🌿 Featured Story

அன்பில் அவன் அலாதி

கோடைக்கால நினைவுகளின் கதை.

📖 Read Story

🎧 Audiobooks

Listen to our stories while travelling, resting or dreaming.

Enter Our Audio Story World

Romance, thrillers, healing stories & emotional journeys, now in audio form.

🌿 Fresh Updates

New chapters, articles, announcements & story updates.

Operation: கல்யாணம் - 12 [Prefinal]

✍️ எழுதியவர் Yagnya

 Operation: கல்யாணம் - 12 [One Step to Ever After]

 


அறையில் இருந்து வெளியேறிய அவிரோளுக்கு உலகமே மந்தித்து போய்விட, வெளி சத்தங்களும், ஒளியும் மங்கிய நிலையில், மனதில் ஒரே குறிக்கோளாய் நேராக படிகளை நோக்கிச் சென்றவளின் பாதங்கள் அப்படியே நின்றது, தொலை தூரத்தில் கேட்ட கிட்டார் இசையில். 

 

அப்படியே நின்றவள் ஒன்றும் புரியாமல் விழித்தாள். 

 

தீனமாய் கேட்ட இசை மெல்ல மெல்ல சத்தம் கூடி மனமெங்கிலும் நிறைய தொடங்க, அதில் கட்டுண்டவளாய் சத்தம் வந்த திசையில் திரும்பி நடந்தாள். 

 

இவ்வளவு பக்கத்தில் இருந்தும் கதவு அவ்வளவு தூரமாக தெரிகிறதே! 

 

மெல்ல வாசலை அடைந்தவள் அப்படியே நின்றுவிட்டாள். உள்ளே மெத்தையில் ஒரு உருவம். வாசலுக்கு முதுகைக் காட்டியபடி ஒருவன் அமர்ந்து மடியில் கிட்டாரை வைத்திருந்தான். 

 

அவனுக்கு முன்னால் நின்ற கண்ணாடி எழிலின் பிம்பத்தைத் தெள்ளத் தெளிவாய் காட்டிக்கொண்டிருந்தது. அதற்குப் பின்னால் கண்கள் கலங்கித் தெரிந்த தன்னுருவையும்! 

 

அவிரோள் அப்படியே நின்றுவிட்டாள். விழி மூடி அகம் நிறைய இசைமீட்டிக்கொண்டிருந்தவன் நிதானித்தான். விழி திறந்தான். திறந்த மறுநொடி இன்னதென்று புரியாத ஒரு பாவத்துடன் அவள் பிம்பம் பார்த்தவனின் கண்களில் மெல்ல மெல்லப் பதட்டமும் பரிவும் கூட தொடங்க, கிட்டாரை அப்படியே மெத்தையில் போட்டுவிட்டு எழுந்து அவளிடம் வந்தான். 

 

"எ.. என்னாச்சு அவிரா? ஏன் ஒரு மாதிரி இருக்க? ஏதாச்சும் பிரச்சனையா?" என்று ஒவ்வொரு அடியையும் கேள்வியால் நிரப்பியபடி தன்னை நோக்கி வந்தவனை ஒரே எட்டில் அடைந்து அவன் மார்பில் இதம் தேடினாள் அவள். 

 

ஆயிரம் வாட்ஸ் அதிர்ச்சியுடன் கண நேரம் ஸ்தம்பித்தவன் நெஞ்சை நனைக்கத் துவங்கிய கண்ணீரில் இன்னும் அதிர்ந்தான். 

 

என்ன ஏதென்று தெரியாவிட்டாலும் அவள் முதுகை மெல்ல தட்டிக்கொடுத்தவன் "என்னாச்சு அவி.. நீ இப்படி அழுதா எனக்கும் அழுகை வருது.. யாரும் ஏதும் சொன்னாங்களா?" என்று மென்குரலில் கேட்க அவன் நெஞ்சில் இருந்தவளது தலை இல்லையென அசைந்தது. மெல்லக் கையை மட்டும் உயர்த்தியவள் கடிதத்தையும் அவன் நெஞ்சில் சேர்ப்பிக்க, ஒரு கையால் அதைப் பிரித்துப் படித்தவனுக்கோ அய்யோவென்றிருந்தது. 


மெல்ல தன்னை நிதானித்துக்கொண்டவன் 

 

"சித்திய பார்த்துட்டு வருவோமா?" என்றான் மெல்ல 

 

"வேண்டாம்" என்று கமறிய குரலில் திடம் குறையாது வந்தது அவளது பதில். 

 

அவன் மிருதுவாய் அவளுக்குத் தட்டிக்கொடுக்க, மெல்ல மெல்லத் தன்னிலை மீண்டவளாக அவனிடம் இருந்து விலகினாள் அவிரோள். 

 

எழிலை நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை. குனிந்த தலையோடு 

 

"தேங்க்ஸ்" என்றுவிட்டுத் திரும்பி விடுவிடுவென வாசல்வரை சென்றவள் ஒரு நொடி நிதானித்தாள் 

 

"யார்க்கிட்டயும் சொல்லாத" என்றுவிட்டு அவள் வெளியேறிவிட, நீர் திரையிட்டிருந்த விழிகளை இமைத்தட்டி தெளிவாக்கினான் எழில். 

 

இன்று... 

 

ஒரு பக்கம் வளர்பிறை பசும்பாலில் தோய்த்தெடுத்தது போல நிலவொளி பொழிந்துகொண்டிருக்க, அவளைச் சுற்றிக் கண்சிமிட்டிய வெள்ளி நட்சத்திரங்களையே பார்த்தபடி அந்த மொட்டைமாடியில் பாய் விரித்து அமர்ந்திருந்தாள் அவிரோள். 

 

ஏனோ சம்பந்தமின்றி அது அன்று மதியம் அவள் கண்ட ஆற்றங்கரை காட்சியை போலத் தெரிந்தது. 

 

எழில்மொழியும் அவனைச் சுற்றிக் கலகலத்த பிள்ளைகளும்.. 

 

ஊதக்காற்று உரசிச் செல்ல மெல்ல சிலிர்த்தடங்கியது தேகம். 

 

யாரோ படியேறி வரும் சத்தம் கேட்டது. தலையைத் திருப்பி பார்த்தாள். மொழிதான் ஒரு பெரிய போர்வையுடன் வந்துகொண்டிருந்தான். இவள் திரும்பிப் பார்த்ததில் அவன் நடையில் சிறு தயக்கம் வந்து மறைந்தது. 

 

"அவ்வளவு ஒன்னும் பயப்பட வேண்டாம்" என்றவள் தலையை மீண்டும் வானுக்கே திருப்பிவிட 

 

அவள் தோரணையில் எழுந்த புன்சிரிப்புடன் மௌனமாய் அவளருகில் வந்து கையிலிருந்த போர்வையை அவளுக்குச் சுற்றிவிட்டு அமர்ந்தான். 

 

அந்த குளிருக்கு திடீரென கிடைத்த கதகதப்பு தாய்மடியின் வெப்பத்தை உணர்த்தியது. 

 

அவனை திரும்பிப் பார்த்தாள். முழங்கால்களில் கைகளைக் கோர்த்தபடி அமர்ந்திருந்தவனின் கேசம் காற்றில் ஒரு பக்கமாய் புரண்டது. 

 

அவள் மீது கிடந்த போர்வையின் ஒரு ஓரத்தை எடுத்து அவன் மீது போட்டாள் 

 

அவன் மறுக்க வரவும் 

 

"ஏன்? உங்க ஊருனா உனக்கு குளிராதா?" என்றவளின் கேலி குரல் லேசாக கிடுகிடுத்தது. 

 

அதில் எழுந்த மென் முறுவலைத் தலையசைத்து தடுத்தவன் அவளையே பார்த்தான். 

 

"என்ன?" அவிரோளின் கேள்வி திரும்பாமலே வந்தது. 

 

"மறுபடியும் கேட்க மாட்டியா?" என்றவனின் குரலில் என்ன இருந்ததோ

 

அவனை திரும்பி பார்த்தவள் "சொல்லு" என்றாள். 


"எனக்கு கல்யாணம் வேண்டாம்னு பண்ணிக்கலை, நீ வேணும்னுதான் பண்ணிக்கிட்டேன்" 

 

பத்து வருடங்களுக்கு முன்பு... 

 

அந்த பள்ளி வளாகமே ஜேஜேவென இருந்தது. திரும்பிய இடமெல்லாம் வெவ்வேறு சீருடையிலும், ஒப்பனையிலும், அரிதாரம் பூசியுமென மாணவர்கள் பலவிதம் அங்கே. 

 

அன்று அந்த பள்ளி வளாகத்தில்தான் மாவட்ட அளவிலான கலை-இலக்கிய  போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. 

 

அதில் பங்குபெறச் சுற்று வட்டாரத்திலிருந்த பள்ளிகளில் இருந்து நிறைய மாணவர்கள் வந்திருந்தனர். 

 

அன்று வகுப்புகளென எதுவும் நடக்காததால் ஆங்காங்கே சுற்றிக்கொண்டிருந்தனர் அவிரோளும் கயன்னங்கையும். 

 

"ப்ச்.. வீட்டுக்கு போலாம் கயன்" என்றவளை நூறாவது முறையாக முறைத்தாள் கயனா. 

 

"இப்ப அவசர அவசரமா போய் என்ன வெட்டி முறிக்கப் போற? என் கூடவே இரு! உனக்கு.." என ஏதோ சொல்ல வந்தவளின் குரல் மீண்டும்  'ஹோ' என ஆடிட்டோரியத்திலிருந்து எழுந்த ஆரவாரத்தில் அடங்கியது. 

 

"அடுத்ததாக இசை நிகழ்ச்சி" என்ற அறிவிப்பு வர, கயன்னங்கை படபடத்தாள் 

 

"வா ரோ! வா ரோ!" என தன் கையை இழுத்தபடி முன்னேறியவளிடம் இருந்து கூட்டத்தோடு கூட்டமாக அவிரோள் தன் கையை விடுவிடுத்துகொள்ள, அதில் சற்று முன்னே சென்றுவிட்ட கயன்னங்கையின் பார்வை இவளை அவ்வளவு கூட்டத்திலும் உஷ்ணப் பார்வை பார்க்க இவளோ தனக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த கூட்ட நெரிசலைச் சுட்டிக்காட்டி 

 

"நமக்கு இந்த கூட்டம் ஆகாதுப்பா!" என்று ஒரு பெரிய கும்பிடாக தலைக்கு மேல் இரு கைகளையும் தூக்கிக் காட்டிவிட்டு வந்த வழியே பின்னால் நோக்கி ஓடிவிட்டாள். 

 

"சரியான தொல்லைடி நீ! ராட்சஸி!" என்று கத்திய கயன்னங்கை அங்கு இசை நிகழ்ச்சி தொடங்கவும் அவிரோளை திட்டுவதை அப்படியே கைவிட்டு கூட்டத்தில் நுழைந்து உள்ளே ஓடிவிட்டாள். 

 

அதே சமயம் மறுபுறம்... 

 

"டேய் மவனே! இன்னைக்கு ஹிட்டடிக்கற கிட்டார் எனக்குதான் சொல்லிட்டேன்!" எனக் காலையில் தான் கிட்டாரைத் தயார் செய்துகொண்டிருந்த சமயம் திடீரென ஓடி வந்து ஒப்பந்தம் போட்டவளின் நினைவில் அத்தனை பதட்டத்திலும் அவன் இதழோரம் சிரிப்பு மலரத்தான் செய்தது. 

 

சரியான குட்டிச்சாத்தான்! 


எழிலுக்கு பொதுவாகவே மேடை என்றாலே அலர்ஜி! மேடைக்குக் கீழே ஆன்மாவை உருவி திருடுவது போல உருகி உருகி வாசிப்பவன், மேடை ஏறினால் தையா தக்கா தான்! 

 

அபஸ்வரத்தில்கூட ஒன்றும் வராது. உறைந்துவிடுவான். 

 

அவன் திறமை தெரிந்த அவனது வகுப்பு ஆசிரியரும் அவனை விடாமல் எல்லா போட்டிகளில் கலந்து கொள்ள வைப்பதும் அவனும் விடாமல் அத்தனையிலும் இருந்தும் டிமிக்கி கொடுத்துவிட்டு ஓடுவதுமாகத்தான் இத்தனை நாட்கள் சென்றுகொண்டிருந்தது. அப்படியே தப்பித் தவறி அவனால் தப்பிக்க முடியாமல் போய்விட்டால், அன்று க்ரில் கதவு தரையில் இழுபடும் சத்தம் எப்படியெல்லாம் இருக்கக் கூடுமென அத்தனை பேரும் கேட்க வேண்டிவரும். 

 

எழிலை நன்கறிந்தவரால் அவனை அப்படியே விட்டுவிடவும் முடியவில்லை. அதே சமயம் இப்படி தொடர்ச்சியாக அவனை அவனுக்குப் பிடிக்காத சூழலிலும் போட மனமில்லை. ஒரு முடிவெடுத்தவராக எழிலை அழைத்து அமர்த்தி பேசினார். 

 

இதுதான் அவனுக்கான கடைசி வாய்ப்பு. இனி அவனை அவர் தொல்லை செய்யப் போவதில்லை. ஆனால் இது கடைசி வாய்ப்பாக இருக்க வேண்டுமெனில் அவனும் ஒன்று செய்ய வேண்டும்.. அவன் இந்த ஒரு முறை மட்டும் உண்மையாக மனதில் இருந்து வாசிக்க வேண்டும். அப்படி அவன் வாசித்துவிட்டால் அதற்கு பிறகு அவர் அவனை எந்த போட்டியிலும் கலந்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தப் போவதில்லை. 

 

எழில் சரி என்றுவிட்டான். அவனுக்கு மட்டுமென்ன மேடையேறி சொதப்ப வேண்டும் என்று ஆசையா என்ன? மேடை ஏறினால்தான் அவன் கால் கை எல்லாம் விறைத்துவிடுகிறதே! 

 

ஒரு விதத்தில் எழிலுக்குமே அவன் அப்படி இருப்பது கஷ்டமாக இருந்தாலும் அதை எப்படிச் சரிசெய்வது என்றுதான் புரியவில்லை. ஒவ்வொரு முறையும் எல்லா வழிமுறைகளையும் பின்பற்றிவிட்டான்! இருந்தும் எதுவுமே அந்த குளிர் பரவலை மட்டும் நிறுத்திய பாடில்லை. 

 

டீச்சர் சொன்னது போல இது எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும் ஒரு கடைசி வாய்ப்பு! பார்ப்போம்.. என ஒப்புக்கொள்ள அதற்கு தான் காலையிலேயே கயன்னங்கை ஆஜராகிவிட்டாள்.

 

இவன் தன்னையே சந்தேகிக்கத் தொடங்கிவிடக்கூடாதாம்! அதற்காகத்தான் இந்த திடீர் ஒப்பந்தம் எல்லாம். 

ஒப்பனை அறையில் ஆட்கள் இல்லை. ஐந்து நிமிடம் முன்னால்தான் ஒரு ட்ராமா ட்ரூப் ஒப்பனையை முடித்துக்கொண்டு கிளம்பியிருந்தது. 

 

கிட்டாரை கையில் எடுத்தவன் கண்ணாடி முன்னால் கிடந்த நாற்காலியில் அமர்ந்தான். 

 

பீஜ் நிற ஃபார்மல் பேண்ட், வெள்ளை நிற சட்டையில் வெளிற தொடங்கியிருந்த முகம் இன்னமும் வெளிறித் தெரிந்தது. 

 

ஒரு முறை கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தைப் பார்த்தான். 

 

கண்களை மூடியவன் மனதிலிருந்து மீட்டத் துவங்கினான். 

 

"பன்னீரைத் தூவும் மழை

சில்லென்ற காற்றின் அலை" 

 

அவன் விரல் வழி கசிந்த இசை அவ்வறையைத் தாலாட்டியது. 

 

"இது தானே என் ஆசைகள் அன்பே" 

 

எழில் கண்களைத் திறந்தான். கண்ணாடியில் அவன் பிம்பத்தைத் தாண்டி வாசலில் நின்ற உருவம்தான் அவன் முதலில் கண்டது. 

 

பழுப்பு நிற பின்னஃபார்ம், அதிலேயே வெளிர் நிறத்தில் சட்டை, இரண்டு பின்னல், விழிகளில் மெல்லிய நீர்ப்படலத்துடன் வாசல் மரநிலையை பிடித்தபடி ஒரு பெண்! 

 

அவள் விழிகளில் இருந்த கலக்கமும் அதற்கு நேர்மாறாக இதழில் இளகியிருந்த முறுவலும் அவனை என்னவோ செய்தது.  

 

சட்டென பார்வையைத் திருப்பினான். அவள் அங்கில்லை! 

அன்று கயன்னங்கை போட்ட ஒப்பந்தத்தில் வெற்றிபெற்றுவிட்டாள்.

— “Operation: கல்யாணம்” கதையிலிருந்து ஒரு பகுதி  

✍️ எழுத்தாளர்: Yagnya 

இந்தக் கதை முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது



முந்தைய அத்தியாயம்  |  அடுத்த அத்தியாயம்

📖 இந்த தொடரின் அத்தியாயங்கள்