🌿 Featured Story

அன்பில் அவன் அலாதி

கோடைக்கால நினைவுகளின் கதை.

📖 Read Story

🎧 Audiobooks

Listen to our stories while travelling, resting or dreaming.

Enter Our Audio Story World

Romance, thrillers, healing stories & emotional journeys, now in audio form.

🌿 Fresh Updates

New chapters, articles, announcements & story updates.

மென்சாரலில் நின்வண்ணமோ! - 14

✍️ எழுதியவர் Yagnya

14 



“எனக்கென்னமோ.. நீ அவசரப்பட்டிட்டியோனு தோணுது அதி..” 


“ப்பா?” அத்தனை நேரமும் தான் சொல்வதனைத்தையும் ஒன்றுவிடாமல் ஆழமாய் உள்வாங்கிக் கொண்டிருந்த அகிலன் இவ்வாறு உரைக்கவும் அதி அதிர்ந்துதான் போனான். 


“மேகாக்கு உன்ன பிடிச்சிருக்கு..” என்றவர் தொடங்க அதியோ,


“அதத்தான் அவளே சொல்றாளே” என்று முடித்தான். அவனிடம் மறுப்பாய் தலையசைத்த அகிலன்,


“இப்பவும் அவசரபடற!” என்று சிறு கண்டிப்புடன் தொடர்ந்தார் 


“மேகாவுக்கு உன்னையோ உன் காதலையோ பிடிக்காம போகலை.. அப்படி இருந்திருந்தா இது இவ்வளவு தூரம் வந்துருக்காது..” என்க அவனோ “ம்ம்” என்று ஆமோதித்தான். இது அவனுக்கும் தெரிந்ததுதானே! ஆனால் ஏன் என்றுதான் தெரியவில்லை! 


“அதி..?”  என்றவர் கேள்வியாய் இழுக்க அவனோ,


“எனக்கு சொல்ல தெரியலப்பா! ஏதோ நான் அவள தொல்லை பண்றதுபோல திடீர்னு ஒரு எண்ணம்.. இல்ல பயம்! அதே சமயம் மறுபடியும் அவ என்னைவிட்டு தூரமா போயிருவாளோனு பயம்! என்ன இருந்தாலும் மனசுக்கு பிடிச்சவங்கள பக்கத்துலேயே வச்சுக்கனும்னு நினைக்கற சராசரி மனுஷன் தானே நானும்... அவ அப்படி கோவப்பட்டு கத்தி நான் பார்த்ததேயில்ல. கோவப்படுவா.. ஆனா கத்தினதில்லை. எப்படிப்பட்ட சூழ்நிலையிலயும் நிதானத்த இழக்காம சமாளிப்பா.. அவ்வளோ தெளிவு, ஆனா அப்படிப்பட்டவளே நேத்து நிதானத்த இழந்து கத்தறளவுக்கு.. அதுக்கு நான்தான் காரணமோனு ஒரு குற்ற உணர்ச்சி! அவ சந்தோஷமா இருக்கனும்னு நினைச்சிட்டு அதை நானே கெடுத்திட்டேனோனு... சொல்லத் தெரியலப்பா” என்றவன் மறுபுறம் திரும்பிக்கொண்டான். 


மகனையே சில கணங்கள் பார்த்திருந்தவர் பின் ஆதரவாய் அவன் தோளில் கை பதித்தவாரே,


"பாத்தீயா? அங்க உதய்கிட்ட அவ்ளோ பேசிட்டு வந்த நீயே இப்போ இப்படி அவசரப்பட்டா என்ன அர்த்தம்?" என்றார் மென்குரலில் ஒரு பத்து வயது சிறுவனை கையாளும் மென்மையோடு.


"இல்ல ப்பா..." என்றவன் தொடங்குகையிலேயே கையசைத்து தடுத்த அகிலன்,


"இத்தனை வருஷம் பொறுமையாயிருந்த நீயே ஆசைப்பட்டவங்கள பக்கத்துல வச்சுக்க நினைக்கற சராசரி மனுஷன்தானேனு கேட்கும்போது, இத்தனை வருஷம் உனக்கு தெளிவானவளா தெரிஞ்ச மேகா இப்பொ குழப்பத்துல இருக்கக்கூடாதா?"


"ப்பா..."


"அதி... நட்புக்கு அடுத்த கட்டம் காதல்னு சொல்லுவாங்க.. ஆனா என்னைப் பொருத்தவரை ரெண்டுமே தனித் தனி... கிட்டத்தட்ட பாரலெல் யூனிவர்ஸ் மாதிரினு வச்சுக்கோயேன்! நீ எப்போவோ காதலுக்கு வந்துட்ட... ஆனா மேகா? அவளால அப்படி முடியல! சொல்லப்போனா, அவளால நட்புலயும் நிக்க தோணாம காதலுக்கும் வர தோணாம நடுவுலயே நின்னுட்டா! நடுவுல சிக்கியிருக்கற மேகா கைய பிடிச்சு நீதானே அதி காதலுக்குள்ள அழைச்சுட்டு வரனும்? யோசிச்சு பாரு அதி, இத்தனை வருஷமாகியும் நீ அதே அதியாதான் இருக்க ஆனா மேகா அப்படியில்லடா... அவ ஒரு உறவுக்குள்ள போயிட்டு வந்துருக்கா. அதுவும் அவ மறக்க நினைக்கறளவுக்கான ரிலேஷன்ஷிப்! அவ பொறுப்புல பவிமா வேற! அவ அதே மேகா இல்ல அதி! முதல்ல அதை புரிஞ்சுக்கோ. முன்னவிட இப்போதான் நீ இன்னும் பொறுமையா கையாளனும்... மேகாவுக்கு நீ அந்த நம்பிக்கைய குடுக்கனும் அதி. உன் காதல உணர்த்தினா மட்டும் போதாது!" என்றவர் அதியை பார்க்க அவரையே கவனித்துக் கொண்டிருந்தவனோ தன்னையறியாமலேயே அவரிடம், 


"புரியல ப்பா.." என்க சின்னதாய் முறுவலொன்றுடன்


"மனுஷ மனம் அப்படிதான் அதி, சில சமயம் நீ மெனக்கெட்டு செய்யற பெரிய விஷயம்லாம் மனச தீண்டக்கூட செய்யாது... ஆனா உன்ன அறியாம, தன்னியல்போட நீ செய்ற சின்ன செய்கையாகட்டும்...  இல்ல ஏன்? ஒரு வார்த்தைக்கூட போதும் அதுக்கூட வேணாம் சின்ன தொடுகை? தேவையான நேரத்துல மௌனம்? ஆறுதலான அணைப்புனு, ரொம்ப சின்ன விஷயம் மனசுல பதிஞ்சு போயிரும்! அன்பை உணர்த்தி நம்பிக்கைய விதைச்சிரும்! அதுக்காக நீ எதுவும் செய்ய வேணாம் அதி.. நீ நீயா இரு! மேகாவும் அதைதான் விரும்புவா.. அவ மனசு எதிர்ப்பார்க்கற ஏதோ ஒன்ன நீ எப்போவாவது உணர்த்துவ.. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு அதி!" என்று அவன் தோள்தட்டி உரைத்தவரையே கண்கலங்க வெறித்தவனின் இதழ்களோ,


"அப்பா..." என்றழைப்பதை தவிர்த்து வேறெதுவும் நினைவில் இல்லாததைப்போல செயல்பட அவனை உணர்ந்து முகம் மலர்ந்தவரின் கண்களிலும் அவனதின் பிரதிபலிப்பு! 


அவனை அணைத்து அவன் முதுகில் தட்டியவாறே, "இப்போ என்னடா அவசரம்? உனக்கென்ன இருபத்தி ஏழா? அவ்வளவுதானே? மனசுக்கு தோணினத செய் அதிரூபா! அப்பா நானிருக்கேன்! நீ நிச்சயம் தப்பு செய்ய மாட்ட! ரெண்டாவது தடவை எல்லாருக்கும் கிடைக்காது அதி.. தவறவிட்டிராத. திகட்டிப்போறவரை ட்ரை பண்ணு.. உன்னால அவள காயப்படுத்த முடியாது அதி.. அப்பா நம்பறேன்!" என்றவர் கண்களை துடைத்துக்கொண்டு நிமிர விழிகளிரண்டிலும் வெள்ளப் பெருக்குடன் நின்றிருந்த மகனைக் கண்டுவிட்டு அதை துடைத்தவராய் 


"கிளம்பலாமா அதி? அனு காத்திட்டிருப்பா..." என்க தன் முகத்தில் படிந்து கண்ணீரை துடைத்துக்கொண்டிருந்த தந்தையின் கைகளை பற்றி தடுத்து நிறுத்தியவனோ கலங்கியிருந்த கண்களுக்கு மாறாய் இதழ்களில் குறும்பு சிரிப்பொன்றை படரவிட்டு, "நான் வேண்டாம்னு சொன்னா?" என்க அவன் கேலியுணர்ந்த அகிலனோ அவனைப்போலவே குறும்பு புன்னகையுடன் அவன் காதை திருகியபடியே, 


"இப்படியே இழுத்துட்டு போக வேண்டியதுதான்!" என்றுவிட ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி கலகலவென நகைத்த இருவரும் அந்த காலை நேரப் பயணத்தை மீண்டும் தொடர்ந்தனர். இம்முறை இனிமையாக!

கண்ணாடி வழியாய் மகனைப் பார்த்த அகிலனுக்கு இப்பொழுது புன்னகைத் தவழும் மகனின் முகம் மன நிம்மதியை மீட்டியது. 

வீட்டிற்கு அருகில் வரும்பொழுதே அகிலன்,


"அதி.."


"சொல்லுப்பா..." என்றவனின் குரலில் இருந்த நெருக்கம் அந்நேரத்திலும் அவருக்கு தித்தித்தது. 


"அனுக்கிட்ட இப்போதைக்கு இதைப்பத்தி சொல்ல வேணாம்டா" என்றுவிட அவனோ குழம்பியவனாய்


"ஏன்பா?" என்றான்


"எல்லாம் நல்ல படியாத்தான் நடக்கும்..  அதுல எனக்கு நம்பிக்கை இருக்கு! அது நாலு மாசமோ இல்லை நாலு வருஷமோ... ஆனா அதுவரைக்கும் அனு எந்த விஷயத்துக்கும் வருத்தப்படவோ டிஸ்ஸப்பாய்ண்ட் ஆகவோ வேண்டாம் அதி. அனுகிட்ட நானே பெறுமையா சொல்றேன்" என்றார். 


அதியினுள்ளோ அதிசயமே! இத்தனை வருடங்கள் ஓடியும் இவர் அம்மாவிற்காக ஒவ்வொன்றையும் பார்க்கிறாரே.


"என்ன அதி? அமைதியாகிட்ட?" அகிலனின் குரல் அவன் எண்ணவோட்டத்தை தடுக்க அவனோ,


"ம்ம்ம்... உங்களுக்கு ஏன் அம்மாவ பிடிச்சது?" என்று ஆர்வமாய் கேட்க இப்பொழுது அவர் புன்னகை விரிந்து மெல்லிய சிரிப்பானது. 


"உனக்கு ஏன் உன் மேக்ஸ பிடிச்சது? பதிலில்லைல.. அதேபோலத்தான் எனக்கும் என் அனுவ பிடிச்சது" என்றவாரே வண்டியை பேஸ்மெண்டில் நிறுத்தியவர் அவன் பரபரப்பதை கண்டுவிட்டு 


"என்ன அதி?" என்க அவனோ


"இல்லப்பா அடுத்த பஸ்க்கு டிக்கெட் பார்த்தேன்... கிடைக்கல..." 


"சரி அப்போ ஒன்னு பண்ணு.. பேசாம சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்பறம் ஈவ்னிங்கா காரெடுத்துட்டு போயிட்டுவா" என்க அவனோ 


"ஈவ்னிங்கா! அது ரொம்ப லேட் ஆகிடும்ப்பா. மேக்ஸ் ஈவ்னிங் சீக்கிரம் வந்துருவா..." என்றவன் பரபரக்க அவருக்கோ அதியின் இந்த பக்கம் புதிது! வரத்துடித்த சிரிப்பை அடக்கியவாரே


"அவ்ளோ யோசிக்கறவன் அங்கருந்து இப்படி அவசர அவசரமா கிளம்பிருக்க கூடாது!" என்று சிரிப்பை அடக்கியவாரே லிஃப்ட்டை நோக்கி நடந்தார். அவர் பின்னாடே ஓடியவனாக அதியும், 


"இங்க வந்தத நான் ரெக்ரெட் பண்ணவேயில்லையே! பேசாம ஃப்லைட்ல புக் பண்றேன்..." என்க அவனையே வெறித்தவரோ,


"சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்பு! இல்ல அனு வருத்தப்படுவா..." என்றவாரே லிஃப்டிலிருந்து வெளியேற அவரை பின்தொடர்ந்தவாரே அவனும், 


"உங்களோட இந்த ஸைட இத்தனை வருஷம் எப்படி பார்க்காம போனேன்?" என்றவாரே அவர் முன் வந்து அவர் முகத்தை குறும்பாய் பார்த்தவாரே பின்னோக்கி அவன் நடக்க அவரோ,


"ஐஸ் வைக்காத அதி! பெங்களூர் குளுருக்கு!" என்று சிரிக்க அடுத்து வந்த சில மணி நேரங்களும் பரபரப்பை வெளியேகாட்டாதவாறு சாப்பிடுவதில் மட்டுமின்றி தூங்குகிறேன் பேர்வழியென்று அதே பரபரப்புடன் அறையில் சற்று நேரம் அமர்ந்தவனுக்கு ஃப்லைட் ஏறிய பின்புமே அந்த பரபரப்பு குறைந்தபாடில்லை!  


"இன்னைக்கேவா?" என்று சுணங்கிய அனுவை ஆறுதல் படுத்துவதில் அகிலன் உதவிக்கரம் நீட்ட பின் முறுவலை இழுத்து பிடிக்க முயன்றவாரே அனுவும் டாட்டா காட்டினார். ஆனந்த பரபரப்பில் ஃப்லைட் ஏறியிருக்கும் இவனுக்கு நேரெதிர் பதமாய் இருந்தது அங்கு மேகாவின் வீட்டில். 


மற்றவர்களிடம் கொட்டிவிட்டதாலோ, இல்லை பல மணி நேரங்களை கடந்துவிட்டதாலோ என்னவோ அன்றைய சம்பவத்தின் தாக்கம் அன்றைவிட இன்று இருவருக்கும் சற்று மட்டுப்பட்டதாய் தோன்றியது. 


அதுவரைக்கூட முணுமுணுவென உறுத்திக்கொண்டிருந்தவைக் கூட காலையில் கல்லூரி வாயிலில் மனோவை கண்டவுடன் தென்னலுக்கும், தென்னலைக் கண்ட மனோவுக்கும் முழுதாய் ஒதுக்கி ஒருவரை நோக்கி ஒருவர் புன்னகைக்க முடிந்தது. அது தயக்கங்களற்ற புன்னகை! 


வாயிலில் பார்த்துக்கொண்ட இருவரும் மற்றவரை நெருங்கினர் அதே முகமலர்வுடனே. 


"ஹாப்பி மோர்னிங்!" என்ற தென்னலுக்கு அதே உற்சாகத் த்வனியில், 


"ஹாப்பி மோர்னிங் தென்னல்!" என்று பதிலளித்தவன், "என்ன இன்னைக்கு, ரொம்ப சீக்கிரம்?" என்க 


"அதுவா.. சாக்லெட்ஸ் ஸ்டாக் தீர்ந்துப்போச்சு மனோ. அதான் கேண்டீன் போயிட்டு அப்படியே லைப்ரரில புக் ஒன்னு ரிட்டர்ன் பண்ணனும்.." என்று பேசியவாறே அவள் நடக்க அவளுடன் இணைந்து நடந்தவாரே மனோ கேட்டுக்கொண்டிருக்கவென அன்றைய காயங்களை முடிந்தளவு வடுக்களாய் மாற்றிவிட்டு பழைய நிலை திரும்பினர் இருவரும். 


கேண்டீனில் சாக்லெட்களை வாங்கி இவள் பையினுள் போட்டுவிட்டு கையில் ஒன்றை எடுத்து அதன் ராப்பரை பிரித்தவளாக மனோவிடம் பாதியை நீட்ட அப்பொழுதே அவன் திடீரென மௌனமானதை உணர்ந்தாள் தென்னல். அதன் காரணம் என்னவென்று அவளறியாமல் இல்லை! 


அன்று க்ரௌண்டிலிருந்த ஒரு சிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான், ஆனால் பிரச்சனை ஹெச்.ஓ.டி வரை சென்றதில் சிறியளவில் பறவியிருக்க விஷயம் தெரிந்து இவர்களை தெரியாத சிலர் இவர்களை வெறித்து பார்ப்பதும் விஷயமறியா நண்பர்களிடம் கிசுகிசுப்பதுமாய் இருந்தனர். எல்லோரும் திரும்பி பார்க்கவில்லை என்றாலும் அந்த ஒரு சிலர் திரும்பி பார்ப்பதே ஒரு மாதிரியாய் இருந்தது.  மனோவோ எங்கு தென்னல் வருந்துவாளோ என்று வருந்த தென்னலுக்கோ மனோ வருந்துகிறானே என்றிருந்தது. 


"மனோ!" என்றவளின் சத்தமான அழைப்பில் அவன் திரும்ப அவன் கையில் சாக்லெட் துண்டை திணித்தவளாய் தானும் ஒன்றை வாயிலிட்டபடி நடக்கத் தொடங்கினாள். 


"இப்போ ஏன் முகத்த இப்படி வச்சிருக்க நீ?"  என்றவளின் கேள்வியில் அவன் பார்வை அவள் புறம் திரும்பிட அதன் அர்த்தத்தை உணர்ந்தவளோ,


"அடேய்! சத்தியமா நான் ஃபீல் பண்ணல! அவங்க பாக்கறதுக்கூட பரவால்ல.. ஆனா நீ மூஞ்ச இப்படி வச்சிக்கறத பாக்கத்தான் நெஞ்சு வலிக்க மாதிரி இருக்கு.." என்று வலது பக்க நெஞ்சில் கை வைக்க அவனோ அவள் பாவனையில் சிரிப்பு வர அதை அடக்கியபடி,


"ஹார்ட் லெஃப்ட் ஸைட்ல இருக்கு" என்றுவிட்டு நகர்ந்தான்.  அவள் அதை அறியாமலா செய்தாள்? 


"அட ஆமாம்ல!" என்று கையை இடது பக்கம் நகர்த்திவிட்டு, "அது.. இங்க ஆரம்பிக்கற வலி, இங்கவரை வருது மனோ" என்றாள் அசடு வழிய 


அவள் எதற்காக செய்கிறாள் ஒன்று உணர்ந்த மனோவோ விரிய புன்னகைத்தவனாய் அவள் தலையில் லேசாய் குட்டி, "அதாவது உனக்கு தெரியல... அத நாங்க நம்பனும்?"  என்க 


 "அஃப் கோர்ஸ்!" என்று அவளிடமிருந்து வந்த உடனடி பதிலில் இருவரும் சேர்ந்து சிரித்தனர். 


சிரிக்கும் அவனையே பார்த்தவளாய், "பாரு.. இப்போதான் பாக்கறா மாதிரி இருக்கு.. அப்போதேயும் இருந்தியே.. ஏதோ.. ஆஹ்! இஞ்சி ஈட்டன் மங்கி மாதிரி"  


"குரங்கு ஏன் இஞ்சி சாப்பிடப் போது?" 


"யாருக்குத் தெரியும்! அம்மா அடிக்கடி சொல்ற டைலாக் அது!" 


"ஓ..." என்று சிரிப்பை அடக்கியவனை  கடந்து சென்ற இருவர் அவர்களுக்குள் பேசியது காதில் விழுந்து வைக்க மனோவை பார்த்துவிட்டு தலையில் அடித்துக்கொண்டாள் தென்னல். 


"ஏன் அடிச்சிக்கற?" 


"உன்ன அடிச்சிறக்கூடாதுல.. அதான் என்னை அடிச்சிக்கிறேன்!" என்றவளின் கேலியை உணர்ந்தும் உணராதவனாய்


"ஏன்?" என்றான்.


"பின்ன என்னவாம்? எதுக்கெடுத்தாலும் மூஞ்சி தெர்ட் ஃப்ளோர்ல தூக்கி வச்சுக்க வேண்டியது! இவ்வளவு ஃபீல் செய்றவன் அன்னைக்கு அமைதியா போயிருக்கலாம்ல?" என்றவள் அதன் பின்பே அவள் சொன்னதை உணர 


"ஸாரி மனோ.. நீ ஃபீல் செய்றது பிடிக்காம சொல்லிட்டேன். இதெல்லாம் இன்னும் ரெண்டு நாளைக்குதான். மிஞ்சிப் போனா ஒரு வாரம்?" 


"அப்படியா சொல்ற?" 


"நீ வேணும்னா பாரேன்.. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தெரிஞ்சவங்கலாம் கப்பல் கவிழ்ந்த ரேஞ்சுக்கு 'கேள்விப்பட்டேன்' னு ஆறுதல் சொல்றேன் பேர்வழினு ஆரம்பிச்சு 'என்ன இருந்தாலும் அவன் அப்படி பண்ணிருக்க கூடாதுனு' முடிஞ்சுப்போன கேஸுக்கு வாதாடி கடைசில 'எதுக்கும் நீயும் மனோவும் இனி தள்ளியே இருங்க'னு கேட்காமயே ஃப்ரீ அட்வைஸ அள்ளித் தெளிச்சிட்டு போவாங்க" என்று ஒரே மூச்சில் பேசியவள் பின்பு, 


"இதெல்லாம் இங்க க்ரெடிட் பண்ணி அங்க டெபிட் பண்ணிடனும் மனோ! மறுபடியும் எதாவது நடந்தா கவனமெல்லாம் அங்க திரும்பிடும். பெரிய பெரிய விஷயத்தையே கொஞ்ச நாள் கொந்தளிச்சிட்டு விட்றுவோம் இதுல நான் நீயெல்லாம் எம்மாத்திரம்"  என்க என்றைக்கும்விட இன்று அவனுக்காக அவள் அதிகம் பேசுவதை உணர்ந்தவனாய் அவளது பேச்சுக்களை கேட்டு சிரித்தபடி  நடந்துவந்தவனின் நடை தடைப்பட்டது அவர்கள் எதிரில் வந்து நின்றவனை கண்டு. 

— “மென்சாரலில் நின்வண்ணமோ!” கதையிலிருந்து ஒரு பகுதி  

✍️ எழுத்தாளர்: Yagnya 

இந்தக் கதை முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது



முந்தைய அத்தியாயம்  |  அடுத்த அத்தியாயம்

📖 இந்த தொடரின் அத்தியாயங்கள்