2
அவள் அறையினுள் நுழையும்பொழுதே அவள் விழிகளிரண்டும் அவனுக்காய் அலைபாய உள்ளே நுழைந்தவள் திரும்பாமல் கதவடைக்க அவள் நினைத்ததுபோலவே கதவு மறைவில் நின்றிருந்தவன் அவளை பின்னாலிருந்து குட்டி துள்ளலுடன் அணைத்துக்கொண்டான். "உனக்காக எவ்வளவு நேரமா காத்துட்டிருக்கேன் தெரியுமா?" செல்ல சிணுங்கலுடன்.
"இன்னைக்கு நேரமாகும்னு சொன்னேனே..." என்று மொழிந்தாலும் அவள் இதழ்களிலும் சிறு புன்னகை. அவள் ஓரெட்டு எடுத்து வைக்க அவன் அணைப்பை உடைக்கவில்லை. அவனும் அவளுடனே அவளை பின்னிலிருந்து அணைத்தபடியே நடக்க, அங்கிருந்த நாற்காலி ஒன்றில் தனது பையைப் போட்டவள் அப்படியே ஒருக்களித்தவாறே படுக்கையில் விழுந்தாள். அவனும். சற்று நேர மௌனம் அவளிடம். பின்னிலிருந்து அணைத்திருந்ததால் அவள் முதுகுபுறமே அவனுக்குத் தெரிய சற்றிற்கெல்லாம் அவளிடம் இன்னும் நெருங்கி தலையை மட்டும் உயர்த்தி கன்னங்கள் மென்மையாய் ஸ்பரிசிக்க அவள் முகம் பார்க்க முயன்றான்.
அவள் முகத்திலும் அதே மௌனம்.
"என்ன யோசிக்கிற?" என்றவனின் கேள்விக்குக் கொஞ்ச நேரத்திற்கு அவளிடம் எந்த பிரதிபலிப்பும் இருக்கவில்லை. ஆனால் அவன் அப்படியே, அவள் முகம் பார்த்துக்கொண்டே அமைதியாய் இருந்தான். சில கணங்கள் கழித்து தலையை லேசாய் திருப்பி அவன் முகம் பார்த்தவள் எழுந்தமர அவனும் தானும் அமர்ந்தவாறே அவளை கவனிகளானான்.
"ஒன்னுமில்லை... சும்மாதான்" என்றவள் அன்றைக்கு நடந்தது... "அவன்" அவளைப் பற்றி அப்படிச் சொன்னதென அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள். கவனித்துக்கொண்டிருந்த அவன் பதிலென எதுவும் வாய்மொழியாய் சொல்லவில்லை... அவளை மெல்ல அணைத்துக்கொண்டான். அதைவிட மென்மையாய் அவள் முதுகை நீவிக் கொடுத்தான்.
அவளுக்கு அது தேவையாய் இருந்தது. சொல்லப் போனால் அது மட்டும்தான் தேவையாய் இருந்தது.
அவளுக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. இன்று "பச்சை மண்" என விளித்த இவன்... இவன் இப்படி விளித்ததற்கான காரணம் என எல்லாம் நினைவில் இருக்கின்றன...
அது நடந்து சில மாதங்களிருக்கும். அதுவும் இதேபோலத்தான். ஏன், இதே விளையாட்டுதான் அன்றும் விளையாடினர். அவன்தான் இவளை விளையாட அழைத்தது. சொல்லப்போனால் அந்த கல்லூரியிலேயே அவள் ஓரளவு ஒட்டி பேசும் ஆள் அவனொருவன்தான். பேனாவை சுழட்டிவிட்டு காத்திருக்க அது சரியாய் இவளைச் சுட்டிக்காட்டியபடி நின்றது. இவளிடமும் இப்பொழுது அதே கேள்வி கேட்கப்பட்டது.
"Truth or dare" என
இவள் "Truth" எனவும் சிறு குழப்பம் மற்றவரிடையே, என்ன கேட்கவென...
பிறகு கேட்க வேண்டியவளுக்குக் கேள்வி கிடைத்துவிட இவளிடம் கேட்டாள், "உன் க்ரஷ் யாரு? பிரபலம்னு இல்லாம..."
இவளுக்குக் கேள்வி புரிந்தாலும் தெரியவில்லை. வெகு சிலரை... முகம், பெயரென எதையும் நினைவில் இல்லாத வெகு சிலர் அவளுக்கொரு நல்லுணர்வைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இவள் கேட்கும் ஈர்ப்பு...
"அப்படி எதுவுமில்லயே..." என்று இவள் சொல்லிய மறுகணமே "ஓ....." என்ற அதிருப்தியின் ஒலி பரவியது அங்கே...
இதோ அவளை விளையாட அழைத்த அவனேதான், "நாங்கலாம் ஏதும் நினைச்சுக்க மாட்டோம்... சும்மா சொல்லு" என்றான்.
இவளுக்கு உண்மையில் என்னவோ போலானது. அவளுக்கு அப்படியொன்று இருந்திருந்தால் நிச்சயம் சொல்லியிருப்பாளே. அவளுக்குத்தான் அது என்னவென்றே தெரியவில்லையே... அதைச் சொன்னாலும் இவர்கள் யாரும் ஒத்துக்கொள்ளப் போவதில்லை... அவள் சொல்லப் போவதுமில்லை...
"நம்பாட்டியும் அதான் உண்மை. என்னோடதெல்லாம் அஞ்சு ஸெக்கண்ட் க்ரஷ்... " என்றுவிட அவளை நம்பாத பார்வை ஒன்று பார்த்தவன் இன்று அதை நினைவில் வைத்து அப்படிச் சொல்லியிருக்கிறான்.
அவளுக்கு நன்றாய் நினைவில் இருக்கிறது. அன்று அவள் சொன்னதை எவரும் நம்பவில்லை. அவளும் அதைப் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் எவருக்குப் புரியப்போகிறது... இத்தனை காலமும் அவள் அவளுடனே போராடிக்கொண்டிருப்பது...
நினைவுகளிலிருந்து மீண்டவள் அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கிப்போனாள். சற்று நேரத்திலெல்லாம் அம்மாவும் தங்கையும் வந்துவிட மற்ற நேரம் அனைத்தும் அப்படியே கடந்தன...
மணி இரவு பத்து இல்லை பத்தரை இருக்கக்கூடும். இவளுக்குத் தொண்டை வறண்டு கிடந்தது. நெஞ்சில் வேறு சாப்பிட்டது ஒரு மாதிரி இருந்தது. தண்ணீர் போத்தலைத் தேடினால் அது ஏற்கனவே வடிக்கப்பட்டிருந்தது. அதைத் தூக்கிக்கொண்டு தண்ணீர் பிடிக்கச் சென்றாள். அதற்குளெல்லாம் அடுக்களை விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. அது அவர்களது வழக்கம். விளக்கைப் போட்டுவிட்டு வாசலில் நின்றவாறே பார்வையை நாலாபுறமும் சுழலவிட்டாள். அவள் பயந்ததுபோலவே சிலிண்டர் அருகில் பல்லியொன்று நின்றிருந்தது. இவள் தண்ணீர் பிடிக்கவேண்டுமெனில் அதைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். கிட்டத்தட்ட அந்த சிலிண்டருக்கு சில அடிகள் மட்டுமே தொலைவில் நின்றுதான் போத்தலை நிரப்ப நேரிடும். அது அவளால் முடியாது. வெளியே திரும்பியவள் அங்கிருந்தபடியே அம்மாவை அழைத்தாள்.
"ம்மா... தண்ணி வேணும்... இங்க பல்லி நிக்கிது" என்று இவள் சொல்லவும்
"நான் இப்போதான் படுத்தேன்... உனக்கு மட்டுமா பல்லினா பயம்? எனக்கும் அதே பயந்தானே?" என்ற குரலில் சோர்வு.
தங்கையை அழைத்துப் பார்த்தாள். அவளுக்குக் காதிலேயே விழவில்லைபோலும்.
திரும்பிப் போய்விடலாம்தான். ஆனால் இந்த நெஞ்சுவலியும் தொண்டை எரிச்சலும் நேரம் ஆக ஆகத் தண்ணீருக்காய் ஏங்கியது. அது மட்டுமின்றி இருவரின் மறுப்பிலும் அவள் மனம் ஏனோ அடிபட்டுப்போனது.
'எனக்கு நான்தான் செய்யனும்' என்று சொல்லிக்கொண்டவளின் பாதம் நகர மறுத்தது. இரண்டெட்டு உள்ளே வைப்பதும் பின் வெளியேறுவதுமாய் இருந்தவளுக்கு அழுகை வராதக்குறை. இதயம் வேறு தாறுமாறாய் எகிறியது. ஒருகட்டத்தில் எப்படியோ உள்ளே சென்றவள் ஒரு புறம் தண்ணீரை நிரப்பியவாறே மறுபுறம் அந்த சிலிண்டர் பக்கத்தில் நின்றிருந்ததிலுமாக கவனம் பதிக்க முயன்றாள். மெல்ல மெல்லப் பார்வை வேறு மங்கலாகின... கால்களில் வலு குறைந்துகொண்டிருந்தது... உள்ளிருந்து உயிர் மெல்ல மெல்ல விலகுவது போலிருந்தது. வியர்க்கத் தொடங்கியது... மறுபுறம் உடம்பு சில்லெனச் சில்லிட்டது... தண்ணீரை நிரப்பியவள் விடுவிடுவென தன்தறைக்குள் நுழைந்துக் கொண்டாள். கால்கள் இருப்பதற்கான உணர்வே இல்லாமல் போக விடுவிடுவென மெத்தையிலேறி மடிந்தமர்ந்ததுதான் தாமதம். கண்களிலிருந்து சரசரவெனக் கண்ணீர் வழியத் தொடங்கியது. நெஞ்சு லேசாய் வலித்தது. இதயம் வெடித்துவிடுவதுபோல துடித்தது. மூச்சு விட வேறு சிரமமாய் இருக்க... உடல் மெல்ல நடுங்க தன்னைத்தானே நிதானப்படுத்த முயன்றாள்.
"என்னாச்சு?? என்னாச்சுடா? என்ன பண்ணுது?" என்று அவன் பதறியது... அவன் குரலென எல்லாம் ஏதோ தொலைதூரத்தில் கேட்பது போலிருந்தது.
அவளது நடுக்கத்தைப் பார்த்துவிட்டு அவள் கையை தொட்டுப்பார்த்தவனுக்குப் புரிந்துவிட அவளை அப்படியே ஆதரவாய் அணைத்துக்கொண்டு தட்டிக்கொடுத்தவாறே, "ஒன்னுமில்ல... ஒன்னுமில்ல..." என்று மென்குரலில் அவள் செவியருகில் அவன் பேசிட... அவள் சாதாரணத்திற்குத் திரும்ப சில நிமிடங்கள் பிடித்தது. மெல்ல மெல்ல மூச்சு சீராக... அமர்ந்திருந்தவள் படுக்கையில் அப்படியே சரிந்தாள்.
"எப்படிச் சொல்லுவேன் உனக்கு... என்னோட பயமும் உன்னோட பயமும் ஒன்னில்லைனு..." என்ற எண்ணமெழ அப்படியே விழி மூடிக்கொண்டாள்.
நள்ளிரவு... மணி ஒன்றையெல்லாம் எப்பொழுதோ தாண்டியிருக்கக்கூடும். எழுந்தமர்ந்தவள் பாட்டுக் கேட்கவென இயர்ஃபோன்ஸை காதில் மாட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்தமர்ந்துக் கொண்டாள்.
யூட்யூபில் அத்தனையாய் பிரபலமாகியிராத ஆனால் அவளுக்கு அபிமானமான சில பாடல்களைத் தனியாக எடுத்து வைத்திருந்தாள். எப்பொழுதும் அதில் ஒன்றைக் கேட்கத் தொடங்கி பின் அதற்கடுத்து வேறென... இன்னொரு புது பாடலும் அவளதில் சேர்ந்துவிடும். அப்படிதான் அன்றும்.
அவளது பாடல் தெரிவு எல்லாமே அப்படிதான். மனதில் யாரிடமும் சொல்ல முடியாது அடைத்துக்கிடக்கும் காயங்களைக் கீறி ஒற்றடமிடும் வகையிலான வரிகளைக் கொண்ட பாடல்கள். நாம் சொல்ல நினைத்து முடியாமல்... சொல்லத் தெரியாமல் தவிக்கும் உணர்வுகளை மற்றொருவர் வார்த்தைகளில் வடித்து இசையினில் இணைத்தால்...? அதே சமயம் மனதிற்கு இதமளித்தால்...? அப்படிப்பட்டவையில் ஒன்றைக் கேட்டுக்கொண்டிருக்கையில் கருத்து பிரிவில் முதலில் "ஹே!! இதை நீங்க வாசிக்கறீங்கனா உங்கட்ட ஒன்னு சொல்ல விரும்பறேன்... நீங்க ஸ்பெஷல்! நீங்க ஸ்ட்ராங்! இவ்வளவு தூரம் கடந்து வந்த வாரியர்! உங்களுக்கு என்னோட பெரிய ஹக்!!" என்ற கமெண்ட் ஈர்க்க அவள் அந்த கருத்து பிரிவைப் பார்க்கத்தொடங்கினாள். அத்தனை வலி... நம்பிக்கை... அன்பு... ஒரு கமெண்ட் உண்மையோ பொய்யோ, அதையெல்லாம் ஆராயாமல் அதற்கான ஆறுதல் வார்த்தைகள்... இது ஒன்றும் அவளுக்குப் புதிதல்ல... இதைப்போலப் பல இங்கும் கன்ஃபெஷன் பேஜ்களிலுமென்ன பார்த்திருக்கிறாள்.
அடையாளம் தெரியப்போவதில்லை என்றதும் மன வக்கிரங்கள் மட்டுமல்ல, காயா மனக்காயங்களும்கூட உடைப்பெடுக்கின்றன...
அதையே வெறித்திருந்தவளுக்கு திடீரென ஒரு எண்ணம்...
"நீ தூங்கலையா?" என்றவனிடம் மெல்ல முறுவலித்து அவன் மூக்கு நுனியில் முத்தமிட்டவள் ஃபோனை வைத்துவிட்டுப் படுத்தாள். வழமைபோல அவள் வலக்கரத்தை மட்டும் திறந்து நீட்டி வைத்துப் படுத்திருக்க... அவள் கை வளைவுக்குள் அடங்கியது அவனுலகம்.
"நாளைக்குச் சேலை கட்டிட்டு போனும்ல?" என்றவனின் சின்ன குரலுக்கு இவளது "ம்ம்ம்" பதிலானது.
Comments
Post a Comment