🌿 Featured Story

அன்பில் அவன் அலாதி

கோடைக்கால நினைவுகளின் கதை.

📖 Read Story

🎧 Audiobooks

Listen to our stories while travelling, resting or dreaming.

Enter Our Audio Story World

Romance, thrillers, healing stories & emotional journeys, now in audio form.

🌿 Fresh Updates

New chapters, articles, announcements & story updates.

வாழவந்தாள் - 6

✍️ எழுதியவர் Yagnya

 6


மனுவுடன் இரவு உணவை வெளியில் முடித்துக்கொண்டு அவனது பொருட்களை பெட்டி கட்டுவதற்கென்று இரவு பத்தரை மணி வரை அவன் வீட்டில் இருந்துவிட்டு அதற்கு மேல் கிளம்பியவன், தன் அறையினுள் நுழைந்த மறுநொடி அசதியில் அப்படியே படுக்கையில் விழுந்ததுதான் தெரியும்! மீண்டும் அஜய்க்கு விழிப்புத்தட்டுகையில் கீழ்வானம் வெளுக்கத் தொடங்கியிருந்தது. 


மெல்ல மெல்ல மஞ்சளும் நீலமுமாய் மாறிக்கொண்டிருந்த வானின், கதகதப்பான கதிரொளியில் கண்களை கசக்கிக்கொண்டு அவன் அறை சாளரம் வழி வெளியே பார்த்தவனின் செவி தீண்டியது அந்த அலாரம் இசை.


'பூங்கதவே தாழ் திறவாய்' என்று அவ்வறை நிறைத்த பாடல் வரிகளில் அவன் இதழ் நிறைத்தது சிறு புன்னகை, அவள் நினைப்பில்!


அவனது ஸ்வாதி நினைவில்! ஸ்வாதி.. தொண்ணூறுகளின் கடைசியில் பிறந்தவனுக்கு, அவன் படங்களில் மட்டுமே கண்டிருந்த எண்பதுகளின் எழிலை உணர்த்தும், ஈராயிர குளவியவள்! 


பழைய படங்களை விரும்பி பார்ப்பதாலேயோ என்னவோ, அவளது நடை உடை பாவனைகள் நவீனமாக இருந்தாலும் எண்பதுகளின் சாயல் தென்படும்! 


பழைய பட்டுப் பாவாடையும், அவள் அண்ணனுடையே பழைய காலர் வைத்த டீஷர்ட்டும், மஞ்சள் ரிப்பன் கட்டிய இரட்டை ஜடையுமாக அழுத்தமாக தன் முன் நின்றிருந்த குட்டிப் பெண்ணின் நினைவு திடுமென எழ, தன்னையறியாது முகிழ்த்த சிறு சிரிப்புடன் தலையசைத்துக்கொண்டவன், சோம்பல் முறித்தான்.


அவள் மட்டுமா அப்பொழுது குட்டிப் பெண்? அவனும்தானே! இப்பொழுது நினைத்தால் சிரிப்புதான் வருகிறது! 


அந்த செம்பருத்திக்காரி நினைவில்! 


உடன் படிக்கும் ஆண்பிள்ளைகளிடம் நின்று இரண்டு வார்த்தை பேசுவதையே கொலை குற்றமாக பாவிக்கும் வீட்டில் பிறந்தவள் தான், முதல் நாள் கோச்சிங் சென்டர் கிளம்பிக் கொண்டிருந்தவனின் முன் திடுமென வந்து நின்று "நீ வேறு யாரையும் காதலிக்க கூடாது" என்றுவிட்டு ஓடியது. 


சீசனுக்கு சாமியாராக எதிலுமே நிலைகொள்ளாது சுற்றிக்கொண்டிருந்தவனை எட்டு வருடங்களாக ஸ்வாதி ஸ்வாதி ஸ்வாதி என ஸ்வாதி நாமம் பாட வைத்தவள்! 


கண்ணை கசக்கிக்கொண்டு ஒலித்த மொபைல் அலாரத்தை அணைத்தவனின் விழிப் பார்வையில் விழுந்தது ஸ்வாதியின் குறுஞ்செய்தி.


'எப்படியும் நைட் லேட்டா வந்திருப்ப, ஸோ நாம அடுத்த வாரமே மீட் பண்ணுவோம்' என்ற தகவலும் அதை தொடர்ந்து காலையில் வந்து விழுந்திருந்த காலை வணக்கத்தையும் சிறு புன்னகை பூக்க பார்த்திருந்தவனின் புருவத்தில் மெல்லிய சுருக்கம், மனுவின் நினைவில். 


இவனுக்கு என்னதான் பிரச்சினை? நேற்று மாலைவரை நன்றாகதானே இருந்தான்? அதிலும் அந்த வாழவந்தாளை கடுப்பேற்ற வேறு செய்தானே! 


பாவம்.. அவளே எந்நேரமும் எதிலிருந்தோ ஓடுவது போல் ஓடிக்கொண்டிருப்பவள்.. 


மனுவிடம் தொடங்கியவனது எண்ணங்கள் தன்னைப்போல வாழவந்தாளிடம் வந்து நின்று கனிந்தது. என்னதான் அவளிடம் நேரில் பேசுவது இல்லை என்றாலும் அஜய்க்கு வாழி மேல் சிறு இளக்கம் உண்டு. அவள் வயதுடைய அவனது தம்பி ஊரில் இன்னமும் சிறு பிள்ளைத்தனத்துடன் சுற்றிக்கொண்டிருக்க இங்கு அதே வயதுடைய ஒருத்தி இப்படி இவ்வளவு பொறுப்பும் நிமிர்வுமாய், சிறிதளவும் சிறுபிள்ளைத்தனமின்றி இருக்கிறாளே என்று முன்பு ஆச்சரியம்கொண்ட காலம் சென்று இப்பொழுதெல்லாம் சற்று பாவமாய் தோன்ற தொடங்கியிருந்தது. 


அந்த அலுவலகமே அவனிடம் அஜய், அஜய் ப்ரோ, டூட், அண்ணா என உறவாடும்பொழுது, இவன் பக்கம் கூட திரும்பாதவள் அவளொருத்தியே! 


அவனிடம் மட்டுமல்ல அவள் யாரிடமும் நட்பு பாராட்டவும் இல்லை. மற்றவர்களாக வந்தாலும் அதை பாராட்டவுமில்லை. அவளது சுபாவம் ஒரு புறமெனில், மேனேஜ்மெண்ட்டில் இருந்து அடிக்கடி வரும் அவளுக்கான புகழுரையே மற்றவரை ஒதுங்கி நிற்க வைத்திருந்தது. 


அத்தனை பிம்பத்தையும் உடைத்துக்கொண்டு அவள் முட்டிக்கொள்வது மனுவுடன்தான்! அஜய்க்கு அதுவே பயங்கர ஆச்சரியம் தான்! 


யாரிடமும் எந்தவித ஒட்டுதலும் வைத்துக்கொள்ளாத வாழி மனுவை முறைப்பதா இல்லை மற்றவரிடம் சகஜமாக பேசினாலும் ஒரு அளவிற்கு உள்ளயே நிற்கும் மனு வாழியை வம்பிழுப்பதே தன் தலையாய கடமை எனும் ரீதியில் நடந்துகொள்வதா என்று புரியவில்லை! ஆனால் அஜய்க்கு அவர்களது அந்த டாம் அண்ட் ஜெர்ரி ஆட்டம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது என்னவோ உண்மை! 


அதே நினைவில் மனுவை அழைத்தான். 


"இன்னைக்கு எத்தனை மணிக்கு வர?" 


"ஹலோ.. அஜூ" என்று தூக்க கலக்கத்தில் வந்த குரலே அப்பக்கம் இருப்பவனின் நிலையை சொல்லிவிட


"மொதல்ல அஜய் ப்ரோ அஜய் ஆச்சு, அஜய் மச்சியாச்சு இப்போ மச்சி அஜுவாயாச்சா? வயசுக்காவது மரியாதை குடுக்கறியாடா நீ!" என்று அஜய் கடுப்பாக, அதற்கு மறுபுறம் இருந்து பதில் வராமல் போகவும் சந்தேகத்தில் ஊன்றி கவனித்தவனுக்கு மெல்லிய குறட்டை சத்தமே பதிலாகிட, கடுப்பும் சிரிப்புமாக சேர்ந்தெழும்பியது அஜயிடம்!


சின்ன பசங்க சகவாசம்ரது சரியாதான இருக்கு! என்று அலுத்தவன், அந்த அலுப்புக்கு நேரெதிராய் அழைப்பை துண்டித்துவிட்டு மீண்டும் அழைக்க, இங்கு காதருகில் மொபைலை வைத்துவிட்டு உறங்கியிருந்த மனுவோ செவிப்பறையில் வந்து அறைந்த சத்தத்தில் அடித்துப் பிடித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தான். 


"ஹ.. ஹலோ! ஹலோ அஜய்.. மச்சி?" என்றவன் தூக்கமும் பதட்டமுமாய் பதறியதில் வெற்றிக்கண்டுவிட்ட சிரிப்பை அடக்கியவனோ 


இது.. இது நல்ல பிள்ளைக்கு அழகு!


"என்ன சார் ஒருவழியா துயில் களைஞ்சாச்சா?" என்று நக்கலாய் கேட்க 


"உனக்கு எப்படி தெரியும்?" என்று அப்பாவியாய் கேட்டு வைத்தவனுக்கு நொடியில் உரைத்தது! 


"நைட் பேக் பண்ணிட்டு தூங்க லேட்டாகிடுச்சா.. அதான்.." என்று மனு அப்பட்டமாய் அசடுவழிய அவனை அதற்கு மேல் ஓட்ட மனமில்லாதவனோ


"இன்னைக்கு எத்தனை மணிக்கு வர ஆஃபிஸ்க்கு?" என்றான் 


இப்பொழுது கண்களை நன்றாக கசக்கிக்கொண்டு படுக்கையில் நிமிர்ந்தமர்ந்துவிட்ட மனு சோம்பல் முறித்தவாறே


"தெரியல மச்சி, மார்னிங் ஹாஃப் லீவ் போட்டு ஷிஃப்டிங் முடிச்சிடலாமானு பாக்கறேன்" என்று சர்வ சாதாரணமாக சொல்ல இங்கு அதிர்ந்ததென்னவோ அஜய்தான்!


"எது இப்ப டிஸைட் பண்ணிட்டு இன்னைக்கு காலைலயே ஷிஃப்ட் பண்ண போறியா? விளையாடுறியா நீ? அதுக்கு டெம்போ ஏற்பாடு பண்ணனும் நல்ல நேரம் பார்க்கனும், அது மட்டுமில்லாம ஷிஃப்டிங் என்ன பாதி நாள் வேலையா? அதுவும் ஒருத்தனே செஞ்சு முடிக்க?" என்று என்னவோ இவன் வீட்டை மாற்றுவது போல பதற 


"ஈஸி மச்சி! டெம்போக்கு ஆன்லைன்ல நம்பர் பார்த்து வைச்சுருக்கேன், இப்போ புக் பண்ணாலும் இரண்டு மணி நேரத்துல வந்துடுவாங்க, எப்படியும் கீ நம்மக்கிட்ட தானே இருக்கு? நாம வீட்டுக்கு வர நேரமே நல்ல நேரம் தானே? அதுக்கு எதுக்கு தனியா பார்த்துக்கிட்டு?" என்று மனு நிதானமாக சொல்ல அஜய்க்குதான் அதில் திருப்தியில்லாமல் போனது.


"ப்ச்.. சும்மா இரு மனு! அது நீ குடியிருக்க போற வீடு! நல்ல விதமா நேரம் பார்த்து குடிப்போகனும்.. உனக்கு நம்பிக்கை இல்லைன்றதுக்காக இதுல விளையாடாத!" என்று நொடியில் பெரியவனாகி அதட்டிவிட்டு எதையோ தேடுவது அந்த இடைப்பட்ட அமைதி உணர்த்த, அஜய்யின் அதட்டலில் உதித்த மெல்லியச் சிரிப்புடன் அவனை மறுத்து பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்தான் மனு. 


இவனுக்கு உண்மையாகவே ஒரு அண்ணன் இருந்திருந்தால் இப்படிதான் இருந்திருப்பானோ?


மனுவுக்கு மெய்யாகவே இதில் எல்லாம் நம்பிக்கை இல்லைதான். ஆனால் அதை நம்பும் ஒருத்தன் தன் மீதான அக்கறையில் பேசவும் அதை மறுத்துப் பேசவும் அவனிடம் வேறு காரணங்கள் இல்லை. அந்த அதட்டலும் உரிமையும்கூட ஒரு விதத்தில் பிடிக்க வேறு செய்தது. ஒற்றைப் பிள்ளையாய் வளர்ந்த அவனிடம் யாரும் இவ்வளவு உரிமையெல்லாம் எடுத்துக்கொண்டதில்லை. நண்பர்கள் என்று பெரிதாக ஏற்படுத்திக்கொண்டிராததால் அவ்விதத்திலும் அவன் இதுபோன்ற உரிமைகளையும் கவனிப்புகளையும் உணர்ந்ததில்லை. 


சில நொடிகள் அமைதியில் கழிந்திருக்க 


"நல்ல வேளை! இன்னைக்கு பத்து மணிக்கு மேல நல்ல நேரம்தான். பேசாம முழு நாளும் லீவ் சொல்லிடு, எப்படியும் ஷிஃப்ட் பண்ணி கொண்டு வந்துட்டு அப்படியே போட்டுட்டு கிளம்ப முடியாது. நீ டெம்போக்கு என்ன சொல்றாங்கனு பாரு, இங்க எனக்கு தெரிஞ்ச ஒரு அண்ணா இருக்காங்க, அது செட்டாகலன்னா அவர்கிட்ட சொல்லிட்டா போதும், ஆளும் அனுப்பிடுவாரு. நீ கிளம்பி ரெடியாயிரு, ஒரு அரைமணி நேரத்துல அங்க இருப்பேன், சாப்பாடு வெளில பாத்துக்கலாம்" என்றவன் பேச்சினூடே எழுந்து கிளம்ப தொடங்கிவிட்டான் என்பது புறச் சத்தத்திலேயே புரிந்துவிட


"மச்சி நீ இதுக்காக லீவ்லாம் போட வேணாம்.." என்று தன்னியல்பு தயக்கம் தலைத்தூக்க, தயங்கினான் மனு. ஏற்கெனவே அடுத்த மாதம் விடுப்பு எடுக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தவனை தன் வேலையில் இழுப்பதா.. என்ற பழைய தயக்கங்கள் எட்டிப் பார்க்க துடிக்க


"ஆமா அப்படியே அந்த ஆர் ஆர் க்ளோப் என் தலைலதானே சுத்துது! சும்மா இருடா நீ வேற!" என்றவன் வைத்துவிட, எழுந்த தயக்கங்கள் அவனது அனாயச தொனியில் பனிப்படலமாய் மறைந்துவிட்டிருந்தது. 


மெல்லிய முறுவலொன்று இதழில் தவழ 


"மை பிங்க் ஹௌஸ்! இது நம்ம டே வன்!" என்றபடி எழுந்து கிளம்ப தயாரானான். 



அதிகாலை புலரத் துவங்கியிருந்த அதே பொழுதில் இங்கு மற்றொரு வீட்டில்..


இன்னமும் துயிலில் ஆழ்ந்திருந்த வாழியின் செவிப்பறையில் வந்து மோதியது அக்குரல்!


கொடூரமாய் ஒலித்த அவளது பெயரைத் தொடர்ந்து படபடவென கதவு தட்டப்பட்டதில் உடல் உதற எழுந்தவளுக்கு சில கணங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை! 


அவள் மூளை செயல்பாட்டை இழந்திருக்க, அது விழித்துக்கொள்ள கூட அவகாசம் தராமல் தொடர்ந்து உடைந்துவிழும் அளவு தட்டப்படும் கதவையே திகிலாகப் பார்த்தவள், பிரஞ்னையின்றி எழுந்து, மெல்லெட்டுக்களுடன் கதவருகே சென்றாள். 


கண்ணுக்கு முன் அதிரும் கதவில் நடுங்கிய கையை பதித்து தாழ் நீக்கிய மறு நொடி கதவுக்கு மறுபுறம் நின்றிருந்த உருவத்தில் இவள் உயிர் உருவிய உணர்வென்றால், அவ்வுருவத்திற்கு பின்னால் காக்கிச் சீருடையில் நின்றிருந்த காவலதிகாரியின் தோற்றத்தில் முதலில் எழ துடித்த நிம்மதி காதில் விழுந்த செய்தியில் சில்லு சில்லாய் சிதறியது!


"புடிங்க சார்! ஊரை விட்டு ஓடி வந்தவளுக்குலாம் என்ன மரியாதைங்கறேன்!" என்றதை தொடர்ந்து வந்து விழ தொடங்கிய கெட்ட வார்த்தைகளையும் அவப் பேச்சுக்களையும் வெறித்து நோக்கியபடி நின்றிருந்தவளின் உடலில் இருந்த ஆவி போயே விட்டதோ? இப்படி உடலெங்கும் சில்லென்று பரவி ஏதோ பறப்பது போல இருக்கிறதே! 


"என்னம்மா! இவர் சொல்றது உண்மையா?" அந்த காக்கி சட்டைக்காரரின் குரலில் கேள்வி தன்னிடம் தான் என்பது புரிந்தாலும் அதற்கு பதில் தான் சொல்ல வேண்டும் என்பது உரைத்தாலும் பிரம்மை பிடித்தவளாய் அவள் நிற்க 


"இவக்கிட்டலாம் என்ன சார் பேச்சு?" என்றவாறே அவ்வுருவம் ஒற்றை காலை வீட்டினுள் வைத்து இவள் கைப்பற்றி இழுக்கவும், பேச்சு மூச்சற்று நின்றவள் பேரோசையுடன் எழுந்தமர்ந்தாள்!


உடல் முழுதும் வேர்வையில் குளித்திருக்க, கனவில் உணர்ந்த குளிர் மட்டும் இன்னமும் மேனியில் மீந்திருக்க, அமர்ந்திருந்தவளின் இதயம் வெளியில் வந்து விழுந்துவிடும் அளவு துடித்தது. 


மூச்சுக்கு ஏங்கியவள், நெஞ்சில் கை வைத்து நீவியபடி அருகில், தலைமாட்டில் இருந்த நீர் பாட்டிலை எடுக்க, அதுவோ நடுங்கிய கைகளில் தடுமாறியது. பாட்டில் மூடி ஒரு திசையில் சென்று விழ மடமடவென நீரை வாயில் சரித்தவளுக்கு மெல்ல மெல்ல நிதர்சனம் உரைத்தது.

கனவு! கனவு! எல்லாம் கனவு! 

ச்சே! என்றாகிவிட வரத்துடித்த கண்ணீரை வீம்பாய் விழுங்கியபடி அமர்ந்திருந்தவளின் தேகம் மீண்டுமொரு முறை உதறியது, கதவு தட்டப்படும் சத்தத்தில்!

— “வாழவந்தாள்” கதையிலிருந்து ஒரு பகுதி  
✍️ எழுத்தாளர்: Yagnya 
இந்த படைப்பு எழுத்தாளரின் அறிவுசார் சொத்து.

முந்தைய அத்தியாயம்

📖 இந்த தொடரின் அத்தியாயங்கள்