🌿 Featured Story

அன்பில் அவன் அலாதி

கோடைக்கால நினைவுகளின் கதை.

📖 Read Story

🎧 Audiobooks

Listen to our stories while travelling, resting or dreaming.

Enter Our Audio Story World

Romance, thrillers, healing stories & emotional journeys, now in audio form.

📚 Our Bookshelves

Stories that travelled beyond these pages.

🌿 Fresh Updates

New chapters, articles, announcements & story updates.

அன்பிலார் Page 4 - FINAL

 4

நான் அம்மு... 

நான் அம்மு. எனக்கு இப்போ வயசு பத்து. அப்பா ஒரு ஹீரோ. ஆமா! எல்லாரையும் மாதிரி எனக்கும் என் அப்பாவ அவ்வளோ பிடிக்கும். எந்தளவுன்னா அவருக்காக எதை வேணா செய்யறளவு?... எனக்கு பிடிச்ச செருப்ப நல்லாயில்லனு சொல்லிட்டு எனக்குப் பிடிக்காத ஒன்ன காட்டி இதை வாங்குவோம்னு சொன்னா அது பிடிக்காட்டியும் 'ம்ம்'னு தலையாட்டிட்டு அது எப்பவாவது பிடிச்சுப்போகும்னு நம்பறளவு அவர பிடிக்கும். ஆனா... ஆனா அவருக்குத்தான் என்னைப் பிடிக்கவே மாட்டேங்குது! ஏன்னே தெரியலை நான் எவ்வளோ முயற்சி செஞ்சும் அவருக்கு என்ன பிடிக்கவே மாட்டேக்கு... எனக்கு அவர் பக்கத்திலேயே...ஒட்டிக்கிட்டே... இருக்கனும்னு இஷ்டம்... ஆனா நான் ஆசையா போய் அவர் பக்கத்துல நின்னாலே என்ன தள்ளிவிட்றுவாரு... "சருவிக்கிட்டே நிக்காத!!" னு அவர் தள்ளிவிடும்போதெல்லாம் சட்டுனு உள்ளுக்குள்ளே என்னவோ உடையும்.... அழுகை அழுகையா வரும்... ஆனா அப்படியொரு வீம்பு... யார் முன்னாடியும் மனசு வலிக்கெல்லாம் அழுததில்லை... அதனாலையோ என்னவோ நான் தனியா  அழுததுலாம் யாருக்கும் தெரியாமலே போயிடுச்சு... "என்ன ஏன் அப்பாவுக்கு பிடிக்கல?" "ஒருவேளை நான் ரொம்ப அசிங்கமா இருக்கேனா?" "எனக்கு எதுலையுமே டேலண்ட் இல்லைங்கறதாலையா?" " நான் அதிஷ்ட்டமில்லைனா?" "ஒருவேளை நான் எதாவது தப்பு செஞ்சிட்டேனா?" "என்னை ஏன் யாருக்குமே பிடிக்க மாட்டேங்குது?" "எனக்கு மட்டும் ஏன் ஃப்ரெண்ட்ஸே இல்லை?" "உனக்கு என்ன பிடிக்கவே பிடிக்காதாப்பா?" "நான் என்ன செஞ்சா நீ என்ன திரும்பிப் பார்ப்ப??" "ஏன் கடவுளே என்ன மட்டும் இப்படி படைச்ச?...என்னை யாருக்குமே பிடிக்கல தெரியுமா? என்னையும் மத்தவங்களுக்கு பிடிக்கறா மாதிரி படைச்சிருக்கலாமே... எனக்குக் கஷ்டமா இருக்குபா... பேசாம என்ன உன்கூடவே கூப்பிட்டுக்கோயேன்...ப்ளீஸ்..." னு நான் படுக்கையோட ஓரத்துல வாய மூடிட்டு செவுத்த பார்த்து எத்தனையோ நாள் அழுது ஓஞ்சி கண்ண துடைச்சிட்டு தூங்கிருக்கேன்... ஆனா ஒரு தடவைகூட அந்த கடவுள் நான் சொன்னதை கேட்கவேயில்லை... நானும் சொல்றத நிறுத்தவேயில்லை... 

அம்மா...? தெரியலை.... 



நான் அம்மு. இப்ப எனக்கு வயசு பன்னிரண்டு. அப்பா ஒரு வில்லன். ஆமா! அவர் நிச்சயமா ஒரு வில்லன்... இல்ல அதுக்கும் மேல... நான் ஹீரோவா பார்த்த மனுஷன் மனுஷனாக்கூட இல்லனு தெரியும்போது அப்படி வலிக்குது உள்ளுக்குள்ள... நான் யாரோட அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கித் தவிச்சேனோ அது எனக்கு என்னைக்குமே கிடைக்கப் போறதில்லை... ஆனா அதுக்காக இப்போ நான் கொஞ்சம்கூட வருத்தப்படலை... மனசு விட்டுப்போச்சு... நான் ஹீரோவா பார்த்த மனுஷன்... அவன் மனைவிய மனைவியா...இல்லை... மனுஷியாக்கூட நடத்தலைனு புரியும்போது எதுலையோ ஏமாந்துப்போன வலி... 


அம்மா... இத்தனை நாளும் என் கண்முன்னையே அடியும் மிதியும் அவமானமுமா கழிச்சிருக்கா... என் கண் முன்னாடியே குடிச்சிட்டு வந்தும்.. இல்லை குடிக்க காசு கேட்டும்னு அவ உயிர கொஞ்சம் கொஞ்சமா குடிச்சிருக்கான்... நானும் பார்த்துட்டே இருந்துருக்கேன்... ஆனா மனசுல எதுவுமே பதியலையோ? இல்லை பதிஞ்சும் அதை நான் கண்டுக்கலையோ? அவ ரா பகலா சம்பாதிச்சு கொண்டு வந்தத குடியும் ஆடம்பரமுமா செலவு செஞ்சவன் அவளுக்கு ஒருவேளை சாப்பாடும் நிம்மதியான தூக்கத்தையும்கூட விட்டு வைக்கலை... அவ நினைச்சிருந்தா எல்லாத்தையும் விட்டு ஓடியிருக்கலாம்... ஆனா அவ அப்படி பண்ணலை... அவ இருந்தா... எனக்காக அவ இருந்தா... எங்க நானும் நாளைக்கு ஏதோ ஒரு குடிகாரனுக்கு சம்பாதிச்சு கொட்டவேண்டி வந்துருமோனு இருந்தா... இப்பவும் அதே கடவுள்... ஆனா வேற மனு... மொதல்ல எல்லா வீட்டை மாதிரி எங்க வீட்லையும் எல்லாரும் சேர்ந்து சந்தோஷமா இருக்கனும்னு வேண்டினேன்... இன்னுமும் ஒரு நப்பாசை ஒட்டிக்கிட்டு கிடந்ததோ? இப்போதான் புரியுது... இது முழுசா உடைஞ்ச கண்ணாடி மாளிகைனு...  "கடவுளே...இது என்னைக்காவது மாறுமா? எனக்கு குற்ற உணர்ச்சி கொல்லுது... ஒருவேளை நான் கொஞ்சம் முன்னாடியே சுதாரிச்சிருந்தா... அவ பக்கத்துலயாச்சும் நின்னுருப்பேன்ல... நான் அவனுக்கு நல்ல பொண்ணாகனும்னு நினைச்சு அம்மாவுக்கு ரொம்ப மோசமான மகளாகிட்டேன்ல? நான்லாம் மனுஷியே கிடையாதுல? எப்படி நான் இவ்வளோ பண்ணதுக்கு அப்பறமும் அம்மாவுக்கு என்ன இவ்வளோ பிடிக்குது?? எப்படி அவளால என்னை ஏத்துக்க முடியுது?" 


அம்மா இப்படிதான் இருப்பாளா? அம்மா இப்படிதான் பேசுவாளா? அம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்குமானு ஒவ்வொரு நாளும் அம்மாக்கிட்ட நெருங்க நெருங்கதான் தெரியுது... நான் என் அவகிட்டயிருந்து எவ்வளவு தள்ளியிருந்துருக்கேனு... 


அம்மா என்னை பிறந்ததுல இருந்து பாக்கறா... ஆனா நான் அவள இப்போதான் பாக்கறேன்... 



நான் அம்மு. இப்போ எனக்கு வயசு பதினைஞ்சு. அம்மா ஒரு சூப்பர்ஹீரோ. ஆமா! சூப்பர்ஹீரோவேதான். போன வருஷம் ஒரு ஆக்ஸிடெண்ட்ல அவன் போய்ட்டான். அத்தனைக்காலம் அவனால அனுபவிச்ச வலினாலையோ என்னவோ அவன் போனது வலிக்கவேயில்ல. ஒருத்தரோட இன்மை கூட வாழ்ந்தவங்களுக்கு  நிம்மதியுணர்வ குடுக்குதுனா அந்தாள் எப்படிப்பட்ட நரகத்த காமிச்சிருக்கனும்?... நாங்க வீடுகூட மாத்திட்டோம். புது ஊரு. புது வீடு. புது வாழ்க்கை. ஆனா அம்மாவோட ஓட்டம் மட்டும் நின்னபாடில்லை! ஆமா... அப்போ அவனுக்காக ஓடினா இப்போ எனக்காக ஓடறா... எனக்கு ஒரு நல்ல வாழ்க்கைய குடுத்தறனும்னு இந்த ஓட்டம்... பாக்கறதுக்கு வலிக்குது கொஞ்சம்... பிள்ளைங்கள பாத்துக்கறது பெத்தவங்க கடமைதான்! ஆனா அவ பட்டதை பார்த்ததுனாலையோ என்னவோ இதை அவ கடமைனு என்னால தேத்திக்க முடியலை... எனக்காக ரொம்பவே மெனக்கெடறாளோனு தோணுது... பயமாவும் இருக்கு... இருந்திருந்து இப்போதான் அம்மாகூட இருக்கேன்... எங்க இது பறிபோயிடுமோனு ஒரு பயம் எப்பவும் உள்ளுக்குள்ள இருந்துக்கிட்டே இருக்கு... முன்ன யாருக்குமே என்னை பிடிக்கலைனு கடவுள்ட்ட அழுதேன்னா இப்போ பிடிச்சிருக்குனு அழறேன்... இதையும் என்கிட்ட இருந்து பிடுங்கிறாதப்பானு அழறேன்... பயம் கழுத்துவரை வந்து தொண்டைய அடைச்சிக்குது... என்னால அவ இல்லாத ஒரு வாழ்க்கைய நினைச்சுக்கூட பார்க்க முடியல... அதனாலையோ என்னவோ ஒருநாள்கூட நான் அவளைவிட்டு எங்கயும் நகர்றது இல்லை... பயம்!! அந்த ஒரு நாள்ல என் உலகம் புரண்டுருமோன்ற பயம்!! இவளுக்கு என்னை உண்மையாவே பிடிச்சிருக்குனு நினைக்கும்போது பயம் கூடுதே தவிர ஒரு இஞ்ச்கூட குறைய மாட்டேக்கு... எனக்கு அவ கைய பிடிச்சு நடக்கறதுனா அவ்வளோ இஷ்டம்... ஒரு விதத்துல அவள என் கைலயே பிடிச்சு வச்சு பயத்தை குறைக்க நினைச்சேன்கூட சொல்லலாம்... அவ கை சூடு இதமா இருக்க இருக்க... ஒரு நிம்மதி... ஒரு நம்பிக்கை... ஆனா அம்மா என்னை அவ கைய பிடிக்க விடமாட்டா... அவளுக்கு எங்க நான் அடுத்தவங்களை சார்ந்தவளா ஆகிடுவேனோனு பயம்... அவளுக்கு நான் சுயமா இருக்கனும்னு ஆசை... இதை அவ வாய் திறந்து சொல்லாட்டியும் எனக்கு புரிஞ்சது... அந்தளவு வலிக்கல... ஆனா மனசு இதத்தை தேடுது... அழுது புரளுது... ஆனா சொல்லத்தான் தோணலை... சொன்னாக்கூட என்ன பதில் வரும்? "நான் எங்க போயிடப்போறேன்? கடைசிவரை உன்கூடத்தான் இருப்பேன்" மாதிரி பதில் வரும்... என் பயமே அந்த 'கடைசிவரை' தானே!! சொல்லப்போனா... "என்னை அம்மாவுக்கும் பிடிக்காம போயிருமோனு" பயமா இருக்கு...  அடிக்கடி சண்டை வரும்போதெல்லாம் அப்படியொரு பயம்... எங்க அவளும் என்னை வெறுத்துருவாளோனு... ஆனா அதெல்லாம் அஞ்சு நிமிஷத்துல  திருப்பி பேசறப்ப பறந்துருது... 


"எனக்கு இந்த வாழ்க்கையே போதும்பா!! நான் எப்படியாவது அவள நல்லா பாத்துக்கறேன்... வேற எதுவுமே வேணாம்... அதை மட்டும் பிடுங்கிறாத ப்ளீஸ்..."னு தினம்தினம் கடவுள்கிட்ட பேரம் பேசிட்டிருக்கேன்... 



நான் அம்மு. இப்போ எனக்கு வயசு இருபது. அம்மா பாவம். ஆமா! அம்மா ரொம்ப ரொம்ப பாவம். ஏன்னா? என்னாலதான். என்னோட இந்த குட்டி தலைக்குள்ள நடக்கற யுத்தத்தாலதான். அம்மாவும் எல்லா பெத்தவங்கள மாதிரிதான் ஆனா கொஞ்சம் வித்தியாசம்...தனக்குக் கிடைக்காத நம்பிக்கை எல்லாத்தையும் தன் பிள்ளைக்கு குடுக்கனும்னு நினைக்கறா... ஆமா! நான் எதுலையாவது மாட்டிக்கிட்டாலோ இல்லை தப்பே பண்ணிருந்தாலும்கூட அம்மா இருக்கா! அவ என்னை நம்புவா! அது போதும் எனக்குன்ற தைரியத்தை இத்தனை வருஷத்துல குடுத்துருக்கா... என் வாழ்க்கைல முடிவ நான்தான் எடுக்கனும்! அது சரியா இருந்தாலும் சரி தப்பா போனாலும்  சரி நேருக்கு நேரா நின்னு சமாளிச்சிரனும்னு சொல்லுவா... அடுத்தவங்க பேச்சுக்கு பயந்து எனக்கு பிடிச்சதை விட்றக்கூடாதுனு சொல்லுவா... "அப்படியே சறுக்கி விழுந்தாதான் என்ன? மயிரா போச்சுனு தட்டிவிட்டுட்டு போவியா... உயிர் இருக்கறவரை வாழ்ந்து பார்த்துடனும்!! நம்ம வாழ்க்கை நமக்கானது... விட்றக்கூடாது"னு சொல்லுவா... கெட்ட வார்த்தையே பேசாத அம்மா இப்படியெல்லாம் பேசும்போது பாக்க அவ்ளோ அழகா இருக்கும்... அவ குரல்ல அவ்ளோ தைரியம் இருக்கும். நான் பார்த்து வியக்கற ஒரே சூப்பர்ஹீரோ அவதான்! அவ மட்டும்தான்! அப்படிப்பட்ட அவளையே கலங்க வைச்சிடறேன் அப்பப்போ... ஆமா... நான் வேணும்னு எதுவுமே பண்றதில்லை... வளர வளரதான் புரியுது... இதை அவகிட்ட சொல்லியே ஆகனும்னு... எனக்கு வலிக்குதுனு சொல்ல நினைச்சு ஆரம்பிச்சு கடைசில அவளுக்கு வலிக்க வைச்சிடறேன்... அவ வலில கோவத்துல கத்தறப்போ அது சண்டையாதான் முடியுதே தவிர நான் சொல்ல வந்தது வெளில வரதேயில்லை. திறக்கவேபடாத அறையொன்னு எல்லார்கிட்டயும் இருக்குமே... அந்த அறையோட கதவைத்தான் நான் திறக்க முயற்சி செய்றேன்... ஏன்னா என்னால முடியல... அந்த அறை வெடிச்சு சிதறதுக்குள்ள திறந்துடனும்னு நினைக்கறேன்... ஆனா அது அதைவிட கஷ்டமாயிருக்கு. என்கிட்ட இருந்து என்னையே எப்படியாவது காப்பாத்திக்கனும்னு நினைக்கறேன்... 


இத்தனைகாலம் வலிக்குதுனு வெளில சொல்லாம இருக்கறவரைக்கும்கூட இவ்வளோ  வலிக்கல... இப்போ சொல்லனும்னு நினைச்சு தைரியத்தை சேர்த்துக்கிட்டு முயற்சி செஞ்சும் முடியலைன்றப்போ... என்னவோ "என்னை காப்பாத்துங்க!!"னு கதறியும் யாரும் திரும்பி பார்க்காத மாதிரி வலிக்குது.  


என்னால எனக்காகவே வாழறேனு சொல்றவகிட்டப்போய் "எனக்கு இந்த வாழ்க்கைப் பிடிக்கல... வாழப் பிடிக்கல"னு நிச்சயமா சொல்ல முடியாது... அந்தளவு தைரியம் எனக்கில்லை! வரவும் வராது!  ஏன் தெரியுமா? அவதான் முதல் முறையா என்ன பார்த்து "நீ மட்டும்தான் என்னை பாசமா பாத்துக்கற"னு சொன்னா... "நீ கூட வந்து நின்னா இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா ஃபீலாகும்"னு சொன்னா... இதெல்லாம் சாதாரணமா பேசும்போது அவ சொன்ன வார்த்தைகள்தான்... ஆனா அதை அம்மா உணர்ந்து சொன்னா... அவ பொய் சொல்லல... என்னால உணர முடிஞ்சது... அது இன்னும் வலிக்குது!! என் உலகத்துல அவ எப்படி ஹீரோவோ அதேபோல அவ உலகத்துல நான் ரொம்ப ஸ்ட்ராங்கானவளா இருக்கேன்றத நினைக்கும்போது... அழறதா சிரிக்கறதானு தெரியல... "உன் முடிவுலாம் சில நேரம் என்னைவிட தெளிவுனு" சொல்லும்போது உள்ள லேசா சுருக்குனு இருக்கும்... "எனக்கு தெளிவு வேணாம்... எதுவும் தெரியாத சின்னப்பிள்ளையா கொஞ்ச நேரமாவது இருக்கனும்னு... 


ஆனா சொல்லத்தான் முடியல... முடியலைன்றதவிட தெரியலை... எனக்கே நான் எப்படி உணர்றேனு தெரியலைன்றப்போ மத்தவங்களுக்கு எப்படி புரியவைப்பேன்? 


தற்கொலை எண்ணம்...? வந்ததேயில்லைனு பொய் சொல்ல மாட்டேன்... வாழ்க்கைல எல்லாருக்கும் ஒரு முறையாவது வந்துருக்கும்ல? எனக்கும் வந்துருக்கு... சாகனும்னு இல்லை!! அப்போவே செத்துருக்கலாம்னு... ஏன்னா எனக்கு அந்தளவு தைரியம் என்னைக்குமே வராது! அது என் வலிய என் அம்மாக்கிட்ட நிரந்தரமா குடுத்துட்டு போற மாதிரி... என்னால அந்த முடிவ என்னைக்குமே எடுக்க முடியாது... என்னைக்குமே... ஏன்னா நான் போய்ட்டா... 'நான் போய்ட்டன்னு' சொல்லி சாஞ்சு அழக்கூட அம்மாவுக்கு ஒரு தோளிருக்காதே! 


எங்க என் தோளுல சாஞ்சுக்கிறவகிட்ட சொன்னா அடுத்து வலிச்சாலும் சொல்லாம போயிருவாளோனு பயப்படற நான் ஒரேடியா அதை இல்லாம ஆக்கிடுவேனா? 


அவ குழந்தை மாதிரி... யாராவது பொய் சொல்லி கடன் கேட்டா...ஏமாறமாட்டா!! ஆனா உண்மை தெரிஞ்சும் தூக்கி குடுத்துருவா... வலிய அனுபவிச்சவங்களுக்குதானே வலி புரியும்? அவளை எப்படி விட்டுட்டு போவேன்!?  எனக்கு வாழனும்!! நிம்மதியா... சந்தோஷமா வாழனும்!! இதுவரை பட்டதெல்லாத்துக்கும் சேர்த்துவச்சு வாழனும்!! ஆனா முடியல... என் தலைக்குள்ள இருக்கற குரல் ஒத்துழைக்க மாட்டேங்குது... நல்லா சிரிச்சு பேசிட்டிருக்கேன் சட்டுனு மாறிடறேன்... சிடுசிடுனு... அடக்கமாட்டாம கோவம்... இல்லைன்னா ராத்திரி முழுக்க விட்டத்தை வெறிச்சுக்கிட்டே மனசு மரத்துப்போய் படுத்துருக்கேன்... அப்போல்லாம் அழுகையாவது வந்து எதையாவது உணர மாட்டோமானு இருக்கும்... இப்போல்லாம் அடிக்கடி சண்டை... நான் வலிக்குது வலிக்குதுனு சொல்ல நினைக்கறேனே தவிர என்ன எப்படினு சொல்ல தெரியல... அவளும் பாவம் எவ்வளவுதான் தாங்குவா? மனுஷிதானே... நான் சொல்ல வரது எனக்கே புரியல... இதுல அவளுக்கு புரியனும்னு எதிர்ப்பார்க்கறது.. நியாயமில்லைதானே... என் முயற்சியெல்லாம் கடைசில "சாம்பார் தண்ணியாகிடுச்சு... பசிக்குது... நான் பேசினத நீ கவனிக்கல" மாதிரி சில்லறை சண்டைகளுக்கு அடியில மறைஞ்சு போயிடுது... 


அப்படிதான் நேத்தும் ஆச்சு... பெரிய சண்டை... ஏற்கனவே விளிம்பில நிக்கறேன் அம்மாவுக்கு தெரியாதுதான்... இருந்தும் அவ பேசினத ஏத்துக்கவே முடியல... ஒடனே ஓடிப்போய் அவளையே கட்டிப்பிடிச்சிக்கிட்டு அழனும்போல இருந்தது... முடியல... என்னனு கேட்டா? என்ன சொல்லுவேன்?... சொல்லதான் தெரியுமா?... அமைதியா ரூமுக்கு போய் டேபிளுக்கு பக்கத்துல கீழ உக்காந்துக்கிட்டேன்... அவன் பதறி பக்கத்துல வரப் பார்த்தான்... "வராத!! பக்கத்துல வராத!!" னு மனசுக்குள்ள கத்தினேன்... "ஏன்??"னு கண்ணுல கலக்கத்தோட பார்த்தான்... "ஏன்னா... ஏன்னா... நீ பக்கத்துல வந்தா நான் ஒடைஞ்சிடுவேன்"னு சொல்லும்போதே உடைஞ்சு கண்ணீர் கொட்டுச்சு... ஆதரவாய் அணைச்சு தட்டிக்கொடுத்தான். 


அவன் யாருனு சொல்லலையே... அவன் என் வலியில பிறந்தவன்... எனக்கு வலிக்கும்போதெல்லாம் வருவான்... வந்து இதோ... இதே மாதிரி ஆதரவாய் தட்டிக்கொடுப்பான்... நான் குழப்பத்துல இருக்கும்போது தீர்வு சொல்லுவான்... நான் சாவ பத்தி பேசினா அவன் வாழ்க்கைய பத்தி பேசுவான்... அவன்... நான்... என்னோட இன்னொரு பகுதி... எனக்கே எனக்கான பகுதி... என்னைய காப்பாத்திக்க நானே உருவாக்கின பகுதி... அன்பை மட்டுமே குடுக்க உருவானவன்... கதகதப்பானவன்... 


இன்னும் எத்தனைக்காலம் இதுனு தெரியல... பிரச்சனை இருக்குனு புரியுது... தீர்வு காணனும்னு புரியுது... ஆனா முடியலை...  சிலர் இதை வாழ்க்கைல ஒரு ஃபேஸ்னு சொல்லும்போது அவங்கட்ட எப்படி சொல்லுவேன் இந்த "ஒரு ஃபேஸ்லதான்" நான் கிட்டத்தட்ட பதினைஞ்சு வருஷமா இருக்கேனு... அதிகமா யோசிக்காதேனு சொல்றவங்ககிட்ட எப்படி சொல்றது அது என் கைல இல்லைனு அது மட்டுமில்லாம நான் யோசிக்கல... இது உண்மையாவே நான் அனுபவிச்சிட்டிருக்கேனு... எதனால? ஏன்னு? காரணம் கேக்கறவங்கட்ட எப்படி சொல்றது எனக்கே என்னை தெரியலைனு...  இதெல்லாம்விட யாருக்கிட்டப்போய் சொல்றது வாழறதுக்காக ஒவ்வொரு நொடியும் சாகறா மாதிரி இருக்குனு... 


இவ்வளவு வலிக்கும்னு தெரிஞ்சிருந்தா நாம யாரும் பொறந்துருக்கவே மாட்டோம்ல...


"இதை சத்தமா வெளில சொல்றளவு தைரியத்தை எனக்கு குடுப்பா!! ப்ளீஸ்..." 

"என்ன பண்ற?" என்று பின்னிருந்து அணைத்து அவள் தோள்பட்டையில் தாடையைப் பதித்துக் கேட்டவனிடம்  "ம்ம்" என்றவள் அந்த டாக்யூமெண்ட்டை கவனமாய் ஸேவ் செய்துவிட்டு அவன் கன்னத்தில் கை வைத்து அவனதில் கன்னம் பதித்தவள் பிறகு எழுந்துகொண்டவளாக "கதை எழுதிட்டிருந்தேன்..." என்றாள் சோம்பல் முறித்தவாரே... மணியைப் பார்த்தாள் அது மூன்றையெல்லாம் எப்பொழுதோ தாண்டியிருந்தது. இப்பொழுது படுத்தால்தான் இனி காலையில் ஒன்பதரைக்குள்ளெல்லாம் கிளம்ப இயலும். படுக்கையை நோக்கி நகர்ந்தவளையே ஆர்வமாய் பார்த்தபடி பின்தொடர்ந்தவன் "என்ன கதை?" என்க  மெத்தையில் விழுந்தவள் விட்டத்தை வெறித்துவிட்டு அவனை ஒரு முறை பார்த்து "நம்ம கதை" என்றவள் பிறகு "எனக்குத் தூக்கம் வருது..." என்றிட, 


வழமைபோல அவன், அவள் கை வளைவில் அழகாய் உறங்கி கரைந்துபோனான். அவள் விட்டத்தையே வெறித்திருந்தாள்... ஒற்றை நீல விடிவிளக்கு மட்டும் மந்தமாய் ஒளிர்ந்துகொண்டிருந்த அவ்வறையின் மெல்லிருள் நிறைந்த விட்டத்தையே இலக்கற்று வெறித்திருந்தாள்... நொடிகள் நிமிடங்கள் ஆகின... நிமிடங்கள் சில மணி நேரங்களையும் கடந்தன... மெல்லெழும்பியது அவளுள் ஓர் அழகிய கனவு...? கற்பனை...? ஆழ்மன ஏக்கம்...? இன்னதென்று சொல்ல தெரியாதொன்று...  


அது ஏதோ ஒரு கடற்கரை போலும்... சுற்றி ஆளரவமென மனித தடம் துளியுமில்லை... மங்கிய வெள்ளை நிற கடலலை கரைதொட்டு மீண்டென விளையாடிக்கொண்டிருந்தது என்னவோ... தளைகளை ஒவ்வொரு முறையும் உடைக்க முயன்று தோற்பதுபோல் இருந்தது. சற்றே சுளீரென... அவளுக்கு அவளையே உணர்த்துமளவிலான வெயில் பரவிக்கிடந்தது. அவள் அதே கடலலையின் நிறத்தை ஒத்த மங்கிய வெள்ளை நிற உடையில் ஓடிக்கொண்டிருந்தாள்... ஆனால் சிறு மாற்றம்... அலையை போலல்லாது இவள் முகம் கொள்ளா அமைதியும் சிறு புன்னகையுமாய், அவ்வப்பொழுது பின்னால் திரும்பியும்... பளீர் வானையும் பார்த்துக்கொண்டே பத்து வயதுக் குழந்தையாய் ஓடிக்கொண்டிருந்தாள்... ஆம்! பத்து வயது குழந்தையாய்தான் ஓடிக்கொண்டிருந்தாள்... 


பெருமூச்சொன்று எழும்பியது அவளிடமிருந்து.


நீண்ட நேரத்திற்குப் பிறகு, மெல்ல உறங்கிப்போனாள்...



← Page - 3

Comments