2
அதிகாலை ஆறு மணி அளவில் விழிப்புத்தட்டியது வாழிக்கு. அறையினுள் பரவத் துவங்கியிருந்த மஞ்சள் ஒளியில் துயில் கலைந்தவள் கையை அப்படியே நீட்டி, அருகில் தரையில் கிடந்த மொபைலை எடுத்து நேரம் பார்த்தாள். அது ஆறரை எனவும் அடித்துப் பிடித்துக்கொண்டு எழுந்துவிட்டாள்.
நேற்றிரவு உணவை ஏழரைக்குள் முடித்துவிட்டு, அதற்குப் பிறகு எட்டு மணியில் இருந்து நள்ளிரவு இரண்டு மணி வரை சமீபமாக செய்துகொண்டிருந்த ஃப்ரீலான்ஸிங் வேலையில் அமிழ்ந்துபோனவள் உறங்கவே கிட்டத்தட்ட மூன்று மணி ஆகிப்போனது! வழமையாய் எவ்வளவு தாமதமாக உறங்கினாலும் ஆறு மணிக்கு எழுந்துவிடுபவள்தான்! ஆனால் நேற்றைய ஏமாற்றமும் சேர்ந்தோ என்னவோ மனதைச் சற்றே பலவீனப்படுத்தி பார்த்திருக்க, தன்னை மீறிய அசதியில் உறங்கிவிட்டாள்.
மின்னல் வேகத்தில் எழுந்து மெத்தையைச் சுருட்டிவிட்டு ஒரு பக்கம் சமையலில் இறங்கியவள், மறுபக்கம் அலுவலகத்திற்குத் தயாராகினாள்.
அது ஒற்றை அறையும், குளியலறையும் கொண்ட மொட்டைமாடி வீடு. வீடு என்பதை விட அறை என்பதே சரி. அதே அறையில் ஒரு ஓரமாகச் சமையல் மேடைக்கு என்று கருப்பு ஸ்லாப் பதித்திருக்க, அதில் ஒற்றை அடுப்பும், அதற்குப் பக்கத்தில் சுவரில் இருந்த இரண்டடுக்கு ஷெல்ஃபில் ஒரு தட்டு, ஒரு தம்ப்ளர், ஒரு கடாய், ஒரு குக்கர் என, அவள் ஒருத்திக்கு தேவையான பாத்திரங்களும், ப்ளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்டிருந்த சமையல் பொருட்களும் இருந்தன.
அதே அறையின் மறுபுறம் ஒரு ஆள் படுக்க கூடிய மெத்தையும், தலையணையும் போர்வையும் மடித்துச் சுருட்டியிருந்த அந்த மெத்தையின் மீது வைக்கப்பட்டிருந்தன. அந்த மெத்தை அவளது போன வருடச் செலவு. பெங்களூர் வந்த புதிதில் அந்த குளிரில் வெகுவாக கஷ்டப்பட்டு விட்டாள். ஜூன் ஜூலை மாதத்திலேயே ஸ்வெட்டரில்லாமல் தவித்தவளால் குளிர்காலத்தில் தரையில் படுக்க இயலவில்லை. ஒவ்வொரு எலும்பும் வலிக்கத் தொடங்கிவிட்டது. வேறு வழியின்றி இருந்த துணிகளைச் சுற்றிக்கொண்டு சமாளித்தவள், கடைசியாகச் சென்ற வருடம் மெத்தையொன்றை வாங்கிவிட்டாள்.
ஆனால் தூக்கம் தான் இன்னும் இன்னும் தூரம் போய்க்கொண்டிருந்தது.
அந்த மெத்தையை ஒட்டியிருந்த மூடிய சன்னல் திட்டில் நேர்த்தியாக மடித்து வைக்கப்பட்டிருந்த நான்கு செட் உடைகள் இருந்தன. இதுதான் அவ்வறையின் மொத்தமும். அவளது மொத்த சொத்தும். நினைத்தால் பத்தே நிமிடங்களில் ஒரு பையில் அத்தனையும் அடைத்துக் கொண்டு கிளம்பிவிடலாம்! அதுதான் அவளுக்கும் வேண்டும்!
வாழி அவ்வளவாக எதிலும் செலவு செய்யாதவள். அநாவசியம் என்றில்லாமல், அவள் அத்தியாவசியத்திற்கே செலவு செய்வதில்லை. மற்றவர்களில் அத்தியாவசியம் அவள் பார்வையில் அநாவசியம்!
தூக்கமின்மை கண்களில் எரிச்சலை ஏற்றியிருக்க, அதைக் கசக்கி விட்டுக்கொண்டு காலை உணவை உண்டுகொண்டிருந்தாள். எப்பாடு பட்டாலும் காலை உணவை மட்டும் உண்டு விட வேண்டும் என்பது அவளது அனுபவ பாடம்! முன்பு காலை உணவு செலவை குறைப்பதாக நினைத்துக் கூடுதல் நேரம் தூங்கிக் கழித்த நாட்களால் பின்னாளில் அவள் மருந்து மாத்திரைகளில் அதைவிட அதிகம் செலவிடும் நிலை வந்தது மட்டுமின்றி, தினசரி வேலையையும் அது பாதித்துவிட, இப்பொழுதெல்லாம் எவ்வளவு நேரம் ஆனாலும் காலையில் எதையாவது உண்டுவிட்டே அவள் வீட்டிலிருந்து வெளியேறுவது!
சாப்பிட்டு முடித்து, மதிய உணவையும் எடுத்து பையில் திணித்தவாறு, கதவைப் பூட்டி இரு முறை இழுத்துப் பார்த்துவிட்டு படியிறங்க தொடங்கினாள் அவள்.
இப்பொழுதே கிளம்பினால் தான் இந்த நெரிசலில் மூன்று கிலோமீட்டர் நடக்க இயலும்! முன்பிருந்த வீடு இதைவிட எல்லா விதத்திலும் வசதியாகத்தான் இருந்தது. இந்த வீட்டைவிடக் கொஞ்சமே கொஞ்சம் பெரியது கூட! தனி சமையல் அறைகூட இருந்தது. அதுவும் இதே போன்றதொரு மொட்டைமாடி வீடுதான். அலுவலகத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்தமையால் இவள் இப்படி அடித்து பிடித்து ஓட வேண்டிய அவசியமிருக்கவில்லை. போதாக்குறைக்கு மாலையில் அங்கேயே அருகில் ஒரு சூப்பர்மார்க்கெட்டில் பகுதி நேர வேலையும் இருக்க, காலையில் எட்டு மணி அளவில் அலுவலகம் கிளம்பும் வாழி அப்படியே அங்கிருந்து ஏழு மணிக்கு சூப்பர்மார்க்கெட் சென்றுவிட்டு, பிறகு பதினொரு மணியளவில் வீட்டிற்கு வந்து அரைமணி நேரத்தில் உறங்கிவிடுவாள்!
நான்கு ஆண்டுகளாக எல்லா விதத்திலும் வசதியாக இருந்த வீட்டை, மீண்டுமொரு கசப்பான அனுபவத்தால் இரண்டே நாளில் மாற்றிக்கொண்டு வர நேர்ந்ததை நினைக்கையில் இப்பொழுதும் அவளிதழில் இகழ்ச்சியாய் ஒரு முறுவல் படரும்.
இந்த உலகும் வாழ்ந்துவிடத் துடிப்பவர்களைத் தான் சற்று அதிகமாகவே வதைத்துப் பார்க்கிறது!
அன்றும் அப்படிதான். சில காலமாகவே யாரோ தன்னை பார்க்கும் உணர்வு வாழிக்கு! அதிலும் கடந்த சில வாரங்களாக அவ்வுணர்வு முன்னேறி அவளை யாரோ பின்தொடர்வது போலிருக்க, அதை முயன்று கண்டுகொள்ளாமல் கடந்துவிட எண்ணியவளின் கண்களில் கடந்த சில நாட்களாகத் தன்னை சூப்பர்மார்க்கெட்டில் இருந்து வீடுவரை ஒரு உருவம் தொடர்வது விழ, ஆறு மாதத்திற்கு முந்தைய வாழி வெகுவாகவே பயந்துபோனாள் என்றுதான் சொல்ல வேண்டும்.
உணர்வை ஒதுக்கித் தள்ள முடிந்தவளால் கண்பட கண்டுவிட்ட உருவத்தை அப்படி சுலபமாக ஒதுக்கிவிட இயலவில்லை!
என்னதான், எனக்கு வேறென்ன வழி இருக்கிறது? என்றெல்லாம் விரக்தியாகச் சொல்லி அதைத் தள்ளிவிட முயன்றாலும், நாளுக்கு நாள் அவ்வுருவத்திற்கும் அவளிற்குமான தூரம் குறையக் குறைய உள்ளம் மெய்யாகவே பதைபதைக்கத் தொடங்கியிருந்தது. அதிலும் அன்று ஒரு நாள் இரவில், அவள் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து கிளம்பச் சற்றே தாமதமாகிவிட, எப்பொழுதும் பதினொரு மணிவரை இருக்கும் ஜன நடமாட்டம்கூட அந்த பதினொன்று முப்பதில் மொத்தமாகக் குறைந்திருக்க, முதலில் தைரியமாகவே கிளம்பிவிட்டவளுக்கு, பாதி தூரத்தில் தனக்கு வெகு அருகில் ஒருவன் தன்னை பின்தொடரும் உணர்வில் கீழ்ப்பார்வையை பின்னால் ஓட்டினாள். அவள் அஞ்சியது போலவே முன்பிருந்ததைவிட தூரம் குறைந்து, அவளுக்கு சில அடி தொலைவில் வந்து கொண்டிருந்தான் ஒருவன்!
கைப்பையை இறுகப் பற்றியவளின் நடையில் வேகம் கூடக் கூட, பின்னால் வந்தவனின் வேகமும் கூடுவதை முதுகுத்தண்டில் விர்றென்று எழும் அச்சத்துடன் உணர்ந்தவள், கைப்பையை நெஞ்சோடு சேர்த்துத் தறிகெட்டுத் துடித்த இதயத்தை அழுத்தியபடி ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கி நடந்தாள். ஓடினாள் என்றுதான் சொல்ல வேண்டும்!
உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடுவது என்றால் என்ன என்பதை உணர்ந்த தருணம் அது!
அவசர அவசரமாக வாசல் கிரில்லை திறந்தவளுக்கு, அதுவரை இருந்த தைரியமும் நிதானமும்கூட இல்லாமல் போக, திரும்பியும் பாராமல் படிகளில் விழுந்தடித்துக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடினாள்.
கைகள் இரண்டும் பிடிமானமின்றி சாவியை நழுவவிடத் துடிக்க, அழுத்திப் பிடித்து வீட்டுக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்து, கதவைப் பூட்டும் வரையிலுமே அவளிடம் உயிரில்லை!
மின்விளக்கை போடக்கூடப் பயந்தவளாக மூச்சு வாங்க நின்றவள், மெல்லச் சாளரம் பக்கமாய் நகர்ந்தாள். எங்கு அவன் மேலே வந்துவிட்டானோ! தான் கதவைச் சரியாகப் பூட்டவில்லையோ! என்றெல்லாம் அச்சங்கள் தலை தூக்க, எதிர் சாரியில் ஒரு பெரிய மரத்திற்கு கீழே நிழலாய் தெரிந்த உருவம் அவள் வீட்டையே பார்த்துக்கொண்டிருப்பது பார்வையில் விழ, மூச்சை பிடித்துக்கொண்டு அப்படியே தரையில் அமர்ந்துவிட்டாள்!
அந்த இருளில் நிச்சயம் அவள் அங்கு நிற்பது அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை என்பதைக் கூட அவளால் அக்கணத்தில் சிந்திக்க இயலவில்லை!
அந்த இரவு முழுவதும் எழுந்து சென்று விளக்கைப் போடவோ, உடையை மாற்றவோ கூட தைரியமில்லாதவளாக அப்படியே சுவரோடு சுவராக, சன்னலுக்குக் கீழ் சுவரில் ஒட்டி அமர்ந்து வாசலையே வெறித்தபடி கழித்தாள் அவள்.
அவள் நினைத்துப் பார்க்கவே கூடாதென்று நினைக்கும் நிகழ்வுகளில் ஒன்று அந்த இரவு! எப்படிப்பட்ட கணங்கள் அவை! உயிரே போய்விடும்போல நெஞ்சு விம்மி வெடித்துவிடத் துடித்த பொழுதுகள்! எப்படியேனும் பிழைத்து வாழ்ந்துவிட வேணும் என்று வாழ்க்கை சக்கரத்தில் ஓடிக்கொண்டிருந்த சிறு பெண்ணின் வாழ்க்கை மீதான ஆசையை மொத்தமாகக் குலைத்து மனதில் அடுத்த நொடி சாத்தியமற்றதாக போய்விடுமோ என அஞ்சி நடுங்க வைத்த கொடிய நொடிகள்!
மறுநாள் காலையில் அலாரமடித்து அவளை நிதர்சனத்திற்குப் பிடித்து இழுக்கும்வரை, ஒருவித பித்து நிலையில் அவள் கழித்த நிமிடங்கள்!
அலார ஒலியில் இருக்கும் இடம் மறந்து விழித்தவளுக்கு மெல்ல மெல்ல நேற்றைய சம்பவங்கள் நினைவு வர, நிற்காமல் கசிந்து காய்ந்திருந்த கண்ணீர் தடங்களை அழுந்த துடைத்தபடி எழுந்தவள் ஒரு முடிவெடுத்தவளாக அலுவலகத்திற்கு கிளம்பினாள். அது முடிந்தளவு சீக்கிரமாக அவ்விடத்தை விட்டுச் சென்றுவிட வேண்டும்! அதற்கு இப்படி உட்கார்ந்து அழுதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை! என்று தோன்றிவிட, எழுந்து அலுவலகத்திற்குக் கிளம்பினாள்.
அன்றுதான் அவள் முதன் முதலாக அந்த மதனனைச் சந்தித்ததும்!
ஆம், அன்று நேராகத் தான் வேலை பார்க்கும் சூப்பர்மார்க்கெட்டிற்கு சென்றவள், அன்றிலிருந்து வேலைக்கு வர முடியாது என்ற தகவலைச் சொல்லிவிட்டு, அதை ஒப்புக்கொள்ளாத சூப்பர் வைஸரிடம் மட்டும் தனியே அழைத்து நடந்ததை முழுதாக சொல்லாமல் ஓரளவு கோடிட்டுக் காட்டவும், அதற்கு மேல் அவருமே அவளை வற்புறுத்தவில்லை.
அவள் யாரிடம் இருந்தும் உதவியோ, பரிவோ எதிர்பார்க்கவில்லைதான். அதனாலையே அவள் யாரிடமும் அதைப்பற்றி சொல்லக்கூடவில்லை. இருந்தும் அவளாக வாய்விட்டு இப்படி நடந்தது என்று சொல்லியும் அவர் ஓ என்றதோடு அவளது முடிவை ஒப்புக்கொண்டது லேசாக வலிக்கத் தான் செய்தது.
மீண்டும் தான் இவ்வுலகில் எவ்வளவு தனியாக நின்றுகொண்டிருக்கிறோம் என்ற நிதர்சனம் முகத்தில் அறைவது போலிருக்க, ஒரு புறம் அச்சமென்றால் மறுபுறம் இவ்வளவுதானா என் உயிருக்கான மதிப்பு என்ற எண்ணமெழ, துடித்த உதடுகளை இறுக்கமாய் கடித்தபடி அலுவலகத்தை நோக்கி நடந்தாள். மனம் எத்தனை குழப்பத்தில் இருந்தாலும் உழைத்து பழகியிருந்த உடல், தானாகவே அடுத்த இடத்திற்கு அவளை அழைத்துச் சென்றுவிட்டது.
நேற்று விழுந்து வாரியதில் இன்னமும் ஆங்காங்கே சிராய்த்திருந்த காயங்களினால் உண்டான எரிச்சலும், மன பயமும், கீழே விழுந்ததில் உடல் வலியுமா அடித்து போட்டாற் போல் பாரமான உடலை பிடித்து நிறுத்தியபடி நிமிர்ந்து பார்த்தாள். அலுவலகத்திற்கு எதிர் பக்கம் நின்றிருந்தாள். இனி இந்த வாகன நெரிசலில் இருவழிச் சாலையைக் கடந்து செல்ல வேண்டும்.
எப்பொழுதும் கவனமாகச் சாலையைக் கடப்பவள்தான். வலது பக்கமிருந்து வந்த வாகனங்களை ஒரு முறை பார்த்துவிட்டு கடக்கத் தொடங்கியவளுக்கு என்ன தோன்றியதோ, பாதி தூரம் வந்தவள் நடு சாலையில் அப்படியே நின்றுவிட்டாள்!
அவளுக்கு அதற்கு மேல் முன்னேறவும் தோன்றாமல் பின்னால் வரும் எண்ணமும் இல்லாதவள் போல அப்படியே தலையை குனிந்தபடி நின்றுவிட, ஏனோ உடல் தானாகவே எதையோ எதிர்பார்த்து விரைக்கத் தொடங்கிய சமயம். பலத்த ஹாரன் சத்தங்களும், விர் விர்ரென வாகனங்கள் கடந்த ஓசையும் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி எங்கோ கிணற்றுக்குள் இருந்து கேட்பது போலிருக்க, பார்வை தன் கால் கட்டை விரல்களையே வெறித்தபடி பலத்த காற்று தன்மேல் பட்டு விலகி எங்கோ சென்று கொண்டிருந்த சமயம்..
தூக்கத்தில் எங்கோ மாபெரும் உயரத்தில் இருந்து விழுந்துகொண்டிருந்தவளைச் சட்டெனக் கைப்பிடித்துத் தூக்கிவிட்டது போல, யாரோ திடீரென அவள் தோள் பற்றி அணைத்தபடி சாலையைக் கடந்து கொண்டு சென்றனர். நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு அவள் உணரும் ஒரு மனித ஸ்பரிசம்!
அத்தனை நேரம் மரத்துவிட்டிருந்த செல்கள் அணைத்தும் விழித்தெழுந்த நொடி, நிதர்சனம் உணர்ந்தவள் ஷண வேகத்தில் அவனிடம் இருந்து விலகிக்கொண்டாள்.
அவள் விலகிய வேகத்தில் அவன் அதிர்ந்து நிமிரும் முன்னர், நொடியில் அவன் முகம் பார்த்து குனிந்தவள் தன்னிச்சையாக எழுந்த ஒரு "தேங்க்ஸை" உதிர்த்துவிட்டு உள்ளே ஓடிவிட்டாள். எதில் இருந்து ஓடுகிறோம்? உதவியவனிடம் இருந்தா? இல்லை அவன் உதவ நேர்ந்த சூழலில் இருந்தா?
அவளறியாள்! ஆனால் அவனையே மீண்டும் பார்க்க நேர்ந்தபொழுது அவளது மொத்த உணர்வுகளும், அவன் மீதுதான் கோப உருவில் திரும்பின.
