🌿 Featured Story

அன்பில் அவன் அலாதி

கோடைக்கால நினைவுகளின் கதை.

📖 Read Story

🎧 Audiobooks

Listen to our stories while travelling, resting or dreaming.

Enter Our Audio Story World

Romance, thrillers, healing stories & emotional journeys, now in audio form.

🌿 Fresh Updates

New chapters, articles, announcements & story updates.

Operation: கல்யாணம் - 9

✍️ எழுதியவர் Yagnya

Operation: கல்யாணம் - 9 

 


மூச்சு வாங்க விடுவிடுவென வெளியில் வந்த அவிரோள் அப்படியே கால் போன போக்கில் நடைபாதையில் இறங்கி  நடக்கத் தொடங்கிவிட்டாள். 

 

அவள் செவிகளில் மீண்டும் மீண்டும் கயன்னங்கையின் "உனக்கு வீட்டு சூழ்நிலை சரியில்லை" ரீங்கரித்துக்கொண்டிருந்தது. 

 

மெய்தான்! அவளுக்கு வீட்டுச் சூழ்நிலை மகா மோசமாகத்தான் இருந்தது. 

 

ஆம், அவிரோளுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே வேலை போய்விட்டது. அவள் பணிபுரிந்த நிறுவனத்தில் ரிசஷன் பீரியட் எனக் கொத்தாக ஒரு டீமையே தூக்கிவிட்டார்கள். அதில் சமீபத்தில் அதிக சம்பளம் வாங்க தொடங்கியிருந்த அவிரோளும் சேர்த்தி. 

 

வேலை போனதைவிடப் பெரிய பிரச்சினை இதை வீட்டில் சொல்வதுதான். அதிலும் படிப்பு முடிந்து ஒரு மாத காலம் வீட்டிலிருந்ததற்கே சித்தப்பா அவ்வளவு சிடுசிடுத்தார். இதில் வேலை போய்விட்டது என்று சொன்னால்.. அதுவும் ஏற்கெனவே அவளால் வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் இருக்கும் சமயத்தில் சொன்னால் நிலைமை இன்னும் எவ்வளவோ மோசமாகக் கூடும் என்பதை உணர்ந்தவள் அதை அப்படியே மறைத்துவிட்டாள்.

 

ஆம்! கடந்த நான்கு மாதங்களாக வ்ர்க் ஃப்ரம் ஹோம் என ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு, வேலை நேரம் முழுதும், அதாவது காலையில் ஒன்பது மணியில் இருந்து இரவு ஏழு மணி வரை, கணினி முன்னால் அமர்ந்து வேலை செய்வதுபோல காட்டிக்கொண்டு வேலை தேடிக்கொண்டிருந்தாள். 

 

முதல் இரண்டு மாதங்கள் வந்த நேர்காணலுக்கான அழைப்புகள்கூட மூன்றாவது மாதத்தில் குறைந்திருக்க, அவளுக்குள் அச்ச பெருவெள்ளம் கரை புரளத் தொடங்கியிருந்தது. 

 

இவ்வளவு நாள் அவள் தனியாகச் சேர்த்த சேமிப்பு நிதியில் இருந்து உருவி வீட்டில் கொடுத்துச் சமாளித்தாயிற்று. போகிற போக்கைப் பார்த்தால்.. இன்னும் இரண்டு மாதம் தாண்டுவதுகூட சந்தேகமாகிவிடும் போல இருந்தது நிலைமை. 

 

அதற்குள் எப்படி வேலையை இல்லாதது தெரியாமல் அடுத்த வேலையில் அமர்வது? அதற்குள் கிடைத்துவிடுமா? இதில் இவள் வர்க் ஃபரம் ஹோம் எனத் தொடங்கியதில் இருந்து இந்த அகில் வேறு பெரிய எனோலா ஹோம்ஸ் போல அவளை வேவு பார்த்துக்கொண்டிருக்கிறான். 

 

குட்டி பிசாசே! ஒரு நாள் உனக்கு இருக்குடா! ச்சே.. சித்திக்காகப் பார்த்து விடறேனாக்கும்! 


அவிரோள் தீவிர சிந்தனையில் கையில் இருந்த அத்தனை நகங்களையும் கடித்துத் துப்பிக்கொண்டிருந்த சமயம் 

 

அவள் முன்னால் இரு நெடிய கால்கள் வந்து நின்றன. 

 

மெல்ல நிமிர்ந்து பார்த்தாள். அவள் அவ்வளவு நேரமும் மானசீகமாக மண்டையில் குட்டிக்கொண்டிருந்த அகில்! 

 

கேட்டிருச்சோ... 

 

புருவம் நெரிய அவனைக் கேள்வியாய் பார்த்தாள். 

 

பய ஏதோ பெருசா சிக்கிட்டான் போல! 

 

இஞ்சி தின்ன குட்டி பிசாசு முழி! 

 

முகத்தை வெகு பாவமாகத் தொங்கப் போட்டபடி தன் முன்னால் நின்றவனை தான் அவி மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் 

 

நீயே சொல்லு என 

 

இரண்டு முழு நிமிடங்கள் கரைந்தன. 

 

முகத்தை பல பாவனைகளில் பாவமாக, பவ்யமாக என மாற்றி அப்பாவித்தனத்திலேயே நவரசங்களையும் பிழிந்துகொண்டிருந்தவன், தான் கதறி அழுதாலும் இவளாகக்  கேட்கப் போவதில்லை என்று புரிந்துவிட மெல்லத் தொண்டையை செருமிக்கொண்டு 

 

"அக்கா.." என்றானே பார்க்கனும்! 

 

அவிரோளுக்கு அடிவயிற்றிலிருந்து அப்படியொரு சிரிப்பு வந்தது! சிரிக்காது தலையை ஒரு பக்கமாகச் சரித்து புருவம் உயர்த்தி அவனை ஆச்சரியமாக அவள் பார்க்க 

 

அகிலுக்கு பற்றிக்கொண்டு வந்தது. 

 

நானே இறங்கி வந்து நிற்கிறேன்! எவ்வளவு நக்கல் இவளுக்கு! 

 

கடுகடுக்க தொடங்கிய முகத்தை முயன்று மாற்றியவன் பொத்தென மண்டியிட்டு அமர்ந்துவிட்டான் 

 

புதுசா ஏதோ ட்ரை பண்றானே! 

 

அவிரோளின் பார்வை இப்பொழுது முழுமையாக அவனிடம் 

 

அதை உறுதி செய்துகொண்டவனும் 

 

"அவி அக்கா.." என அழவே தொடங்கிவிட 

 

அவன் மெய்யாகவே கண்ணீர் விடுவதைக் கண்டவளுக்கு அத்தனை நேரமிருந்த விளையாட்டுத்தனங்கள் அத்தனையும் மறைந்திருக்க அவசர அவசரமாக எழுந்து அவனிடம் வந்தாள். 

 

"என்னாச்சு? ஏன் அழற"  

 

கேட்டுவிட்டாள்! 

 

கலங்கிய விழிகளுடன் அவளை நிமிர்ந்து பார்த்தவன் அதே அழுகுரலில் பேசினான். 

 

"பெரிய தப்பு பண்ணிட்டேன் க்கா! எப்படி சரி செய்யறதுனே தெரியல.. போச்சு! எல்லாமே போச்சு!" என்று அரற்ற 

 

"ப்ச்! முதல்ல என்னாச்சுனு சொல்லு" என்றாள் அதட்டலாய். 

 

"என் காலேஜ் ஃப்ரெண்ட் ஒருத்தன். சுதா. நம்ம வீட்டுக்கு கூட வந்திருக்கான்.. அவனோட மாமா ஒருத்தர் பிட்காய்ன், ட்ரேடிங் பத்திலாம் நிறைய தெரிஞ்சவர்.." என்றவன் தொடங்கும்பொழுதே என்னவாகியிருக்கும் என்பது அவளுக்குப் புரிந்துவிட 

 

"எவ்வளவு போச்சு?" என்றாள் அமைதியாக 


பயங்கர தயக்கத்துடன் அவளை ஏறிட்டவன் 

 

"பத்து.. பத்து லட்சம்" என்றதும் அவிரோளே ஆடித்தான் போனாள். 

 

அவ்வளவா என்று. 

 

"அவ்வளவு பணம் உன்கிட்ட ஏது?" என்றவளின் பார்வை அவனை ஆராய 

 

அகிலின் தலை தாழ்ந்தது 

 

"அம்மா அகௌண்ட்ல இருந்து.." குரல் உள்ளேயே சென்றுவிட்டது. 

 

நிலைமையின் தீவிரம் முழுதாக உரைக்க, எழுந்து அப்படியே தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.

 

எவ்வளவு பெரிய வேலை செய்திருக்கிறான்! 

 

"இப்போ என்ன செய்யலாம்னு இருக்க?" என்றவள் கேட்ட மறுநொடி தரையில் அமர்ந்திருந்தவன் அப்படியே அவள் கால்களைப் பிடித்துவிட்டான். 

 

"ப்ளீஸ்க்கா! எப்படியாவது நீதான் க்கா ஹெல்ப் பண்ணனும்.. அப்பாவுக்கு மட்டும் தெரிஞ்சா கொன்னே போட்றுவாரு! அம்மாவுக்கும் பெரிய பிரச்சனையாகிடும்.. ப்ளீஸ் அவியக்கா.. தயவுசெஞ்சு இந்த ஒரு தடவை ஹெல்ப் பண்ணு. நீதான் இப்போ வேலைக்கு கூட போக ஆரம்பிச்சிட்டியே.. நான் விளையாட்டுத்தனமா உன்ன நிறைய தடவை மாட்ட வச்சிருக்கேன்தான். ஆனா நான் உன் தம்பிதானே? உன்ன விட சின்ன பையன்தானே.. ப்ளீஸ்க்கா" என்றவன் அப்பொழுதும் எதற்குமே மன்னிப்பு கேட்காமல் உதவி மட்டும் கேட்க அவிரோளுக்கு அவ்வளவிலும் சிரிப்புதான் வந்தது. 

 

நீ சின்ன பையனா? 

 

இதழோரம் துளிர்த்த ஏளன முறுவலைச் சரி செய்தவள் அவனிடம் 

 

"ம்ம்.. நீ போ யோசிக்கலாம்" என்று மட்டும் சொல்லி அனுப்பியிருந்தாள். 

 

இது நடந்து ஒரு வாரம் கூட இருக்காது ஆனால் இந்த ஒரு வாரமும் அவள் கண் விழிப்பதில் இருந்து இரவு தூங்கச் செல்வது வரை அவள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரே விஷயம் இதுதான். அவன் அப்படி ஓட வைத்தான். ஆம்! சதா சர்வகாலமும் முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டும், கண்களில் விரக்தியை வழிய விட்டுக்கொண்டும் அகில் அவள் பார்வையிலேயே பட்டுக்கொண்டிருந்தான். 

 

அதையெல்லாம் விட மோசம் நேற்றிரவு  கதவைத் தட்டி இவளை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றவன் 

 

"நான் வேணா செத்துறவாக்கா? பிரச்சனை சுலபமா தீர்ந்திடும்ல.." என்று வேறு அசட்டுத்தனமாகப் பேசி வைக்க, 


"எதுக்கு அதுக்கும் உங்கப்பா என்னாலன்னு சொல்லவா? ஒழுங்கா கொஞ்ச நாள் மூடிட்டு இருக்க முடியும்னா இரு! இல்லை உன்னிஷ்டம்" என்று வந்துவிட்டாலும் அவளது அன்றைய தூக்கம் மொத்தமாக பறந்திருந்தது. 

 

அவளுக்குமே அவ்வளவு பெரிய பணத்தை எப்படிப் புரட்டுவது என்று புரியவில்லை. இதில் வேலை விஷயம் வேறு! ப்ச்.. 

 

'க்ரீஞ்ச்ச்ச் க்ரீஞ்ச்ச்ச்' என்றொலித்த சைக்கிள் மணியோசையில் திடுக்கிட்டு நிதர்சனத்திற்கு வந்த அவிரோள் தன்னை சுற்றிப் பார்த்தாள். யோசித்தபடியே தெருமுனைவரை நடந்து வந்திருந்தாள். கீழே பார்த்தாள் அடுத்த அடி நடைபாதை கல் பாதியாக உடைந்திருந்தது. தன்னிச்சையாக ஓரடி பின்னால் எடுத்து வைத்தாள். 

 

இங்கு கரியோக்கி பாக்ஸில்... 

 

எழில் தலையை இரண்டு கைகளாலும் பிடித்தபடி அமர்ந்திருக்க, கயன்னங்கை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸை முடித்துக்கொண்டிருந்தாள். 

 

அவள் அருகில் இருந்த டிஷ்ஷூவில் விரல்களைத் துடைத்துவிட்டு, இரு கைகளையும் தூசு தட்டிக்கொள்வதை எழிலின் பார்வை முறைப்பாய் தொட 

 

அதை உணர்ந்தவளோ 

 

"வாட் மேன்?" என்றாள் சர்வ சாதாரணமாக 

 

"அதெப்படி கொஞ்சம்கூட டென்ஷனே இல்லாம இருக்க நீ? இதெல்லாம் சரிப்பட்டு வருமா? அவ அப்படி கோபப்பட்டு தனியா போறா.. எதையுமே கண்டுக்காம ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ மொக்கிட்டு இருக்க?" என்று கேட்க 

 

அவன் முதுகில் ஒன்று வைத்தபடி எழுந்து நின்றவள்,"அதெல்லாம் சரியா வரும். என்ன சொன்ன? கண்டுக்காம இருக்கேனா? அவளே இன்னும் அஞ்சு நிமிஷத்துல திரும்பி வருவா பாரு" என்று தோள்களைக் குலுக்கிக்கொண்டவள் அங்கு மேசையில் கிடந்த மைக்கை எடுத்துக்கொண்டு அவளுக்கான கரியோக்கியை தேர்ந்தெடுக்கத் தொடங்க 

 

அவள் சொன்னது போலவே ஐந்தே நிமிடங்களில் கதவு திறக்கப்பட அதே வேகத்தில் அவன் முன்னால் வந்து நின்ற அவிரோள் அவள் கையை நீட்டினாள் 

 

"நான் அவிரோள், இப்போதைக்கு விஐபி" என்று. 

 

இன்று...

 

"மொசலூ! யய்யா மொசலூ!" என்று ஆச்சியின் குரல் கீழ்த் தளத்திலிருந்து வர 

 

அய்யோ ஆச்சீ!!!!! என்று உள்ளுக்குள் அலறியவன் முதுகில் படிந்த பார்வையின் கட்டாயத்தில் திரும்ப.. 

 

கேட்டுட்டா! 

 

விழிகளில் சுவாரஸ்யம் பொங்க அவனையே புருவம் உயர்த்தி ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவிரோள். 


துளி அசௌகரிய சிரிப்புடன் விழிகளைச் சுருக்கியபடி இவள் கேட்டுவிடக்கூடாதென வேண்டிக்கொண்டே திரும்பியவன் இவளை பார்த்ததும் முகம் இன்னும் வெட்கி சிவப்பதைக் கண்டவளுக்கு எழுந்த சிரிப்பு அவன் சிவந்த கன்னத்தில் சடன் ப்ரேக்கிட்டது. 

 

உஷ்! 

 

"ஆச்சி சாப்பிட கூப்பிடறாங்க.." என்றான் மெல்ல, பேச்சை மாற்றிவிடும் முயற்சியில். 

 

அதற்கு வெகு சாதகமாக வெறும் "ம்ம்" உடன் ஓரெட்டு முன்னால் அவள் எடுத்து வைக்க 

 

அப்பாடியோவ் விட்டுட்டா! என அவன் நினைக்க தொடங்குகையிலேயே மெல்ல பின்னால் திரும்பி அவனைப் பார்த்தவள் 

 

"அதென்ன மொசலு?" என்றாள் புருவம் உயர்த்தி, ஆர்வமாக

 

ஒரு கணம் அது கிண்டலோ என்று எண்ணியவன் அவள் விழிகளில் தெரிந்த ஆர்வத்தில்

 

"அது.. எனக்கு பாதி தாத்தா பேரு. சோ எல்லாரும் வீட்டுல மொழினுதான் கூப்பிடுவாங்க. ஆச்சிக்கு மொழினு கூப்பிட வராது, அதான் செல்லமா மொசலுனு கூப்பிடுவாங்க.. மொசலுன்னா.." என ஒரு கணம் தயங்கி

 

"முயல்னு அர்த்தம்" என்றுவிட்டு கேலியை எதிர்நோக்கி அவளைப் பார்க்க 

 

"ஓ.." என மெல்லிய ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டவள் "நல்லா இருக்கு" என்றுவிட்டுத் திரும்பி நடந்துவிட 

 

அதில் அப்படியே நின்றுவிட்டான் மொழி. 

 

அதிசயத்திலும் அதிசயமாய் அவள் அவனை இரண்டு நாட்களாக வறுக்காதது, அதுவும்  இன்று அவனே இப்படிப் பல கன்டெண்ட் கொடுத்தும் வறுக்காதது ஆச்சரியம் என்றால் அவளிடம் இருந்து வந்த நல்லா இருக்கு, அவனுக்கு நிறையவே நன்றாக இருந்தது. 

 

மொழி அப்படியே நிற்க, நான்கு படிகள் இறங்கியவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள் 

 

"வாங்க மொசலு"  

 

அதானே பார்த்தேன்! என்று நினைத்தவனுக்குள் பனிக்காற்றொன்று இதமாய் பரவியது. 

 

மெல்லிய புன்னகையுடன் "இதோ வரேன்" என்றவன் இறங்கி வந்தான். 

 

வரிசையாக சிறுசுகளும், ஓரிரண்டு பெருசுகளும் அமர்ந்திருக்க, நேர்கோட்டில் அளந்து வைத்ததுபோல வாழை இலை ட்ரெயின் விடப்பட்டிருந்தது. 

 

"அத்தான்! அக்கோவ்! உங்களுக்கு நான் அப்போதே இடம் போட்டுட்டேன்" என்று தன் அருகில் இருந்த இடத்தை இடது புறங்கையால் தட்டி ஒரு பத்து வயது சிறுவன் பளீரென சிரித்தான். 

"புளுவாதல!" உடனடியாக அவனுக்கு வலப்புறமிருந்து ஒரு போர்க்கொடி உயர்த்தப்பட்டது. 

 

"மகேசு புளுவுறான் மாமா! ஆச்சி உங்களுக்கு இலை போட்டதும் என்ன தள்ளிவிட்டு உக்காந்துட்டான்" என்று தான் எப்படி தன் இரண்டுவிட்ட மாமன் அருகே உட்காரும் பாக்கியத்தை இழந்தேன் என்பதை உக்கிரமாய் பேசியது இன்னொரு பொடிசு. அவனுக்கும் அதே வயசு. 

 

"செரி சண்ட போடாதீயல! உங்க மாமன் இன்னும் மூனு நாள் இங்கனதானே இருக்கபோதான்! அப்போ நீ இடம் பிடிச்சிரு சதீசு" என்று அருமையான ஐடியாவை கொடுத்து அந்த சண்டைக்கு நாட்டாமை செய்தது ஒரு பெருசு. அது 'இந்த மாமனுக்கு' மாமானாம்! 

 

அவிரோளுக்கு எல்லாமே சிரிப்பாகத்தான் இருந்தது. அவளும் வந்ததில் இருந்து பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாள்! இவன் கீழே இறங்கி வந்தால் போதும்! இளவட்டங்கள் வட்டமடிப்பதென்ன! எங்கு சென்றாலும் அத்தான், மாமா, அண்ணே என தொற்றிக்கொண்டே சுற்றுவதென்ன. 

 

விழலுக்கு இரைத்த நீர் போலச் சித்தி, அத்தை, மயினி, அக்கோவ் என இவளையும் விடுவதில்லை.  இத்தனை உறவுமுறைகளால் விளிக்கப்படுவது இதுதான் அவளுக்கு முதல் முறை. ஏன் கயனை தவிர்த்து இப்படி ஒருவர் தடாலடியாக உறவு பாராட்டுவதே இதுதான் முதல் முறை. 

 

"போலே நீ! நான் அக்காவ ஆத்தங்கரைக்கு கூட்டு போதேன்.." என்று இன்னும் முணுமுணுப்பாய் அவர்கள் சண்டை தொடர, ஆச்சி பெரிய பானையுடன் வெளியில் வரவும் கப்சிப்பென அமைதியானவர்கள் சாப்பாட்டில் கவனமாகினர். 

 

இவர்கள் இருவரும் அவர்களுக்கென மகேசு பிடித்து வைத்த இடத்தில் அமரவும் சாப்பாடு பரிமாறப்பட்டது. 

 

இருவரும் உண்பதை ஒரு நொடி திருப்தியாக பார்த்துவிட்டு

 

ஆச்சி அந்த பக்கம் நகர்ந்தவுடன் மொழியின் தொடை சுரண்டப்பட்டது 

 

திரும்பி பார்த்தான் 

 

"பாருடே உங்காச்சிய! கறிவிருந்து போடறேனு சொல்லிட்டு கெழங்கும் காயுமா போட்டு ஏமாத்துது" என்றவர் மீசை துடிக்கக் குற்றப்பத்திரிக்கை வாசிக்க 

 

"கோயிலுக்கு போகனும்னு சொல்லிட்டிருந்தாங்க மாமா.." என்று மொழி தீவிரமாகக் காரணம் சொல்லிக்கொண்டிருக்க 

 

மனிதர் கடுப்பாகிவிட்டார். 

 

"போடே நீ" என்றந்த மாமா திரும்பிவிட மொழி அசடு வழிய சிரிப்பதைக் கண்டு அவிரோளுக்கு சிரிப்புதான் வந்தது. 


ஆச்சி மீண்டும் கையில் பாத்திரத்துடன் வந்தவர், வேண்டுமா வேண்டாமா என்றெல்லாம் கேட்கவில்லை. அவர் பாட்டில் துளி இடமிருந்தாலும் அதைத் தூக்குச் சட்டியை கவிழ்ப்பது போலத் தீவிரமாக நிரப்பிக்கொண்டிருந்தார். 

 

இம்முறை சேப்பங்கிழங்கு வறுவல் பரிமாறப்படவும், ஒரு துண்டு எடுத்து வாயிலிட்ட அவிரோள் கண்கள் விரிய அவனைப் பார்க்க  

 

மொழி,"செம்மையா இருக்குல்ல? என் ஃபேவரட். நான் எப்ப வந்தாலும் ஆச்சி செஞ்சிடுவாங்க" என்று பெருமை பொங்கப் பேச  

 

அதில் கவனம் கலைந்த மாமா மீண்டும் 

 

"என்னடே?" என்று இவன் புறம் திரும்ப 

 

"கொல கேசியா மாமா" என்று பதிலுக்கு எதார்த்தமாகச் சொல்லியவன் மீண்டும் இவள் புறம் திரும்ப, அதைப் பதார்த்தமாகப் புரிந்துகொண்டவர் 

 

"என்ன கொல கேசு?" என்றதுதான் தாமதம்! மொழியின் முழியைப் பார்த்திருக்க வேண்டுமே! 

 

அதை முகத்துக்கு நேராகப் பார்த்த அவிரோளுக்கு சிரிப்பு பீறியெழ, அது புரையேறிவிட்டது. 

 

வயிற்றை பிடித்துக்கொண்டு எழுந்த சிரிப்பையும் அடக்க முடியாமல், புரையேறுவதையும் தடுக்க முடியாமல் அவள் திணற, ஆச்சி உள்ளே இருந்து அவசர அவசரமாக ஓடி வர, அதற்குள் அங்கிருந்த சொம்பை எடுத்து அவளிடம் நீட்டினான் மொழி. 

 

அதற்குள் ஓரளவு சமநிலைக்கு வந்துவிட்டவள் அண்ணாந்து நீரைத் தொண்டையில் சரித்தபடி ஓர விழியால் அவனைப் பார்க்க அவன் பார்வை முழுதும் அவளிடம்தான் இருந்தது. 

 

"இப்போ பரவாயில்லையா?" என்றவனின் பரிவு கேள்வியில் அரும்பிய புன்சிரிப்புடன் அவனை ஏறிட்டவள் 

 

"ஓகே பட்டு" என்றுவிட்டு அதே மர்ம புன்னகையுடன் இலையில் கவனமாகிவிட 

 

என்ன? என்று புரியாமல் விழித்தவன் எதுவுமே நடவாததுபோல சாப்பிட்டுக்கொண்டிருந்தவளையே ஓரப்பார்வை பார்த்தபடி உண்ணத் தொடங்க 

 

அவன் பார்வையை உணர்ந்தவள் போல, எதிரில் வெயில் படிந்த முற்றத்தைக் கீழ் பார்வை பார்த்தவள் குரலைத் தழைத்து 

 

"இலைய பார்த்து சாப்பிடு பட்டு" என்று மீண்டும் அதையே சொல்ல 

 

இம்முறை ஆர்வம் தாளாதவன் 

 

"என்ன சொன்ன என்னை?" என்று அதே ரகஸிய குரலில் கேட்க 

 

பக்கவாட்டு பார்வையில் அவனைப் பார்த்தவளும் "பட்டுனு சொன்னேன்" என்றாள் லேசாகத் தோளைக் குலுக்கி, அது ஒன்றுமே இல்லை என்பது போல. 


விழிகள் இரண்டு விரிய அவளை ஆச்சரியமாய் பார்த்தவனுக்கு 

 

ஷாக்க கொற ஷாக்க கொற! இதற்குள் எதுவோ இருக்கிறது என்று தோன்றிவிட 

 

மெல்ல தொண்டையை செருமியபடி 

 

"அப்படின்னா?" என்றான் பட்டும் படாமல். 

 

வரத்துடித்த சிரிப்பை அடக்கிய அவிரோள் இலையிலேயே கவனமாக 

 

"பட்டசாராயம்" என்றுவிட 

 

கேஷுவலாக காட்ட முயன்று ஒரு கவளம் சோற்றை வாயில் அள்ளி வைத்தவனுக்கு அவள் பதிலில் குபீரென்று புரையேறிவிட்டது. 

 

அவளை போல் அல்லாமல், உரக்க இருமியபடி, வாயிலிருந்த சாதத்தைப் பறக்கவிட்டு, விழிகளில் கண்ணீர் மல்க இருமியவனைக் கண்டவள் அவசர அவசரமாக அதே சொம்பை எடுத்து அவனுக்கு வலது கையால் புகட்டியபடி, மறு கையால் அவனது முதுகில் நீவத் தொடங்க 

 

மொழி போட்ட சத்தத்தில் பாயசத்துக்கு அப்பளம் பொரித்துக்கொண்டிருந்த ஆச்சி அடித்துப் பிடித்து வெளியில் வந்தவர், 

 

அவிரோள் மொழிக்குத் தண்ணீர் புகட்டியபடி முதுகை நீவுவதையும், மொழி அவ்வளவு களேபரத்திலும் அவளையே மௌனமாக நோட்டமிடுவதையும் கண்டவர் மெல்லிய சிரிப்புடன் அப்படியே திரும்பிச் சென்றார். 

— “Operation: கல்யாணம்” கதையிலிருந்து ஒரு பகுதி  

✍️ எழுத்தாளர்: Yagnya 

இந்தக் கதை முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது



முந்தைய அத்தியாயம்  |  அடுத்த அத்தியாயம்

📖 இந்த தொடரின் அத்தியாயங்கள்