🌿 Featured Story

அன்பில் அவன் அலாதி

கோடைக்கால நினைவுகளின் கதை.

📖 Read Story

🎧 Audiobooks

Listen to our stories while travelling, resting or dreaming.

Enter Our Audio Story World

Romance, thrillers, healing stories & emotional journeys, now in audio form.

🌿 Fresh Updates

New chapters, articles, announcements & story updates.

ராதா ரகஸியா - 1

✍️ எழுதியவர் Yagnya


 ரகஸியம் - 1

 
திருமண வாழ்க்கைன்றது மற்றவர்களுக்கு எப்படியோ தெரியல.. ஆனா என்னைப்பொருத்தவரை அது sleeping next to someone who could potentially kill you. அப்பேர்பட்ட முயற்சிகளை நான் எடுக்கத் தயாராக இல்லை! அவனைப் பார்க்கும் வரையில்.. என்னை எந்தவிதத்திலுமே காயப்படுத்தாத, ஏன் அப்படி நினைத்துக்கூட பாராத ஒருவனைப் பார்க்கும்வரையில்..
 
சுவர்க்கோழியின் சத்தத்தை ஒத்திருந்த பூச்சிகளின் ரீங்கரிப்பும், பறவைகளின் கீச்சு ஓசையும் பன்மடங்காய் அவள் செவி வழி நுழைந்து அடிவயிறு வரை பயணிக்கும் ஜில் உணர்வு கீற்றின் ஒன்றால் வெடுக்கென சிலிர்த்தடங்கியது அவள் தேகம். மழையும் குளிரும் சேர்ந்து மூடு பனி பூசியிருந்த பாஸன்ஜர் ஸீட் கண்ணாடியில் தலை பதித்திருந்தவள் உறங்கியிருக்க வேண்டும்! விழிப்புத்தட்டியதும் விழிகள் அலைபாய்ந்தன.. கார் ஏதோவொரு மலைப்பாதையின் துவக்கத்தில் நின்றிருந்தது. ஆனால், சற்று முன்பு அவள் எதிரே மரக் கம்பத்தின் கயிற்றைக் கட்டி மறித்தபடி நின்ற, பாதுகாவலன் தோற்றத்தில் இருந்த பையனைக் காணவில்லை! கம்பத்தையும்தான். 
 
கண்ணுக்கெட்டிய தூரம்வரை கரும்பச்சை. நீண்ட நேரம் தூங்கிப்போனாளோ? பொறுமையாகவே புத்தியில் உரைக்கிறது வண்டி ஒரே இடத்தில் நிற்பது. அந்த அசாத்திய அமைதியும்! 
 
நிஹர்.. அருகில் திரும்பிப் பார்த்தவளுக்கு அங்கவன் இன்மையே இத்யாதி பயங்களை அதிகரிக்க, நொடியில் பதறத் துடித்த மனத்துடன் பரபரத்தன அவள் பார்வை. 
 
நிஹர்? நிஹர்! எங்கே சென்றான் இவன்? அதுவும் வண்டியை இப்படி வழியில் விட்டு.. ஒருவேளை.. ஒருவேளை அவனுக்கு.. கடவுளே! 
 
நொடி தாமதியாமல் கதவைத் திறந்துகொண்டு வெளியேறிவளை தடுக்கிவிட்டது அவளது திருமண உடை! 
 
திருமணம் முடித்த கையோடு உடையைக் கூட மாற்ற நேரமில்லாதவனை போல அழைத்து வந்தானே! 
 
'இந்த ரெட் லெஹெங்கால நீ அப்படியே ரோஜாப்பூ போல இருக்க தெரியுமா?' என்றவனின் குரலில் உள்ளம் உருக்குலையத் துவங்கியது.  
 
நிஹர்! நான் தூங்கிக்கிருக்க கூடாது! தப்பு தப்பு! என் தப்புதான்! 
 
ட்ரெஸ் மாத்திட்டு வந்துடறேனே.. என்று கண்கள் சுருக்கி கேட்டவளிடம் 
 
'ஃபர்ஸ்ட் டைம் நம்ம வீட்டுக்கு இந்த ரோஜாப்பூ ராஜகுமாரிய கூட்டிட்டு போகப் போறேன்.. பொண்ணு மாப்பிள்ளையா போவோமே ராது' என்றவன் அவளைவிட அதிகமாய் விழி சுருக்கி, இதழ் குவித்துக் கேட்டதில் தன்னையுமறியாது மீண்டுமொரு முறையாக அந்த ஜாலக்காரனுக்கு தலையாட்டியிருந்தாள்! 
அவள் விருப்பப்பட்டு வாங்கிய உடை தான். கல்யாண பூரிப்பு மெல்ல மெல்ல  நிலைப்பெறவும் கூச்சம் வந்து ஒட்டிக்கொள்ள, அதைக் கண்டுகொண்டவனைப்போல அவன் பேசியதில் மெல்லிய முறுவல் இவள் இதழ்களில்! 
 
இவள் சொல்லாமலே இவ்வளவு புரிந்துகொள்ள இயலுமா ஒருவரால்? இவன் செய்கிறானே! 
 
அலைய குலைய இறங்கியவளின் பார்வை எல்லா திக்கிலும் தடுமாறிக்கொண்டிருந்தது. 
 
நட்ட நடுக் காடு! மலைப்பகுதி. சுற்றிலும் உயர்ந்து வளர்ந்து அச்சுறுத்தும் மரங்களும் அதற்கு முத்தாய்ப்பாய் அன்று காலைவரை அடித்து ஊற்றிய மழையின் மிச்சமுமாகக் குளிர் காற்றுக் குத்தூசியாய் நொடியில் தேகம் துளைக்க, பாவாடையில் அழுந்தப் பதிந்து திடம் தேடிய விரல்கள் ஆசுவாசம் கண்டது
 
"என்ன ஆச்சு ராது? இந்த குளிர்ல நீ ஏன் வெளில வந்த?" என்று வண்டிக்குப் பின் புறமாக இருந்து வந்த குரலில்.
 
நிஹர்! 
 
அவள் நின்ற கோலத்தில் முகம் பூசும் பரிவுடன் அவன் கைகளில் இருந்த க்ளௌஸை கழட்டியபடி அவளை நோக்கி வர, விடுவிடுவென இரண்டெட்டில் அவனை அடைந்தவள், அவன் அவள் முகம் பார்க்க குனிந்த நொடி, மின்னலென அவனை கழுத்தோடு சேர்த்தணைக்க 
 
"டேய்! டேய்.. ராதுமா என்னாச்சு?" என்றவன் கேள்விகள் பதற்ற மொழியில் வந்தாலும், தன் கழுத்தோடு சேர்ந்து தொங்கியபடி இருந்தவளின் உயரத்திற்கு இன்னும் வாகாய் குனிந்து, அவள் முதுகை ஆறுதலாக நீவினான். 
 
சில கணங்கள் அவனது ஆறுதல் பேச்சும் அவளது மௌனத்தில் இறுகிய அணைப்புமாய் கழிந்தன.
 
மெல்ல மெல்ல சுயம்பெற்று விலகியவளுக்குச் சூழ்நிலையின் அபத்தம் புரியாமல் இல்லை. 
 
அடர்ச்சிவப்பு லெஹங்காவில் தங்க இழையோட, அந்த அந்திமாலை வேளையில், வனாந்தரத்தின் அடர்த்தியைக் கிழித்துக்கொண்டு விழுந்த சூரிய ஒளியில் ஆங்காங்கே மினுமினுக்க, தங்கப் பூக்கள் சூழ்ந்த ஒற்றை காட்டு ரோஜாவாய் நின்றிருந்தவளின் வெளிறிய தோற்றம் அவனை ஏதோ செய்தது. 
 
"பயந்துட்டியா?" என்றவனின் மெல்லிய குரலுக்கு அதைவிட மெல்ல அசைந்தது அவள் தலை. 
 
மறுகணம் அவளை இழுத்து அணைத்து தன்னுள்ளே அமிழ்த்திக்கொள்ள முயல்வது போல இறுக்கிக்கொண்டவனுக்கு நொடியில் தன் செயல் உணர, சட்டென விலகிவிட்டான். 
எதிர்பாராத அணைப்பானாலும், அது தந்த இதத்தில் நின்றிருந்த ராதாவிற்கு அவன் விலகல் ஒரு நொடி சுருக்கென்றாலும், மறுகணமே அவன் பேச்சில் அதை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை.
 
"சீக்கிரம் வா, இருட்டறதுக்குள்ள மலையேறிடனும்!" என்றவள் கைப்பிடித்து அழைத்து வந்து கதவைத் திறந்து நின்றவன், அவள் அவனையே ஒரு பார்வை பார்த்துவிட்டு ஏறியமரவும், அவள் உடையை வாகாய் எடுத்து உள்ளே வைத்துக் கதவடைத்துவிட்டு, ட்ரைவர் ஸீட்டில் வந்தமர்ந்தான். 
 
ஸீட் பெல்ட்டை இழுத்துச் சொருகியவனின் பார்வை அவளதை தொட்டு மீள, அதில் எதை உணர்ந்தானோ
 
"டயர் பஞ்சர் ஆன மாதிரி இருந்துச்சுடா, அதான் என்னனு பார்த்துட்டு இருந்தேன். நீ தூங்கிட்டு இருந்த, அதான் எழுப்பல" என்றான் ஆறுதலாய்
 
மீண்டுமாய் ஒரு ஆச்சரியம் இவளிடம்! இவன் எப்படி நான் கேட்காமலேயே இப்படி புரிஞ்சிக்கிறான்? 
 
ம்ம்.. எனத் தலையசைத்தவள் மூச்சு சமன் பட்டதும்
 
"எழுந்து பார்த்தா நீங்க இல்லை, காட்டுப் பகுதி வேற.. ஆள் நடமாட்டம் இனி இருக்காதுனு அப்போதே சொன்ன ஞாபகம் அதான் கொஞ்சம் பயந்துட்டேன்.." என்றவளின் குரல் உள்ளே போயிருந்தது
 
அவள் வெட்குவது உணர்ந்தவன் போல, தலையில் கை வைத்தாட்டியவனோ 
 
"நான் பாதி வாழக்கைய இங்கதான் கழிச்சிருக்கேன். சோ நீ பயப்படாம வரலாம் ராது. அது மட்டுமில்லாம இங்க சிங்கம் புலி கிடையாது" என்க
 
"அப்போ?" என்றவள் கேள்வியில் உதிர்த்த சலங்கையெனச் சிரித்தவனோ, "செம ஸ்மார்ட் நீ! அஃப்கோர்ஸ் மத்த மிருகங்களும், விஷப் பூச்சிகளும் இருக்கும்தான் ஆனா நாம இருக்கற இடம் சேஃப். சோ மை ராது எந்தவித பயமுமில்லாம பழையபடி இயற்கையை ரசிச்சிட்டே வரலாம்" என்று வசனம் பேசியவன் அவளது குறுகுறு பார்வையில் 
 
"நிஹர் கேரண்ட்டிமா!" என்று கண்ணடிக்க, அவன் ஹேஸல் நிற விழிகளின் இழுப்பில் இசைந்தவளாகச் சிறு முறுவலொன்றுடன் மீண்டும் இருக்கையில் சாய்ந்தமர்ந்துகொண்டாள் ராதா.
 
அவள் சிரிக்கும் இதழ்களையே ஓர் நொடிக்கு அதிகமாக மௌனப் பார்வை பார்த்திருந்த நிஹர், அவள் வசதியாய் சாய்ந்து வெளியில் வேடிக்கை பார்க்கத் துவங்கிவிட்டதை உறுதி செய்துகொண்டவனாக அந்த ம்யூஸிக் ப்ளேயரை உயிர்ப்பித்தான். 
 
ஒத்தையடி பாதையிலே ஒத்தையில போறவளே..
கரடி வந்து வழி மறிச்சா காட்டுக்குள்ள என்ன செய்வ? 
என்ற பாடல் வரிகள் அவ்வாகனத்தை நிறைக்கத் துவங்கியது.
 
பனிப் படர்ந்த கண்ணாடியில் ஒற்றை விரலால் கோடிழுத்தவளுக்கு அவ்வடர்ந்து நின்ற நீள மரங்களும், மேலேறும் மலைப்பாதையும் விசித்திரமான விதத்தில் வசீகரித்து அச்சுறுத்தியது.
 
ஆம், கார் ஏஸியை கடந்து வந்து நாசி தீண்டும் வனதேசத்தின் பச்சை வாசமும், எந்நேரமும் இருள் கவியத் துடிக்கும் வானமுமாய் இருந்த பாதை அவளை அவளே அறியாத ஏதோவொரு உலகிற்கு இட்டுச்சென்றது! 
 
'கரடி வந்து வழி மறிச்சா காட்டுக்குள்ள என்ன செய்வ?'
 
நிராயுதபாணியான அவளால் என்ன செய்துவிட முடியும்? 
 
ராதாவின் பார்வை எதிரில் தெரிந்த மரங்களினூடே எதையோ கூர்ந்து கவனித்தது.
 
மெல்ல மெல்ல இடுங்கிய கூர்ப்பார்வை கண்ட காட்சியில் நொடியில் விரிந்து அதிர்ந்தது! 
 
தூரத்து மரக்கூடலுக்கு மத்தியில் ஒரு சிவப்பு உருவம் தலை தெறிக்க ஓடிவந்துகொண்டிருந்தது! இவள் பார்வையின் கூர்மையில் அந்த சிவப்பு உருவம், சிவப்பு உடை அணிந்த பெண் என்று தெரிய, இன்னமும் கூர்ந்து நோக்கியவளின் இருதயம் இடறி விழுந்தது!
 
அது இவள்! இவளேதான்! ராதாவேதான்! ஆனால் எப்படி? 
 
இங்கிருக்கும் இவள் எப்படி கண்ணுக்கு முன் தூரத்தில் ஓடி வர முடியும்? ஆனால் உருவம் கண்ட மறுகணம் அவளுடலில் பட்டிழுக்கும் முட்செடி காயங்களும் எரிச்சல்களும் இவளுக்குச் சொந்தமாகிட, உடலெல்லாம் சிலீர் குளிரில், ரத்த வாடையுடன், ஆங்காங்கே எரிய, தடதடக்கும் இருதயத்துடன் வெற்றுப் பாதம் கல்லுக்கும் முள்ளுக்கும் இரையாகிட அவள் அனுபவிப்பவை இங்கு இவள் உணரும் நிலை! 
 
நெற்றியில் வழிந்த இரத்தம் முகத்தை மறைக்க முயன்ற நிலை. இருந்தும் அவள் முகம் அடையாளம் காணக் கண்ணாடித் தேவையா? 
 
நெஞ்சுக்கூடு காலியான உணர்வில், இருதயத்தருகில் கை வைத்து அழுத்தியபடி இங்கு ராதா மூச்சுக்கு திணற தொடங்கினாள். 
 
அவ்வுருவம் நெருங்க நெருங்க இங்கு இவள் உயிர் காற்று பிரிந்துவிடுமோ என்றளவு திணறல்! 
 
காரணமற்ற பயம்! அது இவள் பயமா இல்லை அவள் பயமா என்றுகூட பிரித்தறிய முடியா நிலையில் வேக வேக மூச்சுக்களை எடுக்க முயன்றவளின் பார்வை மங்கத் தொடங்கிய சமயம், வெகு அருகில் வந்துவிட்ட அப்பெண்ணுருவம் அவளுக்கு மட்டும்தான் தெரிகிறதா? வண்டி சற்றும் சலனமற்று அதே வேகத்தில் செல்கிறதே! 
அய்யோ! அருகில் வந்துவிட்டாளே! நிஹர்! நிஹர்! என்று மனம் படபடவென அடித்துக்கொள்ள வாய்வார்த்தையாய் மொழிபெயர்க்க இயலாதவளாய் பரிதவித்தவளின் கடைசிக் கட்ட தவிப்பும் அப்பெண்ணை வண்டி அதே வேகத்துடன் மோதியதில் முடிந்தது. 
 
ராது.. ராதுமா! ராது கண்ண திற! 
 
முகம் உணர்ந்த நீர் சிதறல்களும் செவி கேட்கும் விளிப்பு சத்தங்களும் எங்கோ தொலை தூரத்தில் கேட்கும் உணர்வு!
 
கருகலாய் பல நினைவுகள்! ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமின்றி வந்து மறைய, முடிவற்ற கருஞ்சுழலில் மிதந்துகொண்டிருந்தவளைப் பிடித்து உலுக்கியது அக்குரல்!
 
கூட வரதே கரடியா இருந்தா?
 
'ஹாங்ங்ங்' என்ற மூச்சுக்கான பெருந்திணறலுடன் எழுந்தமர்ந்தாள் ராதா.
 
ஒருகணம் உலகமே புரியவில்லை. கையில் தண்ணீர் பாட்டிலுடன் அவள் பக்க கதவை திறந்து நின்றிருந்த நிஹரின் நிலை, அவன் இவ்வளவு நேரமும் அவளை அவன் மடியில் தாங்கியிருந்ததை சொன்னது. 
 
"காட்! என்னாச்சு ராதுமா? ஏதாச்சும் பண்ணுதா? ஆர் யூ ஓகே?" என்றிவள் நெற்றியைப் புறங்கையால் தொட்டுப் பார்ப்பவனையே பார்த்திருந்தவளினுள்ளோ மீண்டும் மீண்டும் அவ்வார்த்தைகளின் நினைவு!
 
கூட வரதே கரடியா இருந்தா?
 
*
 
கரு நீல வான் முழுக்க கண்சிமிட்டும் வெள்ளி நட்சத்திரங்களையே வெறித்துப் பார்த்திருந்தாள் அண்யா. 
 
மொட்டை மாடிக் குளிர் அவளது பதினொரு வயது, மெலிந்த தேகத்தைக் கிடுகிடுக்க வைக்க, தந்தியடிக்க துடிக்கும் பற்களை அழுந்த கடித்து மூடியபடி அமர்ந்திருந்தவளிடம் அசாத்திய அமைதி நிலவியது. 
 
ஸ்லீவ்லெஸ் இரவு உடையில், கை கால்களில் மயிர்க்கூச்செறிவதை கண்டும் காணாதவளாக வானையே வெறித்திருந்தவள் மெல்ல எழுந்தாள். 
 
காலையில் அக்னியெனச் சுடும் தரை, இரவில் அதேயளவு குளிர, அத்தனை நேரம் அமர்ந்திருந்ததில் மரத்துப்போயிருந்த கால்களை அழுத்தமாகத் தரையில் பதிக்க முயன்றவளின் எண்ணம் தெரிந்தது போல் கால்களுக்கு இடையில் வந்து நின்றது அந்த சாம்பல் நிற பூனை! 
 
அவளை போலவேதான் அதுவும்! அதனாலயே அவளிடம் வந்து வந்து தன்னுடலை அவள் கால்களில் தேய்த்து நிற்கும். பூனை நெற்றியை நீவிவிட்டவள், அவனைத் தாண்டிக்கொண்டு முன்னேறினாள். 
 
வானம் இன்னமும் தன் வெள்ளி நட்சத்திரங்களால் பளபளத்துக்கொண்டிருந்தது. 
கைப்பிடி சுவரின் குளுமை அவள் நரம்பு வழி பயணிக்க, கீழே எட்டிப் பார்த்தாள். தரைக்கும் அவளுக்கும் பல தளங்கள் இருந்தன. மெல்ல ஒற்றைக் காலை மேலே வைத்து ஏறியவளின் அத்தனை நேர நிர்மல வதனத்தில் கலவரத்தை உண்டு செய்தது 
 
"அண்யா!" என்று அவளுக்கு நேர் கீழிருந்த வீட்டிலிருந்து வந்த அதட்டல் குரல்! 
 
நொடியில் அந்தப்புறம் போட்டமர்ந்த காலை எடுக்க முயன்றவள் நிலை தடுமாறி தொப்பென மாடித் தரையில் விழுந்தாள். கை முட்டி சிராய்ந்து எரியத் தொடங்கியது.
 
"அண்யா!" என்ற இரண்டாவது அழைப்பில் வெறுப்பின் அளவு கூடியிருக்க அவசர அவசரமாக எழுந்து உடையைத் தட்டிக்கொண்டவள் 
 
"வந்துட்டேன் அப்பா" என்ற அவசர அறிவிக்கையுடன் படிகளில் பாய்ந்தோடினாள். 
 
அத்தனை நேரம் இருள் மறைவில் அமர்ந்திருந்த உருவத்திடம் சென்று மடியில் ஏறித் தஞ்சமடைந்தது அப்பூனை.