Operation: கல்யாணம் - 7
அதே இரண்டு வருடங்களுக்கு முன்பு...
அதே வானம், அதே மேகமூட்டம், அதே சலனப்பருவம், அதே ஈரப்பதம் குறையாத தெருக்கள்.
நேர்முகத்தேர்வு தொடர்பாகச் சென்னையில் இருந்து கிளம்பி வந்திருந்த எழில் அங்குத் தெரிந்தவர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தான்.
அம்மா பக்கத்து, தூரத்து உறவினர். பெரியப்பா முறை. அம்மா வேறு, அங்கு வரை சென்றுவிட்டு நீ வெளியில் தங்கினால் நன்றாக இருக்காது என்றுவிட, வேறு வழியின்றி அவன் பெரியப்பா வீட்டில் மூன்று நாட்கள் தங்கும்படியானது.
முதல் நாள் இருக்கும் இடத்தில் இருந்து அசையாமல் அசௌகரியமாகச் சுற்றியவன் நேரம் செல்ல செல்ல, பெரியப்பா மகளின் அரட்டையில் கொஞ்சம் சகஜமாகிவிட, இறுக்கம் தளர்ந்து தனது காலை நேர நடைப் பயிற்சியை அவர்கள் வீட்டைச் சுற்றியிருக்கும் தெருக்களுக்குப் பழக்கிக்கொண்டான்.
அப்படியே நிறுத்தியிருக்க வேண்டுமோ என்று இப்பொழுது தோன்றுகிறது. ஆனால் அன்றிருந்த மனநிலையும் வானிலையும், முந்தின இரவு வந்த அடுத்தகட்ட நேர்காணலுக்கான அழைப்புமாகச் சேர்ந்து உற்சாகமாய் உருமாறியிருக்க, அவன் வகுத்துக்கொண்ட எல்லையை தாண்டிவிட்டான்.
ஆம், வழமைபோல, தெருமுனையில் மெயின்ரோட்டுடன் இணையும் சிக்னல் வரை மட்டும் வந்து திரும்பியவன், அன்று தூரத்தில் எதிர்த் திசையில் தெரிந்த பூங்காவினுள் சென்று பார்க்கத் தோன்றிவிட அங்குச் செல்ல, அந்த பூங்கா என்று தொடங்கியது பிறகு அதைத் தாண்டிய சாலையென நீண்டது.
இருபுறமும் பசும் மரங்களில் பூத்துக்குலுங்கிய மஞ்சள் கொன்றை அந்த கார்கால சாயலில் இன்னமும் அடர் பச்சையாகத் தெரிந்த இலைகளின் நடுவே பளீரென்று ஒளிவீச
காதில் ஒலித்த பாடலுக்கேற்ப துள்ளல் நடையுடன் சாலையில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த பூக்களின் தடத்தைப் பின்பற்றி நடக்கத் தொடங்கினான்.
அப்பொழுதுதான் அது நடந்தது!
தூரத்தில்.. சாலையோரத்தில் ஒரு மனிதர் நிற்க முடியாமல்.. மயங்கிச் சரிவது போல.. அச்சச்சோ!
நொடி தாமதியாமல் நடுவில் இருந்த கிளை சாலையைக் கடந்து எதிர்புறம் ஓடியவனுக்கு அவரை நெருங்க நெருங்க எதுவோ உறுத்தியது.
மனிதருக்கு ஏதும் உடல் உபாதை போல தெரியவில்லை. போதை தள்ளாட்டம் போல்தான் தெரிந்தது. ஆனால் அவர் நிற்க முடியாது தள்ளாடியதைக் கண்டவனுக்கு அவர் ஏதாவது ஒரு வண்டியில் விழுந்து வைப்பார் என்பது நிச்சயமாகிவிட, நடையை நிறுத்தாமல் அவரிடம் விரைந்தான்.
அவன் அவரை நெருங்கிய சமயம், சிவனே என ஒரு ஓரமாக நடைபாதையில் குளிருக்கு ஒதுங்கிப் படுத்திருந்த நாலு கால் ஜீவனிடம் அவர் ஏதோ விவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
ஆம், விவாதமேதான்! இவர் ஆத்து ஆத்து என்று ஆத்தியதில் என்ன புரிந்ததோ அதுவும் உர்ர் உர்ர் என மரியாதையாக அவரை ஓடிவிடுமாறு எச்சரித்துக்கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் தள்ளாடி அந்த நாய் மீதே விழப்போக, அது வவ் என பயந்து பதுங்குவதற்கு முன்னரே எழில் அவர் பின் புற சட்டையைப் பிடித்து விழாமல் தடுத்துவிட்டான்.
தேங்க் காட்!
அவரை பிடித்து நிறுத்தியவன் வாயைத் திறப்பதற்குள்
"யார்ரா அவன் என் சட்டைய பிடிச்சவன்!?" என்று ஏகவசனத்தில் எச்சில் தெறிக்க இருமி உருமினார் மனிதர்.
நொடியில் எழிலுக்குத் தான் வழமை போல உதவ வந்து தனக்கே உபத்திரவம் செய்துவிட்டது உரைக்கத் தொடங்க
"ச்சே ச்சே! சட்டைய பிடிக்கல அங்கிள். நீங்க விழாம இருக்கதான் பிடிச்சேன்.." என்று விளக்கம் சொல்ல, விளக்கங்கள் கேட்கும் நிலையிலா அவர் இருந்தார்?
"கொய்யால! யாரு யாருக்கு அங்கிள்? உன்ட்ட கேட்டனா நானு காப்பாத்த சொல்லி? எவ்வளவு அடிச்சாலும் கிங் மாதிரி வீடு திரும்புறவன்டா நானு! நேத்து முளைச்ச காளான் என்ன பேசற.." என்று முற்று முழுதாக அவனைத் தாக்கிவிடும் நோக்கில் அவர் படையெடுக்க
செய்வதறியாது பேவென விழித்து நின்றவன் அவர் தனது சட்டையை கொத்தாய் பற்றவும் திமிறி "அய்யோ அங்கிள் விடுங்க" என விலக முயல
"மறுபடியும் மறுபடியும் யாரடா அங்கிள் சொல்ற!" என்று அவனிடம் பாய்ந்தவர் நடுவில் ஓரமாக ஒதுங்கி இவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காது முதுகைத் திருப்பி அமர்ந்திருந்த நாயிடம் திரும்பி
"நீ என்ன என்ன வேடிக்கை பாக்கற!" என்று அதனிடமும் வம்பு வளர்க்க, அவ்வளவு நேரமும் பொறுத்துப் பொறுத்து பார்த்த நாய்வாளரும் பொங்கியெழுந்து 'வள்ளென்று' ஒரு முறை குரைத்ததுதான் தெரியும்!
அடுத்த கணமே இருவரும் இரு வேறு திசையில் ஓட்டமெடுத்திருந்தனர்.
தலைதெறிக்க வந்த திக்கிலேயே திரும்பி ஓடிய எழில் தெருமுனையை கடக்கும்பொழுது அப்பொழுதும் அந்த மனிதருக்காகத் திரும்பி பார்க்க
ஆள் ஒலிம்பிக் ரெகார்டை முறியடிக்கும் வேகத்தில் எப்பொழுதோ அப்ஸ்காண்டாகியிருந்தார்!
தொலை தூரத்தில் மீண்டும் ஒரு 'வள்' கேட்க, அதற்கு மேல் திரும்பியும் பாராமல் கண்மண் தெரியாமல் ஓடியவன் தொலை தூரம் வந்துவிட்டோம் என்று புத்தியில் உரைக்க, அதிலும் தனக்கு முன்னால் சற்று தொலைவில் ஒரு பெண் நடந்து செல்வதும் விழ, வேகத்தைக் கட்டுப்படுத்த முயல, அன்று காலையில் இருந்து அவனை வாராய் நீ வாராய் என அழைத்து எங்கெங்கோ கொண்டு சென்ற ஆரஞ்சு பூவொன்று தன் வேலையைக் காட்டிவிட்டது!
ஆம், ஆங்காங்கே சிதறிக்கிடந்த பூக்களில் ஒன்றின் மேல் அவன் காலை வைத்துவிட, ஏற்கெனவே மழையில் முழுதாக நனைந்து சொதசொதவென்று கிடந்த மலர் அவனை மல்லாக்க புரட்டிப் பறக்கவிட்டது!
ஏதோ வாட்டர் ஸ்லைடில் போவது போல வழுக்கிக்கொண்டே போனதுவரைதான் அவனுக்கு நினைவில் இருந்தது. மீண்டும் அவன் கண் சிமிட்டி திறந்தபொழுது அவன் மெத்து மெத்தென்று எதன் மீதோ விழுந்து கிடந்தான்.
டபக் டபக்.. டபக் டபக் என்று விடாமல் படபடத்த சத்தம் அவன் எங்கு விழுந்து கிடக்கிறான் என்பதை உறுதி செய்ய, வியர்த்து விறுவிறுத்துவிட்டது அவனுக்கு! விருட்டென எழ முயன்றவனின் ஒரு பக்க சுருள் கூந்தல் எதிலேயோ சிக்கி அவனையும் அதே நிலையில் சிக்க வைத்திருக்க எழில் அழாதக்குறை!
அய்யோஓ! மீண்டும் மீண்டுமா!
அத்தனையிலும் அந்த சட்டைக்குச் சொந்தக்காரி காரி உமிழாத குறையாக பேசியதில் அவனுக்குப் பரம நிம்மதி!
நல்ல வேளை அவளுக்கு ஒன்றுமாகவில்லை!
என்பதுதான் அவனது முதல் எண்ணமாக இருந்தது.
அதற்கு பின் ஒருவாறு போராடி தன் தலையை அவளிடமிருந்து பிரித்து எடுத்துவிட்டு நன்றி சொல்ல அப்படியே நிமிர்ந்து நோக்கியவனுக்கு ஒரு கணம் பேச்சே எழவில்லை!
அப்பொழுது மட்டுமில்லை. அவள் அவனைத் திட்டி தீர்த்துவிட்டு அங்கிருந்து மறையும் வரையிலுமே எழிலிடம் எதார்த்தமான பதில்கள் என்று எதுவுமில்லை!
கரியோக்கி பாக்ஸில்...
எழில் சொல்லச் சொல்ல கேட்டுக்கொண்டிருந்த கயன்னங்கையின் முகம் பலநூறு நிறங்களில் மாறுவதைக் கண்டவன்
"எ.. என்ன கயனா?" என்று கேட்டேவிட்டான்.
"நினைச்சேன்டா! அன்னைக்கு தியேட்டர் வாசல்வரை வந்துட்டு.. வரவே இல்லைனு பொய் சொல்லி பின்பக்கம் வழியா நீ ஓடினப்போவே நினைச்சேன்.. ஆனா நீதான் அந்த காவாலினு நினைக்கல" என்று இரு கைகளையும் குவித்து அதில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.
"என்ன.. நீ" என்றவனுக்கு இவள் தன்னை அன்று பார்த்துவிட்டாளா! என்று அதிர்வதா இல்லை அவள் சொல்லிய 'காவாலியில்' அதிர்வதா என்றே புரியவில்லை.
அதற்குள் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு நிமிர்ந்தாள் கயன்னங்கை
"ஆமா பெரிய ஜேம்ஸ் பாண்ட் நீ! நான் ப்ரஸண்ட் பண்ண தொப்பியவே போட்டுட்டு என்ன க்ராஸ் பண்ணி ஒளிஞ்சு ஒளிஞ்சு போற.. கொஞ்சம்கூட க்ரிமினல்த்தனம் பண்ணமாட்டியா எழிலு?" என்றவளின் குரல் சலிப்பாக வெளிவந்தது.
என்னை நீ ஒழுங்காக ஏமாற்றவில்லை என்று அதிருப்தி அடைந்தவளைப் புரியாத பார்வை பார்த்தவன்
"சாரி.. அன்னைக்கு நீ அவிராவ கூட்டிட்டு வருவேனு நான் எதிர்ப்பார்க்கல.. என்ன பண்றது ஏது பண்றதுனு தெரியாம ஓடிட்டேன்" என்றவனின் தலை தாழ்ந்தது.
இவனை வைத்துக்கொண்டு என்ன செய்வது!
கயன்னங்கையிடம் பெருமூச்சுக்கள் சில பல எழுந்தடங்கியது.
அவர்களுக்கு இடையில் கிடந்த டீப்பாயை அவள் தீவிரமாக வெறித்தபடி ஏதோ சிந்தனையில் இருக்க
"ஏதோ காவாலினு சொன்ன.." என்றான் தயக்கம் மேலிட
சட்டென கயன்னங்கையின் பார்வை அவன் மீது படிய எழிலின் வார்த்தைகள் அப்படியே நின்றது.
ஒரு "ப்ச்!" உடன் முகத்தை மீண்டும் அழுந்த துடைத்துக்கொண்டவள்
"நீ இப்போ சொன்னது உன் பக்க கதை. ஆனா ரோ பெர்ஸ்பெக்டிவ்வே வேற இதுல.. ப்ச்! இது எவ்வளவு பெரிய இஷ்ஷூ ஆச்சு தெரியுமா? அவ லைஃபே இன்னும் மோசமாகிடுச்சு!" என்று சொல்ல
"புரியல.. அப்படி என்னாச்சு? ப்ளீஸ் கயனா கொஞ்சம் தெளிவா சொல்லு ப்ளீஸ்" என்றான் கெஞ்சலாக.
அவனால் அவள் வாழ்க்கை சிரமமானதா? அதுவும் 'இன்னும்' அப்படி அவளுக்கென்னதான் பிரச்சனை?
ஆழ மூச்சிழுத்துவிட்டுக்கொண்ட கயன்னங்கை தொடங்கினாள்.
"நான் உன்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கேன். ரோக்கு அப்பாம்மா கிடையாது. அவ, அவ சித்தப்பா வீட்டுலதான் இருக்கான்னு.."
"ம்ம்.."
"சித்தி கொடுமை கேள்வி பட்டிருப்ப ஆனா சித்தப்பா கொடுமை கேள்விப்பட்டிருக்கியா? இதுல அந்த அகில் வேற! அவங்க பையன். ரோ அவரோட சொந்த அண்ணன் மகள்தான். ஆனா அண்ணனையே பிடிக்காத மனுஷனுக்கு அண்ணன் பொண்ண மட்டும் எப்படி பிடிச்சிடும்?"
"..."
"ரோவோட அப்பா சரியான கேம்ப்ளிங் அடிக்ட். ஓரளவு நல்ல நிலைல இருந்தவர் வேலை போய், அப்பறம் பிஸ்னஸ் தொடங்கறேனு அதுலயும் ஏமாத்து வேலை செஞ்சுனு ஏகப்பட்ட கடன். இதுல சொத்தை பிரிச்சு தரனும்னு அவங்க அப்பாக்கிட்ட பயங்கர சண்டை வேற. அவ அம்மாவும் அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் நடுவுலனு ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாங்க, மனுஷன் இனி திருந்தவே மாட்டார்னு புரியவும்.. மகளாவது நிம்மதியா வாழட்டும்னு விபரீதமா முடிவெடுத்துட்டாங்க.." என்றவளின் குரலில் மெல்லிய நடுக்கம்.
அதை விவரிக்க அவளுக்குத் தைரியமில்லை. அவன் புரிந்துகொண்டானா என்பதை உறுதி செய்ய அவள் பார்வை ஒரு கணம் அவன் முகம் நோக்கியது. எழில் கண்களில் அப்பட்டமான அதிர்ச்சி, மெல்லிய நீர்ப்படலம்.
ரோ நீ நினைப்பது போல இவனில்லை.
குரலை சரி செய்துகொண்டு தொடர்ந்தாள்
"மகனுக்கு விஷம் கொடுத்துட்டானு மருமகள் வீட்டுப் பக்கம் இருந்து விசாரிக்க வந்தவங்கள கொலைகார குடும்பம்னு சொல்லி விரட்டிட்டார் அவளோட தாத்தா. அவங்க வீட்டு பொண்ணே போனதுக்குப் பிறகு இந்த பேச்சு கேட்கனுமானு அவங்களும் யாரும் அதுக்கு அடுத்து வரலை. ரோவோட பொறுப்பு அவ சித்தப்பாக்குனு வந்துச்சு. அத்தனை நாள் பிரிக்காம வச்சிருந்த அவ அப்பா பங்கு சொத்தை வித்து கடனை அடச்சிட்டு மீதிய அவளை கவனிக்கனு அவ சித்தப்பா பொறுப்புல வச்சுட்டு அவ தாத்தாவும் போய்ட்டாரு. அவ சித்தப்பா பயங்கர வில்லன்லாம் இல்லை, ஆனா நாக்கு தேள் மாதிரி!
எடுத்ததுக்கு எல்லாம் அப்பன மாதிரி அப்பன மாதிரினு கொட்டி கொட்டியே கொன்னுடுவாரு. முக்கால்வாசி அவர் வீட்டுல இருக்கும்போது ரோ அவ ரூம விட்டு வெளிலயே வரமாட்டா. அவ சித்தி பாவம். அதுக்கு ஒப்போஸிட். அவர் இல்லாத சமயம் அவளுக்குப் பார்த்துப் பார்த்து ஏதாவது செய்வாங்களே தவிர, அவருக்கு முன்னால வாயக்கூடத் திறக்க மாட்டாங்க.
இதெல்லாம் போதாதுனு குட்டி வில்லன் அகில். சரியான தொல்லை அவன்! சின்ன வயசுல இருந்தே அவன் எதையாவது சேட்டை செஞ்சிட்டு அவிரோள்தான் செஞ்சானு அப்பாக்கிட்ட போட்டுக்கொடுத்துத் திட்டு வாங்க வைப்பான்.
உன்கூட தானே வளர்ந்தான், என் புள்ளய பாருனு அவர் சொல்றதுல அந்த அல்பைக்கு அப்படியொரு சந்தோஷம்! இதுக்குனே எப்படா குறை கண்டு பிடிக்கலாம்னு கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுட்டு சுட்டிருக்கும்!" கயன்னங்கையின் பற்கள் நறநறத்தன
எழிலை ஏறிட்டாள்
"எல்லாத்தையும் உன்கிட்ட சொல்ற நான். இதெல்லாம் இதுவரை சொன்னதில்ல எழில். அது ரோக்கு பிடிக்காது. ஆனா இதை சொன்னாதான் நான் அடுத்து சொல்றது உனக்கு புரியும்" என்றவள் அவனைப் பார்க்க
எழிலிடம் புரிந்துகொள்ளலுடனான ஒரு தலையசைப்பு.
"நீ சொன்ன மாதிரி அது வெறும் ஆக்ஸிடெண்ட்தான்.. தப்பான கண்ணுல படாதவரை"
எழில் புரியாமல் விழிக்க
"உனக்கும் தெரியும்னு நினைக்கறேன். அங்க இருந்து ரோ வீடு ரொம்ப பக்கம். அவ வீட்டுக்கு போறதுக்குள்ள அங்க நிலைமையே வேற மாதிரி ஆகிடுச்சு.." என்று அன்றைய நாளை விவரிக்கத் தொடங்கினாள்.
அவிரோள் காணாமல் போன பால் பாக்கெட்டிற்கு என்ன பதில் சொல்வது, இன்று என்னவெல்லாம் திட்டு விழப்போகிறது, அதற்குத் தான் எப்படியெல்லாம் தயாராக இருக்க வேண்டும் என்ற சிந்தனையிலேயே செருப்பை கழட்டிவிட்டு முகப்பறையினுள் நுழையும்வரை அதே சிந்தனையில் இருக்க
சற்றும் எதிர்பாராத சமயம் இடியென அவள் கன்னத்தில் விழுந்த அறை அவளை நிலைகுலையச் செய்தது.
ரீங்ங்ங் எனக் காதில் கேட்ட சத்தத்தில் கண்களில் பொறி கலங்கி நின்றவளுக்கு அந்த சூழலையோ நடந்ததையோ புரிந்துகொள்ளவே பல நிமிடங்கள் தேவைப்பட்டது.
ஒரு மூலையில் சித்தி கண்ணீருடன் நின்று இவளையே பார்த்துக்கொண்டிருக்க இன்னொரு புறம் சித்தப்பா கூண்டில் அடைத்த புலியைப் போல அதே அறையில் இங்கும் அங்குத்தாக நடந்தபடி இவளைச் சுட்டிக்காட்டி ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார் என்றால், தூரத்தில்.. மாடிப்படியருகே கைகளைக் கட்டிக்கொண்டு நின்ற அகில் நடப்பவை அனைத்தையும் வெகு சுவாரஸ்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.
நொடியில் எதுவோ தப்பு நடந்திருக்கிறது என்று மட்டும் புரிந்துவிட சித்தப்பாவிடம் திரும்பினாள்.
"அப்பனா மாதிரியே குடும்ப மானத்தைக் குழி தோண்டி புதைக்க வந்திருக்கா! எதோ சின்ன பொண்ணு சின்ன பொண்ணுனு கொஞ்சுவியே! அந்த சின்ன பொண்ணு பண்ணிட்டு வந்திருக்கற காரியத்த பார்த்தியா! நடு ரோட்டுல ஒருத்தன்கூட உருண்டு புரண்டுட்டு வந்திருக்கா! அப்பன் போலிஸ் ஸ்டேஷனுக்கு இழுத்தான்ன பொண்ணு கொஞ்ச நஞ்சம் ஒட்டிட்டிருக்க மானத்தையும் நடுத்தெருவுக்கு கொண்டு வந்திருக்கா!" என்றவர்
"சித்தப்பா" என்றிவள் எதையோ சொல்ல வரவும்
"உன்ன! ஒரு வார்த்தை பேசாத! கழுத.. யாரு யாருக்கு சித்தப்பா!" என்று அவளிடம் மீண்டும் பாய
நடுவில் வந்து விழுந்த சித்தி
"அச்சோ அவ சின்ன பொண்ணு! அவ அப்படிலாம் செஞ்சிருக்க மாட்டா. அவள விடுங்க" என்று பிரிக்க முயல, பளாரென்ற சத்தத்துடன் அவள் கன்னத்தில் இறங்கியது அடுத்த அறை.
கமலி உறைந்தாள். இத்தனை வருடமும் கணவன் மகன் குடும்பம் என்றே வாழ்ந்தவளை அறைந்துவிட்டான்! அவன் மனம் கோணாது பார்த்துப் பார்த்து செய்தவளை அறைந்துவிட்டான்!
கமலி உறைந்து நிற்க சித்தப்பா கொஞ்சமும் கோபம் குறையாது சுட்டு விரலை நீட்டி அவளை எச்சரித்தார்
"எல்லாம் நீ குடுக்கற இடம்தான்!" என்றவர் மனைவியை இழுத்து மகன் அருகே நிறுத்தினார்.
"உன் புள்ளதான் சாட்சி! வெறும் சாட்சியில்ல கைல வீடியோவோட நிக்கறான்! நீ நம்ம பையனவிட இவளதான் நம்புவியா?" என்று கேட்க
கமலியின் பார்வை நேராக மகனை நோக்கியது. அன்னையின் பார்வை தாளாமல் சட்டென அகிலின் தலை தாழ்ந்தது.
கமலி கணவனிடம் திரும்பினாள். அவரை நேராகப் பார்த்து "ஆமா, நான் அவியதான் நம்பறேன்" என்று தெள்ளத் தெளிவாகச் சொன்னவர் தந்தையையும் மகனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அத்தோடு திரும்பியும் பாராது தனது அறைக்குச் சென்றுவிட்டார்.
இத்தனை வருடமாகப் பார்த்திராத மனைவியின் கோபத்தில் ஸ்தம்பித்து நின்றுவிட்ட சங்கரன், கடைசியில் அவிரோளை எல்லாம் உன்னால் வந்தது என்றொரு பார்வை பார்த்துவிட்டு அப்படியே வெளியில் கிளம்பிச் சென்றுவிட, அகில் அவளை வெளிப்படையாகவே முறைத்துவிட்டு அவன் அறைக்குச் சென்றுவிட்டான்.
நடந்து முடிந்த சம்பவத்தின் முழு கனத்தையும் உணர்ந்தவள் போல அவிரோள் அப்படியே தரையில் அமர்ந்துவிட்டாள்.
"அதுக்கு அப்பறம் அவங்க வீட்டுல நிறைய மாறிடுச்சு எழில். அவ சித்தி சுத்தமா பேசறதில்ல.. அவ சித்தப்பா அதுக்கும் இவதான் காரணம்னு பாக்கற இடத்துலலாம் கடிச்சு குதறாத குறையா பேசுவாரு. அகில் அவன் அப்பா அம்மா சண்டைக்கு இவதான் காரணம்னு குத்தி பேசறது மட்டுமில்லாம முன்னவிட தீவிரமா ரோவ வீட்டை விட்டு துரத்த அசட்டுத்தனமா ஏதேதோ செஞ்சிட்டு இருக்கான்.. " என்று சொல்லி முடிக்கையில் எழில் கன்னங்களில் கண்ணீர்த் துளிகள்.
மெய்யாகவே அவனால் அவள் வாழ்க்கை இன்னும் மோசமாகியிருக்கிறது! இதைப்பற்றி ஒன்றுமே தெரியாமல் இவள் புரிந்துகொள்ளாமல் பேசுகிறாளே என்று நினைத்தானே!
அவள் பக்கத்தில் இருந்து பார்த்தால்... காட்! எதுவுமே தெரியாமல் எப்படி இருந்துவிட்டேன்!
அவன் சந்தோஷமாக இருந்த ஒவ்வொரு நொடியும் அவனைக் குற்றம்சாட்டியது.
கண்களை அழுந்த துடைத்துக்கொண்டவன் கயன்னங்கையை ஒரு தீர்மானத்துடன் பார்த்தான்.
"நான் என்ன செய்யட்டும் கயனா?"
— “ Operation: கல்யாணம்” கதையிலிருந்து ஒரு பகுதி
✍️ எழுத்தாளர்: Yagnya
இந்தக் கதை முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது

Comments
Post a Comment