🌿 Featured Story

அன்பில் அவன் அலாதி

கோடைக்கால நினைவுகளின் கதை.

📖 Read Story

🎧 Audiobooks

Listen to our stories while travelling, resting or dreaming.

Enter Our Audio Story World

Romance, thrillers, healing stories & emotional journeys, now in audio form.

🌿 Fresh Updates

New chapters, articles, announcements & story updates.

மேவுகடல் நானுனக்கு - 1

✍️ எழுதியவர் Yagnya

 
சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா
 
அவள் அவமானங்களை நேசிப்பவள்!
ஆம்...அவமானங்களைத்தான்!!
அவைதான் ஒவ்வொரு முறையும் அவளை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குக் கடத்திச் செல்பவை...
 
அவள் அவமானங்களின் அடையாளம்.
 
 
கூந்தல் நினைவுகளை அதனுள் புதைத்து வைத்துக் கொள்ளுமாம்.
 
அதனால்தானோ என்னவோ, அத்தனை வஞ்சத்தையும் வைராக்கியத்தையும் தன் கருங்காட்டின் மெல்லிழைகளுக்குள் புதைத்து வைத்திருந்தவளது கூந்தல் இடை தாண்டி நின்றது. 
 
கருவிழியவள் தீட்டிய அடர் ரேகை அஞ்சனம் அவளது விரிந்த விழிகளுக்குக் கூர்மை தீட்டிக்கொண்டிருக்க, நீண்ட கூந்தலை எண்ணெய்யில் நனைத்துப் பின்னலில் அடக்கியவளின் கவனத்தைக் கலைத்தது அந்தப் பாடல். 
 
ஒன்று.. இரண்டு.. மூ-
 
அதற்குள் அவசர அவசரமாக அடுத்த அறையில் இருந்து யசோதா ஓடி வந்தேவிட்டார். அவரது பார்வை தொலைக்காட்சியையும் இவளையும் கிண்டலாகப் பார்த்து குறும்புச் சிரிப்பு சிரித்ததில் இவளையும் அது தொற்றிக்கொண்டது. 
 
இந்தப் பாடல் வந்த புதிதில் இவள் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையாம். அந்த காலகட்டத்தில் இந்தப் பாடல் எப்பொழுது ஒலித்தாலும் இவள் கவனத்தை முழுதாய் ஈர்த்துக்கொண்டு சிரிப்பை வரவழைத்துவிடுமாம். அழுதுகொண்டிருந்தாலும் சரி தூங்கிக்கொண்டிருந்தாலும் சரி! இந்தப் பாடல் கேட்டுவிட்டால் தனது பொக்கை வாய் சிரிப்போடு ஈயென்று திராட்சை விழிகளை உருட்டிச் சிரித்த மழலை நினைவுகளை ரேவதி இவளிடம் பல முறை சொல்லியதுண்டு. 
 
அம்மாவிற்கும் மகளிற்கும் மட்டுமே புரியும் கேலிகளுள் இதுவும் ஒன்று. எங்கு இந்தப் பாடல் கேட்டாலும் யசோதாவின் பார்வை மகளைத் தான் முதலில் தேடும். அவள் அங்கு இல்லாவிட்டால் அழைத்தேனும் காட்டிவிடுவார்,'உன் பாட்டு வருது' என்று. 
அணிந்திருக்கும் குர்தாவின் முழங்கைப் பகுதியைச் சரியாய் முழங்கைக்கு மேல் வரை மடித்துவிட்டுக்கொண்டிருந்தவளின் இதழ் ஓரத்தில் சிறு ஏளனச் சிரிப்பைக் கொண்டு வந்தது அந்த வரி.
 
"யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்"
 
இதழோரம் வளைந்து விழிகளில் மிளிர்ந்த அலட்சியமும் சொல்லியது அவளது மன உணர்வை. 
 
அப்படி ஒருத்தன் இந்த உலகத்தில் இல்லை! என
 
அவளது மன தைரியத்திற்கு முன் ஒருவன் நிற்பதா? அவளது திட மனதைத் திமிரெனப் பெயர் சூட்டி அதை அசைத்துப் பார்க்க நினைக்கும் ஒருவனா? அப்படி யாரும் வந்து அசைத்துப் பார்க்க அவள் என்ன நதியோர நாணலா? ஆளை அடித்து தன்னுள் அமிழ்த்திவிடும் ஆழ்கடல்! அவள் சமுத்ரா, விஷ்வசமுத்ரா. 
 
இந்த சமுத்ராவுக்கு எந்த அரசனும் தேவையில்லை! அவளுக்கு அவளே அரசன் அவளுக்கு அவளே அரண். 
 
எண்ணங்கள் அனைத்தும் அதன்பாட்டில் ஓடியதில் சட்டெனத் தலையைச் சிலுப்பிக்கொண்டாள். என்ன பைத்தியக்காரத்தனம் இது என. 
 
ஒரு நொடி அவள் நினைத்தவை அனைத்தும் அவளுக்கே சற்று சினிமாத்தனமாகத் தோன்றியது. அந்த நினைப்பை அப்படியே விலக்கித் தள்ளியவளின் கவனம் ஒரு கணம் அந்த தொலைக்காட்சியில் பதிந்து அப்பாடலிலேயே ஊர்ந்தது. 
 
 
என்ன அசட்டுத்தனம் இது? எதற்காக இத்தனை பைத்தியக்காரத்தனங்களும்? யாருக்காக இந்த கல்யாணமும் கச்சேரியும்? எதற்காக இத்தனை படோபக்காரம்? எது காதல்? இதுதான் காதலா? இதுதான் கல்யாணமா? இதற்குதான் கல்யாணமா? இந்த கல்யாணத்திற்குதான் இத்தனை கோமாளித்தனக்களுமா? இந்த மனிதர்களுக்குதான் எத்தனை பயம்! வாழ்க்கையை தனியாய் கழிக்க! எப்பொழுதும் யாரேனும் துணைக்கு இருந்துகொண்டே இருக்கனும் அதற்கு எதை வேண்டுமானாலும் சகித்துக்கொண்டுவிடலாம் என்ற மனநிலை.
 
இசையையும் ஏன் அதன் வரிகளையும்கூட ஏதோ ஒரு விதத்தில் ரசிக்க முடிந்தவளுக்கு அக்காட்சியோ அது தொடர்பான எண்ணவோட்டமோ அத்தனை உவப்பானதாக இருக்கவில்லை. 
யசோதா அடுக்களையில் அவர்களது மதியச் சாப்பாட்டைக் கட்டி முடிப்பதை உணர்ந்தவள் சட்டெனப் பார்வையைக் கண்ணாடியில் திருப்பினாள். முகத்தில் விசித்திரமாக எதுவும் இல்லை. எண்ணை வைத்துப் படிய வாரப்பட்டிருந்த கூந்தல் பக்கவாட்டில் ஒரு இழை மட்டும் தூக்கிக்கொண்டிருந்தது. ஆனால் அதைச் சரி செய்யத் தோன்றாதவளின் கவனம் விழிகளில் படிந்தது. அடர்த்தியாய் தீட்டப்பட்டிருந்த  அஞ்சனம்கூட சரியாய்தான் இருந்தது.   சமுத்ராவிற்கு பெரிய விழிகள். எதுவோ தோன்ற இரண்டடி பின்னால் வைத்தவள் விழிகளை மூடித்திறந்தாள். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அப்படியே கண்ணாடியைப் பார்க்க அதோ, அந்த இடது விழி மட்டும் வேற்று திசையில் இருந்தது. ஒரு முழு நிமிடம் மௌனமாய் பார்த்து நின்றாள். முன்பொரு காலத்தைப் போல இப்பொழுதெல்லாம் அவள் ஒன்றும் மாறு கண்ணைப் பெரிய குறைபாடாய் பார்க்கவில்லை. சொல்லப்போனால் முன்புகூட பார்த்ததில்லை. ஆனால் வயதை ஒத்தவர்களின் கேலியும் மற்றவர்களின் வினோத விசாரிப்புகளும் தந்த வலியும் தாழ்மையுணர்ச்சியும்கூட இப்பொழுதெல்லாம் இல்லை. சொல்லப்போனால் இன்றைய சமுத்ரா அவை அத்தனையையும் கடந்தவள். இவளை இனி எதைக் கொண்டும் ஒருவரால் கீழே இறக்கிவிட முடியாதளவு திடமானவள். ஆம், சராசரியைவிட வெகுவாய் மெலிந்து வெளிறிய தேகத்தினுள் தான் அவளது அத்தனை தைரியமும் ஒளிந்துக்கிடந்தது. அழகைப் பற்றிய கோட்பாடுகளையெல்லாம் என்றோ உதறித் தள்ளியிருந்தவளின் அழகுணர்ச்சி மலைக்காட்டின் மழைச்சாரலை ஒத்தது. அவள் தனக்குத் தோன்றுவதை மட்டுமே செய்துகொள்ளும் அழுத்தக்காரி. 
 
இரவே துடைத்து வைக்கப்பட்டிருந்த தனது கருப்பு சட்டமிட்ட கண்ணாடியை அணிந்துகொண்டவள் கையில் வாட்சை கட்டியவாறே டீவியை அணைத்துவிட்டு தோள் பையைச் சரி பார்த்தாள். 
 
அதே சமயம் அலைப்பேசி கிணுகிணுக்கவும் எடுத்துப் பார்த்த சமுத்ராவின் இதழில் இம்முறை மெல்லிய முறுவல் ஒன்று. அவன்தான்! 
 
வேற்று இவள் அவன் குறுஞ்செய்தி எதையும் திறந்து பார்த்திருக்கவில்லை. அதனால் இப்பொழுது ஒரு கேள்விக்குறியை அனுப்பியிருந்தவன் நொடியில் அதை அழித்தும் விட்டிருந்தான். 
 
இதுவும் ஒரு வித பைத்தியக்காரத்தனம்!
 
யசோதாவும் அதற்குள் கிளம்பியிருக்க இருவருமாய் கதவைப் பூட்டிக்கொண்டு, ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்துவிட்டே வெளியேறினர். அந்தப் பகுதியில் திருட்டு பயம் கிடையாது. அத்தெருவே சற்று அமைதியான தெரு. அதிகம் அளவளாவிக்கொள்ளாத மனிதர்கள் அனைவருமே சற்று வசதி படைத்தவர்கள். பெரிய பெரிய வீடுகளும் மரங்களும் மலர்களுமாய் வளர்ந்து நின்ற தெருவில் ஒரு வீட்டின் முதல் தளத்தின் ஓரத்தில் சட்டென யார் கவனத்திலும் விழாத இடத்தில் இருந்தது இவர்களது வீடு. இப்படியொரு வீடு இருக்கிறது என்று இவர்களாகச் சொல்லாவிட்டால் யாருக்கும் தெரியக்கூடச் செய்யாது. ஒற்றை படுக்கையறை, அடுக்களை மற்றும் முகப்பறைக்கு பதினோராயிரம் அதிகம்தான். இருந்தும் ரேவதிக்கு அத்தெருவும் அவ்வீடும் பார்த்த மற்றதில் இருந்து சற்று பாதுகாப்பானதாகப்பட இங்கேயே குடி வந்து சில வருடங்களும் கழிந்திருந்தது. 
 
தடதடவென படிகளில் இறங்கி தெருமுனை வரை பேசிக்கொண்டு வந்த இருவரும் இருவேறு திசையில் பிரிந்து சென்றனர். சமுத்ராவின் கல்லூரியும் ரேவதியின் அலுவலகமும் நேர் எதிர்த் திசைகளில் இருந்தது. 
 
 
ஒன்பது மணி வகுப்பிற்கு எட்டு நாற்பதிற்கே வந்துவிட்ட சமுத்ராதான் முதல் ஆளாய் வகுப்பறை கதவைத் திறந்ததே. வெறுமனே சாத்தப்பட்டிருந்த கதவைத் தள்ளி திறந்துகொண்டு உள்ளே நுழைந்தவள் நேராகச் சென்று வகுப்பின் நடுவில் இருந்த இரண்டாவது வரிசையில் கிடந்த மூன்றாவது இருக்கையின் ஓரத்தில் அமர்ந்துகொண்டாள். 
 
 
வந்துவிட்டதாய் ரேவதிக்கு ஒரு குறுஞ்செய்தியை மட்டும் தட்டிவிட்டவள் அப்பொழுது ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு மூழ்கியது தான். அதற்குப் பின் அடுத்தடுத்து எவர் வகுப்பறைக்குள் நுழைந்ததையுமே அவள் கண்டுகொண்டதாகக்கூடத் தெரியவில்லை. அருகில் கடந்து சென்றவர்களைக்கூட விழியுயர்த்தி பாராமல் அருகில் வரும்பொழுது மட்டும் அடிப் பார்வை பார்த்துக்கொண்டவளின் கவனத்தில் வகுப்பறை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவது விழுந்தது. புத்தகத்தை மூடி மடியில் இருந்த பையினுள் வைத்தவளின் கவனம் மைக்ரோ வினாடி அந்த முதல் வரிசையைப் பட்டும் படாமல் தொட்டு அதில் இருந்த வெற்றிடத்தைக் கண்டுவிட்டு மீண்டது. 
 
வரவில்லைபோலும்.
 
 
சிறு அலட்சியத்துடன் அகன்ற பார்வை தோள் பையில் படிய, முதல் வகுப்பிற்குத் தேவையான புத்தகங்களை மட்டும் வெளியில் எடுத்து வைத்துவிட்டு மணி அடிக்க காத்திருந்தாள். 
மணி அடித்து ப்ரேயர் முடிந்து முதல் வகுப்பான ஸ்டாட்ஸ் முடிந்தும் அவன் வராமல் போக அதைச் சிறு புருவ உயர்த்தலுடன் தட்டிக் கழித்தவள் அடுத்த வகுப்பிற்குத் தயாராக, ஓட்டமும் நடையுமாக அறையினுள் நுழைந்த க்ளாஸ் ரெப்ரஸெண்டேட்டிவ்,"எல்லாரும் லாப்க்கு வாங்க, டேலி க்ளாஸ் இப்ப" என்றுவிட்டு தன் பையிலிருந்த புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு வெளியேறிவிட, மாணவர்கள் அனைவரும் மெல்லிய சலசலப்புடன் டேலி நோட்ஸை எடுத்துக்கொண்டு வெளியேறத் தொடங்கினர். மூன்றாவது தளத்திலிருந்து மீண்டும் முதல் தளத்திற்கு படியிறங்க வேண்டுமே என்ற புலம்பல் அவர்களிடம். 
 
"இவனுங்க மட்டும் வசதியா லிஃப்ட்ல வந்துட்டு நம்மள இங்க வா அங்க வானு அலையவிடுவானுங்க" என்று பின்னால் வந்த யாரோ அலுத்துக்கொண்டது இவளுக்கு வெகு துல்லியமாய் கேட்டது. 
 
நியாயம்தான். ஐந்து தளங்களிலும் வகுப்பறைகளை வைத்துக்கொண்டு மாணவர்களுக்கு மட்டும் லிஃப்ட் பகுதியைத் தடை செய்து வைத்திருந்தது கல்லூரி. இவளே பல முறை உடல் உபாதைகளுடன் ஏறி இறங்க நேர்கையில் அலுத்துக்கொண்டதுண்டு. 
 
பெரு மூச்சொன்றை வெளியிட்டு அதைப் புறந்தள்ளியவளின் சுவாசம் மெல்லிய தடங்கலுக்குப் பிறகு சீரானது எதிரில் படி வளைவில் நின்று பேசிக்கொண்டிருந்தவனைக் கண்டு. 
 
வந்திருக்கிறான். தாமதாய் வந்திருப்பான் போல. 
 
நின்றிருந்தவனைக் கண்டும் காணாதவளாய் தன்போக்கில் படியிறங்கி சென்றவளுக்கு அவன் தன்னிடம் வந்து பேச நினைப்பதும் தயங்குவதும் இவள் கவனியாது சென்றதில் வெறித்து நோக்குவதையும் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. 
 
இதே போல்தான் முதன் முதலாக அவளிடம் பேசிய அன்றும் அவன் தயங்கியது நினைவில் வந்தது.
 
அவன் கௌதம். ஒரே வகுப்பில் இருந்தும் அவ்வளவாக இருவரும் பேசிக்கொள்ளும் வாய்ப்பே அமையாமல் போயிருக்க எப்படியோ எதற்கோ வகுப்பிற்கான வாட்ஸாப் க்ரூப்பில் நடந்த உரையாடலுக்குப் பிறகு, இவளுக்குத் தனியாகக் குறுஞ்செய்தி அனுப்பி அஸைண்மெண்ட் பற்றிய விபரம் கேட்க இவள் சொல்லவென எப்படியோ பேசத் தொடங்கியிருந்தாலும் இன்னமும் இருவருமே நேரில் பேசிக்கொள்ளவில்லை. அதற்கான முதல் அடியை இருவருமே எடுத்து வைப்பதாகவும் இல்லை. இதோ இப்பொழுது நடந்தேறிய மௌன நாடகம்தான் கடந்த சில நாட்களாக நடக்கிறது. கௌதம் தயங்க சமுத்ரா முயற்சிகூட செய்வதில்லை. அவளுக்குப் பேசுவதற்கும் காரணமில்லை. பேசாமல் இருப்பதற்கும் காரணமில்லை. மௌனமாய் அவனது தடுமாற்றங்களைக் கடப்பவளுக்கு அதுவும் ஒருவித அசட்டுத்தனமாகத்தான் பட்டது. 
வேண்டுமென்றால் அவனே வந்து பேசட்டும். 
 
செருப்பைக் கழட்டி அங்கிருந்த ரேக்கில் வைத்தவள் பிஸ்னஸ் லேபினுள் நுழைந்தாள். 
 
சட்டென நினைவில் வந்து மோதியது, இதே லாபிற்கு சில மாதங்களுக்கு முன் அவள் வந்த நாள். லாப் மதியத்திற்கு மேல் காலியாக இருக்குமா என்று ஆசிரியர் ஒருவர் ஸ்டாஃப் ரூம் வந்திருந்த இவளைக் கேட்டு வரச் சொல்லியிருக்க, அதற்கென வந்தவள் உள்ளே நுழைந்த மறுகணம், அத்தனை இரைச்சலுக்கும் மத்தியில் இருந்து வந்த 'டேய் பாட்டிடா' என்ற குரல் இவள் செவிப்பறையை மோதியது. தன்னைதான் கேலி செய்கிறார்கள் என்பது தெரியாமல் இருக்கவில்லை. ஆனால் அது தனக்குக் கேட்டது என்ற அளவுக்குக்கூட அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிடக்கிடாது என்பதில் திடமாய் நின்றவள் வந்த வேலையை மட்டும் செய்துவிட்டு குரல் வந்த திசையைக்கூடத் திரும்பிப் பார்க்காது அகன்றுவிட்டாள். 
 
அந்நினைவுகளில் இதழோரம் சற்றே ஏளனமாய் வளைந்தது. கிஞ்சித்தும் பொறுப்பின்றி பெற்றவர் பணத்தில் ஊர் சுற்றி 'வாழ்க்கையை அனுபவிக்கிறேன்' பேர்வழி எனக் காட்டிக்கொள்ளும் இவர்களுக்கு நான் பாட்டியாகவே தெரிந்தாலும்கூட பிரச்சனை இல்லை! 
 
 
"இன்னைக்கு என்ட்ரீஸ் எப்படி பண்றதுனு பாக்கப்போறோம்" என்ற குரலில் நிகழ் உலகிற்கு வந்தவள் எதிரில் இருந்த திரையில் கவனமானாள். 
 
நாட்குறிப்பில்..
 
அழகு அத்தியாவசியம். ஆம், அத்தியாவசியமேதான். தான் அழகென்று ஒரு உயிர் உண்மையாய் உணருதல் வெகு அவசியம்! 
 
அழகென்பதைத் தோற்றத்தில் வைத்தவரை விட, அகத்தில் வைத்தவரை விட, அதை ஒரு ஜீவனின் சிறு மனதிற்குச் செல்ல தடை செய்பவரே பெருங்குற்றவாளிகள். 
 
எது அழகு எது அசிங்கம் என்று எவர் முடிவெடுப்பது? அஃறிணைக்கே அப்படியென்கையில் ஆயிரமாயிரம் ஆசைகளை அடக்கி வைத்து முதல் முறையாக வாழத் துடிக்கும் உயிரைப் பிரிப்பதற்கு சக உயிருக்கும்கூட அம்மாதிரி உரிமைகளை யார் கொடுப்பது? 
 
எத்தனை எத்தனை ஆசையுடன் அடியெடுத்து வைக்க அந்த முதல் படியிலேயே நீ அசிங்கம் எனத் தள்ளிவிட நீ யார் என ஒரு பொழுதும் இவர்கள் கேட்கப்போவதில்லை. ஏனெனில் எத்தனையோ தெரிந்திருந்தாலும் ஏதோவொரு ஓரத்தில் இவ்விதயங்களும் நம்பித்தான் தொலைக்கின்றன, நாம் அழகற்றவர்கள் என.
 
அழுது துடிக்கும் பேதை மனங்களும் புரிந்துகொள்ளப்போவதில்லை பூ முதல் புள் நுனி வரை படைத்தவனின் தனி ரக ரசனையை. அழ வைக்கும் உலகமும் உணரப் போவதில்லை தான் அழிப்பது உணர்வையல்ல உயிரையென. 
 
எத்தனைக் கோடி இன்பங்கள் கிடைத்தும் என்ன பயன்? தன் அழகு இதற்குத் தகுதியற்றது என்ற உணர்வை வைத்துக்கொண்டு சுண்டு விரல் நுனிகூட தீண்ட மறுக்கிறதே! ஏதோ பாவச் செயல்போல. 
 
அல்லாடும் மனங்களிடம் எப்படிச் சொல்வேன் அன்பு இங்கு அனைவருக்குமானது என.. அழகு இங்கு அனைவரும் என.. தனியழகாய் பிறந்தவர்களைத் தனித்து நிறுத்திவிடும் உலகுதான் அற்பமென..   சக உயிரை அசிங்கமாய் உணரச் செய்யும் உள்ளம்தான் அசிங்கத்திலும் அசிங்கமென.. 
 
அழகு இங்கு அத்தியாவசியம். ஏனெனில் அழகு வெறும் உருவமல்ல, உயிர்.  

— “மேவுகடல் நானுனக்கு” கதையிலிருந்து ஒரு பகுதி  
✍️ எழுத்தாளர்: Yagnya 
இந்த படைப்பு எழுத்தாளரின் அறிவுசார் சொத்து.


அடுத்த அத்தியாயம்

📖 இந்த தொடரின் அத்தியாயங்கள்