🌿 Featured Story

அன்பில் அவன் அலாதி

கோடைக்கால நினைவுகளின் கதை.

📖 Read Story

🎧 Audiobooks

Listen to our stories while travelling, resting or dreaming.

Enter Our Audio Story World

Romance, thrillers, healing stories & emotional journeys, now in audio form.

🌿 Fresh Updates

New chapters, articles, announcements & story updates.

மென்சாரலில் நின்வண்ணமோ! - 16

✍️ எழுதியவர் Yagnya

 16


அது த்ருவ்வின் குரல்! காலையில் 'இன்னைக்கு டிபேட்ல' என்று வைபா குறிப்பிட்ட த்ருவ்வின் குரல்! த்ருவ், அந்த கல்லூரியில் வெகு பிரபலமான ஒருவன். அவர்களது வகுப்புதான் அவனும் முதலில் பாட்டுக்காக மைக் பிடித்தவன் சிறந்த பேச்சாளனும்கூட என்பதை பிறகே அனைவரும் அறிந்தனர்.  அவனது வித்தியாசமான பேச்சும் சரளமான தமிழும் இனிமையான குரலுமென அனைவரையும் தன் வசம் இழுத்துவைத்திருந்தான். அதற்கு வைபவியும் விதிவிலக்கல்ல! அவளுக்கு த்ருவ் மேல் மெல்லிய ஈர்ப்பிருந்தது. அதை நன்கறிந்திருந்த டேவ் வைபாவை பார்க்க அவளோ விழிகளிரண்டும் மலர்ந்தவளாய், 


"உன் பார்ட்னரும் வரலையா?" என்று கேட்டாள். 


"ம்ம் ஆமா! நாம சேர்ந்து பார்ட்டிஸிபேட் பண்ணலாமா?" என்றவனுக்கு சம்மதமாய் தலையசைத்தவள் 


"நிச்சயமா!" என்றவாரே கையிலிருந்த தாளை பைக்குள் போட்டுவிட்டு "அப்போ இது நிஜ டிபேட்டா இருக்கப்போவுது! அதாவது.. ஸ்க்ரிப்ட் இல்லாம" என்க த்ருவ்வும் 


"ஆவலா காத்திட்டிருக்கேன்" என்று புன்னகைத்துவிட்டு சாய்ந்தமர்ந்துக்கொள்ள இங்கு இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்த டேவோ 'நான் ஒருத்தன் நடுவுல இருக்கேன்டா!' என்பதைப்போல் பார்த்து வைத்தான். அவனுள்ளோ இனி இதை எத்தனை வாட்டி இவள் சொல்லிக்காட்டப் போகிறாளோ என்று பதறியது.


சற்று நேரத்திலெல்லாம் இவர்களது முறை வர இருவருக்கும் டேவ் ஆல் த பெஸ்ட் சொல்ல அதை த்ருவ் கண்டுக்கொள்ளாததைப்போல நகர்ந்ததை வைபா கவனித்துவிட்டாள். 


த்ருவ் அப்படி செய்ததில் ஒரு கணம் தடுமாறினாலும் பிறகு அதை புறந்தள்ளிய டேவ் இப்பொழுது வைபாதான் முக்கியம் என்பதைப்போல அவளுக்கு இரு கட்டைவிரல்களையும் உயர்த்தி காட்டினான். 


ஏனோ சிரித்த முகமாய் தனக்கு ஆல் த பெஸ்ட் உரைத்த நண்பனை த்ருவ் அவமதித்தது அவளுக்கு ஒருமாதிரியானது. அதுவரை அவன் மேலிருந்த ஈர்ப்பு ஒரே நொடியில்  ஆட்டம் கண்டதுபோலனாதில் கவனத்தை தொலைக்காமல் தன் வாதத்தால் அவனை நெருக்கியவள். நடுவர்கள் பஸர் அழுத்திய மறுகணம் திரும்பியும் பாராமல் அவளிருக்கைக்கு வந்து அமர்ந்துவிட்டாள். 


"ஹே! செம! செம பக்கி! எல்லாமே சரியான பாய்ண்ட்ல இருந்தது, வளவளனு இழுக்காம.." என்று அவளைவிட உற்சாகத்தில் குதித்தவனைப் பார்த்தவளுக்கு அவனது உற்சாகம் தொற்றிக்கொள்ள 


"நாங்கல்லாம் யாரு?" என்று சட்டை காலரை இழுத்துவிட்டாள். 


"இந்த கண்றாவியெல்லாம் பாக்கவேண்டிவரும்னுதான் நான் அடிக்கடி பொய் சொல்றதில்ல" என்க அருகிலிருந்தவனின் தொடையில் நறுக்கென கிள்ளியவள் "உன்ன! வெளில வா எரும!"  என்று இங்கு இவர்கள் பேசிக்கொண்டிருக்க  முடிவுகள் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படுமென்று லெக்சரர் ஒருவர் அறிவிக்கவும் எல்லோரும் கலைந்தனர். 


வாசலருகில் வந்த வைபாவை யாரோ அழைப்பது போலிருக்க இவள் யாரென்று திரும்பி பார்க்க அங்கு நின்றிருந்த த்ருவ் அவளருகில் வந்தான்.


"உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.. அங்க" என்று காலியாய் கிடந்த பக்கத்து வகுப்பறையை சுட்டிக்காட்ட 


இவனிடம் "ம்ம்" என்றவள் டேவிடம் "டேவ் இரு வரேன்" என்றுவிட்டு அந்த அறையினுள் நுழைந்தாள்.


"செமையா பேசின இன்னைக்கு" என்றவனிடம்


"ஐ நோ" என்றவள் ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டாள்.


மறுபடியும் எப்படித் தொடங்க என்று தடுமாறியவன் பிறகு "எங்கேயோ வாசிச்ச ஞாபகம் 'ஆண்களை வெல்லும் பெண்கள் தனியழகுனு'.."


"மண்ணாங்கட்டி!" 


"வாட்?"


"மண்ணாங்கட்டின்னேன்! பின்ன என்ன த்ருவ்? டிபேட்ல கருத்துக்கள்தான் மோதுச்சே தவிர ஆணும் பெண்ணுமில்ல! வாதத்தைப் பார்க்கறத விட்டுட்டு அங்க பாலின பாகுபாடை பாக்கறது.. பை த வே.. யார் இந்த மாதிரிலாம் எழுதறது?" என்க அவன் எப்படி சொல்லுவான் எழுதியதே அவன் எனும்பொழுது. 


அதிர்ச்சி குறையாமல் புன்னகைத்தவன், 

"கூல்.."  என்க அதற்கும் அவள் 


"ஐ நோ" என்றாள். 


த்ருவின் மனதினுள்ளோ, 'இவள் தன்னம்பிக்கை லெவல்!' என்றலறியது. அது அவனை இன்னுமின்னும் ஆர்வமாக்கிட அவளிடம் பேச்சை வளர்க்க எண்ணினான். 


"பரவால்ல.. நீ என்ன மாதிரியே யோசிக்கற. நான்கூட அந்த டேவிட் கூடவே சுத்தரதால நீயும் அவன போலத்தானு நினைச்சிட்டேன்.." என்று விரிய புன்னகைத்தவனின் கண்களில் மெச்சுதலைக் கண்டவளின் முகம் சட்டென மாறியது. 


சற்றும் யோசிக்காதவளாய், "வாட்? உன்ன மாதிரி யோசிக்கறேனா? நீ என்ன இண்ட்டெல்லிஜென்ஸ்க்கு ஏதாவது ஸ்டாண்டர்டா? அதென்ன அது உன்ன மாதிரி யோசிக்கறது.. அப்போ அடுத்தவங்களோட திங்கிங்க கூட உன்னால ஏத்துக்க முடியல.. அந்த க்ரெடிட்டகூட இப்படி சொல்லி நீ எடுத்துக்கற இல்லையா.. சாரி டூ சே திஸ் த்ருவ்! மத்தவங்க வேணா நீ இப்படி சொன்ன உடனே உச்சி குளுந்துபோலாம்.. ஆனா சுயசிந்தனையுள்ள யாரும் இதுக்கு நீ எதிர்ப்பார்க்கற மாதிரி ரியாக்ட் செய்யமாட்டாங்க! உன்மேல சிலருக்கு சின்ன  க்ரேஸ் தான் இருக்கே தவிர பித்தொன்னும் பிடிக்கல!" இனிய கனவொன்று கலைந்தது ஒருபுறமென்றால் இன்னொரு புறம் அவளால் இவனின் பேச்சை சகித்துக்கொள்ளவே இயலவில்லை. த்ருவ்க்கோ வைபா இப்படி பேசுவாளென்று கனவில்கூட நினைத்தானில்லை!


அவனிடம் யாரும் இப்படி பேசியதுமில்லை! அவனுக்கு அங்கு தனி மரியாதை இருந்தது. த்ருவ் என்றால் தனி க்ரேஸ் இருந்தது. அடிக்கடி மைக் பிடித்தவனுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்ததென்னவோ உண்மைதான். அவனிடம் நட்பு பாராட்ட சிலர் தயாராய் நிற்க இவளென்னவென்றால் அவனை தோரணமாய் கட்டி தொங்கவிடாதக்குறையாக அவனது ஒவ்வொரு வார்த்தைக்குமள்ளவா எதிர்வார்த்தை பேசுகிறாள்! அதுவும் இத்தனை நேரம் முகம் மலர்ந்து நின்றிருந்தவளின் இந்த திடீர் மாற்றத்தின் காரணம் புரியாமல் போனதில் த்ருவிற்கு வருத்தத்தைவிட அதிர்ச்சிதான் அதிகம். 


கண்ணாடி தடுப்புக்கு உள்ளே இருப்பதால் வெளியே எதுவும் கேட்க வாய்ப்பில்லைதான்.. இருந்தாலும்


"ஹே! என்ன? நீதான பேச வந்த? நீதான பின்னாடியே சுத்தின?" என்று அதிர்வை விலக்கிக்கொண்டு தான்தான் அவளை அழைத்தோம் என்பதையே மறந்து எகிறத் தயாராக அவளிடமோ,


'எதே?' பாவனைதான். 


"என்ன? நான் உன் பின்னாடி சுத்தினேனா? நேரந்தான்! அதென்ன அது  எல்லாரும் உன் பின்னாடியே சுத்தரதா வேற நினைப்பா உனக்கு?" நினைவு வந்தவளாக,


"என்ன சொன்ன நீ? டேவ் கூடவே இருக்கதால அவனப்போலவா? அவனப் பத்தி உனக்கு என்ன தெரியும்? உன்னோட பேச்செல்லாம் வெறும் மைக்கோட நின்னுடும்! ஆனா அவன் அதையே வாழறவன்! பிறந்ததுல இருந்து அவன அவன் வீட்டுல அப்படியே வளர்த்துட்டாங்க அதான் அவனுக்கு வித்தியாசம் தெரியல.. நீ கைத்தட்டுக்காக பேசறததுதான் அவன் லைஃப் ஸ்டைலே!  பத்து புக்க வாசிச்சிட்டு புரியாத நாலு வார்த்தைய அங்கயும் இங்கயுமா மாத்திப்போட்டா நீ பெரிய  அப்பாட்டக்கரா? சமூகவாதியா? உன்ன மாதிரி ஆட்கள்தான் இந்த சமூகத்துக்கே வியாதி!" என்று வார்த்தைகள் ஒவ்வொன்றையும் கடித்து துப்பிவிட்டு திரும்பியவள் ஒருகணம் பொருத்து அவனிடம் திரும்பினாள்,


"இன்னொரு தடவ என்ன மாதிரியே யோசிக்கற.. நாமல்லாம் யுனிக்னு உளறிக்கொட்டறதுக்கு முன்னாடி யோசிச்சுக்கோ! இந்த உலகத்துல ஜனிக்கற எல்லாருமே யுனிக்தான்! உன் பேச்சுக்கு கைத்தட்டினதால நாங்க  ஒன்னும் முட்டாளில்ல!" என்றுவிட்டு கதவை வேகமாய் சாத்தும் முன் அவனைப் பார்த்து "ஹிப்போக்ரைட்!" என்ற ஒரே வார்த்தையில் அவனது பிம்பத்தை குழித்தோண்டி புதைத்துவிட்டு கண்ணாடி கதவென்றும் பாராமல் அடித்துச் சாத்திவிட்டு சென்றுவிட்டாள். 


த்ருவ் உறைந்துப்போனான். 


விறுவிறுவென வெளியே அவள் வருவதை பார்த்துவிட்டு பேசிக்கொண்டிருந்தவர்களிடம் அவசர அவசரமாய் விடைப்பெற்றுக்கொண்டு வந்த டேவ்க்கு அவள் முகம் பார்த்தே ஏதோ சரியில்லை என்று புரிந்துவிட "என்னாச்சு வைபா?" என்றவனிடம் 


"கிளம்பலாம்" என்றதோடு சரி அதற்கு பின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீடு வந்தடையும் வரையிலுமே வைபா ஒரு வார்த்தை பேசவில்லை. 


வீட்டிற்கு வந்தவள் வீட்டினுள் செல்லாமல் நேராக மாடிப்படி ஏறிவிட அவள் பின்னாலையே ஏறியவன் வைபாவை அழைக்க எத்தனித்த அதிரூபனிடம் வாயில் சுட்டு வரல் வைத்து வேண்டாம் என்பதுபோல் தலையசைக்க அதியும் அவர்களுக்குள் சண்டைப்போலவென்று அமைதியானான். 


❀ ❀ ❀ 


சிரிப்பை அடக்க முயன்று தோற்றென அடக்கமாட்டாமல் சிரித்துக்கொண்டிருந்த டேவ் வைபா தான் சிரிப்பதற்கு தன்னிடம் கோபம்கூட காட்டவில்லை என்பதை உணர்ந்து,


"உண்மைலயே.. அப்படியே சொல்லிட்டு வந்துட்டீயா?" என்றான் எத்தனையாவது முறையாகவோ.


"ப்ச்! ஆமா" என்றவளின் முகம் சிரிப்பதற்கு மாறாய் கலங்கத் தொடங்க அதில் பதறியவனோ,


"ஏ! வைபா? என்னாச்சு" என்கையிலேயே அருகில் அமர்ந்திருந்தவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள் வைபா.  

இன்னதென்று தெரியாவிட்டாலும் அவள் கலங்குவதை அவனால் காண இயலவில்லை. ஆதரவாய் அவள் முதுகில் தட்டிக்கொடுத்தவன் அவள் அசையாமல் அப்படியே இருக்கவும் சந்தேகத் த்வனியில்,


"என்னாச்சு வைபா?" என்றான் குரலில் மென்மையை நிரப்பி.


அவளும் "தெரியல.." என்றாள் அசையாது. 


"இப்படி பேசிட்டோமேனு நினைக்கறீயா?" என்று தயக்கமாய் அவன் முடிக்கக்கூடயில்லை சட்டென எழுந்தவள் அவனையே வெறித்தவாறு.


"என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது?" என்க 


‘கொரங்கு மாதிரி’ என்று அவனின் பார்வை சொன்னது. 


“அப்போ இன்னும் நல்லா கேட்றுக்கலாம்னு நினைக்கறீயா? இல்லை.. இவனப்போய் எப்படி பிடிச்சதுனு நினைக்கறீயா?" மறுபடியும் தலையைத் தூக்கியவள்


"உனக்கெப்படி தெரியும்?" என்றாள் அதிர்ச்சி குறையாமல். 


அவள் நெற்றியில் சுட்டு விரல் வைத்து தள்ளியவனோ, "இத்தனை வருஷம் உன்கூட இருந்துட்டு இதுக்கூட தெரியல்லன்னா அப்பறம் நான் என்ன பெஸ்ட் ஃப்ரெண்ட்?" என்றவன் அத்தோடு நிறுத்தியிருந்திருக்கலாம் அதைவிட்டு, 


"ஆனா அவன்லாம் ஒரு ஆளுனு அவனப் போய் முதல் க்ரஷ்னு சொன்னப் பாத்தீயா?" என்றுவிட ஏற்கனவே அதை நினைத்து வருந்திக்கொண்டிருந்தவளுக்கு இவ்வார்த்தைகள் இன்னும் அழுத்தம் சேர்க்க மொத்தமாய் அது டேவிடம் திரும்பியது. அவளுக்கு த்ருவ் பேசியதைவிட டேவ் இப்பொழுது ஆறுதலாய் பேசாமல் இப்படி  பேசியது கோபத்தை கிளறியது. 


"போடா டபரா தலையா!" என்று கத்திவிட அவனும் என்றும்போலென்று எண்ணி 


"நீ போடி சப்பமூக்கி!" என்றுவிட அவன் முதுகில்  பட்டென்று ஒரு அடி வைத்தவள்  விடுவிடுவென எதிரில் படியேறி வந்துக்கொண்டிருந்த மனோவைக்கூட கண்டுக்கொள்ளாமல் கீழிறங்கி சென்றுவிட்டாள். 


"செல்லம்மா! செல்லம்மா!" என்று இருதரம் அழைத்தும் அவள் திரும்பாததைக் கண்டு மனோ பதற 


“எரும! எரும! அய்யோ.. ச்சை! அது கையா இல்ல கடப்பாறையா!” வலியில் புலம்பித் தள்ளியவன் மனோவை கண்டுவிட்டு “இவனொருத்தன்! அடிவாங்கினவன விட்டு அடிச்சிட்டுபோறவள பாத்துக்கிட்டு!” என முணுமுணுத்தவாரே


 "மனோ.. மனோ! இங்க வா" என்று திட்டில் அவன் அருகில் இருந்த இடத்தை காட்டி அழைக்க "செல்லம்மாக்கு என்னாச்சு?" என்று தயங்கியவனிடம் 


"நீ  இங்க வா.. எனக்கு என்னாச்சினு பாரு!" என்றான் விடாபிடியாய். டேவ் அருகில் வந்து அமர்ந்த மனோ, "என்னடா மறுபடியும் சண்டை போட்டாச்சா?" என்க 


"ப்ச் இது அது இல்ல மனோ.." என்றவன் அன்று நடந்தது அனைத்தையும் ஒன்னுவிடாமல் சொல்ல மனோவோ, 


"ப்ச்.. ஃபர்ஸ்ட் க்ரஷ்.. இப்படியாகிருக்க வேணாம்" 


"இதுதான் கரெக்ட் மனோ"


"என்ன? நீயேன்டா இப்போ அவ அப்பா மாதிரி பேசற?" 


"ப்ச் இல்ல மனோ.. அவனுக்கும் வைபாக்கும்லாம் செட்டே ஆகாது! உனக்கு தெரியும்ல.. இவளப்பத்தி? அவன் இவளுக்கு எதெல்லாம் எரிச்சலாக்குமோ அதெல்லாம் செய்யற டைப்! மனசுல என்னவோ பெண்கள் குலத்த காக்கப் பிறந்தவன்ற ரேஞ்சுக்கு நினைச்சிக்கிட்டு நடந்துப்பான். அவன் பெண் என்பவள்னு மைக் பிடிச்சா நான் ஹெட் ஃபோனுக்குள்ள ஐக்கியமாயிடுவேன்னா பாரேன்!" 


"ஏன் அப்படி சொல்ற?" 


"பின்ன என்ன மனோ.. பெண்கள் அப்படி இப்படி.. தெய்வம் அது இதுனு அநாவசியமா டிக்னிஃபை பண்ணி பேச வேண்டியது..  ஒரு நல்ல பொண்ணு எப்படியிருப்பா தெரியுமானு பக்கம் பக்கமா ஒரு புக்கே போட்டு வச்சிருப்பானு  நினைக்கறேன். இவனுங்களே ஒரு கோட்டப் போட்டுட்டு அதுதான் புரட்சி புதுமைனு பேச வேண்டியது எந்த பொண்ணாவது அதை தாண்டிட்டா இவளெல்லாம் பெண் இனத்துக்கே கேடுங்க வேண்டியது. இவன மாதிரி ஆட்கள்லாம் திமிரா இருக்கப் பெண் தனியழகுனு சொல்லுவாங்க ஆனா அதே ஒரு பொண்ணு அவங்க நினைச்சதவிட அதிகமா தன்மானமும் தன்னம்பிக்கையுமா இருந்துட்டா ஏத்துக்க முடியாது. இது எப்படி தெரியுமா இருக்கு..  நீ இண்டிபெண்டன்ட்டா இருக்கனும் ஆனா அந்த independency கூட நான் சொல்ற அளவுதான் இருக்கனும்ற ரகம். இவங்க ரெண்டு பேருக்குள்ள செட்டாகும்னா நினைக்கற? இன்னும் ரெண்டு நாள் போயிருந்தா அவன் தலைய பேத்திருப்பா உங்க செல்லம்மா! இது இப்படி முடிஞ்சதே பெஸ்ட் மனோ. இன்னும் போயிருந்தா வைபாதான் வருத்தப்பட்டிருப்பா.." என்றவன் சற்று நேரத்திற்கு முன் அவளிடம் வம்பிழுத்ததிற்கு நேரெதிர் பாவத்துடன் இருந்தான். 


"இதை அவகிட்ட தெளிவா சொல்றதுக்கென்ன?" 


"விடு மனோ.. இப்போ கோவத்துல இருக்கா என் மேல. அப்பறம் நார்மலாகிடுவா.. இப்போ போனா அவனுக்கும் சேத்து என்ன செஞ்சிடுவா"


"கோவத்துலயா? செல்லம்மா தலைய குனிஞ்சிட்டு போன மாதிரி இருந்தது" என்றவன் கீழே சென்றுவிட அவன் சொன்னதன் அர்த்தம் தாமதமாகவே உரைக்க டேவ்வும் கீழே ஓடினான். ஹாலில்  அமர்ந்திருந்த அதி டேவ் ஓடி வருவதை பார்த்துவிட்டு


"டேய் டேய்! பார்த்து வா! ஏன் அவசரம்?" என்க மூச்சு வாங்கியவாரே


"வைபா.. எங்க?" என்றான்.


"நீ முதல்ல உக்காரு! எப்படி மூச்சு வாங்குது பாரு" என்று தான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழ முயன்றவனை தடுத்தவனோ, 


"அதெல்லாம் வேணாம் அதிப்பா.. வைபா எங்க?" 


"ரூம்ல இருக்கா.. என்னாச்சு?" என்றான் குரலை தாழ்த்தி 


டேவ்வும் அவனைப்போலவே இரு ஆட்காட்டி விரல்களையும் குறுக்காக வைத்து "சண்டை" என்று வாயசைக்க அதி தலையில் அடித்துக்கொண்டான்.  


"அவள ஒரண்டை இழுக்கதே வேலையா வச்சிருக்க! பேசு போ!" என்றவன் என்ன நினைத்தானோ திடீரென டேவ்வின் கைப்பற்றி நிறுத்திவிட்டு "இரு!" என்று அடுக்களையினுள் நுழைந்தவன் பால் காய்ச்சி வைபவியின் கோப்பையில் நிரப்பி மற்றவனிடம் கொடுத்தான். 


"லவ் யூ அதிப்பா!" என்று உதட்டை குவித்து முத்தமிடுவதுபோல செய்ய அதிரூபனும் ஒற்றை விரலை காட்டி


"ஓடிரு!"  என்று எச்சரித்து சிரித்தான்.


கையில் ட்ரேயுடன் வந்தவனுக்கு, வைபவியின் அறைவாயிலில் மூடப்பட்டிருந்த கதவுக்கு முன் நின்று தட்ட எத்தனிப்பதும் பின் இரண்டடி திரும்பி செல்வதும் பிறகு மறுபடியும் கதவின் அருகில் வருவதுமாய் இருந்த மனோ கண்ணில்பட அவனையே சுவாரஸ்யமாய் பார்த்துக்கொண்டு வந்தவன் அவனருகில் வந்தவுடன் அவன் காதருகே சென்று 


“இங்க என்ன பண்ற?” என்றான் ரகசியக் குரலில். 


டேவ் அப்படி ரகசியமாய் பேசியதில் காதுமடல்கள் கூசிட இரண்டடி நகர்ந்த மனோ “என்னடா பண்ற?” என 


“நீ என்ன பண்ற மனோ?” 


“பார்த்தா தெரியல..”


“தெரியாமத்தான் கேக்கறேன்” 


“உன்ன! அவள கடுப்பேத்திவிட்டது மட்டுமில்லாம சமாதானப்படுத்த வந்தவனையும் கடுப்பேத்தப்பாக்கறீயா நீ!” 


“அடேங்கப்பா! அப்படியே கடுப்பேத்திட்டாலும்!” என்றவன் ட்ரேயை இடது  கைக்கு மாற்றிவிட்டு கதவு குமிழியில் வலது கை வைக்க அது திறந்துக்கொண்டது. 


“தொறந்தா இருந்துச்சு?” என்று அதிர்ந்த மனோவை கிண்டலாய் பார்த்தவன் 


“உன் செல்லம்மா என்னைக்கு கதவ தாழ் போட்றுக்கா? அதுவும் சண்டை போட்டா யாராவது வந்து சாமாதனப்படுத்தனும்னே திறந்து வச்சிருக்கும் ஃப்ராட்!” கடைசி வரியை மட்டும் முணுமுணுத்தவன் உள்ளே நுழையப் போன மனோவை தடுத்து 


“எங்க போற?” 


“ப்ச் பாத்தா தெரியலையா..”


“செல்லம்மா மூஞ்ச தூக்கிட்டா எதுக்கு வந்தோம்ன்றதையே  மறந்துறதா?” என்று குறையாய் சொன்ன டேவ்வும் அறிவான் மனோவை பொறுத்தமட்டில் இப்பொழுதும் வைபவி அவன் தோள் மேல் தூக்கிக்கொண்ட அதே நாலு வயது குழந்தைதான் அவனும் அதே இருபது வயது இளைஞன் தான் என. 


டேவ் சொன்னதுக்கு பிறகே நினைவு வரப் பெற்றவன், “ஓ.. அதெல்லாம் ரெடி டேவ், எப்போ சொல்றியோ ஆரம்பிச்சிடலாம்” என்றான்


“சூப்பர் மனோ! நீ அதிப்பாட்ட பேசிட்டிரு நான் அவள கூட்டிட்டு வரேன்” என்று உற்சாகமாய் சொல்லும் டேவ், மனோ முதன் முதலாய்  பார்த்தப்பொழுது எப்படி இருந்தானோ இப்பொழுதும் அப்படியேதான் இருக்கிறான். 


ஒட்டிப் பிறந்த இரட்டை பிறவிகளைப்போலத்தான் அவர்களும் ஒரு வகையில். அவன் மனோவை வைபவியைப்போலவே மனோ என்றுதான் அழைக்கிறான். அவளது அதிப்பா அவனுக்கும் அதிப்பாதான். சுகராகன் அவனுக்கும் சுகாதான். மேகராகா அவனுக்கும் ராகிதான். ஆனால் அவர்களது நட்பு..! 


டேவ்வின் முடியை கலைத்துவிட்டு மனோ சென்றுவிட “மனோ!” என்று அடிக்குரலில் அலறிவிட்டு அறையினுள் நுழைந்தான் டேவ். 

— “மென்சாரலில் நின்வண்ணமோ!” கதையிலிருந்து ஒரு பகுதி  

✍️ எழுத்தாளர்: Yagnya 

இந்தக் கதை முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது




முந்தைய அத்தியாயம்  |  அடுத்த அத்தியாயம்

📖 இந்த தொடரின் அத்தியாயங்கள்