5
இயல்பு என்றால் என்ன? ஆவி தீரும்வரை மாறும் மனத்தின் இயல்பென்பது எந்தப் பகுதியில், நீட்டிக்கும் அல்லது நீட்டித்த ஒரு குறிப்பிட்ட குணாதிசயங்களாக இருக்கக் கூடும்? மெல்ல மெல்ல உள்ளிழுத்துக்கொள்ளும் அனுபவ கருஞ்சுழல்களில் நீந்தி மறுபக்கத்தை அடையும் மனங்களின் பிழைத்தலுக்கான முயற்சிதான் மாற்றமென்கையில் மனங்களுக்கும் ஆத்மாக்களுக்கும் பெயரிட்டு அடைத்துவிட இயலுமா?
மதனன் நிறையவே மாறியிருந்தான். அதிலும் இந்த கடந்த ஆறு மாதங்களில் அதிகமாகவே அவன் மனம் மாற்றம் கண்டிருந்ததுதான்! முதன் முதலாக வெளிப்பட்ட உணர்வொன்றின் நீட்சியாக விரிவடைந்துவிட்ட எல்லைகளின் நீளங்களை அவன் இன்றளவும் அளந்து பார்க்கவில்லைதான்! அதனால்தானோ என்னவோ இப்பொழுது வெகு அதிகமாகவே அடிபட்டு போனான்!
தன்னையறியாமலே தான் கடந்துவிட்ட எல்லையின் தூரங்கள் அவனைத் துரத்தின.
அவன் முதன் முதலாக வாழவந்தாளைப் பார்த்த நாள் நினைவிலாடியது.
நட்ட நடு சாலையில், தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நின்றுகொண்டே தூங்கிவிட்டவள் போல, பெரும் தவமொன்றின் இடையில் இருப்பவள் போல அசையாமல் நின்றவளின் தோற்றம் கலங்களாகக் கண் முன் வந்து சென்றது.
ஏனென்று தெரியாவிடினும் அக்கணம் அவளைப் பார்த்தவனுக்கு அரவணைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே மேலெழும்பிட, அதைச் செயலாற்றவும் செய்தான். தன் கைகளுக்குள் விறைத்திருந்தவளின் தேகம் மெல்ல மெல்ல இளகியதும் பின்பு அது பதட்டம் மிகுந்த ஒரு ஒற்றை அவசர 'சாரி அண்ட் தேங்க்ஸ்' உடன் ஓடி மறைந்ததும்கூட ஏதோ நேற்று நடந்தது போன்ற மாயை!
உனக்கு பரவாயில்லையா? ஏதேனும் பிரச்சினையா? சற்று நேரம் உட்கார்ந்து கொள்கிறாயா? உனக்கு ஏதேனும் வேண்டுமா? என்று அவனிடம் கேள்விகள் இருந்தும் அதை அந்தச் சாலையோரத்திலேயே கைவிட்டுதான் கட்டிடத்திற்குள் நுழைந்தான்.
அவளது சங்கடம் அவன் மன சங்கடங்களுக்கு தற்காலிகமாக விடை கொடுத்திருந்தது!
அவன் மனத்தை ஏதோவொரு விதத்தில் அந்த குட்டிப் பெண் பாதித்திருந்தாள்!
அதை அவளையே மீண்டும் மின்தூக்கியில் கண்டதும் எழுந்த நிம்மதியில் கண்டுகொண்ட தருணம்கூட இப்பொழுது போல் தோன்றியது.
அன்று...
முதன் முதலாக வாழவந்தாளை அவன் சந்தித்த நாள்!
முழு நாள் விடுப்பெடுத்திருந்தவன் காலையில் ஒரு கல்யாணத்தில் கலந்துகொண்ட கையோடு, மதிய வேளையில் நேர்காணலுக்கு வந்திருந்தான்.
கையில் இருந்த கடிகாரத்தைத் திருப்பி பார்த்துவிட்டு மீண்டும் பார்வையை எதிரில் இருந்த கட்டிடத்தில் பதித்தான்.
கட்டிட வாசலிலேயே சென்று இறங்கியிருக்கலாம்தான், ஆனால் இங்கு யூடர்ன் எடுக்க இன்னும் சில தூரம் சென்று வர வேண்டும். அதுவும் இந்த வாகன நெரிசலில் யூடர்ன் எடுத்து வருவதற்குள் அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த நேரமே கடந்துவிடக் கூடும்! இப்பொழுது இங்கேயே இறங்கிவிட்டதால் இன்னும் சில நிமிடங்கள் இருக்க, நிதானமாகச் சாலையைக் கடப்பதற்காக நின்றிருந்தவனைக் கலைத்தாள் அவள்!
பரபரப்பான சாலையில் பாதி தூரம் கடந்தவள் அப்படியே நடுரோட்டில் நின்றுவிட்டாள்! அவளை சில நிமிடங்களுக்கு முன் அவன் அருகில் பார்த்த நினைவு அவனுக்கு.
என்ன இவள்! இப்படி நடுரோட்டில் நின்று உறங்குகிறாள் என்றுதான் தோன்றும் அவளை அந்நொடி பார்க்கும் எவருக்குமே! தலையைக் கவிழ்த்தபடி நட்ட நடு சாலையில் நின்றுவிட்டவளைக் கண்டவன் நொடியில் சுதாரித்தவனாக விடுவிடுவென அவளை நெருங்கி, ஒரு கையால் தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டு, மறு கையால் வாகனங்களை பொறுமை காக்குமாறு காட்டியபடி மறுபுறத்திற்கு அழைத்துச் சென்றிருந்தான்.
கட்டிட வாசலுக்கு வந்ததும் வராததுமாக, அவசர அவசரமாகக் குனிந்த தலை நிமிராமல் "சா.. சாரி! அண்ட் தேங்க்ஸ்!" என்ற வார்த்தைகளை மட்டும் உதிர்த்துவிட்டு உள்ளே ஓடிவிட்டாள் அவள். அவளது உடல் மொழியே அவளது சங்கடத்தைக் காட்ட வெறும் தலையசைப்போடு அதை ஏற்றவனும் உள்ளே நுழைந்தான்.
எந்த தளம் என்று செக்யூரிட்டியிடம் விசாரித்துவிட்டு அவன் வரவும் லிஃப்ட் கதவு திறக்கவும் சரியாக இருக்க, எங்குச் சென்றுவிடுமோ என்று வேக எட்டுகளுடன் ஓடிவந்தவன், மூட தயாரான கதவில் கை வைத்துத் தடுத்தபடி மூச்சு வாங்க, அவன் பார்வையில் மீண்டும் அவள்!
ஆனால் இம்முறை அவளது முகத்தில் முறைப்பு ஏறத் துவங்கியிருந்தது.
அவசர அவசரமாக உள்ளே வந்தவன் பட்டனைத் தட்டிவிட்டு நின்றுகொண்டான்.
அது சற்றே பெரிய லிஃப்ட்தான் அதிலும் இரண்டே பேர்தான் இருக்க இருவருக்குமே தேவையான இடம் இருக்கத்தான் செய்தது. அப்படியிருக்கையில் இவள் ஏன் ஏதோ குற்றவாளியைப் பார்ப்பது போலப் பார்க்கிறாள்? என்ற சந்தேகத்தில் புருவ மத்தியில் முடிச்சு விழ, அவனுக்கோ தீர்ந்தே தீர வேண்டும் என்ற அவா!
கேட்க அத்தனை கேள்விகள் இருந்தும் மெல்லத் தொண்டையை கனைத்தபடி,"நீங்க இங்கதான் வேலை பாக்கறீங்களா?" என்றான் சாதாரணமாக காட்டி. அவளிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் மட்டும் பேரலையாக எழும்பிய தருணம்!
அதற்கு அவன் ஏதோ கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டுவிட்டது போலப் பார்த்தவள் ஒரு அழுத்தமான "ம்ம்" உடன் தலையை திருப்பி கொண்டாள்.
அதில் சொத்தென்று ஆகிவிட, பார்த்துமா பார்த்து, கழுத்து சுளுக்கிக்க போகுது! ஒரு மரியாதைக்கு கேட்டா ரொம்பதான்! என்றவன் திரும்பிவிட்டான், அத்தோடு விடாமல் அடுத்த தளத்திலேயே லிஃப்டை நிறுத்தி அவள் இறங்கவும் அவனுக்கு சுருக்கென்று கோபம் வந்துவிட்டது.
ஆவல், பரிவென அத்தனையும் நொடியில் கரைந்துவிட்ட உணர்வு! அவமதிக்கப்பட்ட உணர்வு!
என்ன பார்த்தா எப்படி தெரியுது இந்த பொண்ணுக்கு? போனா போகுதேனு ஹெல்ப் பண்ணா நன்றிகூட சொல்ல வேண்டாம்! ஆனா இப்படியா நடந்துக்கறது என்று ஏதோ சும்மா போனவ கையப்பிடிச்சு இழுத்தா மாதிரி! என்று எரிச்சலுடன் பார்வையைத் திருப்பியவனின் கண்ணில் கீழே கிடந்தவளது ஐடி கார்ட் விழுந்தது.
ஐடியை பார்த்தவனின் பார்வையில் ஐஸ் வாட்டர் ஊற்றியது போலச் சட்டென்று சிறு இளக்கம் எட்டி பார்க்கத் துடிக்க, அவள் செயலில் விழித்துவிட்ட தன்மானம் விடைத்துக்கொண்டது.
இது வேறயா! என்று லிஃப்ட் கதவில் கை வைத்துத் தடுத்தவன், அவளது ஐடியை தூக்கிக்கொண்டு ஓடினான். ஐந்தே எட்டுக்களில் படியேறிக் கொண்டிருந்தவளைப் பிடித்துவிட்டவன்
"எக்ஸ்க்யூஸ்மீ!" என்று உரக்க அழைத்ததில் அதிர்ந்து திரும்பியவள், மூச்சு வாங்க நின்றிருந்தவனைப் பார்க்க, விநாடியில் அவள் வதனம் குழப்பத்தில் இருத்து கோபத்திற்குத் தாவியது.
"ஏன் சார் உங்களுக்குலாம் வேற வேலை இல்லை? நான் உங்க கிட்ட வந்து ஹெல்ப் கேட்டேனா? நீங்களா வந்து ஹெல்ப் பண்ணீங்க.. சரி தேங்க்ஸ்னு சொல்லிட்டா விட்டுட வேண்டியதுதான? அதைவிட்டு பின்னாடியே வரீங்க! கொஞ்சம்கூட டீசன்ஸியே கிடையாதா? இன்னொரு வாட்டி என் பின்னாடி வந்தா நான் செக்யூரிட்டிய கூப்பிட வேண்டியது இருக்கும்" என்று விரல் நீட்டி எச்சரித்தவள் விடுவிடுவென படியேறிச் செல்ல
அவள் பொரிந்து தள்ளியதில் அசையாமல் நின்றுவிட்ட மனுவிற்கு நொடியில் அவள் கோபத்திற்கான காரணம் விளங்கியதில் அழுவதா சிரிப்பதா என்றுதான் புரியாமல் போனது!
கையிலிருந்த ஐடியில் பார்வை தன்னிச்சையாய் பதிய அதில் இருந்த "வாழவந்தாள்" என்றவளது பெயரைக் கண்டவன் மீண்டும் திரும்பிப் பார்த்த பொழுது அவள் கடைசி படிகளில் இருந்தாள்.
தலையை உலுக்கிக் கொண்டவன் அத்தனை தெம்பையும் திரட்டி படிகளில் தாவி ஏறி அவள் முன் வந்து நின்றான். மறுபடியும் அவள் எதுவோ சொல்ல வர, ஒற்றை கை நீட்டித் தடுத்தவன், அவள் கையை பிடித்துத் திருப்பி அதில் அவளது ஐடியை அழுத்தமாக வைத்து,"இதுக்குதான் கூப்பிட்டேன்" என்றுவிட்டு அதே வேகத்தில் லிஃபிடினுள் சென்று மறைந்துவிட்டான்.
நொடியில் தனது அசட்டுத்தனத்தை உணர்ந்தவள் அவன் சென்று மறைந்த திசையையே சில கணங்கள் பார்த்துவிட்டு திரும்பி நடந்தாள்.
அவனை முதன் முதலாகப் பார்த்த நொடிகூட இன்னமும் ஈரப்பதம் குறையாமல் நினைவில் நின்றது அவளுக்கு!
அன்று பேசியதுதான்! அதற்குப் பிறகு இன்று தான் நேரடியாகப் பேசிவிட்டு செல்கிறான். அதே பதிலுக்குக் காத்திராத நடையுடன்! ஆறு மாதங்களாக ஒரே இடத்தில் பணி புரிந்தும், தனிப்பட்ட முறையில் பேச வேண்டிய சூழ்நிலைகள் வராமலே போனதாலோ இல்லை இருவருமே நேருக்கு நேர் பேச முயற்சி செய்யாததாலோ என்னவோ அவர்களது மோதல்களும், சீண்டல்களும் ஒரு கோட்டுக்கு வெளியே நின்று பேசுவது போல மறைமுகமாகவே இருந்தன. அதைத்தான் இப்பொழுது அவன் உடைத்துப் பேசிவிட்டு சென்றிருக்கிறான்!
வாழிக்கு மனுவைக் காயப்படுத்திவிட்டோமே என்ற உணர்வெல்லாம் இல்லை. ஆனால் என்னவென்று சொல்லத் தெரியாத ஒருவித எரிச்சல் உண்டானது என்னவோ உண்மை!
அவன் வைத்துவிட்டுச் சென்ற கோல்ட் காஃபியை பார்த்தவளுக்கு என் இடம் என்ன இவனுக்குக் குப்பைத் தொட்டியா? என்ற எரிச்சலே வர, அதை அப்படியே அங்கிருந்த குப்பைக் கூடைக்குள் போட்டுவிட்டுக் கிளம்பினாள்.
அவதிப்பட ஆயிரம் காரணமிருக்கையில் ஆடவனின் மன வருத்தமெல்லாம் மனதில் நிற்குமா என்ன? ஆனால் நின்றதே! ஏதோ ஒரு ஓரத்தில்.. லேசாக.. மிகச் சிறியளவில் ஒரு அதிருப்தி! சிறு சஞ்சலம்!
வழமைபோல விறுவிறுவென கைகளை வீசி மூச்சு முட்ட முட்ட நடந்தவளுக்கு வழமையான அவளது 'அடுத்து என்ன?'விற்கு பதிலாக மனம் எதை எதையோ நினைத்தபடி வீடு வந்து சேர, அப்படியே சுவரையொட்டி, முதுகுக்கு காவலாக்கியபடி தரையில் சரிந்தமர்ந்தவளின் மொத்த எண்ணக்கூட்டையும் பிடுங்கி எறிவது போல பார்வையில் விழுந்தது, ஷெஃபில் கிடந்த அந்த பட்டன் மொபைலின் ஒளிரும் திரை!
அடித்து பிடித்துக்கொண்டு எழுந்தவளிடம் அத்தனை நேரமில்லாத தள்ளாட்டமும் தடுமாற்றமும்! கை நடுங்க எடுத்து பார்த்தவளுக்கு 'மிஸ்ட் கால்ஸ்' இல் சென்ற உயிர், அந்த கஸ்டமர் கேர் அழைப்புகளைக் கண்டே மீண்டது.
என்ன ஒரு பைத்தியக்காரத்தனம்! எப்படி இதை அணைக்க மறந்தாள்? எவ்வளவு பெரிய மடத்தனம்! மொத்தத்தையும் குழி தோண்டி புதைக்க இருந்த தனது முட்டாள்தனத்தில் பதறி அடங்கியிருந்த நெஞ்சம், உடலில் மீதமிருந்த தெம்பை உறிந்துவிட தொப்பென தரையில் அமர்ந்தவளின் விழிகளில் கண்ணீர் நிற்காமல் வழிய, தலையை முழங்காலோடு சேர்த்தணைத்துக் கொண்டவளிடம் விரக்தி விசும்பல்கள் அதிகரித்தன.
இதில் இருந்து அவளுக்கு என்று விடுதலை? என நினைத்தவளுக்கு மறுகணமே அப்படி நினைப்பதுகூட தவறோ என்ற குற்றவுணர்வு எழ, முன்னும் செல்ல முடியாத பின்னும் செல்ல முடியாத தன்னிலையை எண்ணி மெல்லிய விசும்பல்கள் மௌன அழுகையாக மாறின.
இங்கொருத்தி உயிர் வாடுவதை அறியாதவனோ, அவள் வாடச் செய்ததில் தன் வீட்டு பால்கனி திட்டில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு வீட்டை நிறைத்திருந்த இசையில் மூழ்கியிருக்க, யாரோ தன் தோள்பட்டையில் முழங்காலால் முட்டுவதை உணர்ந்து, நெற்றி சுருங்கிட ஒற்றை கண் திறந்து என்ன என்று புருவம் உயர்த்த, அவனுக்கு எதிரில் தலையில் துண்டும், மூக்கில் கைக்குட்டையை இழுத்துக் கட்டியபடி, ஒரு கையில் கத்தரிக்கோலும் இன்னொரு கையில் செலஃபின் டேப்புமாக அனல் பார்வை தெறிக்க நின்றிருந்தான் அஜய்.
"ஏண்டா டேய்! மனசு சரியில்ல மச்சினு வரவச்சு, நீ வீடு ஷிஃப்ட் பண்ண என்ன டப்பா கட்ட விட்டுட்டு, ஹாயா பால்கனில படுத்துக்கிட்டு கொடியிலே மல்லிகை பூ கேட்குதாடா உனக்கு!" என்று முழங்காலால் இன்னமும் எத்த
மனுவோ முகம் சுளித்து,"ப்ச், நானா சொன்னேன்? நீயாதான ஹெல்ப் பண்றேன்ன" என்றுவிட
"பெரிய மனுஷன் மாதிரியாடா பேசற நீ! ஒரு கர்டஸிக்கு சொன்னா நீ பாட்டு டேப்பும் டப்பாவும் கைல குடுத்துட்டு போயிட்ட! மரியாதையா வந்து எடுத்து வை எல்லாத்தையும்! நாளைக்கு ஷிஃப்டிங்க வச்சுக்கிட்டு கொடியிலே மல்லிகைப்பூவாம்.." என்று முணுமுணுத்தவன்
"எழுத்துரு!" என்று இடிக்க, "ப்ச் எனக்கு மைண்ட் அப்ஸட்டா இருக்கு" என்று திரும்பிக்கொள்ள முயன்றவனை அஜய் விடுவதாய் இல்லை.
"என்னமோ உன் பக்கெட்கிட்ட இன்னைக்கு நேத்து வாங்கறா மாதிரி சீன் போடற! எல்லாம் ஆறு மாசமா டெய்லி வாங்கறதுதானே!" என்று பிடித்திழுக்க
"அவ ஒன்னும் என் பக்கெட் இல்லை" என்ற மனு சட்டென முகம் மாறிவிட அதில் அதிர்ந்த அஜய் வெளியே காட்டிக்கொள்ளாமல்,"சரீ! சரீ! உன் பக்கெட் இல்ல.. ஆர் ஆர் வேர்ல்ட் பக்கெட்!" என்று கைகளை விரித்து கம்பீரமாகச் சொல்ல
அதில் சட்டெனச் சிரித்துவிட்டவனோ,"ஆமா பெரிய மார்வல் வேர்ல்ட்!" என்றபடி எழுந்துகொண்டான்.
"சரி சொல்லு, என்ன செய்யனும்?" என்று சட்டை கைகளை மடித்துவிட
"அதெப்படிடா என்னவோ நீ எனக்கு ஹெல்ப் பண்ண வந்தவன் மாதிரியே பேசற? கலிகாலம்டா! ஸ்வாதி அப்பவே டேட் போலாமானு கேட்டா.. அதைவிட்டு நண்பேன்டானு உன்ன பார்க்க வந்தேன்ல என்ன சொல்லனும்!"
"சலிச்சுக்காத மச்சி! நாமளும் இதை முடிச்சிட்டு டின்னர் டேட் போலாம்!" என்று அஜயின் தோளைப் பற்ற, அதை உதறியவனோ
"நோ தேங்க்ஸ்! நான் ஸ்வாதிய தவிர யார் கூடவும் டேட் போறதில்ல" என்று விறைப்பாக சொல்ல
"ரொம்ப பண்ணாதடா ஸ்வாதி புருஷா!" அவனைக் கழுத்தைச் சுற்றி கைபோட்டு இழுத்துச் செல்ல
அதற்கு ஈ என்று சிரித்தவனோ,"இன்னொரு வாட்டி சொல்லேன்" என்க
"அய்யே வா!" என்று அஜயை இழுத்துக்கொண்டு வெளியேறினான்.
"ஆனாலும் நீ பேசற அரைகொறை தமிழுக்கு கொடியிலே மல்லிகைப்பூ ஓவர்தான்டா" என்று கதவை இன்னொரு முறை எட்டிப் பார்த்துவிட்டு வந்த வேலை வெற்றிபெற்ற திருப்தியுடன் மனுவைப் பின்தொடர்ந்தான் அஜய்.
