🌿 Featured Story

அன்பில் அவன் அலாதி

கோடைக்கால நினைவுகளின் கதை.

📖 Read Story

🎧 Audiobooks

Listen to our stories while travelling, resting or dreaming.

Enter Our Audio Story World

Romance, thrillers, healing stories & emotional journeys, now in audio form.

🌿 Fresh Updates

New chapters, articles, announcements & story updates.

வாழவந்தாள் - 4

✍️ எழுதியவர் Yagnya

 4

 


கலந்தாய்வு அறையிலிருந்து விறுவிறுவென யாரையோ அடிக்கப் போவது போல, முகம் சிவக்க வெளியேறிய வாழவந்தாளுக்கு பின்னால் பொறுமையே திருவுருவாய் இதழ்கடையோரம் துளிர்த்த நக்கல் சிரிப்புடன் நடந்து வந்துகொண்டிருந்தான் மனு. 

 

அதுவரையிலுமே இருக்கையில் இருப்புக்கொள்ளாமல், கால்களில் வெந்நீரை ஊற்றியவன் போலக் கலந்தாய்வு அறை வாசலையே நொடிக்கு ஒரு முறைக்கு பார்த்துக்கொண்டிருந்த அஜய்க்கு மனுவின் சிரிப்பில் அவனிடம் 'எங்கு மனுவைக் கூப்பிட்டு ஏதேனும் பெரிதாக ஆப்பு வைத்துவிடுவார்களோ' என்று இருந்த பதைபதைப்பு மாறி 'அதானே பார்த்தேன்! இவனுக்காவது மத்தவங்க வைக்கிறதாவது! இவன்தான் ஊருக்கே ஆப்பு வைப்பான்' என்றாகிவிட இருக்கையில் சற்றே சரிந்தமர 

 

கடந்து சென்ற வாழவந்தாளின் உஷ்ணம் அவன் இடம்வரை எட்டி பார்த்தது என்றால், மனுவின் சின்ன கண் சிமிட்டலில் பகீரென்றானது அஜய்க்கு! 

 

சட்டென திரும்பிப் பார்த்து வாழி அந்த பரிபாஷையை கவனிக்கவில்லை என்ற நிம்மதியுடன் திரும்பியவன் 

 

"என்கிட்ட நல்லா கண்ணடி! கண்ணடிக்கக் கூடிய இடத்துல வெறுப்பேத்து! இப்படி இருந்தா நாடு எப்படி வல்லரசாகும்?" என்று சலித்துக்கொள்ள 

 

"அதுக்குதான், பார்க்கறவங்க கிட்டலாம் கடலை போட்டு பேலன்ஸ் பண்ண நீ இருக்கியே மச்சி" என்று அஜயின் தோள்களில் இரு கைகளையும் வைத்து அழுத்திவிட்டு தன் இடத்தில் அமர்ந்தவனை வாய் மீது கை வைத்து உச்சபட்ச அதிர்ச்சியுடன் பார்த்தவன்

 

"அவ் அவ் வ்! வாயிலடி வாயிலடி!" என்று சொன்னது மட்டுமின்றி அடிக்கவும் கை ஓங்கிவிட்டு அதை அப்படியே அவன் கைகளுக்கு இறக்கி, மற்றவனின் இரு கைகளையும் பற்றிக்கொண்டான். 

 

"டேய் ராசா! மதனா! உனக்குப் புண்ணியமா போகும்! அநியாயமா ஒரு ஏகபத்தினி விரதன் வாழ்க்கைல விளையாடிட்டு போயிராதடாப்பா!" என்று கெஞ்சிட

 

"ஏகபத்தினி.. வாட்? உனக்குத்தான் இன்னும் கல்யாணமே ஆகலையே" என்று புருவம் சுருக்கினான் மற்றவன்

 

"ஏகபத்தினி விரதன்! ஒன் வைஃப் ஃபார் லைஃப் ஃபெல்லோ மேன் நானு! ஆனாலும் ஆகாட்டியும் எனக்கு என் ஸ்வாதிதான்" என்று ரோஷமாக தொடங்கியவனின் கடைசி வரிகளில் சிறு வெட்கம் வந்து ஒட்டியிருந்தது. 

 

"ஓஹோ.. அப்போ நீ அனிதாவ லவ் பண்ணலையா?" என்று இன்னொரு குண்டை தூக்கி அவன் தலையில் போட

"டேய் டேய்! என்னடா சொல்ற? யாருடா உனக்கு இதெல்லாம் சொல்றா?" என்று பதறியவனையே விஷமமாகப் பார்த்தான் மனு.

 

"இல்லை அன்னைக்கு ரொம்ப நேரம் நின்னு பேசிட்டு இருந்தீங்கள.." என்று இழுக்கவும் அவன் காலில் விழாத குறையாக நிறுத்தியவன்

 

"யாரு சாமி நீ? ஒரு பொண்ணு கிட்ட ரொம்ப நேரம் பேசினாலே லவ்வுனு நினைக்கிற மகா பிரபுவே! இந்த அறிவ வெளில மட்டும் யார்க்கிட்டயும் யூஸ் பண்ணிடாத.. அந்த பொண்ணே அடுத்த வாரம் வர ஆஃபிஸ் ட்ரிப் பத்தி பேசிட்டு இருந்தா, எங்க போறோம் எப்படினு.." 

 

"ஓ... சாரிடா மச்சி! நீ நிறைய பேர்க்கிட்ட பேசவும் அப்படி நினைச்சிட்டேன்.. பை த வே, யார் அந்த ஸ்வாதி? நான் பார்த்ததே இல்லையே.." என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு குறையாகக் கேட்கவும் பெரிய கும்பிடாகப் போட்டவன்

 

"எதுக்கு? என் எட்டு வருஷ லவ்ல கும்மி அடிக்கவா! ஒன்னும் வேணாம்!" என்றுவிட்டு அஜய் அவன் இருக்கையை நகர்த்திக்கொள்ள 

 

"அப்போ உள்ள என்னாச்சுனு கேட்க மாட்ட?" என்று வேண்டுமென்றே மீண்டும் கேட்டான் மனு.

 

"ஆள விட்றா சாமி! நீயாச்சு உன் பக்கெட்டாச்சு!" என்றவன் இருக்கையை க்யூபிக்கலின் மறு ஓரத்தை ஒட்டி போட்டுக்கொண்டு அமர்ந்துவிட, அவனது 'உன் பக்கெட்டில்' என் பக்கெட்டா? என்ற எண்ணமெழ, அவளுக்கு மட்டும் தெரிஞ்சா புளிஞ்சு காயப்போட்றுவா ரெண்டு பேரையும்! என்று தோன்றிவிட, அதில் எழுந்த சிரிப்புடன் திரும்பிய மனுவிற்கு எதிரில் அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள் வாழி.

 

திங்க் ஆஃப் த பக்கெட்! ஹா.. ஹா.. 

 

கன்ன கதுப்பில் நுனி நாக்கை அழுத்தி   விஷம சிரிப்பை அடக்கியபடி, ஒற்றை புருவம் உயர்த்தி "என்ன?" என்று பார்வையாலேயே அவன் கேட்க, வாழிக்கு பற்றிக்கொண்டு வந்தது. 

 

என்ன திமிர் இவனுக்கு! இந்த ரவிக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா! இவனிடம் போய் கோர்த்துவிட்டிருக்கிறாரே! என்று உள்ளுக்குள் பொருமியவளின் வதனம் பளிங்கு தரையாய் உணர்ச்சிகள் துடைத்து இருந்தது. 

 

என்ன இருந்து என்ன பயன்? என்னதான் உணர்ச்சிகளை முகத்தில் காட்டாவிட்டாலும் இந்த கிராதகன்தான் சரியாக நூல் பிடித்து விடுகிறானே!

செவிக்குள் சற்று நேரத்திற்கு முன் ரவி சொன்ன,"தனியாளா ப்ராஜெக்ட்ட முடிச்சு குடுத்திருக்காரு மனு! க்ளையண்ட் சைட்ல அவ்வளோ சேட்டிஸ்ஃபைட்! சோ உனக்கு டெக்னிக்கலாவோ இல்லை டிஸைனிங்கலையோ என்ன உதவி வேணும்னாலும் தயங்காம மனுவ கேளு வாழி! ஹோப் ரெண்டு ஸ்டார்ஸும் இந்த கேம்பைன்ன நல்லபடியா முடிச்சு குடுப்பீங்கனு! நெக்ஸ்ட் வீக் ரிட்ரீட்க்கு முன்ன ஒரு செட்டாவது முடிச்சிட்டா நல்லாருக்கும்.. ரிட்ரீட்ட தள்ளி வைக்கலாம்னு டாக்ஸ் போயிட்டிருக்கு, ஆனா மோஸ்ட்லி அடுத்த வாரத்துக்குள்ள ஒரு செட் லீட்ஸாவது முடிச்சிடறது நல்லது.." என்றவர் இழுக்கவும் 

 

வாழி வாயைத் திறந்து தனது வழமையான உணர்வுகளற்ற "ஓகே சார்" சொல்லுவதற்கு முன் "அதெல்லாம் செஞ்சிடலாம் ரவி!" என்று படு உற்சாகமாக வந்த குரலும் அதைத் தொடர்ந்த அவனது புன்னகை முகத்தையும் கண்டவள் மௌனமாகிவிட்டாள். 

 

ரவிக்கு சிரிப்புதான் வந்தது. வாழி பொதுவாகவே அலட்டிக்கொள்ளாத ரகம். அவளிடம் கொடுத்த வேலை முடிந்துவிடும், ஆனால் அதை ஏற்கும் போதும் சரி, முடித்துவிட்டு பாராட்டை பெறும்போதும் சரி, அவளிடம் அட்சரம் மாறாமல் இருக்கும் வார்த்த அந்த உணர்வுகளற்ற "ஓகே சார்" தான்! பாராட்டினாலும் அதே தொனியில் "தேங்க்யூ சார்" என்றுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவாள். என்னவோ, நீ எனக்குக் கொடுக்கும் சம்பளத்திற்கான வேலை அது, அதையெல்லாம் பெரிதுபடுத்தத் தேவையில்லை என்பது போல இருக்கும் அவளது பாவனை. ஆனால் அதற்காக அவளுக்குக் கிடைக்க வேண்டியதை விட்டுவிடும் ரகமுமில்லை! முதல் முறை அப்ரைஸல் மீட்டிங்கில் அவளுக்குக் கொடுக்கப்பட்ட சதவீதத்தைப் பார்த்துவிட்டு, எதற்காக இவ்வளவு கொடுக்கப்பட்டது, அவள் என்னவெல்லாம் செய்திருக்கிறாள் இதுவரை என்பதைத் துளி தயக்கமோ தடுமாற்றமோ இன்றி தைரியமாக எடுத்துப் பேசியவள்! 

 

அந்த அலுவலகத்திலேயே சற்று இளையவள் என்றாலும் அவளிடம் அவள் வயதிற்கேற்ற துருதுருப்போ குறும்புகளோ, இருந்ததில்லை. அப்படியொரு அசாத்திய அமைதி அவளிடம் இருந்தது! 

 

மனு அவளுக்கு நேர்மாறாக இருந்தான்! அடிப்படையில் அவனும் வாழியை போலவே அமைதிதான். ஆனால் மனுவிடம் அவளிடம் இல்லாத வயதிற்கேற்ற துருதுருப்பு இருந்தது. உற்சாகமிருந்தது. உண்மையில் இருவரையும் சேர்த்து வைத்து கண்களை மூடிக்கொண்டு பேசினால், வாழவந்தாள்தான் பெரியவள் என்ற உணர்வைக் கொடுக்கும்! 

"ஓகே தென்! எனக்கு பத்து நிமிஷத்துல ஒரு மீட்டிங் இருக்கு" என்று எழுந்துகொண்டு இருவருக்குமாகக் கதவைத் திறந்துவிட்டவர், அவர்கள் வெளியேறியதும் மீண்டும் தனது லாப்டாப்புடன் அமர்ந்துவிட்டார். 

 

கன்ன கதுப்பில் அலைபாய்ந்துகொண்டிருந்தவனது நாவை கண்டவளுக்கு அப்படியே பட்டென்று ஒன்று போட்டுவிடலாமா என்று தோன்றி நொடியில் மறைந்தது. 

 

அவன் என்ன செஞ்சா உனக்கென்ன? 

 

"ஏன் அஜய், இன்னைக்கு நான் பார்க்க அவ்வளவு ஹாண்ட்ஸமாவா இருக்கேன்?" என்று பார்வையை இவள் புறம் வைத்தபடி குரலை மட்டும் அஜயிடம் அனுப்ப 

 

இவனை திரும்பிப் பார்த்திராதவனுக்கு வாழி அங்கு நிற்பது தெரியாமல் போக

 

"உனக்கென்ன மச்சி அப்படியே மன்மத கு-" என்று தன்போக்கில் அவனை வாரியபடி திரும்பியவன் அங்கு நின்றிருந்த வாழியை கண்ட நொடி பொட்டில் அடித்தாற்போல, மனு விரித்த வலை புரிந்து போக, அவளுக்கு ஒரு அசட்டுச் சிரிப்பைத் தந்தவன் அவனது க்யூபிக்கலுக்குள் பதுங்கிக் கொண்டான். 

 

மனுவின் பேச்சில் அசையாமல் அவனையே பார்த்தபடி நின்றவளின் பார்வையிலேயே கேலி தெறிக்க, மனுவின் முகம் கறுப்பதற்குப் பதிலாக ஆர்வமாகியதைக் கண்டவளோ நொடியில் முகத்தில் இருந்த உணர்வுகளை துடைத்தெடுத்துவிட்டு

 

"டெஸ்ட் சர்வேக்கு ஃபார்ம் வேணும் அப்பறம் ப்ரோட்டேடைப் பத்தி கொஞ்சம் டீடெய்ல்டா தெரியனும்" என்றாள் கர்மமே கண்ணாக. 

 

விழியோரம் சுருங்க அவளையே பார்த்துக்கொண்டிருந்தவனும் தலையைச் சிலுப்பிவிட்டு,"ஒரு பத்து நிமிஷத்துல அனுப்பறேன். எப்போ ஃப்ரீனு சொல்லுங்க எக்ஸ்ப்ளைன் பண்றேன்" என்றான்.

 

"பரவால்ல, நீங்க ஃபைல்ஸ் மட்டும் அனுப்புங்க நானே பார்த்துக்கறேன்" என்றுவிட, அவன் முகத்தில் இருந்த முறுவல் முற்றிலுமாக மறைய ஒரு கணம் அவளையே ஆழ்ந்து பார்த்தவன் பிறகு தோளைக் குலுக்கியவனாக 

 

"ஓகே" என்று முடித்துக்கொண்டான். அவனது பாவனை ஒரு கணம் அவளை ஏதோவொரு விதத்தில் சீண்டினாலும் தலையைசைத்துவிட்டு வாழி அகன்றுவிட்டாள்.

 

அப்படியென்ன வீம்பு இவளுக்கு! வேலை விஷயமா கூட ஒன்ன ஏத்துக்க முடியாத வீம்பு! போறா போ! இந்த ரவிக்கு வேற ஆளே கிடைக்கலையா! போயும் போயும் இந்த சிடுமூஞ்சிகூட கோர்த்துவிட்டு அவர் பாட்டு நிம்மதியா மீட்டிங்க்னு போயிட்டாரு! 

வரட்டும்! எப்படியும் ஃபைல ஓபன் பண்ணதும் அது என்ன இது என்னனு என்கிட்டதானே வரனும்! அப்போ எந்த முகத்தை வச்சிட்டு கேட்கறானு பார்க்கறேன்! என்று சிடுசிடுத்தவனுக்கு அவள் அப்படி வராமல் போன பொழுது ஏமாற்றத்தை விடக் கோபமும் வருத்தமுமே அதிகமானது. 

 

ஆம், அவள் இப்பொழுது வருவாள், வருவாள் என்று அன்று தேநீர் இடைவேளைக்குக் கூட செல்ல மனமின்றி இடத்திலேயே பசைபோட்டது போல அமர்ந்திருந்தவனுக்கு அன்று மாலை ஒவ்வொருவராகக் கிளம்பத் தொடங்கும் வரையிலுமே அவள் வராமல் போகவும் முதலில் ஏமாற்றமே வந்தது! ஒருவேளை அவள் இன்றே அவ்வேலையை தொடங்கவில்லையோ? வேறெதுவும் வேலை வந்திருக்குமோ என்ற சந்தேகம் எழ, அலுவலகத்தை ஒரு சுற்று சுற்றுவது போல வந்தவனுக்கு வாழியை கண்டதும் நிம்மதிக்குப் பதில் கோபமே எகிறியது.

 

மதியம் மனு அனுப்பியிருந்த டாக்குமெண்ட்டையும், டெமோ வீடியோக்களையும் திறந்ததுமே அவளுக்குப் புரிந்து போனது, எதற்கு ரவி அவனுடன் சேர்ந்து வேலை செய்யச் சொன்னாரென்று. 

 

ஆனால் அவளுக்குத்தான் மீண்டும் அந்த மனுவிடம் சென்று நிற்பதற்கு மனமில்லை! 

 

அவள் பொதுவாகவே தனிப்பட்ட உணர்வுகளையும் வேலையையும் குழப்பிக்கொள்பவள் இல்லை! எப்பேர்ப்பட்ட மனநிலையில் இருந்தாலும் அலுவலில் அது என்றுமே பிரதிபலித்ததில்லை. அவளைப் பொறுத்தவரை வேலையென்று வந்துவிட்டால் வேறெதுவும் பார்த்துக்கொண்டிருக்கமாட்டாள். அதை முடித்துவிடுவது மட்டுமே மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். அப்படிப்பட்ட தானா எவனோ ஒருவனிடம் சென்று பேச.. அதுவும் வேலை விடயமாகப் பேச இவ்வளவு தயங்குகிறோம்? என்ற எண்ணமெழ அவளுக்கே அவளை நினைத்து ஒரு மாதிரியானது. ஆனால் என்ன முயன்றும் மனுவிடம் சென்று உதவி கேட்கும் எண்ணம் மட்டும் வராமல் போக, வேறு வழியின்றி ஒவ்வொன்றாகத் தேடித் தேடிப் பார்த்துத் தானாகவே புரிந்துகொள்ளும் முயற்சியில் அவளிருக்க, நேரம் சென்றதெல்லாம் அவள் கவனத்திலேயே பதிந்திருக்கவில்லை! 

 

ஏதோ ஒன்று இரண்டு என்றால் பரவாயில்லை! அவளுக்குத்தான் அந்த ஆங்கிலமே வேற்று மொழி போல இருந்ததே! ஒவ்வொரு வார்த்தைக்குமென அவள் தேடிக் கண்டுபிடித்து புரிந்துகொள்ளும் முயற்சியில் இருக்க, நேரம் போனதே தவிர, வேலை கால்வாசிகூட தாண்டியிருக்கவில்லை! 

அதிலும் கால் வாசி தாண்டிவிட்ட தன்னம்பிக்கைகூட பக்கத்து இருக்கையில் இருந்த சுஹா வீட்டிற்குக் கிளம்புகிறேன் என்று சொல்லிக்கொண்டு கிளம்பியதில் தரைமட்டமானது, தனது பைத்தியக்காரத்தனத்தை உணர்ந்து. 

 

இதற்கு அவனிடமே கேட்டுவிடலாமா? என்ற எண்ணமெழ திரையையே வெறித்துக்கொண்டிருந்தவளைத்தான் மனுவும் கையிலிருந்த கோல்ட் காஃபி டப்பா இறுகப் பிடித்தபடி பார்த்திருந்தான். 

 

அவனுக்கானால் அப்படியொரு கோபம்! அதைவிட வருத்தம், ஆற்றாமை என அத்தனையும் அலை அலையாய் எழுந்தடிக்க, அங்கே தனியே அமர்ந்து திரையை வெறித்துகொண்டிருந்தவளைதான் வெறித்தபடி நின்றான். 

 

அப்படியென்ன வீம்பு இவளுக்கு? வேலை சம்பந்தமான ஒரு உதவி.. அது உதவிக்கூட கிடையாது! அவனது பங்கு வேலைதான்! ரவி அவனைதான் அவளுடன் இணைந்து இதைச் செய்யச் சொன்னார். அதைப் பற்றிக் கேட்கக் கூட தன்னிடம் வந்துவிட கூடாது என அவள் அமர்ந்திருந்த விதம் அவனை வெகுவாக அசைத்து பார்த்தது! 

 

அவன் அப்படியென்ன பாவம் செய்துவிட்டான் இவளுக்கு? இவள் உயிரைக் காப்பாற்றியது அப்படியென்ன பெரும் குற்றமா என்ன? 

 

மனுவின் பார்வை வாழியிடம் பாய, அவள் கண்களை கசக்கிக்கொண்டு இருக்கையில் நிமிர்ந்தமர்ந்துகொண்டு இடுப்பை நீவிவிட்டு, மீண்டும் திரையில் கவனம் பதிப்பது விழ, தன்னிச்சையாக அவள் தலைக்கு மேல் இருந்த கடிகாரத்தை பார்த்தான். அது ஏழு என்றது. ஒரு முடிவுக்கு வந்தவனாக விடுவிடுவென அவளிடம் சென்றான். 

 

திடீரென அருகில் நிழலாடுவதில் திடுக்கிட்டாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் நொடியில் வந்து மறைந்த உணர்வைப் பார்த்தும் பார்க்காதவனாக மனு தள்ளி அமரும்படி சைகை செய்ய, வேண்டாம் என்று சொல்ல நினைத்தவளும் அவன் முகம் பார்த்துவிட்டு நகர்ந்தமர்ந்தாள்.

 

அவள் திறந்து வைத்திருந்த 'டேப்'களையும் அவளது தேடல்களையும் கண்டவன் முகம் மாறாமல் அவள் அப்பொழுது தேடிக்கொண்டிருந்ததை மட்டும் உணர்ச்சிகளற்ற குரலில் விவரிக்கத் துவங்கினான். 

 

முதலில் மனுவின் செயலில் செயலற்று அமர்ந்திருந்தவள், பிறகு சுதாரித்துக் கவனிக்கத் தொடங்கிவிட, அடுத்து வந்த அரைமணி நேரமும் அவளது மொத்த கவனமும் அவனிடம்தான் இருந்தது! 

ஆறு மாதமாக ஒரே இடத்தில் பணி புரிந்திருந்தாலும், முதன் முறையாக அவனுடன் சேர்ந்து அமர்ந்து வேலை சம்பந்தமாக, அதுவும் அவனது தீவிர அலுவல் குரலில் அவன் பேசுவதைக் கவனிப்பதும், இடையில் தான் கேட்கும் சந்தேகங்களுக்கு அவன் முகம் மாறாமல் பதிலளிப்பதையும் பார்க்கப் பார்க்க, மதனன் எனும் மனிதனின் இன்னொரு பக்கத்தைப் பார்த்தாள். 

 

அவனும் முழுக்க முழுக்க வேலை நிமித்தமாகவே பேச, வேலை இருவரையுமே அவரவர் தனிப்பட்ட உணர்வுகளையும் மீறி உள்ளிழுத்துக்கொண்டது. 

 

கடிகார முள் ஏழரையை தொடுகையில் வேலை கவலை இறங்கியதில் வாழி சற்று இலகுவாகக் கூட உணர்ந்தாள். அதே உணர்வுடன் அவன் முகம் நோக்கிட, அங்கு இலகு என்ற வார்த்தைக்கே இடமில்லாது இருந்தது.

 

மனு அவளுக்கு நேர்மாறாக, ஒருவித இறுக்கத்துடன் தலையை மட்டும் அசைத்துவிட்டு எழுந்துகொள்ள, அப்பொழுதும் வாழிக்கு அது பெரிதாகவெல்லாம் எதுவும் தோன்றவில்லை. அவளது கவனம் முழுவதும் மனு விவரித்திருந்தவற்றில்தான் இருந்தது. அவன் தலையசைப்புக்குப் பதிலாக தலையசைத்தவளின் பார்வை ஒரு நொடி திரைக்கு திரும்பி மீண்டும் அவனிடம் வந்தது. இரண்டு எட்டு எடுத்து வைத்தவன் மீண்டும் அவள் முன் வந்து நின்றதில்.

 

"வேலை விஷயத்துல கூட கேட்க முடியாதளவு உங்களுக்கு நான் அப்படி என்ன பண்ணிட்டேன்?" என்றவன், அவள் பதிலுக்குக் காத்திராமல் திரும்பி நடந்துவிட, நொடிகளில் நடந்துவிட்டது புரியாது விழித்தபடி அமர்ந்திருந்தவளின் பார்வை அவன் அந்த கதவை கடந்து செல்லும்வரை தொடர்ந்துவிட்டு, மீண்டும் வந்து அவன் அவளிடத்தில் வைத்துவிட்டு சென்றிருந்த கோல்ட் காஃபியில் நிலைத்தது. 


இத்தனை நாட்களாக மறைமுகமாகவே சீண்டிக்கொண்டிருந்தவன் முதன் முறையாக முகத்திற்கு நேராகப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறான்!

— “வாழவந்தாள்” கதையிலிருந்து ஒரு பகுதி  
✍️ எழுத்தாளர்: Yagnya 
இந்த படைப்பு எழுத்தாளரின் அறிவுசார் சொத்து.


முந்தைய அத்தியாயம்  |  அடுத்த அத்தியாயம்

📖 இந்த தொடரின் அத்தியாயங்கள்