Operation: கல்யாணம் - 8
சில மாதங்களுக்குப் பிறகு...
அதே கரியோக்கி பாக்ஸில்...
அவிரோள், கயன்னங்கை, எழிலென மூவரும் மூன்று திசையைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அவியும், எழிலும் எதிர் எதிர்த் திசையில் முகத்தைத் திருப்பிக்கொண்டு அமர்ந்திருக்க, கயன் அவர்களுக்கு நடுவில் அமர்ந்திருந்தவள் இவர்கள் இருவரையும்தான் மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அடக்கடவுளே!
இது சரிப்பட்டு வராது..
தொண்டையை மெல்ல செருமியவள் இருவரின் கவனத்தையும் தன் புறம் திருப்பினாள்.
இருவரும் அவள் முகம் பார்க்க, அவள் அவளுக்கு முன்னால் டீபாயில் கிடந்த மைக்கை வெறித்தபடி "ம்ம்" என்று உந்தினாள்.
அதன் பொருள் உணர்ந்த இருவரும் கண்டுகொள்ளாமல் தலையைத் திருப்பிவிட முனைய மீண்டும் அழுத்தமாய் வந்தது கயன்னங்கையின் "ம்ம்"
கயனாவின் பார்வை எழிலை ஏறிட, அவன் மெல்லத் தைரியத்தை திரட்டிக்கொண்டு அவிரோள் முன்னால் கை நீட்டினான்.
"ஹாய், நான் எழில்மொழி. இங்க பேர்ரல் ம்யூஸியம் பீவரேஜஸ்ல ப்ரமோட்டரா இருக்கேன்." என்று தன்னை முதன் முதலாக அவளிடம் அறிமுகம் செய்துகொள்ள
கைகளை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவள் அவன் கையையும் அவனையும் ஒரு பார்வை பார்த்தாள்.
"சரியா சாராயக்கடைலயே வேலையா" என்று ஒரு பக்க புருவத்தை உயர்த்தி எள்ளலாய் கேட்டுவிட
எழிலுக்கு இம்முறை துளியும் கோபமில்லைதான். ஆனால் கொஞ்சம் வலித்தது. இன்னமுமா நம்பிக்கை வரவில்லை..
முயன்று முறுவல் மாறாமல் இருக்க அவன் படும்பாட்டைப் பார்த்த கயன்னங்கை
"ஷ் ரோ!" என்றாள் அதட்டலாக
அதில் சட்டென முகத்தை மாற்றிக்கொண்ட அவிரோள் மறுபுறம் திரும்பி அமர்ந்துகொள்ள, அவர்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்த எழில்
"நீங்க பேசிட்டு இருங்க, ஒரு சின்ன கால்" என்று வெளியேறிவிட
கயன்னங்கையின் பார்வை முழுதாக அவிரோளிடம் திரும்பியது.
"என்னடி பிரச்சனை உனக்கு! அவன்தான் அப்படிப்பட்டவனில்லனு அன்னைக்கு சொன்னேன்ல! அப்பறமும் அவனை அந்த வறு வறுக்கிற!" என்று காய்ந்தாள்.
அவிரோளின் பார்வை இன்னமும் அந்த புறமே இருக்க
"ப்ச்! இங்க பாரு ரோ!" என வலுக்கட்டாயமாக அவள் தாடையைப் பிடித்து திருப்பியவளின் பேச்சு அப்படியே நின்றது. கலங்கியிருந்தவளது விழிகளைக் கண்டு.
"ரோ.. என்னாச்சு?" கயன்னங்கை முகத்திலும் கலக்கம்
முயன்று அழுகையை விழுக்கியவள்,"ப்ச்.. நான் என்ன செய்யட்டும் கயன்! எனக்கும் தெரியுது.. இதுல அவன் தப்பு எதுவுமில்லைனு. ஆனா மனசு ஆறலையே. அவன் எதுவுமே நடக்காத மாதிரி பேசும்போதெல்லாம் அன்னைக்கு சித்தப்பா பேசின பேச்செல்லாம்தான் மறுபடியும் மறுபடியும் மனசுக்குள்ள ஓடிட்டே இருக்கு.. நான் ஒன்னும் மகானெல்லாம் இல்ல! எதாச்சும் தப்பா நடந்தா அதை யாரோ ஒருத்தர்தான் காரணம்னு நினைச்சு நிம்மதியாகிக்கற சுயநலவாதிதான். இவ்வளவு நாளும் அவனால தான்னு நினைச்சிட்டு இருந்துட்டு திடீர்னு இப்ப வந்து அவனால இல்லைனு சொன்னா, நிதர்சனம் மூஞ்சில அடிச்சு உண்மை காரணமா தெரிஞ்சவங்கள கை காட்டும்போது கஷ்டமா இருக்கதான் செய்யுது.
நான் பேசினது தப்புதான். ஆனா எனக்கும் கொஞ்சம் நேரமாகும் ஏத்துக்க" என்றவள் பேசிக்கொண்டே போக கயன்னங்கை அருகில் இருந்தவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.
அன்று கரியோக்கி பாக்ஸில் இருந்து நேராக அவிரோளை சென்று பார்த்து நடந்தது அத்தனையும் இவள் விவரித்தபொழுதுகூட அவள் இவ்வளவு பேசவில்லை. மாறாக, மௌனமாய் அத்தனையும் கேட்டுவிட்டு "ஓ" என்றதோடு சரி.
அன்றைய நாளில் கயனாவுமே அவிரோளை பதிலுக்காக அதிகம் தொந்தரவு செய்திருக்கவில்லை.
இதை ஆறப்போட்டுத் தக்க சமயத்தில் சரி செய்துவிடலாம் என்று காத்திருந்தவளுக்கு அப்படியொரு சமயம் வரவும் செயல்படுத்திவிட்டாள்.
ஆனால் அவளே அவிரோள் அழக்கூடும் என்றெல்லாம் நினைத்திருக்கவில்லை. அவள் கண்ணீரைப் பார்த்ததும் அவளுமே ஒரு கணம் கலங்கிவிட்டாள்.
ஒரு நொடி, ஒரே ஒரு நொடி இது சரியா என்ற எண்ணம் தோன்றி, தோன்றிய வேகத்திலேயே மறைந்தது.
இதுதான் சரி!
இரண்டே நிமிடங்களில் அவிரோள் பழையபடி தெளிந்து நிமிர்ந்து அமரவும் கயன்னங்கை வாசலை ஒரு முறை பார்த்துவிட்டு பேச்சைத் தொடங்கினாள்.
"ரோ.."
கயனின் குரல் சிந்தனையாய் வந்தது.
"ம்ம்?"
"இல்லை.. உன்கிட்ட சொன்னேன்ல எனக்கு எலி சதுர் விஷயத்துல கூட இருந்தான். இப்போ அவனுக்காக நான் இருக்க வேண்டிய சூழல்னு.." என்று இழுத்தவளின் பார்வை அவிரோளை தொட்டு மீண்டது.
புருவ மத்தியில் தோன்றி மறைந்த சிறு முடிச்சுடன்
"ம்ம்.. ஏன் உன் ஃப்ரெண்டுக்கு ஏதாச்சும் பிரச்சனையா?" என்று அவிரோள் கேட்க
அதில் திருப்தியடைந்தவள் அதற்குப் பிறகு சரளமாகப் பேசினாள்.
"ம்ம்.. ஆமா. எழில் காலேஜ் டைம்ல, அவன் ஜூனியர் பொண்ணு, ஆத்யா. துரத்தி துரத்தி அவனை ப்ரபோஸ் பண்ணா. இவன் முதல்ல வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு சுத்திட்டிருந்தவன் அந்த பொண்ணு ரொம்ப எக்ஸ்ட்ரீமா போகவும் பைத்தியக்காரன் என்ன செய்யனு தெரியாம ஓகே சொல்லிருக்கான்.." என்றவளின் பேச்சு அவிரோளின் பார்வையில்
"புரியுது! அவன் ஒன்னும் குழந்தை இல்லைதான். ஆனா ரொம்ப சென்சிட்டிவான ஆள். அப்போவும் அவன் ஒன்னும் லவ்வுக்கு எல்லாம் ஓகே சொல்லல. நீ என் ஃப்ரெண்டா இரு உனக்கே பிடிக்காம போயிடும்னு. அட்வைஸ் பண்ணி சமாளிக்க ட்ரை பண்ணிருக்கான். முதல்ல ஃப்ரெண்ட்ஸாவது இருக்கலாம்னு கேட்ட ஆத்யா கொஞ்சம் கொஞ்சமா அவனுக்கு அவ மட்டும்தான் ஃப்ரெண்டா இருக்கனும்னு அவனை இறுக்க ஆரம்பிச்சிருக்கா. ஏன்.. உனக்கு கயனா பெஸ்ட் ஃப்ரெண்டா இல்லை நான் பெஸ்ட் ஃப்ரெண்டானுலாம் கேட்டு சண்டை வந்திருக்கு. திடீர்னு கால் வரும், எனக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு, இங்க விழுந்துட்டேன், இல்ல இங்க யாரோ ஃபாலோ பண்றாங்கனு பதட்டமா பேசுவா, இவன் பதறியடிச்சு அந்த எரியால தெரிஞ்சவங்கள லைன்ல எடுத்தபடி ஓடிப்போய் பார்த்தா, அங்க அப்படி ஒன்னுமே இருக்காது. சும்மா, நீ எனக்காக ஓடி வந்தல்ல அப்போ இது காதல்தானேனு ஒரு டெஸ்ட். ஒரு சேட்டிஸ்ஃபேக்ஷன்.
இதையெல்லாம் தாண்டி இவன் என் பாய்ஃப்ரெண்ட் வேற யாரும் பேசக்கூடாதுன்ற அளவு காலேஜ்ல ரூமர் பரப்பிவிட, அது இவனுக்குத் தெரிய வந்தப்போ ரொம்ப ஹர்ட் ஆகிட்டான்.
முதல்ல எதையும் நம்பாம ஆத்யாகிட்டயே நேர்ல கேட்டு பார்த்திருக்கான். அவ மறுபடியும் முதல்ல இருந்து பேசவும் ரொம்ப காயப்பட்டுட்டான்.
அப்படியே கிளம்பி இங்க வந்துட்டான். மறுபடியும் அவன் காலேஜ் போனப்போ அதுக்குள்ள எப்படியோ விஷயம் கசிஞ்சு, அது பொய்னு வெளில வந்து, ஆத்யா வேற காலேஜ்க்கு ட்ரான்ஸ்ஃபராகி போயிட்டதா செய்தி வந்தது. அதுல இருந்தே காதல், ரிலேஷன்ஷிப்னாலே எழிலுக்கு கொஞ்சம் பயம், வேண்டவே வேண்டாம்னு இருந்தான்.."
கேட்டுக்கொண்டிருந்த அவி "சரியான சேடிஸ்ட்டா இருப்பா போல.. இதுக்குதான் அநியாயத்துக்கு அடுத்தவங்களுக்கு பார்க்க கூடாதுனு சொல்றது!" என்றபடி இருக்கையில் சாய
கயன்னங்கை எச்சில் விழுங்கிக்கொண்டாள்.
"ம்ம்.. அதுவும் சரிதான்"
"சரி.. இது எப்போவோ நடந்த கதைதானே? இப்போ என்ன பிரச்சனை? மறுபடியும் அந்த ஆத்யா என்ட்ரி குடுத்தாச்சா?" என்று அவி சுவாரஸ்யமாகக் கதை கேட்க
"ப்ச்.. அது இல்ல. அவன் அப்பாவும் அம்மாவும் கல்யாணம் பண்ணிக்க சொல்லி இரண்டு வருஷமாவே டார்ச்சர் பண்ணிட்டு இருக்காங்க. இவ்வளவு நாள் நல்ல வேலை அது இதுனு என்னலாமோ சொல்லி சமாளிச்சிட்டு இருந்தான். இப்போ புதுசா ஆச்சி கண்ண மூடறதுக்குள்ள மூனு முடிச்ச கட்டிடுடா கண்ணுனு ஊருல இருந்து ஒரே ஒரு ஃபோன்தான் வந்தது. மொத்தமா முடிஞ்சது!
கடந்த இரண்டு மாசமா வெறித்தனமா பொண்ணு தேடிட்டு இருக்காங்க.." எனவும்தான் அவிரோளுக்கு பிரச்சனை புரிந்தது.
"ஓ... இப்போ என்ன பண்றதா இருக்கீங்க?" என்றவள் சுவாரஸ்யமில்லாமல் கேட்க
"ம்ம்.. என்ன பண்ண? அவன் என்னடான்னா கல்யாணமானு தெறிச்சு ஓடறான். ஆன்ட்டி இந்த வருஷத்துல முடிச்சே தீருவேனு நிக்கறாங்க.. பேசாம ட்ராமா மெத்தட் ட்ரை பண்ணலாமானு இருக்கேன்.." என்றாள் யோசனையாக
"அப்படினா?" என்றிவள் புரியாமல் விழிக்க
"ப்ச் அதான் ஒப்பந்த கல்யாணம்" என்றாள் நிறுத்தி நிதானமாக
"ஏதாவது தெரிஞ்ச பொண்ண பிடிச்சு, ஒரு ஆறு மாசம் எங்கேஜ்மெண்ட்ல இருந்து கல்யாணத்தன்னைக்கு வரை மட்டும் நடிக்க வச்சுட்டு, எப்படியும் கல்யாணம் ஆனதும், இங்க இருக்க வீட்டுக்கு அனுப்பிடுவாங்க.. சோ அதுக்கடுத்து இருக்கவே இருக்கு அடுத்த ஆயிரம் சினிமா ஐடியாஸ்! அதுல எதையாவது சொல்லிட்டா போது.." என்றவள் தீவிரமாகப் பேச
அவிரோள் வயிற்றைப் பிடித்துக்கொண்டு வாய்விட்டுச் சிரித்துவிட்டாள்.
கயன்னங்கை சிரிப்பவளை முறைக்க அவளோ,"காமெடி பண்ணாத கயன்" என்று மீண்டும் சிரிக்க, கயன்னங்கையின் தீவிர முக பாவனையை கண்டு அப்படியே அவள் சிரிப்பு குறைந்து மறைந்தது
"நிஜமாதான் சொல்றியா?" இம்முறை அவி குரலில் தீவிரம்.
ஆம் எனத் தலையசைத்தவள் "வேற வழியில்லை ரோ. அதுமட்டுமில்லாம.." என்று தயங்க
"வேற என்னவோ இருக்கு.. என்ன கயன்?" என்று ஊக்கினாள்
"இந்த எலி எருமை வேற, நோ சொல்லியும் அவங்க கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணவும், ஒரு பொண்ண லவ் பண்றேனு சொல்லி தொலைச்சிருக்கான். இப்போ அவங்க அந்த பொண்ண கூட்டிட்டு வா இல்லை நான் பாக்கற பொண்ண கட்டிக்கோனு நிக்கறாங்க" என்று சொல்லச் சொல்ல அவிரோளின் சிரிப்பு அப்படியே உறைந்தது.
"உன் ஃப்ரெண்டுக்கு எனிமி வெளில இல்ல.." என்றவளும் மௌனமாய் எதையோ யோசிக்கத் தொடங்கிவிட
"அதைத்தான் நானும் சொன்னேன்" என்றவளும் ஃபோனை எடுத்துப் பார்த்துவிட்டு இருக்கையில் சரிந்தாள்.
"ஆமா.. உன் வீட்டுல? அங்கிள் ஆன்ட்டி அவன் வீட்டுல எடுத்து சொல்லமாட்டாங்களா? ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ்தானே?" என்றவளின் கேள்வியில் தலையில் கை வைத்துக்கொள்ளாத குறையாக பாவமாய் பார்த்தவள்
"நீ வேற ரோ! என் வீட்டு பெரிய மனுஷங்க நான் உண்மையா லவ் பண்ணும்போதுலாம் என்ன கண்டுக்க கூட இல்லை! இப்போ இவன்கூட வெளில போயிட்டு வரதுக்கு ஏதோ கள்ளத்தொடர்பு வச்சிருக்க ரேன்ஜுக்கு கண்ணுல விளக்கெண்ணைய விட்டுட்டு பாக்கறாங்க! பாக்கறது மட்டுமில்ல.. ஆயிரதெட்டு கேள்வி வேற!
உன் கூட சேர்த்து சந்தேகப்பட்டாக்கூட ஃபீல் பண்ண மாட்டேன்! அவன்கூட சேர்த்து சந்தேகப்படறாங்க பாரு! அதை மட்டும் மன்னிக்கவே மாட்டேன்!" என பெருமூச்செறிய,
இருக்கையில் தனக்கு அருகே கிடந்த அவள் கையை அவி தட்டிக்கொடுத்தாள்.
மெல்லிய மௌனம் அவ்வறையைச் சூழ தொடங்கியிருந்த சமயம் சன்னமான தட்டலுடன் கையில் பெரிய ஸ்நாக்ஸ் ட்ரேயுடன் எழில் உள்ளே நுழைந்தான்.
"அந்த கௌண்ட்டர்ல இருக்க அண்ணா, இன்னைக்காவது புக் பண்ண டைம் வரை இருப்பீங்களானு சந்தேகமா கேட்கறாரு.." என்றபடி வந்து அமர்ந்தான்.
ஒரு ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸை எடுத்து வாயிலிட்ட கயன்,"ம்ம்.. மூனு மணி நேரத்துக்கு புக் பண்ணிருக்கேன்ல.. அதான்" என்று சொல்ல. கேட்டிருந்த இருவருக்கும் பகீரென்றானது.
மூன்று மணி நேரமா? நீ என்ன படமா ஓட்ட போற? என்று இருவர் பார்வையும் அவளைத் தாக்க, கையில் எடுத்த அடுத்த ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸை கீழே வைத்தவள் நிமிர்ந்து அமர்ந்து முகத்தைத் தீவிரமாக்கினாள்.
"கைஸ்.. ஒரு ஐடியா" என்றவளைதான் இருவருமே பார்த்திருந்தனர்.
அவிரோளையும், எழிலையும் ஒரு பார்வை பார்த்தவள்
அவியிடம்,"உனக்கு வீட்டு சூழ்நிலை சரியில்லை" என அர்த்தமாய் பார்க்க
அவிரோளுக்கு அவள் எதைக் குறிப்பிடுகிறாள் என்பது புரிந்தாலும், அவள் பார்வையில் தெரிந்த பளபளப்பு சற்றே இரண்டு எட்டு பின்னால் வைக்கச் சொல்ல தயக்கமாக "ஆமா.." என்றாள்.
மறுபுறம் இருந்த எழிலிடம் திரும்பியவள்,"உனக்கு உடனடியா ஒரு பொண்ணு தேவை.. உன் கேர்ள் ஃப்ரெண்டா கல்யாணம்வரை நடிக்க.." என்று கேட்க
இப்பொழுது இதை ஏன் கேட்கிறாள் என்று பார்த்தவனின் தலையும் ஆமென ஒப்புதலாய் அசைந்தது.
"எனக்கு என் வீட்டுல திடீர்னு சிசிடிவியா மாறின தலைகள பழையபடி நான் டம்மி பீஸுதான்னு நம்ப வைக்கனும்.." என கைகளைக் கட்டிக்கொண்டு தாடையில் ஒற்றை வியலை வைத்துத் தட்டியவளோ
"ஒரு ஐடியா!" என்று துள்ள
மற்ற இருவரும் கயன்னங்கையின் திடீர் உற்சாகத்தில் இருக்கவா ஓடவா என்பதா போலத்தான் திகிலாக அமர்ந்திருந்தனர்.
இடப் பக்கமும் வலப் பக்கமுமாகத் திரும்பி இருவரையும் பெரிய உற்சாக சிரிப்புடன் பார்த்தவள்
"நீங்க ரெண்டு பேரும் ஏன் இந்த கல்யாணத்த பண்ணிக்க கூடாது?" என்றதுதான் தாமதம்!
இடி, மின்னல், மழையென அத்தனையும் ஒரு சேர தலையில் இறங்கியதுபோல ஸ்தம்பித்துவிட்ட இருவரின் பார்வையும் கயன்னங்கையில் இருந்து விலகி மெல்ல மெல்ல அடுத்தவரிடம் நிலைத்தது.
எதிரில் இருப்பவனும் அதே அளவு அதிர்ச்சியில் இருப்பதை உணர்ந்த அவிரோள் இரண்டே நொடிகளில் சுதாரித்துக்கொண்டு பட்டென எழுந்துவிட்டாள்.
"பைத்தியக்காரத்தனமா பேசாத கயன்!" என்றவளுக்கு அதற்கு மேல் என்ன பேசுவது என்றுகூடப் புரியவில்லை.
"நான் பைத்தியக்காரத்தனமா பேசலை ரோ! லாஜிக்கலா யோசிச்சு பாரு! யாரோ ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. அது நீயா இருந்தா, இப்போதைய உன் பிரச்சனையும் தீரும்ல? அன்ட் தெரியாத ஒருத்தர நம்பறதவிட நீன்னா எவ்வளவு பெஸ்ட்? என் பிரச்சனையும் தானா தீர்ந்திடும்! இது மூனு பேருக்குமே வின்-வின் சிட்டுவேஷன்தானே!" என்றவள் அதன் சாதகங்களை அள்ளிவிட்டுக்கொண்டே செல்ல அதில் கடுப்பான அவிரோள்
"ஃப்ரெண்ட் மேல அவ்வளவு அக்கறைன்னா நீயே கட்டிக்க வேண்டிதானே!" என்று பொரிய
"கிறுக்குத்தனமா பேசாத ரோ! அவன் ஃப்ரெண்ட்னா நீ யாரு?" என்று கயன் அழுத்தமாகச் சொல்லவும்
அவளது பார்வை எழிலைதான் உதவிக்கு நாடியது.
"என்ன நீ பேசாம இருக்க! அப்போ உனக்கு ஓகேவா?" என்றவள் அவனிடமும் பாய
அவ்வளவு நேரமும் அதிர்ச்சியில் தரையை வெறித்துக்கொண்டிருந்தவன் மெல்ல நிமிர்ந்து அவளை நோக்கினான்.
"எனக்கு கயனா சொல்றது சரியாதான் படுது" என்றதுதான் தாமதம்!
அதில் அடுத்த செட் அதிர்ச்சியை உணர்ந்தவள், அமர்ந்திருந்த இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்துவிட்டு, விடுவிடுவென அங்கிருந்து வெளியேறினாள்.
— “ Operation: கல்யாணம்” கதையிலிருந்து ஒரு பகுதி
✍️ எழுத்தாளர்: Yagnya
இந்தக் கதை முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது

Comments
Post a Comment