🌿 Featured Story

அன்பில் அவன் அலாதி

கோடைக்கால நினைவுகளின் கதை.

📖 Read Story

🎧 Audiobooks

Listen to our stories while travelling, resting or dreaming.

Enter Our Audio Story World

Romance, thrillers, healing stories & emotional journeys, now in audio form.

🌿 Fresh Updates

New chapters, articles, announcements & story updates.

மீண்டும் மையலானேன் - 2

✍️ எழுதியவர் Yagnya

 2

'க்ரீச்ச்' என்ற சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தாள் அவள். 


எப்படி எப்பொழுது கண்ணயர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. டைரியை நெஞ்சோடு சேர்த்தணைத்தபடி அந்த சுவரோரமாகவே தரையில் சரிந்திருக்க வேண்டும். 


கன்னங்களில் இன்னமும் விழி நீரின் பிசுபிசுப்பு மீந்திருக்க, அது இன்று அவன் பேசியதால் வந்ததா இல்லை அந்த டைரியால் வந்ததா என்பது அவளுக்கே வெளிச்சம். 


தலை கனப்பதுபோல் இருக்க மெல்ல எழுந்தமர்ந்தவளின் செவியில் மீண்டும் விழுந்தது அந்த 'க்ரீச்ச்' சத்தம். அது அவள் சாய்ந்து அமர்ந்திருந்த சுவரின் மறுபுறம் இருந்துதான் வருகிறது என்பதை உணர்ந்தவளுக்கு அந்த பக்கத்து வீட்டுக்காரனிடம் எக்கச்சக்க கோபம் எகிறியது. 


இதே தொல்லை இவனிடம்! எப்பொழுதும் கட்டில், மேசை, இருக்கை என எதையாவது நகர்த்துவதும் அல்லது பந்தை சுவரில் அடித்து விளையாடுவதுமாய் அவளை பல முறை படுத்தியெடுத்துவிட்டான். 


கீழ்வீட்டைப் போலல்லாமல் மேல் இரண்டு வீடுகளும் ஏதோ ஒரே வீட்டை இரண்டாய் பிரித்து இரண்டு வாசல் வைத்ததுபோல ஒட்டி நிற்பதே இதற்கு காரணம். இவளது முகப்பறையும் அடுத்த வீட்டுப் படுக்கையறையும் அடுத்தடுத்து இருக்க, அங்கு அவன் எதை நகர்த்தினாலும் இங்கு இவளுக்கு அது இம்சையாகிவிடுகிறது. 


நகர்த்தி முடித்துவிட்டான் போலும். சத்தம் நின்று மீண்டும் நிசப்தம் நிறையத் தொடங்கியிருந்தது. மணியைப் பார்த்தவள் தன் முகத்தை அழுந்த துடைத்தவிட்டு எழுந்து இருக்கையில் கழட்டிப் போட்டிருந்த ஜேக்கெட்டை அணிந்துக்கொண்டு வெளியேறினாள். 


இருபது நிமிட நடையில் அவள் அந்த புத்தகக் கடையை அடைந்திருந்தாள். அவளது வீட்டிற்கு அடுத்து அவள் அடைக்கலம் புகும் இன்னொரு இடம் இந்த புக் ஸ்டோர்/நூலகம் தான். இது புத்தகக் கடையாக இருந்தாலும் அந்தப் பகுதி மக்களுக்கான நூலகமும்கூட. முதல் தளத்தில் நூலகமும் கீழ் தளத்தில் கஃபேயுமாக இருக்க, இது இல்லையெனில் அது என எப்படியும் தினமும் அவள் அங்கு வந்துவிடுவதுண்டு. 


இன்றும் குளிருக்கு அடக்கமாய் ஜேக்கெட்டினுள் தஞ்சம் புகுந்திருந்தவள் படியேறுகையில், முதல் தள காபி வாசமிழுக்க கஃபேயின் கூட்டத்தில் ஒரு கண்ணை வைத்துக்கொண்டே மேலேறினாள். 


கீழிருக்கும் கஃபேக்கு நேர்மாறாக அவ்வளவு அமைதியாய் இருந்தது அந்த இடம். ஆங்காங்கே சிலர் கையிலொரு புத்தகத்துடன் ஐக்கியமாகி இருக்க, மாணவர்கள் கூட்டம் ஒன்று ஓர மேசையில் தீவிரமாக ஏதோ குறிப்பெடுத்து எழுதிக்கொண்டிருந்தனர். 


இவள் உள்ளே நுழையவும் கௌண்ட்டரில் நின்ற ஜனார்தன் இவளை கவனித்துவிட்டு புன்னகையுடன் தலையசைத்தார். 


அதற்கு பதில் புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு உட்பக்கமாக இருக்கும் பகுதிக்கு நகர்ந்தாள். 


உட்பக்கமாக போடப்பட்டிருக்கும் சதுர மேசையை பொதுவாகவே அங்கே யாரும் நாடுவதில்லை. முக்கால்வாசி மக்கள் அங்கு சாளரத்தை ஒட்டிப் போடப்பட்டிருக்கும் விண்டோ சீட்களிலேயே வசதியாய் அமர்ந்துகொள்ள விரும்புவர். மீதமிருப்பவர்களும் ஆங்காங்கே பரத்தி போடப்பட்டிருக்கும் வட்ட மேசைகளையே விரும்ப, கிட்டத்தட்ட எல்லா நாட்களுமே இந்த உட்பக்க மேசை காத்து வாங்கிக் கொண்டுதான் இருக்கும். 


இரண்டு ரேக்குகளுக்கு நடுவில் இருக்கும் மேசையை யாரும் அவ்வளவாக சீண்டுவதில்லை. ஆனால் அப்படி அடைந்தாற்போல் இருக்கும் மேசைதான் இவளது ஆஸ்தான இடம். 


இன்றும் ஒரு புத்தகத்தை ரேக்கில் இருந்து உருவிக்கொண்டு வந்தவளின் நடை தடைப்பட்டது. 


அய்யோ மீண்டும் இவனா? என்ற ஆயாச உணர்வு அந்த மேசையில் வாட்ட சாட்டமாக அமர்ந்திருந்த இளைஞனை கண்டு. 


கண்களுக்கு முன் அவன் நேற்றடித்த கூத்து வேறு படமாய் ஓடியது. 


நேற்றும் மாலை நேரம் ஓய்வாய் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு இவள் வந்திருக்க, வழக்கத்துக்கு மாறாக இவளது மேசையில் ஒருவன் அமர்ந்திருந்தான். அது நால்வருக்கான மேசைதான், இருந்தும் இத்தனை காலம் தனியே ஆட்சி செய்த இடத்தில் புதிதாக ஒருவன் வந்துவிட்டதில் சிறு சுணக்கம் அவளுக்கு. அதிலும் புத்தகத்தினுள் தலையை திணித்துக்கொண்டு தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்தவனை ஒரு முறை பார்த்துவிட்டு, தோள்களை குலுக்கியவளாக அவன் இருந்த இருக்கைக்கு மறு ஓர இருக்கையில் சென்று அமர்ந்தாள். 


சில நொடிகளில் அவளும் புத்தகத்தில் ஆழந்திருந்தாள். அவன் அவ்விடத்தின் மௌனத்தை கிழித்துக்கொண்டு அலறும்வரை!


முதல் சில நொடிகள் தனக்கு பக்கவாட்டு மூலையில் இருந்தவனிடம் இவளது கீழ்ப்பார்வை அவ்வப்பொழுது சென்று வந்தாலும் சற்று நேரத்தில் எல்லாம் இவளது கவனம் புத்தகத்தில் புதைந்துபோகத் தொடங்கிய தருணம் அருகில் இருந்து திடீரென எழுந்தது 


"வாட்! வாட்? வாட் த ஹெல்? வாட் த ஹெல் டிட் ஐ ஜஸ்ட் ரீட்?" உரத்து ஒலித்த குரல். 


புத்தகம் விழுந்தால் கூட பலக்க கேட்கும் இடத்தில் அமர்ந்துகொண்டு இவன் அலறினால்? அனைவரும் அதிர்ந்து விழிக்க, ஜனார்தன் அதே அதிர்வுடன் என்னவோ ஏதோவென  ஓடி வந்தவர் இவனை கண்டுவிட்டு நிம்மதியடைந்தவராக மற்றவர்தளுக்கு ஒன்றுமில்லை என கண்ணசைத்துவிட்டு அவனிடம் மெல்லிய குரலில்,"எனி ப்ராப்ளம் சார்?" என்று கேட்க 


அவனோ,"எஸ்! என்ன இப்படி எழுதி முடிச்சிருக்காங்க இவங்க? இதுக்கா இவ்வளவும்? இதுக்கா இவ்வளவு தூரம் கொண்டு வந்தாங்க? ஏன்? ஜஸ்ட் வை? ஐ நீட் ஆன்சர்ஸ்!" என்றான் இன்னும் புத்தகத்திலேயே கவனமாய். 


அவனை விநோதப் பார்வை பார்த்த ஜனார்தன் அவன் அப்படியும் இப்படியுமாக திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருந்த புத்தகத்தை எட்டிப் பார்த்தார். 


'நீலக்குருவிகள்' என்ற பெயரை கண்டவரின் பார்வை ஒரு முறை இவளிடம் பாய, இவளோ அப்படியொருவன் அங்கு இருப்பதாகவே காட்டிக்கொள்ளாதவளாக கையிலிருந்த புத்தகத்தில் கவனமாகியிருந்தாள். 


அதில் பெருமூச்சொன்றை இழுத்துவிட்டவராக,"சார், கொஞ்சம் மெதுவா. மத்தவங்க டிஸ்டர்ப் ஆகறாங்க" என்று பணிவாய் சொல்ல 


அவனோ,"நானும் ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டேன். ஏன் இப்படி பண்ணாங்க இவங்க?" என்று மீண்டும் அங்கு இங்கு சுற்றி அதற்கே வந்து நின்றான். 


ஜனார்தன் வெகு பிரயத்தனப்பட்டு பொறுமையை பிடித்து வைத்துக்கொள்வதை உணர்ந்தவளுக்கு சிரிப்புதான் வந்தது. 


ஜனார்தன்,"புரியுது சார், இப்போலாம் எழுத்தாளர்கள தொடர்பு கொள்றது என்ன அவ்வளவு சிரமமா? அந்த புக்லயே மெயில் ஐடி இருக்கலாம்.." என்று நாசுக்காக என் வேலையை கெடுக்காதே என்றுவிட்டு அவர் அகன்றுவிட. 


அவனோ இன்னமும் முணுமுணுவென்று எதையோ புலம்பிக்கொண்டே இருந்தான். ஒரு கட்டத்திற்கு மேல் அந்த புலம்பலும் அவளுக்கு பழகிவிட புத்தகத்தில் ஆழ்ந்தவள், மீண்டும் நிகழ் உலகிற்கு வந்தப் பொழுதும் அந்த மேசையில் அவள் மட்டும்தான் இருந்தாள். 


நேற்று திரும்பி வீடு வரும்வரையிலுமே அவனைப் பற்றிய சிந்தனைதான் அவளுக்கு! 


அவளும் பல மணி நேரங்கள் செலவழித்து படித்த புத்தகத்தின் முடிவு சரியாக இல்லையென்றாலோ இல்லை அதிருப்தி தந்தாலோ புலம்புவாள்தான், ஏன் எத்தனையோ முறை கோபம்கூட வந்திருக்கிறது, கத்தியிருக்கிறாள். ஆனால் எல்லாம் ஒன்று மனதிற்குள்ளாக இருக்கும் இல்லை அவள் வீட்டு அறைக்குள்ளாக இருக்கும். இப்படி இடம் பொருள் ஏவல் என்று எதுவும் பாராமல், மற்றவர்களுக்கு தொல்லையாக இருக்கும் என்று நினையாமல் பொது இடத்தில் கத்தி புலம்பியதில்லை. 


அவன் அப்படி கத்தும் அளவிற்கு அந்த புத்தகத்தில் ஒன்றும் அவ்வளவு கொடூரங்கள் இருப்பதாக அவளுக்கு தோன்றவில்லை. என்ன அது 'ஹேப்பி எண்டிங்' வகையறா கதையல்ல. ஆனால் அதற்கே ஒருவன் இப்படி கத்துவது என்றால் அவன் எப்படிப்பட்ட சௌகரிய வாழ்வை வாழ வேண்டும் என்று அவளால் எண்ணாமல் இருக்க இயலவில்லை. 


அப்படி கத்தி கலாட்டா செய்தவன் இனி இந்தப் பக்கம் வரமாட்டான் என்று இவள் நினைத்திருக்க, அவன் என்னவென்றால் அடுத்த நாளே வந்து அமர்ந்துவிட்டான். அதுவும் அதே எழுத்தாளரின் இன்னொரு புத்தகத்துடன். 


இன்றும் அவனை கண்டுகொள்ளாதவளாக சென்று அதே மூலையில் அமர, அவனோ பெரியதொரு புன்னகையுடன்,"சாரி நேத்து கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்" என்று இவள் கேட்காத விளக்கங்களை கொடுத்தான். 


அதற்கு இவளுக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்றே விளங்கவில்லை. வெறும் தலையசைப்போடு ஜாக்கெட்டை கழட்டி நாற்காலியின் கழுத்தில் போட்டுவிட்டு அமர்ந்தவள், எங்கே அவன் பேசிவிடுவானோ என்ற அச்சத்தில் கையிலிருந்த புத்தகத்தினுள் தலையை புதைக்க முயன்றாள். 


ஆனால் அவன் விடுவதாயில்லை. 


"நீங்க இந்த ஊருதானா?" என்ற திடீர் கேள்வியில் உள்ளே திடுக்கிட்டாலும் வெளியே அவனை வெறித்து நோக்கியவள் ஒரு "ம்ம்" உடன் மீண்டும் திரும்பிவிட்டாள். 


"நைஸ்" என்றவன் அத்தோடு விடுவான் என்று அவள் நினைக்க அவனோ,"நான் மூனு மாசமாதான் இங்க இருக்கேன்.. ஸச் எ லவ்லி ப்ளேஸ், குளுகுளுனு இந்த வெதரும் அப்பப்ப அடிக்கற சாரலும்னு நல்ல அமைதியான இடம்ல?" என்று அவள் முகம் பார்க்க 


லேசாக திரும்பி அவன் முகம் பார்த்தவளோ,"இல்லை" என்றாள் அர்த்தம் பொதிந்து. 


அவள் தன்னைதான் சொல்கிறாள் என்பதை உணர்ந்துகொண்டவன் கோபமடைவான் இல்லை இனி இவள் பக்கப் வரமாட்டான் என்று நினைத்திருக்க அவனோ


"பார்த்தீங்களா? உங்க ஊருக்கு வந்த விருந்தாளிய இப்படியா டீஸ் பண்றது?" என்று புன்னகை சிந்த ஒரு கணம் இவளுக்குதான் இங்கு என்ன நடக்கிறது என்றே புரியாமல் போனது. 


என்ன மாதிரி மனிதன் இவன்? பேசாதே என்று மரியாதையாக சொல்லியும் கேட்க மாட்டேன் என்று புரிந்துகொள்ள மறுக்கிறானே! மெய்யாகவே இவனுக்கு புரியவில்லையா இல்லை புரியாததுபோல நடிக்கிறானா? 


அவனுக்கு பதில் ஏதும் சொல்லாது இவள் மீண்டும் புத்தகத்தில் கவனம் பதித்தாள். 


அவனும் கால்வாசிப் புத்தகத்தை வாசித்துவிட்டதை கவனித்திருந்தவளுக்கு இன்று என்ன செய்யப் போகிறானோ என்று தான் இருந்தது. ஏனெனில் அவன் கையில் வைத்திருந்த "மலர்வன இலைகள்" நேற்று அவன் வாசித்த நீலக்குருவிகளைவிட அழுத்தமான கதை. 


ஆனால் அந்த புத்தகத்தை வாசிக்கும் எண்ணமே இல்லாதவன்போல ஒவ்வொரு பத்தியை வாசிப்பதும் பிறகு கவனம் கலைவதுமாக இருந்தவன் பதினைந்து பக்கங்களை தாண்டியிருக்கவில்லை.


"ச்சே.. இவங்களுக்கு என்னதான் பிரச்சினை? ஏன் இப்படி எழுதறாங்க?" என்று இவளிடம் கேட்க


திடீரென தன்னிடம் வந்து விழுந்த கேள்வியில் அதிர்ந்தவள் தற் பார்வைக்கூட நிமிர்த்தாமல் பக்கத்தை புரட்டியவாறு,"அதை நீங்க அவங்ககிட்டதான் கேட்கனும்" என்றாள். 


அவளது பதில் அவனுக்கு திருப்தி அளிக்கவில்லைபோலும். கையை உதறிக்கொண்டு பின்னால் சரிந்து அமர்ந்தவனோ,"போங்க நீங்க! புக்தான் அப்படி பண்ணுதுனா நீங்க மூஞ்சு குடுத்துக்கூட பேச மாட்டேன்றீங்க" என்றவன் பிறகு "புது ஊரு புது மனுஷங்க, யாரையும் தெரியாதுனு தானே பேச வரேன்" என்று முணுமுணுக்க, அந்த முணுமுணுப்பில் எரிச்சலுற்றவளோ புத்தகத்தை மூடிவிட்டு அவன் புறம் திரும்பினாள்


"இப்ப உங்களுக்கு என்னதான் வேணும்?" புருவங்கள் நெரிய அவள் கேட்க


அவனோ "உங்க பேருதான்" என்று விழிச்சிரிப்பு சிரித்தான். 

ஒரு நிமிடம் அவனையே மௌனமாக பார்த்தவள் பிறகு "நோவா" என்றுவிட, அப்பெயரை எங்கோ கேட்ட நினைவில் புருவம் சுருங்க சிந்தித்தவன் பிறகு மேசை மீதிருந்த அப்புத்தகத்தின் அட்டையை திருப்பி பார்த்துவிட்டு நிமிர்வதற்குள், தன் ஜாக்கெட்டை எடுத்துக்கொண்டு அவள் வெளியேறியிருந்தாள். 

— “மீண்டும் மையலானேன்” கதையிலிருந்து ஒரு பகுதி  
✍️ எழுத்தாளர்: Yagnya 
இந்த படைப்பு எழுத்தாளரின் அறிவுசார் சொத்து.


முந்தைய அத்தியாயம்

📖 இந்த தொடரின் அத்தியாயங்கள்