அச்சு பேபி லவ் யூ
கடைசி கட்ட திருத்தங்களை செய்து முடித்து விட்டு திருப்திகரமாக வந்திருக்கிறதா என்று பார்த்தேன். ஓவியம் பார்க்க திருப்தியாக இருந்தது. ப்ளேயரில் ஓடிக் கொண்டிருந்த எம்.எஸ்ஸின் குரல் தேனாக இனித்தது. நான் இப்படித்தான், வரையத் தொடங்கினால் எனக்கு இசையும் தனிமையும் மட்டும் போதும். காலநேரம் கடந்து என்னை மறந்து போவேன். மணி என்ன என்று பார்த்தேன். மணி மதியம் மூன்று என்றது சுவர் கடிகாரம். வெளியே மழைவரும் போல் இருட்டிக் கொண்டிருந்தது. ஊதக்காற்றடித்து சிலிர்ப்பை உண்டாக்கியது.
நேரம் போனதே தெரியவில்லை. அச்சு ஃபோன் செய்தானா என்று மொபைலை எடுத்துப் பார்த்தேன். எந்த அழைப்பும் இல்லை. வழக்கமாக இந்நேரத்துக்குள் நாலு முறையாவது அழைத்திருப்பானே. அட்லீஸ்ட் பத்து மெஸெஜ்களாவது அனுப்பியிருப்பானே! இன்று என்ன ஆச்சு? நல்ல வேளை இன்று கொஞ்சம் அவன் தொணதொணப்பின்றி வேலை செய்ய முடிந்தது. இல்லைன்னா சாப்டாச்சா, தூங்கினியா, பப்பிக்கு சாப்பாடு வச்சியா? இப்படி எக்கச்சக்கமா கேள்வி கேட்டு என்னை படுத்தி எடுத்திடுவான்.
அவ்வளவு அக்கறையா என்ற கேள்வி வரும். அக்கறை தான். ஆனால் எதுவுமே அளவுக்கு மீறினால் நல்லதல்லவே. என்னை என்னவோ சிறுபிள்ளை மாதிரி நடத்தப்படுவதாகத் தோன்றிவிடும். வெளியே எங்கு சென்றாலும் கூடவே ஒட்டிக் கொண்டு வரும் குணம் எரிச்சலைக் கொடுக்கும். காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கப் போவதற்கு முன்பு வரை எப்போதும் ஒரே தொணதொணப்பு. எப்போதடா அம்மா வீட்டிற்கு போவோம் என்று எண்ணத் தொடங்கியிருந்தேன். எதையும் சுதந்திரமாக யோசித்து முடிவெடுத்துப் பழககயிருந்த என்னால் இப்போது எதற்கென்றாலும் அச்சுவையே எதிர்பார்ப்பது எரிச்சலைத் தந்தது.
அச்சு என்ற அச்சுதனுக்கும் சத்யமித்ராவாகிய எனக்கும் திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் முடிந்திருந்தது. இந்த மூன்று மாதங்கள் எனக்கு மூன்று யுகங்களாகவே கழிந்தது. எதற்கெடுத்தாலும் ஆர்க்யுமெண்ட். எவ்வளவு சண்டை. ஒற்றை பிள்ளையாய் வளர்ந்த என்னால் அச்சுவிற்கு அட்ஜெஸ்ட் பண்ணுவது கஷ்டமாக இருந்தது. எப்படித்தான் மற்றவர்கள் வருடக்கணக்கில் அட்ஜெஸ்ட் செய்து வாழ்கிறார்களோ? நினைக்கையிலே மூச்சு முட்டியது.
பொழுதைப் போக்குவதற்காக டீவியை ஆன் செய்தேன். ப்ரேக்கிங் நியூஸ்ஸில் பார்த்த செய்தி உயிரை உறைய வைத்தது. நகரத்தின் மையப் பகுதியில் இருக்கும் மாலில் குண்டு வெடிப்பு. சில நூறு பேர் மரணம். ஐயோ இதே மாலுக்கு அருகில் தானே அச்சுவின் அலுவலகம் இருக்கிறது. இதயம் படபடக்க உடனே அச்சுவின் எண்ணிற்கு அழைத்தேன். ஃபோன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு தான் வந்தது. எனக்கு அந்த அறையே தட்டாமாலை. சுற்றியது. கண்கள் இருட்டின். ஐயோ அச்சு! உனக்கு என்ன ஆச்சு?
செய்வதறியாது முழித்தேன். உறைந்து போன மூளை வேலை செய்ய மறுத்தது. என்ன செய்வேன் அச்சு உன்னை எங்கே போய் தேடுவேன். அச்சுவினுடைய அலுவலக எண்ணிற்கு அழைத்துப் பார்த்தேன். தொடர்ந்து பிஸியாகவே இருந்தது. என்ன செய்வது? சற்று நேரம் பொறுத்து முயற்சி செய்து பார்க்கலாமா? அந்த ஏஸி குளிரிலும் எனக்கு வியர்த்து வழிந்தது.
'அச்சு சீக்கிரம் வந்திருடா. நீயில்லாமல் நான் இங்கு ஒருநாளும் தனியாக இருந்ததில்லை. ஒருமுறை அலுவலக வேலையாக வெளியூர் செல்ல வேண்டியிருக்கையில் என்னைத் தனியாக விட்டுச் செல்ல மனமின்றி நீ மறுத்த பொழுது உன்னைக் கிண்டல் செய்தேனே! என்னால் நீ இல்லாமல் இங்கு தனியாக இருக்க முடியாது அச்சு. வந்துவிடு.'
'தினமும் பெட்டில் பெரும்பகுதி இடத்தை பிடுங்கி கொள்கிறாய் என்று உன்னிடம் வம்பிழுத்திருக்கிறேன். நீ இல்லாமல் போனால் என்னால் எப்படி தனித்திருக்க முடியும். வந்திருடா அச்சு.'
'எனக்கு நன்கு தெரியும் உனக்கு காரம் என்றால் ஆகாதென்று. வேண்டுமென்றே காரசாரமாக உணவு சமைத்திருக்கிறேன் உன்னைக் கடுப்பேற்றவேண்டுமென்றே. இனி யாரிடம் அப்படி விளையாட முடியும். வந்திருடா அச்சு'
காலை நேர வாக்கிங், வார இறுதியில் நெடுந்தூர கார்ப்பயணம், பின்னிரவுகளில் பார்த்த பேய் படங்கள் இவையெல்லாம் அச்சு நீ இல்லாமல் ரசிக்காதே. உனக்கு நான் புடவையை கட்டிக்கொண்டு கொண்டால் பிடிக்கும் என்று தெரிந்தும் வேண்டுமென்றே முக்கால் பேண்ட்டும் டீ ஷர்ட்டுமாக உன்னைக் கடுப்பேற்றியதெல்லாம் தப்பு தானடா. வந்திருடா அச்சு.
அக்கா உன்னை விட அத்தான் தான் அழகா பாடம் சொல்லித்தராங்க என்று என் சித்தி மகள் உன் பெருமை பேச இரண்டு நாள்கள் சண்டையிட்டு உன்னிடம் பேசாமலிருந்தேனே. என்ன மடத்தனம். இனி உன்னிடம் சண்டையே போட மாட்டேன் டா. வந்திருடா அச்சு.
நேரம் போவது தெரியாமல் அழுது புலம்பிய படி இருந்த நான் காலிங் பெல்லின் சத்தத்தில் நாலுகால் பாய்ச்சலில் வாயிலை நோக்கி ஓடினேன். வழக்கமாக யார் என்று பீப்ஹோல் வழியாக சோதித்து திறக்கும் நான் யாரென்றும் பாராமல் கதவைத் திறந்தேன். வியர்வை வழிய என்னையே பார்த்தபடி நின்றது என் அச்சு. அவன் என்ன பேச வருகிறான் என்று கூட பாராமல் அவனை இறுக அணைத்துக் கொண்டு அழுது தீர்த்தேன். வழக்கமான சண்டையையும் பஞ்சாயத்தையும் எதிர்பார்த்து வந்தவன் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கியபடி முகமெங்கும் முத்த மழை பொழிந்து லவ்யூ டா அச்சு பேபி என்ற என்னை வீடு மாறி வந்துவிட்டோமோ என்று விநோதமாகப் பார்த்து வைத்தான் அச்சுதன்.
— “அச்சு சீரிஸ்” சிறுகதை தொகுப்பிலிருந்து ஒரு கதை
✍️ எழுத்தாளர்: கௌரி
இந்த படைப்பு எழுத்தாளரின் அறிவுசார் சொத்து.
