🌿 Featured Story

அன்பில் அவன் அலாதி

கோடைக்கால நினைவுகளின் கதை.

📖 Read Story

🎧 Audiobooks

Listen to our stories while travelling, resting or dreaming.

Enter Our Audio Story World

Romance, thrillers, healing stories & emotional journeys, now in audio form.

🌿 Fresh Updates

New chapters, articles, announcements & story updates.

Operation: கல்யாணம் - 6

✍️ எழுதியவர் Yagnya

Operation: கல்யாணம் - 6 

 


இரண்டு வருடங்களுக்கு முன்பு... 

 

வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட ஒரு காலை வேளை அது. 

 

அது கார்காலத்தை நெருங்குவதால் ஏற்படும் வானிலை சலனப்பருவம். அவ்வப்பொழுது மழை வருவேன், வரமாட்டேன், வந்தாலும் வருவேன் என லேசாக தூறலிட்டுக்கொண்டிருந்த சமயம். 

 

அன்றும் முன்தின இரவு முழுவதும் முணுமுணுவென்று பெய்த மெல்லிய மழையினால் சாலைகள் எல்லாம் மொழுகி  விட்டதுபோல இன்னும் ஈரப்பதம் குறையாமல் இருந்தது.  

 

ஒரே ஒரு பலத்த காற்றுக்கு மொத்தமாய் கொட்டிவிடக் காத்திருந்த மரக்கிளைகளிலும், இலைகளிலும் படுத்துறங்கிய நீர் திவலைகள், ஆங்காங்கே சாலையில் தொப்பலாய் நனைந்து சிதறிக்கிடந்த மஞ்சள் கொன்றைகளும் பெயர் தெரியாத ஆரஞ்சு வண்ண பூக்களுமென பழைய ராதா மோகன் படத்தினுள் வந்துவிட்ட உணர்வைக் கொடுத்துக்கொண்டிருந்த தெருவொன்றில் தனது வழமையான காலை நடையை முடித்துவிட்டு அன்றைய தினத்திற்கான பால் பாக்கெட்டை கையோடு வாங்கிக்கொண்டு, செவிக்குள் இசைத்த 'புத்தம் புது பூமி வேண்டும்' உடன் நடந்துகொண்டிருந்தாள் அவிரோள். 

 

கூட ஒரு ஐந்நூறு கட்டி சந்தா எடுத்தால் தினமும் காலையில் வீட்டிற்கே வந்துவடும், ஆனால் அதெல்லாம் செய்யக்கூடாது! அவள்தான் வெட்டியாக இருக்கிறாளே! தண்டமாய்.. அவளே அதிகாலை குளிரில் காலாற நடந்து சென்று வாங்கி வர வேண்டுமென்பது புதிதாக வீட்டில் எழுதப்பட்ட விதி! 

 

ப்ச்! ஒரு மாதம் வேலையில்லாமல் இருப்பதற்கே இந்த பாடு! 

 

ஷ்ஷ்! அவி! பாட்ட கவனி பாட்ட கவனி! இதை அப்பறமா டீல் பண்ணிக்கலாம்! 

 

என மனதை முயன்று அந்த காலை நேர அழகியலுக்குத் திருப்ப முயன்றாள். இருந்தும் மனம் 

 

எனக்கு மட்டும் சீக்கிரம் வேலை கிடைக்கட்டும்! சித்தப்பா உனக்கு வைக்கறேன் பெரிய ஆப்பா! என்று முனகலாய் முணுமுணுத்துக்கொண்டது. 

 

'சொந்த ஆகாயம் வேண்டும்

ஜோடி நிலவொன்று வேண்டும்' 

 

ஹ்ம்.. ரகுமான்னா ரகுமான்தான்! 

 

நடையில் மெல்லிய துள்ளல் வந்துவிட இசையோடு இசைந்தவள், ஆழ சுவாசித்தாள். பனிவாசமும், பச்சை வாசமும் ஒரு சேர அவளுள் நிறைவது போலொரு பிரமை! 

 

அவனவன் குடுக்கற பனிஷ்மெண்ட்கூட நமக்கு சாதகமாதான்யா இருக்கு! 




 மாற்றம் வரும்! நிச்சயம் வரும்! என்று புது நம்பிக்கை ஒன்று பிறக்க, திடமாய் நிமிர்ந்தவள் ஓரடி எடுத்து வைத்தது வரை மட்டும்தான் தெரியும்! 

 

அடுத்த நொடி கண்விழிக்கையில் கண்ணெதிரே பெருவெளியாய் வானம்! 

 

இப்பதானேடா நம்பிக்கை பிறக்குதுனு நினைச்சேன்! அதுக்குள்ளயா? அதுசரி.. நாம எப்படி சொர்க்கத்துக்கு வந்தோம்? 

 

சித்ரகுப்தனுக்கு கூட சிஸ்டம் எரர் வரும் போல!

 

என எக்குத்தப்பாய் அவள் எண்ணம் சென்றுகொண்டிருந்த சமயம் 

 

"ஆ..." என்ற மெலிந்த முனகல் சத்தமொன்று காதில் விழ

 

யார்ரா அது? வலிக்கிற நானே கத்தல! 

 

மின்னல் வேகத்தில் ஒரு தெளிவு! அவளுக்கு வலித்தது! அதைவிட முக்கியமாக இன்னமும் அவள் மேல் எதுவோ பெரிதாகக் கிடந்து அவளை அழுத்தியதில் அவளால் நேற்று பெய்த மழையின் மிச்சத்தைப் புற முதுகில் உணர முடிந்தது. 

 

வலியிலும் குழப்பத்திலுமாக சுருங்கியவளது விழிகள் கண்ணெதிரே ஒரு காக்கா இவளுக்கு டாடா காட்டிவிட்டுப் பறக்கவும் தான் உயிரோடுதான் இருக்கிறோம் என்பது உறுதிப்பட்டுவிட, ஓரளவு சூழ்நிலை புரியத் தொடங்கியது. அதைவிட அந்த நெடி! 

 

யப்பா! ச்சை! 

 

எழ எண்ணியவள் உடலை அசைக்க முயல அதற்குள் மீண்டும் அந்த முனகல் சத்தம். 

 

"ஆ..." என்று 

 

மெல்ல வானத்தில் இருந்த பார்வையைப் பூமிக்கு, அவள் மேல் கொண்டு வந்தாள். 

 

நெஞ்சு அத்தனை நேரம் கனத்து மூச்சு முட்டியதற்கான காரணம் புரிந்தது. 

 

அவள் நெஞ்சில் வசதியாக வலப் பக்க முகத்தை பதித்தபடி ஒரு தலை! ஒரு உருவம்! உருவமென்ன உருவம்.. ஒரு மனிதன்! 

 

மீண்டும் அவள் நாசியைத் தீண்டிய நெடியைப் பார்த்தால்... நிச்சயம் ஒரு குடிமகன்! 

 

ராஸ்கல்! 

 

உடனடியாக அவனை தன்னிடம் இருந்து விலக்கிவிடும் நோக்கில் அவள் எழ முயல, அவனோ மீண்டும் 'ஆ' என்ற அலறலோடு நிற்காமல் அவளது தோள்களை வேறு இரு கைகளால் பற்றி அசைய விடாமல் பிடிக்க முயல, வந்ததே வெறி அவளுக்கு! 


நீ குடிச்சிட்டு வந்து படுக்க என் நெஞ்சென்ன உன் நெய்பர் வீட்டுத் திண்ணையா? என்று பொங்கியெழுந்த ஆத்திரத்துடன் அவள் மேல் இருந்த அவன் தலை முடியைக் கொத்தாய் பற்றியவள் அவனை தன்னிடம் இருந்து பிரிக்க முயல

 

"அய்யோ!" என்று அவனிடம் இருந்து அலறல் மட்டும்தான் வந்ததே தவிர அவன் தலை அசைவதாக இல்லை. 

 

"பொறுக்கி பயலே! இப்ப மட்டும் நீ நகரல வாழ்க்கை முழுக்க நகர முடியாதபடி பண்ணிருவேன்" என்று பற்களுக்கிடையில் அவிரோளின் வார்த்தைகள் கடிபட்டன. 

 

"அய்யோ.. முடிஞ்சா நான் நகர மாட்டேனா!" என்றவனின் குரலின் அதிர்வலைகள் அவள் நெஞ்சுக்கூட்டிற்குள் அறைந்து வெளிவர, அதில் இன்னும் இன்னும் அசௌகரியமானவளின் பொறுமை பறந்தது. 

 

"ஏன் முடியாது! ஒரு அழகான பொண்ண பார்த்துற கூடாதே.. உடனே பாய்ஞ்சு வந்து விழுந்துட வேண்டியது" என்றவள் திமிற 

 

"ஆ... ஆ..." என அவள் அசைவுக்கேற்ப அசைந்தபடி அலறியவனிடமும் பொறுமை பறக்கத் தொடங்கியிருந்தது. 

 

"வாட்? ஆனாலும் உங்களுக்கு இமாஜினேஷன் அதிகம்தான். பட் நான் உங்க முகத்தைக்கூட பார்க்கல, அதுக்குள்ள.. " என்றவன் சூழ்நிலையை விளக்க வர

 

"ஓஹோ! முகத்தை பார்க்காமலேயே பாஞ்சு விழுந்தாச்சா? சரியான.." என்றவள் அடுத்து வார்த்தையை விடுவதற்குள் அவசர அவசரமாக

 

"அய்யோ! ஒரு நிமிஷம் இருக்கீங்களா! என் முடி உங்க பட்டனோட மாட்டிட்டு இருக்கு! அதான் நகர முடியல" என்றவன் அலறிவிட, அவிரோளிடம் அமைதி. அவளது பார்வையை மௌனமாய் அவன் தலையையும் தனது சட்டை பித்தானையும் ஆராய்ந்தது. மெய்தான்! 

 

மறுபேச்சின்றி அவனது முடியை தன் பித்தானில் இருந்து பிரிக்க முயன்றாள். முதலில் படக்கென பிய்த்து எரிந்துவிடத் துடித்த கை அவனது பட்டுக்கேசத்தில் பதிந்ததும் தயங்கியது. பொறுமையாகவே பிரித்தெடுத்தாள். 

 

விண்ணென்று முடி இழுபடும் வலி மெல்ல மெல்ல குறையவும், மெல்லத் தலையை நிமிர்த்திப் பார்த்தான்.

 

வந்துவிட்டது! முடி வந்துவிட்டது! 

 

முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் நிம்மதியாய் மிளிர பார்வையை மேலே நிமிர்த்தினான். 


குனிந்து அவனையே முறைத்துக்கொண்டிருந்தவளின் பார்வை சட்டென உரைக்க, அவசர அவசரமாக அவளிடமிருந்து விலகியவன், சற்று தள்ளாட்டத்துடன் எழுந்து நின்று அவளுக்கு கை கொடுக்க, அவனை உருத்து விழித்தவளோ அதைச் சட்டை செய்யாது மெல்ல எழ முயன்றாள். முதுகு கிண்ணென்றது.  பார்வை கையில் இருந்த பால் பாக்கெட்டை தேட, அந்தோ பரிதாபம்! அது 8த் க்ராஸ் தெருவுக்கு பாலாபிஷேகம் ஆகிப் பல நிமிடங்கள் கடந்திருந்தன. 

 

"தண்டம்! தண்டம்! அப்படியே அப்பன் புத்தி! ஒரு சாதாரண பால் பாக்கெட் வாங்கி வரத் துப்பில்ல!" என சித்தப்பாவின் உக்கிர குரல் எட்டுக்கட்டையில் இப்பொழுதே கேட்டது.

 

"சாரி.. உங்களுக்கு அடிபட்டுச்சா?" என்று தயங்கித் தயங்கி வந்த குரலில் விருட்டென நிமிர்ந்தவள் அசுர வேகத்தில் எழுந்து நின்றாள். 

 

என் சோத்துல சாராயத்தை ஊத்திட்டு விசாரிக்கவா செய்ற! 

 

"அறிவில்ல? குடிச்சா வீட்டுல போய் விழ வேண்டியதுதானே! அடுத்த வீட்டு பொண்ணு மேலதான் வந்து விழ தோணுமா? ஆளையும் மண்டையும் பாரு! உன்ன! உன்ன!" என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அதற்கு மேல் வார்த்தைக்காகத் தேடி திணறியவள் கடைசியில் 

 

"போடா பூசணிக்கா!" என்று கத்திவிட்டுத் திரும்பியும் பார்க்காமல் விடுவிடுவென நடந்துவிட 

 

அவ்வளவு நேரமும் எப்படி மன்னிப்பு கேட்பது, எப்படிப் புரிய வைப்பது என்று மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்த எழிலுக்கு அந்த 'போடா பூசணிக்காவில்' மொத்தமும் மறந்துவிட்டது. 

 

எது பூசணிக்காவா? என்று பார்த்து நின்றவன் ஒரு முறை தன்னை குனிந்து பார்த்தான். ஆரஞ்சு நிற டீஷர்ட், கருப்பு ஜெர்கின்.. ஓஹோ... 

 

ஃபன்னி கேர்ள்!

 

புரிதலுடன் அவன் தலை நிமிர்த்த அதற்குள் அந்த பட்டாசு பெண் பறந்துவிட்டிருந்தாள்! 

 

ச்சே! இப்படி மிஸ் பண்ணிட்டியே எழிலு.. என்றொரு பெருமூச்சுடன் தலையைச் சிலுப்பிக்கொண்டவனின் பார்வையில் அங்குக் கீழே கிடந்த பால் கவர் விழ, சட்டென இரட்டிப்பானது குற்றவுணர்வு. 

 

மெல்ல பால் உறையை மட்டும் பொறுக்கியெடுத்தவன் அதை அந்த தெருமுனையில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு நகர்ந்தான். 

 

கரியோக்கி பாக்ஸில்... 


"அவிரா கொஞ்சம் நான் சொல்ல வரதை கேளுங்க.." என்று இருக்கை நுனிக்கு வந்த எழில் பேச்சு வார்த்தைக்கு அவளை இழுக்க 

 

"அவிரோள்" என்று அவனைத் திருத்தியவளோ பிறகு "நெவர்மைண்ட்! நீ என் பேரகூட சொல்லாத! இன்ஃபாக்ட் கூப்பிடவே செய்யாத" என்று மிடுக்காய் மொழிந்துவிட்டு சாய்ந்தமர 

 

எழிலுக்கு தலை சுற்றாத குறை. 

 

"ஓகே.. கூப்பிடல பட் அன்னைக்கு என்ன நடந்ததுனு நீங்க நினைக்கறீங்கனு எனக்கு புரியல.." என்றவன் பேசத் தொடங்கவும் 

 

"முழு போதைல இருந்தா எப்படி புரியும்" என்றவள் இடைவெட்டினாள் மீண்டும். 

 

ஆண்டவா! 

 

"நீங்க தப்பா புரிஞ்-" என்றவன் எதையோ சொல்ல வருவதற்குள் சிறு தட்டலுடன் கதவை திறந்தான் அதே பையன். 

 

தலையை மட்டும் நீட்டி உள்ளே எட்டிப்பார்த்தவன், மெனு கார்ட் என அங்கு மேசையில் இருந்த ஒரு க்யூ ஆர் கோடை சுட்டி காட்டிவிட்டு

 

"உங்களுக்கு ஸ்நாக்ஸ் எதாவது வேணும்னு ஆர்டர் பண்ணிங்கனா அஞ்சு நிமிஷத்துல வந்துடும். ஓபனிங் ஆஃபரா  ஸ்நாக்ஸ் இன்க்ளூடட். க்யூ ஆர் கோட் வசதியில்லைனா என்கிட்ட சொல்லுங்க நான் கொண்டு வரேன்.." என்றவன் ஒரு நொடி நின்று இருவர் முகத்தையும் பார்க்க 

 

"ஒரு ப்ளேட் பீர் குழம்பும், வைன் வறுவலும்.." என்றவளது முணுமுணுப்பில் அந்த பையனுக்கு  கேட்கவில்லை என்றாலும் அருகில் இருந்த எழிலுக்குத் தெள்ளத் தெளிவாகக் கேட்டுவிட, சிரிக்கவும் முடியாமல் முறைக்கவும் முடியாத நிலை!

 

எழில்,"தேங்க்ஸ்! இருக்கட்டும் நாங்க எதாவது தேவைன்னா கேக்கறோம்" என்றதும் அந்த பையன் கிளம்பிவிட, எழிலின் பார்வை மீண்டும் அவிரோளிடம் காரமாகப் பாய்ந்தது. 

 

க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தாள் போல, மெனுவை தான் நோட்டம்விட்டுக்கொண்டிருக்கிறாள் என்பது அவள் கை திரையை தள்ளிய விதமே சொல்லியது. இப்படி எடுத்ததற்கெல்லாம் முட்டுக்கட்டை போடுபவளிடம் எப்படிப் பேசுவது? 

 

"ஹலோ! இது டூ மச்! விட்டா நீங்க பாட்டு எதேதோ பேசிட்டே போறீங்க!" என்று அவன் ஆரம்பிக்க

 

புருவம் இரண்டையும் சுளித்து முகத்தைப் பாவமாக வைத்தபடி  


"ப்ச்.. தப்புதாங்க. உங்க ஸ்பெஷல் சாராய சோறும் சேர்த்து சொல்லாதது என் தப்புதான்" என்று குரலில் பவ்யம் காட்டி முகத்தில் எள்ளல் தெறிக்க அவள் பேச, எழிலின் பொறுமையும் பறந்துவிட்டது.

 

"அப்படி என்னங்க நான் உங்களுக்கு பண்ணிட்டேன்? ஏதோ கொலை குத்தம் பண்ணா மாதிரி குத்தி குத்தி பேசிட்டே போறீங்க!" என்றவன் குரலை உயர்த்தாமல் அதே சமயம் திடமாக கேட்க 

 

உங்க ஊருல கொலை குத்தம் பண்ணா வெறும் குத்தி குத்தி மட்டும்தான் பேசுவாங்களா? எனக் கேட்கத் துடித்த நாவை அடக்கி, அவிரோளும் சுற்றி வளைத்துப் பேசாமல் நேராக விஷயத்திற்கு வந்தாள். 

 

"என்ன பண்ணேனா? எவ்வளவு திமிர் இருக்கனும்! அதிகாலைலயே மூச்சு முட்ட குடிச்சிட்டு வந்து, ரோட்டுல சும்மா போற பொண்ணு மேல விழுந்து.. ஏற்கெனவே சிக்கலா இருக்கவ வாழ்க்கைய இன்னும் சிக்கலாக்கிட்டு.. என்ன பண்ணேன்னா கேட்கற நீ! நீ பண்ண காரியத்துக்கு உன்ன அன்னைக்கு பிடிச்சு உள்ள வச்சு உரிச்சிருக்கனும்! இதுல கயன்ன வேற நல்லவன்னு ஏமாத்தி வச்சிருக்கல்ல நீ!" என்று பொரிந்து தள்ள எழிலுக்கு மெய்யாகவே புரியத்தான் இல்லை. 

 

இவன் அப்படி என்ன செய்துவிட்டான் என்று இவள் இப்படிப் படபடக்கிறாள்? 

 

என்னவென்று புரியாவிட்டாலும் தன்னால் இவளுக்கு ஏதோ பெரிய பிரச்சனை வந்திருக்கிறது என்று மட்டும் புரிந்துவிட, அவளுக்குப் பதில் கூடச் சொல்லத் தோன்றாமல் அவன் மனதில் மீண்டும் மீண்டும் அன்றைய தினத்தை ஓட விடத் துவங்க 

 

"சரியான தொல்லை! இவ்வளவு பிரச்சனையை வச்சுட்டு ஏன்தான் ஈபுக்கிங் ஆப்ஷன் வைக்கறாங்களோ.. ஷப்பா!" என்று சலித்தபடி கயன்னங்கை வந்ததையும் அவன் கவனிக்கவில்லை 

 

"எனக்கு ஒரு மாதிரி இருக்கு. ஃபீலிங் நாஷியஸ். நாம இன்னொரு நாள் மீட் பண்ணலாம்" என்றுவிட்டு கயன் கூப்பிட கூப்பிட நிற்காமல் கிளம்பிச் சென்ற அவிரோளையும் அவன் கவனித்திருக்கவில்லை. 


"என்னடா பண்ண அவள!" என்று கயனா தன் முன்னால் இரு கைகளையும் இடையில் வைத்தபடி முறைத்துக்கொண்டிருப்பது மெல்ல மெல்லக் கவனத்தில் விழ, வேக வேகமாக அவ்வறையைச் சுற்றியவனது பார்வை அவிரோள் அங்கில்லை என்பதை உணர்ந்ததும் உள்ளங்கைகளுக்குள் முகத்தைப் புதைத்தவன் அழுந்த துடைத்தான்.

 

"சத்தியமா எனக்கும் தெரியல!"  என்றவனின் சலிப்புக் குரலில் கயன்னங்கையின் பார்வை கூர்மையாகியது.

— “Operation: கல்யாணம்” கதையிலிருந்து ஒரு பகுதி  

✍️ எழுத்தாளர்: Yagnya 

இந்தக் கதை முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது



முந்தைய அத்தியாயம்  |  அடுத்த அத்தியாயம்

📖 இந்த தொடரின் அத்தியாயங்கள்