🌿 Featured Story

அன்பில் அவன் அலாதி

கோடைக்கால நினைவுகளின் கதை.

📖 Read Story

🎧 Audiobooks

Listen to our stories while travelling, resting or dreaming.

Enter Our Audio Story World

Romance, thrillers, healing stories & emotional journeys, now in audio form.

🌿 Fresh Updates

New chapters, articles, announcements & story updates.

Operation: கல்யாணம் - 5

✍️ எழுதியவர் Yagnya

 Operation: கல்யாணம் - 5

 


ஆறு மாதங்களுக்கு முன்பு...

 

"அச்சச்சோ உங்களுக்கு எதுவுமில்லையே?" என தன் முன் நீண்ட கரத்தை ஒரு நொடி வெறித்து நோக்கியவளின் கடவாய் பற்கள் நறநறத்து இறுக, மெல்ல நிமிர்ந்தது அவிரோளின் தலை. 

 

இவன்... இவனா! பொறுக்கி ராஸ்கல்! 

 

அவள் வெளிப்படையாக சொல்லியிராவிட்டாலும் தன்னை அப்படிதான் திட்டிக்கொண்டிருப்பாள் என்பதை உணர்ந்தவனின் முகம் செய்வதறியாத தவிப்புக்கும், சூழ்நிலை மோசமாகுவதை நினைத்து பதட்டத்திற்குமாய் அல்லாடிய இதயம்.. ஒரு நிமிஷம்.. அந்த கண்கள்! 

 

அடச்சே! மானங்கெட்டவனே! 

 

நொடியில் தலையை உலுக்கி தன்னை சமநிலைக்குக் கொண்டுவந்தவன் கையிலிருந்த அலைப்பேசியை பேண்ட் பைக்குள் திணித்துவிட்டு வலுக்கட்டாயமாக அவளைத் தூக்கி நிறுத்திவிடுபவன் போல இன்னும் ஓரடி பக்கம் வந்து நின்றான். நின்றான்.. மனதில் நினைத்தது போல பட்டெனப் பிடித்து தூக்கிவிட்டு விடுவது ஒன்றும் அத்தனை சுலபமான காரியமில்லை என்பதை அவனைப் பஸ்பமாக்கிவிடுவது போல உருத்து விழித்தவளது பார்வை புரியவைக்க மீண்டும் எழிலிடம் தயக்கம். 

 

"நீங்க ஓகேவா? அடி ஏதாச்சும் பட்டுச்சா? எழு.. எழுந்திருக்க முடியலையா.." என்றவனின் வரிசை கேள்வி முடிவதற்குள் அவனைப் பார்வையாலே வகுந்து வீசியிருந்தவள் அவன் விசாரிப்புகள் எதையும் கண்டுகொள்ளாதது போல ஒரு பக்க தோளை அலட்சியமாகக் குலுக்கிவிட்டு எழுந்தாள். 

 

அப்பப்பா! என்ன வலி! 

 

இசகு பிசகாக விழுந்ததில் தோளில் பிடித்திருக்கும்போல! அவள் அலட்சியமாகக் குலுக்கியதில் அது அவளை அலட்சியம் செய்ய தயாராக இருந்தது. 

 

விண்ணென்று வலித்ததை முயன்று முகத்தில் காட்டாது கெத்தை நிலை நாட்ட முயன்றபடி உர்ரென முகத்தை வைத்துக்கொண்டு, தட்டுத் தடுமாறி, தள்ளாடிய உடலை முயன்று பிடித்து ஒருவாறு எழுந்து நின்றுவிட்டாள். 

 

அவ்வளவு நேரம் கீழே அமர்ந்திருந்தவளுக்கு கை கொடுத்து எழுப்பவென்று அருகில் வந்து நின்றவன், அவள் எழுந்து நின்றதும் இருவரிடையிலும் திடீரென குறைந்த இடைவெளியில், சட்டென புழுதியைக் கிளப்பிக்கொண்டு வந்த காற்றுகூட சில்லென்று அவன் நெஞ்சுக்கூட்டில் அறைந்து நிரம்ப, மின்சாரக் கம்பியைக் கண்டுவிட்டவன் போலச் சட்டென ஓரடி பின்னால் எடுத்து வைத்தான். 


நல்ல வேளை! அவள் கவனிக்கவில்லை. இன்னமும் விழுந்து வாரியதில் கசங்கி, புழுதி படர்ந்த உடையை இரு உள்ளங்கைகளால் தட்டி சீர் செய்துகொண்டிருந்தாள். 

 

முகிலற்ற வான் நிற வைட்-லெக் டெனிம், நிலவற்ற இரவை உருவி செய்ததுபோல முக்கால் கை வைத்த ஒரு ஷார்ட் குர்த்தா, காற்றிலும் களேபரத்திலுமாக கலைந்து நின்ற கார்குழல், ஒரு கையிலிருந்த ஒற்றை மர வளையல், அழகாகத் தீட்டப்பட்டிருந்த அஞ்சனம், மீண்டும் அந்த கண்கள்... 

 

'சட் சட்' என்ற சொடக்கிடும் ஒலி தன் செவியை வந்தடைய எங்கேயோ நிலைத்துவிட்டிருந்த பஞ்சடைத்த பார்வை மெல்ல மெல்லத் தெளிவுற, இரண்டடி தள்ளி நின்று தன்னை சீர் செய்துகொண்டிருந்தவள் இப்பொழுது அவனை அனல் பார்வை பார்த்துக்கொண்டிருந்தாள். 

 

அவள் எதையோ பார்வையில் சுட்டிக்காட்ட, அவன்தான் இவ்வளவு நேரமும் இந்த உலகிலேயே இல்லையே!

 

ஆஹ்!? என்றுதான் பார்த்து வைத்தான். 

 

முதல் முறை 'வழி' என அசட்டையாக பார்வையால் சுட்டிக்காட்டியவள் அவன் கொஞ்சமும் நகராமல் விழிப்பதைக் கண்டுவிட்டு துறுதுறுத்த வாயை இறுக மூடியபடி இம்முறை தலையை 'வழி விடு' என ஆட்டினாள். 

 

அந்த பிரகஸ்பதி அதற்கும் பே எனப் பார்த்தானே தவிர நகர்வதாய் இல்லை! 

 

இவன! சரியான தொல்லை! 

 

வெளியிடத்தில் அதுவும் இங்குப் பிரச்சனை எதுவும் வேண்டாம் என்று மூளை அறிவுறுத்த, பெருமூச்சொன்றை இழுத்துவிட்டு தன்னை சமன் செய்ய முயன்றவள் வலது கையை மட்டும் அசைத்து 'நகர்ந்து நில்' என்று சைகையால் சொல்ல 

 

அதேதான்.. ஆனால் ஒரே ஒரு முன்னேற்றம் அவ்வளவு நேரமும் விழிகளை விரியத் திறந்து வைத்துக்கொண்டு விண்வெளியைச் சுற்றுபவன் போல ஆவென பார்த்திருந்தவன் "ஆஹ்!?" என்று விழித்தான். தூக்கத்தில் இருந்து எழுந்தவனைப் போல. 

 

பொறுமை பண்பென அத்தனையும் பறக்கத் துடிக்க, நா நுனிக்கு வந்துவிட்ட வார்த்தைகளைக் கட்டுக்குள் வைப்பதா வேண்டாமாவென பட்டிமன்றம் நடத்த 

 

"வழிய விட்றா வெண்டைக்கா!" என்று உஷ்ண மூச்சுடன் வலது கையை வெடுக்கெனத் திருப்பி காட்டி சொன்னவள் நகரத் தொடங்கிவிட, எழிலோ அத்தனை குழப்பத்திலும் 

'என்ன வெண்டைக்காவா?' என்றுதான் பார்த்திருந்தான். அதில் தன்னை மீறி எழத் துடித்த சிரிப்பை அப்படியே சிவப்புக்கொடி காட்டி நிறுத்தியவன் மொத்தமாகத் தெளிந்துவிட்டான்.

 

இப்போதும் இவன் நகரலைன்னா வெண்டைக்கா பச்சடிதான்டி!  

 

சட்டென விலகி நின்றுகொண்டவன் 

 

"உங்களுக்கு அடிபட்டுச்சானு சொல்லவே இல்லையே?" என்று தன்னை கடந்தவளை அவசர அவசரமாகக் கேட்க

 

ஒரு கணம் அடுத்த அடி எடுத்து வைக்காமல் அப்படியே நின்றவள் திரும்பினாள். 

 

"ஏன் அடி படலைன்னா மறுபடியும் தள்ளிவிட போறியா?" என்று வெடுக்கெனக் கேட்டுவிட்டுத் திரும்ப எத்தனிக்க இம்முறை எழிலுக்கே அது அதிகப்படியாகப் பட்டது.

 

என்ன இவ? ஒரு அக்கறையில கேட்டா இப்படி பேசறா..

 

எழில் "நீங்க எதையோ மனசுல வச்சிட்டு தப்பா புரிஞ்சிட்டு பேசறீங்க" என்றுவிட

 

அவ்வளவுதான்! 

 

என்ன! அவள் எதையோ மனதில் வைத்து.. அதுவும் தவறாகப் புரிந்துகொண்டு பேசுகிறாளாமா? என்ன திண்ணக்கம் இருக்கனும் இவனுக்கு! 

 

முழுதாக அவன் புறம் திரும்பி கைகள் இரண்டையும் முன்னால் கட்டிக்கொண்டு தலையைச் சற்றே வலது பக்கமாகச் சரித்து அவனை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தவள்

 

"இல்லையே! நான் சரியாதான் பாக்கறேன்.. குடிகாரன" என்றவள் கடைசி வார்த்தை மட்டும் முணுமுணுத்தபடி தலையைத் திருப்ப 

 

அதை தெள்ளத் தெளிவாகக் கேட்டுவிட்ட எழிலினுள் எரிமலைதான்! கேட்க வேண்டும் என்றுதானே அவள் சொல்லியதே! 

 

அவளுக்கு அந்த புறமாகச் சென்று அவள் முகம் பார்த்தவன்,"ஹலோ! யார பார்த்து என்ன வார்த்தை சொல்றீங்க?" என்று எகிற நிமிர்ந்து அவன் முகம் நோக்கியவளோ 

 

"உன்ன பார்த்துதான் குடிகாரன்னு சொன்னேன்" என்றவள் மீண்டும் அசட்டையாகத் தோளைக் குலுக்கினாள். அச்சோ தோள்பட்டை! இதை வேற மறந்துட்டே இருக்காளே! 

 

அதில் இன்னும் கடுப்பானவன் 

 

"உங்க இஷ்டத்துக்கு தப்பா பேசாதீங்க!" என்று தொடங்க அதற்குள் வெடுக்கென அவன் புறம் திரும்பியவள் 

 

"தப்பானவன தப்பானவன்னு சொல்றதே தப்பா இப்போலாம்?" என்று ஆச்சரியம் காட்டி கேட்க 

 

அசராமல் பேசியவளையே அசந்து போய் பார்த்திருந்தான் அவன். 

 

என்ன பொண்ணுடா இவ! 


எழில் ஒரு நொடி அப்படியே உறைந்து நிற்க, மீண்டும் குலுங்கச் சென்ற தோளைக் கட்டுப்படுத்தியபடி அவனைக் கடந்து செல்ல ஓரெட்டு எடுத்து வைத்தாள் அவிரோள். 

 

அதற்குள் அவள் தன்னை எந்தளவு மோசமாக நினைத்து வைத்திருக்கிறாள் என்பது உரைக்க, அதைச் சரி செய்துவிடும் நோக்கில் எழில் திரும்ப 

 

"ஹே! நீங்களே மீட் பண்ணிக்கிட்டீங்களா! போங்கய்யா! நான் எவ்வளவு ஆர்வமா இன்ட்ரோ கொடுக்க வெய்ட் பண்ணேன்!" என்று சந்தோஷமும் சலிப்புமாக கஃபே வாசலின் மேல் படியில் நின்றிருந்த கயன்னங்கை இவர்களை நோக்கிக் கீச்சிட, அதில் முன்னால் தூக்கி வைக்கச் சென்ற அவிரோளின் கால் அப்படியே அந்தரத்தில் நின்றது. 

 

"எலி! சீக்கிரம் ரோவ கூட்டிட்டு வா, நான் முதல்ல போய் பில் பே பண்ணிட்டு வந்துடறேன்!" என்றவள் வந்த வேகத்திலேயே திரும்பி  விறுவிறுவென உட்பக்கமாக ஓடிவிட்டாள். 

 

அதில் அவிரோளின் பார்வை ஸ்லோ மோஷனுக்கும் ஸ்லோ மோஷன் வைத்தது போல க்ரீச்ச் என மெல்ல பின்னால் நின்றிருந்தவனிடம் திரும்ப 

 

ம்ஹூம்! அவன் தலையை நிமிர்த்தினால் தானே! வசதியாய் தலையைக் குனிந்து கால் விரல்களை எண்ணிக்கொண்டிருந்த அழகிலேயே அவிரோளுக்கு அத்தனையும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது! 

 

ராஸ்கல்! ப்ளான் பண்ணி வர வச்சிருக்கான்.. 

 

என்றவள் அந்த "ராஸ்கலை" மட்டும் சத்தமான முணுமுணுப்பாக்கிவிட வெடுக்கென நிமிர்ந்த எழிலின் விழிகளில் எதிர் போராட்டம் 

 

அவன் "ஹலோ-" என்று எதையோ சொல்ல வருவதற்குள் மீண்டும் 

 

"ப்ச்! இன்னும் இரண்டு பேரும் இங்கேயேதான் நிக்கறீங்களா! சீக்கிரம் வாங்க நான் புக் பண்ண ஸ்பாட் போயிர போகுது!" என்று அலறியபடி இறங்கி ஓடி வந்தவள் ஒரு கையில் எழிலையும் இன்னொரு கையில் அவிரோளையும் பிடித்து இழுத்துக்கொண்டு லிஃப்டிற்குள் புகுந்தாள். 

 

கயன்னங்கை இருவருக்கும் நடுவில் சற்று முன்னால் தள்ளி நிற்க, அவளுக்கு இந்தப் புறம் நின்ற எழிலை அந்த புறம் நின்ற அவிரோள், சற்றே தலையை பின்னால் நகர்த்தி அனல் பார்வை பார்க்க 


அந்த பக்கத்துக்கே பெரிய கும்பிடு போட்டது போல, தனக்கு முன்னால் இருந்த லிஃப்ட் பித்தான்களையும், கண்ணாடியையும் ஆராய்ந்தவனுக்கு, அந்த கண்ணாடியில் விழுந்த அவளது பிம்பம் பகீரென்றானது. 

 

அவிரோள் என்ன பார்வையிலேயே அவிச்சு ரோஸ்ட் பண்ணுது! கடவுளே உன் பிள்ளைய காப்பாத்திடு! 

 

தான் அவள் பார்வையைப் பார்த்துவிட்டதை அவளும் பார்த்துவிட்டாள் என்பது, அவள் பார்வையில் ஏறிய காரமே சொல்லிட, மெல்ல அவள் புறம் தலையை திருப்பியவன், அசடு வழிய ஒரு அரை புன்னகையைச் சமாதான தொடியாகப் பறக்க விட முயன்று அது அவள் பார்வையிலேயே கண்டமாவதைக் கண்டு தன் முடிவை மாற்றியவனாக மீண்டும் தலையைத் திருப்பிக்கொண்டான். 

 

ரொம்பா சூடா இருக்கா, இப்ப புறாவ அனுப்பினா பொசுக்கிடுவா! எழிலு அப்னா டைம ஆயேகா டா! அவ்வ்.. 

 

அதற்குள்(?) கரியோக்கி தளம் வந்துவிட மின்தூக்கியின் கதவுகள் வெண்ணெய்யாகத் திறந்துகொடுத்தது. 

 

கயன்னங்கை லூசில் விட்ட கையை மீண்டும் இறுக்கி பிடித்துக்கொண்டு இவர்களை இழுத்துச் சென்றாள். 

 

"நம்பவே மாட்டீங்க.." என்றவள் பேசிய ஒரு வார்த்தை கூட அவர்கள் இருவர் மனதிலும் பதிந்திருக்கவில்லை என்பது அவர்களை அந்நொடியில் பார்க்கும் எவருக்குமே புரிந்து போகும். 

 

கொண்ட்டரில் நின்றவர்கள் அவரவர் அவரவர் உலகில் இருக்க 

 

"என்ன நீங்க?" என்ற கயன்னங்கையின் உரத்த குரலில் மற்ற இருவரின் கவனமும் அங்கு வந்துவிட்டது. 

 

"என்னாச்சு கயனா?" என்று பயங்கர அக்கறையாகக் கேட்பவனை ஒரு முறை முறைத்த அவிரோளின் பார்வையும் கயன்னங்கையிடம் தான். 

 

"ப்ச்.. நான் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு பாக்ஸ் புக் பண்ணியிருந்தேன். இவர் என்னன்னா ஒரு மணி நேரத்துக்குதான் காட்டுதுனு சொல்றாரு" என்று சிந்தனையாகச் சொன்னவள் பிறகு அவிரோளின் கையில் ஒரு அட்டையைத் திணித்து 

 

"டெக்னிக்கல் எரரா இருக்கும்னு நினைக்கறேன். நான் பார்த்துட்டு வரேன். அதுவரை டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம். நீங்க இரண்டு பேரும் போய் பாட்டு எடுத்து வைங்க" என்று அவர்களை அனுப்ப முயல 

 

"நீயில்லாம எப்படி.." என்று தொடங்கியவனின் பேச்சு அவிரோளின் உஷ்ண பார்வையில் தேய 

 

அவிரோளோ,"நீயும் வா. சேர்ந்தே போகலாம்" என்றாள் 

 

"குழந்தைகளாடா நீங்க!" என்று மெல்லச் சலித்துக்கொண்டாலும் கொண்ட்டரில் இருந்த பணியாளிடம் திரும்பி 

 

"நீங்க என்னனு செக் பண்ணிட்டு சொல்லுங்க, நாங்க உள்ள போறோம்" என்றுவிட்டு மூவரும் அவர்கள் பதிவு செய்திருந்த பாக்ஸிற்கு வந்தனர். 

 

முதலில் இருவரும் உர்ரென்று முட்டிக்கொண்டாலும் கயன்னங்கை இருக்கையில் அங்கு கசப்புக்கு இடமேது?  அடுத்த பத்து நிமிடங்களில் பாட்டும் கூத்துமாகச் சூழலில் லயிக்கத் தொடங்கியிருந்த சமயம் டொக் டொக் என்றொரு சத்தத்துடன் கதவு திறக்கப்பட வாசலில் நின்றிருந்த பையன் ஒருவன் 

 

"உங்கள கௌண்ட்டர்ல கூப்பிடறாங்க" என்றுவிட்டுச் செல்ல, கயன்னங்கை 

 

"கண்டின்யூ பண்ணுங்க, வந்துட்டேன்" என்று வெளியேறினாள். 

 

அமைதி. அப்படியொரு மயான அமைதி. 

 

டிஸ்கோ விளக்குகளின் வெளிச்சம் அங்குமிங்கும் ஆடிக்கொண்டிருக்க, எதிர் எதிரே சோஃபாவில் அமர்ந்திருந்த இருவரிடமும் அப்படியொரு அமைதி. 

 

அவிரோள் அவனையே வெறித்து நோக்க, திரை, தரை, விளக்கென பார்வையைத் தவிர்க்க முயன்றவன் அதற்கு மேல் முடியாதென்று உணர்ந்து வாய்ப்பூட்டு களைந்தான்.

 

"இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை?" என்ற எழிலின் வீராப்பு 

 

"நீதான் பிரச்சனை" இல் தடுமாறியது. 

 

எப்படி அப்படியே சொல்றா! 

 

"நான் என்னங்க பண்ணேன் உங்கள?" என்றவன் திடத்தைத் திரட்டி மீண்டும் போரிட முயல 

 

"ஓஹோ.. அப்போ நீ எதுவுமே பண்ணல?" என்று வந்த பதில் தாக்குதலில் அப்படியே பின்வாங்கினான். 

 

இது ஜெயிக்க முடியாத மேட்ச்! 

— “ Operation: கல்யாணம்” கதையிலிருந்து ஒரு பகுதி  

✍️ எழுத்தாளர்: Yagnya 

இந்தக் கதை முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது



முந்தைய அத்தியாயம்  |  அடுத்த அத்தியாயம்

📖 இந்த தொடரின் அத்தியாயங்கள்