Operation: கல்யாணம் - 11
கல்யாணத்திற்கு ஒரு மாதம் முன்பு...
கயன்னங்கை வீட்டில்...
ஆயிற்று! அவள் வீட்டை விட்டு வந்து.. விட்டு வந்தென்ன விட்டு வந்து! அவள் வீட்டில் இருந்து வெளியேறி இரண்டு மாதங்கள் முடிந்திருந்தன. கல்யாண வேலைகளில் வசுதாவின் தலைமையில் கனகச்சிதமாக நடந்துகொண்டிருந்தன.
திருமணம் அவர்களது பூர்வீகத்தில் என்று முடிவாகியிருக்க, அதற்கு இங்கிருந்து இரண்டு வாரத்திற்கு முன்பே அவிரோள் கயன்னங்கை குடும்பத்துடன் கிளம்புவதாகவும், பிறகு திருமணம் முடிந்து மணமக்கள் ஆச்சி வீட்டில் ஒரு வாரம் இருந்துவிட்டு வருவதாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கயன்னங்கையின் பூர்வீகமும் அதற்கு அருகில்தான்.
இந்த இரண்டு மாத காலமும் அத்தனையிலும் பட்டும் படாமல் நின்ற மனதை அனைவரது இழுப்பிற்கும் ஏற்ப இசைந்தபடி இருந்தவள் பார்க்க சாதாரணமாகத்தான் இருந்தாள். ஆனால் உள்ளுக்குள்தான் மாபெரும் நிசப்தம் ஒன்று நிறைந்து நின்றது.
அதை சரியாக உணர்ந்துகொண்ட கயன்னங்கை அவளால் முடிந்தளவு அவிரோளை அத்தனையிலும் இணைத்துக்கொண்டாள். அன்று காலையிலும் எங்கேயோ வெளியில் கிளம்ப இருந்தவள் முதல் வேளையாக இவள் அறைக்கு வந்து
"ஆஃபிஸ் லீவ் விஷயமா வெளில போயிட்டு வரேன் ரோ.. நீ எதா இருந்தாலும் கூப்பிடு. இன்னைக்கே சின்ன சின்ன ஐட்டம்ஸ்லாம் பேக் பண்ண ஆரம்பிச்சிடு, நான் வந்ததும் நாம ஷாபிங் போயிட்டு வரலாம்" என்றுவிட்டுக் கிளம்பியிருக்க
காலை உணவிற்குப் பிறகு கொஞ்ச நேரத்தை வெளியில் தோட்டத்தில் நடந்து நெட்டித் தள்ளி, பிறகு அதுவும் சலித்துவிட, கயன் சொன்னது போல பெட்டியைத் தயார் செய்துவிடலாம் என்று எண்ணமிட்டபடி வந்தவளுக்கு முதலில் அவள் பெட்டி எங்கே என்றே தெரியவில்லை.
ஆம், அன்று அவிரோள் அப்படி அசைவற்று சிலையாகச் சமைந்துவிட, கயன்னங்கைதான் அவள் பெட்டியில் இருந்த உடைகளை எடுத்து அலமாரியில் வைத்துவிட்டு அவளுக்கு மாற்றுடை எடுத்து கையில் கொடுத்தது.
இங்கு வந்ததில் இருந்து அவள் பெட்டி எங்கே என்று ஒரு முறைகூட தேடியிருக்கவில்லை.
கட்டிலுக்கு அடியில், கீழ்த் தட்டுகளில் என எதிலுமே இல்லாமல் போக, மெத்தை மீது ஏறி நின்று எக்கி பார்த்தாள்.
லாஃப்டின் ஓரத்தில் இருந்தது அந்த நீல நிற பெட்டி!
மேசை அருகில் கிடந்த நாற்காலியை இழுத்து வந்து போட்டவள் அந்த உயரமும் பற்றாமல் போக, இரண்டு தலையணைகளையும் போட்டுக்கொண்டு ஏறிச் சிறு தள்ளாட்டத்துடன் எப்படியோ எடுத்துவிட்டாள்.
ஓரங்களில் சிறு நூலாம்படை படரத் தொடங்கியிருந்தது.
ஏனோ சம்பந்தமின்றி அது ஒருவித வெறுமையை தந்தது.
காரணமின்றி எழும் வெறுமை உணர்வில் எரிச்சலே மிக, தூசி தட்ட துவங்கியிருந்தவளின் கை ஒரு கட்டத்தில் வேகம் கூடி அந்த பெட்டியை தள்ளிவிட்டது!
கோபம்! சம்பந்தமேயில்லாத கோபம்!
ஒரு பெட்டிக்கிட்ட போய் உன் வீரத்தை காட்டறியே! ச்சு..
மீண்டும் பெட்டியை அருகில் இழுத்தவள் அதைத் திறந்தாள். ஒன்றுமே இல்லை. வெறுமையாக இருந்தது.
ப்ச்!
மூட சென்றவளின் கை ஒரு கணம் தயங்கியது. பெட்டியின் உட்பக்க ஸிப், அதை மல்லாக்க கவிழ்த்ததும் ஏதோ தட்டையாகத் தெரிந்தது.
புருவம் சுருங்க, அவசர அவசரமாக அதை திறந்து பார்த்தாள். ஏதோ காகிதங்கள் போல...
இது சித்தி கையெழுத்துதானே! சற்றே கோழி கிறுக்கலாய்..
மறுகணமே உடல் முழுக்க பரபரப்பு தொற்றிக்கொள்ள மடக்கியிருந்த காகிதத்தைப் பிரித்தாள். கடிதம்! பிரித்ததும் உள்ளிருந்து இன்னொரு இரண்டாக மடித்த குட்டி காகிதம் அவள் மடியில் விழுந்தது. அது கருத்திலேயே படாதவள் போல, சித்தியின் கையெழுத்தை பார்த்ததில் மற்ற எதுவுமே அவள் கவனத்தில் பதியவில்லை.
"நீ எந்த தப்பும் செய்யலைனு எனக்குத் தெரியும் அவிமா. அவங்க குடும்பத்தைப் பார்த்தா நல்ல மனுஷங்களா தெரியுது. நீ இங்க இருந்தா நிச்சயம் இது நடக்காது. இனியாவது நிம்மதியா இரு" என்று நாலே வரிகளில் அவளது அத்தனை நாள் துயரத்தையும் முடித்திருந்தாள் சித்தி.
கைகள் நடுங்கக் காகிதம் நழுவியது.
(இதுல பத்து லட்சத்துக்கு செக் இருக்கு. இது உனக்கு சேர வேண்டியது) என்ற அவசர கிறுக்கல் பின்பக்கம்.
மடியில் இருந்து சரிந்து தரையில் விழுந்துவிட்டிருந்த மடித்த காகிதத்தில் படிந்தவளது பார்வை மெல்ல மெல்ல எங்கோ சென்றது.
தொண்டை இறுக, சுவாசிப்பதே சங்கடமாகத் தோன்ற, மீண்டும் மடியில் கிடந்த சித்தியின் கடிதத்தைக் கண்டவள், அடுத்த நொடி அதை உள்ளங்கைக்குள் இறுக்கிக்கொண்டு அறையைவிட்டு வெளியேறினாள்.
பத்து நிமிடங்களுக்கு முன்பு...
எழிலுக்கு பொதுவாகவே அலுவலகத்தில் அமர்ந்து செய்யும் வேலை என்றில்லை. அவனது வேலையே கள வேலைதான். க்ளப், ரெஸ்டாரெண்ட் மேனேஜர்களிடம் பேசி இவர்களது குழுவுடன் 'மீட்டிங் அரேன்ஜ்' செய்வதுதான் முக்கிய பொறுப்பு. அதிலும் கல்யாண வேலைகளுக்கென அவன் முன்னதாகவே விடுப்பு எடுத்திருந்தான்.
அன்றும் காலையில் வசுதா ஏதோ புடவை விஷயமாக கயன்னங்கை அம்மாவிடம் விவரம் கேட்டுவிட்டு வரச் சொல்லியிருக்க, விவரம் கேட்டறிந்தவனின் பார்வை மாடியை ஆராய்ந்தது. அதை அவரும் பார்த்துவிட
"கயனா இல்லையா ஆன்ட்டீ?" என்றான் பவ்யமாக
அதில் இதானே வேண்டாம்கிறது! என அவனை கேலிப்பார்வை பார்த்தவர்
"அவி அவ ரூம்ல இருக்கா" என்றார் மிடுக்காக
"அய்யோ நான் நிஜமாவே கயனாவ பார்க்கதான் கேட்டேன் ஆன்ட்டி! அவதான் சீக்கிரம் வா ஷாபிங் போனும்னு சொல்லிருந்தா" என்று அம்மா சத்தியமா ஆன்ட்டீ!! எனத் தொண்டையைப் பிடித்துக்கொள்ளாத குறையாக அவன் பதற இம்முறை வாய்விட்டே சிரித்தவர்
"ஓ.. சரி சரி. அவ ஆஃபிஸ்ல இருந்து கால் வந்ததுனு கிளம்பி போயிருக்கா எழில். வெய்ட் பண்ணு இப்ப வர நேரம்தான்." என்று எழுந்து வேலையைப் பார்க்கச் சென்றுவிட
கொஞ்ச நேரம் இங்கும் அங்குமாக சுற்றியவன் பிறகு அவிரோள் அறைக்கு அருகில் இருந்த மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகளைத் தவிர்த்துவிட்டு அதற்கு எதிர்புறம் இருந்த கயன்னங்கையின் அறைக்குச் சென்றான்.
நமக்கு எதற்கு வம்பு?
கடல் பச்சை நிறத்திலான திரைச்சீலைகளும் மெத்தை உரையுமாக இருந்த அறையில் ஆங்காங்கே கடலும், முத்துச்சிப்பியுமான கலவைதான்!
இன்னமும் அப்படியே இருக்குது! குட்டிச் சாத்தான்... ஹா ஹா
அவள் இடம் பார்த்து அடுக்கியிருந்தவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்தபடி வந்தவனின் கால்கள் நடு நாயகமாக நிற்க வைக்கப்பட்டிருந்த கிட்டாரில் நின்றது.
மெல்ல அதை அதன் தாங்கியில் இருந்து கழட்டி எடுத்தவன் மெத்தையில் அமர்ந்தான்.
"மொழி" என்று பதிக்கப்பட்டிருந்த பெயரில் அவன் விரல்களை மென்மையாய் ஓடின.
இதழ்களில் தன்னிச்சையாய் துளி புன்னகை.
ஒரு கம்பியை இழுத்தான். பழைய நினைவுகள் அத்தனையும் அலை அலையாய் எழுவது போன்ற பிரமை.
ஒருவேளை இந்த கடற்பச்சை அறையினாலா? தெரியவில்லை.
இயல்பு போல கார்ட்டுகளை சரிசெய்தவனின் விரல்கள் கம்பிகளை வருடி மீட்டன.
அதே பாடல்..
ஏன் அப்படிச் செய்தான் என்று அவனுக்கே புரியவில்லை. ஆனால் நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் கிட்டாரைக் கையில் எடுத்தவனுக்குத் தோன்றியதெல்லாம் அந்த ஒரு பாட்டு மட்டும்தான்.
நினைவிலே புது சுகம் த ர ர ரா த தா
தொடருதே தினம் தினம் த ர ர ரா த தா
மொழியின் மேல் இமைகள் கீழ் இமைகளை முத்தமிட்டன.
"பொன்மாலை நேரங்களே
என் இன்பராகங்களே.."
அவன் இதழோரத்தில் இன்ப முறுவலொன்று.
"இதுதானே என் ஆசைகள்.. அன்பே" மெல்ல இமை பிரித்தவனின் எதிரில் அதே பிம்பம்! அன்று பார்த்த அதே பிம்பம்! அதே வதனம்! அதே கண்ணீர்!
அதிர்ந்தவனின் கை மீட்டலை நிறுத்தியிருக்கக் கண்ணாடியில் இருந்த பார்வையைப் பட்டென பின்னால் திருப்பினான்.
இம்முறை அவள் ஓடியிருக்கவில்லை. அங்கேயேதான் நின்றாள்.
— “Operation: கல்யாணம்” கதையிலிருந்து ஒரு பகுதி
✍️ எழுத்தாளர்: Yagnya
இந்தக் கதை முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது
