🌿 Featured Story

அன்பில் அவன் அலாதி

கோடைக்கால நினைவுகளின் கதை.

📖 Read Story

🎧 Audiobooks

Listen to our stories while travelling, resting or dreaming.

Enter Our Audio Story World

Romance, thrillers, healing stories & emotional journeys, now in audio form.

📚 Our Bookshelves

Stories that travelled beyond these pages.

🌿 Fresh Updates

New chapters, articles, announcements & story updates.

அன்பிலார் Page 3

 3 

"இது எப்படி இருக்கு?" என்று வினவியவளுக்கு முகம் கொள்ளா புன்னகையொன்றுடன், 


"வாவ்!! செமையா இருக்கு இந்த ஸாஃப்ட் ப்ளூ கலர் சேலை உனக்கு..." என்றவனின் குரலிலிருந்த ஆர்வத்தில் அவன் முன்னுச்சி முடியை ஒரு "அப்படியா?" உடன் களைத்துவிட்டவள் பையில் தேவையானவற்றை எடுத்து வைக்கலானாள்.  


காலையிலேயே மற்ற வேலைகளை அனைத்தையும் விறுவிறுவென முடித்துவிட்டு இவளுக்குச் சேலை கட்டுவதில் சற்று உதவிவிட்டென வேலைக்குக் கிளம்பிய அம்மா கிளம்பும் முன் பல முறை "அழகா இருக்க!!" -களையும், தனது ஃபோனில் சில கோணங்களில் அவளையும் பதிந்தபின்னரே கிளம்பியிருந்தாள். இன்னும் பத்து நிமிடத்தில் இவளும் கிளம்பியாக வேண்டும். அதற்கான ஏற்பாடுகள்தான் போய்க்கொண்டிருந்தது. 


மறக்காமல் ஐடிக்கார்டை எடுத்து வைத்துக்கொண்டவள் அவனிடம் ஒரு வரேனுடன் கதவடைத்துவிட்டுக் கிளம்பிவிட்டாள்.  


அன்று அவர்கள் கல்லூரியில் Ethnic wear... வகுப்புகளென எதுவும் நடக்கப்போவதில்லை... பொதுவாக இதுபோன்ற எந்த விடயத்திலும் இந்த மூன்று வருடத்தில் பெரிதாய் அவள் கலந்துகொண்டதில்லை. ஆனால் முதல் முறையாய் வரத் தோன்றியது. வந்துவிட்டாள். 

"ஹே!! அழகா இருக்க!!" என்று வகுப்பினுள் நுழையும்பொழுதே உற்சாகக் குரலெழுப்பியவளுக்கு விரியப் புன்னகைத்து "நீ ரொம்பவே!!" என்றவள் அவளது வழமையான இடத்தில் சென்று அமர்ந்துகொண்டாள். அவ்வப்பொழுது யாராவது ஒரு பேராசிரியர் வந்து எட்டிப்பார்த்துவிட்டு சென்றதோடு சரி... இல்லாவிட்டால் வரும் ஆசிரியர்களும் ஏதேனும் கலகலத்துக்கொண்டிருக்கவென நேரம் இலகுவாகவே கழிந்தது. அனைவரும் சேர்ந்து படமெடுத்துக்கொண்டார்கள்.  சிலர் பாட்டுப் பாடினர். சிலர் விளையாடினர். நேரம் கடந்தது. 


இடைவேளை மணியடிக்கக் கழிவறைக்கு எழுந்து சென்றாள் இவள். சேலையை அங்கிருந்த கண்ணாடியில் ஒருமுறை பார்த்துவிட்டு இவள் சரி செய்துகொண்டிருக்கவும் அவளருகில் இருந்த கழிவறையை உள்ளே ஆளிருப்பதை அறியாமல் ஒருத்தி திறந்துவிட்டு, பிறகு அறிந்து பதறி "சாரி!! சாரி!!" எனத் தடுமாறுவதும் அதற்கு அந்தப்பக்கம் கதவு சட்டென அடைபடுவதுமாய் சில கணங்களே நடந்த அந்த நிகழ்வை முழுதாய் கவனித்துவிட்டவளின் மனம் விருட்டெனப் பின்னோக்கி சரிந்தது. 


பல வருடங்களுக்கு முன் இதே போலொரு சம்பவம் அவளுக்கும் நடந்திருக்கிறது. பள்ளிக்காலத்தில். அந்த வருடத்தின் கடைசி நாளன்று. இவளும் இதே போலத்தான் உள்ளே ஆளிருப்பது தெரியாமல் கதவைத் திறந்துவிட்டாள். அந்த கதவு வேறு ஏற்கனவே சரியான நிலையில் இல்லாது இருந்ததால் சுலபத்தில் திறந்துகொள்ள. சில கணங்களே ஆனாலும் அதை இவள் கவனித்துவிட்டாள். இவளுக்கு அது உரைக்கும் முன்பே இவளைக் கடந்து சென்ற ஒருத்தி இவளை இடித்துத் தள்ளிவிட, அதில் தெளிந்தவள் இடித்தவள் உரைத்த மன்னிப்பிற்குத் தலையை வேகமாய் ஆட்டிவிட்டு அதே பதட்டத்துடன் திரும்ப அதற்குள் கதவு அடைக்கப்பட்டிருந்தது. 


சில கணங்களே ஆனாலும் அதை இவள் பார்த்தாள்! இல்லை அது இவளது கற்பனையா? அப்படியிருக்க வாய்ப்பில்லை என்றது அவளுள் ஏதோ ஒன்று. அதே சமயம் அதற்குச் சாத்தியமில்ல என்றது இன்னொரு புறம். அதற்குக் காரணம் அந்த அறையினுள் இருந்தவள். அவள் இவளின் வகுப்புதான். எப்பொழுதும் சிரித்த முகமாய், மற்றவரையும் வயிறு வலிக்கச் சிரிக்க வைப்பவள் அவள்! அவளைப் பார்த்தாளே அனைவர் முகத்திலும் புன்னகை ஒட்டிக்கொள்ளும். அப்படியொரு புன்னகை அவளது புன்னகை!! அப்படிப்பட்ட அவளின் உட்தொடையில்தான் அந்த வெட்டுக்காயங்கள் இருந்தன... இவள் அதைப் பார்த்தாள்! அது நிச்சயம் தற்செயலாய் ஏற்பட்டதல்ல என்பது வரிசையாய் சிவந்து நின்ற தடங்களே சொல்லின... பல மாதங்களாய் அது நடக்கிறதென... எங்குக் கையில் கிழித்தால் தெரிந்துவிடுமோ... பதில் சொல்ல வேண்டிவருமோவென இது நடந்திருக்கிறதென்பதை புரிந்துகொள்ள முடியாதளவில்லை இவளுக்கு. சிலர் முடியை வெட்டுவதில்கூட வித்தியாசம் இருக்கிறதென்பதை உணர்ந்திருந்தவளுக்கு இதைப் புரியாமலா போகும்?... நன்றாய் புரிந்தது இது self harming என... அவளுக்கு உதவி தேவை என... ஆனால் அவளா இப்படி? எப்பொழுதும் சிரித்த முகமாய் வலம் வருபவளுக்கு இப்படியொரு பக்கமிருக்குமென யாரேனும் நினைத்திருப்பரா? மற்றவர்களை வயிறு வலிக்கச் சிரிக்க வைத்தவளுக்கு உள்ளுக்குள் வலித்துக்கொண்டே இருந்திருக்கின்றதென்று யாருக்குத்தான் தோன்றியிருக்கும்? 


எண்ணங்கள் அத்தன்பாட்டில் ஓடிக்கொண்டிருந்தது. இவள் அப்படியே அசையாமல் நின்றிருக்க வெளியில் வந்தவளோ அவளது ட்ரேட்மார்க் புன்னகையுடன் இவள் தோள்தட்டி " அது பரவால்ல! நீ தெரியாமத்தானே பண்ண... அது மட்டுமில்லாம டோர் சரியில்ல... ஹாப்பி ஹாலிடேஸ்!!" என்று சென்றுவிட்டாள். அவளுக்கு இவள் கவனித்துவிட்டது தெரிந்திருக்கவில்லை. 


இதோ, இப்பொழுதும் அவள் இவள் தோளைத் தட்டி சென்றது என்னவோ இப்பொழுது நடந்ததைப் போல இருக்கிறது. ஒருவேளை அது இன்றாய் இருந்திருந்தால் இவள் தோளைத்தட்டிய அவள் கரத்தை இறுகப் பற்றி ஒரு முறை அணைத்திருக்கக்கூடும்... அவளிடம் மனத் தடைகளை உடைத்து பேசியிருக்கக்கூடும்... ஆனால் அன்று இது எதுவுமே இவளுக்குத் தோன்றவில்லை... அவள் இவள் பார்வையிலிருந்து மறையும் வரையுமே... சற்று நேரங்கழித்தே உணர்வு பெற்றவள் அவளைத் தேடிச்செல்ல அவளோ எப்பொழுதோ கிளம்பியிருந்தாள். அதற்குப் பின் அவளை இவள் பார்க்கவேயில்லை. ஆம்! பார்க்கவேயில்லை. விடுமுறை முடிந்து வந்தபொழுது அவள் வேறு பள்ளிக்கு மாறிவிட்டதாய் மட்டும் தகவல் வந்தது... கொஞ்ச நாளில் அவள் இறந்துவிட்டதாகவும்... தற்கொலை செய்துகொண்டதாகவும்... ஏனென யாருக்குமே...ஏன் அவள் வீட்டிலிருப்பவருக்கே தெரிந்திருக்கவில்லை எனவும் இருவர் பேசிக்கொண்டதைக் கேட்க நேர்கையில் இவளில் ஒரு பங்கைப் பறிகொடுத்த உணர்வு... ஆயாசமாய் இருந்தது... தெரிந்தும் இவளால் எதுவுமே செய்ய இயலவில்லை என்று நினைக்கும்பொழுது இன்னும் வலித்தது.  


அவள் நிச்சயம் உதவிக்காய் அழுதிருப்பாள்!! யாரேனும் அவளை அவளிடம் இருந்தே காப்பாற்றுவாரென எதிர்பார்த்திருப்பாள்... எந்தவொரு தராசுமின்றி அவளுக்குச் செவி கொடுப்பாரென எதிர்பார்த்திருப்பாள்... ஏன்? எதற்கென கேட்காமல் அணைத்து ஆறுதலாய் இருக்க ஒருவர் வரமாட்டாரா என ஏங்கியிருப்பாள்... அவள் நிச்சயம் வாழ ஆசைப்பட்டிருப்பாள்... ஆம்! வாழத்தான் ஆசைப்பட்டிருப்பாள்... சாக நினைத்திருக்கமாட்டாள்... வலியையும் பிரச்சனைகளையும் முடித்துக்கொள்ள முடியாமல் அவளையே முடித்துக்கொண்டிருப்பாள்... சிரிக்கச் சிரிக்க பேசி தன்னை தன் சிரிப்புக்கடியிலேயே மறைத்துக்கொண்ட ஒவ்வொரு நொடியும் யாரேனும் "தன்னை" கண்டுகொள்ள மாட்டாரா? என்றே ஏங்கியிருப்பாள்...  அவள் உண்மையிலேயே போய்விட்டாளா? நிஜமாகவே போதுமிந்த வலியும் வாழ்வுமென அனைத்தையும் நிறுத்திவிட்டாளா? இத்தேனைக்காலம் அவளைப் பிடித்து வைத்திருந்த அந்த ஒற்றை நூலும் அறுந்துபோனதா?  


எங்கோ கடந்துவந்த ஞாபகம் "நான் இன்னும் உயிரோடா இருக்கிறேனா அது என் நாய்க்குட்டிக்காகத்தான். என்னை அவ வீடு முழுக்க தேடி தோத்துப்போறத நான் விரும்பல..." என்றது நினைவில் வந்து பிசைந்தது...  இது மரணத்தின் மீதான ஈர்ப்பில்லை... வாழ்க்கையின் மீதான வெறுப்பு... பிடிப்பின்மை... முயன்று சோர்ந்த வலி... 


"எக்ஸ்க்யூஸ் மீ" என்ற குரலில் நிகழ்காலத்திற்கு வந்தவள் ஒரு சாரியுடன் நகர்ந்து வழிவிட்டாள். 


சற்று நேரத்திலெல்லாம் கிளம்பியும் விட்டாள். நாளையிலிருந்து சாதாரண வகுப்புகள் தொடங்குகின்றன... வீட்டிற்கு வந்தவள் சேலையைக் களைந்துவிட்டு அதற்கான ஆயத்தங்களைச் செய்யலானாள். அதை முடித்து நிமிரவும் தினப்படி வேலைகளும், பேச்சுக்களுமென அந்த நாள் இரவை அடைந்தது. 


படுக்கையில் விழுந்தவளுக்கு நேற்று பார்த்தது நினைவு வர எழுந்துச்சென்று கணினித் திரைக்கு உயிரூட்டி பிறகு எண்ணங்களை உயிர்ப்பித்தாள். 


ஆம்! அவள் ஒரு எழுத்தாளர். அவ்வப்பொழுது சில இரவுகளைச் சேமிப்பவள்... நேற்று ஏதோ ஒரு போட்டி அறிவிப்பைக் கடந்து வந்தவளுக்கு திடீரென ஒரெண்ணம்... போட்டியில் கலந்துகொள்ள அல்ல... ஆனால் எழுத... எழுத வேண்டியதை எழுதிவிட வேண்டுமென்ற ஒரு உந்துதல்... தொடங்கினாள்... 



← Page - 2  |  Page - 4 →

Comments