🌿 Featured Story

அன்பில் அவன் அலாதி

கோடைக்கால நினைவுகளின் கதை.

📖 Read Story

🎧 Audiobooks

Listen to our stories while travelling, resting or dreaming.

Enter Our Audio Story World

Romance, thrillers, healing stories & emotional journeys, now in audio form.

🌿 Fresh Updates

New chapters, articles, announcements & story updates.

அன்பில் அவன் அலாதி - 5

✍️ எழுதியவர் Yagnya

 5


சம்பவம் - 5, ரோஜா அக்கா வீடு. 

 

தூத்து பெருக்கி புது கோலமிட்டிருந்த வாசல் இன்னமும்  ஈரத்தடங்களுடன் பளீரென்று திருத்தமாய் இருக்க. 

 

ஓ.. இன்னைக்கு விளக்கு கோலமா எனப் பார்வையிட்டபடி அதை மிதிக்காமல் தாவிக் குதித்துப் படியேறினாள் மீரா. 

 

சிறுக சிறுக ஆட்கள் வரத் துவங்கியிருந்த வேளை. இவள் சென்ற பொழுது கதிர் அவன் வழமையான இடத்தில் அமர்ந்து புத்தகத்திற்குள் தலையைக் கொடுத்தபடி இருக்க, சோமி அவனுக்குச் சற்று தள்ளி அமர்ந்து அறிவியல் புத்தகத்திலிருந்த ஒரு தாடிக்காரருக்கு மூக்கு கண்ணாடி போட்டுக்கொண்டிருந்தாள். 

 

நேற்று விழுந்ததில் பெயர்ந்திருந்த முட்டி விர்ரென பிடிக்க, காலை ஊன்றி நடந்தபடி சோமி அருகில் சென்று அமர்ந்தவளின் பார்வை சுற்றத்தை நோட்டமிட்டது. முத்து வரவில்லை.

 

இன்னொரு புறம் ஹரிணியும் அவளைச் சுற்றியிருந்த குட்டி கூட்டத்தையும் புருவம் சுருங்க பார்த்தவள் சோமியிடம் 

 

"என்ன திடீர்னு இங்க காத்தடிக்குது?" என்று கிசுகிசுக்க 

 

"என்னனு தெரியலை.. சொல்லாம கொள்ளாம நின்னவ திடீர்னு வந்து ரோஜாக்காட்ட ஏதோ பேசினாப்ள.. அவோளும் தலைய தலைய ஆட்டி உள்ள அனுப்பியாச்சு.." 

 

"ஓ.." என்றவளின் புருவம் நெரிய அவளைச் சுற்றி இருந்த கூட்டத்தை ஒரு பார்வை பார்க்க

 

சோமி,"அது ஏதோ புது பேனாவாம். அதுல எழுதினா மறைஞ்சுருமாம், பின்னாடி இருக்க லைட்டடிச்சா மட்டும் மை தெரியுமா. எங்க மாமா வங்கி குடுத்ததுனு அப்பல்ல இருந்து பீத்தல்ஸ் தான்" என்றாள் கடுப்பாக 

 

மீரா தோள்களைக் குலுக்கிவிட்டு தனது வழமையான கடமை போலக் கதிரை கடுப்படித்து கண்டமாக்குவது எப்படி என யோசிக்கத் தொடங்கிவிட 

 

அவ்வளவு நேரமும் ஹரிணியிடம் இருந்த பார்வை தன்னை நோக்கித் திரும்புவதைக் கவனித்தவன் அப்படியே அமர்ந்தவாக்கில் மெல்ல மெல்ல பின்னால் நகர்ந்து சுவரோடு சுவராக ஒதுங்க முயன்றான். 

 

அகராதி பிடிச்சவ! விழுந்துவாரியும் விடுதாளா பாரு.. 

 

"கதிரு..." என்ற பாசக்குரலை கயிறாகப் பார்த்துப் பம்மியவன் அவள் பக்கமே திரும்பாமல் அமர்ந்துவிட 


என்றுமில்லா திருநாளாய் மீரா அதற்கு மேல் அவனை வம்பிழுக்கவில்லை. ஒரு முறை தாடையை தோள்பட்டையில் இடித்து இதழ் சுளித்ததோடு சரி! அதற்குப் பிறகு அவள்பாட்டிற்கு வீட்டுப்பாடத்தைத் தீவிரமாக உட்கார்ந்து எழுதத் தொடங்கிவிட, அப்பொழுதைக்கு அங்கொரு அமைதி நிலவியது. 

 

அதற்கு அடுத்து ஒவ்வொருவராய் அனைவரும் வந்துவிட, அடுத்த அரை மணி நேரத்தில், அவ்வீடு முழுக்க பாடம் படிக்கும் சத்தம் மட்டுமே தியான இசை போல நிறைந்திருந்தது. கற்றலும் ஒருவித தியானம்தானே?

 

வெளியில் முழுதாக கருத்துவிட்ட வானை ஒரு பார்வை பார்த்தவளுக்கு எப்பொழுதடா வீட்டிற்குப் போவது என்றானது. ஏனோ அன்றைய நாள் அவளுக்கு அவ்வளவாக ரசிக்கவில்லை. கீழே விழுந்து அடிப்பட்டதாலோ என்னவோ சம்மணமிட்டு அமர்ந்திருப்பது வேறு முட்டியில் விர் விர்ரென பிடிக்க, பேசாமல் இதையே காரணமாகச் சொல்லிவிட்டு எஸ்ஸாகி விடுவோமா என்று இங்கு மீராவின் சிந்தனை ஓடிக்கொண்டிருக்க திடீரென ஒரு அழுகை குரல்! 

 

அதில் திடுக்கிட்டு அனைவரும் திரும்பிட, பீறியழ தொடங்கிய ஹரிணியை ரோஜாக்கா சமாதானம் செய்துகொண்டிருந்தாள். 

 

"ப்ச்.. அழாதப்ள! என்னனு பாக்கலாம். நான் கண்டுபிடிச்சு தாரேன்" என்று எவ்வளவோ சமாதானம் செய்ய 

 

அவளோ,"அதில்லாம போனா அம்மா தோலை உரிச்சுரும்" என மீண்டும் ஏங்கி ஏங்கி அழத் தொடங்கினாள். 

 

"என்னவாம் இந்த கோ.நோட்ஸுக்கு? பலத்த பர்ஃபாமன்ஸா இருக்கு.." என்று சோமி தன் காதை கடிக்கவுமே, தன்னை போலவே அனைவரும் நடப்பதைப் புரியாமல் பார்த்துக்கொண்டிருப்பது மீராவிற்குப் புரிந்தது. 

 

புருவம் நெரியப் புரியாமல் பார்த்துக்கொண்டிருக்க, ஹரிணியை ஒரு தம்பளர் தண்ணீரை குடிக்க வைத்துவிட்டு எழுந்து வந்த ரோஜாக்கா 

 

"இங்க பாருங்க பிள்ளையலா, ஹரிணியோட புது பேனாவ காணோம். அதை யாரவது எடுத்திருந்தா, இப்பவே ஒழுங்கா குடுத்திருங்க.. இல்லைன்னா ஒவ்வொரு பையா தேடி கண்டுபிடிச்சா அப்பறம் உங்க வீட்டுல சொல்ல வேண்டி வரும்" என்று சற்று மிரட்டலாய் அறிவிக்க அங்கிருந்த அனைவருமே என்ன என்றுதான் பார்த்தனர். 

 

அங்கிருந்ததே பதினைந்திலிருந்து இருபது பேர்தான். சும்மா மறைத்து வைத்து விளையாடுவது உண்டுதான் என்றாலும் இதுவரை யார் பொருளும் திருட்டெல்லாம் போனதில்லை. 

 

ஆனால் ஹரிணி சொல்லும் புதுப்பேனாவைக் கண்டவர்களுக்கு அதை நம்ப முடியாமலுமில்லை. 


அனைவரும் மௌனமாய் மற்றவர்களை அளவிட்டபடி அமர்ந்திருக்க 

 

ரோஜா அக்கா,"அப்ப வேற வழியே இல்ல! ஹரி.. ஒவ்வொரு பையா கொண்டு வா" என்றுவிட்டு அவரது இரும்பு கட்டிலில் அமர்ந்துகொள்ள 

 

அதே போல் கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு ஹரிணியும் வந்து பையைக் கேட்கையில் வேறு வழியின்றி கொடுக்கத்தான் வேண்டியிருந்தது. 

 

ஒவ்வொரு பையாக  உள்ளிருந்த புத்தகங்களை வெளியில் எடுத்துவிட்டு கவிழ்த்தப்படுவதை குண்டூசி விழுந்தால்கூட சத்தம் வருமளவு அமைதியுடன் அனைவரும் பார்த்திருந்தனர். 

 

கடைசியாக கதிரிடம் வந்தவள் கை நீட்ட 

 

"நான் பை கொண்டு வரல" என்றவன் அவள் கேட்பதற்கு முன்பே தனது அரை ட்ரௌசர் பைகளை வெளியில் எடுத்துக் காட்டினான். 

 

அடுத்ததாக மீராவிடம் வந்தவள் கை நீட்ட, எந்தவித சுவாரஸ்யமுமில்லாமல் தனது பையை மட்டும் தூக்கிக் கொடுத்தவள் அமைதியாக அமர்ந்திருக்க, அவளை ஒரு பார்வை பார்த்த ஹரிணி அதை ரோஜா அக்காவிடம் எடுத்துச் சென்று கொடுத்தாள். 

 

அவர் ஒவ்வொரு புத்தகமாக வெளியில் எடுத்து வைத்துவிட்டு, மற்ற பைகளை கவிழ்த்தது போல, தலைகீழாக கவிழ்த்திய நொடி 'சட்' என்ற சத்தத்துடன் கீழே விழுந்து தரையில் உருண்டோடியது அந்த மேஜிக் பேனா! 

 

ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை!

 

மீராவா எடுத்தது? 

 

விழுந்ததை கண்டு முதலில் பெரிதாக அதிர்ந்த ரோஜாக்காவின் முகம் அதிருப்தியில் கடுமையுறுவதையே பார்த்திருந்த மீராவுக்குத் தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. 

 

அவள் எங்கு எடுத்தாள்? இல்லையே.. நிச்சயம் இதில் ஏதோ சூது இருக்கிறது எனத் தோன்றிவிட, மீராவின் பார்வை ஹரிணியிடம் பாய 

 

இவளையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தவள் இவள் கவனம் அவளிடம் திரும்பவும் சட்டென தன் தலையைத் திருப்பிக்கொண்டாள். 

 

இவள்தான் என்னவோ செய்திருக்கிறாள்! என்பது அவளுக்கு நிச்சயமானது. 

 

அதற்குள் "நீ இப்படி பண்ணுவனு எதிர்ப்பார்க்கல மீரா" என்ற ரோஜாக்காவின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பியவளுக்கு ஒரு கணம் பேச்சே எழவில்லை. 

 

நான் என்ன செய்தேன்?

 

அப்பொழுதுதான் அந்த மாற்றத்தை உணர்ந்தாள். அங்கு எல்லாருமே அவள்தான் செய்திருப்பாள் என்பதை நம்பிவிட்டார்கள்! 

 

அனைவரும் அவளையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, அதில் அடிப்பட்டுப்போனவளின் விழிகள் இந்த குழியில் இருந்து நீந்தியெழ பரிதவிக்க 


"நான் பண்ணல-" என்று தொடங்தும்பொழுதே கோபமும் அழுகையும் ஒரு சேர எழுந்து குரல் உடைய துவங்கியது.

 

"நீ பண்ணலன்னா எப்படி உன் பைக்குள்ள வந்தது? களவாணித்தனம் பண்ணதுமில்லாம பொய் வேற சொல்ற-" என்று ரோஜா அக்கா கோபத்தில் அதட்ட 

 

"அய்யோ! நிஜமாவே நான் எடுக்கல!" என்றவளின் விழிகள் யாரேனும் தன்னை நம்புகிறார்களா எனச் சுற்றி வர.. ஏமாற்றமே மிஞ்சியது. 

 

தலையை குனிந்தபடி இவள் பார்வையைத் தவிர்த்த சோமியைக் கண்டவளுக்கு மனம் விட்டுப்போயிற்று! இவள்கூட என்னை நம்பவில்லையா? 

 

இவ்வளவு காலமும் அக்கா, நட்பு, தம்பி, தங்கையென இவர்களுடன் சேர்ந்து எவ்வளவு அரட்டை அடித்திருப்பாள்? எவ்வளவு சிரிக்க வைத்திருப்பாள் இவர்களை? ஆனால் இதில் ஒருவர்கூட தன்னை நம்பவில்லையா? என்ற ஏமாற்றம் தந்த வலி கோபமாய் உருமாறியது.

 

இங்கு தனக்காகப் பேச யாருமில்லை, நான் இங்குத் தனியாள் என்பதை உணர்ந்தவளின் தாடை இறுக, அழுகையை விழுங்க முயன்றபடி, வர மறுத்த குரலை இழுத்துப்பிடித்து முழு இதயத்துடன் அழுத்தமாய் வந்தது அவள் குரல்.

 

"நான் ஏன் எடுக்கனும்? எங்கப்பாட்ட கேட்டா இந்த மாறி நாலு பேனா வாங்கி தருவாரு.. நான் இவ பேனாவ எடுத்தேனா? யார் என்ன சொன்னாலும் நம்பிருவீங்களா நீங்க? அப்போ இவ்வளவு நாளும் மீரா பிள்ள மீரா பிள்ளனு சொன்னது எல்லாம் பொய்! எல்லாமே பொய்! என்கிட்ட ஒரு வார்த்தை கேட்கனும்னு கூட தோணலைல.. நான்தானு எடுத்தேனு முடிவே பண்ணிட்டீங்க.." என்றவள் முகம் சிவக்க, ஏங்கி அழுத குரலில் இழுத்து பேசுவதைக் கண்ட ரோஜா அக்காவிற்கே ஒரு கணம் தான் செய்தது தவறோ எனத் தோன்றத் தொடங்கிவிட்டது. 

 

அவர் செய்வதறியாது நிற்க இங்கு மீரா தனக்காக தான்தான் நிற்க வேண்டும் எனப் பேசிக்கொண்டே போக, 

 

"நாளைக்கு நான் செய்யலைனு தெரிஞ்சா என்ன செய்வீங்க?" 

 

என்றவளின் வார்த்தை தடிக்கத் தொடங்குவதற்குள் 

 

"அப்படியெல்லாம் பேசாதப்ள!" என சற்று உரிமையான அதட்டலாக எழுந்த கதிரின் குரலில் மீரா ஒரு நொடி அதிர்ந்து நிறுத்த 


அவன் அதற்குள் ரோஜா அக்காவிடம் திரும்பி,"ஏன்க்கா.. அவள பத்திதான் நமக்கு தெரியுமே.. சேட்ட செய்வாளே தவிர இதெல்லாம் செய்யக்கூடிய ஆள் இல்லைக்கா.." என்று பொறுமையான குரலில் புரியவைக்க முயல்வது காதில் விழுந்தாலும் மீரா தலையை நிமிர்த்தாமல் தன் கைகளை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.

 

வேண்டாம்.. இனி இங்கு இருக்க வேண்டாம்! எங்காவது ஓடிவிட வேண்டும்.. வீட்டிற்குப் போய்விடலாம். இனி இந்த ட்யூஷனும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்! 

 

தனது என்று நினைத்த எதுவுமே தனதில்லை என்ற நிதர்சனம் முகத்தில் அறைந்ததில் மொத்தமாக ஆடிப்போயிருந்தவள், வேறு எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை. 

 

ஒரு முடிவெடுத்தவளாக விருட்டென எழுந்து சென்று கீழே கிடந்த தன் பொருட்களைப் பைக்குள் அள்ளி திணித்தவள், 

 

"நான் இனி வரல" என்று காற்றுக்குரலில் அழுத்தமாய் சொல்லிவிட்டுத் திரும்பியும் பாராமல் வெளியேறினாள். 

 

இருள் சூழ்ந்த தெருவில், ஆங்காங்கே வெள்ளை வெளிச்சத்தைப் பொழிந்தபடி நின்ற தெரு விளக்குகள் பாதையை காட்டிக்கொண்டிருக்க, புத்தகப் பையை ஒரு பக்க தோளில் போட்டபடி உலகம் மறந்து நடந்துகொண்டிருந்தவளை யாரோ பிடித்திழுத்தனர். 

 

யாருமில்லாத தெருவில் யாரது? 

 

திடீரென பின்னாலிருந்து இழுக்கப்பட்டதில் சட்டெனத் துளி பயம் வந்து ஒட்டிக்கொள்ள 

 

அய்யோ இது காத்து கருப்பு தெருவாச்சே என்றெழுந்த திடீர் நினைவில், மற்றது ஒரு கணம் மறந்துவிட 

 

திரும்பி பாக்காம போயிரனும்! என்று மனதுக்குள் உருபோட்டபடி அவள் இன்னொரு அடி எடுத்துவைக்க.. ம்ஹூம்! ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை!

 

கருப்பா காப்பாத்து கடவுளே காப்பாத்து! காப்பாத்து காப்பாத்து! என மெல்லிய முணுமுணுப்புடன் அவள் மெல்லத் திரும்பிட... 

 

"ஹா ஹா ஹா.. பெரிய இவ மாதிரி வீராப்பா வந்த.. இப்ப என்னன்னா இப்படி எருவுத" 

 

ஃபூ! நீதானா.. பரங்கித்தலையா! 

 

தன் கலவரத்தைக் கண்டு கலகலவென சிரித்த கதிரை ஒரு முறை முறைத்தவள் 

 

"அது மனுஷாள்ட பேசலாம், பேய் பிசாசுக்கிட்ட பேச்சு வார்த்தையா நடத்த முடியும்?" என்று இதழ் சுளித்தவளைக் கண்டவனுள் சிறு நிம்மதி. 

 

அவள் அப்படி அழுதபடி கிளம்பியதும் பதறி அடித்துக்கொண்டு தன் சைக்கிளை எடுத்து வந்திருந்தான். 


அவன் எவ்வளவு கூப்பிட்டும் அவள் திரும்பாமல் நடந்துகொண்டே இருக்க, கதிர்தான் வேறுவழியின்றி அவளது புத்தகப் பையை ஒரு கையால் பிடித்து நிறுத்தியது. 

 

"கைய எடுல" என்று தன் பையை அவன் பிடியில் இருந்து விடுவித்துக்கொண்டவள் மீண்டும் தன் நடையைக் கட்ட, இம்முறை எந்தவித வாக்குவாதமும் இன்றி சைக்கிளில் இருந்து இறங்கி மெல்ல உருட்டியபடி அவளுடன் இணைந்து நடந்தான். 

 

மௌனமாய் தன்னருகில் சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்த கதிரை கண்ட மீராவிற்குக் கவனம் இப்பொழுது முழுதாக இங்கேயே திரும்பிவிட அப்படியே நின்றாள் 

 

அவள் நின்றதும் அவனும் நின்றுவிட 

 

"இப்ப ஏன் என்கூடவே வர?" என்றவள் நிற்க 

 

"ஓ இது உன் தாத்தா வீட்டு தெருவுனு எனக்கு தெரியாம போச்சே" என்றவனும் அசராமல் நின்றான். 

 

அதிசயமாக அதற்கு எந்தவித பதிலும் தோன்றாமல் போக, வெறுமனே பல்லை மட்டும் கடித்துக்கொண்டவள் மீண்டும் நடையைக் கட்டினாள். 

 

அவளையே பார்த்தபடி வந்துகொண்டிருந்தவன் மெல்லப் பேச்சைத் தொடங்கினான். 

 

"ஏப்ள.. மீரா, இதெல்லாம் பெருசா எடுக்காத, உனக்குத்தான் அக்காவ பத்தி தெரியும்ல? சட்டுனு பேசிடுவாவோளே தவிர மனசுல தப்பா நினைக்க மாட்டாவோ.. அந்த ஹரிணி ஓன்னு அழவும் யோசிக்காம பேசிட்டாவோ.."  என அவன் சுமுகத்திற்கான வழிபார்க்க 

 

ஒரு கணம் அப்படியே நின்றாள் மீரா. 

 

கோவப்பட்டாளோ?  என்றவன் கீழ் பார்வை பார்க்க அவளோ 

 

"நீ ஏன் எனக்கு ஏத்துட்டு பேசின?" என்று அவன் சற்றும் எதிர்பாராத திசையில் சென்றாள். 

 

அவள் இதைப்பற்றிப் பேச விரும்பவில்லை என்பதை உணர்ந்தவனும் பெருமூச்சொன்றுடன்

 

"ம்ம்.. நீயாவது களவாணித்தனம் பண்ணுறதாவது! உன்ன வட்டு ஓட்டிட்டு சுத்தின காலத்துல இருந்து பாக்கேனே.. குரங்குத்தனம் வேணா பண்ணுவியே தவுத்து களவாணித்தனமெல்லாம் பண்ணுத நேக் உனக்கு கிடையாது.. ஒரு குச்சியக்கூட திருட்டுத்தனமா திங்க தெரியாம அடிவாங்கின ஆளு" என்றவன் அவள் காலை வாரிவிட 

 

இடுப்பில் இரு கைகளையும் பதித்தபடி அவனைத் திரும்பி முறைக்க முயன்றவளுக்குத் தன்னை மீறித் துளி சிரிப்பு வந்துவிட 

 

"போ லே பக்கி!" என்றுவிட்டு நடக்கத் தொடங்கிவிட்டாள்.

"இருப்ள! தனியா போனா காத்து கருப்பு அடிச்சிடப்போவுது!" என அதற்கும் அவளை வாரியபடியே தன் சைக்கிளை வேகமாக உருட்டிக்கொண்டு அவள் பின்னால் ஓடினான் கதிர். 

— “அன்பில் அவன் அலாதி” கதையிலிருந்து ஒரு பகுதி  

✍️ எழுத்தாளர்: Yagnya 

இந்த படைப்பு எழுத்தாளரின் அறிவுசார் சொத்து.



முந்தைய அத்தியாயம்  |  அடுத்த அத்தியாயம்

📖 இந்த தொடரின் அத்தியாயங்கள்