2
சிந்தனையே, என்றன் சித்தமே!
அந்த குளிரூட்டப்பட்ட அரையினில் கொதி நிலையில் இருந்தான் அவன்.
அவன், விக்ரம்.. விக்ரமாதித்யன்!
அவன் முன் அவனை எப்படியாவது மலையிறக்கிவிடும் முயற்சியில் அவனது காரியதரிசி அரவிந்தன்.
“ஃபையர் ஹிம் அரவிந்த்!” என்றவனின் குரலில் திடுக்கிட்டவன் தயக்கமாய் விழிக்க இங்கு தன் எதிரே இருந்த திரையில் ஒளிர்ந்த மெயிலையும் அதில் இணைக்கப்பட்டிருந்தவையும் அடுத்த டாபில் இருந்த சிசிடீவி ஃபுட்டேஜையும் மாற்றி மாற்றிப் பார்த்த விக்ரமிற்கு ஆத்திரம் அடங்க மறுத்தது.
என்ன திமிர் இருந்திருந்தால் அவன் இடத்திலேயே ஒருவன் இப்படிப்பட்ட காரியம் செய்யத் துணிவான். இந்த லட்சணத்தில் இதற்கு காரணமானவன் பாஷ் கமிட்டி உறுப்பினர் வேறு! லட்சணம்! திருடனே காவலும் சாட்சியும்.
ருத்ர ரூபத்தை உள்ளடக்கி பற்களை நரநரத்துவிட்டு பிறகு சாவகாசமாகச் சாய்ந்து அமர்ந்துவிட்ட விக்ரமையே சந்தேகமாய் பார்த்திருந்தான் அரவிந்தன். இவன் கோபத்தைவிடக் குரூரமானது இந்த அசாத்திய அமைதிதான்! ஏனெனில் இவன் எதை நினைத்து அமைதி காக்கிறான் என்பதைப் புரிந்தும் புரியாத நிலையில் நின்றவன் அதை சொல்லலாமா வேண்டாமா என்று வெகுவாக தயங்கினான்.
ஏனோ வயதின் முள் ஏற ஏற அரவிந்தனினுள் சக மனிதருக்கான மென் பக்க பாதைகள் நீண்டுகொண்டே செல்வதாய் அவனுக்கே சில சமயங்களில் தோன்றுவதுண்டு. இல்லையெனில் அடாவடியான அனுகல்காரன் ஏன் அடுத்தவர் பக்கத்தையும் ஒரு முறை பார்க்கலாமோவென எண்ண வேண்டும்?
அவனது தயக்கத்தை கண்டுகொண்ட விக்ரமோ புருவங்களைச் சுருக்கி கேள்வியாய் நோக்கினான்,"அரவிந்த்?"
அரவிந்தன்,"இல்ல ராகேஷ் கொஞ்சம் நான் மேனேஜ்மெண்ட்டோட க்ளோஸ்னு ஒரு இமேஜ் உருவாக்கி வச்சிருந்திருக்கான்.." என்று எதையோ சொல்லத் தொடங்கவுமே அவனுக்குப் புரிந்துபோனது.
"ஸோ, இப்படியொரு ஜெர்க் என் பேரச் சொல்லி பவர் ப்ளே பண்ணிருக்கானு சொல்ற ஏன் இவ்ளோ நாள் விட்டு வச்ச? என் கவனத்துக்கு ஏன் கொண்டு வரல?" என்று ஏதோ சிறு பிள்ளையிடம் கேட்கும் குரலில் விக்ரம் கேட்க
அரவிந்தனுக்கும் ஆத்திரம் தொட்டிருக்கவேணும். எதையோ முடிவு செய்துவிட்டுக் குதிப்பவனிடம் நின்று பேச அவன் தயாராக இல்லை. ஏன் இந்த ராகேஷும் கூட அதற்கு அத்தனை தகுதியில்லை என்று உள்ளூர ஒரு ஓரத்தில் துளிர்த்த எண்ணத்தைத் தூரத் தள்ளியவனுக்கு ஆத்திரம் மட்டும் அடங்கியபாடில்லை. அதை முயன்று அடக்கியவனோ சன்னக் குரலில்,"என்ன செய்ய சொல்றீங்க? இவ்வளோ நாள் இப்படி ஒரு இஷ்ஷூ வரல.. யாருமே கொண்டு வரல, ராகேஷ் தான் கடந்த மூனு வருஷமா பெஸ்ட் பெர்ஃபாஃபமர் அவன் டீம்ல.. எல்லார்கிட்டயும் ரொம்ப ஜோவியல், போதாக்குறைக்கு உங்களோட க்ளாஸ்மேட் சோ இந்த மாதிரி எதுவுமே வரல.."
அதில் மௌனமாய் அந்த கணினித் திரையையே வெறித்திருந்த விக்ரம்,"லெட்ஸ் மீட் அவர் ஃப்ரெண்ட்" என்றான் சௌகரியமாக சாய்ந்தமர்ந்துகொண்டு.
விக்ரமை வினாடி பொழுது உற்று நோக்கிய அரவிந்தன் தனது கைப்பேசியைக் காதிற்கு கொடுக்க அடுத்த ஐந்தாவது நிமிடம் அங்கிருந்தான் ராகேஷ்.
சற்றே குழப்பம் பூசிய முகத்துடன் கதவை மெல்லத் திறந்தவன் விக்ரமின் புன்சிரிப்பில் வெகுவாய் குழம்பினாலும் ஏனோ நிம்மதி பிறக்க நிமிர்வாகவே உள்ளே நுழைந்தவன் விக்ரம் தனக்கு எதிரில் இருந்த இருக்கையை கை காட்டி "ப்ளீஸ் பி ஸீட்டட்" என்றதில் அடித்த எள்ளலின் வாசத்தை உணர்ந்தும் உணராதவனாய் அமர, அவன் அமரவும் வெளியே செல்ல எத்தனித்த அரவிந்தனை,"அரவிந்த் இருக்கலாம்" என்ற விக்ரமின் குரல் தடுத்து நிறுத்தியது. அதில் விக்ரமை வெறித்து நோக்கியவனோ வேறு வழியின்றி அசையாது நின்றான். மறைக்கும் முயற்சிகள் ஏதுமின்றி அரவிந்தனின் வதனம் இறுக்கமாய் கிடந்தது.
விக்ரம்,"அப்பறம் ராகேஷ் எப்படி இருக்க?" என்றான் ஆர்வமாய்.
சட்டென சம்பந்தமின்றி எழுந்த கேள்வியில் திகைத்தவனோ நிதானித்தவனாய்,"ஆல் குட் விக்ரம்" என்றான். அவனுக்கு இன்னும் புரியவில்லை தன்னை ஏன் அழைத்தான் என. அதுவும் எதோ நீண்ட கால நெருங்கிய நண்பனைப் போன்ற அவனது ஒருமை அழைப்பு வேறு உறுத்தியது. விக்ரம் அவ்வளவாக யாரிடமும் அமர்ந்து பேசுவதில்லை. அதற்கான நேரமும் இருந்ததில்லை, இருந்திருந்தாலும் அவன் அந்த ரகமில்லை. இத்தனைக்கும் அவர்கள் இருப்பது தலைமை அலுவலகத்தில். அவன் எவரிடமுமே நட்பு ரீதியில் நெருங்குவதில்லை. ஏன் கல்லூரிக் காலங்களில் சேர்ந்து படித்த தன்னிடம்கூட அவன் அதை நினைவிருப்பவன்போல நடந்துகொண்டதில்லை. ஏன் பயிலும் பொழுதிலுமே அவன் அப்படித்தானே! எவரையும் மதியாது மற்றவர்களாக வந்து பேசினாலும் அதில் அக்கறையற்று ஒதுக்கி விடுவான். அப்படியொரு பணத்திமிர் பிடித்தவன் என்று பல முறை ராகேஷே கரித்துக் கொட்டியிருக்கிறான்.
அப்படியிருக்கையில் எதிர்பாராமல் அழைத்து இந்த திடீர் அளவளாவலின் காரணம்தான் ராகேஷிற்கு புரியாமல் போனது. என்ன ஏதென்று புரியாவிட்டாலும் உள்ளுக்குள் சிறு குறுகுறுப்பாய் ஒரு ஆர்வம் துளிர்விடத் தொடங்கியிருந்தது. இவன் தான் போன வருடத்தின் எம்ளாயி ஆஃப் த இயர். இவன் போட்ட உழைப்பு அப்படிப்பட்டது. இம்முறை வேறு ஏதேனும் பிரத்தியேகமாக.. அல்லது போன முறை அவன் தலைமை அதிகாரியிடம் கேட்டிருந்த மாற்றல் பற்றி ஏதேனும் இருக்குமோ என்று பல எண்ணங்கள் இடறி விழுந்தாலும் அவ்வறையின் அமைதி அவனை எதையுமே முழுதாய் சிந்திக்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தன.
அதற்குள் அவனது பதிலில் விக்ரம் வெகு திருப்தி அடைந்தவனாய்,"கூல்.. " என்று தன் இருக்கையில் இருந்து எழுந்துகொண்டவன் மேசை மீதிருந்த தனது மொபைலை எடுத்து தனது கோட்டினுள் போட்டவாறு அரவிந்தனிடம் விழி அசைத்துவிட்டு அந்த நீண்ட கண்ணாடி மேசையைச் சுற்றிக்கொண்டு கதவருகே சென்றான்.
தன்னை வேலை மெனக்கெட்டு அழைத்து உட்கார வைத்துவிட்டு இப்பொழுது அதற்கும் அவனுக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல அவன் வெளியேறுவதை ராகேஷ் குழப்பமாய் பார்த்தான் என்றால் அரவிந்தனின் ஒப்புதலின்மை அவனது முகத்திலேயே தெரிந்தது.
வெளியே செல்ல ஓரடி எடுத்து வைத்த விக்ரம் கதவில் இருந்து தன் கைகளை எடுத்துக்கொண்டான் எதையோ திடீரென நினைவுகூர்ந்தவன் போலப் பார்வையைச் சிந்தனையாய் தரையில் பதித்து பிறகு ராகேஷிடம் திரும்பியவன்,"யூ மே கோ ராகேஷ்.." என்றதில் ராகேஷும் குழப்பமாய் எழுந்துகொள்ள
விக்ரம்,"அப்படியே உன் டெஸ்க்கையும் க்ளியர் பண்ணிடு, மீதி ஃபார்மாலிட்டிஸ அரவிந்த் பார்த்துப்பான். இட் வாஸ் வண்டர்ஃபுல் வர்க்கிங் வித் யூ! ஆல் த பெஸ்ட் ஃபார் யூவர் ஃப்யூச்சர் எண்டீவர்ஸ்" என்று வலுக்கட்டாயமாக தன் கைப்பிடித்துக் குலுக்கியவனின் மொழி புரியாதவனாக விழித்து நின்றான் ராகேஷ். அவனுக்கு ஒரு முழு நிமிடம் பிடித்தது விக்ரம் பேசியதைக் கிரகித்துக் கொள்ள. அதைக் கிரகித்து நிமிரும் முன் விக்ரம் அங்கு இருக்கவில்லை. அவன் வெளியேறி இருந்தான். இவன் பார்வை பரபரவென நிலைமையை முழுதாய் உணர முயல அதில் விழுந்தது வெளியே செல்ல நின்ற அரவிந்த்.
"என்ன சார் நடக்குது இங்க? எனக்கு புரியல" என்று குழப்பமும் பதட்டமுமாய் நின்றவனைக் காணவே அரவிந்தனுக்கு என்னவோ போலானது. அவனவனுக்கு என்னென்ன பொறுப்போ கவலையோ! இவன் செய்தது தப்பாகவே இருந்தாலும், வேலையை விட்டு நீக்குவதாகவே இருந்தாலும்கூட அதை முறைப்படியேனும் செய்திருக்கலாமே! அல்லது சிறு மனிதாபிமானத்துடனாவது எதற்கென்று சொல்லி இருக்கலாமே என்றுதான் தோன்றியது. விக்ரம் இடத்தில் இவன் இருந்திருந்தாலும் இதையே தான் செய்திருப்பான். ஆனால் இவ்வளவு குரூரமாய் செய்திருக்கமாட்டான்!
அரவிந்தனுக்கும் ராகேஷிடம் அத்தனை மதிப்பு இருக்கவில்லை அவனது செயலால் ஆனால் அதற்காக அவன் வாழ்வாதாரத்தை அசைக்க கூடிய ஒன்றை அப்படியே தூக்கி வீசிவிட்டுச் செல்ல மாட்டான். இது சுத்த குரூரம்!
"உங்க மேல ஆதாரப் பூர்வமான புகார் நிறைய இருக்கு ராகேஷ். இது மேனேஜ்மெண்ட்டோட முடிவு, வெறும் டிஸிப்ளினரி ஆக்ஷனோட நிறுத்திக்கலாம்னு" என்றவனது உணர்ச்சிகளற்ற குரல் ராகேஷினுள் வெந்நீர் மழை பொழிந்தது.
என்ன.. என்ன சொல்கிறான் இவன்? வேலை போய்விட்டதா? நிஜமாகவே போய்விட்டதா? எத்தனை உழைத்து.. என்று சென்ற மனம் திசை மாறியது, என்ன புகார் அதுவும் இவன் மேல்? ஏதோ டிஸிப்ளினரி ஆக்ஷன் எடுக்குமளவு எவர் கொடுத்த புகார் இது? அதுவும் ஆதாரப் பூர்வமான புகார்! நான் யார் கையை பிடித்து இழுத்தேன்? யாரைக் கட்டிப்பிடித்தேன்? என்று எண்ணினானே தவிர அவன் பேசியதைப் பற்றியோ நடந்துகொண்டதைப் பற்றியோ துளியும் கவலை கொள்ளவில்லை. அவனுக்கு அதெல்லாம் தவறாகவே தெரியவில்லையோ? இல்லை வெறும் பேச்சு வார்த்தையில் சீனி பூசிச் சொல்லும் நச்சு சொற்களை யார் எப்படி நிரூபிக்கக்கூடுமென்ற திண்ணக்கமோ! ஏதோ உடன் வேலை பார்ப்பவள்கள் தானே! சிரித்துப் பேசுகிறாயே இதையும் சிரித்துக்கொண்டே கேட்டுக்கொள் என்ற அடிமன வக்கிரமா? அல்லது நேரடியாய் தொட்டால்தானே தப்பு நான்தான் எல்லை மீறவில்லையே ஒரு நண்பன் அல்ல நெருக்கமானவன் என்ற எண்ணத்துடன் வரம்பு மீறும் வார்த்தைகளை 'உன்னால் ஒரு ஜோக்கை ஜோக்காக எடுத்துக்கொள்ள முடியாதா? இனி உன்னிடம் பேசவே இல்லை போதுமா?' போன்ற போலி பாவனைகளுக்குள் அடைத்துக்கொள்ளும் கபடமோ!
அரவிந்தனும் கைப்பையுடன் வெளியேறிவிட அப்பெரிய அறையில் தனித்து நிற்பதே அடைத்துக்கொண்டு வந்தது அவனுக்கு.
செவி முழுதும் மீண்டும் மீண்டும் அரவிந்தன் சொல்லிய "வெறும் டிஸிப்ளினரி ஆக்ஷனோட நிறுத்திக்கலாம்னு" என்ற வாக்கியமே ரீங்காரமிட்டன. என்ன போலீஸ் கேஸ் என்று போகாமல் இத்தோடு உன்னைப் போனால் போகிறது என்று விடுகிறோம் என்ற மிரட்டலா? அத்தனை உழைப்பைப் போட்டு இத்தனை வருடங்களில் தான் இங்கு முக்கியமானவன் என்று நிமிர்ந்து நின்றவனைத் தலையோடு சேர்த்து அமுத்தியது போலாக, தனக்கு மிகப் பெரிய அநியாயம் நடந்துவிட்டதாய் உணர்ந்தான் ராகேஷ்.
பார்க்கிங் லாட்டினுள் நுழைந்த அரவிந்தனுக்காகக் காத்திருந்தது அந்த பர்பிள் நிற டூ-டோன் நிஸான் சில்வியா. மனிதர்களிடம் முகம் கொடுத்துப் பேசாதவன்தான் நான்கு சக்கர வாகனங்கள் என்றால் உயிராய் இருந்து தொலைக்கிறான் என்று தோன்றாமல் இல்லை இவனுக்கு. ஆம், விக்ரமிற்கு கார் என்றால் தனிப் பிரியம். அதுவும் அவனது பிடித்தம் விலை, பெயர் என்று இல்லாமல் பரந்து விரிந்தது. விக்ரம் கார் விடயத்தில் வெகு வித்தியாசமானவன். ப்ராண்ட், ட்ரெண்ட், புதுசு என்று எதையுமே பார்ப்பதில்லை. இதோ இந்த காரைக்கூட வேலை மெனக்கெட்டுத் தேடிப்பிடித்து ஜப்பானிலிருந்து கொண்டு வந்திருக்கிறான்.
ட்ரைவர் ஸீட்டில் அமர்ந்து ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தவனைக் கண்டும் காணாதவனாக பாஸன்ஜர் இருக்கையில் ஏறி அமர்ந்தான் அரவிந்தன். இவனிடம் இதுவும் ஒன்று! பேருக்கு ஒரு ஓட்டுநரை வைத்திருக்கிறானே தவிர முக்கால்வாசி நேரம் வண்டி இவன் கையில்தான் பறக்கும்.
அரவிந்தன் அமர்ந்ததை உணர்ந்தவனாக மொபைலை அணைத்து வைத்துவிட்டு வண்டியைக் கிளப்பினான். அவனுமே அந்த மௌனச் சங்கிலியை அறுப்பதாய் இல்லை.
வாகனம் சாலையில் இறங்கி சீராய் நகர்ந்தது. அரவிந்தனின் கோபத் தகிப்பு அவ்வாகனம் முழுதும் பரவியது போல் சூழ்நிலையில் உஷ்ணம் குறையாது இருக்க, கடைக்கண்ணால் அவனை நோட்டம் விட்ட விக்ரம் பிறகு எஃப் எம்மை உயிர்ப்பிக்க, முதலில் இரைச்சலாய் அதிர்ந்த சத்தமும் அதைத் தொடர்ந்த பேச்சுக்குரலும் அரவிந்தனை உசுப்பிவிடச் சட்டென அதை அணைத்தான் அவன்.
அதை எதிர்பார்த்தவன் போல விக்ரம் மறுபடியும் அதை உயிர்ப்பிக்க இவன் மீண்டும் அதை அணைத்துவிடப் பொறுமையிழந்தவனோ,"என்ன அர்வி?" என்று வாய்மொழிக்கு வந்தான் விக்ரம்.
அதில் அவன் புறம் திரும்பியவனோ,"நீங்க செஞ்சது நல்லா இல்ல ஸார்" என்று இறுக்கம் தளராது பேச
விக்ரம்,"அர்வி!" என்று நிற்க இம்முறை வசதியாய் இவன் புறம் திரும்பியவனோ
"நீ இதுக்கு இந்தளவு பண்ணிருக்க வேணாம் விக்ரம். அவன் செஞ்சது நூறு சதவீதம் தப்புதான் நான் நியாயப்படுத்தல ஆனா அதையே கொஞ்சம் முறையா செஞ்சிருக்கலாம்.." என்று இழுத்தவன் விக்ரமின் கேள்விப் பார்வையைக் கண்டுவிட்டு
"அண்ட் ஐ நோ! நீ ஒன்னும் அவன் செஞ்சது தப்புன்ற ஒரே காரணத்துக்காக அப்படி நடந்துக்கல. யு ஜஸ்ட் வாண்டட் டு ப்ரூவ் ஹிம் யார் பவர்ஃபுல்னு" என்று கண்டனமாய் சொல்ல அதைத் துளியும் மறுக்காதவன் சாலையில் கவனம் பதித்துவிட்டுத் திரும்பினான்.
அரவிந்தனும் அவனிடமிருந்து எந்தவித பதிலையும் எதிர்பார்த்ததாய் தெரியவில்லை. மாறாகப் பெரிய மூச்சொன்றுடன் ஸீட்டில் சாய்ந்தமர்ந்துகொண்டான்,"உனக்கு எனிமிஸ நீயே உருவாக்கிப்ப" என்ற அலுப்புடன். அதில் மெல்லிய சிரிப்பொலி ஒன்றுடன் மறுப்பாய் தலை அசைத்தான் நண்பன் "எனக்கு உன்ன தவிர வேற எனிமியே கிடையாது"
ஓரக்கண்ணால் விக்ரமை நோக்கியவனோ,"ஏன் சொல்லமாட்ட? நீ லாஸ்ட் டைம் இழுத்து வச்சத சரி செஞ்சிட்டு திரும்பினா லைன் நீளுது.. லோக்கல் பொலிட்டிஷியன்ஸ்கூடலாம் ஏன் ஸார் வம்பு வச்சுக்கறீங்க அதுவும் அத்தனை கனெக்ஷன்ஸ் வச்சிக்கிட்டு?" என்றதில் அவன் புறம் பார்வையைச் செலுத்தியவனோ மீண்டும் சின்ன சிரிப்புடன் திரும்பிவிட்டான். கேவி க்ரூப்ஸ் ஆஃப் கம்பனீஸ். மூன்று தலை முறைகளாய் வளர்ந்து நிற்கும் சாம்ராஜ்யத்தின் இந்த தலைமுறையினன் விக்ரம். அவனது தாத்தா விருபாட்சணண் காலத்திலிருந்து இப்பொழுதுவரை எனப் பல முக்கிய பிரமுகர்கள் அவனது தெரிந்தவர் பட்டியலில் இருந்தும் இப்படி அடிக்கடி எங்கிருந்தாவது ஒரு குழுவோ தனி நபரோ வந்து மிரட்டிப் பார்க்கத் துணிவதும் மொத்தமாய் இல்லாமல் இல்லை. அதைத்தான் இப்பொழுது அரவிந்தனும் கிண்டலாய் குறிப்பிடுகிறான்.
அரவிந்தன் விக்ரமின் உயிர் நண்பன், ஒரே நண்பனும் கூட. பிக் ஃபோர் கம்பனி ஒன்றில் உயர்நிலையில் கை நிறைய சம்பளத்துடன் அமர்ந்தவன் விக்ரம் திடீரென்று ஒரு நாள் நீ இங்கு வந்துவிடு என்றதும் நீ யார் என்னை உத்தரவாய் அழைக்க என்றோ, ஏன் எதற்கென்றெல்லாம் கேட்டு கொண்டிருக்கவில்லை. மாறாய் மறு யோசனை இன்றி வந்துவிட்டான். அவனுக்கு விக்ரமை தெரியும். அதே போல் விக்ரமிற்கும் அரவிந்தனைத் தெரியும். அரவிந்தன் மனிதர்களை மையமாய் வைப்பவன், பீப்பள் ஓரியண்டட் பெர்ஸன். விக்ரம் அதற்கு நேரெதிர். இப்படிப்பட்ட எதிர் எதிர் துருவங்கள் இரண்டும் ஏதோ ஒரு புள்ளியில் நட்பைச் சந்தித்து அதை இன்றளவும் இறுக்கி வைத்திருந்தனர்.
அரவிந்தன்,"இத்தனையும் ஒரு வருஷம்கூட கம்ப்ளீட் செஞ்சிருக்காத ஒரு ஃப்ரெஷரோட மெயில வச்சு நடந்திருக்குனு இப்பவும் நம்ப முடியல.." என்றதில்
சாலையில் படர்ந்திருந்த விக்ரமின் முகத்தில் ஏதோவொரு சிந்தனை ரேகையாய் ஓட பார்வையை நகர்த்தாமல்,"நான் அந்த பொண்ண பார்க்கனும்" என்றவனில் அடுத்தவனின் பார்வை ஒரு நொடி பதிந்து மீண்டது.
"ஓகே"
நொடியில் மாறியவனாய் விக்ரம் மீண்டும் எஃப் எம்மின் சத்தத்தை கூட்டினான்.
"காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ" என்று இரைச்சலுடன் வந்த பாடலில் மீண்டும் அரவிந்தன் அதன் சத்தத்தைக் குறைப்பதும் அதற்கு விக்ரம் மறுபடியும் கூட்டுவதுமாக நடந்த க்ஷணப் போரில் சாலையில் இருந்த கவனம் விலகி மீண்ட நொடி இருவருமே அதிர்ந்தனர்.
ர்ர்ர்ர்.. என்ற கிரீச்சலுடன் நின்ற காரின் முன்னால் நின்ற பெண்ணுருவம் ஒன்று வண்டி நின்ற அதிர்வில் தொப்பென்று கீழே ரோட்டில் அமர்ந்துவிட, நொடியும் தாமதிக்காமல் இறங்கி ஓடினான் அரவிந்தன்.
அப்பொழுதுதான் அவள் சாலையைக் கடக்கத் தொடங்கியிருக்க வேண்டும்! இவர்கள் எதிர்பாராமல் வந்து ப்ரேக் அடித்து நின்ற அதிர்வில் தான் அமர்ந்துவிட்டாள் என்ற சூழல் உரைக்கவே விக்ரமிற்கு சில நொடிகள் பிடித்தது. அதற்குள் இறங்கி ஓடியிருந்தான் அரவிந்தன்.
எதிரில் கீழே இருந்தவள் புறம் சற்றே குனிந்து அவள் எழுந்துகொள்ள வசதியாக கை நீட்டி நின்ற அரவிந்தனின் முகத்தில் மலர்ந்த அலாதி ஆர்வமும் இவன் கவனத்தில் விழுந்தாலும் கருத்தில் மந்தமாய் நிழலாடத் தன்னிச்சையாய் கீழே அமர்ந்திருந்தவளிடம் விழுந்தது இவன் பார்வை.
நாட்குறிப்பில்..
வாழ்க்கை எப்பொழுது இப்படி வசந்தமற்று போனது.. பல வண்ண மலர்கள் பொங்கி வழியாவிடினும் எங்கோ ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டு கிடந்த சிறு துளி நம்பிக்கையும் சிற் சிறு ஆசைகளும்கூட அற்றுப்போன நிலைதான் ஏனோ..
பல சமயங்களில் எனக்கெதிரே
இந்த உலகம் நிற்கிறது
சில சமயங்களில்
நானே நிற்கிறேன்
முதலாவதை நெஞ்சு நிமிர்த்தித்
தட்டிப்போட முடிந்த அதே நான்
இரண்டாவதின் காலடியில்
சுண்டு விரலைக்கூட நிமிர்த்தத் திராணியற்று சுருண்டுகொள்வதுதான் விநோதம்
நிசப்பூதம் எங்கிருக்கிறது என
✍️ எழுத்தாளர்: Yagnya
இந்த படைப்பு எழுத்தாளரின் அறிவுசார் சொத்து.
