🌿 Featured Story

அன்பில் அவன் அலாதி

கோடைக்கால நினைவுகளின் கதை.

📖 Read Story

🎧 Audiobooks

Listen to our stories while travelling, resting or dreaming.

Enter Our Audio Story World

Romance, thrillers, healing stories & emotional journeys, now in audio form.

🌿 Fresh Updates

New chapters, articles, announcements & story updates.

Operation: கல்யாணம் - 3

✍️ எழுதியவர் Yagnya

 Operation: கல்யாணம் - 3

 


"அறிவுகெட்டவனே! அதுக்கு ஏண்டா அதிர்ச்சியாகற!" என்று அலறியவள் வண்டி குலுங்கி நின்றதில் வயிற்றோடு சேர்த்து வைத்திருந்த தலைக்கவசம் இடித்திருக்க 

 

"இதுதான் உன் லைசென்ஸ் வாங்கின ட்ரைவிங் லட்சணமா?" என்றபடி முணுமுணுவென்று வலித்த வயிற்றைப் பிடித்துக்கொண்டாள். 

 

ஒரு நொடி அதிர்ந்து விழித்த எழில் நொடியில் தன் தவறுணர்ந்தவனாக, வண்டியை மீண்டும் கிளப்பி சற்று ஓரமாக நிறுத்திவிட்டு கயனிடம் திரும்பினான். 

 

"அச்சோ! ரொம்ப ரொம்ப சாரி கயனா! சட்டுனு சொல்லவும் என்ன செய்யனு தெரியாம அப்படி... ரொம்ப வலிக்குதா?" என்றது தான் தாமதம்! வந்ததே அவளுக்குக் கோபம்!

 

"ம்ம் இல்ல குளுகுளுனு குத்தாலத்துல குளிச்சா மாதிரி இருக்கு! பாவி! பாவி! சரியான பிக்ரேட் டா நீ! ரோ வரானுதானே சொன்னேன் உனக்கு கல்யாணம்னா சொன்னேன்? ஆஹ்..." என்றவள் இன்னமும் வலியில் எரிந்து விழ 

 

காதுகள் இரண்டையும் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடத் தயாராக நிற்பவன் போல முகத்தில் லிட்டர் கணக்கில் பரிதாபத்தை வழியவிட்டவன் 

 

"ரொம்ப வலிக்குதா கயனா.. ஹாஸ்பிட்டல் போய்டுவோமா? ஏதாவது உள்காயமா இருக்கப் போவுது" என்று கேட்க 

 

கயனா ஓரக்கண்ணால் அவனை நோட்டம்விட்டாள். முகத்தில் மெய்யான பதட்டமே! இன்னும் இரண்டு நிமிடம் விட்டால் அழுதுவிடுவான் போல! அவ்வளவு பதட்டம்! 

 

மாட்டுனான்டா என் பம்பரக்கட்ட மண்டையா!

 

"அய்யோ!" என்ற மெல்லிய அலறலுடன் இன்னும் குறுகி தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டவளை கண்டு எழிலுக்கு கை கால்கள் பதட்டம் எடுக்க, அவனை சைகையில் அருகில் வரும்படி கயனா அழைக்க 

 

முகம் முழுக்க பரவத் தொடங்கியிருந்த பதட்டத்துடன் அவன் அவள் அருகே குனிய, அதுதான் சமயம் என்பதுபோல நொடியில் அவனைக் கழுத்தோடு சேர்த்து நெருக்கியவள் தலையிலேயே நச் நச்சென்று இரண்டு குட்டு வைத்து 

 

"சொல்லுவியா? சொல்லுவியா! குட்டிச்சாத்தான்னு சொல்லுவியா!" என்று காதையும் பிடித்துத் திருக 

 

"ஆ! ஆஹ்!" என்று அலறியவனுக்கு நொடியில் புரிந்துவிட்டது கயன் வைத்த கண்ணிவெடியில் கச்சிதமாய் தான் மாட்டிக்கொண்டோம் என. 

 

இப்பொழுது அவனுக்கு வேறு வழியே இல்லை! 


"சொல்ல மாட்டேன்! சொல்ல மாட்டேன்.." என்று முழுதாக சரணடைந்துவிட, கயனும் அந்த நிராயுதபாணியை விடுவித்தாள்

 

"பிழைச்சுப்போ பிசாசே!" என 

 

காதை தேய்த்துக் கொண்டு நிமிர்ந்து தன் இருக்கையில் அமர்ந்து காடு போலக் கலைந்துவிட்ட தலையை கைகளால் கோதியவன் சத்தமே வராமல் முணுமுணுத்தபடி அவளை முறைக்கத்தான் முடிந்தது. பிறகு மீண்டும் அவளிடம் யார் வாங்குவது? 

 

குட்டிப் பிசாசு! பத்து வயதில் எப்படியிருந்ததோ அப்படியேதான் இப்பொழுதும் இருக்கிறது! 

 

"நான் கரியோக்கி வரமாட்டேன்" என்று வீம்பாய் மொழிந்தவன் வண்டியை எடுக்க 

 

"ஹ.. ஹ.." என்ற மெல்லிய நக்கல் சிரிப்பு மட்டுமே வந்தது. சந்தேகமாய் பார்வையை அவள் புறம் திருப்பியவன் 

 

"என்ன?"என்றான் புரியாமல். 

 

"ராஜா.. இந்த ஊருலயே உனக்கு ஃப்ரெண்டுனு இருக்கது நான் மட்டும்தான். இதுல என்கிட்ட இருந்து தப்பிச்சு எங்க போறதா உத்தேசம்? ஞாயிறும் வேலைக்குப் போக போறியா என்ன?" என்று புருவத்தை ஏற்றி இறக்கிக் கேட்டதில் எழிலுக்கு மெய்யாகவே சிரிப்பு வந்துவிட்டது. 

 

மெய்தான்! இந்த ஊரில் அவனுக்கென இருக்கும் ஒரே நட்பு கயனாதான். இங்கு நிறைய மக்களைத் தெரிந்தாலும், அது எல்லாமே வேலை, தெரிந்தவர் என ஒரு கோட்டுக்குள்தான். ஏன் அங்கு சென்னையிலுமே அவனுக்கு நெருங்கிய நட்பு  என்று பெரிதாக ஒன்றும் கிடையாது. நட்பு வட்டம் உண்டு ஆனால் நெருங்கிய நட்பு என்றில்லை. 

 

சிறு வயதிலேயே அடாவடியாய் கயனா அவளை அவன் வாழ்க்கைக்குள் சேர்த்துக்கொண்டதாலோ என்னவோ அவளிடம் நெருக்கமாக முடிந்தவனால் அதேயளவு வேறு எவரிடமும் நட்பு பாராட்ட முடியவில்லை. அதை அவன் முயன்றதுமில்லை. 

 

மெல்லிய முறுவலுடன் வண்டியை லாவகமாக ஓட்டுபவனையே ஒரு நொடி பார்த்த கயன் இதழிலும் தொற்றாய் சிறு முறுவல்! 

 

அவனது முறுவல் முகத்தைத் துளி திருப்தியுடன் பார்த்தவள் பார்வையை வெளியே திருப்பிக்கொண்டாள் 

 

"நீ நாளைக்கு கட்டாயம் வரனும் எலி" இம்முறை அதட்டலாக இல்லாமல் விருப்பமாக வந்தது வார்த்தைகள். 

 

அதையும் அதே விளையாட்டுத்தனமென எடுத்தவன் 

 

"எதுக்கு?" என்றான் அவன் குரலில் மெல்லிய கேலியுடன்.


"ஆனா ஊனா இதை ஒன்ன தூக்கிட்டு வந்துடறீங்க ரெண்டுபேரும்! எதுக்கெடுத்தாலும் எதுக்கு எதுக்குனு.." என்று சலித்துக்கொண்டவள் அவனது "யாரு இரண்டு பேரு?" என்ற கேள்வியை அப்படியே ஒதுக்கிவிட்டு 

 

"சொன்னேன்ல. புதுசா கரியோக்கி வந்துருக்கு, ரோவும் வரேனு சொல்லிட்டா ஸோ நீயும் வர" என்று அதுதான் திட்டம் என்றவள் பேச 

 

"உன் ஃப்ரெண்ட்தான் வராங்கல்ல அப்பறம் நான் எதுக்கு?" என்றான் எழில் 

 

மறுபடியும் எதுக்கா? என்று பல்லைக் கடித்த கயன்னங்கை 

 

"அதுக்குதான் நீயும் வரனும்! என் ஃப்ரெண்ட்னா என்ன அர்த்தம்? அப்போ நீ யாரு?" என்றாள் எகிறலாய் 

 

"நான் எழில்.." என அவளுக்கு ஆத்திரமூட்டியவன் நொடியில் சுதாரித்து 

 

"சரி.. உன் ஃப்ரெண்ட் வந்தா நான் ஏன் வரனும்?" என்றான் மீண்டும். 

 

எதுக்கு ஏன்- ஆகிடுச்சா! ஆண்டவா! முதல்ல இந்த வார்த்தைகளா பேன் பண்ணனும்! குறுக்குக் கேள்வி குட்டி தொல்லைகள்! 

 

"உன்ன என்ன துப்பாக்கிய தூக்கிட்டு பேரிக்காக்கு ஸ்பையா போய்ட்டு வான்னா சொல்றேன்? ஒரு கரியோக்கிக்கு வானுதானே கூப்பிடறேன்! அதுக்கு எவ்வளவு கேள்வீஸ்! நீதானே ரோ பேரு பிடிக்கும்ன?" என்று கயன் படபடக்க 

 

இங்கு எழில் உள்ளமோ படக் படக் படக்! 

 

"அதுக்காக.. பேர் பிடிச்சா பார்க்கனுமா என்ன?" என்றவன் தொண்டையை செருமிக்கொண்டு சமாளிக்க முயல கயன்னங்கையின் பார்வை அவனைத்தான் ஆராய்ந்துகொண்டிருந்தது. 

 

"பொண்ணுங்கள பார்த்தாலே பதறியடிச்சு ஓடற கேங்காடா நீ?" என்றவள் அவனை குறுகுறுவென பார்க்க 

 

"ச்சீ ச்சீ! காலேஜ்லலாம் என் பின்னாடி எவ்வளவு ஃபேன் ஃபாலோவர்ஸ் தெரியுமா?" என்று எழில் கெத்தாகக் காலரைத் தூக்கிவிடுவது போலப் பார்க்க 

 

இட வலமாகத் தலையசைத்து கயன் "நெனப்புதான் பொழப்ப கெடுக்குமாம்!" எனத் தனது நம்பிக்கையின்மையை காட்டிவிட்டு இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொள்ள 

 

மௌனமாய் வண்டியோட்டிக்கொண்டிருந்த எழிலின் பார்வை ஒரு நொடிக்கு மேல் கயன்னங்கையை வெறித்து நோக்கிவிட்டு சாலைக்குத் திரும்பியது. 

 

***

 

முகம் மட்டும் பார்க்கும் அளவு இருந்த குட்டி கண்ணாடியில் தெரிந்த தன்னுருவத்தையே ஒரு கணம் எக்கி நின்று பார்த்துக்கொண்டாள் அவிரோள். 


அவள் அறையில் இருக்கும் ஒரே கண்ணாடி அதுதான். அதுவும் சுவரில் ஆணியடித்து நிரந்தரமாகக் கட்டப்பட்டிருந்த கண்ணாடி. அவள் இந்த அறைக்கு குடிபெயர்ந்து வருவதற்கு முன்பிருந்தே இருக்கும் ஒன்று. அதனாலயே அவிரோள் அவ்வறையில் எதையும் பெரிதாக மாற்றாமல் வைத்திருந்தாள். 

 

என்ன எதற்காவது கிளம்ப வேண்டுமென்றால் இப்படி அவ்வப்பொழுது கட்டிலில் ஏறி நின்று குனிந்தோ அல்லது தூர நின்று எக்கியோ பார்த்துக்கொள்ள வேண்டும். அதைத்தவிர வேறு தொல்லை இல்லை. 

 

அழகாக தீட்டப்பட்டிருந்த அஞ்சனமும், ஒரு பட்டாம்பூச்சிக்குள் அடங்கி அலையாய் தோளில் வழியும் கூந்தலையும் இன்னொரு முறை திருப்தியாகப் பார்த்துக்கொண்டவள் 'ம்ம்ம்' என்று மீண்டும் அதிர்ந்த அலைப்பேசியிடம் விரைந்தாள். 

 

கயன்தான்! 

 

காலையில் இருந்து இது எத்தனையாவது மெஸேஜ்! 

 

அவள் நேற்று இரவிலிருந்தே தொடங்கிவிட்டாளே! 

 

நாளை வந்துவிடுவாய் தானே? 

 

கடைசி நேரத்தில் எந்தக் காரணமும் சொல்லி விலக முயலாதே! 

 

ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்!

 

நாளைக்கு கட்டாயம் வந்துடு ரோ

 

நீ வர. நான் காத்துட்டிருப்பேன்.

 

டாட்.

 

நாளைக்கு நீ என்ன ட்ரெஸ் போட போற? 

 

டெனிம்? ஸ்கர்ட்? ட்ரெஸ்? ஒன் பீஸ்? எது? சீக்கிரம் சொல்லு எடுத்து வைக்கனும்! 

 

எந்த கலர்? கறுப்பு இல்ல வெள்ளை போடுவோமா? 

 

என்பதை தொடர்ந்து அடுத்ததாக வந்தது அவளது புகைப்படம் 

 

நான் இதான் போட போறேன். கறுப்பு லாங்க் ஷர்ட்டும் டெனிமும். நீயும் ஃபோட்டோ அனுப்பு ரோ 

 

எனப் பல குறுஞ்செய்திகள். 

 

அத்தனைக்கும் பதிலளித்தவள் காலையில் எடுத்து அனுப்புவதாகச் சொல்லிவிட்டு உறங்கியிருக்க மீண்டும் காலையில் 

 

காலை வணக்கம்டா மாப்ளே! 

 

நீ எழுந்தாச்சா? என்னனே தெரியல நான் பயங்கர எக்சைட்டட்! நீ எழுந்ததும் சொல்லு ரோ 

 

நீ கிளம்பிட்டியா? கிளம்பறதுக்கு முன்ன சொல்லு 

 

பாதி வழி வந்ததும் சொல்லு 

 

ஒருவேளை முதல்ல ரீச்சாகிட்டா கீழ கஃபேலயே இரு வந்துடுவேன்! 

 

நான் ரீச்ட்! கஃபேல இருக்கோம் 

 

என்ற செய்தியில் திடுக்கென நின்றது அவிரோளின் இதயம் அந்த இருக்கோம்-இல் 

 

பேசாமல் வேலை வந்துவிட்டது என்று சொல்லிவிட்டு ஆட்டோவை திருப்பிக்கொள்வோமா என்று ஒரு நொடி தோன்றி உடனே மறைந்தது. 


ச்சே! இது தெரிஞ்சுதான் கயன் முதல்லயே சொன்னா போல! இப்போ கேன்ஸல் பண்ணா கொன்னுடுவா நோ நோ! கமான் ரோ! ஒரே ஒருவாட்டிதானே? இனி இப்படி ப்ளான் பண்ணாதனு கயன்கிட்ட சொல்லிடலாம்! 

 

என்று இங்கு அவிரோள் அவளை அவளே பிடித்து தள்ளிக்கொண்டிருக்க 

 

நீ இன்னும் ஃபோட்டோ அனுப்பல! 

 

என்று வந்த அடுத்த குறுஞ்செய்தியில் பட்டென்று மலர்ந்துவிட்டது ஒரு புன்னகை அவள் இதழில். 

 

ஒரு கணம் எடுத்து அனுப்புவோமா என்று தோன்ற உடனே மனதை மாற்றிக்கொண்டவள்

 

சஸ்பென்ஸ் 

 

என்றொரு குறுஞ்செய்தியை மட்டும் தட்டிவிட்டு கவனத்தைச் சாலையில் திருப்பினாள். 

 

"இங்கேயே லெஃப்ட்ல நிறுக்கோங்க, அந்த கஃபே பக்கத்துல" 

 

*** 

 

ஒரு ஹாட் சாக்லேட்டுடன் அமர்ந்திருந்தவளின் பார்வை வாசலிலேயே நிலைத்து நிற்பதைக் கண்ட எழிலுக்கு கயனின் பொறுமையின்மையில் பொறுமை பறந்தது. 

 

வந்து பதினைந்து நிமிடம் இருக்காது! அதற்குள் வந்திருந்த ஹாட் சாக்லேட்டையும் முழுதாக குடிக்காமல், வாசலைப் பார்ப்பதும் கைப்பேசி திரையை நோண்டுவதும், தலை முடியைக் கோதுவதுமாக இருக்க, ஒரு கட்டத்தில் பொறுமை பறந்தவனோ 

 

மீண்டும் தலைக்குச் சென்ற அவள் கையை பற்றி கீழே இறக்கினான் 

 

"இதுக்கு மேல கோதினா கையோட வந்துடும்" என்று 

 

அதற்கு கயன்னங்கை எதுவோ சொல்ல வர, அதற்குள் மேசையில் கிடந்தவனது கைப்பேசி அலறத் துவங்கியது. 

 

ஒற்றை விரலைக் காட்டி தடுத்தவன் "ஒரு நிமிஷம், ஆஃபிஸ் கால்" என்றுவிட்டு கைப்பேசியை எடுத்துக்கொண்டு வெளியில் சென்று மறைய கயன் மீண்டும் கைப்பேசியை ஆராய்ந்தாள். 

 

கைப்பேசியோடு வெளியில் வந்த எழில் மறுபுறம் இருந்தவரிடம் 

 

"யெஸ் மணீஷ்! நேத்தே போய் மீட் பண்ணிட்டு வந்தாச்சு. அவங்க மேனேஜர்கூட மீட்டிங் அரேன்ஜ் பண்றதா சொல்லிருக்காங்க.." என்றவன் எதிர்புறத்தில் இருந்து வந்த கேள்வியில் 


"ஆமா, கார்ட் ஆஃபிஸ்ல இருக்கும்.. இருங்க ஃபோட்டோ எடுத்த ஞாபகம், இப்போ பாத்துட்டு அனுப்பறேன்" என முடித்துவிட்டு காதில் இருந்த கைப்பேசியை எடுத்து அவர் கேட்ட விசிட்டிங் கார்ட்டை கேலரியில் தேடிப்பிடித்து அவருக்கு வாட்ஸப்பில் அனுப்பிவிட்டு திரையில் இருந்த பார்வையை நிமிர்த்தாமல் அப்படியே சடாரென ஒரு யூடர்ன் போட, அவன் பின்னால் வெகு அருகே நின்றிருந்த உருவம் அவன் திரும்பிய வேகத்தில் தள்ளாடி பின்னால் சரியவும் சரியாக இருந்தது. 

 

கண நேரத்தில் கையிலிருந்த மொபைலை தவறவிட்டவன் அதை எடுக்க சட்டென முழந்தாழிட்டபடி விழுந்துவிட, அவன் தன்னை பிடிப்பான் என்ற நம்பிக்கையில் அவன் கையை பற்ற வந்த உருவம் அது கிடைக்காமல் போன அதிர்ச்சியை முழுதாக அனுபவிப்பதற்கு முன்னரே குனிந்திருந்தவன் முதுகு மேல் கவிழ்த்திய ஆங்கில எழுத்து யு போல் சரிந்துவிட, திடீரென தன்மேல் வந்து விழுந்து அழுத்தியது என்னவென்றே புரியாமல் திணறியவன்

 

"அய்யோ ஹெல்ப்! மூட்டைக்கு கீழ மாட்டிக்கிட்டேன்!" எனக் குரலெழுப்ப முயன்றபடி பிழைக்கும் பொருட்டு அதை அப்படியே பின்னால் தள்ளிவிட்டு எழ, முன்னால் அணையாக நின்றிருந்த பைக்கில் மோதிக்கொண்டான். 

 

"ச்சே! ஆஹ்.." என ஒருவாறு எழுந்துவிட்டவன், பைக் மோதிய தலையில் தேய்த்தபடி பின்னால் திரும்பி தன் மேல் விழுந்த மூட்டையைப் பார்த்தால்.. 

 

ஒரு கணம் தலையைத் தேய்த்த எழிலின் கை அப்படியே உறைய விழிகள் அகன்றன, கீழே விழுந்து கிடந்த பெண்ணை கண்டு! 

 

அப்போ மேல விழுந்தது மூட்டை இல்லையா? 

 

எழில்! ராஸ்கல்! எனத் தன்னையே கடிந்துகொண்டவன் அவசர அவசரமாக அவளிடம் விரைந்து 

 

"அச்சச்சோ உங்களுக்கு எதுவுமில்லையே?" என கை நீட்ட 

 

கீழே விழுந்ததில் சிராய்த்திருந்த உள்ளங்கையைக் குனிந்து பார்த்துக்கொண்டிருந்தவளின் தலை மெல்ல மெல்ல நிமிர்ந்தது. 

 

கீழே அமர்ந்திருந்தவளை எழுப்ப நீட்டியிருந்தவனது கை காற்றில் அப்படியே உறைய, அலைகள், பறவைகள், மரங்கள், கோயில் மணியென எல்லாம் அப்படியே அந்தரத்தில் நின்றது, சர்வமும் ஸ்தம்பிக்க உறை நிலையில் நின்றுவிட்டான் எழில். 

இவளா!?

— “ Operation: கல்யாணம்” கதையிலிருந்து ஒரு பகுதி  

✍️ எழுத்தாளர்: Yagnya 

இந்தக் கதை முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது



முந்தைய அத்தியாயம்  |  அடுத்த அத்தியாயம்

📖 இந்த தொடரின் அத்தியாயங்கள்