🌿 Featured Story

அன்பில் அவன் அலாதி

கோடைக்கால நினைவுகளின் கதை.

📖 Read Story

🎧 Audiobooks

Listen to our stories while travelling, resting or dreaming.

Enter Our Audio Story World

Romance, thrillers, healing stories & emotional journeys, now in audio form.

🌿 Fresh Updates

New chapters, articles, announcements & story updates.

மென்சாரலில் நின்வண்ணமோ! - 15

✍️ எழுதியவர் Yagnya

 15


பதினைந்து வருடங்களுக்குப் பிறகு...


அந்தி மாலை நேரத் தென்றலை துளி துளியாய் சுகித்தபடி வாசலில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் இலகுவாய் அமர்ந்து அருகில் மெர்ஸி வைத்துவிட்டு சென்றிருந்த குக்கீஸையும் கையில் காபி கோப்பையுமென ரசித்துக் கொண்டிருந்தார் பிரஸ்டன். 


மழைச்சாரலால் மனம்நிறைக்கும் மண்வாசத்தைவிட நடுக்கிவிட்டுச் செல்லும் குளிரின் பனிவாசமென்றால் அவருக்கு அலாதி பிரியம்.  அதனுடன் இதமாய் காபியையும் பருகியபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவரின் இமையோரங்கள் சிந்தனையில் சுருங்கி பின் யாரென அனுமானித்தப் பிறகு இதழோரங்கள் சிரிப்பில் சுருங்கின. 


சைக்கிளை வாசலில் நிறுத்தி அதை அந்த இறும்பு சட்டத்துடன் சேர்த்து பூட்டிவிட்டு காலிலிருந்த ஷூவை அவசர அவசரமாய் கழட்டிவிட்டு கைகளிரண்டையும் ஸ்வெட்ஷர்ட்டின் பைகளுக்குள் இதமாய் நுழைத்தபடி படியேறி வந்துக் கொண்டிருந்தவளையே புன்னகை முகமாய் பார்த்திருந்தார் பிரஸ்டன். 


"ஹாய் ப்பா!" என்று உற்சாக குரலுடன் வந்தவளிடம், 


"ஹாய் டா! உங்கப்பா எப்படியிருக்கான்? ஃபோனடிச்சா எடுக்கறதேயில்ல" என்று குறையாய் ஆரம்பித்தவரை கையமர்த்தி தடுத்து நிறுத்தியவளோ, 


"ஹலோ.. ஹலோ.. ப்பா நான் இங்க உங்க வழக்கு தீர்க்க வரலை. நீங்களே அதை டிஸ்கஸ் செய்துக்கோங்க" என்றவள் பார்வையை சுழலவிட்டவாரே,


"எங்க மை உயிர்நட்பு?"  என்க இப்பொழுது பிரஸ்டனின் முறையானது. கைகள் இரண்டையும் கட்டிக்கொண்டு நன்றாக சாய்ந்து அமர்ந்தவரோ அவளைப் போலவே, 


"நான் ஏன் சொல்லனும்? உன் ஃப்ரெண்ட நீயே தேடிக்கோ" என்று முகத்தை திருப்பிக்கொள்ள கைகள் இரண்டையும் பின்னால்  கட்டிக்கொண்டு அவரருகில் வந்து காதருகில் குனிந்தவள், 


"அப்போ போன வாரம் நீங்களும் அப்பாவும் சேர்ந்து மீட்டிங்னு பொய் சொல்லிட்டு விடிய விடிய கேமாடினத அம்மாட்ட சொல்லவா? இல்ல.. அதுக்கு முந்தின வாரம் பிரியாணியும் ரொட்டி சால்னாவுமா வெளுத்து கட்டினீங்களே.. அதை சொல்லலாமா? ப்ச்! எதுவுமே அவ்ளோ வெயிட்டா இல்லையே...” என்று தாடையில் ஒற்றை விரலால் தட்டி தீவிரமாய் சிந்தித்தவள், “ஆங்! போன மாசம்..." என்று தொடங்கும் முன்பே,


"டேவ் க்ளாஸ்ல இருக்கான் மெர்ஸி வேலையா இருக்கா லூனா ஃப்ரெண்ட்ஸோட வெளில போயிருக்கா.. நான் இங்க இருக்கேன்" என்று அவசர அவசரமாய் சொல்லி முடித்தவர்,


"வைபாம்மா சமத்து பொண்ணுல.." என்றிழுக்க,


"அப்போ இதெல்லாம் உண்மையாவே நடந்ததாப்பா?" என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு  கேட்டவளைக் கண்டு அவருக்கு பகீரென்றானது. 


"அப்போ நீ குத்து மதிப்பாதான் கேட்டியா?" என்க  


"இருக்கட்டும் ஃப்யூச்சர்ல யூஸ் ஆகும்" என்றவளாய் தட்டிலிருந்த குக்கீயை எடுத்து வாயிலிட்டவாரே 


"இது பெனால்ட்டி.." என்றவிட்டு கடைசியொன்றையும் எடுத்துக்கொண்டவள் "பை பை ப்பா!" என்று வீட்டினுள் ஓடிவிட்டாள்.


ஏதோ தன் வயதையொத்தவளைப் போல இவ்வளவு நேரம் வம்பிழுத்துவிட்டு ஓடும் வைபவியை காணக் காண அப்படியொரு புத்துணர்ச்சி! குறைந்தது பதினான்கு வருடங்களாய் அவளைத் தெரியும் அவருக்கு. டேவிடின்  பள்ளி முதல் நாளில் இருந்து இருவருக்கும் பழக்கம். இத்தனை வருடங்கள் ஓடியும் டேவிடும் வைபவியும் நெருங்கிய நண்பர்களாய் இருக்க, ஒரு கட்டத்தில் அவர்களது குடும்பங்களுக்கு இடையேயும் நட்பு அடர்ந்த பாலமாய் அமைந்தது. அதில் இரண்டு தந்தைகளும்தான் இளையவர்களுக்கு சமமாய் நெருக்கமாகிவிட்டனர். ஏனோ அதிரூபனும் பிரஸ்டனும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்துவிட்டனர். 


வெளியே பிரஸ்டனின் தட்டிலிருந்த குக்கீஸையனைத்தும் அபகரித்தவள் ஒவ்வொன்றாய் வாயிலிட்டபடி டேவிடின் க்ளாஸ் இருக்கும் மாடியறை பக்கமாய் படியேறினாள். 


இவள் படி ஏற ஏற முதல் தளத்தின் ஹாலில் ஒரு கருப்பு நிற போர்டும் அதற்கு எதிரில் சில குட்டீஸ்களும் அவர்களுக்கு நடுவில் குட்டி முக்காலி ஒன்றை போட்டு அமர்ந்தபடி எதைப்பற்றியோ தீவிரமாய் சொல்லிக்கொண்டிருந்த டேவிடுமென ஒவ்வொன்றாய் பார்த்தபடி வந்தாள். 


இவள் வருவதை கண்டுவிட்டவனோ  குட்டீஸ்களிடம் திரும்பி எதையோ மெல்லிய குரலில்  சொல்ல அவர்களும் பையை தூக்கிக் கொண்டு அவனுக்கும் கடந்து செல்லும்போது இவளுக்குமென டாட்டா காட்டியபடி குடுகுடுவென ஓடிவிட ஒருவன் மட்டும் டேவிடின் டீஷர்ட்டை பிடித்து இழுத்தான் கீழே குனியுமாறு அவன் கேள்வியுடன் குனிய சிறுவனோ, 


"மறக்காம வரனும்" என்று சுண்டு விரலை நீட்டினான் பிங்கி ப்ராமிஸிற்காக 


"நிச்சயமா!" என்று அவனது சுண்டு விரலை தனதால் பிடித்து உறுதி செய்தவனின் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு இளையவன் ஓடிவிட்டான். 


அவன் செய்ததையே பார்த்திருந்த வைபவியும் அதே போல் டேவிடிடம் சுண்டு விரலை நீட்டியபடி நின்றாள். 


"என்ன?" என்றவனிடம்


"எனக்கும் ப்ராமிஸ் பண்ணு" என்க அவனோ,


"ப்ராமிஸ் என்ன பஞ்சு மிட்டாயா? ஆளுக்கொன்னுனு குடுக்க" 


"மறந்துட்டல"  என்றவளுக்கு


"இல்லையே" என்று உடனடியாய் பதில் வந்தது.


"அப்பாட்ட கேட்டியா? என்ன சொன்னாங்க?"  என்க அவனோ புத்தகங்களை அடுக்கி வைத்தபடி 


"வேண்டாம்னா சொல்லுவாங்க?"  என்று மறுகேள்வி எழுப்பினான். 


"வாவ்! ச்சே இது தெரிஞ்சிருந்தா அந்த குக்கீஸை சீஸ் பண்ணிருக்க மாட்டேனே.." என்று தீவிரமாய் வாய்விட்டே யோசித்தவாறு கீழே விரிக்கப்பட்டிருந்த பாயை மடித்து வைத்தவளையே வெறித்துப் பார்த்தவனோ,


"எந்த குக்கீஸ்?" என்றான் சந்தேகமாய்


"அதான்.. கீழ அப்பா வச்சிருந்தாங்களே.." என்றவள் முடிப்பதற்குள் டேவ் கடைசிப் படிகளை அடைந்திருந்தான். "ம்மா! எனக்கு குக்கீஸ்?" என்ற அலறலுடன்.


அலறியவாரே குக்கீஸ்க்காக வீட்டிற்குள் மாராத்தான் ஓடும் அவனையே பார்த்திருந்தவள் ஒரு கணம் அங்கிருந்த போர்டையும் புக்ஸையும் பார்த்துவிட்டு, 


"அய்யோஹ்! இவன்லாம் ட்யூஷன் எடுத்து.. நல்ல வேளை நான் ட்யூஷன் போலப்பா!" என்று தோளை குலுக்கிவிட்டு அவன் சென்ற அதே காரியத்திற்காக அவளும் ஓடினாள். 


"ம்மா நானும்!" என்றவாறே. 


இருவருமாய் சேர்ந்து மெர்ஸி அவர்களுக்கென வைத்திருந்த தங்களது பங்கை கபளீகரம் செய்துவிட்டே கிளம்பினர்.  வைபா வீட்டிலும் சரி இங்கும் சரி எது செய்தாலும் அங்கு டேவ்க்கும் இங்கு வைபாக்குமென ஒரு பங்கு வைக்கப்படும். 


டேவ் அவனது சைக்கிளை எடுத்துக் கொண்டு வர பிரஸ்டனிடம், "பை பை ப்பா!" என்றுவிட்டு இருவரும் வேகமெடுத்தனர்.  இப்பொழுது கிளம்பும் இவர்கள் வீடு திரும்ப குறைந்தது பத்து பத்தரை ஆகக்கூடும் என்பதை அறிந்ததால் அவரும். 


"பார்த்து போயிட்டு வாங்கடா!" என்றார். 


ஏனெனில் இருவரும் வரிசையாய் சில பல வகுப்புகளில் சேர்ந்திருந்தனர். அதில் தற்காப்பு கலையும் சேர்த்தி. 


இரவு மணி பத்து பத்தே கால் இருக்கக்கூடும். அந்த இருள் நிறைந்த வானடியில் ஆங்காங்கே சாலையில் மிளிர்ந்துக்கொண்டிருந்த விளக்குகளின் துணையோடு யாருமற்ற  சாலையில் சைக்கிளை மெல்ல மிதித்தபடி வந்துக்கொண்டிருந்தனர் டேவ்வும் வைபாவும். 


வைபாதான் திடீரென ஆரம்பித்தாள், "ஆமா.. விதுக்கு எதுக்கு பிராமிஸ் பண்ண?" 


திடுதிடுப்பென அவள் கேட்டதில் சற்று சிந்தித்தவன் பின், "அதுவா.. அடுத்த வாரம் அவன் ஸ்கூல்ல டேலண்ட்ஸ் டே வருதுல அதான் அவன சியர் பண்ண கட்டாயம் வரனும்னு சொல்லிருக்கான்" என்க சில கணங்கள் மௌனமாய் வந்தவள் பிறகு திடீரென, "நானும் வரேன்" என்றாள். 


"ஏன் திடீர்னு?" என்றவனின் குரல் சந்தேகமாய் கேட்க அவளோ,


"நீதான சொன்ன விதுவ சியர் பண்ணனும்னு.. நானும் வரேன்!" என்று திட்டவட்டமாய் முடித்தவளிடம் “வேண்டாம்னா கேக்கவா போற” என்றாலும் சரியென தலையசைத்துவிட்டு சாலையில் கவனமானான் டேவ். 


பேசியபடியே வந்தவர்களின் பேச்சு கடைசியில் டேவ் வீடு வரவும்தான் நின்றது. இவர்களது பேச்சு சத்தத்தில் கதவைத் திறந்து வெளியில் வந்த பிரஸ்டனிடம்,


"உங்க புள்ளைய ஸேஃபா வீடு சேர்த்துட்டேன் அப்பா!" என்க அவரோ வாசலில் நின்றபடியே 


"நன்றி மகளே! அப்படியே என் ஃப்ரெண்ட் அதியோட பொண்ணையும் ஸேஃபா வீடு சேர்த்திரு பாப்போம்.." என்றார் அக்கறையும் குறும்புமாய்.


"அடுத்து அதுதான் செய்யப்போறேன்பா" 


"குட்! உள்ள வா வைபாமா.. சாப்டுட்டு கிளம்பலாம்" 


"இன்னொரு நாள்ப்பா. இப்போ வீட்டுல கொஞ்சம் வேலை இருக்கு. டேவ் சொன்னானா? நீங்க எப்போ வர்ரீங்க நாளக்கழிச்சு?" 


"சொன்னான்டா. நாளக்கழிச்சு லீவ்தானே? விடியறதே அங்கதான்!" என்று குறும்பாய் மொழிந்தவரிடம் புன்னகைத்து விடைப்பெறும் விதமாய் சைக்கிளை திருப்பியவள் ஒரு கணம் பொறுத்தவளாய் அப்படியே தலையை மட்டும் திருப்பி டேவ்விடம், 


"கால் பண்ணா எடு பக்கீ! தூங்கிட்டேன் பாக்கலைனு காரணம் சொன்ன கொன்றுவேன்!" என்க அவனோ 


"நீ  எப்பவும்போல சனிக்கிழமை தூங்கி கட்டடிக்காம சீக்கிரம் கிளம்பியிரு! நாளைக்கு இண்ட்டர் க்ளாஸ் டிபேட் காம்படிஷனிருக்கது.. ஞாபகமிருக்குல?"  


"ம்ம் ம்ம் இருக்கு.." என்று அசடுவழிய அவனை முறைத்துவிட்டு கிளம்பினாள் அவள். காரணம் யாதெனில் அவள் உருவாக்கி வைத்திருந்த வரலாறு அப்படி! சனிக்கிழமை.. அதுவும் அரை நாள்தான் வகுப்புகள் இருந்தும் அம்மையார் டேவ் வந்து அவளறை கதவை தட்டும் வரை தூங்கிவிட்டு பின் அடித்துப்பிடித்து கிளம்பியதெல்லாம் அவளது வீர தீர சாகசங்களில் அடங்கும்! அதை மனதில் வைத்து அவன் சொல்வதை அறிந்திருந்ததால்தான் அந்த முறைப்பு. 


அவள் வீடு வந்தப்பொழுது சுகராகன் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்த வாக்கில் உறங்கியிருந்தான். டீவியை சத்தமில்லாமல் வைத்து அதிரூபன் பார்த்துக்கொண்டிருக்க இடது பக்க அறையில் மேகராகா அடுத்த நாள் வகுப்புக்கு தயாராகிக்கொண்டிருப்பது ஒளிர்ந்த விளக்கு உணர்த்தியது. 


ஆம்! சுகராகன் அவளது குட்டி தம்பி. எட்டாம் வகுப்பு மாணவன். சுபாவத்தில் அப்படியே மேகராகாவின் மறுபிரதி. 


மேகராகா இப்பொழுது அதே கல்லூரியின் காமர்ஸ் டிபார்ட்மெண்ட்டின் ஹெச்.ஓ.டி. 


அதிரூபன் சொந்தமாய் தொழில் தொடங்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறான். இப்பொழுது அவன் வைபவி, சுகராகன் என்ற இரு பிள்ளைகளின் அப்பா! மேகராகாவின் கணவன்.. காதலன்.. எல்லாம்!


மகளை கண்டுவிட்டு சத்தமெழாதவாறு எழுந்துவந்த அதி அவளது தோள் பையை வாங்கிக்கொண்டவனாய், "இன்னைக்கு எப்படி போச்சுடா க்ளாஸெல்லாம்?" 


"எப்பவும்போல சூப்பர்கூல் அதிப்பா!" என்க அதில் மனம் நிறைந்த புன்னகையுடன் 


"ஃப்ரெஷாகிட்டு வர்ரீயா பவிமா? சாப்பிடலாம்"  என்றதும் அவள் உடைமாற்றி வர அவளறைக்குச் செல்ல இங்கு அதி சுகராகனின் தோள்களை மென்மையாய் தட்டியபடி, "சுகா! எழுந்திருடா சாப்பிடலாம்" என்று எழுப்பினான். அசதியில் கண்ணயர்ந்திருந்த சுகராகன் அதி தொடவும் பட்டென விழித்துக்கொண்டான். 


"மணியென்னப்பா? அக்கா வந்துட்டாளா?" என்றவாரே.


"ம்ம் மணி பத்தரை" 


"ஓ..." என்று கையிலிருந்த புத்தகத்தை மூடி வைத்தவன் "நான் அம்மாவ கூட்டு வரேன்" என்றுவிட்டு மேகாவை சாப்பிட வருமாறு அழைத்தவன் தந்தையுடன் சேர்ந்து எல்லாவற்றையும் அடுக்களையிலிருந்து சாப்பாட்டு மேசைக்கு மாற்றவும் மற்ற இருவரும் வருவதற்கும் சரியாய் இருந்தது. 


அன்றைய தினத்தை அவரவர் பார்வையில் பகிர்ந்தவாரே உண்டு முடித்து சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு உறங்க சென்றனர் நால்வரும். 


நாளை சீக்கிரம் எழ வேண்டுமென்று நினைப்பு ஒரு புறமிருந்தாலும் கண்முன் வரிசைக்கட்டி நின்ற வேலைகளை ஒதுக்க இயலாது விறுவிறுவென முடித்தவள் ஒருகட்டத்தில் அவளை அறியாமலேயே உறங்கிப்போனாள்.


 திடீரென காதருகில் ஒலித்த ரிங்டோன் ஆழ் உறக்கத்தில் இருந்த வைபவியை எரிச்சலடைய செய்தது. கண்களை திறவாமல் அப்படியே கையை அலையவிட்டு ஃபோனை எடுத்தவள் அதன் தொடு திரையில்  இங்குமங்குமாய் இழுத்துவிட்டு வைக்க அது டிஸ்கனெக்ட் ஆவதற்கு பதிலாய் அட்டென்ட்டாகி ஸ்பீக்கர் மோடிற்கு போயிருந்தது. 


"என்ன நல்ல தூக்கமா?" என்ற குரலில் முதலில் "ம்ம்.." என்றவள் பின் உண்மை உரைக்க அடித்துப்பிடித்து எழுந்தமர்ந்து மணி பார்க்க அது ஆறு என்று காட்டவுமே அவளுக்கு மூச்சு சீரானாது. 


"உன்ன!" 


"என்ன அப்பறம் திட்டிக்கலாம் இப்போ போய் கிளம்பு! நான் ஷார்ப்பா எட்டு மணிக்கு அங்க இருப்பேன்" என்று வைத்துவிட ஒரு நொடி அவளறையை நோட்டமிட்டவளுக்கு நேற்று எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு உறங்கியது நினைவில் வர.. ஜெட் வேகத்தில் அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டு கிளம்பி அவனுக்கு முன்னதாக வாசலில் சைக்கிளுடன் காத்திருந்தாள். 


"அதிசயமா இருக்கு!" என்று வந்தவனிடம் 


"இன்னைக்கு டிபேட்ல.." என்க அவனோ 


"அதானே பார்த்தேன்!" என்றதோடு சரி அதற்கு மேல் எதுவும் பேசாமல் கிளம்பிவிட்டான். அவள் எதை சொல்கிறாள் என்றுணர்ந்தும். 


காலையில் வழமைப்போல வகுப்புகள் ஒரு புறம் நடக்க மறுபுறம் செமினார் ஹாலும் தயாரானது. வகுப்புகள் கெடாதவாறு போட்டியை கடைசி வகுப்பு நேரத்தில்  வைத்திருந்தனர். முடித்துவிட்டு கிளம்ப சுலபமாய் இருக்குமென்றோ இல்லை இதை காரணமாய்காட்டி மாணவர்கள் யாரும் அங்குமிங்கும் அலையக்கூடாது என்றோ இப்படியொரு ஏற்பாடு.  


செமினார் ஹாலின் கடைசி வரிசையில் ஏஸிக்காற்று பாதிக்காததைப்போல அமர்ந்து மேடையையே கவனித்துக்கொண்டிருந்தனர் டேவ்வும் வைபாவும். 


மெல்ல அவள் புறம் சரிந்தவன், "உன் பார்ட்னர்.. திவி எங்க?" என்றான் யார் கவனத்தையும் ஈர்க்காதவாறு. 


"தெரியல.." என்று அவளும் அவனைப்போலவே சொல்ல அவனோ 


"என்ன?" என்று அதிர்ச்சியில் சத்தமாய் கேட்டுவிட முதல் வரிசையில் இருந்து இவன் புறம் திரும்பிய லெக்சரரின் கண்டனப் பார்வைக்கு இவனும் இங்கிருந்தபடியே "சாரி சார்" என்று மெல்லமாய் முணுமுணுத்தான். நியாயப்படி அவன் அங்கு இருக்கவேக்கூடாது. போட்டியில் பங்கு பெறுவோர் மட்டுமே அங்கிருக்க இவன் மற்றவர்களுக்கு டிமிக்கி குடுத்துவிட்டு அமர்ந்திருந்தான்.


"இப்போ ஏன் ஹைப்பராகற?" 


"எது ஹைப்பர் ஆகறேன்னா? இப்போ நீ என்ன பண்ணுவ பார்ட்னர் இல்லாம?" என்றவன் முந்தைய அனுபவத்தால் அவளுக்கு மட்டும் கேட்குமாறு பேசினான்.


"பாப்போம் இரு.." என்றவள் முதலில் திவிக்கு மெஸேஜ் அனுப்ப அவளிடம் இருந்து பதில் எதுவும் வராமல் போகவே  அவர்களது க்ளாஸ் வாட்ஸாப் க்ரூப்பில் சுருக்கமாய் விஷயத்தை சொல்ல அப்பொழுதே அவள் இன்று வராதது தெரிந்தது. 


"என்னாச்சு?" என்றவனிடம் அவள் ஃபோனை நீட்ட அதை வாங்கிப் பார்த்தவனோ, "இப்போ என்ன பண்ண வைபா?" என்று வினவிக் கொண்டிருந்தப் பொழுது


"ஆட்சேபனையில்லைன்னா.. நான் உன் பார்ட்னரா இருக்கவா?" என்று வந்த குரலில் இருவரும் ஒருசேர அதிர்ந்தனர். 

— “மென்சாரலில் நின்வண்ணமோ!” கதையிலிருந்து ஒரு பகுதி  

✍️ எழுத்தாளர்: Yagnya 

இந்தக் கதை முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது


முந்தைய அத்தியாயம்  |  அடுத்த அத்தியாயம்

📖 இந்த தொடரின் அத்தியாயங்கள்