🌿 Featured Story

அன்பில் அவன் அலாதி

கோடைக்கால நினைவுகளின் கதை.

📖 Read Story

🎧 Audiobooks

Listen to our stories while travelling, resting or dreaming.

Enter Our Audio Story World

Romance, thrillers, healing stories & emotional journeys, now in audio form.

🌿 Fresh Updates

New chapters, articles, announcements & story updates.

அன்பில் அவன் அலாதி - 3

✍️ எழுதியவர் Yagnya

 3


சம்பவம் - 3, சில நாட்களுக்குப் பிறகு
 
படபடவென காகிதம் திருப்பும் சத்தமும்,  ஸ்லேட்டில் குச்சியால் கோடு கிழிக்கும் கீச்சொலியும், பென்சில் சீவப்படும் கரக் கரக்-களும், முணுமுணுவென மனப்பாட குரல்களுமாய் அந்த அந்தி நேரத்திற்கே உரிய வாசனையுடன் நிரம்பி வழிந்தது அந்த ட்யூஷன். 
 
ஒரு பக்கம் ரோஜா அக்கா உள்ளறையில் விளக்கேற்றி, சாம்பிராணி பொருத்தி வைத்திருந்த வாசம் வேறு சூழலுக்கு இன்னும் சுகந்தம் சேர்த்துக்கொண்டிருந்தது. 
 
கதிர், சோமி, மீரா என மூவரும் அந்த தூணுக்கு இந்த புறம், வட்டமாக அமர்ந்திருந்தனர். 
 
கதிர் தீவிரமாகக் கணக்கொன்றைத் தீர்த்துக்கொண்டிருக்க, சோமி அவளது வீட்டுப்பாட நோட்டில் குப்புற விழாத குறையாக கவிழ்ந்து அமர்ந்து போராடிக்கொண்டிருந்தாள். 
 
இருவரையும் ஒரு 'ச்சே ச்சே' பார்வை பார்த்து வைத்தாள் மீரா. 
 
இப்படி இருந்தா நமக்கு தூக்கம் வந்துருமே.. 
 
தன் காலில் அமர்ந்த கொசுவைத் தலையைக் கூட நிமிர்த்தாமல் பட்டென்று அறைந்து தள்ளிவிட்டு தீவிரமாகக் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தவனைப் பார்த்த மீராவின் மனதில் வேறொரு புது கணக்கு முளைத்தது. 
 
மாட்டுனாண்டா பரங்கி!  
 
முதல் வேளையாக எழுந்து சென்று "அக்கா கொசு வருது" என்றுவிட்டு ரோஜா "அந்த மெஷின போட்டுவிடு மீரா" என்பதற்குள் அதை உயிர்ப்பித்துவிட்டு வந்து அமர்ந்தவளை நிமிர்ந்து பார்த்த கதிர் முகத்தில் பெரிய ஆச்சரியம் வந்து சென்றாலும் மெல்லிய புன்னகை நன்றியைச் சொல்ல 
 
பதிலுக்கு மீரா பெரிதாகப் புன்னகைத்தாள். 
 
என்ன சரிக்கிறா.. மீண்டும் புருவம் நெரிய தனக்கு முன்னால் இருந்த நோட்டைப் பார்த்தபடி குனிந்துகொண்டான் அவன். 
 
சற்று தள்ளி, கொசு வராமல் இருக்க பெரிய வலை கதவுகளை இழுத்து சாத்திக்கொண்டிருந்த ரோஜா அக்காவை ஒரு பார்வை பார்த்துக்கொண்டவள் மெல்ல, கீழே கிடந்த கணக்கு நோட்டைக் கையில் எடுத்தாள். 
 
"பச்சை மொளகா காரம்
பன்னெண்டு மணி நேரம்
நீ ஒரு பருப்பு
என்கிட்ட காட்டாத வெறுப்பு.." 
 
நினைச்சேன்! 
 
குனிந்து எழுதிக்கொண்டிருந்த கதிரின் கைகள் ஒரு கணம் தயங்கி நின்றது. கண்களை ஒரு முறை இறுக மூடித்திறந்தவன், அவள் குரலை அப்படியே ஒதுக்கிவிட்டு மீண்டும் எழுதத் துவங்க 

"பாலாஜி பஜ்ஜி, பக்கத்து வீட்டுல ஃப்ரிட்ஜு
ஃப்ரிட்ஜுக்குள்ள ஐஸூ" என்றவள் அடுத்ததிற்குத் தாவியிருந்தாள். 
 
இவள!! 
 
கதிருக்கு பொறுமை பறக்கத் துவங்கியிருந்தது. 
 
அது மெல்ல நிமிர்ந்து அவளை ஏறிட்ட அவனது பார்வையிலேயே தெரிய, சொல்லவா வேண்டும்? அவள் அதைத்தானே எதிர்பார்த்தது!
 
அவளுக்கு இந்த ஒரு வாரமாக அதுதான் வேலையே! 
 
என்னையா மாட்டி விடுகிறாய் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு இப்படிக் குட்டி குட்டியாய் பழிவாங்கிக்கொண்டிருந்தாள். 
 
அவன் இருவருக்கும் எதையாவது விளக்கிக்கொண்டு இருக்கும்போது எதேச்சையாக அவள் முகம் பார்த்தால், அவன் எதிர்பாராத நேரம், சட்டென வக்கணம் கழித்து அவனைத் திடுக்கிடச் செய்வது. ஒரே கணக்கை ஓராயிரம் முறை சந்தேகம் கேட்டு அவனைக் கொலையாய் கொல்வது, அவன் எதை விளக்கினாலும் "அப்படின்னா?" என்று எல்லாவற்றுக்கும் கேள்வி கேட்டு அவனைத் தலையைப் பிய்த்துக்கொள்ள செய்வது என அதையே தன் முழு நேர வேலையாகச் செய்துகொண்டிருந்தாள். 
 
ஒரு மாட்டை மைதானத்திற்கு நடுவில் கட்டிவைத்திருக்கிறார்கள் என்றால், அதை ஏன் அப்படி நடுவில் வைக்க வேண்டும் என்று கேட்பவளை என்ன செய்வது? 
 
அதைக்கூட அவனால் சமாளிக்க முடியும் ஆனால் (a+b) என்றவன் தொடங்கினாலே, அது ஏன் a+b ஆக இருக்க வேண்டும்? என்று அவள் ஆரம்பிப்பதை மட்டும் அவனால் சீரணிக்கவே முடியாது. ஒவ்வொரு வரிக்கும் அர்த்தம் கேட்டால் அவன் என்ன செய்வான்? முடிந்தளவு அவள் என்ன செய்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்க முயன்றான்.
 
இன்றும் அவள் தொடங்கிவிட, ஒரு வாரக் காலமாக பொறுத்துப் பொறுத்து பார்த்தவனின் பொறுமை பறந்துவிட
 
"என்ன?" என்று கேட்டுவிட்டான். 
 
அவன் அவ்வளவு சீக்கிரம் வாயைத் திறப்பான் என்று எதிர்பாராதவளின் விழிகளில் மெல்லிய ஆச்சரியம் வந்து மறைய அதை மறைத்து 
 
"என்ன?" என்றாள் புரியாதவளாய். 
 
"படிக்க விடாம பாடிட்டிருக்க, அக்காட்ட சொல்லவா?" என்றான் குற்றம் சாட்டும் குரலில். 
 
ஓஹோ.. மிரட்டுவியா
 
"நான் எங்க பாடுனேன்? நான் படிக்கல்ல செஞ்சேன்" என்றவள் மிடுக்காய் 'வேண்டுமென்றால் நீ சொல்லிக்கொள்' என்ற பாவனையில் தோளைக் குலுக்க
 
"ஓஹோ.." என்றவளை விழி இடுங்கப் பார்த்தவன் 
 
"அக்கா" என்றழைக்க 

அதற்குள் " (a + b)2 = a2 + 2ab + b2)" என அதே பச்சை மொளகா காரம் டோனிலேயே தொடங்கியவள் 
 
"LHS = RHS" வரை அதே ராகத்தில் பாட்டாவே பாடியபடி, உடலை மெல்ல முன்னும் பின்னும் அசைத்தபடி ஆடிக்கொண்டு மனப்பாடம் செய்ய 
 
கதிர் சுற்றம் மறந்து அடிப்பாவி! என்றுதான் பார்த்திருந்தான். 
 
உலகத்திலேயே கணக்கை மனப்பாடம் பண்ணவ நீயாதான் இருப்ப! 
 
"என்ன கதிர்?" என்ற ரோஜா அக்காவின் குரலில் திடுக்கிட்டு விழித்தவன் நொடியில் சுதாரித்து 
 
"ஒரு கொசு ரொம்ப கடிக்கு க்கா" என்றான் மீரா மீது ஒரு கண்ணை வைத்தபடி அர்த்தமாக 
 
அதற்கு முகத்துக்கு நேராகத் தூக்கிப்பிடித்திருந்த நோட்டிற்கு மேல் விழிகள் மட்டும் தெரிய, அவள் கண்களே அந்த பக்கம் அவனுக்கு ஒழுங்கு காட்டுகிறாள் என்பதைக் காட்டிக்கொடுக்க 
 
இங்கு ரோஜா அக்காவோ 
 
"இந்த ஆச்சி வெளில போனப்போ வலைய சரியா மூடலை போல.. இனி வராது கதிரு.. இருக்கத வேணா அந்த கொசு பேட்டால அடிச்சிவிடு" என்றவளும் அவளால் முடிந்தளவு அடித்துக்கொண்டுதான் இருந்தாள். 
 
ரோஜா அக்கா மும்முரமாகக் கொசு அடித்துக்கொண்டிருக்க, உள்ளே இருந்து அவள் சொன்னது போலவே ஒரு கொசு பேட்டை எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தவன்
 
"இனி பாத்துக்கிடுதேன் க்கா" என்றதோடு நிறுத்தாமல் மீராவையும் அந்த பேட்டையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தலையை குனிந்துகொள்ள 
 
இங்கு கொசு பேட்டை கண்டவள் மெல்ல எச்சில் விழுங்கிக்கொண்டாள். 
 
இதுக்குமேல போனா நிஜமாவே அடிச்சிருவானோ?
 
*** 
 
"ஆனாலும் நம்ம சன் ரொம்ப பாவம் மீமீ. பயங்கர பொறுமைசாலி வேற" என்று ஒரு பெருமூச்சுடன் இடக்கையால் கன்னத்தைத் தாங்கியபடி உச்சுக்கொட்டியவனை கண்டவள் 
 
"ஏன்?" என்று புரியாமல் பார்க்க 
 
நிலவனோ,"ம்ம்.. இதே நானா இருந்திருந்தா, முத நாளே உன்கூட குடுமி பிடி சண்டைல இறங்கிருப்பேனே" என்று தோளைக் குலுக்கி பாவனையாக சொல்ல 
நொடிப்பொழுதில், பதிமூன்று வயது நிலவன் அவளது இரட்டை ஜடையை இரு கைகளாலும் பிடித்தபடி சண்டைக்கு வருவதும், அதற்கு அவள் அதே போல் இரு கைகளால் அவன் கூந்தலைப் பற்றியபடி பதிலுக்கு இழுப்பது போன்ற கற்பனை எழ,
 
 பல்லை கடித்தபடி "மீமீ" என்ற கீச்சுக்குரலில் நிலவன் உரக்கக் கத்தும் பிரமையில் கலகலவென சிரித்துவிட்டவள் பிறகு திடீர் முறைப்புடன்
 
"ஓஹோ.. எங்க இப்ப போடு பாக்கலாம்" என்று மிடுக்காய் புருவம் உயர்த்தி சவால் விட 
 
அதற்கு சற்றும் சளைக்காமல் 
 
"ப்ச் அது முடியாதே" என்று இதழ் பிதுக்கினான் அவன் 
 
"ஏன்?" மீரா குழப்பமாகப் பார்க்க 
 
பார்வையால் அவள் கூந்தலைச் சுட்டிக்காட்டியவனோ 
 
"உனக்குதான் குடுமி கிடையாதே" என்று அவள் முடி வெட்டிவிட்டிருந்ததை காரணம் காட்டி சொல்ல 
 
"உன்ன!" என்று அந்த மொக்கையில் பற்களை கடித்தவள் மெல்ல மலர துவங்கியிருந்த முறுவலுடன் பார்வையைப் பௌர்ணமிக்குத் திருப்பினாள். 
 
"ஹ ஹ.. ஆனா ஒன்னு நிலா, நாம மட்டும் அந்த வயசுல மீட் பண்ணிருந்தா.. இப்போ தீரா பகை இருக்க எனிமி ரேஞ்சுக்கு மாறியிருப்போம் போல.." என எங்கோ பார்த்தபடி எழுந்த கற்பனையில் லயித்து அவள் சிரிக்க 
 
அவளையே பார்த்திருந்தவனோ "ப்ச் ப்ச்! வாய்ப்பேயில்ல" என்றான் திட்டவட்டமாக
 
அதில் விருட்டென அவன் புறம் திரும்பியவள் 
 
"என்ன வாய்ப்பில்லை?" என்று கேட்க 
 
அவளருகில் நெருங்கி வந்து அவள் கன்னங்கள் இரண்டையும் கிள்ளுவதுபோல பற்றியவன் 
 
"இந்த உறவு எப்படித் தொடங்கினாலும், நான் உன்கிட்ட தொபுக்கடீர்னு விழறது உறுதி உறுதி உறுதி-ன்றேன்!" என்றவன் ஒவ்வொரு உறுதிக்கும் பற்றியிருந்த அவள் கன்னத்தை இப்படியும் அப்படியுமாக ஆட்டிவிட்டு மீண்டும் தன்னிடத்தில் அமர்ந்தான். 
 
மீரா "வலிக்குது பக்கீ!" எனக் கன்னத்தைத் தேய்த்துக்கொள்ள 
 
நிலவன் முகத்தில் ஒரு நிரந்தரப் புன்னகை. 


— “அன்பில் அவன் அலாதி” கதையிலிருந்து ஒரு பகுதி  
✍️ எழுத்தாளர்: Yagnya 
இந்த படைப்பு எழுத்தாளரின் அறிவுசார் சொத்து.


முந்தைய அத்தியாயம்  |  அடுத்த அத்தியாயம்

📖 இந்த தொடரின் அத்தியாயங்கள்