🌿 Featured Story

அன்பில் அவன் அலாதி

கோடைக்கால நினைவுகளின் கதை.

📖 Read Story

🎧 Audiobooks

Listen to our stories while travelling, resting or dreaming.

Enter Our Audio Story World

Romance, thrillers, healing stories & emotional journeys, now in audio form.

🌿 Fresh Updates

New chapters, articles, announcements & story updates.

மீண்டும் மையலானேன் - 1

✍️ எழுதியவர் Yagnya


 1

 

அந்தி மாலை நேரம் அது. பொதுவாகவே அந்திமாலை நேரமென்றால் எழும் செவ்வான கற்பனை போல் அல்ல, மாறாக மெல்லிய நீலத்தில் இருள் கவியத் தொடங்கியிருந்த வான் அடியில் உயர்ந்து நின்ற தைல மரங்களின் கையணைப்புக்குள் அடங்கி நின்றது அந்த பூங்கா. சுமார் 2005ல் இருந்து 2006வரை வந்த சில திரைப்படங்களுக்குள்ளேயே வந்துவிட்டதுபோன்ற மாயைத் தரும் நீலம் பாய்ந்த வானும் ஊசிக்குளிர் உணர்வுமாக வானிலை இருக்க, இலைகளின் மேல் பனித்துளி படுத்துறங்க ஆயத்தமாகிக்கொண்டிருந்த அதே வேளையில், அப்பூங்காவின் இன்னொரு மூலையில் ஒருவனின் குரல் அந்த அந்தி நேர ஏகாந்தத்தை உடைத்துக்கொண்டு அபஸ்வரமாகக் காற்றில் பரவத் தொடங்கியது.

 

 "இல்லை, உன்னால முயற்சி பண்ணிக்கூட பார்க்க முடியாதில்ல?" 

 

எதிரில் இருந்தவளிடம் மௌனம். அதில் பொறுமையிழந்தவனோ தலையை அழுந்த கோதிக்கொண்டு

 

"அப்படி என்ன திமிர்டி உனக்கு? காதல்னா என்னனு தெரியுமா? உனக்கெப்படி தெரியும்! அதுக்கெல்லாம் மனசுனு ஒன்னு இருக்கனும்! இல்லை அப்படி இருக்கவங்ககூட பழகிருக்கனும். இருபத்தி நாலு மணி நேரமும் செவுத்த பாத்துட்டும் வானத்த வெறிச்சிட்டும் உக்காந்துருக்கற உனக்கு எப்படி தெரியும்?" 

 

இதற்கும் அவளிடம் வெறும் மௌனம் மட்டுமே. சுதாரித்து நிதானித்தவனாக இறங்கி வந்தான்

 

"இங்க பாரு, எனக்கு உன்ன பார்த்ததுமே பிடிச்சிது. அதனாலதான் மூனு மாசமா நீ அப்படி பேசாம போனப்பவும் உன்கிட்ட பேச ட்ரை பண்ணிட்டிருக்கேன்.. ஃப்ரெண்டாக ட்ரை பண்ணேன். ஆனா நீ ஒரு மூனு நிமிஷம்கூட எனக்காக யோசிக்கலல? பிடிச்சிருக்கு லவ் பண்றேனு சொன்னா, கொஞ்சம்கூட யோசிக்காம நோ சொல்ற?" என்று பேசிக்கொண்டே போனவனின் வாயில் வேறுவித வார்த்தைகள் சிலது ஆங்கிலத்திலும் தமிழிலுமாய் வந்து விழப் பாதி முணுமுணுத்து மீதி மறுபுறம் விழுங்கி தன்னை சமன் செய்ய முயன்றவன் மீண்டும் அவள் முகம் பார்க்க, இப்பொழுதும் அதில் எந்தவித மாற்றமுமில்லை. 

 

மௌனம், மௌனம்.. மௌனம் மட்டுமே. 

 

அவளது அசாத்திய மௌனம் அவனது ஆத்திரத்தை இன்னும் தூண்டியது. அவளது மறுப்பையே தன்னை அவமதிப்பதாய் நினைத்தவன் அவளது இந்த அமைதியை தன் கௌரவத்திற்கு வந்த இழுக்காகவே கருதினான். ஓங்கி அறைந்துவிட கை துருதுருத்தது. 

எவ்வளவு திமிர் இவளுக்கு? நான் இறங்கி வந்து காதல் சொன்னால் இவள் மறுப்பாளாமா? 

 

கை முஷ்டி இறுக நின்றவன்,"என்ன சொல்லனும்! அத்தனை பேர் என்கிட்ட வந்து வந்து பேசியும் பேசாத உன்கிட்ட வந்து நின்னேன்ல.. அந்த திமிர் உனக்கு! ச்சீ! உன்ன போய் காதலிச்சேன் பாரு" என்று கோபத்தில் முகம் சுளித்தவன் திரும்பி நடக்கத் தொடங்கினான். 

 

 ஐந்தடி வைத்திருப்பான். மீண்டும் இவள் புறம் திரும்பியவன்,"எழுதி வச்சுக்கோ ஒருத்தரோட ஃபீலிங்கஸ புரிஞ்சுக்கத் தெரியாத, மதிக்கத் தெரியாத நீயெல்லாம் கடைசிவரை தனியாதான் நிக்க போற!" என்று கட்டியம் கூறிவிட்டுத் திரும்பி நடந்து வெளியேறிவிட்டான் அவன். 

 

அவ்வளவு நேரம் காட்டு கத்தல் கத்தியவனின் தலை மறைந்ததும் அவள் சந்தோஷம் கொள்ளவில்லை. அதற்காக அவன் பேசிச் சென்ற வார்த்தைகளால் அழவுமில்லை. அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தாள். 

 

இந்த காதல் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றிவிடுகிறது. முதலில் இது காதலா? மூன்று மாசத்திற்கு முன் சந்தித்தவன், தன்னை தற்செயலாகச் சந்திப்பது போல முதலில் பேசியவன், பிறகு துரத்தித் துரத்தி நட்புக் கரம் நீட்டியவன். இவள் மரியாதைக்காக இரு வார்த்தை பேசவுமே காதல் என்று வந்து நின்றவன். அதை மறுத்த ஒரே காரணத்திற்காக அவளைக் காதலுக்கே தகுதியற்ற பிறவி என்று சொல்லிவிட்டுச் செல்கிறான். அவன் மனதை மறுத்ததிற்காக அவளுக்கு இதயமே இல்லை என்றுவிட்டான். எந்த மௌனத்தைப் பார்த்து பிடித்தது என்று முதலில் சொன்னானோ அதே மௌனத்திற்கு திமிரென்று பட்டம் சூட்டிவிட்டான். இதுதான் காதலா?

 

இருக்கலாம், இதுவும் காதலாக இருக்கலாம்.. அவன்  சொன்னதுபோல அவள் அறியாமலும் இருக்கலாம். ஆனால் அவளறிந்த காதல் இப்படியில்லை. அது வேறு! அது ஒரே சமயத்தில் உயிரை உருகவும் வைத்து ஒளி வீசவும் வைக்கும். ஆம்! அப்படிதான் அதில் எழுதியிருந்தது. அந்த டைரி! 

 

நினைவு வந்தவளாகத் தனது தோள் பையை தேடியவளுக்கு அப்பொழுதே தான் தனது வழமையான மாலை நேர நடைக்குப் பூங்கா வந்தது நினைவு வந்தது. பையை எடுத்து வரவில்லை. நொடியும் தாமதிக்காமல் வீட்டை நோக்கி நடந்தாள். 

 

அது நான்கு வீடுகளைக் கொண்ட கட்டிடம். அதில் கீழ் இரண்டு வீடுகளும் தற்சமயம் காலியாய் இருந்ததை அந்த அசாத்திய அமைதியே சொன்னது. கீழ் வீடுகளில் ஒரு வீடு காலியாக இருக்க மற்றொன்றில் வசிக்கும் குடும்பம் வெளியூர் சென்றிருப்பதாக யாரோ சொல்லிய நினைவு. மேலிருக்கும் ஒரு வீட்டில் இவளது வாசம். மற்றொன்றிலும் யாரோ இருக்கிறார்கள்தான், ஆனால் இதுவரை அவள் அவ்வீட்டு மனிதனைப் பார்த்ததில்லை. அவளைப் போலவே அவனும் அமைதி விரும்பி என்று கீழ் வீட்டு அக்கா ஒரு முறை சொல்லிய ஞாபகம். சமீபத்தில் தான் குடி வந்திருந்தான். 

 

மஞ்சள் விலக்கு மட்டும் வாசலில் எரிந்துகொண்டிருக்க, விறுவிறுவென கதவைத் திறந்துகொண்டு வீட்டிற்குள் நுழைந்தவள் மூச்சுக்காற்றைத் தேடுவதைப் போலப் பையைத் தேடி அந்த நாட்குறிப்பை எடுத்தவள் அப்படியே அந்த மேசையின் கால் அருகே தரையில் அமர்ந்துவிட, அவளது கை பரபரவென பக்கங்களை புரட்டியது.

 

இதோ.. கிடைத்துவிட்டது. 

 

 இது இந்தப் பதிவேட்டின் முதல் பக்கமாக இல்லாமல் போகலாம். ஏன் என் பதிவுகளில் முதல் பதிவாக இல்லாமல் போகலாம். ஆனால் இதுதான் என் வாழ்க்கையின் மிக முக்கிய பக்கத்தின் முதல் பதிவு. அன்று தான் நான் அவனை முதல் முறையாகப் பார்த்தேன்.. 

 

அது கல்லூரியின் முதல் நாள்.. புதிதாகச் சிறகு முளைத்த சீனியர்கள் தங்கள் வீரத்தைக் காட்டும் பொருட்டு காட்டும் ரேகிங் போன்ற குறளி வித்தைகளுக்கு நானொன்றும் விதிவிலக்கல்ல. அதுவும் அப்போதைய என் தோற்றமே என்னை தனித்துக்காட்டிக் கொடுத்துவிடும். 

 

"ஹே பொண்ணே! இங்க வா" என்ற குரலில் திரும்பிய எனது பார்வை அழைத்தவனைவிட அவன் முன் கைகளை மேலே தூக்கியபடி நின்றுகொண்டிருந்தவன் என் புறம் தலையை மட்டும் திருப்பியதில் தான் நின்றது. 

 

சிறு தயக்கத்துடன் நான் அவர்கள் அருகே சென்றேன். கீழ்க்கண்ணில் அவன் பிம்பம். 

 

என்னை அழைத்த சீனியர்,"ஃபர்ஸ்ட் இயரா? என்ன கோர்ஸ்?" என்றான். ஏதோவொரு காரணத்திற்கு அவன் தான் அங்கு பலவான் என்று காட்டுவதற்காக அவன் மெனக்கெட்டு தாடையை தூக்கிப் பேசியது எனக்கே சிரிப்பு மூட்டியது.

அதை அடக்கியவளாக,"ஆமாம், பி.காம்" என்றேன். சீனியர் கண்ணில் ஒளிக்கீற்று! அவன் கண்ணில் மட்டுமில்லை, அவனுடன் நின்ற மற்றவர்கள் கண்களிலும். அது எனது ஆக்ஸெண்ட்காக என்று புரிந்தாலும் புரியாததுபோல் நின்றேன். 

 

மெல்லிய சீட்டிக்கை அடித்தவன் என்னைக் கீழிருந்து மேலாக ஒரு பார்வை பார்த்துவிட்டு,"அம்மணி பேரென்ன?" என்றான். அவன் பார்த்த பார்வையில் காதைப் பிடித்தே திருகிவிடும் ஆசை எழுந்தது என்னுள்.

 

 "நோவா" என்றதோடு நான் மௌனமாகிவிட சீனியரின் பார்வை அர்த்தமாக அவன் கூட்டத்தைப் பார்க்க அங்கு கொல்லென ஒரு சிரிப்பலை பரவியது. 

 

"இந்த வருஷம் ஜூனியர்ஸ் பெயருக்கே மேகஸின்ல தனி காலம் போடலாம் போலடா!" என்றவனின் பேச்சு எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை. 

 

என்னருகில் கையை தூக்கிக்கொண்டு நின்றிருந்தவனின் பற்கள் அரைபடும் சத்தம் எனக்குத் தெளிவாகக் கேட்க, சீனியர் பேச்சு சரியில்லை என்பதை மட்டும் உணர்ந்தேன். 

 

"நோவா தான உன் பேரு?" என்றவன் என் அருகில் நின்றவனிடம் திரும்பி,"தம்பி பேரு என்ன சொன்னீங்க?" என்று கேட்க எனக்கோ என்னை விட்டால் போதும் என்றானது. 

 

"மலர்விழி.." என்று தொடங்கியவனை "போதும் போதும் போதும்!" தடுத்து நிறுத்தின சீனியர் 

 

"என்ன சொல்லிருக்கேன்? யாரு கேட்டாலும் மலர்னு மட்டும்தான் சொல்லனும்" என்று உத்தரவிட அவனையே வெறித்து நோக்கியவனோ 

 

"மலர்" என்றான். அதில் திருப்தியடைந்தவனாக அந்த சீனியர் என்னிடம்,"என்ன பேரு வைக்கறாங்க இப்பலாம்?  பொண்ணுக்கு நோவா வலியானு வச்சிட்டு பையனுக்கு மலர்னு வச்சி.. ச்சே ச்சே ச்சே!" என்று பாவனையாய் அலுத்துக்கொண்டான். 

 

சொல்ல மறந்துவிட்டேன், எனக்கு என் பெயரைக் கிண்டல் செய்தால் சுத்தமாகப் பிடிக்காது. எனக்கு அவன் முடியைப் பிடித்து ஆட்டிவிடும் ஆவேசம் எழுந்தது. 

 

நான் உர்ரென்று நிற்க அவன் ,"அப்பறம் நோவா, நீயும் நம்ம மலர் மாதிரி கையை தூக்கிட்டு முட்டிப் போட்டிரு" என்றுவிட்டு நகர, 

அவ்வளவுதான்! இன்று இவனை.. என்று நகரப் போன என்னை என் கரம் பற்றி யாரோ தடுத்தார்கள். 

 

திரும்பி பார்த்தேன் அருகில் இருந்த அந்த "மலர்" தான். என்ன கண்ணுடா! என்பதுதான் எனது முதல் எண்ணமாக இருந்தது. இவனுக்குக் கண்ணை பார்த்துத்தான் இப்பெயரை வைத்திருப்பார்களோ என்னவோ! 

கண்ணை கண்ணை உருட்டிக் காட்டியவன் என்னை முட்டிப் போடச் சொல்ல முதலில் தயங்கிய நான் பிறகு மண்டியிட்டு கைகளைத் தூக்கியபடி நிற்க, என் புறம் சாய்ந்த மலர், எனக்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில்,"எனர்ஜி வேஸ்ட் பண்ணாத" என்று வந்த பதில் நிச்சயம் நான் எதிர்பார்த்தது இல்லைதான். 

 

திரும்பி சீனியரை பார்த்தேன். அவன் அடுத்த செட் ஜூனியர்களிடம் கேள்விக் கணைகளைத் தொடுத்துக்கொண்டிருந்தான். சிரிப்புதான் வந்தது எனக்கு.

 

அவனைப்போலவே லேசாக அவன் புறம் சாய்ந்து அதே மெல்லிய குரலில்,"அப்போ ஓடிரலாமா?" என்றேன். அதற்கு என் புறம் முழுதாக திரும்பி ஒரு ஆச்சரிய பார்வை பார்த்தவன், பிறகு பழையபடி திரும்பிவிட்டு அதே மெல்லிய குரலில்

 

"இப்ப இல்ல, அஞ்சு ஸெகண்ட்ஸ்" என்றான். 

 

நான் புரியாமல் அவனைப் பார்க்க, அவன் வேறு மாணவர்களுடன் பேசியபடி திரும்பி நிற்கும் சீனியர்களிடம் பார்வையைப் பதித்து மண்டியிட்டபடியே பின்னால் நகர, நானும் அவனை பின்பற்றி நகர

 

சீனியர் எதேச்சையாகத் திரும்புகையில் அசையாமல் நின்று பிறகு மீண்டும் நகர்ந்து என அவனுடன் சேர்ந்து ஏதோ பெரிய ரகசியத்தைப் பாதுகாக்கும் விளையாட்டு விளையாடும் உற்சாகம் என்னைத் தொற்றிக்கொண்டது. 


"அஞ்சு.. நாலு.. மூனு.." என்று எனக்கு மட்டும் கேட்கும் விதமாக முணுமுணுப்பாக எண்ணியவன் ஒன்று என்று எண்ணுவதற்குப் பதில் என் கையை பற்றி இழுத்தபடி எழுந்து ஓட, அவன் கைப்பிடியின் திசையில் இலக்கற்று ஓடத் தொடங்கிய நினைவு இப்பொழுதும் பசுமையாய் நெஞ்சினுள். வேர்க்க விறுவிறுக்க ஓடி கல்லூரி வளாகத்தின் பின்பக்கம்  வந்துவிட, அங்கு யாருமில்லாததை உறுதி செய்துகொண்டு மூச்சு வாங்கச் சுவரில் சாய்ந்துவிட்டதும், மூச்சுக்குத் திணறிய ஒருவர் முதுகை மற்றவர் தட்டிக்கொடுத்துவிட்டு நிமிர்ந்த நொடி இவருவருக்குமே சிரிப்பு பீறிட்டு கிளம்ப, அன்று அந்த பின்பக்க மைதானம் முழுதும் எதிரொலித்தது அந்தச் சிரிப்பு சத்தம்.

அதுதான் மலருக்கும் எனக்குமான முதல் சந்திப்பு. 

நான் ஒரே சமயத்தில் அழிக்கவும், பொத்தி பாதுகாக்கவும் துடிக்கும் முதல் சந்திப்பு.

— “மீண்டும் மையலானேன்” கதையிலிருந்து ஒரு பகுதி  
✍️ எழுத்தாளர்: Yagnya 
இந்த படைப்பு எழுத்தாளரின் அறிவுசார் சொத்து.


அடுத்த அத்தியாயம்

📖 இந்த தொடரின் அத்தியாயங்கள்