🌿 Featured Story

அன்பில் அவன் அலாதி

கோடைக்கால நினைவுகளின் கதை.

📖 Read Story

🎧 Audiobooks

Listen to our stories while travelling, resting or dreaming.

Enter Our Audio Story World

Romance, thrillers, healing stories & emotional journeys, now in audio form.

🌿 Fresh Updates

New chapters, articles, announcements & story updates.

Operation: கல்யாணம் - 4

✍️ எழுதியவர் Yagnya

Operation: கல்யாணம் - 4

 


இன்று..

 

டப்பென கதவு மூடப்பட்ட சத்தத்தில் மொழியின் பார்வை கதவருகே பாய்ந்தது.

 

இளம் ஆரஞ்சும் சந்தனமும் கலந்த புடவையும், தளர்ந்த பின்னலுமாய் கையில் ஒரு பால் சொம்புடன் அவ்வறை வாசலின் உட்புறம் நின்றுகொண்டிருந்த அவிரோள் 180 பாகை திரும்பி நின்று தனக்குப் பின்னால் சாத்தப்பட்டிருந்த கதவை ஒரு முழு நிமிடம் பார்த்தாள். 

 

பிறகு அவளது பார்வை மெல்ல, மிக மெல்ல, அதாவது பேய் படப் பாணியில் மிக மிக மெல்லக் கட்டிலில் ஒரு புறமாக கையில் ஒரு புத்தகத்துடன் சாய்ந்தமர்ந்திருந்த அவனிடம் வர 

 

கையில் இருந்த புத்தகத்தை மூடவும் தோன்றாமல் பார்வையைத் திருப்பவும் முடியாமல், என்ன செய்யவென்று புரியாமல் திருதிருத்தவன் தன்னை மீறி எழுந்த அசட்டு முறுவலுடன் சம்பந்தமின்றி வலது கையை தயக்கமாக உயர்த்தி அவளுக்கொரு சல்யூட் வைத்துவிட 

 

அதை எதிர்பார்த்திராதவளுக்கு வரத்துடித்த சிரிப்பைத் துளியும் முகத்தில் காட்டாமல் இருப்பது பிரம்ம பிரயத்தனமாக இருந்தது. 

 

அதற்குள் இப்போ எதுக்கு இவளுக்கு சல்யூட் அடிச்சோம்? மானக்கேடு மன்னா! என்றெண்ணியவனுக்கு அப்படியே சன்னல் வழி தாவிக் குதித்து வெளியில் ஓடிவிடலாமா என்று தோன்றாமல் இல்லை.

 

சும்மாவே வறுத்தெடுப்பாள்! சரியான வறுக்கி.. 

 

அந்த 'வறுக்கியில்' அவன் முகத்தில் சட்டென இளகல். துளி சிரிப்பு

 

ஷ்! பால் சொம்பு பறக்க போகுது! நொடியில் சுதாரித்தவன் சிங்கத்தைத் தனது குகையிலேயே சந்திப்பவனாக உடலை முறுக்கிக்கொண்டு நிமிர்ந்தமர்ந்தான். 

 

அவிரோளின் பார்வை மூடப்பட்டிருந்த கதவையும், கையில் இருந்த சொம்பையும், பிறகு அவனையும் எனச் சுவர்க் கடிகார முள்ளைப் போல டொக் டொக் டொக் எனச் சுற்றியது.

 

கதவு சொம்பு அவன்

அவன் கதவு சொம்பு

சொம்பு அவன் கதவு

அவன்.. 

அவன் முகத்தில் வந்தும் வராமலுமாய் தவித்துக்கொண்டு நின்ற கால் முறுவல்.. 

 

காட் கயன்! எப்பேர்ப்பட்ட சூழ்நிலையில என்ன கொண்டு வந்து நிறுத்திருக்க!


மீண்டும் கதவு சொம்பு அவன் என ஒரு சுற்றுப் பார்வையை ஓட்டியவள் ஒரு முடிவெடுத்தவளாகத் தலையை சிலுப்பிக்கொண்டாள். சொம்பு மேலிருந்த  மூடியை எடுத்துவிட்டு, தலையை மேல் உயர்த்தி சொம்பில் இருந்த பாலை மடமடவென வாயில் சரிக்கத் தொடங்கினாள். 

 

மூச்சு விடாது ஒரே மிடற்றில் பாலை உள்ளிறக்கிவிட்டு "ஹ!" என மூச்சு வாங்கியவளைத்தான் 'ஆவென' பார்த்திருந்தான் மொழி. சொம்பு கழுத்தை இறுக்கியிருந்தவளது விரல்கள்..

 

இவ என்ன பாலை குடிச்சே போதையாகறா!

 

டொக்கென்ற சத்தத்துடன் சொம்பை அங்கிருந்த மேசை மீது வைத்தவள் அவன் புறம் திரும்ப, தன்னிச்சையாக எச்சில் விழுங்கிக்கொண்டான் அவன். 

 

மானங்கெட்ட மனமே அமைதியா இரு! பயந்து சாகாதே!

 

அவிரோளின் பார்வை மெத்தையிடம் செல்ல அதைக் கவனித்துவிட்டு 

 

"சாரி, பூவுல படுத்தா உறுத்தும்னு நான்தான் பூ அரேன்ஜ்மெண்ட்ஸ்லாம் வேணாம்னு சொல்லிட்டேன்" என்றவனை அவள் புரியாமல் பார்க்க 

 

அதை 'அது எப்படி உனக்கு தெரியும்' என்று மொழிபெயர்த்துக்கொண்டவனோ

 

"அது சின்ன வயசுல படத்துலலாம் ஃபர்ஸ்ட் நைட்னா பெட்ல பூ போடுவாங்கல்ல.. அதுவும் ஒரு பழைய பாட்டுல கூட மலர் மஞ்சம்னு ஒரு வரி வரும், அதான் அது எப்படி இருக்கும்னு ஒரு ஆர்வத்துல.." என்று சொல்லிக்கொண்டே போனவனின் பேச்சு 

 

"சின்ன வயசுலேயேவா?"  என அவ்வளவு நேரமில்லாது திடீரென்று வெளி வந்த அவளது குரலில் திடுக்கிட்டு நின்றது. 

 

இதோ வறுக்கி வந்தாச்சு! 

 

"ச்சே ச்சே! ரீஸன்ட்டாதான் ட்ரை பண்ணேன்" என்று ஒரு வேகத்தில் சொன்னவனுக்கு நொடி நேரத்தில் தான் வாயை விட்டுவிட்டது உரைக்க முகத்தை எங்கு திருப்புவது என்றே தெரியவில்லை! 

 

வாய விடுவதே தப்பு! அதிலும் இவகிட்ட விடறது மாபெரும் தப்பு! ஆனா அதையே ஒவ்வொரு தரமும் தவறாம செய்யற நீ தப்போ தப்பு! 

 

ஆனால் ஏனோ தெரியவில்லை இவகிட்ட மட்டும் எல்லாமே வெளில வந்துடுது! 

 

"ஓஹோ.." என்றவள் சாதாரணமாகதான் சொன்னது. ஆனால் ஏற்கெனவே பதட்டத்தில் இருந்தவன் அவசர அவசரமாக அதை சரிசெய்துவிடும் நோக்கில் 

 

"தனியாதான்!" என்று சுயவிளக்கம் கொடுத்து இல்லாத பழியைத் தீர்க்க முனைய


தன்னை மீறி எழுந்த சிரிப்பை அடக்கவியலாமல் வாய் விட்டுச் சிரித்துவிட்டாள் அவிரோள்.

 

அம்மாடியோவ்! மானசீகமாக மாபெரும் மூச்சொன்றை இழுத்துவிட்டுக்கொண்டான். 

 

"கடவுளே! கடைசியா சிரிச்சிட்ட!" என்றவன் முகத்திலும் இறுக்கம் தளர்ந்ததில் பளிச்சென்று ஒரு திருப்தி புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது. 

 

பின்னே! திருமணம் நிச்சயமானதில் இருந்து இப்பொழுது வரை அவனைப் பார்க்கும் இடத்திலெல்லாம் பார்வையாலே பஞ்சர் பண்ணிவிடுவது போல் உருத்து விழிப்பதும் பிறகு யாரேனும் எதேச்சையாக அவள் புறம் திரும்பினால் பார்வையைச் சட்டெனத் தழைத்துக்கொள்வதுமாக அல்லவா அந்நியனிஸம் செய்துகொண்டிருந்தாள்! 

 

மொழியின் அதிபயங்கர சிந்தனைத் திறன் வேறு அவனுக்குக் கும்பி கம்பாவா இல்லை கம்பா கும்பியா எனக் கண்ட கண்ட கற்பனைகளை முடுக்கி பீதியைக் கிளப்பிக்கொண்டிருக்க, ஒரு வழியாக அவள் முகத்தில் முறுவலைக் கண்டதும் மொழியினுள் மொழியில் சொல்லிவிட முடியாதொரு நிம்மதி. அதையும் தாண்டி மனதோரங்களில் முடங்கிக் கிடந்த முணுமுணு சந்தேகங்கள் கூட சாந்தப்பட்டுவிட்டது. 

 

அவன்தான் வழமை போல அதீதமாகக் கற்பனை செய்துவிட்டான் போல.. ஹ்ம் 

 

இங்கு மொழி திருப்தியடைய அவிரோளிடமோ மொத்தமாக ஒரு  மௌனம்.

 

ஆமாமில்ல! அவள் கடைசியாக எப்பொழுது சிரித்தாள்? 

 

தாலி கட்டுவதற்கு முன்பு? ம்ஹூம்..

 

திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு? ம்ஹூம்.. 

 

திருமணம் என நிச்சயிக்கப்பட்ட ஒரு மாதத்திற்கு முன்பு? அப்பொழுதும் ம்ஹூம்தான்!

 

மூன்று மாதங்களுக்கு முன்பு? 

 

அதற்குமேல் அவளிடம் பதிலும் இல்லை. எந்தவித எண்ண நீட்சியுமில்லை. 

 

முகம் கணத்தில் கல்லாக இறுகிவிட அவிரோள் அப்படியே தரையை வெறித்தபடி நிற்பதைக் கவனித்தவன் வெகு தயக்கத்துடன் எழுந்து 

 

"அவி-" என அவளை நோக்கி ஓரெட்டு எடுத்து வைக்க 

 

அவன் குரலில் நிதர்சனம் உணர்ந்து சடாரென்று திரும்பியவள், அவன் பார்வையைத் தவிர்த்துவிட்டு விடுவிடுவென மெத்தையைச் சுற்றிக்கொண்டு மறுபுறமாக வந்து, அந்த பக்கச் சுவரை பார்த்தபடி ஒருக்களித்துப் படுத்துவிட 

 

புயல் வேகத்தில் வந்து படுக்கை ஓரத்தில் ஒதுங்கிக் கொண்டவளை ஒரு நொடி அதிர்ந்து பார்த்தவனின் விழியோரங்களில் மெல்லிய புரிதல். 


அவ்வளவு நேரம் அவன் சாய்ந்தமர வைத்திருந்த தலையணையை எடுத்து மெத்தைக்குச் சற்றே தள்ளி கீழே போட்டுக்கொள்ளும் 'தப்' என்ற சத்தம் கேட்டது. 

 

இறுக விழிகளை மூடியிருந்தவள் மெல்லத் திறந்தாள். விளக்கு இன்னும் எரிந்துகொண்டுதான் இருந்தது. எந்தவித மனிதச்சூடும் இல்லாத காற்று அவன் அவள் அருகில் இல்லை என்பதை உறுதி செய்தது. 

 

மெல்ல தலையைத் திருப்பி பார்த்தாள். மெத்தைக்கும் வாசலுக்கும் நடுவில் தலையணையைப் போட்டுவிட்டு, வெறும் தரையில் கால்களை நீட்டி அமர்ந்திருந்தவன் வேட்டியுடன் போராடிக்கொண்டிருந்தான். 

 

"ச்சே! எப்படி திரும்பிப் படுத்தாலும் ஆபாசமா தெரியுது!" என்றவனின் மெல்லிய முணுமுணுப்பு இவளுக்குத் தெளிவாய் கேட்டது. 

 

"டேய் மொழி! வெறும் மொழியா படுத்து காலையில கவர்ச்சி கண்ணன் மொழியா எழுந்திரிச்சிடாதடா! அப்பறம்.." என்றவனின் பார்வை தன் பக்கமாகத் திரும்புவதை கண்டவள் தலையை மறுபக்கம் திருப்பிவிட

 

"முதலிரவில் புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம்னு தலைப்பு செய்தியாகிறப்போற" என்று மெல்லியக் குரலில் முணுமுணுத்தவன்  மேற்கூரையைப் பார்த்து பெரிய கும்பிடாக ஒன்று போட்டுக்கொள்ள, அதற்கு மேல் தாங்காது என்று தோன்றிவிட படக்கென எழுந்து அமர்ந்தாள் அவிரோள். 

 

அவள் எழுந்த வேகத்தில் ஓரடி தலையை பின்னால் நகர்த்தியவனிடம் 

 

இவ இன்னும் தூங்கலையா? என்ற அதிர்ச்சி அப்படியே தெரிய, கீழுதட்டை இறுகக் கடித்துக்கொண்ட அவிரோள் அதே நேர் முகத்துடன் 

 

"ஏன் கீழ படுத்திருக்க?" என்றாள் 

 

"இல்லை.. உனக்கு ஃப்ரியா இருக்கட்டுமேனு" என்றவன் தயங்க

 

"நான் கேட்டேனா?" என நேரடியாக வந்து விழுந்தது அவளது அடுத்த கேள்வி

 

மொழி மெய்யாகவே அதிர்ந்து விழித்தான். 

 

அவள் சொல்லவில்லைதான். ஆனால் அதுதானே சரி? அதுவும்.. 

 

"இங்க வந்து படு" என்றவள் அவ்வளவுதான் என்பது போலத் திரும்பி ஒருபக்கமாக நகர, மொழி இன்னும் அசையாமல் இருப்பது கீழ்க்கண் பார்வையில் விழுந்தது

 

"என்ன?" என்றாள் புருவம் சுருக்கி 

 

"இல்லை. இருக்கட்டும்.. நீ வசதியா படு, எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல" என்று சொல்லிக்கொண்டு போனவனின் பேச்சு அவிரோளின் பார்வை அவனையே சுட்டிக்காட்டியதில் தடைப்பட்டது. 


வெறும் தரையில் கிடந்த தலையணையையும், தன் கால் அருகில் கிடந்த போர்வையையும் அவள் பார்வை தொட்டு மீள 

 

"ஒரு போர்வைதான் இருக்கு. இங்க மிட்நைட் மேல ரொம்ப குளிரும். எனக்கு வகேஷனுக்கு வந்து பழகிருச்சு.." என்று அவள் கேட்காமலேயே வந்த காரணத்தைப் புருவம் நெரியப் பார்த்தவள் 

 

"ஒழுங்கா பெட்ல வந்து படு. நடுவில இவ்வளவு இடமிருக்கு. ஏறி உருண்டுற மாட்டேன். இந்த குளிருல தரையில படுத்து கை கால் இழுத்து ஜன்னி வந்தாதான் தலைப்பு செய்தில வருவ" என்றவள் கடைசி வரியை மட்டும் சத்தமாக முணுமுணுத்துவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டாள். 

 

ஏறி உருளுகிறதா.. அப்போ இவ கேட்டாளா? அவ்வ்.. 

 

என்னவோ அவன் நிச்சயம் வந்து படுத்துக்கொள்வான் என்பதுபோல திடமாய் திரும்பிப் படுத்துக்கொண்டவளையே மௌனமாய் ஒரு நிமிடம் மேவியது அவன் பார்வை. 

 

மெல்ல புத்தகத்தை மேசை மீது வைத்துவிட்டு வந்தவன், தன் தலையணையை மெத்தையில் ஒரு ஓரமாகப் போட்டுக்கொண்டு படுத்தான். 

 

நீண்ட நெடிய நொடிகள் நிமிடங்களாகின... 

 

"அவி.." மொழியின் குரல் தயக்கமாக வந்தது

 

ஒரு நொடி தாமதத்திற்குப் பிறகு

 

"ம்ம்.." என அந்தப்பக்கம் இருத்து சத்தம் வர 

 

"உனக்கு லைட் வேணுமா?" என்றான் மெல்ல 

 

திரும்பி, வெகு அருகில் தெரிந்தவனது முகம் பார்த்தவள்

 

"ஏன்?" என்ற கேள்வியை அவன் எதிர்பார்த்திருக்க 

 

"உன்னிஷ்டம்" என்றுவிட்டு அவள் திரும்பிவிட்டாள்

 

இருந்தும்,"இங்க ஆச்சி விடி பல்ப் போடறதில்ல. எனக்கும் அதுவே பழகி.. ட்யூப்லைட் தூக்கம் வரமாட்டேங்குது" என்றவன் மீண்டும் காரணத்தோடு கேட்க 

 

"உன்னிஷ்டம்னு சொல்லிட்டேன்" என்றவளிடம் இருந்து வேறு பதில் இல்லை. 

 

அதற்கு மேல் அருகில் இருந்த விசையை தட்டி குழல் விளக்கை அணைத்தவன், போர்வையை அவள் பக்கமாகப் பட்டும் படாமலுமாக நகர்த்தி வைத்துவிட்டுப் படுத்துக்கொண்டான். 


இருள் நிறைந்த அறையில், காற்று போகவென இருந்த குட்டி சன்னல் வழி மேற்கூரையில் படர்ந்த சன்னமான நிலவொளியின் கம்பிகளும், மெல்லிய சத்தத்துடன் சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியும், எங்கோ கேட்கும் சுவர்க்கோழி சத்தமுமென நேரம் செல்ல செல்ல அவன் மூச்சு சீராக, அருகில் இருந்து வந்த மெல்லிய மூச்சுவிடும் சத்தத்தில் மொழியின் பார்வை அவிரோளிடம் சென்றது. 

 

மெல்ல ஏறி இறங்கிய முதுகு அவள் உறங்கிவிட்டதைச் சொல்ல, ஒரு கணம் தயங்கியவன் பிறகு எழுந்து அவள் கால்மாட்டில் கிடந்த போர்வையை விரித்து அவளுக்குப் போர்த்திவிட்டுத் திரும்பிப் படுத்தான். 

 

அத்தனையையும் தாண்டி அவன் முகத்தில் ஒரு நிம்மதி படர்ந்தது. 

— “ Operation: கல்யாணம்” கதையிலிருந்து ஒரு பகுதி  

✍️ எழுத்தாளர்: Yagnya 

இந்தக் கதை முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது



முந்தைய அத்தியாயம்  |  அடுத்த அத்தியாயம்

📖 இந்த தொடரின் அத்தியாயங்கள்