Operation: கல்யாணம் - 10

✍️ எழுதியவர் Yagnya

Operation: கல்யாணம் - 10


மூன்று மாதங்களுக்கு முன்பு... 

 

எழிலின் வீட்டில். 

 

எல்லாமே மின்னல் வேகத்தில் நடந்தது. வசுதாவிற்கும் மதியரசனுக்கும் அவிரோளை பார்த்ததுமே பிடித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் அவள் பட் பட்டென்று கேட்கும் கேள்விகளுக்குப் பதில் பேசினாலும் அதில் கொஞ்சமும் கள்ளமோ கபடமோ இல்லை என்பது தெள்ளத் தெளிவாய் தெரிய  

 

அதிலும் எழிலுக்குப் பிடித்த பெண். அவர்களது சமர்த்துப்பையன் எழில் காதலிக்கிறேன் என்ற பெண்! இத்தனை காலமாகக் கல்யாணமே வேண்டாம் வேண்டாமென சொல்லிக்கொண்டிருந்தவன் கடைசியில் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்றதே பெற்றவர்கள் இருவருக்கும் பேரதிசயம்தான். 

 

ஆம், எழிலின் இயல்பு தெரிந்தவர்களுக்கு இவன் ஒரு பெண்ணை நேசிக்கிறானா அதுவும் இத்தனை நாள் ரகசியமாக என்றுதான் ஆச்சரியமாய் போனது. அது கயன்னங்கையின் தோழி என்று தெரிந்ததும் அவர்களுக்கு  ஓரளவு சந்தேகம் என்ற ஒன்றே வரவில்லைதான். இருந்தும் ஆயிரத்தில் ஓர் அதிசயமாக மகன் இந்த விடயத்தில் பொய் சொல்கிறானோ, அதுவும் முதலில் சொல்லியதை வைத்து பார்த்தால்.. என்று சந்தேகம் முளைக்கவே அவர்கள் அப்பெண்ணை அழைத்து வரும்படி சொன்னது. 

 

எழில் வேறு தயங்கவும் சந்தேகம் சற்று பலப்பட, ஒன்று அவளை அழைத்து வா இல்லை நாங்கள் பார்க்கிறோம் என்று ஒரேயடியாக முடித்துவிட்டார் வசுதா. 

 

அவரால் எழில் பொய்யுரைப்பான் என்று நம்ப முடியாவிட்டாலும் , ஒரு வேளை பொய்தானோ என்ற கோபம் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருந்தது. 

 

அது அத்தனையும் ஒரு நாள் காலையில் மென் ஆரஞ்சு நிற குர்த்தாவும், டெனிமுமாக, ஒற்றை பட்டாம்பூச்சி படபடத்த கூந்தலும், அஞ்சன விழியும் குட்டி பொட்டுமாய் ஒரு பெண் "ஹாய் ஆன்ட்டி" என்றதில் காற்றில் பறக்கத் தொடங்கியதென்றால் 

 

மீதமிருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் எழிலின் பார்வை அப்பாவையை ஆசை ஆசையாய் சுற்றி வந்ததில் மொத்தமாகக் கரைந்துவிட்டது! 

 

கடைசியில் இந்த உத்தமபுத்திரனும் காதல் கடலில் விழுந்திருக்கிறானே!

 

மகன் விழிகளில் முதன் முதலாக நட்சத்திர நடனங்களைக் கண்டவர் உள்ளெழுந்த சிரிப்புடன் அடுத்து ஆக வேண்டிய வேலையில் இறங்கிவிட்டார். 

 

உடன் வந்த கயன்னங்கை ஓரளவு வசுதாவிற்கும் மதியரசனிற்கும் அவிரோளின் குடும்ப விஷயத்தைப் பற்றி கொடி காட்டியிருக்க 


 அவர்கள் தாங்களே எதையும் காட்டிக்கொள்ளாமல் பெண் கேட்டு வருவதாக சொல்லிவிட 

 

அத்தனையும் உருட்டிவிட்ட சுருள்போல சுலபமாகச் செல்வதுபோல ஒரு எண்ணம். அது எப்படி சாத்தியப்படும்? 

 

அந்த கேள்விக்குப் பதிலாக அமைந்தது அவிரோள் வீட்டுச் சூழ்நிலை. 

 

ஆம், திட்டமிட்டபடி அத்தனையும் சீராகத்தான் சென்றுகொண்டிருந்தது. கயன்னங்கை மூலம் அவர்களுக்குள்ளாகவே ஒரு அக்ரீமெண்ட் போட்டனர். பணம் கிடைத்த மறுநொடி அது அதன் இடத்தை சென்று அடைந்தது. 

 

முதலில் இதை மறக்கவே மாட்டேன்க்கா என்று வசனம் பேசிய அகில் மெல்ல மெல்ல இது எப்படிப் புரட்டினாய் அக்கா என்று கரிசனம் போல தன் இயல்பான மூக்கை நுழைக்க முயன்றான். 

 

அது உனக்குத் தேவையற்றது என்று அவி ஒரேயடியாக முடித்துவிட பார்வையில் சந்தேகம் தொனித்தாலும் அதற்கு மேல் அகில் அவளை நேரடியாக எதுவும் கேட்கவில்லை. 

 

ஒரு வெள்ளிக்கிழமை காலையில் வசுதாவும் மதியரசனும், கயன்னங்கை பெற்றோரையும் அழைத்துக்கொண்டு பெண் கேட்க வந்திருந்தனர். 

 

முன்பே தெரிந்தவர் ஒருவர் மூலம் சங்கரனுக்குத் தகவல் அனுப்பிவிட்டதால், அன்று அவருமே வீட்டில் தான் இருந்தார். 

 

முகப்பறையில் சங்கரன், அகில், எழில், வசுதா, மதியரசன், கயன்னங்கை, அவளது பெற்றோர்கள் என அனைவரும் அமர்ந்து பேச்சைத் தொடங்கியிருந்தனர். 

 

கயன்னங்கையின் அப்பாதான் முதலில் இருவருக்கும் தெரிந்த நபராக நின்று இரண்டு குடும்பத்தையும் அறிமுகம் செய்துவைத்துவிட்டு விஷயத்தை ஆரம்பித்தார். 

 

அவர்கள் பேசி வைத்தது போல, மூன்று மாதங்களுக்கு முன்பு கயன்னங்கை வீட்டுப் புதுமனை விழாவிற்கு வந்திருந்த அவிரோளை பார்த்ததும் எழிலுக்கும் அவன் குடும்பத்தாருக்கும் பிடித்துவிட, எழில் புது வேலை, வீடென இங்கு வந்து  எல்லாம் கச்சிதமாக அமையும்வரை காத்திருந்தவர்கள் இப்பொழுது பெண் கேட்டு வந்திருப்பதாக அவர்களது கோட்டாவிற்கு ஆயிரத்தில் முதல் பொய்யை அளந்துவிட்டனர். 

 

அதிசயத்திலும் அதிசயமாகச் சங்கரன் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க, அவிரோளின் பார்வை ஒரு ஓரமாக நின்று அத்தனையும் மௌனமாகப்  பார்த்திருந்த கமலியைத் தொட்டுக் கனிந்தது. 

 

ச்சே.. சித்தியிடம்கூட பொய் சொல்ல வேண்டி வருகிறதே.. அது சித்திக்காகத்தான் என்றாலும்கூட வெகுவாக உறுத்தியது. 

 

நாளை உண்மை தெரிந்தால் சித்தி என்ன செய்வாள்? 

 

உஷ் அவி! எப்போ வந்து யோசிக்கற நீ! 

 

திடீரென அலைபாயத் தொடங்கிய மனதைக் கட்டுக்குள் வைத்தபடி பார்வையை எல்லோரிடமும் நகர்த்தினாள். அத்தனை பேர் முகத்திலும் இது நடந்துவிடும் என்ற நம்பிக்கை வரத்துவங்கியிருந்தது. 

 

சங்கரன் கூட பெரிதாக மறுத்து பேசாமல் பொதுவாகத்தான் பேசிக்கொண்டிருந்தார். ஒவ்வொருவராக சுற்றி வந்த பார்வை தன்னையே குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்த அகிலின் பார்வையில் திடுக்கிட்டு நின்றது. 

 

இவன் பார்வையே சரியில்லையே! 

 

இது அதே பார்வை! முன்பு அவளை ஏதேனும் பிரச்சனையில் மாட்டிவிடுவதற்கு முன்பு அவன் பார்க்கும் அதே ஏளனப் பார்வை!

 

நினைச்சேன்.. இந்த சைத்தானாவது என் கல்யாணத்துக்கு மந்திரம் ஓதுகிறதாவது. 

 

அதிலும் அகில் பார்வை இவளையும் எழிலையும் அர்த்தமாய் தொட்டு மீள, அவிரோளுக்கு மெய்யாகவே பதட்டம் ஆனது. இவன் எதைக் கண்டுபிடித்தான் என்றே தெரியவில்லையே!

 

பொட்டு பொட்டாய் வேர்க்கத் தொடங்கிவிட அவள் பார்வையில் திகில் கூடுவதைத் திமிராக ஒரு பார்வை பார்த்தான் அவன். 

 

அதற்குள் சங்கரனின் குரல் இவள் கவனம் கலைத்தது. 

 

திரும்பி பார்த்தால், எழுந்து நின்றவர் 

 

"அப்பறம் நாங்க வீட்டுல பேசிட்டு சொல்றோம்" என்று வந்தவர்களை வழியனுப்பத் தயாராக, அவ்வளவு நேரமும் நம்பிக்கையாக இருந்தவர்களுக்கு முகமே ஒரு மாதிரியாகிவிட்டது, அவர் திடுதிப்பென்று அப்படி அனுப்ப முயன்றதில். 

 

இருந்தும் எதுவும் சொல்வதற்கில்லாமல் போக, வேறு வழியின்றி அவர்கள் வெளியேற, வாசல் வரைகூட சென்று வழியனுப்பாதவர், முதல் வேளையாகக் கதவை தாழிட்டுவிட்டு இவளிடம் திரும்பினார். 

 

எதுவோ சரியில்லை... 

 

அவிரோளின் பார்வை தன் முன் உக்கிர மூர்த்தியாக நின்ற சித்தப்பாவையும், அதே ஏளனப் பார்வையுடன் இருக்கையில் அமர்ந்திருந்த அகிலையும் தொட்டு மீண்டது. 

 

பய வேட்டு வச்சிட்டான்! 

 

நொடியில் கையை ஓங்கியபடி அவளிடம் வந்தவர் பிறகு ஒரு கணம் நின்று அவளை உருத்து விழித்துவிட்டு "ச்சீ!" என்றபடி கையை உதறிக்கொண்டார். 

 

அவிக்கு அவ்வளவு அசிங்கமாக இருந்தது. இவர் இவ்வளவு வெறுக்குமளவு நான் என்ன செய்தேன்? 

 

"இந்த வீட்டுப் பொண்ணா நீயெல்லாம்! என்ன பார்த்தா உனக்கு அவ்வளவு முட்டாளா தெரியுதுல? சரியான ***" என்றவர் கெட்ட வார்த்தையை உதிர்த்துவிட அவிரோள் முதல் முறையாக உடைந்தாள். 


என்ன வார்த்தை சொல்லிவிட்டார்! அதுவும் தந்தை ஸ்தானத்தில் இருப்பவர்.. அவர் அத்தனை வருடங்களாக எவ்வளவு குட்டினாலும் குனிந்து சென்றாளே தவிர என்றுமே இப்படி மொத்தமாக உடைந்தது இல்லை. 

 

அவிரோள் அகத்திலும் அத்தனையும் அதிர்வலை பரவ, உறைந்து நிற்க 

 

"என்ன வார்த்தை பேசறீங்க!" என்று அதட்டலாக வந்தது சித்தியின் குரல், வருடங்களுக்குப் பிறகு. 

 

இத்தனை வருடங்கள் தன்னிடம் பேசாமல் இருந்த மனைவி, மீண்டும் தன்னிடம் பேசினாலும் அதுவும் இவள் விஷயத்தில் மறுப்பாகவே வந்து நிற்பதில் இன்னமும் கடுங்கோபத்திற்கு ஆளானார் சங்கரன். 

 

"ஓஹோ... இப்ப மட்டும் பேசுவியே! இவளுக்கு ஒன்னுன்னா.. இப்போ வந்துட்டு போனானே! அவன் யார்னு தெரியுமா? இவ்வளவு நாளும் இந்த வீடு வீடா இல்லாம இருக்கதுக்கு காரணமானவன்! அகில் அம்மாட்ட காட்டுடா" என்றவர் உறும 

 

கையில் வைத்திருந்த அலைபேசியுடன் தன்னை தயக்கமாகப் பார்த்து நின்ற மகனைப் பார்வையிலேயே எரித்துவிட்டார் கமலி. 

 

அகில் அவர் அருகில்கூட செல்ல துணியவில்லை! 

 

"எவ்வளவு திமிர் இருக்கனும் உனக்கு! சித்தப்பன் சரியான இளிச்சவாயன்தானே! அப்பனே எமாத்திட்டான்னு நினைச்சிட்டல்ல! என்ன தைரியம் இருந்தா அவனையே நடு வீடுல கொண்டு வந்து உக்கார வச்சிருப்ப! இதுல கலர் கலரா கதை வேற! சரியான ஃப்ராடு குடும்பமா இருக்கும் போல! இவனுக்கு எங்க ஞாபகம் இருக்கப்போவுதுனுதானே நினைச்ச!" என்றவர் உருத்து விழிக்க 

 

அவிரோள் இன்னமும் அவரது முதல் வார்த்தையிலே உறைந்தவளாக நின்றிருந்தாள். அவளுக்கு எதுவுமே மனதில் பதியவில்லை. மனதோரத்தில் இந்த சித்தப்பா என்ன இவ்வளவு நேரமும் இதெல்லாம் மனதில் வைத்துக்கொண்டா அப்படிச் சிரித்துச் சிரித்து பேசிக்கொண்டிருந்தார் என்று தோன்றியது. 

 

இப்படி அநியாயமாக அவர்களும் கெட்ட பெயர் வாங்குகிறார்களே.. 

 

"உன்னல்லாம்! அதுசரி வளர்ப்பு சரியில்லை வேறென்னத்த சொல்ல! அப்படியொரு அப்பன், அவனையும் இல்லாம ஆக்கின அம்மா.. நீயும் போய் தொலைஞ்சிருக்க வேண்டியதுதானே! இருந்து குடும்ப மானத்தை ஏன் வாங்க-" என்று பேசிக்கொண்டே சென்றவர் கன்னத்தில் இடியென விழுந்த அறையில் அப்படியே நின்றுவிட்டார். 


சங்கரனுக்கு ஒரு முழு நிமிடம் பிடித்தது. ஒன்றுமே விளங்கவில்லை. அவர் மனைவியா அவரை அடித்தது? இத்தனை வருடங்களும் எதைச் சொன்னாலும் ஆமாம் சாமி போட்டுக்கொண்டிருந்த அப்பாவி கமலியா அவரிடம் கையோங்கியது? கோபத்தைக் கூட மௌனத்திலும் கண்ணீரிலும் மட்டுமே காட்டத் தெரிந்த கமலியா இது? 

 

அவர் மட்டுமில்லை. அவ்வறையில் நின்றிருந்த மற்ற இருவருமே அதிர்ச்சியில் உறைந்தனர். 

 

"இன்னொரு வார்த்தை பேசுனீங்க.. புருஷன்னுகூட பார்க்க மாட்டேன்!" எனச் சுட்டு விரல் நீட்டி எச்சரித்தவர் 

 

"என்ன சொன்னீங்க? வளர்ப்பா? வளர்ப்பா? வளர்ப்ப பத்தி நாமலாம் பேசலாம?" என்றவரின் குரலில் எள்ளல் ஏகத்துக்கும் தெறிக்க சங்கரன் இன்னமும் கன்னத்தில் கை வைத்தபடி அதே உறை நிலைதான். 

 

கமலியின் பார்வை அகிலிடம் பதிய, விடுவிடுவென அவனை நெருங்கியவர் அவன் கை பற்றி இழுத்து வந்து கணவன் முன்னால் நிறுத்தினார். 

 

"இப்படி ஒரு புள்ளய பெத்து வச்சுட்டு வளர்ப்ப பத்தி நாம பேசலாமா? ஓ.. உங்களுக்கு ஒன்னும் தெரியாதுல? உங்க மகன் பத்து லட்சத்தை சூதாடி தொலைச்சிருக்கான்! எந்த பத்து லட்சம் தெரியுமா? மாமா கடன அடைச்சது போக இவள பாத்துக்க சொல்லி நம்ம கைல குடுத்த பணம்! அதை திருட்டுத்தனமா தொலைச்சது மட்டுமில்லாம திருப்பி வைக்கவும் இவகிட்டயே பொய் சொல்லி வாங்கிருக்கான்! 

 

என்ன? தெரியாதுல..? வீட்டுல நடக்கற ஒன்னும் தெரியாது! மகன் பண்ற திருட்டுத்தனம் ஒன்னும் தெரியாது! ஆனா இவர் மட்டும்தான் இங்க தெளிவு மத்தவங்க எல்லாம் முட்டாக்கழுதைங்க! 

 

உங்களுக்கு என்னங்க இப்ப? அவ லவ் பண்ணாளா? பண்ணட்டுமே! உங்களுக்கு என்ன? நீங்க என்னைக்கு அவள பத்தி யோசிருக்கீங்கனு இப்ப மட்டும் இந்த குதி குதிக்கறீங்க? நீங்க அவளுக்கு கல்யாணம் பண்ணனும்னு நினைச்சீங்களா? எப்படி அவள பேசியே வீட்டை விட்டு விரட்டலாம்னுதானே அப்பாவும் பையனுமா ஜோடி போட்டுக்கிட்டு சுத்திட்டிருக்கீங்க! 

 

அதென்னங்க அது அப்படியொரு வார்த்தை? அதுவும் நம்ம வீட்டுல வளர்ந்த பொண்ண பத்தி அப்படியொரு வார்த்தை சொல்ல வாய் எப்படி வருது? அதென்ன வளர்ப்பு அப்போனு அவ பதிலுக்கு கேட்ட எங்க போய் முகத்த வைப்பீங்க? இவ கேக்க மாட்டான்ற தைரியத்துல தான வாய்க்கு வந்தத பேசறீங்க?


நீங்கல்லாம் ஒரு பெரிய மனுஷன்! உங்களையா இத்தனை வருஷமா அப்படி தலைல தூக்கி வச்சிருந்தேனு நினைக்கவே அசிங்கமா இருக்கு" என்று சங்கரனை ஒரு வெறுப்பு பார்வை பார்த்தவர் மகனிடம் திரும்பினார். 

 

அன்னையின் ருத்ர ரூபத்தைக் கண்டு ஏற்கெனவே அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்தவனின் விழிகளில் கண்ணீர் தெரியத் தொடங்கியிருக்க அவனை அதைவிடக் கேவலமாக ஒரு பார்வை பார்த்தவர் ஒரு வார்த்தை பேசவில்லை. 

 

நீயெல்லாம் பேசுவதற்குக் கூட தகுதியில்லாதவன் என்று கமலி சொல்லாமல் சொல்லிவிட அகில் வாய்விட்டே அழத் தொடங்கிவிட்டான். 

 

சங்கரன் மெல்ல மெல்ல அதிர்ச்சியில் இருந்து தெளிந்துகொண்டிருந்தார். 

 

கமலி நேராக அவ்வளவு நேரமும் கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிய நின்றிருந்த அவிரோளிடம் வந்தார். 

 

"உனக்கு கொஞ்சம் கூட சூடு சொரணை வெட்கம் மானம்னு எதுவுமே இல்ல?" என உமிழாத குறையாக கேட்க அவிரோள் கண்ணீர் நிற்காமல் அவரையே வெறித்து நின்றாள். 

 

"சித்தி.." 

 

"ஷ்! இனி அப்படிக் கூப்பிடாத! இத்தோட இந்த வீட்டுக்கும் உனக்குமான உறவு முடிஞ்சு போச்சு" மூவரும் அதிர்ந்து பார்த்துக்கொண்டிருந்த சமயம்  விடுவிடுவென மேலேறிச் சென்றவர், திரும்பி வந்தபொழுது கையில் பெரிய பெட்டி இருந்தது. 

 

படிகளில் தடதடவென இறங்கியவர் ஒரு நொடிகூட தாமதிக்காமல் அவரோள் கையை பிடித்து இழுத்தபடி வாசலை நோக்கிச் சென்றார்

 

"இனி இந்த வீட்டுல ஒரு நிமிஷம்கூட நீ இருக்க கூடாது!" எனப் பெட்டியோடு அவளை வெளியில் தள்ளியவர் 

 

"இத்தோட இந்த உறவு முறிஞ்சது. இனி நீ யார கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் பண்ணாம போனாலும், எப்படி வாழ்ந்தாலும் இந்த வீட்டுக்கும் உனக்கும் எந்தவித சம்பந்தமுமில்ல!" என்று படாரென கதவை அறைந்து சாத்தினார்.

 

வாசலில் விழுந்து கிடந்த அவிரோளுக்கு அக்கதவு தன் முகத்திலேயே அறைந்ததுபோல இருந்தது. 

 

நடந்தது எதுவுமே புரியவில்லை. முன்னாலிருந்த கதவையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தவளின் தோளில் ஒரு கை பதிந்தது. 

 

திரும்பி பார்த்தாள். கலங்கிய கண்களின் மங்கலான பார்வையில் வரிவடிவமாகத் தெரிந்தாள் கயன்னங்கை. அவளுக்குப் பின்னால் இவளையே பார்த்தபடி எழில்! 


சங்கரனிடம் பேசிவிட்டு வெளியேறிய இருவருக்குமே எதுவோ சரியில்லை என்பது புரிந்துவிட, பெற்றோர்களை மட்டும் அனுப்பி வைத்தவர்கள், அவிரோளிடம் பேசக் காத்திருக்க, நடந்த அத்தனையும் அவர்கள் காதிலும் விழத்தான் செய்தது. 

 

உள்ளே செல்ல துடித்த எழிலை கயனாவும், கயனாவை எழிலுமென பிடித்து வைத்திருக்கக் கடைசியில் அவிரோளே வெளியில் தள்ளப்பட்டாள். 

 

இதை அவர்கள் இருவருமே கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. 

 

அவிரோள் பேசும் நிலையிலேயே இல்லை. எழில் பெட்டியை எடுத்து வண்டியில் வைத்தவன் திருப்பி நிறுத்த, கயன்னங்கை கைதாங்கலாக அவிரோளை அழைத்து வந்தாள். 

 

அங்கிருந்து நேராக கயன்னங்கை வீட்டிற்குச் சென்றுவிட்டனர். முழுதாக இல்லாமல் ஓரளவு சூழ்நிலையை அவர்களிடம் எடுத்துச் சொல்ல, கயன்னங்கையின் பெற்றோருக்கும் முதலில் என்ன செய்வதென்றே புரியவில்லை. 

 

விஷயம் தெரிந்து ஓடி வந்த வசுதா  கொஞ்சமும் தயங்கவில்லை. 

 

கல்யாணம் நாம் நினைத்ததுபோலவே நடக்கட்டும். என்ன பெண் வீடாக நீங்கள் நின்று செய்ய மாட்டீர்களா? என்று கயன்னங்கை பெற்றோரிடமும் கேட்டுவிட 

 

அவர்களும் "என்ன வசு நீ? எழிலும் நம்ம பையன் அவியும் நம்ம பொண்ணு. நாங்க செய்ய மாட்டோமா?"  என்று ஒத்துக்கொண்டனர். 

 

என்னதான் அவர்களிடம் நின்று செய்யுங்கள் என்றுவிட்டாலும் கல்யாணம் முழுதாக வசுதா-மதியரசன் பொறுப்பில்தான் நடந்தது. 

 

அவிரோள் கயன்னங்கையுடன் கல்யாணம்வரை தங்கிவிட,  கயன்னங்கையின் அப்பாவும் அம்மாவும் பெண் வீட்டுத் தரப்பில் நின்றனர். 

 

இப்படி பல களேபரங்களைத் தாண்டி எழில்மொழி-அவிரோள் திருமண நாளும் வந்தது. 

 

இன்று... 

 

குட்டி பாறை ஒன்றின் மீது அமர்ந்தபடி ஆற்று நீருக்குள் காலை விட்டிருந்தாள் அவிரோள். 

 

ஒரு பக்கமிருந்து சூரியவொளி முகத்தில் விழச் சற்று தொலைவில், கண்களைச் சுருக்கி பார்த்தாள். முட்டிக்கால் வரை கால்சட்டையை மடித்துவிட்டுக்கொண்டு சிறுசுகளுடன் சேர்ந்து வேட்டியைப் பிடித்துக்கொண்டு மீன் பிடிக்கும் முயற்சியில் இறங்கியிருந்த மொழியின் முகத்தில் வழிந்த வேர்வை அச்சூரியவொளி பட்டுத் தங்க நிறமேறியிருந்தது. 

 

அவ்வப்பொழுது சிறுசுகளுடன் எதையாவது பேசியபடி வாய்விட்டுச் சிரிப்பவனின் பளீர் புன்னகை மெகா ஸ்லோ மோஷனில் தெரிந்து தொலைக்க, அத்தனையும் ஏதோ.. ஒரு இளவேனிற்கால மதிய தூக்கத்தில் மலரும் அழகிய கனவு போலத் தோன்றியது. 


இந்த ஃப்ரேம அப்படியே வரைஞ்சா கவிதையா இருக்கும்.. ஃபோன கூட விட்டுட்டு வந்துட்டேனே.. ப்ச் 

 

"யெக்கா! நீயும் வா!" என்று மகேசு மீண்டும் குரல் கொடுத்தான். 

 

இதற்கு மேல் உட்கார்ந்திருந்தால் சரி வராது! 

 

"இதோ" என்றபடி சல்வார் பேண்ட்டை மேலே இழுத்துவிட்டுக்கொண்டு நீரில் இறங்கினாள். 

 

"யெக்கா நீ அத்தான்கூட பிடி! அத்தானுக்குதான் ஒன்னும் ஆப்பட மாட்டேக்கு" என்று வாய்க்குள்ளேயே சிரித்துக்கொண்டவன் நகர்ந்துவிட 

 

மொழி சிரித்த சிறுசுகளை போலியாக முறைக்க முயன்றுவிட்டு இவள் பக்கம் திரும்பினான். 

 

அன்று காலையிலேயே சிறுசுகள் கூட்டம் சேர்ந்து திட்டம் தீட்டியாயிற்று. மதியம் ஆற்றங்கரைக்குச் செல்வது, மீன் பிடிப்பது பிறகு பிடித்த மீனை ஆச்சியிடம் கொடுத்து குழம்பாக்கிவிடுவது! 

 

இதில் இரண்டாவது பகுதி எந்தளவு வெற்றிகரமாக நடக்கக் கூடும் என்பது தெரியாவிட்டாலும், ஆற்றங்கரைக்குச் செல்வது என்பது முடிவானது. 

 

மெல்லிய சலசலப்புடன் ஆற்று நீர் ஓடிக்கொண்டிருக்க, கதிரவனின் கைக்கு அடியில் தூரத்து மலையின் பச்சையும், ஆற்றில் பட்டுத்தெறிக்கும் வெள்ளிக்கம்பிகளுமென பால் மஞ்சள் கலந்த காட்சியின் மையலில் நின்றவளின் பார்வையை கண்ட மொழி

 

"உனக்கு நீச்சல் தெரியுமா?" என்றான். 

 

பார்வையை அவன் புறம் திருப்பியவள் "ம்ஹும். உனக்கு?" என்று முன் பாதியைச் சிறு இதழ் பிதுக்கலுடன் உரைத்தவள் பின் பாதியைத் துளி ஆர்வத்துடன் கேட்க 

 

அவளை போலவே இதழ் பிதுக்கினான் "ம்ஹூம்" 

 

"ஆத்துக்குலாம் வர்ற?" என்றாள் ஆச்சரியமாக 

 

அதில் நீருக்குள் இருந்த காலை ஒரு பக்கமாக தூக்கிக் காட்டியவன் 

 

"எது இந்த அளவு தண்ணிக்கு நீச்சலா?" என்று கேலியாகக் கேட்டுவிட்டு பிறகு 

 

"நான் ஆழத்துக்கு போக மாட்டேன். அதுவும் எப்போவாது ஊருல இருந்து வரும்போதுதானே வரது. கூட யாராவது வருவாங்க" என்று பதிலும் சொல்லிவிட 

 

"ஓ..." எனக் கேட்டுக்கொண்டாள் அவள். 

 

"நேத்து துரை மாமா பார்த்தல்ல?" என்றவன் அவள் குழப்பமாகப் பார்க்கவும் 

 

"அதான் கொலகேசியா மாமா" என்று அடையாளம் சொல்ல முயல அவிரோள் கலீரென சிரித்துவிட்டாள்.

 

"ஹா ஹா" 

 

அவள் சிரிப்பதையே ஆசையாகப் பார்த்தவன் 


"சின்ன வயசுல வந்தப்போ, என்ன தென்னந்தோப்பு கூட்டிட்டுபோய் காய் பறிச்சு சீவி குடுத்தாரு.. அப்படியொரு ருசி தெரியுமா! உனக்கும் பிடிக்கும்.. நாளைக்கு போலாமா?" என்று ஆர்வமாகக் கேட்டான். 

 

எதிரில், வேட்டியின் மறு ஓரத்தைப் பிடித்தபடி சற்றே குனிந்து நின்று, முகத்தில் ஆசையும் ஆர்வமுமாகக் கேட்பவனை ஆழப் பார்வை பார்த்தாள்.

 

"நீ நிஜமாவே கல்யாணம் வேண்டாம்னுதான் கல்யாணம் பண்ணியா?" 

 

மொழி விரல்களுக்கு இடையில் இருந்த வேட்டி நீரில் நழுவியது.

 

அவன் அசையாமல் நிற்கத் தொலைவில் மகேசின் கேலி குரல் கேட்டது 

 

"ஏலே! அத்தான் தேறமாட்டாவோ போல.." 

 

'கொல்'லென சிரிப்பொலி எழ, பிரமை நிலையில் இருந்த மொழியின் பார்வை எதிரில் நிற்பவளை வெறித்து நோக்க

 

எதுவுமே நடவாததுபோல மெல்ல முன்னேறி வெகு அருகில் வந்து நின்றவள், அவள் கையில் இருந்த வேட்டியின் இரு ஓரங்களையும் அவன் விரல்களுக்குள் திணித்தாள். 

 

"ஷ்ஷ்.. பொடிசுலாம் கிண்டல் பண்ணுது" என்றவன் விழிகளுக்குள் பார்வையைப் பதித்துச் சொன்னவள், மொழி கீழே விட்டிருந்த வேட்டி ஆற்றோட்டத்தில் ஒரு பக்கமாக இழுபட்டுக்கொண்டிருக்க, அதை எடுத்துக்கொண்டு மீண்டும் அவனெதிரில் வந்து நின்றாள். 

 

மொழி இன்னமும் அவளையே பார்த்திருக்க, இதழில் சிறு வளைவுடன் நின்றவளின் பார்வை "என்ன?" என்றது 

— “Operation: கல்யாணம்” கதையிலிருந்து ஒரு பகுதி  

✍️ எழுத்தாளர்: Yagnya 

இந்தக் கதை முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது



முந்தைய அத்தியாயம்  |  அடுத்த அத்தியாயம்

📖 இந்த தொடரின் அத்தியாயங்கள்

Comments