🌿 Featured Story

அன்பில் அவன் அலாதி

கோடைக்கால நினைவுகளின் கதை.

📖 Read Story

🎧 Audiobooks

Listen to our stories while travelling, resting or dreaming.

Enter Our Audio Story World

Romance, thrillers, healing stories & emotional journeys, now in audio form.

🌿 Fresh Updates

New chapters, articles, announcements & story updates.

வாழவந்தாள் - 3

✍️ எழுதியவர் Yagnya

 3

 


கதிரவன் கரிசனையின்றி வாட்டிக்கொண்டிருந்த மதிய வேளை அது. 

 

"ப்ரோ நாங்க லொகேஷன் வந்துட்டோம், நீங்க எங்க இருக்கீங்க?" என்று நெற்றியில் வழிந்த வேர்வையைத் துடைத்தெறிந்தபடி யாரிடமோ கேட்டுக்கொண்டிருந்தான் அஜய். 

 

அவன் அருகில் நின்ற மனுவின் பார்வை அந்த குடியிருப்பு பகுதியையே ஆர்வமாகச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அவன் தற்பொழுது குடியிருக்கும் பாஷ் ஏரியாவின் அமைதியோ அடர் மரங்களின் குளிர் நிழல்களோ, சாலையோரங்களில் உதிர்ந்து வழியும் மஞ்சள் கொன்றைகளும், செர்ரி ப்ளாஸம்களும் இல்லாமல், அதற்கு நேர் எதிராக, நெருங்க நின்ற வீடுகளும், புழுதி பறக்கும் வீதிகளும், ஆங்காங்கே தென்பட்ட மனித தலைகளும், பேச்சுக்குரல்களும், தொலைவில் ஒரு வீட்டின் முகட்டை தொட்டபடி உயர்ந்து  தெரிந்த ஒற்றை தென்னையுமாக முற்றிலும் மாறுபட்டிருந்த சூழலை ஆவலாக ஆராய்ந்துகொண்டிருந்தான் அவன். 

 

"ஓ.. இங்க ப்ரோ! கையாட்டறேன் தெரியுதா? ஆ! பார்த்துட்டேன்" என்று யாருக்கோ கையசைத்தபடி தன் மொபலை அணைத்து பேண்ட் பாக்கெட்டில் போட்ட அஜய் மனுவிடம் திரும்பி அவசர குரலில்

 

"அவர்தான். நீ எதுவும் பேச வேண்டாம், நானே பார்த்துக்கறேன்.. முன்ன பின்ன போனாலும் இன்னைக்கு முடிச்சிடலாம்" என்று எச்சரிக்கை செய்துவிட்டு வந்துகொண்டிருந்தவரிடம் திரும்பினான்.

 

இவன் பேசினா ஏமாத்திருவாராமாம்! என்று எழுந்த சிரிப்பை அடக்கி

 

அவன் சொல்வதற்கு ஒப்புதலாகத் தலையாட்டியவனின் பார்வையும் அவர்களிடம்.

 

சற்று வசதியான இடத்தில் இருந்து வருபவன் என்பதால் மட்டுமின்றி, மதனன் நன்றாகப் பேசினாலும் பேரம் பேசுமளவு பேசுவானா என்ற சந்தேகம் அஜய்க்கு இருக்கத்தான் செய்தது. அது நியாயமான சந்தேகமும்கூட!

 

மதனன் பொதுவாகவே அவ்வளவு பேசக்கூடியவன் இல்லைதான். இயல்பிலேயே அமைதியானவன். ஒருவரிடம் நெருங்கும்வரை அவ்வளவாகப் பேச மாட்டான். ஆனால் நெருங்கிவிட்டாலோ பேசாமல் இருக்க மாட்டான். அவன் யாரிடமும் நெருங்குவது தான் அதிசயம்! 

 

அப்படியிருக்கையில் ஆறு மாதங்களுக்கு முன்புதான் பார்த்துப் பழகியிருந்த அஜயிடம் அவன் ஒட்டிக்கொண்டது அவனுக்கே ஆச்சரியம் தான்! ஏனெனில் இதற்கு முன் அவன் வேலை பார்த்த இடத்தில் மற்றவர்கள் அவனிடம் நெருங்க முயன்றும் விலகிப் பழகியவன் அவன். ஒரே ஒருத்தியைத் தவிர்த்து.. ப்ச்! 

தலையை உலுக்கி நிகழ் காலத்திற்கு வந்தான். மாற்றம் ஒன்றே மாறாதது! அவனும் நிறையவே மாறியிருந்தான். பத்து மாதங்களுக்கு முன்பிருந்த மனு கிடையாது அவன். ஒரு மாற்றம் அவனை நிறையவே மாற்றியமைத்திருந்தது. முன்பை விட அதிகமாகவே வாழ்க்கையை அள்ளி அணைக்கவும், ஆசை தீர உடனே அனுபவித்து விடவும் கற்றுக் கொண்டிருந்தான். அதில் ஒன்றுதான் இந்த அஜய்! 

 

காலை நேர நடையில் எதிர்பாராமல் வீசுமா தென்றலில் தோளில் விழும் கொன்றை போல அவனது நட்பும்! 

 

பழகிய ஆறே மாதங்களில் இவனுக்கு வீடு பார்க்க அவனும் பெர்மிஷன் போட்டு வந்து நிற்கிறான்! அவளுக்கடுத்து அவனுக்குக் கிடைத்த மற்றுமொரு வாலிப நட்பு! 

 

மதனன் வளர்ந்தது முழுக்க முழுக்க அவனது அம்மம்மாவுடன்தான். அவனது பள்ளிக்காலம் முழுமையும் அவருடன் சேர்ந்து கதை பேசுவதிலும், ஊரை சுற்றுவதிலுமென கழித்தவன் முதன் முதலாக அவரை விட்டு கல்லூரிக்கென்று வெளியே வந்து தங்கவே வெகுவாக தடுமாறினான். விடுமுறை கிடைக்கும் சமயங்களில் எல்லாம் அம்மம்மா வீடு என்று ஓடி விடுவான்! கல்லூரி காலத்தில் ஓடியது போல இப்பொழுதெல்லாம் அவனால் ஓடிவிட முடிவதில்லை. வேலையும் பொறுப்பும் அதற்கு வழிவகுப்பதில்லை. அதையும் மீறிச் சென்றால் அம்மம்மாவே சாத்திவிடுவார்! வேலையில் ஓப்பியடிக்கிறாயா என்று!

 

நினைக்கும்பொழுதே மெல்லிய புன்னகை ஒன்று இதழ்களில் தவழ, உடனடியாக தனது அலைப்பேசியை எடுத்தவன் "வாட் யூ டூயிங் அம்மூஸ்?" என்றொரு குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டு அஜயை தொடர்ந்தான். 

 

கடைசியாக ஆறு மாதங்களுக்கு முன்பு கண்ணீரும் கலக்கமுமாக அவர் மடியில் போய் விழுந்ததும், அம்மம்மாவின் நேச வருடல்களும், இதமான தலை கோதல்களையும் இன்னமும் உணர முடிந்தது அவனால். தலையைச் சிலுப்பிக் கோதிக்கொண்டவனின் இதழ்களில் இன்னமும் முறுவல் இருக்க, அவனது பார்வை அந்த இரண்டாவது தளத்தில் இருந்த வீட்டைத்தான் அளவிட்டுக்கொண்டிருந்தது. 

 

வீட்டு தரகர் கதவைத் திறந்ததும் குப்பென முகத்தில் வந்து அறைந்த பூட்டிய வீட்டிற்கே உண்டான வாசம் அவனைச் சூழ்ந்துகொள்ள, மெல்ல உள்ளே நுழைந்தான். 

 

அவன் தங்கியிருக்கும் வீட்டிற்கும் இதற்கும் ஆறாயிரம் வித்தியாசங்கள் இருந்தன. 

"பெயிண்ட்லாம் அடிச்சு குடுத்துடுவாங்கல்ல ப்ரோ?" என்று அஜய்தான் அவரிடம் வரிசையாக கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தான். 

 

"எல்லாம் பக்காவா ரெடி பண்ணி குடுத்துருவாங்க ப்ரோ! இங்க வாங்க பால்கனி கிட்டயே மாமரம் இருக்கு! அப்படிக் காத்து சிலுசிலுனு வரும்.." என்று பேசியபடி அவர் படுக்கையறை நோக்கி செல்ல இருவரும் தொடர்ந்தனர். 

 

அவர் பால்கனி கதவையும் சன்னல்களையும் விரியத் திறந்துவிட, அவர் சொன்னது போலவே சிலுசிலுவென காற்றுடன் மா வாசம் அவன் மனசெல்லாம் நிறைக்க

 

மனுவிற்கு அந்த பிங்க் பெயிண்ட் அடித்த வீடு மிகவும் பிடித்து விட்டது! 

 

மனு அப்படியே அதை அனுபவித்தபடி நின்றிருக்க

 

"மேல வீடிருக்கா?" என்று அஜய் கேட்க 

 

"ஒரே ஒரு ரூம் மட்டும் இருக்கு! மத்தபடி மொத்த மாடியும் நமக்குதான். துணி காயப்போடறதுல இருந்து எல்லாம் செஞ்சுக்கலாம்! மேல் ரூம்ல இருக்கவங்க வெளிலயே வராமாட்டாங்க. கீழ் வீட்டுலயும் ஒரு பஞ்சாபி ஃபேமிலிதான் இருக்காங்க, க்ரௌண்ட் ஃப்ளோர்ல ரெண்டு வீடும் காலிதான். சோ எந்த தொல்லையும் இருக்காது! நீங்க பெரிய வீடா கேட்டீங்கனுதான் செகண்ட் ஃப்ளோர காட்டினேன். ஓனரும் தங்கமான மனுஷன். ஒரு பிக்கல் பிடுங்கல் கிடையாது.." என்று தரகர் பேசியபடி படியேற அஜயும் அவருக்குத் தீவிரமாகத் தலையாட்டி கேட்டபடி பின்னால் ஏறினான். 

 

டேய் வீடு பார்க்க வந்ததே எனக்குத்தான்! என்று திரும்பிப் பார்த்தவன் இருவரும் இல்லாமல் போனதில் மனசுக்குள் அலறாத குறையாக விடுவிடுவென படியேறினான். 

 

பெரிய மொட்டைமாடி! மிகப் பெரிது! அதில் சற்று உட்பக்கமாக தள்ளி ஒரு குட்டி வீடு! அல்லது அறை.. அந்த வீட்டிற்குப் பக்க புறத்தில், மதில் சுவரை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் பெஞ்சும் அதில் உதிர்ந்து கிடந்த காய்ந்த சருகுகளும், பெயர் தெரியாத குட்டி வெள்ளைப் பூக்களையும் பார்க்கவும் மனுவின் மனம் 'வாவ்' என்றது. 

 

வீட்டு வாசலில் செருப்பு எதுவுமில்லை. தரகர் சொல்லியதை கவனித்திராவனுக்கு அவ்வீட்டிலும் யாரும் இருப்பதாகத் தோன்றவில்லை. 

 

பார்வையைச் சுற்றிலும் பதித்த படி அஜயின் தோளை பட் பட் பட்டென லேசாகத் தட்டினான். 

தரகரிடம் பேசிக்கொண்டிருந்தவன் முதலில் தோள்களைக் குலுக்கிவிட, மீண்டும் மீண்டும் இவன் தட்டியதில் கடுப்புற்றவனோ

 

"என்னடா?" என்றான் எரிச்சலாக 

 

"இந்த வீடு நல்லாருக்கு, இது எவ்வளவு ரெண்ட்?" என்றது தான் தாமதம் அங்கு நின்றிருந்த இருவர் முகமும் இருவேறு விதமாக மாறின. 

 

நாசமா போச்சு! என்று நின்றிருந்த தரகரைக் கண்ட அஜய்க்கே சிரிப்பு வரத்தான் செய்தது. இவனை இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் வாடகை வீட்டைப் பார்க்கக் கூட்டி வந்தால், இவன் எட்டாயிரம் ரூபாய் வாடகை வீடுதான் வேண்டுமென்கிறான்! 

 

பாவம் மனிதர்! இவனுக்குப் பிடிக்க வேண்டும் என்று இத்துடன் எத்தனை வீட்டிற்கு அலைந்திருப்போம்! எல்லாவற்றையும் இல்லை இல்லை என மறுத்துவிட்டு இப்பொழுது வந்து இப்படிச் சொன்னால்.. அவர் பொங்குவதற்குள் நிலைமையை சீர் செய்ய எண்ணி

 

"டேய்! இது வேக்கண்ட் இல்லை. கீழ இருக்க வீடுதான் வேக்கண்ட்டாம். இல்லைன்னா க்ரௌன்ட் ஃப்ளோர்ல இரண்டு வீடு இருக்காம்" என்க அவருக்கோ கீழ் இருக்கும் வீட்டை காட்டுவதில் அவ்வளவு உடன்பாடில்லைதான். இந்த வீடென்றால் இருபத்தி ஐந்தாயிரம் வாடகை, கமிஷனாக ஒரு மாத வாடகை, கீழிருந்த வீடுகளோ இதைவிட சிறியது. பதினைந்தாயிரம் வாடகை.. என்று ஒரு நொடி தயங்கியவர் பிறகு மனுவின் முகத்தைப் பார்த்தவர்

 

இவன இன்னைக்கு விட்ட இன்னும் ஒரு வாரம் வீடு காட்ட சொல்லி உயிர வாங்குவான் என்பது அப்பட்டமாகத் தெரிந்துபோக 

 

"ஆமா, கீழ இருக்க வீடும் பார்த்துடறீங்களா?" என்று கேட்டார். 

 

இந்த வீடு இல்லை என்றதும் வந்து அப்பிக்கொண்ட ஏமாற்றத்தை ஒதுக்க முயன்றவனாக,"இல்லை ப்ரோ, இருக்கட்டும். அந்த வீடே ஓகேதான். எப்ப ஷிஃப்ட் பண்ணலாம்?" என்று கேட்டதும்தான் மற்ற இருவருக்குமே மூச்சு வந்தது. 

 

ஒரு வீடு பார்க்கவே இப்படி அலைக்கழிக்கிறானே இவன்லாம் கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க என்னலாம் பண்ணுவான்? என்ற எண்ணத்திலேயே அஜயின் உடல் சிலிர்த்தடங்கியது. அப்படியொரு சூழ்நிலை வந்தா எப்படியாவது கழண்டுடா அஜய்! என்றிவன் எதிர்காலத்தை எண்ணிக் கலங்கிக் கொண்டிருக்க அதற்குள் வீட்டு உரிமையாளரிடம் பேசிவிட்டு வந்தார் தரகர். 

"இந்த வாரக் கடைசிக்குள்ள குடி வந்துரலாம், இப்ப நீங்க டோக்கன் அட்வான்ஸ் மட்டும் குடுத்தீங்கன்னா நாளைக்கே பெயிண்டிங் வேலை ஆரம்பிச்சிருவாங்க" 

 

அப்பொழுதே முன் பணம் கட்டிவிட்டு வீட்டு உரிமையாளரையும் நேரில் சென்று பார்த்துப் பேசிவிட்டே திரும்பினர் இருவரும். 

 

அந்த மாடி வீடு கிடைக்காததில் சற்று ஏமாற்றம்தான் என்றாலும் ஒரு விதத்தில் இந்த வீடு பிரச்சனை முடிந்ததில் பெரும் நிம்மதிதான்! 

 

'டிங்' என்ற குறும்செய்தி ஒலியில், படியில் ஏறிய அஜயிடம் தலையசைத்துவிட்டு ஃபோனை எடுத்துப் பார்த்தவனின் இதழ்களில் பெரிய புன்னகை ஒன்றின் உதயம்! அதில் மிளிர்ந்த "நெட்ஃப்ளிக்ஸ் அண்ட் சில்லிங்க்டா பேரா" என்ற செய்தியில். 

 

பெயரை பார்த்து வந்த புன்னகை செய்தியில் மெல்லிய சிரிப்பாக உருமாற, தன்னை மீறி சத்தமாகச் சிரித்துவிட்டவன் லிஃப்ட் வந்து நின்றதில் நிமிர, முகத்தில் இருந்த சிரிப்பு அப்படியே உறைந்தது, எதிரில் கை கட்டிக்கொண்டு நின்றிருந்த வாழவந்தாளைக் கண்டு!

 

முதல் முறை அவளுடன் கடந்த இதே போன்றதொரு லிஃப்ட் பயணம் நினைவில் வர, சட்டென்று முகத்தில் இருந்த முறுவல் மறைய, விரைப்பாக உள்ளே நுழைந்தான் மதனன். 

 

'திமிர் திமிர்! சரியான திமிர் பிடிச்சவ'

 

'சரியான தொல்லை!' 

 

என்று இருவரும் இரு வேறு புறமாக கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு ஒருவரை மற்றவர் மானசீகமாக வறுத்துக்கொண்டிருக்க, லிஃப்ட் மட்டும் என்ன பாவம் செய்ததாம்? அதுவும் அங்கேயேதான் நின்றது. 

 

பட்டனை அழுத்த வேண்டும் என்பதையே சில நொடிகளுக்கு பிறகே உணர்ந்த இருவருக்கும் மற்றவர் முன் அதைக் காட்டிக்கொள்ள விருப்பமில்லாமல் போக, நீயே அழுத்து என்று இருவருமே நிற்க, வழக்கம் போலப் பொறுமை பறந்த வாழவந்தாளே பட்டனை அழுத்தினாள். 

 

அதற்கெனவே காத்திருந்தவன் போல,"எனக்கு நாலாவது ஃப்ளோர்" என்று அசட்டையாகச் சொல்லியபடி தோள்களைக் குலுக்க, ஆழ மூச்சிழுத்துகொண்டவள் வேறெதுவும் பேசாது நாலாவது தளத்துப் பட்டனையும் அழுத்த, அவள் அழுத்திய அழுத்தில் எங்கே அது வெளியே வந்து விழுந்து விடுமோ என்று தோன்றிவிட மனு அப்பொழுதும் சும்மாயிராமல் 

 

"ஹ்க்ம்.. பார்த்து ஆஃபிஸ் ப்ராபர்ட்டி" என்றான் பொத்தாம் பொதுவாக

அவர்கள் இருவரும் மட்டும் இருக்கும் இடத்தில் பொதுவென்ன தனியென்ன? 

 

மூக்கு விடைக்க சுர்ரென்று எழுந்த கோபத்துடன் திரும்பியவளின் பார்வையில் அவன் விழியோரம் தெரிந்த சிரிப்புப் பார்வை பட, சட்டெனப் பார்வையை திருப்பிக்கொண்டாள். 

 

இல்லை! இவனுக்கு வெற்றியைக் கொடுத்துவிடக் கூடாது! என்னைச் சீண்டுவது தானே உன் நோக்கம்! பார்க்கலாம்!  

 

ஆழப் பெருமூச்சொன்றை அவள் இழுத்து விட, மனுவின் சிரிப்பு இன்னும் அதிகமாவதைக் கண்டவளுக்கு இன்னுமின்னும் எரிச்சலே மிக, மூன்றாவது தளத்தில் லிஃப்ட் கதவு திறக்கவும் திரும்பியும் பாராமல் வெளியேறிவிட்டாள்.

 

வெடுக்கென்று திருப்பிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வெளியேறிச் சென்றவளையே பார்த்திருந்தவனின் சிரிப்பு மெல்ல மெல்லத் தேய்ந்தது. 

 

இவளை ஏன் இவ்வளவு சீண்டுகிறான் என்று அவனுக்கே புரியாத புதிர்தான்! 

 

மனு ஒன்றும் வாழியை பார்த்த நாளில் இருந்தே இப்படி பாடாய்ப் படுத்த தொடங்கவில்லை! சொல்லப் போனால் அவன் இந்த அலுவலகத்தில் சந்தித்துப் பேசிய முதல் ஆளே அவள்தான்!

— “வாழவந்தாள்” கதையிலிருந்து ஒரு பகுதி  
✍️ எழுத்தாளர்: Yagnya 
இந்த படைப்பு எழுத்தாளரின் அறிவுசார் சொத்து.


முந்தைய அத்தியாயம்  |  அடுத்த அத்தியாயம்

📖 இந்த தொடரின் அத்தியாயங்கள்