4
சம்பவம் - 4, சங்கரண்ணன் சைக்கிள் கடை.
முன் மதிய வேளை, வெயில் சுளீரென சுட்டெரித்துக்கொண்டிருந்த சமயம்.
பழைய சைக்கிள் ஒன்றிற்கு பெண்ட் எடுத்துக்கொண்டிருந்த சங்கரின் கவனம், சரட் சரட்டென சத்தமெழுப்பியவாறு சில ரப்பர் செருப்புகள் அவன் கடையை சமீபித்ததில் கலைந்தது.
நிமிர்ந்து பார்த்தவனின் முகத்தில் மெல்லிய முறுவலொன்று அடைபட்ட நிலையில்.
இது வாரம் தவறாமல் வந்துவிடும் வாடிக்கையாயிற்றே!
ம்ஹூம்! இதுங்ககிட்ட சிரிச்சா நம்ம தலைலயே தேங்கா ஒடச்சிரும்க..
அதே அரை முறைப்பு பார்வையுடன் நிமிர்ந்தவன் கேள்வியாகப் பார்க்க
முத்து,"சங்கரண்ணே ஒருமண்நேரத்துக்கு சைக்கிள்" என்றாள் அவசர அவசரமாக.
அவளை 'அவசர கொடுக்கி' எனப் பார்த்து வைத்த சோமியும் தனது லதா ஜுவல்லர்ஸ் மணி பர்சில் இருந்து அனைவரிடமிருந்தும் சேகரித்த சில்லறையைப் பொறுக்கி எடுக்கத் தொடங்கினாள்.
விழிகளில் ஆர்வம் மின்ன ஒரு ஓரமாக நின்றுகொண்டிருந்த பிங்க் நிற சைக்கிளைப் பார்த்த மீராவைக் கவனித்துவிட்டவன் அவள் கேட்பதற்கு முந்தி
"அதெல்லாம் வராது" என்றுவிட
நொடியில் முகம் விழுந்துவிட்டது அவளுக்கு.
"போண்ணே! நீ புது சைக்கிளே குடுக்க மாட்டேக்க.. பைசாவும் வாங்கிட்டு லொட லொட வண்டியா தலைல கட்டுற" என்றாள் தாங்கலாய்
எது லொட லொடவா? சங்கருக்கு சட்டெனச் சிரிப்பு வரத் துடித்தது. என் கடைக்கே வந்துவிட்டு என் வண்டியையே குறை வேறு சொல்லியாகிறது!
"நீங்க ஓட்டுத லட்சணத்துக்கு உங்களுக்கு லொட லொட வண்டியே போதும்!" என்று திட்டவட்டமாகச் சொன்னவன்
"பாரு பாரு! காலே எட்டல.. குரங்கு பெடலு போட புது சைக்கிளா?" என்று அப்பொழுது விர்ரென வேகமாகக் கடையைக் கடந்து குரங்கு பெடல் போட்டுப் பாய்ந்து கொண்டிருந்த சைக்கிளைப் பார்த்துச் சொன்னவன்
"லே சரவணா! ஏலே! பைய போடே" என்று இங்கிருந்தவாறே உரக்கக் குரல் கொடுக்க, தெருமுனை வரை சென்ற குரங்கு பெடல் சரவணன் வண்டியைத் திருப்பிக்கொண்டு மீண்டும் அதே தெருவில் இந்த பக்கத்தில் இருந்து அந்த பக்கம் பாய்ந்தான்.
இது வாரா வாரம் அந்த குரங்கு பெடல் குழு செய்து வரும் சாகசங்களில் ஒன்று!
வார இறுதியில், மதியம் மூக்கு பிடிக்க உண்டுவிட்டு, வீட்டில் இவர்களை உறங்கப்போடுவதற்குள் டிமிக்கி கொடுத்துவிட்டு, இரண்டு ரூபாயும் களவாடிக்கொண்டாவது இங்கு வந்துவிடுவர்.
சிலரிடம் சொந்த சைக்கிள் இருக்க, இன்னும் சிலர் அவர்களது அண்ணன்மாருக்குப் பள்ளியில் கொடுத்த சைக்கிளை லவட்டிக்கொண்டு வர, மீதி இப்படி சங்கரன் கடையில் ஒரு மணிநேரத்திற்கு இரண்டு ரூபாய் கொடுத்து சைக்கிளை எடுத்துக்கொண்டு, கும்பலாய் அந்த சுற்றுவட்டார தெருக்களிலேயே சௌயிங்ங் சௌயிங்ங் எனச் சுற்றி வருவது வழக்கம்.
ஏன் செல்கிறோம், எங்குச் செல்கிறோம், எதற்காகச் செல்கிறோம் என்றெல்லாம் தெரியாது! ஆனால் அந்த மதிய வெயிலில் சைக்கிளை மிதித்து ஓட்டியபடி வெப்பக் காற்றைக் கிழித்துக்கொண்டு தெருக்களில் மிதப்பதே ஒரு வித தனி சுகம்தான்!
அதிலும் உற்சாகம் சற்று கூடுதலானால், வேகத்தைச் சற்றே குறைத்தபடி வாயில் வந்த பாடல்களைக் கொஞ்சமும் சுருதி லயமென எதுவுமில்லாமல்.. முகத்தில் அறையும் அந்த காற்றிற்கேற்ற இசையில் ஒத்த குரலில் பாடியபடி சுற்றி வருவதும், இன்னும் செழுமையான நாட்களில் செல்லம்மாக்கா கடை வரை சைக்கிளை மிதித்து, ஐஸ்கட்டியாய் இருக்கும் ஒரு இரண்டு ரூபாய் ரஸ்னாவை சுவைத்துப் பிசுபிசுத்த கைகளும், சாயமேறிய உதடுகளுமாய் திரும்புவதும்..
இதற்கு வார்த்தை ஏது? கோடைமழை நேரங்கள் அவை.
அன்றும் வழமை போல தனக்கு புது சைக்கிள் கொடுக்காத சங்கரண்ணனை இன்ஸ்டால்மெண்ட்டில் முறைத்தபடி சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினர்.
***
"ஹே.. வெய்ட் வெய்ட்!" என்று மீண்டும் இடையிட்டவனை மீரா முறைக்க
"இதுக்குதான் நீ ரஸ்னாவ ஃப்ரீஸர்ல வச்சு சாப்பிட்றீயா?" என்று அத்தனை நாள் ஆர்வத்தின் அர்த்தம் புரிந்த ஆச்சரியத்தில் அவன் அதிசயிக்க
இவளுக்கோ.. ச்சே இவ்வளவு டீட்டெய்லா போயிருக்க வேணாமோ? கலாய்ப்பானே! என்றானது
"ம்ம்.. நல்லாருக்குல" அதைக் கொஞ்சமும் வெளிக்காட்டாமல் அவள் மிடுக்காகக் கேட்க
"டெஃபனெட்லி டெஃபனெட்லி!" என்றவனும் "நீ மேல சொல்லு" என்று ஊக்கினான்.
அவனை சந்தேகமாகப் பார்த்தவளும் தொடர்ந்தாள்.
***
அன்றும் அப்படிதான். சைக்கிளை எடுத்தவர்கள் நேராக 'பீடி தாத்தா' கடையில் நாலணாவிற்கு சதுர வடிவிலிருக்கும் குட்டி பால்கோவா அம்பது பைசாவிற்கும், மீதிக்கு தேன்மிட்டாயும் வாங்கி வாயில் அதக்கிய படி, ஆற்றுக்குச் செல்லும் வழி வரை ஒரு மிதி மிதித்தனர்.
அதற்கு மேல் சென்றால் ஒரு மணிநேரத்திற்குள் திருப்பி சைக்கிளைக் கடையில் விட இயலாது. அதைவிட, தெருவுக்குள் மட்டுமே இவர்களுக்குச் சைக்கிள் ஓட்ட அனுமதி. அதற்கு அப்பாற்பட்ட பகுதியெல்லாம் தடா பட்டியலில் தான்!
அப்படியே வீட்டில் டிமிக்கி கொடுத்தாலும் சங்கரண்ணன் சைக்கிளை வைத்தே கண்டுபிடித்துவிடக்கூடும்!
இதெல்லாம் விட முக்கிய காரணம் ஒன்றுண்டு.. அது அந்த குரங்கு பெடல் கும்பலுக்கே இந்த தெருக்களுக்குள் ஓட்டுவதுதான் பிடித்தம்!
இவர்கள் தெருவிலேயே ஓடைக்குள் விழாமல் ஓட்டுவது பெரிய விடயம்.. என்பது சங்கரின் கருத்து.
காற்றுக்குள் நுழைந்தபடி ஆற்றங்கரை வழியை நெருங்குகையிலேயே ஈரப்பதம் நிறைந்த வாசமும், சத்தமும் காற்றோடு காற்றாகக் கலந்து வந்து அவர்களை ஆரத்தழுவியது.
கடைவாயில் தித்தித்த தேன்மிட்டாயின் மிச்சமும், நாசி வழி நுழைந்து நெஞ்சம் நிறைத்த வாசமும், தொலை தூரத்தில் ஊன்றி கவனித்தால் மட்டுமே கேட்கும் சலசலப்புமென ஒரு நொடி விழிகளை மூடி ஆழ மூச்சிழுக்க சொல்லி ஆசைகாட்டிட, தெருவில் இரு பக்கமும் ஓடிய ஓடையில் ஒரு கண்ணை வைத்தவள் ஆழ மூச்சிழுத்தாள்.
அந்த எதிர்காற்றுக்கும், அந்த வேகத்திற்கும், கையை எட்டி போட்டால் பிடித்திட முடியுமோ என்று தோன்றிய நீல வானுக்கும் நடுவில் தொலை தூரத்தில் தெரிந்த மலை முகட்டையும் பார்த்தவளுக்கு.. உள்ளுக்குள் அப்படியொரு உவகை!
இரு கைகளையும் விரித்து இந்த காற்றில் அலைபாயவிடும் துளி ஆசை!
ச்சே.. நாமளும் கையவிட்டு ஓட்ட கத்துக்கனும் சீக்கிரம்
என எண்ணமிட்டுக்கொண்டே வந்தவளுக்கு ஒரு நொடி வானமே இருண்டது போலானது.
கண்ணிமைக்கும் நொடியில் சைக்கிளோடு எங்கோ பிடித்துத் தள்ளப்பட்டவள், தம்மென்று சிமெண்ட் சாலையில் சரிந்து உருண்டது வரைதான் நினைவில் இருந்தது.
தான் விழுகிறோம் என்பது உள்ளே எங்கோ உரைத்தாலும், எதையும் உணர்ந்து புரிந்துகொள்ளவே ஐந்து முழு நிமிடங்கள் பிடித்தது.
மூச்சு சீராகி, பார்வை தெளிவாகியென மீண்டும் மீரா நிதர்சனம் உணர ஐந்து முழு நிமிடங்கள் பிடித்தது.
விழித்தட்டி பார்த்தபொழுது சோமி இவள் கையை திருப்பி பார்த்தபடி அவளது கை குட்டையால் ஒத்தியெடுத்துக்கொண்டிருக்க, முத்து யாரையோ கடுமையாகப் பேசிக்கொண்டிருந்தாள்.
யார் அது? இவர்கள் வகுப்பு ஹரிணிதானே அது?
அவள் கையிலும் சைக்கிள் இருந்தது. அதன் கைப்பிடியை இறுக்கமாக பற்றியிருந்தவளின் முகத்திலும் அவ்வளவு இறுக்கம்.. ஏன்?
"கூறுகெட்ட குக்கரு! முடுக்குல இருந்து வரவ இப்படிதான் பாஞ்சு வருவியா?" என்று முத்து எகிற
அவளை முறைத்துப் பார்த்தாள் ஹரிணி
"செய்யதையும் செஞ்சிட்டு என்ன முறைக்க! இடிச்சு தள்ளுனதுமில்லாம தூக்கி விடக்கூட செய்யாம ஓட பாக்க!" முத்துவிற்கு அவள் இடித்ததை விட, அவள் இடித்த வேகத்தில் மீரா கீழே விழுந்ததை கண்டும் காணாதவள் போல ஹரிணி ஓட முயன்றதுதான் ஏகக்கடுப்பு!
"சும்மா பேசாத! அவதான் திடீர்னு வந்தா" இதில் என் தப்பு ஏதுமில்லை எனத் தோளைக் குலுக்கிட
"இதை பிடி" என தன் கை குட்டையை மீராவிடம் திணித்த சோமி ருத்ர தாண்டவமாடிவிட்டாள்.
"அடியே கோ. நோட்ஸு! நடிக்காதட்டீ! பெல்லடிக்காம நீ முடுக்குல இருந்து அத்துப்புடிங்கிட்டு வேகமா வருவ.. அதை நாங்க பக்கத்து தெருவுல இருந்தே கணிச்சு வரனுமோ?"
அவளை தொடர்ந்து மற்ற குரங்கு பெடல்களும் சேர்ந்து தங்கள் பங்கிற்கு நியாயத்தை நிலைநாட்ட முயல, இந்த சத்தத்தில் அருகிலிருந்த வீட்டிற்குள் இருந்து வெளியில் வந்த 'தண்டைக்கார ஆச்சி' (அவரது கால் தண்டையால் வந்த பட்டைப் பெயர்) என்ன ஏதென்று விசாரித்துவிட்டு
"உங்கப்பன்ட்ட படிச்சு படிச்சு சொன்னேன்! உம் மவ சைக்கிளு ஓட்டுத சைஸே சரியில்ல, முடுக்குல இருந்து சர்ரு சர்ருனு வரானு.." என்று அவர் பங்கிற்கும் ஹரிணியை கொஞ்சம் திட்டுவது போலத் திட்டி, சண்டையை முடித்து வைத்தார்.
"வரட்டும் இன்னைக்கு அவன்" என்று மிரட்டலாய் சொன்னாலும் அவர் முதலில் ஹரிணியை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட, தண்டைக்கார ஆச்சி தந்திரமாய் அந்த கோ. நோட்ஸை காப்பாற்றியதை கண்டுகொண்ட முத்துவிற்கு மூச்சு வாங்காத குறை!
மீராவை அமர்த்தி, பருக தண்ணீர் கொடுத்தவர், அவள் முகத்தில் தெளிச்சலை கண்ட பிறகே அனுப்பி வைத்தார்.
விர்ரென உற்சாகமாய் சைக்கிளில் பறந்த கூட்டம் மென்னடையாகச் சைக்கிள்களைத் தள்ளிக்கொண்டு வருவதைத் தொலைவில் இருந்தே கண்டுவிட்டான் சங்கர்
நடையே சரியில்லையே.. கடைசில நிஜமாவே ஓடைல விட்டுட்டுகளோ!
கும்பல் அங்கே வரும்வரை காத்திருக்க முடியாது அவசர அவசரமாக அவர்களை நெருங்கினான்.
சங்கரின் பார்வை நொடியில் அனைவரையும் ஸ்கேன் செய்துவிட்டது. மற்றவர்கள் முகத்தில் தெரிந்த மெல்லிய ஏமாற்றத்தைத் தவிர்த்து வேறெதுவுமில்லை, சாதாரணமாகத்தான் இருந்தனர். இந்த மீரா பிள்ளைதான் ஒரு காலை மட்டும் இழுத்து இழுத்து நடந்துகொண்டிருந்தாள். முகத்தில் வேறு வலியின் சாயல்.
"என்னாச்சு?" என்று வந்தவனைப் பார்த்தவளுக்கு அழுகை வராத குறை..
இப்பவோ அப்பவோ எனக் கண்கள் கலங்க தயாராக இருக்க, அவள் வாயைத் திறப்பதற்குள் சோமி
"அந்த ஹரிணி இல்ல? அவ வேகமா வந்து மீராவ இடிச்சு தள்ளிட்டா"
சங்கர் கண்கள் மீராவை அவசரமாக ஆராய்ந்தன, காயங்களைத் தேடி
"அடி பலமா?"
"முட்டி பேந்திருச்சு, கை கால்ல சிராய்ச்சிருக்கு.." - சோமி
"ப்ச்.. கைய கால உதறினியா முதல்ல? எங்க காட்டு" என்று சங்கர் அக்கறையாய் கேட்க மீரா விழி நிரம்பி அழுகையே வந்துவிட்டது
அதில் பதறியவன்," என்னப்ள வலிக்கிதா?" என்று பார்க்க
அவளோ பார்வையால் சைக்கிளைக் காட்டி,"சாரிண்ணே.. நீ சொன்னா மாறியே நான் உன் சைக்கிள ஒடச்சிட்டேன்" என்று முடிக்கையில் ஒரு துளி கண்ணீர் அவள் கன்னத்தில் உருண்டோடியது.
அப்பொழுதுதான் அவனும் கவனித்தான். பெரிதாகவெல்லாம் ஒன்றுமில்லை.. சைக்கிள் ஹேண்டில் பார் சற்று அடிவாங்கியிருந்தது. ஆங்காங்கே சின்ன சிராய்ப்புகள். அவ்வளவே.
அதற்கு அவள் அழவும் மனம் பாகாய் உருகிவிட
"ச்சே.. இதுக்கா அழுதே? ரெண்டு நிமிச வேலை. நீ வண்டிய விட்டுப்போ, நாளைக்கு வரச்சே புதுசாகிடும் பாரு" என்று அவளைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க
அவள் அப்பொழுதும் திரும்பித் திரும்பி பார்த்தபடி "அப்பாட்ட சொல்லுவியா?" என்று கேட்கச் சங்கரனுக்கு மெய்யாகவே ஒரு மாதிரி ஆகிவிட்டது.
இந்த சிவமண்ணன!
ஒரே மகள் எனப் பொத்தி பொத்திப் வைத்து, இதை செய்யாதே அதை செய்யாதே என என்றோ ஒரு நாள் சிறு வயதில் கீழே விழுந்துவிட்டதால் அவள் காயத்திற்கு மருந்திட்ட கையோடு குட்டி சைக்கிளைக் கொண்டு வந்து இவன் கடையில் விட்டதுதான்! அதற்குப் பிறகு சைக்கிள் என்ற வார்த்தையே மீராவின் அகராதியில் இல்லாமல் போன ஒன்று.
பல வருடங்கள் கழித்து இப்பொழுது தான், கடந்த ஒரு வருடகாலமாக அவரை எப்படியோ கரைத்து, வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டுமளவிற்கு முன்னேறியிருக்கிறாள்.
முதல் முறையாக சிவம் அண்ணன் குட்டி சைக்கிளைக் கொண்டு வந்து விடுகையில், பின்னாலையே அழுதபடி ஓடி வந்த குட்டி மீராவின் முகம் சங்கரனுக்கு இப்பொழுதும் நினைவில் இருக்கிறது. அதனாலயே எவ்வளவுதான் முறைப்பாகக் காட்டிக்கொண்டாலும் பல சமயங்களில் "இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கே" என வெளியில் பெரிதாக காட்டிக்கொள்ளாமல் அவளுக்கென சில சலுகைகள் அவனிடம் உண்டு!
இப்பொழுதும் விழுந்து அடிப்பட்ட வலியை விட, எங்கு மீண்டும் சைக்கிள் ஓட்ட முடியாமல் போய்விடுமோ என்ற பயம்தான் அவளிடம் அதிகம் இருப்பதை உணர்ந்துகொண்டவன்
இல்லையென்பதாய் புன்னகை செய்ய, அதில் எழுந்த மெல்லிய நிம்மதி முறுவலுடன் சோமியுடன் நடந்தாள் மீரா.
இங்கு இவ்வளவு பெரிய களேபரம் நடந்திருக்க, அதை எதையுமே கருத்தில் கொள்ளாது மீண்டும் சாலையில் இந்த புறமிருந்து அந்த புறம் சர்ரென சரவணன் பாய, அதைக் கண்ட சங்கரின் பற்கள் நறநறத்தன.
இந்த சுண்டெலிய!
சரியாக தன்னை கடக்கும்பொழுது கேரியரை ஒரு கையால் பிடித்து நிறுத்தியவன், வண்டி இழுத்து நிறுத்தப்பட்டதில் தடுமாறியவனை மற்றொரு கையால் அவன் சட்டை காலரோடு சேர்த்து, தூக்கிப் பிடிக்க..
என்ன காத்தா இருக்கான்!
வண்டி ஒசரமுமில்ல, கனமுமில்லை.. இவனுக்கு இவ்வளவு பெரிய சைக்கிள்!
"விடுண்ணே எங்கப்பாட்ட சொல்லிருவேன்!" தன் கைக்குள் இருந்துகொண்டு துள்ளியவனைக் கண்ட சங்கருக்கு சிரிப்புதான் வந்தது.
"யாரு உங்கப்பன்ட்டதானே? சொல்லிக்கோ" என்றவன் கீழே இறக்கிவிட்டான்
"காலே எட்டல.. உனக்கு சைக்கிளா? அதுவும் இவ்ளோ வேகமா? போ! போய் வட்டு ஓட்டி பழகு முதல்ல!" என்று அதட்டியவன்
"உங்கப்பன வந்து வண்டிய எடுத்துக்க சொல்லு" என்று சைக்கிளை எடுத்து உள்ளே நிறுத்த
சரவணன்,"இரு இரு! எங்கப்பாவ கூட்டுவாரேன்!" என்று தன் கீச்சுக்குரலில் கறுவியபடி வீட்டை நோக்கி ஓடினான்.
சங்கரும் இங்கிருந்தே "கூட்டுவா கூட்டுவா!" என்று குரல் கொடுக்க, அதற்குள் சரவணன் ஓட்டமாய் ஓடியிருந்தான்.
"என்ன கொழுப்பிருக்கனும் அந்த ஹரிணிக்கு! இடிச்சதுமில்லாம அப்படியே ஓட பாக்கா" - முத்து இந்த பக்கம் இருந்து பொரிய
"ம்ம்.. வஞ்சம் வச்சு தள்ளிட்டா! இந்த கோ.நோட்ஸ சும்மா விடக்கூடாதுப்ள!" - சோமி அந்த பக்கமிருந்து அதை ஆமோதித்தாள்.
இவர்களது உக்கிரத்துக்கு ஒரு பின்கதை உண்டு. அது ஹரிணி கோ. நோட்ஸாக பட்டப்பெயர் பெற்று மாறிய கதை.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் அது. அவர்களது பள்ளிக்கு அருகில் உள்ள கடையில் புதுப்புது டாட்டூக்கள் வந்திறங்கியிருந்தது. கையில் ஸ்டிக்கரை பிரித்து ஒட்டி நீரைத் தெளித்து உரித்தெடுக்கும் வகை டாட்டூ ஸ்டிக்கர்கள்.
வந்திறங்கிய சில நாட்களிலேயே மாணவர்களிடையே வெகு பிரபலமாகவும் ஆகிவிட்டது.
ஆங்காங்கே நீ வாங்கிட்டியா? நான் ஒன்னுதான் வாங்க முடிஞ்சிது, தீந்து போச்சாம்- போன்ற பேச்சுக்களைக் கேட்க முடியும்.
பள்ளியில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, சட்டை மறைக்கும் கையிலும், பாவாடை மறைக்கும் காலிலும் அதை ஒட்டிக்கொண்டு, உள்ளுக்குள் ஏதோ செய்யக்கூடா சாகசம் எதையோ செய்யும் திகிலோடும், உற்சாகம் நிறைந்த குட்டி கள்ளத்தனத்தோடும் சுற்றிக்கொண்டிருந்தனர் அந்த பொடிசு பட்டாளம்.
கையிருப்பு ஏதுமின்றி எல்லாவற்றையும் இரண்டு நாட்களுக்கு முன்பு சேமியா ஐஸ் வாங்கி மொக்கியதில் கரைத்திருந்த குரங்கு பெடல் கும்பல், அந்த ஸ்டிக்கருக்கான ஐந்து ரூபாயை எப்படித் தேற்றுவது எனப் புரியாமல் சுற்றிக்கொண்டிருந்தனர்.
"அது காலியா போவ போதாம்! ஏதாச்சும் பண்ணனும்" என்று சோமி வேறு அங்கலாய்க்க தொடங்கிவிட, என்ன செய்யலாம் என்று திட்டமிடத் தொடங்கினார்கள்.
நிச்சயம் இம்முறை வீட்டில் கேட்க இயலாது! சென்ற தடவை செல்லம்மாக்கா கடையில் வந்திறங்கிய கார்டுகளை(சிறுவர்களைக் குறிவைத்து பிரபல தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சிகளின் சாயலில் விற்கப்படும் லாட்டரி வகை) வாங்கி சுரண்டி இருந்த பத்து ரூபாயைப் பறக்கவிட்டதிலிருந்து வீட்டில் இவர்களுக்குப் பைசா என்பதே தடாவாகி போயிருந்தது. அதுவும் கையில் ஒட்டி சில மணி நேரங்களில் மறையும் ஸ்டிக்கருக்காக என்றால்.. ம்ஹூம்! பைசா கிடைக்காததோடு நாலு அடியும் விழுந்தாலும் விழக்கூடும்..
என்ன செய்வது.. இம்முறை நேர் வழியில்தான் சென்றாக வேண்டும்..
கடைசியில் முத்துவின் ஆச்சிக்குப் பீடி இலை பிரித்து அளவு பார்த்து அடுக்கிக் கொடுப்பதிலும், சோமி அம்மாவிற்குப் பூக்கட்டுவதற்கு மல்லி மொட்டுக்களை இரண்டு இரண்டாக வசதியாக எடுத்து அடுக்கி வைப்பதிலுமாக உதவி ஆளுக்கு இரண்டு ரூபாய் எனத் தேற்றிவிட்டார்கள்!
அப்படி தேற்றி, ஸ்டாக் தீரப்போகிறது எனக் கடைக்காரர் அவிழ்த்துவிட்ட புளுகு மூட்டைகளில் பதறியென கடைசியாக அந்த ஸ்டிக்கர்கள் அவர்கள் கைக்கு வந்து சேர்ந்தன!
வெற்றி! வெற்றி! வெற்றியோ வெற்றி! டண் டண் டண் டண் டண்டணக்கன டணக்குணக்குன டஃபுக்கு டண் டண் டஃபுக்கு டஃபுக்கு டஃபுக்கு டண் டண் தான்!
வகுப்புகள் முடிந்ததும் இதை ஒட்டி பார்த்துவிட்டுதான் வீட்டிற்குக் கிளம்ப வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவர்கள், பீ.டீ. வாத்தியார் கண்ணில் பட்டுவிடாமல் தப்ப உடனடியாக மறைத்து வைத்தனர்.
ஒன்றை மறைத்து வைத்துவிட்டு, ஓயாமல் அவ்வப்பொழுது எடுத்துப் பார்க்காவிட்டால் எப்படி? அப்படி விடாமல் அவர்கள் பார்த்துப் பார்த்து பூரித்ததை இன்னொருவரும் பார்த்துவிட
அடுத்த அரை மணி நேரத்தில் அப்படி அவர்கள் மறைத்து வைத்ததில் இருந்து மீராவின் ஸ்டிக்கர் காணாமல் போயிருந்தது.
அவ்வளவு சாகசங்களுக்குப் பிறகு கடைசியாகக் கைப்பற்றியது, வாய்க்கு எட்டாமல் போனதில் அவளுக்கு ஆத்திரமும் அழுகையுமாக இருக்க, மூவருமாக வகுப்புகள் முடிந்த கையோடு அவர்களுக்கு முன்னும் பின்னும் இருந்த இரு பெஞ்சு மாணவர்களையும் இருக்கச் சொல்லிவிட்டுத் தேட துவங்கினர்,
முதலில் நான் ஏன் காட்டனும் என முரண்டு பிடித்தவர்கள் கூட, அவள் அழுகையில் பாவப்பட்டும், பிறகு களவாணி பட்டம் எதற்கு என ரோஷப்பட்டும் அவர்களாகவே முன் வர, ஹரிணி மட்டும்
"நான் ஏன் இருக்கனும்? எனக்கு வீட்டுல வேலை கெடக்கு" என்று வெளியேறுவதிலேயே குறியாய் நிற்க, அத்தனை பேருக்கும் சுலபமாகச் சந்தேகம் அவளிடம்தான் திரும்பியது.
போதாக்குறைக்கு அவள் தன் பையைத் திறக்க மாட்டேன் என்று வேறு அடம்பிடிக்க, அவர்கள் உறுதியே செய்துவிட்டனர். கடைசியில் அனைவரும் சேர்ந்து அழுத்தம் கொடுக்க வேறு வழியில்லாமல் பையை திறக்க, அடியில் கிடந்த அவளது கோ. நோட்ஸில் கமுக்கமாக அமர்ந்திருந்தது அந்த ஸ்டிக்கர்கள்!
அன்று ஆரம்பித்ததுதான்! அதிலிருந்து ஹரிணியை இவர்கள் ஹரிணி என்று அழைத்ததை விட கோ.நோட்ஸு என்று அழைத்ததுதான் அதிகம்.
அந்த சம்பவத்திற்கு பிறகும் ஹரிணிக்கும் மீரா, முத்து, சோமிக்கும் இடையில் நிலவிய கொஞ்ச நஞ்ச சுமுகமும்கூட இல்லாமல் போனது.
ஒரு நா நீ சிக்காமையா போயிருவ! என இவர்களும், இவர்களைப் பார்க்கும் இடத்திலெல்லாம் உருத்து விழித்து முறைத்தபடி அவளுமென நாட்கள் நகர, இப்பொழுது மீண்டும் மீராவிடமே அவள் உரண்டையை இழுத்து வைத்திருக்கிறாள்.
போதாக்குறைக்கு இவர்கள் எல்லாம் ஒரே ட்யூஷன் வேறு!
இருபத்தி நான்கு மணி நேரத்தில் அதிகம் பார்த்துக்கொள்வதாலேயோ என்னவோ ஆத்திரம் கொஞ்சமும் குறையாமல் சுற்றிக்கொண்டிருந்தனர்.
***
"அடப்பாவி! ஒரு ஸ்டிக்கருக்கு இவ்வளவு அக்கப்போரா? அதுக்கு ஒரு வில்லி வேற.. ஹா ஹா.. பாவம் அந்த பொண்ணு" எனச் சிரித்தவன்
"ஆமா, அது என்ன கார்ட் கிழிக்கறது? எதோ ஸ்கேம் மாதிரி இருக்கு.." என்று புருவம் நெரித்துப் பார்க்க
"ஹா ஹா.. மாதிரிலாம் இல்ல! ஸ்கேமேதான்! அப்போலாம் டீவில ஏதாவது கேம் ஷோ, பணம் ஜெயிக்கற மாதிரி கேம் ஷோலாம் வந்தா, அந்த கேம் ஷோ தீம்ல லாட்டரி சீட்டு மாதிரி கொண்டு வருவாங்க.. அந்த காலத்து ஆன்லைன் ர*மி அது.. மெயின் டார்கெட் எங்கள மாதிரி சின்ன பசங்கதான். அவங்க டார்கெட் பண்றதும் பெட்டிக்கடைகள தான். ஸ்க்ராட்ச் கார்ட் மாதிரி. அதுல ஒருநாளும் யாரும் எதையும் ஜெயிச்சதா எனக்கு ஞாபகமில்ல.." என்றவள் திடீரென கலகலவென சிரித்தாள்
"என்ன என்ன திடீர் சிரிப்பு? ஸ்கேம் ஆன மெமரீஸா?" என்றவன் வார
அவளோ,"ஹா ஹா.. ஸ்கேம் பண்ண மெமரீஸ்" என்றாள் சிரிப்பினூடே
நிலவன் அதில் "வாட்?" என அதிர
மீரா," ஆமா ஆமா.. வாங்கி ஸ்க்ராட்ச் பண்ணி, ஒன்னுமில்லைனு தூக்கிப்போட்ட அட்டையெல்லாம் எடுத்து மறுபடியும் ஒட்டி, அதை வச்சு எங்களுக்குள்ள பெட்டிக்கடை மாதிரி நடத்தி ஸ்கேம் செய்த ஆட்கள்!" என்றாள்
"வாட்!? அதெல்லாமா வாங்குவாங்க?" நிலவன் நம்பாமல் பார்க்க
"எங்க செட் அறிவாளிங்க வாங்குவாங்களே.. என்ன பெட்டிக்கடை ரேட்டுக்கு பெருசா இல்லாம.. நாலணா பால்கோவாக்காக ஸ்கேம் பண்ண ஆட்கள்.." என்று பழைய நினைவில் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தவள்
"ஐம் நாட் ப்ரௌட் ஆஃப் மை ஆக்ஷன்ஸ்!" என்றொரு டிஸ்கிளைமரையும் போட்டுக்கொண்டாள்.
"நான் அப்பாவி வாலு பொண்ணுனு பார்த்தா, பெரிய ஃபோர் ட்வென்ட்டி கேங்கா இருப்ப போலயே.." நிலவன் என்னவோ தெரியா தனமாய் வந்து மாட்டிக்கொண்டேனே என்பதுபோல பாவனை செய்ய
அவனை கழுத்தில் கை போட்டுப் பிடித்தவள்,"ஹலோ நாங்க WWEயும் பார்த்தவங்க" என்று அடக்கிய சிரிப்புடன் பார்வையால் மிரட்ட
தன் கழுத்தைச் சுற்றி 'சோக்' போடுவது போல வைத்திருந்தவளின் கையை அலுங்காமல் அனாயாசமாகப் பிரித்தெடுத்து நொடியில் அவளை அவள் கையோடு சேர்த்துப் பிடித்தபடி மடிக்கு இடம் மாற்றியிருந்தவன் குனிந்து அவள் விழி பார்த்தான்
"ஆஹான்?"
— “அன்பில் அவன் அலாதி” கதையிலிருந்து ஒரு பகுதி
✍️ எழுத்தாளர்: Yagnya
இந்த படைப்பு எழுத்தாளரின் அறிவுசார் சொத்து.

Comments
Post a Comment