மென்சாரலில் நின்வண்ணமோ! - 14.1

✍️ எழுதியவர் Yagnya

14.1


உதயை அங்கு எதிர்ப்பார்த்திராத இருவரும் ஒரே போல் அவனை புருவம் உயர்த்தி கேள்வியாய் பார்த்து நிற்க உதயோ ஆழ மூச்செடுத்தவனாய் மனோவிடம்,


"கைய ஓங்கினது தப்பு.. சாரி மனோ" என்றவன் தென்னலை நோக்கி ஓரெட்டு எடுத்து வைக்க மனோவின் பார்வை அவனை துளைப்பதை உணர்ந்தும் அவன் புறம் திரும்பாதவனாய் தென்னலை பார்த்தவன்,


"நான் எந்த எக்ஸ்க்யூஸும் சொல்ல வரல.. எனக்கு உன்ன பிடிக்கும். உனக்கும் என்னை பிடிக்கனும்னு நினைச்சேன்னே தவிர உன்ன காயப்படுத்தனும்னு நான் நினைக்கல தென்னல்.. இப்போதான் புரியுது, என்னயறியாம நான் உன்ன எவ்ளோ ப்ரஷரைஸ் பண்ணிருக்கேன்னு.. என்னை மன்னிச்சிடு தென்னல்" என்றுவிட்டு  ஒரு நொடி முழுதாய் அவள் முகம் பார்த்தவன் பிறகு திரும்பியும் பாராமல் சென்றுவிட்டான். அவன் செல்வதையே பார்த்திருந்த தென்னலின் இதழ்களிரண்டும் லேசாய் வளைந்தன. 


தென்னலா? இல்லை அவன் காதலா? என்று வரும்பொழுது தென்னலே முக்கியம் என்றுபட உதய் அவன் காதலை அந்த இடத்தில் ஒதுக்கி வைத்துவிட்டான். 


காலிங் பெல்லை அழுத்திவிட்டு பொறுமையை கையில் பிடித்தவனாய் நின்றிருந்தான் அதிரூபன். கதவை படபடவென தட்ட உயர்ந்த கையை கட்டுப்படுத்தியபடி! எங்கு இவன் தட்டி அதில் அவள் என்னவோ ஏதோவென்று பதறிவிடுவாளோ என்றெண்ணியவன் இன்னொரு முறை அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருக்கத் தொடங்கினான். 


அவனை அதிகம் காக்கவிடாமல் கதவு திறக்கப்பட்டது. எதிரில் தோள் பையுடன் நின்றிருந்தவனையே வெறித்தவளை கண்டவனோ "டேக் கேர் சொல்ல மறந்துட்டேன்" என்க மெல்லிதாய் மலரும் சோர்ந்த முறுவலொன்றுடன் உள்ளே வா என்பதுபோல் தலையசைத்துவிட்டு மேகா உள்ளே சென்றுவிட வீட்டினுள் நுழைந்த அதி கதவை சாத்தியவனாய் பையை அங்கிருந்த இருக்கையில் வைத்தவனின் பார்வை வீடு முழுதும் சுற்றி பின் கேள்வியாய் அவளை வந்தடையும் முன் அடுப்பில் எதுவோ பொங்குவதுபோல சத்தமெழுந்தது.


 "ஒரு நிமிஷம்" என்றுவிட்டு அவள் அடுக்களையினுள் ஓடவும் படுக்கையறையிலிருந்து பவியின் முனகல் சத்தம் வரவும் சரியாய் இருந்தது. 


அடுக்களையை ஒரு கணம் பார்த்தவன் பின் பவி இருந்த அறையினுள் நுழைய படுக்கையில் எழுந்தமர்ந்தவாறு கண்களை கசக்கிக் கொண்டிருந்த வைபவியை கண்டவனுக்கு அவளது சோர்ந்த தோற்றம் பதற்றத்தை பரிசளித்தது. 


"பவிமா" என்றவாரே அவளை தூக்கிக் கொண்டவனுக்கு அவளுடலின் வெப்பம் இன்னும் பதட்டத்தை கொடுக்க 


"மேக்ஸ்! மேக்ஸ்.." என்றழைத்தவாரே அவளை தூக்கிக் கொண்டு ஹாலிற்கு வர அதே சமயம் அவனது  அழைப்பில் ஹாலுக்கு வந்தாள் மேகா. 


"என்னாச்சு? பவிமாக்கு ஏன் இப்படி சுடுது?" என்று பதறியவனை கண்டவளோ பவியை தொட்டுப் பார்த்துவிட்டு, 


"இப்போ கொஞ்சம் குறைஞ்சிருக்கு.. டென்ஷனாகாத அதி. நீ பதறினா அவளும் பயப்படுவா..  சாதாரண காய்ச்சல்தான். நல்லா ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்" என்றவள் என்னவோ அவனிடம் சொன்னாலும் அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டதைப் போலத்தான் இருந்தது. 


"சாதாரண காய்ச்சலா? எப்போல இருந்து இருக்கு? நீ ஏன் என்ட்ட எதுவும் சொல்லல? ஹாஸ்ப்பிட்டல் போனியா?" என்று அடுக்கிக் கொண்டே போனான்.


"நேத்துல இருந்து..." என்றவள் நேற்று வைபவி கீழே விழுந்ததையும் அதற்குப் பின்னான அவளது அழுகையையும் சொல்ல சொல்ல அவனுக்கு அப்பொழுதே புரிந்தது. நேற்று அவள் எம்மாதிரியான மனநிலையில் இருந்திருக்கக்கூடுமென.. தனது முட்டாள்தனத்தை எண்ணி அவன் நொந்துக் கொண்டிருக்க அவளோ,


"நேத்து நீ கிளம்பின கொஞ்ச நேரத்துலயே வாமிட் பண்ண ஆரம்பிச்சிட்டா டெம்ப்ரேச்சரும் அதிகாமாகவும்தான் நேத்து நைட்டே இங்க பக்கத்துல இருக்கற க்ளீனிக்கு கூட்டிட்டுப் போயிட்டு வந்தேன்.  நேத்து விழுந்ததுல பயந்துட்டாப் போல.. அதோட அழுகை வேற.. வேறொன்னுமில்லை. இப்போ சாப்பிட்டு மருந்து குடுக்கனும்" என்றாள்.  ஏதோ சாதாரணம்போல சொன்னாலும் நேற்றிலிருந்து ஒரு சொட்டு கண்மூடாமல் உள்ளுக்குள் பதற்றத்தை பதுக்கிக் கொண்டு அவளிருந்தது அவளுக்கு மட்டுமேத் தெரியும். 


அதியின் மேல் சாய்ந்திருந்த பவியையே பார்த்திருந்த அதிக்கோ அத்தனை அவஸ்த்தையாய் இருந்தது. அவன் அறையினுள் நுழைந்தவுடனே "அதிப்பா" என்று தூக்கிக்கொள்ளுமாறு கையை தூக்கிய பவியை நினைத்து. 


திடீரென பவி வாயாலெடுப்பதுபோல செய்ய "அவள என்கிட்ட குடு அதி" என்று வந்த மேகாவை தடுத்தவனோ 


"நீ அவளுக்கு சாப்பிட எடுத்து வை மேக்ஸ்" என்றுவிட்டு பவியை பாத்ரூமிற்கு தூக்கிச் சென்று அவள் வாந்தியெடுத்த பின் அவளை அங்கிருந்த குட்டி ஸ்டூலில் அமர வைத்தான். 


 "இத கழட்டிடலாமா?" என்றவாரே அவள் அணிந்திருந்த டீஷர்ட்டை மட்டும் கழட்டி அங்கிருந்த வாளியில் போட்டவன் வெண்ணீர் குழாயை லேசாக திறந்து துண்டை நனைத்துவிட்டு பவியின் கை, கால், முகம், உடம்பென துடைத்துவிட்டு


"வேற ட்ரெஸ் மாத்துவோமா பவிமாக்கு?" என்க அதற்கு பவியும் சம்மதமாய் தலையசைக்க அவளை தூக்கிக்கொண்டவன் மேகாவிடம். 


"பவிமா ட்ரெஸ்லாம் எங்கருக்கு மேக்ஸ்?" என்று அங்கிருந்தே வினவினான். 


"சேர்ல நேத்து மடிச்சு வச்சது இருக்கும் அதி" என்று கிண்ணத்தில் கஞ்சியை வைத்தவளாய் அவளும் அடுக்களையில் இருந்தே  குரல் கொடுத்தாள். 


மடித்து வைத்ததிலிருந்து ட்வீட்டி படம் போட்ட மஞ்சள் நிற டீஷர்ட் ஒன்றை எடுத்தவன் பவியிடம் கேட்டுவிட்டு அதை அவளுக்கு போட்டு விடவும் மேகா கிண்ணத்துடன் ஹாலுக்கு வரவும் சரியாய் இருந்தது. 


முதலில் வாயால் எடுத்தது உடல் அசதியென உண்ண மறுத்த பவியை கெஞ்சி கொஞ்சி போக்கு காட்டியென மேகா சாப்பிட வைத்து மருந்தையும் கொடுத்துவிட பவியை தோளில் போட்டு தட்டிக்கொடுத்தவாரே அங்குமிங்கும் அதி நடைபயிலவென நேரம் கரைந்தது. 


கஞ்சி, மருந்து, அதியின் அணைப்பென மெல்ல மெல்ல சுகமானதொரு தூக்கத்தினுள் வைபவி பயணிக்க அவளை கட்டிலில் படுக்க வைத்து போர்வையை இழுத்துப் போர்த்தியவன் விடி விளக்கை போட்டுவிட்டு வெளியே வர அதற்காகவே காத்திருப்பவள் போல அமர்ந்திருந்த மேகாவின் பார்வை அவனையும் அவன் பையையும் கேள்வியாய் நோக்கியது. 


அதற்கு சற்றும் சம்பந்தமின்றி, "அசந்து தூங்கறா மேக்ஸ்.." என்றான் ஒரு அம்மாவின் நிம்மதியோடு. 


அதற்கு தலையசைத்தவளோ தன் பிடியிலிருந்து விலகாதவளாய் அவனிடம் "இங்க என்ன நடக்குது அதி?" என்று நேரடியாய் கேட்டுவிட அதற்குமேல் எதையும் மறையாமல் நேற்று அவன் அங்கிருந்து கிளம்பியதில் இருந்து இன்று.. இப்பொழுது.. இங்கு வந்தது வரை ஒன்றுவிடாமல் அத்தனையும் சொல்லிவிட்டான். அவளிடம் இருந்து மறைக்கவோ பொய்யுரைக்கவோ தோன்றவில்லை. 


சொல்லி முடித்தவன் அவள் முகம் பார்த்து நிற்க அவளோ அமைதியாய் தரையையே வெறித்திருந்தாள். 


அகிலன் சொன்னதில் ஒன்றென்னவோ அவளைப் பொருத்தமட்டில்  ஆணித்தரமான உண்மையே


அதீத அன்பு ஒரு கட்டத்தில் எந்த உறவாக வேண்டுமானாலும் உருமாறலாம். அது நட்போ, காதலோ இல்லை சகோதரத்துவமாகவோ இல்லை ஏதோ ஒன்றன் பெயரில் அதை அடக்கி அதன் அடிப்படையில் அந்த உறவை நகர்த்துவது இயல்பானவையே.. ஆனால் மேகாவால் அப்படி செய்ய இயலவில்லை! அகிலன் சொன்னதுபோல அவள் அந்த உறவிற்கு எந்த உருவமும் கொடுக்க தயங்கினாள். அதையே இப்பொழுது அதி வழியாக கேட்க நேரும்பொழுதுதான் புரிந்தது அவளுக்கு.


மௌனமாய் அவளிருக்க அவனோ, "மேக்ஸ்...?" என்றான் கேள்வியாய்


"இப்போ நான் என்ன சொல்லனும் அதி" என்றவளின் குரலில் அமர்ந்திருந்தவளின் எதிரே மண்டியிட்டமர்ந்தவன் அவளது கைகளிரண்டையும் எடுத்து தன் கன்னங்களில் பதித்துக்கொண்டான். 


"இங்க பாரு மேக்ஸ்.. என்ன பாரு ஒரு நிமிஷம்.. இதோ! இப்ப உன் கைக்குள்ள இருக்கறதுதான் நான்.. நான் இவ்வளவுதான் மேக்ஸ்.. என்னோட அதிகபட்ச ஆசையே என் மேக்ஸ் என்கூட இருக்கனும்ங்கறது மட்டும்தான்! நீதான சொன்ன.. வாழ்க்கைப் பாதை  ரொம்ப நீளமானது அதினு.. அது எப்போ வேணா, யார வேணா நம்மக்கிட்ட கொண்டு வந்து சேர்க்கும்னு.. இது சரிவராதுனா என்ன ஏன் உன்கிட்ட மறுபடியும் கொண்டு வந்துச்சு மேக்ஸ்? நான் இந்த பாதைய உங்ககூட சேர்ந்து கடக்க ஆசைபடறேன்.. என் மேக்ஸ்க்கூடயும் பவிம்மாக்கூடயும் கடைசிவரை கைப்பிடிச்சிக்கிட்டே நடந்திடனும்னு ஆசைப்படறேன் மேக்ஸ்..


 பவிம்மா என்னை முதல்தடவை அதிப்பானு கூப்பிட்டப்போ.. I could feel மேக்ஸ்.. I could feel..  இதுதான் Fatherhoodஆனு தெரியாது, ஆனா என்ன அது எதையோ உணர வச்சுது மேக்ஸ். எனக்கு ரெண்டுபேரும் வேணும்.. உனக்காக பவினோ இல்லை பவிக்காக நீன்னோ சத்தியமா என்னால கற்பனைக்கூட செஞ்சு பார்க்க முடியாது! 


உன் கைக்குள்ள இருக்கற இவ்வளவுதான் என் உலகம் மேக்ஸ்.. என்கூட வாங்கனு சொல்லல உங்கக்கூட இருந்துக்கறேனுதான் கேட்கறேன்.." என்று தன் முன் மண்டியிட்டமர்ந்து தன் முகத்தையே பார்த்திருந்தவனின் முகத்தில் இருந்து தன் கையை அகற்றியவள் எழுந்துச் சென்றாள்.  அவள் எழுந்து சென்றதில் ஏதோபோல் ஆகிவிட அப்படியே அமர்ந்துவிட்டவன் முகத்தை அழுந்த துடைத்துக்கொள்ள சற்று நேரத்தில் அவன் முன் நீட்டப்பட்ட புத்தகத்தில் ஒரு கணம் புரியாமல் விழித்தவன் அவள் முகம் காண அவளோ,


"எப்பவோ குடுக்க வேண்டியது.. இப்பதான் முடியுது" என்றாள் 


மெல்லவே அவள் உரைத்ததின் அர்த்தம் உரைக்க பட்டென நிமிர்ந்தான் "மேக்ஸ்?" என்றபடி 


அமர்ந்திருந்தவனின் முன் மண்டியிட்டமர்ந்தவள் அந்த புத்தகத்தை அவன் கையில் வைத்துவிட்டு அவன் முகம் காண அங்கோ உணர்வுகளின் உத்சவம்! 


எந்த கன்னங்களில் இருந்து கையை விலக்கிச் சென்றாளோ அதே கன்னங்களில் அவளது கைகளை எடுத்து வைத்தவன் அவள் விழிகளில் தனதை நிறுத்தி, "நிஜமாவா?" என்பதுபோல் தலையசைத்து வினவ, அந்த கணம் எதை உணர்ந்தாளோ.. ஏன் எதற்கு எப்படி போன்ற கேள்விகளை நிரப்ப இயலாத பதிலொன்றுடன் அவன் நெற்றியில் இதழ் பதித்தவள் லேசாக திரையிட்டிருந்த கண்ணீரையும் தாண்டி 'ஆம்' என்பதாய் முறுவலிக்க அவளை அப்படியே இறுக்கமாய் அணைத்துக் கொண்டான் அவன். 


அணைத்திருந்தவனின் பார்வையில் கண்ணீரையும் தாண்டி பதிந்தது அந்த Pride and Prejudice புத்தகம்.  அது அவன் கேட்டதுதான்! ஆனால் கேட்ட, தேடிய அவனே மறந்துப்போன ஒன்று! 


ஏழெட்டு வருடங்களுக்கு முன்பொரு நாள் மதிய இடைவேளையில் கையில் நாவலுடன் அமர்ந்திருந்தவளிடம் ஆர்வமாய் வந்தவன், 


"த்ரில்லர் தானே?" என்க, திடீரென கேட்டக் குரலில் திரும்பியவள் அவனைக் கண்டு புன்னகைத்து "ஆமா" என்று தலையசைத்துவிட்டு நாவலை மூடி வைத்தாள். 


"நீ நாவல் வாசிப்பியா?" என்றவனிடம் 


"ம்ம்ம் எப்போவாது. நீ?" என்க 


"அதே தான்! எப்போவாது.. எந்த ஜானர் பிடிக்கும்?" 


"த்ரில்லர்" 


"ஆத்தர்?"


"ம்ம்.. அது நிறைய இருக்காங்களே" 


"அதுவும் சரிதான்" என்றவன் திடீரென நினைவு வந்தவனாக 


"நீ Pride and Prejudice வாசிச்சிருக்கியா?" என்று  ஆர்வமாய் கேட்டான்.


"இல்லையே ஏன்?" 


"இல்லை.. என் ஃப்ரெண்ட் ஒருத்தன் சஜ்ஜஸ்ட் பண்ணான். நானும் தேடிப் பாத்தேன் கிடைக்கல இங்க. உங்க வீட்டுக்கிட்ட கிடைச்சா சொல்றீயா?" என்றவனிடம் "சொல்றேன்" என்றதோடு சரி, அதற்கு பின் அவள் அதைப்பற்றி அவனிடம் பேசவில்லை. ஆனால் அதை வாங்கி வைத்திருந்திருக்கிறாள்! 


ஏதோ தோன்ற வாங்கிவிட்ட மேகாவிற்கு அதை படிக்கவும் தோன்றவில்லை அதிரூபனிடம்  கொடுக்கவும் தோன்றவில்லை. இன்றுவரையிலும் அவள் அலமாறியில் உறங்கிக் கொண்டிருந்ததை இப்பொழுதுதான் வெளியே எடுத்திருக்கிறாள். 


கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தவன் அசதியில் அப்படியே கண்ணயர்ந்துவிட போர்வை ஒன்றை எடுத்து வந்து அவனுக்கு போர்த்திவிட்டு சில கணங்கள் உறங்கும் அதியையே பார்த்திருந்தவள் பிறகு விளக்கணைத்துவிட்டு அறைக்கு சென்றுவிட்டாள். 


இரண்டு நாட்கள் சரியாக உறங்காதது, தொடர்ந்து பயணம் செய்தது தேவையற்ற பரபரப்பு என்று எல்லாத்தையும் மீறி உள்ளுக்குள் உதித்த நிம்மதியுணர்வில் இதமாய் துயில்கொண்டான் அதிரூபன்.

— “மென்சாரலில் நின்வண்ணமோ!” கதையிலிருந்து ஒரு பகுதி  

✍️ எழுத்தாளர்: Yagnya 

இந்தக் கதை முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது



முந்தைய அத்தியாயம்  |  அடுத்த அத்தியாயம்

📖 இந்த தொடரின் அத்தியாயங்கள்

Comments