்வளவு பெரிய அன்டர்ரேட்டட் வார்த்தை! 
 
விழியோரம் லேசாக மினுங்க நின்றவளைக் கண்டவன் "உனக்கும் தேங்க்ஸ் மீரா.. இறுக்கமான என் நாட்களை தெரியாமலே தளர்த்தினவ நீ" என்றவனின் பார்வை மீண்டும் நிலவனைத் தொட்டு மீண்டது. 
 
"ரொம்ப நல்ல மனுஷன். ஒரு வாரம் முன்னாடி எப்படியோ என் நம்பர பிடிச்சு தேடி கூப்பிட்டு பேசினாரு.. நீ என்ன பத்தி நிறைய சொன்னியாம்.. அடிக்கடி நீ எங்க இருப்ப, இப்போ எப்படி இருப்ப, நல்லா இருக்கியானு தோணிருக்கு, ஆனா இப்போ உறுதியா தோணுது.. நீ நிச்சயம் நல்லா இருப்பேனு. நீ ஏதோ என்னை அப்போ தொல்லை பண்ணிட்டதா நினைச்சு சொன்ன.. ஆனா உண்மைய சொல்லனும்னா எதிர்காலம் பயம்னு இறுகி கிடந்த என் மனச முதல்ல உடைச்சு இளக்கினது நீதான்.. நான் சிரிக்க முடியாத நேரங்கள்ல என்ன சீண்டி சிரிக்க வச்ச உன்ன அன்னைக்கு அழுதுட்டே போறத பார்த்துட்டு,  இப்ப மறுபடியும் இப்படி சந்தோஷமா பார்க்கறது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? பெஸ்ட் விஷஸ் மீரா!" என்று அவள் முன் கை நீட்ட
 
மெல்லிய விழிநீரில் மிணுமிணுத்த கண்களுடன் அவனைப் பார்த்திருந்தவள் அதை பற்றிக்கொண்டாள். 
 
"தேங்க்ஸ் கதிர்" 
 
தேங்க்ஸ் மெய்யாகவே அதிகம் உபயோகிக்கப்படும் ஒரு அண்டர்ரேட்டட் விஷயம்தான்!
 
*** 
 
அடுத்த நாளும் அங்கேயே தங்கியவர்கள், ஞாயிறு அதிகாலையிலேயே மீண்டும் தன் பயணத்தைத் துவங்கியிருந்தனர். 
 
அத்தனை பத்திரங்கள் சொல்லி இருவரும் வழியனுப்பி வைத்திருக்க, பொழுது விடியும் நேரம் சரியாக இடம் பார்த்து நிறுத்தியவன், தன் முதுகில் தலையை சாய்த்தபடி அமர்ந்திருந்த மீராவிற்கு செங்கதிரோன் வரும் திசையைச் சுட்டிக்காட்டிட, மறு வார்த்தையின்றி இறங்கியவளும், அவனுடன் சேர்ந்து நடந்தாள். ஐந்தடி தொலைவில் சென்று மண் தரையில் அமர்ந்தவர்கள் ஆதவனின் கரங்கள் மெல்ல மெல்ல வானில் படர்வதையும், காலை நேரப் பறவைகளின் பரிபாஷைகளையும், கறந்த பாலின் வாசத்தையுமென மௌனமாய் ரசித்துவிட்டு மீண்டும் வண்டியில் ஏறினர் 
 
மீரா தலைக்கவசத்தை மாட்டிக்கொண்டு "இப்போ எங்க?" என்று கேட்க 
 
அதில் கண்களைச் சுருக்கி, கண்ணாடி வழியாய் பின்னால் இருந்தவள் முகத்தைக் கண்டவன் 
 
"ம்ம்.. சைக்கிள் வாடகை விலை இப்போ எப்படி ஏறியிருக்குனு பார்க்கனுமே" என்று கண்சிமிட்ட அதில் மீரா விழிகள் விரிய அதிர்ந்து பிறகு அது மகிழ்வாய் உருமாறுவதை அவன் கண்ணாடி வழி சுவாரஸ்யமாக பார்த்தபடி கையில் க்ளௌஸௌ மாட்டிக்கொண்டிருக்க 
அவன் எதிர்பாராத சமயம் சட்டென ஒரு கையால் அவள் தலையில் இருந்த ஹெல்மெட்டை தூக்கியவள், மறுகையால் அவனைக் கழுத்தோடு சேர்த்து தன்னருகே இழுத்தபடி அவன் பிடரியில் அழுத்தமாக முத்தமொன்றை வைக்க, அதில் ஒரு நொடி அதிர்ந்து அப்படியே நின்றுவிட்டவன் பிறகு பெரிய புன்னகையுடன் பாதி திரும்பி அவள் ஹெல்மெட்டின் பட்டையை  ஒழுங்காக மாட்டிவிட 
 
"நான் என்ன குழந்தையா?" என்றாள் அவள் 
 
அதற்கு அவனும் அசராமல்,"ஏன் குழந்தைங்கள மட்டும்தான் பார்த்துக்கனுமா?" என்று கேட்க 
 
அதில் வெடவெடக்க தொடங்கிய உள்ளத்தை முகம் திருப்பி ஆதவனைப் பார்க்கும் சாக்கில் மறைத்தவள் 
 
"ம்ஹ்ம்.. ரோட்ட பார்த்து ஓட்டுங்க சாரே" என்றாள் பார்வையை திருப்பாமல்.  
 
சிரிப்பு மாறாமல் திரும்பி தனது தலைக்கவசத்தையும் மாட்டிக்கொண்டவன் அவளிடம் ஒரு இயர்பாடை மட்டும் நீட்ட, ஒரு கணம் புரியாமல் விழித்தவள் அதை வாங்கி காதில் மாட்டியதும் 
கண்கள் விரிய கண்ணாடி வழி அவனை நம்ப முடியாமல் பார்த்தவள் அப்பொழுதுதான் அந்த சாலையையும் கவனித்தாள்! 
 
"இது ஓகே தானே மீமீ?" என்று கண்களால் சிரித்தவன் வண்டியைக் கிளப்ப 
 
மீரா முகத்தில் மோதும் எதிர்க்காற்றை சுவாசித்தபடி இரு கைகளையும் தூக்கி, காற்றில் அலைபாய, கண்களை ஒரு நொடி மூடி ஆழ மூச்சிழுத்தாள். அன்பில் தொடங்கி அன்பிலே நிலைத்து நிற்பவனின் நேசம், நித்யமல்லியாய் நெஞ்சம் நிறைத்தது. 
 
செவிக்குள்... 
 
"நான் இனி காற்றில் நடக்கப் போகிறேன்" சிலுசிலுத்தது. 
 
***சுபம்*** 


— “அன்பில் அவன் அலாதி” கதையிலிருந்து ஒரு பகுதி  

✍️ எழுத்தாளர்: Yagnya 

இந்த படைப்பு எழுத்தாளரின் அறிவுசார் சொத்து.