1
வாழ்த்துகள் வாழவந்தாள். வாழவந்தாள் நமது விற்பனை பிரிவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கலக்கிக்கொண்டிருக்கும் நம் நம்பிக்கை நட்சத்திரம்! இன்றோடு இரண்டு ஆண்டுகள் பூர்த்தி செய்கிறாள். எனக்கு வாழவந்தாளிடம் மிகவும் பிடித்தவை, வேலை மீது அவள் கொண்டிருக்கும் பக்தியும், அதில் தெரியும் நேர்த்தியுமே! இந்த இரண்டு ஆண்டுகளில், வாழவந்தாளிடம் ஒன்று கொடுத்தால் அந்த வேலை பூர்த்தியானதற்கு சமம் என்பதுபோல, கொடுக்கும் அத்தனை பொறுப்புகளையும் கர்மமே கண்ணாய் செய்து முடிக்கும் வாழவந்தாளுக்கு மீண்டும் என் மனமார்ந்த பணி ஆண்டுவிழா வாழ்த்துகள்!
என்று தன் முன் இருந்த கணினி திரையில் ஒளிர்ந்த ஸ்கைப் செய்தியைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான் மனு. அவன் பார்வை மெல்ல மேலெழும்பி தூரத்தில், அவ்வறையின் மறுபக்கம் இருந்த கண்ணாடிக் கதவுக்குப் பின்னால் அமர்ந்து எதையோ தீவிரமாக கேட்டுக்கொண்டிருந்த அந்த வாழவந்தாளிடம்தான் சென்று நின்றது.
இவ்வளவு பெரிய வாழ்த்துக்குச் சொந்தக்காரியென்றால் சட்டென்று நம்பிவிட முடியாத தோற்றம்! இத்தனை காலம் தான்தான் உடுத்துவதில் கவனமில்லாமல் சுற்றுவதாய் நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு அவளைக் கண்ட நொடி அந்த எண்ணம் மாறியிருந்தது. எப்பொழுதும் ஒரு தொள தொள டீஷர்ட்டும் பழைய ஜீன்ஸும், அல்லது சற்றே நிறம் மங்கத் தொடங்கியிருந்த குர்த்தாவும் அதே ஜீன்ஸுமாக இருப்பவளை கண்டால் அவனுக்கு ஆச்சரியம்தான். அவளது மெலிந்த தேகம் அவ்வுடையில் அவள் வயதை இன்னமும் குறைத்துக் காட்டியது.
உடைக்கேற்றபடி தான் மதிப்பே பல இடங்களில் இருக்க, இவள் என்னடாவென்றால் இப்படிச் சுற்றுகிறாளே என்ற எண்ணம் அவனுக்கு எழாமல் இல்லை, கூடவே எழுந்து அவள் எப்படி அலைந்தால் உனக்கென்ன? இதற்குதான் அவளிடம் வாங்குகிறாய்! என்ற மனசாட்சியின் குரலில் தலையைக் குலுக்கி அதைத் தவிர்த்தாலும், இதோ இப்பொழுது போல மீண்டும் அது அவ்வப்பொழுது எழுந்துவிடும்!
தான் என்று அடுத்தவரின் உடை சுதந்திரத்திற்குள் தலையிடத் துவங்கினோம் என்ற எண்ணத்தைப் புறந் தள்ளிவிட்டு மீண்டும் அவளை ஏறிட்டான். எதிரில் இருந்தவர் எதையோ பேசிக்கொண்டிருக்க, அதைவிடத் தீவிரமாகத் தலையைத் தலையை ஆட்டியபடி கேட்டுக்கொண்டிருந்தவளின் உருவம் அவனுள் மெல்லிய புன்னகையை மலரச் செய்தது.
அவளது அப்ரைஸல் மீட்டிங் போல! அம்மணி தலையை வெடுக்கு வெடுக்கென்று ஆட்டுவதைப் பார்த்தால் தலை தனியே உருண்டோடி விடும்போலயே!
அவளை நோக்கி தன் கவனமும் பார்வையும் இழுக்கப்படும் மற்றுமொரு விடயம் இது! அவளிடம் நிரந்தரமாக குடிகொண்டுவிட்ட இந்த அதீத தீவிரம்! எப்பொழுதும் காலில் வெந்நீரைக் கொட்டியது போலவே சுற்றும் வேகமும் விறுவிறுப்புத்தனமும் சுற்றி இருப்பவருக்கும் பல சமயங்களில் பிபியை ஏற்றிவிட்டு விடும்!
அப்படியென்ன அவசரமாம் இவளுக்கு! எப்போவும் கடைசி பஸ்ஸை பிடிக்க ஓடுறவ போல நிற்காம ஓட்டமா ஓடுற வேகம்!
நீ அவகிட்ட மறுபடியும் வாங்காம அடங்கமாட்ட! என்ற மனக்குரலில் சுய உணர்வு திரும்பியவன் படக்கென தலையைக் குனிந்துகொண்டான். அவள் கண்ணாடிக் கதவை தள்ளிக்கொண்டு வெளியே வரவும் இவன் தலையைக் குனிந்து கொள்ளவும் சரியாய் இருந்தது.
அவள் காதுகளில் இன்னமும் ஒலித்த வார்த்தைகள் அவள் எண்ணவோட்டங்களை ஆக்கிரமிக்க துடித்துக்கொண்டிருந்தன.
சற்று நேரத்திற்கு முன்னர் அந்த ஏஸி அறை குளிரில்..
"உன்கிட்ட நிறைனு சொல்ல ஆரம்பிச்சா சொல்லிக்கிட்டே போலாம், இந்த இரண்டு வருஷத்துல ஐம் அமேஸ்ட் பை யுவர் சின்சியாரிட்டி வாழவந்தாள்! ஒரு ஃப்ரெஷரா உள்ள வந்து இப்போ இவ்வளவு தூரம் வளர்ந்திருக்க! அதுவும் இரண்டே வருஷத்துல! மேனுஜ்மெண்ட்க்கும் உன் வர்க்ல பயங்கர திருப்தி! உன்ன இப்பவே இன்னும் சீனியர் போஸ்ட்க்கு மாத்தியிருக்க வேண்டியது, ஆனா இரண்டே வருஷத்துல ஒரேயடியா மாத்த யோசிக்கறாங்க. நான் அவங்க கூட இன்னும் பேச்சு வார்த்தை நடத்திட்டிருக்கேன். மோஸ்ட்லி அடுத்த ஃபைனான்ஷியல் இயர்ல ப்ரமோஷன் பத்தி பேசறேன். இப்போ ஃபார்மலிட்டிக்காக உன் ஏரியா ஆஃப் இம்ப்ரூவெமெண்ட்.. எனக்கு உன்கிட்ட குறைனு சொல்ல வேலை விஷயத்துல எதுவுமே இல்லை, ஆனா அஸ் எ சீனியரா ஒன்னு சொல்றேன்.. நீ இன்னும் கொஞ்சம் ஓபன் அப் ஆகனும் வாழி. டேக் திங்க்ஸ் ஸ்லோ.. ஒரு மேனேஜரா எனக்கு நீ வேலை வேலைனு அதுலயே இருக்கது ஓகே தான், ஆனா ஒரு சீனியரா அது சரியில்லைமா.. எல்லார்க்கிட்டயும் பேசு, லைஃப கொஞ்சம் லைட்டா எடுத்துக்கோ. இந்த இளமைக்காலம் பொற்காலம் போல! வேலை செய்யனும்தான், ஆனா அதை மட்டுமே செய்யனும்னு இல்லை. மத்தபடி நான் சொல்ல எதுவுமே இல்லை வாழி.. ஒன்ஸ் அகைன் கங்கராஜுலேஷன்ஸ்!" என்று கை குலுக்கியவருக்குத் தலையசைத்துவிட்டு மேசை மீதிருந்த தனது அப்ரைஸல் கடிதத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினாள் வாழவந்தாள்.
இளமை காலத்தை அனுபவிக்க வேண்டுமாம்! என்று எண்ணுகையிலேயே இதழோரம் தன்னை மீறிய சிறு ஏளன வளைவு!
டேக் எவ்ரிதிங் ஸ்லோ என்று வாய் வார்த்தையாக அடுத்தவருக்குச் சொல்லுவது சுலபம் தான்! ஆனால் நிற்கக் கூட நேரமின்றி ஓடியும் அதே குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் அவளுக்குதானே தெரியும்!
ச்சே! என்ன நீ? அவர் உன் நல்லதிற்கு தானே சொன்னார்! என்று மனசாட்சி இடித்துரைக்க, தன்னையே கடிந்தபடி விடுவிடுவென தன் நடையில் வேகத்தை கூட்டினாள்.
மனுவை கடந்து செல்கையில், குனிந்திருந்தவனின் பார்வை தன் புறம் இருக்கும் உணர்வில் அவனிடம் திரும்பாமலே உஷ்ணப் பார்வையுடன் அவள் அகன்றுவிட
'சரியான திமிரு பிடிச்சவ!' என்ற முணுமுணுப்புடன் தலையை திருப்பியவன் "ஆ!" என்ற குட்டி அலறலுடன் நெஞ்சில் கை வைத்தபடி பின் நகர்ந்தான், அவனுக்கு வெகு அருகில் காதை தீட்டிக் கொண்டு தலையை அவன் காதருகில் வைத்திருந்த அஜயைக் கண்டு!
"அய்யய்யே! ஏன்டா இப்ப கத்தற?" என்று காதில் தன் சுட்டுவிரலை நுழைத்து ஆட்டியபடி ஒற்றை கண் சுருக்கி கேட்டவனை கொலைவெறி பார்வை பார்த்தவனோ
"பிசாசே பிசாசே! ஏன்டா பிசாசு மாதிரி சத்தமில்லாம வந்து நிக்கற" என்று நெஞ்சை நீவியபடி நகர்ந்துவிட்ட சுழல் இருக்கையைக் காலால் எக்கியபடி இடத்திற்குத் திருப்பி வந்தான் மனு எனும் மதனன். அந்த அலுவலகத்தில் ஆறு மாதத்திற்கு முன் சேர்ந்தவன்.
"நேரந்தானே! புது பையன் எதையோ பாத்துட்டு தனக்கு தானே பேசறானேனு ஒரு அக்கறைல கேட்க வந்தா காதுலேயே கத்தறல நீ!" என்று இன்னமும் காதை தேய்த்து விட்டபடி கேட்டவனையே வெறித்து நோக்கியவனோ
இது ஆஃபிஸா இல்லை ப்ரைமரி ஸ்கூலானே தெரியலையே ஆண்டவா! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகமா இருக்குதுங்க! குட்டிச்சாத்தான்ஸ்! என்று இவன் மீண்டும் புலம்ப, அதில் அஜய் மறுபடியும் அவன் காதை தன் புறமாகக் காட்டியபடி நெருங்குவதைக் கண்டவனோ "ஊ" என்று சற்று உரக்கவே கத்திவிட்டான். அதில் மீண்டும்
"கிராதகா!" என்று அஜய் காதை தேய்த்துக்கொள்ள அதில் குபீரென்று சிரித்துவிட்ட மனுவின் மொத்தச் சிரிப்பும் சட்டென்று தடைப்பட்டது அவனுக்கு வெகு அருகில் தென்பட்ட ஜீன்ஸ் அணிந்த கால்களில்!
அஜய் ஸ்விட்ச் போட்டாற் போல அமைதியாகிவிட்டதிலேயே புரிந்துவிட, மனுவின் பார்வை மெல்ல மெல்ல மேலேறியது. அங்கு கைகளைக் கட்டிக்கொண்டு நின்றவளைக் கண்டவனின் விழிகளிலும் சிறு கேலி எட்டிப்பார்த்தது. அதை நொடியில் கண்டுகொண்டவளின் விழிகளில் கோபம் கூட
"ப்ரௌஷர் ரெடியா? மதியத்துக்குள்ள மெயில்ஸ் போகனும்" என்றாள் வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனச் சுற்றி வளைக்காமல் காரியத்தில் கண்ணாக.
அதானே!
"இன்னுமில்ல.. லாஸ்ட் மினிட் சேஞ்சஸ் இருக்கு கொஞ்சம். ஒரு அஞ்சு நிமிஷத்துல மெயில் பண்றேன்" என்று திரையிலேயே கவனமாக மனு சொல்லவும், அவன் பின்னந்தலையையே ஒரு நொடி வெறித்தவள் பிறகு
"சரி, சீக்கிரம் அனுப்பிடுங்க" என்று சென்றுவிட்டாள்.
அவள் அங்கிருந்து அகலும்வரை காத்திருந்தவன் போல,"ஏன்டா உனக்கு அவ மேல இவ்வளவு கடுப்பு! அதான் முடிச்சிட்டனு சொன்னல்ல.. அனுப்ப வேண்டியதுதான" என்று அஜய் மெல்ல தன் இருக்கையை மனு புறம் நகர்த்த
அதற்கு அசட்டையாகத் தோள்களைக் குலுக்கியபடி,"அவங்க மட்டும்தான் வேலை பார்க்கறாங்களாமா? நான் என்ன வெட்டியாவா இருக்கேன்? உண்மையாதான் சொன்னேன்.. அந்த ரவி லாஸ்ட் மினிட் சேஞ்சஸ் அனுப்பிருக்காரு!" என்க, மனுவையே திகிலாகப் பார்த்தவன்
"யப்பா டேய்!" என்று அப்படியே தன் இருக்கையைத் திருப்பி தன் இடத்திற்கே நகர்த்திவிட்டான்.
அஜய்க்கு சத்தியமாக இவர்கள் இருவருக்கும் இடையில் ஓடும் இந்த பனிப்போரின் ஆணிவேரும் தெரியவில்லை, இயல்பிலேயே மற்றவரிடம் அதிகம் வம்பு வளர்க்காத இருவரும் எடுத்ததற்கெல்லாம் முட்டிக்கொள்ளும் காரணமும் புரியவில்லை!
ஆறு மாதங்கள் ஆகிவிட்டன இந்த மனு இங்கு சேர்ந்து! சேர்ந்த பொழுதுகூட இவர்களிடையே இவ்வளவு தீவிரமான அலைகள் இருக்கவில்லை! ஏன் மனுவுக்கு எல்லாரையும் பற்றி இவன்தானே கதை கதையாகச் சொல்லியதே! அந்த வாழவந்தாளைப் பற்றியும் இவன்தானே சொல்லியது.. ஓ.. ஒருவேளை..
கடவுளே! ஒரு வேளை நான்தான் இந்த பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைத்துவிட்டேனோ! அய்யஹோ! என்று நாடக பாணியில் மானசீகமாக பேசிக்கொண்டிருந்தவனின் முகம் நாலா பக்கமும் போய்வர, அந்த வழியே சென்ற ரவியின் பார்வை அவனையே வெறித்து நோக்கவும், அடித்து பிடித்துக்கொண்டு தலையைத் திரைக்குள்ளேயே விட்டுக்கொண்டான்.
ரவி இடவலமாக அதிருப்தியில் தலையசைத்துவிட்டு அகன்றுவிட அஜய் மெல்லத் தயங்கி தயங்கி தலையை க்யூபிக்கலின் மேல் தூக்கிப் பார்த்தவன் ரவியைக் காணாது ஒரு நிம்மதி பெருமூச்சுடன் திரும்ப, அவனையே கேலியாக பார்த்துக்கொண்டிருந்தான் மனு.
அஜய் "என்ன?" என்று சந்தேகமாகக் கேட்க
மனுவோ தலையை உலுக்கிக் கொண்டவனாக,"இதெல்லாம் ஒரு வேலை.." என்று இழுக்கவும்
அஜய்,"நீ ஒரு இடத்துல மூனு வருஷம் முடி மேன்! அப்பறம் தான் என் வலி புரியும்! என் ஹெச் ஓ டிக்கு கூட நான் இவ்வளவு பயந்தது இல்லை தெரியுமா! ஏதோ வாடகை குடுக்காம ஹவுஸ் ஓனருக்கு டிமிக்கு குடுத்து தப்பிக்கற ஃபீல்!" என்றான் ஆயாசமாக.
அதை அப்படியே ஒதுக்கித் தள்ளிய மனு,"ஹே! நான் வீடு கேட்டிருந்தேன்ல.. இந்த சைட்லயே. ஏதாச்சும் தெரிஞ்சுதா?" என்று கேட்க
"உனக்கு உன் பிரச்சனை!" என்று அலுத்துக்கொண்ட அஜயோ
"கேட்டிருக்கேன் மனு. இங்க ஒரு மூனு கிலோமீட்டர்ல ஒன்னு இருக்குனு சொன்னான்.. டீடெய்ல்ஸ் கேட்டு சொல்றேனு சொல்லிருக்கான்" என்று மீண்டும் ஒழுங்காக இருக்கையில் எழுந்தமர
"ஓகே! தேங்க்ஸ் அஜய். இங்கேயே சீக்கிரம் கிடைச்சுட்டா நல்லது" என்றான் சிந்தனையாக
அஜயும் "எப்படிதான் அவ்வளவு தூரத்துல இருந்து டெய்லி வந்து போறியோ! நான் இன்னைக்கு மறுபடியும் கேட்டு பாக்கறேன்" என்றுவிட, அதற்குப் பிறகு இருவருமே அவரவர் வேலையில் ஆழ்ந்தனர்.
வாழி, வீட்டினுள் நுழைந்தவள் அப்படியே பையை ஒரு புறம் போட்டுவிட்டு சுவரோரம் சுருட்டி வைக்கப்பட்டிருந்த அந்த ஒற்றை மெத்தையில் தலை வைத்தபடி தரையில் சரிந்துவிட்டாள்.
அந்த மாலை ஏழு மணி, வாகன நெரிசலில் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்தது மட்டுமின்றி, பிறகு அந்த மூன்று மாடி கட்டிடத்தின் கடைசி தளத்திற்குப் படியேறியதில் வேறு மூச்சு வாங்கியது.
வேர்க்க விறுவிறுக்க அப்படியே சற்று நேரம் விழுந்து கிடப்பது அவளது தினசரி வழக்கம்!
சில நிமிடங்களை அப்படியே விட்டத்தை வெறித்தபடி கழித்தவளுக்கு ரவி சொன்ன செய்தி புரியாமலில்லை! அவளுக்கு இந்த வருடமும் பதவி உயர்வு கிடையாது! அதற்கு இரண்டு காரணங்கள்.. முதலாவது அவர் சொன்ன அவளது வருடக்கணக்கு. இரண்டாவது அவளது கல்வித் தகுதி. அவள் இளங்கலை படிப்பு மட்டுமே முடித்திருந்தாள். அதற்கு மேல் பட்டப்படிப்பு படிக்கவில்லை, வேறெந்த கோர்சும் பெரிதாகச் சொல்லுமளவு முடித்திருக்கவில்லை. அவளிடம் உழைப்பு இருந்தது. ஆனால் சான்றிதழ்கள் எதுவுமில்லை. எதாவது கோர்ஸ் சேர்ந்து அதை வாங்குமளவு தற்பொழுது அவளிடம் வசதியும் இல்லை.
ஏனென்றே தெரியாமல் தொண்டை இறுக்கமானது போலொரு உணர்வு எழுந்தது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த போராட்டம்? என்ற எண்ணம் எழுந்த நொடி உடலெல்லாம் ஒருவித கசப்பு பரவ, நொடியில் தலையை உலுக்கிக்கொண்டு எழுந்துவிட்டாள்.
பார்வை அதே அறை ஓரத்தில் இருந்த சமையல் மேடையை ஆராய்ந்தது. காலையில் செய்ததது போக இன்னமும் சாப்பாடு இருந்தது. இனி இரவுக்கு என்று தனியே எதுவும் செய்யத் தேவையில்லை என்று தோன்றிவிட அப்படியே பின்னால் நகர்ந்து சுவரில் சாய்ந்து அமர்ந்தவள் தன் அலுவலக பையில் இருந்த இன்னொரு பட்டன் மொபலை எடுத்து உயிர்ப்பித்தாள்.
அது உயிர்த்தெழுந்த மறுகணம் வரிசையாக வந்து விழுந்த அழைப்புகளின் மிச்சங்களைக் கண்டவளின் இதழ்களில் ஏளன புன்னகை.
இந்த வாழ்க்கைதான் தன்னை எப்படி விடாமல் துரத்துகிறது!
மீண்டும் அதை அணைத்து பையினுள் திணித்தவள், தனது மொபைலில் தான் வழமையாகப் பார்க்கும் பழைய படமொன்றை ஓடவிட்டு, காதுகளில் இயர்ஃபோன்களை மாட்டிக்கொண்டு மீண்டும் சுவரில் சாய்ந்துகொண்டாள்.
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர்நீச்சல்!
அட சரிதாம் போடா, தலைவிதி என்பது வெறும் கூச்சல்!
எண்ணித் துணிந்தால் இங்கு என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது
சீர்காழி கோவிந்தராஜனின் குரல் தோள் தட்ட, மெல்ல விழிகளை மூடிக்கொண்டாள் வாழி.
