1
"ஆரம்பிக்கலாமா?" என்றவாறே அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அந்த பச்சை நிற போத்தலைச் சுற்ற முற்பட்டவனின் கை மற்றொருவனின் கையால் எதிர்பாரா தருணத்தில் நிறுத்தப்பட்டது.
முதலாமவனின் விழிகளின் குழப்ப வீச்சுக்குத் தடுத்தவன் கேலிச் சிரிப்பொன்றை அர்த்தமாய் ஆரம்பித்துவிட்டு அவர்களுள் ஒருத்தியாய் ஓரத்தில் அமர்ந்திருந்தவளில் ஓரவிழிப் பார்வையைத் தேக்கியபடி,
"கேள்வியெல்லாம் பார்த்து கேளுங்கப்பா!! அதிசயமா விளையாட வந்த பச்சை மண்ணு நம்மள மாதிரி இல்ல" என்றவன் அந்த "நம்மள மாதிரி இல்ல"யில் கொடுத்த அழுத்தத்தில் மற்றனைவரிடத்திலும் சிரிப்பொலி. அவளைத் தவிர. அவனால் பச்சை மண்ணென்று குறிப்பிடப்பட்ட அவளைத் தவிர.
சட்டென ஓர் விலகலுணர்வு உள்ளுக்குள்.
அவன் நம்மள மாதிரி இல்லை என்று எதைக் குறிப்பிட்டானென்று உணர முடிந்தது. அதற்குச் சிரிப்பதா அழுவதா இல்லை கடப்பதா என்றுதான் தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் இவள் மனம் ஓட்ட விழையும்பொழுது வெட்டுவது இவர்கள்தானே. இப்பொழுது வெட்டியதுபோலவே.
அவ்விலகல் உணர்வு அவள் விரல் நுனியைத் தீண்டுவதற்குள் நிகழ்பவையில் தடுக்கப்பட்டது. விளையாட்டைத் தொடங்கியிருந்தனர்.
ராட்டினமாய் சுற்றிய பச்சை போத்தல் அங்கிருந்த மற்றொருவனைச் சுட்டிக்காட்டியபடி சுருண்டுவிட்டது.
"ஓ!!!!" என்ற ஆர்ப்பரிப்புடன் அவனிடம் கேட்டனர்.
"Truth or dare?"
தீவிரமாய் சிந்திப்பதுபோலொரு பாவனை செய்துவிட்டு "Dare" என்று அவன் சிரிக்க இப்பொழுது அனைவரும் அவனுக்கு Dare கொடுக்க வேண்டியவளையே தீவிரமாய் கவனிக்கலாயினர். அவர்களிடத்தில் ஆர்வத்தின் சாயல் அபரிமிதமாய் இருந்தது.
"இங்க இருக்கிற யாருக்கிட்டயாவது காதல் சொல்லனும்!" என்றதுதான் தாமதம் இப்பொழுது அனைவரிடத்திலும் உற்சாகம் உச்சத்தைத் தொட்டிருந்தது. கூடவே ஆர்வமும், விளையாட்டெனினும் அவன் யாரிடத்தில் சொல்லப் போகிறானென. எப்படிச் சொல்லப் போகிறானென.
அங்கிருந்த அனைவரையும் தன் நாடியைப் பிடித்தவாறே பார்வையிட்டவன் கடைசியில் இவளருகில் இருந்தவளைப் பார்த்து.
"அங்க வரியா?" என்று அங்கிருந்த குட்டி விரிவுரை மேடையைச் சுட்டிக்காட்ட மறுபடியும் அதே "ஹோ!!" சத்தத்துடன் அவர்கள் மட்டுமின்றி அனைவரும் எழுந்து சென்றனர்.
இவள் மட்டும் நகரவில்லை. இவள் நகராததை யாரும் கண்டுகொள்ளவுமில்லை. இங்கு அமர்ந்திருந்தவள், அமர்ந்தவாறே கைகளை மட்டும் குறுக்காகக் கட்டிக்கொண்டு அவர்கள் அனைவரையும் வேடிக்கை பார்த்தாள். உள்ளுக்குள்ளே தாமாய் சிந்தனை பரவியது.
'நான் எப்படி காதல் சொல்லுவேன்?' என
மனதினுள் காட்சிப்படுத்த முயற்சி செய்தாள்.
அது ஏதோ ஒரு காட்டுப்பகுதிபோலும். அதுபோலத்தான் தெரிந்தது. கண்ணெதிரே நதியொன்று நல்லிசையாய் சலசலத்துக்கொண்டிருந்தது. பார்வையை மேலுயர்த்தினாள். பால் நிலாப் பொழிவு.. அருகில் இவளமர்ந்திருந்த அந்த குறுகலான மரப்படிக்களில் இவளுக்கு அடுத்தப்படியில் அவன்.
அவன் அக மென்மை அந்நிலவுக்குச் சவால் விட்டுக்கொண்டிருக்க பால் சிரிப்பொன்றுடன் இவளையே பார்த்திருந்தான் அவன். வழமை போல அச்சிரிப்பின் பால்மணம் அவள் மனம் தொட்டுத் தித்தித்தது.
மெல்ல முறுவலித்தாள்... பின்
"உனக்கொன்னு சொல்லவா?" என்று இவள் கேட்க அதே, முறுவல் மாறா முகத்துடன், "மறுபடியும் கவிதையா?" என்று வினவினான். அவன் விழிகளில் ஆர்வத்தைத் தேக்கியபடி.
அதை உணர்ந்தவள் "ஆம்" என மேலும் கீழுமாய் தலையசைக்க அவனோ,
"இந்த தடவை எதைப்பத்தி?"
"ம்ம்... நம்மளப்பத்தி?"
"வாஹ்!! சொல்லேன்..." அதே புன்னகை!!
"ம்ம்" இப்பொழுது அவளிடமும்.
சொல்லத் தொடங்கினாள்...
"நீ நிலா நான் நதி
ஒட்டவியலாதென்றறிந்தும்
உன்னொளியை என்னடியாழத்தில்
நிரைக்கிறேன்...
எந்நாழம் தொடுமோ இந்நிலா நேசம்?"
அவனையே பதிலுக்காகப் பார்த்திருந்தாள். இட வலமாய் தலையசைத்தவன், "ஏன் இவ்ளோ சோகம்?"
"பிடிக்கலையா?" சிறுபிள்ளையின் இதழ் பிதுக்கல் இவளிடம்.
"பிடிச்சிருக்கு!! ரொம்பவே!! ஆனா..."
"சரி அப்போ நீ சொல்லு"
கள்ளச் சிரிப்பு இவளிடம்.
அவன்...
"நான் நிலவல்ல!!
நீ நதி நான் ஒளி
அந்த நிலாப் பொழியுமென நீ ஏக்கங்கொள்ளும் அன்பொளி..
அந்நிலவின் பிம்பம்..
இந்நதியின் நிலா..
நீ கரையில்லா நதி..
நான் நிரந்தரமில்லா ஒளி..
நாம் முடிவில்லா கனா..."
வார்த்தைகளில் மாறும் இவள் வதனத்தில்தான் அவன் கவனம் முழுதும். இவன் முடித்த பொழுது இருவர் கண்களிலும் மெல்லிய ஈரம்... அடர்ந்த நேசம்...
தலையசைத்து நிகழுக்கு வந்தாள்.
'கொஞ்சம் ட்ரமாட்டிக்கா இருக்கே...' மனம் முழுதாய் மலரவில்லை!
'வேறெப்படி...'
இப்பொழுதும் அதே இடம்... அதே நதி... அதே நிலா... அதே பால் சிரிப்பு... அதே நேசம்... ஆனால் இம்முறை சற்று வேறாய் இருந்தது இவள்.
மெல்லிய முறுவலொன்றுடன் அவனைப் பார்க்க அவன் நேசவிழிகளால் அவள் மனம் நெய்தான். அதே பால் சிரிப்பும் பழுதற்ற மனமுமாய் அவன்.
அவன் காதோர கூந்தலை மிக மென்மையாய் ஒதுக்கியவாறே, "இந்த நிலா, நதி,வீடு... எல்லாமே நல்லாருக்குல?" என்றாள்.
"உனக்கு பிடிச்சிருக்குதானே?"
"ம்ம் நிறையவே!" என்றவள் மெல்லிய குரலில் "உன்னையும்" என்றாள்.
"என்ன?" கேட்டும் மறு முறை கேட்டுவிட வேண்டுமென்ற பேராவல் அவனிடம்.
அவனை உணர்ந்தவளாய், "எனக்கு யாருமில்லாத ரோட்டுல நிலா வெளிச்சத்துல உன் கைப் பிடிச்சு நடக்கனும்னு ஆசை" என்றாள் அவன் காதோர கூந்தலுடன் விளையாடியவாறே.
"நாளைக்கு போகலாமா?" என்றவன் கேட்டதும் அவன் விழி நோக்கியவள், "எனக்கு எப்பவுமே போகனும்... கடைசிவரை..."
க்ர்ர்ர்ர்ர்....
அவ்வகுப்பறையிலிருந்த மணியடித்ததில் நிகழ்காலத்திற்கு வந்தவள் அப்பொழுது தான் கவனித்தாள், அவர்கள் இன்னமும் ஏதோ அங்கு நின்று பேசிக்கொண்டிருந்தனர். மெல்ல எழுந்தவள் பையைத் தூக்கிக்கொண்டு கேள்வியாய் நோக்கிய ஒருத்தியிடம் கிளம்புவதாகச் சொல்லிவிட்டு வெளியேறினாள்.
Page - 2 →

Comments
Post a Comment